Friday, March 14, 2014

பாதுகாப்பும் சமத்துவமும் சலுகைகள் அல்ல, எனது உரிமைகள்! - உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பு



ஐ.டி.துறையினர் மற்றும் இளைஞர்கள் அமைப்பான சேவ் தமிழ்சு இயக்கத்தின் சார்பில் கடந்த மார்ச் 7ஆம் தேதி சோழங்கநல்லூர் பழைய மாமல்லபுர சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட "மார்ச் 8 - அனைத்துல உழைக்கும் பெண்கள் நாள் 2014" சந்திப்பின் முழக்கம் இதுதான் "பாதுகாப்பும் சமத்துவமும் எனக்கான சலுகைகள் அல்ல, எனது உரிமைகள்".

தோழர் சமந்தா இந்த நிகழ்வை தலைமையேற்று ஒருங்கிணைத்து கொடுத்தார். "பெண்களுக்கு வேண்டும் சுதந்திரம், அப்பத்தான் ஆணுக்கும் கிடைக்கும் சுதந்திரம் சுதந்திரம்" என முடியும் எழுச்சிமிகு முழக்கங்களோடு உழைக்கும் பெண்கள் நாள் சந்திப்பு இனிதே தொடங்கியது.

முதலில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் பற்றிய வரலாறைப்பற்றி உரை நிகழ்த்தினார். "அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் என்பது வெறுமனே பெண்கள் தினம் என சுருங்கி கோலப்போட்டி, அழகிய ஆடைப்போட்டி, சமையல் போட்டி என வெறும் பகட்டான நாளாக ஆக்கப்பட்டுவிட்டது, உண்மையில் உழைக்கும் பெண்களுக்கு பல உரிமைகளை பெற்றுத்தந்த நாள் இது, இந்த உரிமைப்போராட்டத்தில் பலரும் ரத்தம் சிந்திய நூறாண்டுகால வரலாறு இருக்கிறது.

மன்னராட்சி காலத்தில் போரில் வெற்றி பெற்றால் தோற்ற நாட்டில் உள்ள ஆடு மாடு கோழி போல பெண்களை அடிமைகளாக எடுத்துச் செல்வார்கள். பின்னர் அனைவரும் சேர்ந்து தொழில் செய்யும் காலகட்டத்தில் வீட்டில் இருந்து நூல் நூற்பது, நெசவு, உழவு, மீன்பிடி என அனைத்து தொழிலிலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக பட்டறைத் தொழில் இயந்திர ஆலைத் தொழிலாக மாறியது. அந்த சமயத்தில்தான் வீட்டில் முடங்கிக் கிடந்த பெண்கள் முதன்முதலில் இந்த புதிய சமூக உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மனித
சமூகத்தில் 50 விழுக்காடாய் இருந்த பெண்கள் தாங்கள் ஒரு இனம் என்பதை உணர்ந்தார்கள்.


