Monday, March 26, 2012

எம் மக்களின் மன உறுதியையும் காற்றையும் கடலையும் உங்களால் அடைக்க முடியுமா?

அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் இன்று காலை 9 மணிக்கு, நெல்லை பாளையங்கோட்டை திடலில், பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை, SDPI, மே 17 இயக்கம், த.தே.பொ.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, தோழர் தியாகு, பண்ரூட்டி வேல்முருகன் ஆகிய தலைவர்களின் தலைமையில் "மக்களின் அச்சத்தைப் போக்கி அணு உலையை திறக்கக்கூடாது என்ற தமிழக அரசு இன்று மக்களை அச்சுறுத்தி திறப்பது நியாயமா? கூடங்குள அணு உலையை திறக்காதே! கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்!" என்கிற கோரிக்கை முழக்கத்துடன் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் இடிந்தகரை நோக்கி படையெடுத்தபோது, போலிசாரால் கைது செய்யப்பட்டனர். விண்ணதிர வைக்கும் முழக்கங்களுடன் காற்று அங்கு வேறு மாதிரியாக இருந்தது. ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர்.

மாலை ஐந்து மணிக்கு விடுவிக்கப்பட்ட தோழர்கள் இன்று ஒரு எதிர்பாராத திருப்பத்தை சந்திக்க நேர்ந்தது. இன்றைய போராட்டத்தில் பங்கு பெற்ற தோழர் சதீஸ், மற்ற இயக்கத் தோழர்களுடன் வெளியே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த சிலர் அவரை சுற்றி வளைத்து வண்டியில் போட்டு கடத்திச் சென்றிருக்கின்றனர். இது கியூ பிராஞ்ச் போலிசின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எந்தவித வாரண்டோ, காரணங்களோ இல்லாமல், இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெருவாரியான‌ மக்களிடையே ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த அறப்போரை திசைதிருப்ப எல்லா வழிகளிலும் ஆளும் அரசால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. போராடும் மக்களை நெருங்க முடியாத கையாலாகாத‌ அரசு, மாற்று வழியில் உளவியல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

ந‌மது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து உலகெங்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழும் கூடன்குளம் இடிந்தகரை மக்கள் இம்மாதிரியான அடக்குமுறைகளை தூசு போலத் துடைத்தெறியத் துணிந்திருக்கின்றனர். முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒரு சமூகத்தையே பலியிடத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் தமிழக அரசையும் எதிர்த்து, கொலைகார‌ அணு உலையை மூடும் வரை மக்கள் இந்த அறவழிப்போரை இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஆயிர‌க்கண‌க்கான‌ போலீசின் பிரம்மாண்ட அணிவகுப்பும், இராணுவ‌மும் துப்பாக்கிக‌ளும் நெஞ்சுர‌ம் கொண்ட அந்த‌ குழந்தைகளைக் கூட‌ மிர‌ட்ட‌ப் போதுமான‌தாக‌ இருக்கவில்லை.இன்னொரு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றி விட‌லாம் என‌ ல‌ட்சிய‌ வெறியோடு க‌ள‌மிற‌ங்கியிருக்கிற‌து அர‌சு இய‌ந்திர‌ம். உண‌வு, குடிநீர் காய்க‌றி எல்லா அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன. ராதாபுரம் பகுதியில் 144 த‌டை உத்த‌ர‌வு பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்டிருக்கிறது. உள்ளே வெளியே போக்குவ‌ர‌த்து அனும‌தி இல்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மருந்துகளின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. கூட‌ங்குள‌மும் இடிந்த‌கரையும் வெளியுல‌கோடு தொட‌ர்ப‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. உதயகுமார் அவர்களின் துணைவி நடத்தும் பள்ளிக்கூடம் கூலிப்படையினரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட ஒரு கர்ப்பிணிப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல போலிசு மறுத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. கைதானவர்களில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் கொண்டு சென்ற போது, மலஜலம் கழிக்கக்கூட போலிசு வண்டியை நிறுத்த‌ அனுமதிக்கவில்லை.

ச‌ங்க‌ர‌ன் கோவில் இடைத்தேர்த‌ல் நிகழ்ந்த ம‌றுநாளே, த‌ன் கோர‌ முக‌த்தைக் காட்டிக் கழுத்தறுத்த‌ த‌மிழ‌க அரசையும், ஒரு இனப்படுகொலைக்குத் தயாராகும் முஸ்தீபுகளோடு தன் திட்டத்தை வரையறுத்திருக்கும் மாநில அரசையும் மக்கள் அவதானிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கெனவே சிங்கள் அரசின் உதவியோடு அம்பலமான ஈழப்படுகொலைகளைப் பார்த்து கண்ணீரோடு (சற்று தாமதமாக) கொதித்துப் போயிருக்கிற தமிழனுக்கு காங்கிரசு அரசின் மீதான தேச வளர்ச்சி பொய்க்கரிசனம் தெற்றென விளங்கியிருக்கிறது.

இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவ விவசாய மக்களின் நியாயத்தையும், ஏன் அணு உலைக‌ளை இந்தியா உள்ளிட்ட‌ மூன்றாந்த‌ர‌ நாடுக‌ள் ஆதரிக்கின்றன என்ற‌ பின்ன‌ர‌சியலையும் ம‌க்க‌ளிடையே அவசரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தான் இருக்கிறது. தின‌ம‌ல‌ம் போன்ற‌ பாசிச‌ நாளித‌ழ்க‌ளின் க‌ருத்துக‌ளுக்கு போதுமான‌ ஆத‌ர‌வு குறைந்து வருகிற இவ்வேளையில்,நம் சந்ததிகளைக் காக்க இரவு பகலாக போராடி வரும் அந்த மக்களுக்கான ஆதரவைத் திரட்ட‌ நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

தமிழகத்தையே கூறுபோடக் காத்திருக்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் மத்திய அரசிடம் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே இந்த அவலம் நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நமது நிலங்கள் பறிக்கப்படவிருக்கின்றன. நமது வீடுகள் சூறையாடப்படவிருக்கின்றன. நமது உயிர்களைச் சுவைக்க‌ பிணந்தின்னி கழுகுகள் காத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் எப்போதும் போல நம்மைக் கைவிட்டு விடுவார்கள். கூடங்குளத்தையும் இடிந்தகரையையும் வட்டாரப் பிரச்சினையாக பாவித்து பாராமுகமாய் இருக்கப் போகிறோமா? தொலைக்காட்சியையும் கிரிக்கெட்டையும் ஓட்டரசியல் கட்சிகளின் இலவசக் கவர்ச்சி விளம்பரங்களையும் பார்த்து கிறங்கிக் கிடக்கப் போகிறோமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைச் சேற்றை வாரியிறைத்து வாழ்வாதாரப் போராட்டங்களை நசுக்கத்துடிக்கும் ஒவ்வொரு அரசும் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்தே ஆக வேண்டுமென்பதை, போராடும் மக்களுக்கு தோள் கொடுப்பதன் மூலம் இந்திய அரசை எச்சரிப்போம். நம் மன உறுதியையும் காற்றையும் கடலையும் அவர்களால் அடைக்க முடியாது என்பதை சாவு வியாபாரி அரசுகளின் துப்பாக்கி ரவைகளுக்கு உரக்கச் சொல்வோம்.

அ.மு.செய்யது

Wednesday, March 14, 2012

கூடங்குள அணு உலை எதிர்ப்பு ‍- ஓவியக் கண்காட்சி

அ.மு.செய்யது

கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பலகைகளில் பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் மலர்ச்சியும் சுடுகாடுகளும் கல்லறைகளும் மற்றும் அணு உலைகளும் குழைத்து குழைத்து நிறைந்திருந்தன.

டிராஸ்கி மருது, வீரசந்தானம், முகிலன், அரஸ், சீனிவாசன் ஓவியக்கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களான சி.வெங்கடேசன், அரும்பு ப.குமார், அல்ஃபோன்ஸ் உள்ளிட்ட 30 ஓவியக்கலைஞர்கள் நேற்று லயோலா கல்லுரியில் காலை பத்து மணிக்கு கூடுவதாக உறுதி பூண்டு, கூடன்குள அணு உலையை எதிர்த்து ஓவியங்களாய் தீட்டத்துவங்கினர். வரைந்து முடிக்கப்பட்ட ஓவியங்கள் மேடையில் ஒவ்வொன்றாய் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஓவியர் டிராஸ்கி மருது, கூடன்குள அணு உலை எதிர்ப்பை பெண்களின் போராட்டமாக இரத்த நிறப்பின்னணியில் தனது ஓவியத்தில் அழுத்தமாக சித்தரித்திருந்தார். ஓவியர் அரஸ், பல கைகள் இணைந்து மன்மோகனின் கைகளை கூடன்குள அணு உலையை கூடாது என முடுக்கி விடுவதாக தனது 'கை'வண்ணத்தில் சொல்லியிருந்தார்.கூடன்குள அணு உலைகளை தமிழகத்தின் கல்லறைகளாகவும் மன்மோகனை சாவி கொடுக்கப்பட்டு இயங்கும் பொம்மையாகவும் காட்ட கார்ட்டூனிஸ்ட் குமுதம் பாலா தவறவில்லை.