பஞ்சாலை தொழிற்சாலை, ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை போன்றவற்றில் வேலைபார்க்கும் தொழிலாளியிடம் 16 மணிநேரத்திற்கு மேல் வேலைவாங்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள் போராடினாலும், பெண்களுக்கே உரிய பிரச்சனைகளான குழந்தைப்பேறு காலம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு வேலை நேரத்தை 10 மணிநேரமாக குறைக்கவும், ஆணுக்கு சமமான கூலி வழங்கவும் வலியிறுத்தி முதன்முதலில் 1820ல் பெண்கள் குழு ஒரு போராட்டத்தில் அமெரிக்காவில் ஈடுபட்டது. அதன் பிறகு வரிசையாக பல போராட்டங்கள் நடந்தாலும், பல இடங்களிலும் இருந்து பல்லாயிரம் பெண்கள் ஒன்றாக கூடி நியூயார்க் நகரில் 1857ஆம் ஆண்டு இதே மார்ச் 8ஆம் நாள் மிகப்பெரிய அளவில் ஒரு போராட்டத்தை பெண்கள் குழு நடத்தியது. அதில் 16 மணிநேர வேலை நேரத்தை 10 மணிநேரமாக குறைத்தல், ஆணுக்கு சமமான கூலி என்ற கோரிக்கையோடு ஆண்களுக்கு மட்டுமே இருந்த அரசை தீர்மானிக்கும் வாக்களிக்கும் உரிமையை முதன்முதலில் தங்களையும் மனிதனாக அங்கீகரித்து பெண்களுக்கும் வேண்டும் என்று கோரினர். பல ஆண்டுகள் போராடி இந்த கோரிக்கைகளை வென்றெடுத்திருக்கிறோம்., குறிப்பாக பெண்கள் வாக்களிக்கும் உரிமைக்கான போராட்டம் 1847ல் ஆரம்பித்து 1980ல் தான் உலகில் அனைத்து பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை பெற்று முடிவடைந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் வரி போடுவதில் இருந்து மக்களின் தலைவிதி அனைத்தையும் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின் உறுப்பினராக 33% பெண்களுக்கு அரசியல் உரிமைக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையை எல்லா கட்சிகளும் ஆதரித்தாலும் எந்த கட்சியிலும் 33% இடம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட இதே மார்ச் 8ஆம் நாள் 1908 ஆம் ஆண்டு மீண்டும் நியூயார்க் நகரில் 15ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இதே 3 கோரிக்கைகளுக்காக பேரணியாக திரண்டு போராடியபோது அமெரிக்க அரசு தடியடி, கைது என பயங்கர கொடுமையாக ஒடுக்கியது. அதில் 2
குழந்தைகளும், 15 பெண்களும் கொல்லப்படுகிறார்கள், இந்த தீரமிக்க போராட்டத்திற்கு பின்புதான் உலகில் முதன்முதலாக பெண்ணுக்கு வாக்குரிமை கிடைத்தது.

இப்படியான உயிர்த் தியாகத்தில் கிடைத்ததுதான் நமது உரிமைகள். இதனை நினைவு கூறும் வகையிலும், சாதி, மதம், இனக்குழு, நாடு என அனைத்தும் கடந்து உலகத்தில் உள்ள அனைத்து உழைக்கும் பெண்களும் இணைந்து தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது என்பதை வலியிறுத்தியும் ஜெர்மனியைச் சேர்ந்த தோழர் கிளாரா 1910ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் 17 நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் பெண்களை இணைத்து அனைத்துலக பெண்கள் நாளாக மார்ச் 8ஆம் நாளை கொண்டாடினார்கள். 1911 முதல் உலகம் முழுவதும் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாளாக மார்ச் 8 கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் 1943ஆம் ஆண்டு அப்போதைய பாம்பே நகரிலும், பின்னர் 1957ஆம் ஆண்டு
புனாவிலும் அனைத்துலக பெண்கள் நாள் கொண்டாடப்பட்டது.

1910க்கு பிறகான காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளின் நாடுபிடி போட்டிக்காக நடைபெற்ற முதலாம் உலகப்போரில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது போரை நிறுத்து, உணவைக்கொடு என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருந்தது. அப்போதைய ஆண்டுகளில் மார்ச் 8 ஆம் நாளில் பெண்கள் உணவிற்காகவும், தங்களுடைய சுயமரியாதையை வலியுறுத்தியும் "எங்களுக்கு ரொட்டியைக் கொடு, ரோஜாக்களை கொடு"(Bread and Roses) என்ற முழக்கத்தோடு வீதியில் இறங்கி போராடினார்கள். ஐரோப்பாவில் பல பகுதிகளில் "கந்தக துகள்களில் இருந்து எங்கள் துணைவர்களை விடுவி" என்று முழக்கமிட்டனர் பெண்கள். இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி போன்ற நாடுகளில் நடந்த சர்வாதிகார பாசிச கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக பெண்கள் போராடினார்கள்.

இவ்வளவு வளர்ச்சியடைந்த காலத்திலும் இன்றும் உழைக்கும் பெண்களுக்கான போராட்டம் குறைந்தபாடில்லை. அலுவலகத்திலும், வீட்டிலும் தொடரும் பாலியல் கொடுமை, அலுவலகத்தைவிட்டு வெளியில் வந்தால் பாதுகாப்பற்ற சூழ்நிலை, கண்முன்னால் அலுவலக அருகாமையிலேயே டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த உமா மகேஸ்வரி கொல்லப்பட்டுள்ளார், உயிருக்கே பயந்துதான் பெண் வெளியில் வரவேண்டியுள்ளது... பாதுகாப்பைத்தாண்டி சமத்துவமான சூழல் உழைக்கும் பெண்களுக்கு இன்றளவும் இல்லாமல் தான் உள்ளது. உரிய வேலை, தளத்திற்கே சென்று வேலைபார்க்கும் (Onsite Job) வாய்ப்பு இவற்றில் பாரபட்சம், திருமணமானால் மீண்டும் வேலை பார்ப்பதில் சிக்கல், வேலைக்கு வந்தால் குழந்தைப்பேறு காலத்தில் விடுமுறையில் சிக்கல், பின்னர் குழந்தை வளர்ப்பில் சிக்கல், குழந்தை பிறந்தபிறகு பெரும்பாலான பெண்கள் வேலைக்கு வருவதில் மிகப்பெரிய சிக்கல்... இப்படி வேலை (Career) என்பது ஆண்களுக்கானது என்றே வரையறுக்கிறது. சமத்துவமின்மை எந்த அளவிற்கு வேலையிடத்த்தில் உள்ளது என்பதை நம்மோடு வேலைசெய்யும் குழுத் தலைவர், மேலாளர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று பார்த்தாலே நமக்கு உண்மை விளங்கிவிடும். பாதுகாப்பும், சமத்துவமும் அரசும், சமூகமும் தரவேண்டிய சலுகையோ கருணையோ பிச்சையோ அல்ல, அது நமது உரிமை. அதை உரக்க சொல்லும்போதுதான் இந்த சமூகம் பெண்கள் உரிமை குறித்த தேவையைப் புரிந்துகொள்ளும். அதற்கு இந்த மார்ச் 8 அனைத்துலக உழைக்கும்
பெண்கள் நாளில் உறுதியேற்போம்."


அதனைத் தொடர்ந்து பெண்களின் இன்றைய நிலை குறித்து வீதி குறுநாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. தோழர் சமந்தா பெண் நாயகியாக நடிக்க, தோழர்கள் அண்ணன்,தந்தை, வீதியில் பார்க்கும் ஆண்கள், அலுவலக மேலாளர், பெற்றோர் தேர்ந்தெடுத்த துணை ஆகிய பாத்திரத்தில் நடித்தார்கள். நாடகம் முழுவதும் இங்கே பதியப்பட்டுள்ளது, ( http://save-tamils.blogspot.in/2014/03/6.html ).


புதிதாக இயக்கத்தில் இணைந்த தோழர் சபானா அவர்கள் எப்படி ஒரு பெண் தன் ஒவ்வொரு கட்டத்திலும் கொடுமைகளை அனுபவிக்கிறார் என்பதை பற்றி உரையாற்றினார். "ஆண்களுடைய போராட்டம் பணம் சம்பாதிப்பதிலும், குடும்பத்தை வழிநடத்துவதிலும் மட்டும் தான் உள்ளது. ஆனால் ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு படிக்கட்டிலிலும் போராட்டமாகத்தான் உள்ளது. ஒரு பெண் படிக்க பள்ளிக்கு செல்லும்போதே போராட்டம் ஆரம்பித்துவிடுகிறது, பெண்ணை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சுற்றத்தார் பெற்றோரிடம் சொல்வார்கள், பெற்றோரும் பெண்ணை காயப்படுத்துவார்கள். நினைத்த கல்லூரியில் விரும்பிய பாடம் எடுத்து படிக்க விடமாட்டார்கள். அதைத்தாண்டி வேலைக்கு வருவதாக இருந்தால் பெற்றோர், உற்றார், உறவினர் என அனைவரிடமும் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு ஐ.டி.துறை வேலை பார்த்தால் பெண்கள் திமிராக ஆணுக்கு சமமாக இருப்பார்கள் என குறை கூறுவார்கள், துணையை பெற்றோரே தேடும் போதும் இதையெல்லாம் சொல்லிக்காட்டி பெண்ணின் மனதை துன்புறுத்துவார்கள். இந்த இடத்திற்கு வேலைக்கு வருவதற்கே பெரும் போராட்டமாக இருக்கையில் பாதுகாப்பு என்பது பெரிய அச்சமாக உள்ளது. பெண்ணுக்கான சுதந்திரம் ஆணிடம் கேட்டுப்பெறுவதல்ல அவளே எடுத்துக்கொள்வதுதான், எப்படி ஒரு ஆண் தனக்கான உரிமையை யாரிடமும் கேட்பதில்லையோ அப்படித்தான் பெண்ணிற்கும். இதை ஆணும் புரிந்து கொள்ளவேண்டும். தனக்கான உரிமையை கேட்பது என்பதே இழிவானது. அப்படியான சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டு பெண்கள் நிலைமை உள்ளது. இதை மாற்றுவது நமது எல்லோர் கையிலும் தான் உள்ளது".