ஓவியர் அரும்பு ப‌.குமார், ஓவிய‌க்க‌ல்லூரி ப‌குதி நேர‌ ஆசிரிய‌ர், ஓவிய‌த்தோடு சில க‌ருத்துக‌ளையும் ந‌ம்மிடையே ப‌கிர்ந்து கொண்டார். க‌லை க‌லைக்காக‌ அன்றி ம‌க்க‌ளுக்காக‌ என்றால் எந்த‌ ம‌க்க‌ளுக்காக‌? பெரும்பான்மையான‌ உழைக்கும் ம‌க்க‌ளுக்காகவா? இல்லை அவ‌ர்க‌ளை சுர‌ண்டி பிழைக்கும் முத‌லாளிக‌ளுக்கா? ஹிரோஷிமா, நாகசாகியில் த‌ப்பிப்பிழைத்த‌ ஓவிய‌ர்க‌ள் அக்கொடூர‌ங்க‌ளை பின்னாளில் ஓவிய‌ங்க‌ளில் ப‌திவு செய்த‌தை நினைவு கூர்ந்தார். அத்த‌கைய‌ கொடுமைகளை இனியாவது கூடன்குளத்தில் நிகழாது த‌டுக்க‌ வேணும் இத்தகைய‌தொரு முகாமை ந‌ட‌த்த‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தை உண‌ர்த்தினார். பெரும்பாலான‌ வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ள் ம‌க்க‌ளின் உண‌ர்வு ம‌ட்ட‌த்திலிருந்து எழும் க‌லைஞ‌ர்க‌ளை அங்கீக‌ரிப்ப‌தில்லை என்ப‌தோடு அவ‌ர்க‌ளை வேண்டுமென்றே இருட்ட‌டிப்பு செய்வ‌த‌ன் கோப‌ம் அவ‌ருக்கிருந்த‌து.

அல்ஃபோன்ஸ், ஓவிய‌க்க‌ல்லூரி மாண‌வ‌ர், கூட‌ன்குள‌ அணு உலை செய‌ல்ப‌ட‌த் தொட‌ங்கினால், இந்திய‌ இல‌ங்கை மின்சார‌ ஒப்ப‌ந்த‌ப்ப‌டி, கூட‌ன்குள‌ அணு உலை மின்சார‌ம் இல‌ங்கைக்கு நேர‌டியாக‌ விநியோகிக்கப் ப‌டப் போவ‌தை சூச‌க‌மாக‌ த‌ன‌து ஓவிய‌த்தில் தெரிவித்திருந்தார்.மீன‌வ‌ர்க‌ளை துப்பாக்கிக‌ள் கொண்டு அவ‌ர்க‌ள‌து வாழ்வாதார‌த்தை இந்திய‌ அர‌சு விர‌ட்டிய‌டிப்ப‌தாயும் அவ‌ருடைய‌ ஓவிய‌ம் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து.

ஓவிய‌க்க‌லைஞ‌ர்க‌ளோடு பார்வையாள‌ர்க‌ளாக‌ க‌ல‌ந்து கொண்ட 'உச்சித‌னை முக‌ர்ந்தால்' இய‌க்குன‌ர் புக‌ழேந்தி, ம‌.க‌.இ.க‌ தோழ‌ர் வீராச்சாமி அவ‌ர்க‌ளுடைய‌ எண்ண‌ங்க‌ளை ந‌ம்மோடு ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்.ஓவிய‌ர் அர‌ஸ், இய‌க்குன‌ர் புக‌ழேந்தியை ஒலிபெருக்கியில் பேச‌ அழைத்தார். அவருடைய கருத்துகளிலிருந்து,

"போபால் விஷ‌வாயு க‌சிவின் போது எத‌ற்காக‌ சாகிறோம் என‌த்தெரியாம‌லே உயிரை இழந்தனர் அவ்வூர் மக்கள். மீத்தைல் ஐசோசயனேட் வாயு வானில் பல்கி பெருகும் போது எத்திசையில் ஓடவேண்டும் என தெரியாத மக்களாய் அவர்கள் இருந்தனர். அந்த வாயு படாலேக் என்ற ஏரியை கடந்த போது, நீரின் அடர்த்தி வாயுவின் வீரியத்தை குறைத்து உறிஞ்சுக்கொண்டது.இந்த படாலேக்கை தாண்டி 15 காங்கிரசு அமைச்சர்களின் வீடுகள் இருந்தன. இந்த அமைச்சர்கள் மட்டும் அன்று உயிரை இழந்திருந்தால், அந்த மக்களுக்கு என்றோ நஷ்ட ஈடு கிடைத்திருக்கும்.யூனியன் கார்பைடின் முதலாளி வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் தஞ்சம் அடையுமுன் தூக்கில் தொங்கியிருப்பான்.இந்த துயர சம்பவம் மீண்டும் கூடன்குளத்தில் நிகழாதிருக்க வேண்டும்.கூடன்குளம் ஒரு கடலோரத்தில் அமைய வேண்டுமாயின் சென்னையின் மெரினா கடற்கரையோரம் அமைய மக்கள் சம்மதிப்பார்களா ? போயஸ் கார்டனிலோ கோபாலபுரத்திலோ ஏன் ஒரு அணு உலை செய்யக்கூடாது ? கூடன்குளம் மக்கள் மட்டும் என்ன புழு பூச்சிகளா? இளிச்சவாயர்களா ?"

தோழர் வீராச்சாமி இன்னும் விரிவாக கருத்துகளை பகிர்ந்து கொண்டார். வரையப்பட்ட‌ ஓவியங்கள் குறித்தான தீர்க்கமான பார்வை அவரிடமிருந்தது. கூடன்குள அணு உலை எதிர்ப்பை சித்தரித்ததோடு அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் கலந்திருக்க வேண்டுமென தன் ஏக்கங்களைச் சொன்னார்.

'கூட‌ன்குள‌ம் ம‌க்கள் உண‌ர்வூட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக இருக்கின்ற‌ன‌ர். அறிவூட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். எத‌ற்காக‌ சாகிறோம் என‌த் தெரியாம‌லே இற‌ந்து ம‌டிந்த‌ போபால் ம‌க்களைப் போல‌ன்றி, கூட‌ன்குள‌ ம‌க்க‌ள் குழந்தைக‌ள் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரை அணு உலைக‌ளின் ஆப‌த்துக‌ளையும் பின்னாலிருக்கும் அர‌சிய‌ல் அறிவையும் பெற்றிருக்கின்ற‌ன‌ர். அதிகார‌ ப‌ல‌ம் கொண்டு துப்பாக்கி முனையில் அப்போராட்ட‌த்தை ஒடுக்கி விட துடிக்கிறது இந்திய‌ அரசு. இந்த ஆணவத்திமிர் எங்கிருந்து வருகிறது. அது மற்ற மாவட்ட மக்களின் செயலற்ற தன்மையும் அரசியலற்ற தன்மையையும் வலுவாக புரிந்து வைத்திருப்பதனால் உருவான திமிர். இந்த போக்கை எப்ப‌டி முறிய‌டிப்ப‌து? ம‌த்திய‌ அர‌சும் மாநில‌ அர‌சும் க‌ட்ட‌மைத்த‌ போலி பொது புத்தியை எப்ப‌டி உடைப்ப‌து? அத‌ற்கு இது போன்ற‌ முகாம்க‌ள் அவ‌சிய‌ப்ப‌டுகின்ற‌ன. அணு உலைகளின் எதிர்ப்பை பதிவு செய்தலும் அதன் விளைவுகளையும் மக்களிடையே பேச‌ வேண்டும். இது ஒரு செய்தி. ம‌க்க‌ளிடையே கொண்டு சேர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ செய்தி. எப்ப‌டியாவ‌து கொண்டுபோய் சேர்க்க‌ வேண்டும். அவ‌ச‌ரமாய்ச் சேர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். ம‌.க‌.இ.க‌ பொதுக்கூட்ட‌த்தில் கூட‌ன்குள‌ ம‌க்க‌ளை பேச‌ வைத்த‌து போல‌ மாநில‌மெங்கும் அவ‌ர்க‌ளை பேச‌ வைக்க‌ வேண்டும். அத‌ற்கு உண‌ர்வெழுச்சியின் அடிப்ப‌டையில் உழைக்கும் இத்த‌கைய‌ க‌லைஞ‌ர்க‌ளின் ப‌ங்கு அவ‌சிய‌மாகிற‌து.'

தீட்டப்பட்ட ஓவியங்களை மாநிலமெங்கும் பள்ளி,கல்லூரிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு எடுத்து செல்லப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தீர்மானித்தனர்.

- அ.மு.செய்யது (சேவ் தமிழ்ஸ்)