பின்னர் தோழர் சமந்தா அவர்கள் எப்படி தன்னுடைய சாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தின் போது உற்றார் உறவினர் நண்பர்களால் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை விளக்கினார். சுயமரியாதை திருமணமே பெண்ணுக்கு சமமான மரியாதை தரும் இணை ஏற்பு விழா என்பதை தன்னுடைய அனுபவத்தில் இருந்து எடுத்துக்கூறினார். சாதி மறுத்தும் தனக்கு பிடித்த காதல் துணைவரோடு வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த முடியும் என்பதை பிறருக்கும் நம்பிக்கையூட்டும்படி எடுத்தியம்பினார். முழுமையான செய்தி ஏற்கனவே பதிவாக நம்மிடம் பகிர்ந்துள்ளார் ( http://save-tamils.blogspot.in/2014/03/1.html ).



அவரை அடுத்து எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதிகிடைக்க வழக்காடு மன்றம் மூலம் பல வழக்குகளை பெண்கள் விடுதலைக்காக பல பெண்கள் அமைப்புகள் மூலம் களமாடிவருபருமான தோழர் ரேவதி அவர்கள் நமது நாட்டில் பெண் உரிமைப் போராட்டியவர்கள் வரலாற்றைப் பற்றியும் இன்றும் அதன் தேவை பற்றியும் பேசினார்கள். "முதன்முதலில் பண்டித ரமாபாய் பெண்கள் உரிமைக்காக இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் போராடினார். தமிழ்நாட்டில் குஞ்சிதம் குருசாமி, ராமாமிர்த அம்மையார் என திராவிட இயக்கத்தை, இடதுசாரி அமைப்பை சார்ந்த பல பெண்கள்
போராடினார்கள். ஆனால் இன்றைக்கும் பெண் உரிமை என்பது எட்டாக்கனியாக உள்ளது. திவ்யா என்ற ஒரு பெண் தன் காதல் துணையாக தலித் இளைஞன் இளவரசனை தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக மூன்று தலித் கிராமங்கள் தருமபுரியில் எரிகின்றது. எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம். எங்கெல்ஸ் குறிப்பிடுவார் உலகில் தோன்றிய முதல் அடிமைத்தனம் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தியதுதான் என்று. ஆம் முதலில் தோன்றிய அடிமைத்தனம் கடைசியாகத்தான் போகும். ஆனால் அதுவாகவே போய் விடாது. நம்முடைய இடையறாத போராட்டத்தால் தான் முழுமையான உரிமை பெண்ணுக்கு கிடைத்து பெண்ணடிமைத்தனம் நம் சமூகத்தைவிட்டுப் போகும்".


பின்னர் அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் கொண்டாட்டத்தின் தேவை குறித்து தோழர் செந்திலும், தோழர் நாசரும் வினா விடை பாணியில் ஒரு நகைச்சுவை கலைநிகழ்வை அரங்கேற்றினார்கள். அதனை அடுத்து நிறைவுரையாக தோழர் பரிமளா அவர்கள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றியும், பெண் சமத்துவத்திற்கான உரிமைப் போராட்டத்தின் அடிப்படையைப் பற்றியும் பேசினார்கள். "இலயோலா கல்லூரியில் ஒரு பேராசிரியைக்கு அவரது துறைத் தலைமைப் பேராசிரியரால் கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவரும் பாலியல் கொடுமைக்கு எதிராக இவ்வளவும் கல்லூரிக்குள்ளேயே இருந்து போராடி நீதி கிடைக்காமல் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். சட்டமும் கல்லூரி நிர்வாகமும் பாலியல் கொடுமை செய்தவரை தண்டிக்காமல் துன்புறத்தப்பட்டவரை கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளது. இதுதான் தமிழ்நாட்டிலேயே புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் உண்மை நிலை. இதற்கு எதிராக இன்று ஆர்பாட்டம் நடத்தச் சென்றோம், எங்களை 5 நிமிடம் கூட அங்கு நிற்கவிடாமல் கைது செய்கிறது காவல்துறை. அப்படி என்றால் அரசும், காவல்துறையும், சட்டமும் அநீதிக்கு துணை போகிறதா?...

இந்தியாவின் முதன்மை ஐடி நிறுவனம் டிசிஎஸ். அதில் வேலை பார்த்த உமா மாகேஸ்வரி அலுவலகத்திற்கு அருகிலேயே வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். எதற்கும் வராத ஆளில்லாத விமானம் கொலையின் தடத்தை தேட வந்தது. அலுவலகத்தில் வேலை பார்க்க வந்த பெண்ணின் சாவிற்கு முன்பே பாதுகாப்புக்கு தரமுடியாத நிலைமையில் தான் நாட்டின் பெரிய நிறுவனமான டிசிஎஸ்-யே உள்ளது. அரசிற்கும் அதைப்பற்றி கவலை இல்லை, டிசிஎஸ் பெயர் கலங்கமடையாமல் பார்க்கிற வேலையை முதன்மையாக செய்கிறது.


உலகின் முதன்முதலாக பெண்களுக்கான ஜமாத் அமைத்து பெண்களுக்கான உரிமைக்காக இசுலாத்திற்குள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று வருபவரை கூப்பிட்டு சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடத்த முடியவில்லை. இதுதான் நமது சமூகத்தில் மத நிறுவனங்களின் இன்றைய நிலைமை. திவ்யா காதலித்தவரை திருமணம் செய்யவிடாமல் சாதியவாதிகள் கிராமங்களை எரித்தார்கள். சாதி என்கிற சமூக நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று அவர்களைப் பிரித்து இறுதியாக இளவரசனையும் கொன்றது. அரசு இதில் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய திவ்யாவின் விருப்பம் கிள்ளி எறியப்படுவதைத் தடுப்பதில் சிறு முனைப்பும் காட்டவில்லை.

பெண்ணை வெறும் வீட்டின் சொத்தாகவும், திருமணம் ஆகும்போது வரதட்சணையாக அதிகமாக கொடுக்க வேண்டியிருப்பதால் இந்தியாவில் பல பெண்கள் கருவிலும் சிறுவயதிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 6 வயது முதல் 60 வயது வரை வன்புணர்ச்சிக்கு ஆளாகி பல பெண்கள் மடிகிறார்கள். பல பகுதிகளில் நாட்டில் 1000க்கு 800, 900 பெண்களே உள்ளார்கள். அமர்த்தியாசென் இவர்களை தேடப்படும் பெண்கள் (Missing Women) என்கிறார். ஆராய்ச்சியாளராக, மருத்துவராக, விண்வெளி வீரராக, விளையாட்டில் வீராங்கனையாக வரவேண்டிய எத்தனையோ பெண்கள் இப்படி மாண்டுள்ளார்கள்.

எவ்வளவு புகழ்மிக்க கல்வி நிறுவனமானாலும், தொழில் நிறுவனமானாலும், மத நிறுவனமானாலும், சாதி நிறுவனமானாலும் எந்த நிறுவனமாக இருந்தாலும் பெண்ணிற்கு அங்கே எந்த உரிமையும் தரப்படுவதில்லை... எந்த இடத்திலும் கொடூரமாக வன்கொடுமைக்குள்ளாகிறாள்... அரசும், சமூகமும் வேடிக்கை மட்டும் பார்ப்பதில்லை, கொடியவர்களுக்கு தன் சீரிய அமைதியின் மூலம் ஒத்துழைப்பையும் கொடுக்கிறது. ஆக பெண்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் கிடைப்பதாலும், சமூகத்தில் தானும் சக மனுசி என்று நிலைநாட்டுவதால் மட்டுமே தனக்கான உரிமையைப் பெண் அடைய முடியும். அதுவரை பாதுகாப்பும்,
சமத்துவமும் பெண்களுக்கு கேள்விக்குறியே..."

இறுதியாக 4 வயது மற்றும் 6 வயது நிரம்பிய இரு குழந்தைகள் மேடையேறி 20க்கும் மேற்பட்ட திருக்குறள் சொல்லி ஆணுக்கு இணையாக பெண்களால் அனைத்தும் முடியும் என்று காட்டி நிகழ்வை அர்த்தமுள்ளதாக்கினார்கள்.

தோழர் செந்தில் நன்றியுரை ஆற்றினார். அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாள் 2014 இனிதே நிறைவுற்றது.

ஸ்னாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.

2 comments: