Saturday, April 26, 2014

தனித்தீவுகளா தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ?!!

16-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் 24-04-2014 அன்று நடைபெற்றது. தமிழக தொகுதிகளில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99 விழுக்காடு வாக்குப்பதிவும்,குறைந்த பட்சமாக தென்சென்னையில் 57.86 விழுக்காடும் பதிவாகி உள்ளது.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் காஞ்சிபுரம் தொகுதியில் தமிழக வாக்குப்பதிவை விடக் குறைவாக 64.08 விழுக்காடு பதிவாகியுள்ளது.குறைந்தபட்ச வாக்குபதிவைக் கொண்ட இதே சென்னை,காஞ்சிபுரம் பகுதிகளில் தேர்தல் நாளுக்கு விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட விப்ரோ (WIPRO), ஹெச் சி எல் (HCL), டெக் மகிந்திரா (TechMahindra), சுடக் ஷோ (Sodexho) உள்ளிட்ட 5 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த 3500 ஊழியர்களை வெளியேற்றி நிறுவன அலுவலகங்களுக்கு பூட்டு போட்டுள்ளது தேர்தல் ஆணையம்.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையில் இருந்து மீள்வது இந்நிறுவனங்களுக்கு ஒன்றும் பெரிய விடயமல்ல. அதே சமயம், தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற உத்தரவை சிறிதும் சட்டை செய்யாமல் செயல்படும் துணிவு இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


பொதுமைச் சமூகத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் விலகியே இருக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் விலகி இருப்பதற்கு எப்படி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் காரணம் ஆகின்றன என்பதற்கான சிறிய உதாரணம்தான் தேர்தல் நாளன்றும் அலுவல்களை நடத்திய இந்த நிறுவனங்களின் செயல்.


1990-களில் திறந்து விடப்பட்ட சந்தையின் உற்பத்திதான் இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்களது அலுவலகங்களைத் திறக்க சலுகை விலையில் நிலம், தடையில்லா மின்சாரம், பலமான உட்கட்டுமானம் என்று அரசுகளிடம் இருந்து இவர்கள் பெறாத சலுகைகள் கிடையாது. இவர்களுக்கான நிலம் ஊருக்கு வெளியே குறைந்த விலையில் வழங்கப்பட்டு, இவர்கள் ஈட்டும் வருவாய்க்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதிகளில் குடியேறின.


அத்தோடு இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தவோ, அமைப்பாக ஒருங்கிணைந்து சங்கம் அமைக்கவோ, தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பவோ எந்த உரிமையும் அளிக்கப்படுவதில்லை.


இவ்வாறு, பெரும்பான்மை மக்கள் திரளிடமிருந்து தங்கள் லாபத்திற்காக விலகி இருக்கும் நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர் மத்தியிலும் அதே உளவியலை உட்புகுத்தி விடுகின்றன.


இதற்கு உதாரணமாக ஒரு நிகழ்வை சொல்லலாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருந்த சமயம், பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளுக்கும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்குமான ஒரு சந்திப்பு பெங்களூரில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய, ஒரு ஊழியர் பின்வருமாறு கூறினார் "

அரசியல் கட்சிகளாகிய நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பொதுப் பிரச்சனைகளுக்காக நடைபெறும் கதவடைப்புகளில் எங்களை இணைத்துக் கொள்ளாதீர்; எங்களின் உற்பத்தி நேரம் வீணாகிறது" என்றார்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பெரும்பான்மை கருத்து இது இல்லை என்கிறபோதும், நம்மில் ஒருபிரிவினரின் சிந்தனை பெருமுதலாளிகளின் சிந்தனையில் இருந்து பெறப்பட்டதாகவும், ஆளும் வர்க்கத்தின் சார்பாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.


இவ்வாறு பல்வேறு சலுகைகளை பெற்று ஊருக்கு வெளியில் செயல்படும் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு எப்படி உரிமைகளை புறக்கணிக்கிறதோ அதேபோன்று அரசின் எந்த உத்தரவையும் மதிக்காமல் செயல்படும் போக்கையே கடைப்பிடிக்கின்றன.


சென்னையில் பணிக்கு சென்ற 3500 தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிப்பார்கள் என்று உறுதி கூற இயலாது. அதே சமயம் சில நூறு ஊழியர்கள் வாக்களிக்க விரும்பினாலும், அதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே நாம் உள்ளோம் என்பதே தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் எதார்த்த நிலையாக உள்ளது.


தேர்தல் நாளில் மட்டுமல்லாது, மற்ற பொது விடுமுறை நாட்களிலும் இந்த நிறுவனங்களின் போக்கு இவ்வாறே உள்ளது. அமைப்பாக செயல்படும் போக்கை உடைத்து நம்மை உதிரிகள் ஆக்கிய திறந்த சந்தை பொருளாதாரம், நம்முடைய சனநாயக உரிமையைக் கூட கேட்டுப் பெற முடியாதவண்ணம் நம்மை முடக்கியுள்ளது என்பதே இதன் பொருள். நம்மை உதிரிகளாக ஆக்கியதோடல்லாமல், பொதுமைச் சமூகத்திற்கு பொருந்தும் எந்த சட்டமும் எங்களுக்கு பொருந்தாது என்று தனித்தீவாகச் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Wednesday, April 23, 2014

வைசியா, பிரவீனா கொலை - யார் பொறுப்பு?


வெங்கடாசலபதி என்கிற தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர், நேற்று சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில், தன்னுடன் பணிபுரியும் வைசியா என்ற சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். வைசியா இரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது, வெங்கடாசலபதி தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். காவல்துறையால் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வைசியா சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். கொலைக்கு முன்பு, வெங்கடாசலபதி, வைசியாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு தான் மறைந்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு, வைசியாவை கொன்றிருக்கிறார். இது நேற்றிலிருந்து இன்று வரை பரவலாக ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் செய்தி.

ஆனால் இச்செய்தியோடு தொடர்புடைய மற்றொரு செய்தி, ஆறு வருடங்களுக்கு முன்பு இதே ஊடகங்களில் வெளி வந்திருக்கிறது. பின்பு காலப்போக்கில் அது மறக்கப்பட்டும் இருக்கிறது. அது வெங்கடாசலபதி என்ற கே.வெங்கடாசலபதி, M.Sc பட்டதாரி, ஈரோடு கருங்கல்பாளையத்தில், பிரவீனா என்ற 18 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற செய்தி, 2008 தி ஹிந்துவில் வெளியாகியுள்ளது. அங்கேயும் இங்கேயும் அதே வெங்கடாசலபதி தான். வெங்கடாசலபதியின் சகோதரி திருமணம் கை கூடாமல் இருக்கவே, ஈரோடு கல்யாண விநாயகர் கோயிலுக்கு, வேண்டிக் கொள்ள, வெங்கட்டின் குடும்பம் அடிக்கடி கோயிலுக்கு வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. கோயிலின் அருகே குடியிருக்கும் பிரவீனாவை நட்பாக்கிக் கொண்ட வெங்கடாசலபதி, ஒரு கட்டத்தில் பிரவீனாவை தான் காதலிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதில் உடன்பாடில்லாத பிரவீனாவும், பிரவீனாவின் பெற்றோரும் மறுத்ததோடு, வெங்கட்டை கண்டித்தும் அனுப்பியிருக்கின்றனர்.

இதனால் கோபமடைந்த வெங்கடாசலபதி, வீட்டிலிருந்த ப்ரவீனாவை உடலெங்கும் சரமாரியாகக் குத்தி விட்டு, தப்பியோட முயன்ற போது, பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். அந்த வழக்கில் வெங்கடாசலபதி தண்டிக்கப்பட்டாரா? என்பது பற்றிய தகவல்களோ, வழக்கின் நிலையோ அறியப்படவில்லை.


நேற்று சென்னை வைசியாவின் கொலை நடந்து முடியும் வரை, வெங்கடாசலபதி சென்னை தனியார் பெருநிறுவன தகவல்தொழில் நுட்பத் துறை ஊழியர். TCS என்றழைக்கப்படும் டாடா நிறுவனத்தில் உயர் பொறுப்பிலுள்ள கணினிப் பொறியாளராக (Senior Systems Engineer) பணியாற்றி வந்திருக்கிறார் வெங்கடாசலபதி.

பழைய வழக்கு என்ன ஆனது ? வெங்கடாசலபதி ஏன் தண்டிக்கப்படவில்லை ? ஒரு மிகப்பெரிய நிறுவனம் எப்படி ஒரு ஊழியரின் பின்னணியை முறையாக விசாரிக்காமல் வேலைக்கு சேர்த்துக் கொண்டது? பெண்கள் மீதான தொடர் வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமென்ன ? போன்ற கேள்விகள் எழுவதோடு, மென்பொருள் நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் நடைமுறைகளில் உள்ள கோளாறுகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

2008 ஆம் ஆண்டு வெங்கடாசலபதி பிரவீனாவைக் காதலித்ததும், கத்தியால் குத்திக் கொன்றதும் வெளிப்படையாக நிரூபணமான செய்தி. சம்பவம் நடந்து இரத்தமும் கையுமாக பிடிபட்டவரை, பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருந்தாலும் தொடர்ந்து காவல்துறை விசாரித்திருக்கிறது. என்னென்ன கோணங்களில் விசாரித்தார்கள் என்று இதுவரை நமக்கு தெரியாவிட்டாலும், சட்டத்தின் எல்லா அடைப்புகளையும் மீறி, ஏதோவொரு கோணத்தில் வெங்கடாசலபதி விடுவிக்கப்பட்டிருக்கிறார். வெங்கடாசலபதியை பொறுத்த மட்டில், எவ்வித நெருக்கடிகளுமின்றி, வழக்கு சுமூகமாக முடித்து வைக்கப்பட்டு, அவரை அடுத்த கொலை செய்யும் வரை அனுமதித்திருக்கிறது ஆகவே நேற்றைய வைசியாவின் கொலைக்கு முதல் பொறுப்பு தமிழக காவல்துறையும், சட்ட நடைமுறைகளும்.


இந்தியாவின் ஆகப்பெரும் உயர் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸையும் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. உமா மகேஸ்வரியின் கொலைக்கே இன்னும் ஈடு செய்யாத டி.சி.எஸ் நிறுவனம், அடுத்த பெண் கொலையின் மூலம் அம்பலப்பட்டு நிற்கிறது. பொதுவாக எல்லா தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் வேலைக்கு ஆள் சேர்க்கும் போது, நேர்காணல் எல்லாம் முடிந்த பிறகு, அந்நபரின் பின்புலம் பற்றி தனியாக, இரகசியமாக விசாரணை நடத்தப்படும். BGV என்றழைக்கப்படும் Back Ground Verification சோதனையின் போது, வேலைக்கு தேர்வாகும் நபரின், கல்வித் தகுதி, பழைய வேலையின் அனுபவம், பின்புலம், காவல்துறை வழக்குகள் ஏதும் இருக்கின்றதா, குற்றப்பின்னணி உடையவரா என பல கோணங்களில் இரகசியமாக விசாரிக்கப்பட்டே அவருடைய, வேலைக்கான ஆணை வழங்கப்படும். இந்த பின்புல சோதனை நடத்த முடியாத நிறுவனங்களுக்கு, இதை செய்து கொடுப்பதற்கென்றே தனியாக சில நிறுவனங்களும் வளர்ந்திருக்கின்றன. அவர்களுடைய வேலையே, ஒரு நிறுவனத்திற்காக தேர்வாகும் ஊழியர்களின் பின்புலத்தை சோதனை செய்து, அந்நிறுவனத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது தான். ஆனால் டி.சி.எஸ் போன்ற தகவல் தொழில் நுட்பத் துறை ஜாம்பவான்கள் இப்படியான சோதனைகளை எங்ஙனம் நடத்துகிறார்கள் என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. வெங்கடாசலபதியின் பின்புலம் சரியாக சோதனை செய்யப்பட்டிருந்தால் அவர் அந்நிறுவனத்திற்கு வேலைக்கு தேர்வாகியிருக்கவே முடியாது.

தனியார் பெருநிறுவனங்கள் லாப நோக்குடன் மட்டுமே செயல்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.ஆனால், தங்களுடைய நிர்வாகத் திறன் பற்றி எப்போதும் மெச்சிக் கொள்ளும் அவர்களின் செயல்பாடுகள் என்றும் வெளிப்படைத் தன்மையோடு இருந்ததில்லை. இவ்வாறாக கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் இருக்கும் நடைமுறைகளின் கோளாறுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது பிரவீனாவின் கொலை.


“எனக்கு கிடைக்காத ஒரு பொருள் யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்று ஒரு பீங்கான் பொம்மையை கை தவறி விழுவது போல, உடைப்பார் நமது கதாநாயகன் விஜய். இது போன்ற வசனங்களும் காட்சிகளும் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி வருவதுண்டு. சினிமாக்களில் காட்டப்படும் இது போன்ற காட்சிகள், நிகழ்கால சமூகத்தின் ஒரு பிரதி பிம்பமே. பெண்ணை ஒரு போகப் பொருளாகவும், தன்னுடைய பாலியல் உடைமையாகவும் மட்டுமே கொண்டிருக்கும் பிற்போக்கு ஆணாதிக்க சமூகத்தின் ஒரு எச்சமே இத்தகைய காட்சிகளை கை தட்டி ரசிக்க வைக்கின்றன. பெண்ணாகப்பட்டவள், தன் காதலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஏற்றுக் கொண்ட பெண், தன்னுடைய தனிப்பட்ட உடைமை, சொத்து, அவள் மற்ற ஆண்களிடம் பேசக்கூடாது, சகஜமாக சிரித்து உரையாடக் கூடாது, மீறி நடக்கும் பெண்கள், அமில வீச்சுக்கும், பாலியல் வன்கொடுமைக்கும், படுகொலைகளுக்கும் இலக்காகின்றனர்.

அமில வீச்சில் பலியான வித்யா, வினோதினி, சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரி ஆகியோரின் வரிசையில் இன்று வைசியாவும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரவீனாவைக் கொன்ற வெங்கடாசலபதி, ஆறு வருடங்களாக எத்தகைய தண்டனையும் அனுபவிக்காமல், மற்றவர்களைப் போல, நல்ல நிறுவனத்தில் உயர் பொறுப்பில் வேலை செய்து கொண்டிருந்தது நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. ஒரு பெண் உடலின் மீதான வன்முறை, இச்சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியே அது. ஒவ்வொரு முறை இச்செய்திகளை எதிர்கொள்ளும் வெகுசனம், சவுதி அரேபியாவைப் போல, இவர்களையெல்லாம் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொல்ல வேண்டும், உறுப்புச் சேதம் செய்ய வேண்டும், மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோபத்தில் புலம்பித் தள்ளுகின்றனர். சமூக எதார்த்தத்தில், இத்தகைய தண்டனைகள் ஒரு போதும் பெண்கள் மீதான குற்றங்களை தடுத்து நிறுத்தி விடப்போவதில்லை.பெண் என்பவள் தன்னுடைய அந்தரங்க உடைமை, அவள் என் சொத்து, அவள் மீது எத்தகைய வன்முறையையும் செலுத்த எனக்கு உரிமை இருக்கிறது என உரிமை கொண்டாடும் பிற்போக்கு ஆணாதிக்க சமூகம் மாறாத வரை, இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, வெளிஉலக அனுபவம் என்று பல்வேறு தளங்களில் பெண்கள் முன்னேறி வந்துள்ள போதிலும் இந்த பிற்போக்கு ஆணாதிக்க சமுதாயத்தின் பயங்கர நிழல் அவர்களைத் தொடர்ந்து துரத்துவதையே நமக்குக் காட்டுகிறது.

இப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில், பெண்கள் அமைப்பாக செயல்பட உதவி அவர்களின் பின்னின்று நாமும் போராடுவதே இது போன்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான முதல்படி.


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

Thursday, April 17, 2014

எம்தாய் பிள்ளை நான்தான்


தலையில் பிறந்ததாய்
தலைக்கனம் கொண்டவன் - என்
தலைமேல் கால் வைத்தான்
வாமனக் காலால் எனைமிதித்தான்

தோள் வழியில் பிறந்ததாய்
திமிர் மொழி கொண்டவன் - எனை
ஏகலைவன் என்றான்- என்
வில் கலையெல்லாம் தன் கலையென்று
என் பெரு விரலைக் கொன்றான்

மாமுடி மணிமுடி தன்முடி சூட - என்
தெருவடி தேடி வந்தான்
தீண்டா எனை தீண்டித் தழுவி - என்
வாக்குகளை வென்றான்

ஓர் முடிவோடு போர்முடியொன்று - நாங்கள்
நேர்முடி சேர்கையிலே
தீமுடி கொண்டு எம் உயர்குடியெல்லாம்
வெண்மணியில் கொன்றாய் - வெறும்
நெல் மணிதான் என்றாய்.


திக்குகள் எட்டும் கொட்டும் மழைக்கு
தீண்டாமை தெரியாது - எனை
தீண்டிப் போகும் காற்றுக்கு வர்ண
பேதங்கள் புரியாது

வெஞ்சினம் கொண்ட உயர் சாதிகளே - எங்கள்
பிறப்பை பழிக்காதே - நாங்கள்
அஞ்சிடுவோமென மனப்பால் குடித்து
அழிவை தேடாதே

ராமனை வணங்கிய ராமானுஜனுக்கு
ராமனின் பிள்ளை நான் - நம்
தேச மகாத்மா காந்தியாருக்கு
ஹரியின் பிள்ளை நான்

யாரோ பிள்ளை நான்தான் என்கிற
கரையே இனி வேண்டாம்
எம்தாய் பிள்ளை நான்தான் என்கிற
நிலையே அது போதும் - அது
நிலைத்தே தான் வேண்டும்!!!!

--- பாரதிதாசன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Tuesday, April 15, 2014

2014 இந்திய நாடாளுமன்ற​த் தேர்தல் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு

2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - சேவ் தமிழ்சு இயக்கத்தின் நிலைப்பாடு

செயற்குழு-இணைக்குழு முடிவுகள்


கடந்த ஐந்து ஆண்டுகளில் எமது இயக்கத்தின் செயல்பாடுகள் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக மக்களின் சமுக சனநாயக வாழ்வாதார உரிமைக்காகவும் போராடிவருவதாகும். அதன் அடிப்படையில் இந்த தேர்தலில் எமது இயக்கத்தின் நிலைப்பாடு பின்வருமாறு எடுக்கப்பட்டுள்ளது.* சாதி வெறி, மத வெறி, இன வெறி அரசியலைக் கடும்பிற்போக்கு அரசியல் என்று நாம் வரையறுக்கின்றோம். அவை மக்களைப் பிளவுபடுத்தி ஆதிக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் வழிவகுக்கின்றன. ஜனநாயகத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன. எனவே அவை தேசியத்திற்கும் எதிரானவையாக அமைந்துவிடுகின்றன. ஜனநாயகம் இல்லையேல் தேசியம் இல்லை. அது வெறும் இனக்குழுவாதமாக, பேரினவாதமாக, எதேச்சதிகாரமாக, எஜமானத்துவமாக, சாதியவாதமாக, மதப்பெரும்பான்மைவாதமாக, பாசிசமாகவே வளர்ச்சிப் பெறுகின்றது என்றப் படிப்பினை மனித குல வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கின்றது. எனவே, மத வாத சக்தியான பா.ஜ.க. , சாதி வெறி அரசியலை அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கும் பா.ம.க பங்குபெறும் கூட்டணியை எதிர்க்கின்றோம். தேர்தல் வெற்றி, தோல்விகளுக்குப் அப்பால் பா.ஜ.க. போன்றதொரு கட்சிக்கு பல்லக்குத் தூக்குவது நீண்ட கால அர்த்தத்தில் பெரும் சேதத்தை தமிழ்நாட்டிற்கு விளைவிக்கும் என்பதை இங்கு குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.
* தி.மு.க, அதிமுக என்பவை முழுக்க முழுக்க ஆளும் வர்க்கக் கட்சிகளாக இருப்பதால் அவை குறித்த தனிக்குறிப்புகள் தேவையில்லை. அதே நேரத்தில் மத வாத எதிர்ப்பு என்ற பெயரில் தி.மு.க வுடன் கைகோர்ப்பதென்பது ஒரு வர்கத்த்தின் பெயரால் ஏனைய வர்க்கங்களின் நலன்களைப் பலியிடுவது அன்றி வேறில்லை. இன்று தமிழகத்தின் இயற்கை வளங்களையும் வாழ்வாதரத்தையும் சூறையாடும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தும் ஆதரித்தும் செயல்பட்டு பன்னாட்டு பெரும் முதலாளிகளின் நண்பனாகவும் பரந்து பட்ட மக்களின் எதிரியாகவும் இருக்கின்ற தி.மு.க வோடு கை கோர்ப்பது இந்த மக்கள் பிரிவினரின் நலனுக்கு எதிராக நிற்பது தான். தான் சார்ந்திருக்கும் வர்கத்தின் நலனைப் பாதுகாப்பதற்காக தி.மு.க. வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என்று சொல்லும் கட்சிகளின் இந்த போக்கு இறுதியில் அந்த வர்க்கத்தின் நலனில் கூட சமரசத்திற்கு போக நேரும் என்று வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே, தி.மு.க., அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிகள் புறக்கணிப்பட வேண்டியவை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கட்சியைப் பற்றிய கேள்வியே இல்லை. அது எதிர்க்க வேண்டியதே. ஆம் ஆத்மி கட்சி சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு எதிரான கொள்கை வழிப்பட்ட கட்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஊழல் மட்டுமே இந்நாட்டின் ஒற்றைப் பிரச்சனையாக ஆம் ஆத்மி கட்சியால் முன் வைக்கப்படுகின்றது. இன்றளவில் , ஆம் ஆத்மி கட்சி சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவல்ல மாற்றாக நாம் கருதவில்லை.* பிரச்சனை அடிப்படையில் பின்வரும் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் தலித் எதிர்ப்பு சாதி ஆதிக்க அரசியலுக்கு அரசியல் தலைமை தாங்கிய பா.ம.க. கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் தர்மபுரியில் போட்டியிடும் பா.ம.க. வின் முக்கிய வேட்பாளரான அன்புமணிக்கு எதிராகத் தோழமை இயக்கங்களுடன் இணைந்து பரப்புரை மேற்கொள்ள முயற்சிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் புஷ்பராயன், உதயகுமார் ஆகிய இருவரும் முறையே தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளாராகப் போட்டியிடுகின்றனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு இருக்கும் மக்களின் ஆதாவை எடுத்துக்காட்டும் வாய்ப்பாக இத்தேர்தலைப் பயன்படுத்துவது என்ற அடிப்படையிலும் போராட்டத்தில் உறுதியாக நின்ற தலைவர்கள் என்ற வகையிலும் இவ்விரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீத்தேன் எடுக்கும் திட்ட எதிர்ப்பு, அனல் மின் நிலையங்கள் எதிர்ப்பு, காவிரி நதி நீர் சிக்க\ல் உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளின் குவிமையமாக டெல்டா மாவட்டங்கள் ஆகியுள்ளன. இப்பிரச்சனைகளை முன் வைத்து மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பொதுவுடமைக் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கட்சியின் சார்பாக போட்டியிடும் தோழர் குணசேகரனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் பரப்புரை நாம் ஏற்கெனவே ஈடுபட்டிருந்த பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கருத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும், அக்குறிப்பிட்ட பகுதி மக்களிடம் விரிவாக செல்வதற்கும் இந்த பரப்புரை செயல்பாடுகள் துணை செய்யும். தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் நீண்ட கால இலக்குக்கும், நட்பு சக்திகளைப் பெருக்குவதற்கும் இது துணை செய்யும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- செந்தில்குமார்
ஒருங்கிணைப்பாளர்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Monday, April 14, 2014

தமிழக மீனவர்களின் நிலை - சில கேள்வி -பதில்கள்

சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்வதும், படகுகளைச் சேதப்படுத்துவதும், வலைகளை அறுப்பதும், கொடூரமாகத் தாக்குவதும் கடந்த முப்பதாண்டுகளாக வெகுமக்களால் எளிதில் கடந்து போகக் கூடிய செய்திகளாகி விட்டன. இந்திய ஊடகங்களுக்கு இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை விட, மீனவர்களின் உயிர் அவ்வளவு முக்கியமில்லை தான் எனினும், அப்போட்டிகளின் முடிவுகளுக்கும் தமிழக மீனவர்களின் உயிர்களுக்கும் தொடர்பிருக்கிறது. ஏப்ரல் 2, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை இந்திய கிரிக்கெட் அணியிடம் தோற்ற கோபத்தில், நான்கு தமிழக மீனவர்களை நடுக்கடலில் வைத்து சுட்டுக் கொன்றது சிங்கள கப்பற்படை. காரணத்தைச் சொல்லிக் கொண்டே தான் சுட்டதாக, தப்பிய மீனவர்கள் வாக்குமூலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக ஒவ்வொரு முறையும் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் போது, இந்தியா தோற்க வேண்டும் என்பது நாட்டுப்பற்றில்லை என்று சொல்லும் உரிமை நம் யாருக்கும் கிடையாது, ஏனென்றால் இதே இந்திய கொடியுடன் சென்றதற்காகத் தான் அவர்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் வருகின்றார்கள். இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் விளையாட்டு போட்டிக்காக ஒரு நாட்டின் மீனவர்கள் கொல்லப்படும் பொழுது அந்தச் சமூகம் இந்த விளையாட்டைத் தடைசெய்யுங்கள் எனப் போராடாமல், இந்த‌ விளையாட்டை மேலும் மேலும் ஊக்குவிக்கும் அவலத்தை இங்குத் தான் நாம் பார்க்கின்றோம்.


மேற்சொன்னது ஒரு சிறு காரணம் தான். சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதன் பின்னணி அரசியலின் பரப்பு சற்று விஸ்தாரமானது. ”தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள்” என்ற குற்றச் சாட்டைச் சர்வ சாதாரணமாக வைத்து விட்டு தான் இந்தக் கொலைக்காட்சிகள் அரங்கேறுகின்றன. ஒவ்வொரு இந்திய மனதிலும், ’தமிழக மீனவர்கள் என்றாலே அத்துமீறுபவர்கள்’ என்கிற அலட்சியப்போக்கு, ஊடக ஊசிகளின் மூலமாக ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த அலட்சியம் தான், மீனவர்கள் கொல்லப்படும் செய்திகளையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அபாயம் கொண்ட அணு உலைகளையும் பற்றிப் பெரிதாகக் கவலை கொள்ளாமல்

ஒதுங்கிப் போக வைக்கிறது. ”மீனவர்கள் மீன்களைக் கொல்கிறார்கள். மீனவர்களைச் சிங்கள இராணுவம் கொல்கிறது ” போன்ற சிறு குழந்தைகளின் அறியாப் பேச்சுகளை விட, மீனவ மண்ணிலேயே பிறந்து, மீனவ உயிர்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல், தமிழக மீனவர்களைக் கொன்றவர்களோடு விருந்துண்டு, அவர்களின் குழந்தைகளுக்கு ஆதிக்க‌ பாடத்திட்டம் தயாரித்துக் கொடுக்கும் அறிவு ஜீவிகள் ஆபத்தானவர்கள் தான் இல்லையா ? அதை விட ஆபத்தானது, ஓட்டரசியல் தலைவர்களின் கள்ள மெளனமும் அதை ஆதரிக்கும் வெகுசன போக்கும் தான்.

காங்கிரசு அரசாக இருந்தாலும் சரி; பா.ஜ.க வாக இருந்தாலும் சரி. அடிப்படையில் இரண்டுமே தமிழர் விரோதப் போக்குக் கொண்ட கட்சிகள் தான். இருவரும் இப்படுகொலைகளை நேரடியாக‌ கண்டித்ததில்லை. மாறாக, சிங்கள அரசு அரங்கேற்றி வரும் தமிழினப்படுகொலையையும், தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் கொடுங்கோன்மையையும் மறைத்து, உலக அரங்கில் சிங்கள அரசை சீவிச் சிங்காரித்து அழகு பார்க்கும் வேலையைத் தான் செய்து வருகிறது இந்திய அரசு. தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க வும் அ.தி.மு.கவும் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்பவர்களாகவே இருக்கின்றார்கள், அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தொடர்ந்து பிரதமருக்குக் கடிதம் எழுதுவதை மட்டுமே நடைமுறைகளாகக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சென்னையில் நடந்த இந்திய இலங்கை மீனவப் பேச்சுவார்த்தை சற்று ஆறுதலாக இருந்தாலும், அப்பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்படிக்கைகளும் ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்தக் கட்ட பேச்சு வார்த்தை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏற்பாடாகி கொண்டிருக்கிறது.

1.மீனவர்களின் வர்க்கப்பின்னணி, யாரால் யார் பாதிக்கப்படுகின்றார்கள் ?மீனவர்களை இரண்டு வர்க்கமாகப் பிரிக்கலாம். பாரம்பரியமான கட்டுமரமும், நாட்டுப்படகையும் சொந்தமாக வைத்திருக்கும் மீனவர்களும், விசைப்படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவத் தொழிலாளர்களும் ஒரு வர்க்கம். விசைப்படகு வைத்திருக்கும் முதலாளிகளும், ஆழ்கடலில் பெரிய கலங்கள் வைத்து மீன்பிடிக்கும் முதலாளிகளும் ஒரு வர்க்கம், இந்த இரண்டாவது வர்க்கத்தில் இருப்பவர்கள் மீனவர் சங்க நிர்வாகிகளும், ஓட்டுக் கட்சிகளின் பினாமிகளுமே. விசைப்படகு முதலாளிகளினால் கட்டுமரமும், நாட்டுபடகையும் மீன்பிடிக்காகப் பயன்படுத்தும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சுருக்கு வலை, இரட்டை மடி, Bottom Trawling போன்ற மீன்பிடி முறைகள் மீன்வளத்தையே அளிக்கும் அபாயமிருப்பதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறையைத் தான் பெரும்பாலான விசைப்படகு முதலாளிகள் பின்பற்றுவருகின்றனர். தடுக்க வேண்டிய இந்திய அதிகாரிகளும் முதலாளிகள் தரும் பணத்திற்காக அவர்களும் இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் கட்டுமரம், நாட்டுபடகு மீனவர்கள் கடந்த சில மாதங்களாக அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்துத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அடுத்து விசைப்படகில் செல்லும் மீனவத்தொழிலாளர்கள் இந்தியர்கள் என்ற அடிப்படையில் இனவாதம் விதைக்கப்பட்ட சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், இவர்கள் தாக்கப்படுவது இனவாதத்தினால் தானே தவிர இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதாலல்ல. தொழிலாளிகளும், முதலாளிகளும் என்றும் ஒன்றல்ல... மீனவர்களும் இன்றும் அன்றாடங்காட்சிகளே, தினமும் கடலுக்குச் சென்றால் தான் அவர்களுக்குச் சோறு, முதலாளிகளுக்கு அப்படியில்லை. இந்த முதலாளிகள் தான் பேராசை கொண்டவர்களேயன்றி மீனவர்களல்ல...


2.ஈழ மீனவர்களும், அவர்களின் வர்க்கமும், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

தமிழக மீனவர்களைப் போல ஈழ மீனவர்களில் இரு வர்க்கமில்லை. அவர்கள் இன்றும் நாட்டுப்படகு, கட்டுமரம் மூலம் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்களாகவே உள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் .......

* புலிகள் இருக்கும் பொழுது கடலில் சுதந்திரமாக மீன்பிடித்து வந்தனர். போருக்குப் பின்னர்க் கடற்கரை முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஈழமீனவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

*ஈழக்கடற்கரையோர பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்படுகின்றனர், இவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, மேலும் இவர்களுக்கு ஏகப்பட்ட மானியங்களை இலங்கை அரசு வழங்கி வருகின்றது. சந்தையை இவர்களின் கட்டுபாட்டில் கொஞ்சம், கொஞ்சமாகச் செல்லத்தொடங்குகின்றது.

*ஈழமீனவர்கள் இன்னும் பாரம்பரிய மீன்பிடி முறையான, மூன்று நாட்கள் ஒரே இடத்தில் வலைவிரித்துவிட்டுக் காத்திருக்கும் முறையையே பின்பற்றுகின்றார்கள், இந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து வரும் விசைப்படகுகள் இந்த வலைகளைக் கிழித்தெறிவதால் ஈழ‌மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர், அதுமட்டுமின்றி இரட்டைமடி, சுருக்குவலை, Bottom Trawling போன்ற தடைசெய்யப்பட்ட முறைகளை விசைப்படகுகள் பயன்படுத்துவதால் மீன்வளம் மிகவும் குறைந்து விடுகின்றது. ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை இது மேலும் பாதிக்கின்றது.

இதனால் தான் தமிழக நாட்டுப்படகு, கட்டுமர மீனவர்கள் இந்தத் தடைசெய்யப்பட்ட முறைகளை எதிர்த்து இங்குப் போராட்டம் நடத்திய பொழுது ஈழமீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர், ஏனென்றால் இருவரும் ஒரே காரணத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.


3.தமிழகக் கடற்கரையும் மீனவ கிராமங்களின் அமைப்பையும் எப்படி வரையறுக்கலாம் ?

1,000 கி.மீ நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், 600 மீனவ கிராமங்களில், 9 லட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர். சென்னை முதல் கடலூர் மாவட்டம் வரையுள்ள மீனவர்கள், வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் நாகை, காரைக்கால் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் தமிழகம்- இலங்கை இடைப்பட்ட பகுதியில் உள்ள “பாக் நீரிணை" பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர், இப்பகுதி ஆழம் மற்றும் நீளம் குறைந்த பகுதியாகும், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

4.யார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?


சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவது பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் தஞ்சை,காரைக்கால், நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை,இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே. இலங்கைக்கும் இந்திய எல்லைக்கும் வெறும் 8 கி.மீ கடல்பரப்பு மட்டுமே கொண்டது. ஆகவே இராமநாதபுரம் , இராமேஸ்வரத்திலிருந்து கிளம்பும் எந்தப் படகாக இருந்தாலும் இந்த 8 கி.மீ கடற்பரப்புக்குள் தான் மீன் பிடித்தாக வேண்டியிருப்பதால், அவர்கள் வல்லத்தை எடுத்தாலே, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் அபாயம் இருக்கிறது.5.பாரம்பரிய மீன்பிடியும், கடல் எல்லைகளும், எல்லை தாண்டுதலும்?

பாரம்பரியமாக இலங்கை, தமிழக‌ மீனவர்களும் இந்தப் பகுதியில் மீன்பிடித்தே வருகின்றனர். இந்த எல்லைக்கோடுகள் எல்லாம் அண்மை காலங்களில் தோன்றியவை. இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கூட வாரத்தில் நான்கு நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன்பிடிக்கலாம் என ஒப்பந்தம் போடப்பட்டதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும். அது மட்டுமின்றிக் கடலில் எல்லை என்பதே ஒரு கேலிகூத்து. ஒசூர் தாண்டினால் கர்நாடக மாநிலம் வருவதைப் போல அல்ல . அதே போல எல்லை தாண்டுதல் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிரானதா ? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். உலகின் பல நாடுகளிலும் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதும், அன்னிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதும் வழக்கமான ஒன்று தான். ஜப்பான், சீனா, தைவான், மியான்மர், பாகிஸ்தான், வங்காள தேசம் என்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் எல்லா நாடுகளிலும் இத்தகைய நடைமுறைகள் இருக்கின்றன.

வங்க தேச மீனவர்கள் மியான்மர் கடற்பகுதிக்குள் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஜப்பானிய மீனவர்கள் ஆசிய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இவ்வளவு ஏன்? இலங்கை மீனவர்களே இந்தியாவின் கேரளப் பகுதியிலும் லட்சத் தீவுப் பகுதிகளிலும் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். மாலத்தீவுக் கடற்பரப்புகளிலும் மீன் பிடிக்கத் தான் செய்கிறார்கள். அப்படி எல்லை தாண்டிச் செல்லும் வேற்று நாட்டு மீனவர்களை, சம்பந்தப்பட்ட நாட்டின் இராணுவமோ அல்லது கடற்படை அதிகாரிகளோ தடுத்து நிறுத்தி சோதனை நடத்துவார்கள். ஆவணங்களைச் சரி பார்ப்பார்கள். மேலும் கடல்நீரோட்டம் காரணமாக மாலையில் ஒரிடத்தில் வலைவிரித்தால் , இரவிற்குள் இவர்கள் அந்தப் பகுதியிலிருந்து தொலைதூரம் கடந்திருப்பார்கள்.

ஏதேனும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் நோக்கத்துடன் வந்துள்ளார்களா என்று மட்டும் சோதிப்பார்கள். தேவைப்பாட்டால் கைது செய்வார்கள். பின்னர்க் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு விடுவித்து விடுவார்கள். இந்த நடைமுறைகள் எல்லாம் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்கள், மீன் பிடி உரிமைகள் இவைகளின் அடிப்படையில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகள் தான்.

இந்தியர்களின் பரம வைரியான கருதப்படும் பாகிஸ்தான் கூட ஒர் இந்திய மீனவனை, இதுவரைச் சுட்டதாக வரலாறு இல்லை. குஜராத் கட்ச் பகுதி மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் பிடிபடும் சமயங்களில் எல்லாம் எவ்வித பிரச்சினையும் இன்றி விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் நமது அன்பிற்கினிய நட்பு நாடு என்று இந்திய அரசால் பாராட்டி சீராட்டி கொண்டாடப்படும் இலங்கை அரசு மட்டும் தமிழக மீனவர்களை நடுக்கடலில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றது, ஊனப்படுத்துகின்றது, படகுகளைச் சேதப்படுத்துகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இனவாதா வெறியேற்றப்பட்ட சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல நூறு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர், 1000த்திற்கும் அதிகமானோர் காயப்படுத்தப்பட்டுள்ளனர். பல இலட்சத்திற்குமதிகமான விலைமதிப்புள்ள மீன்பிடி பொருட்களும், படகுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை நீடித்திருப்பதற்காகக் கடல்வழி மூலம் கூட‌ எந்த ஒர் உதவியும் வந்துவிடக்கூடாது எனத் தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் கூடச் சுட்டுகொன்று அவர்கள் கடலுக்கே வருவதற்கே அச்சப்படும் நிலையை உருவாக்குவதும் இலங்கை அரசின் திட்டங்களில் ஒன்று....இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் வரை அந்நாடு இந்தக் கடல்பரப்பை அமைதியாக வைத்திருக்க விடாது.


6.இப்பிரச்சினையில் கச்சத்தீவின் முக்கியத்துவம் என்ன?


இந்தப் பாக் ஜலசந்தி பகுதியானது பல சிறிய பெரிய தீவுகளை உள்ளடக்கியது. அவற்றுள் கச்சத் தீவும் ஒன்று. அத்தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததையும் இந்தியாவின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டது என்பதையும் விளக்கும் ஏராளமான ஆவணச் சாட்சியங்கள் இருக்கின்றன. மீன் வளமும் சங்கு முத்துப் பவளம் போன்ற கடல்வளமும் அதிகம் கொண்ட கச்சத்தீவு. இலங்கை அரசுடன் நல்லுறவை பேண வேண்டும் என்ற அரசியலுக்காகத் தமிழக மக்களின் கருத்துகளைக் கேட்காமல், பாராளுமன்றத்தில் எதிர்ப்பையும் மீறி இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது.... எனவே அத்தீவு குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சர்ச்சை பல ஆண்டுகளாகவே நீடித்து வந்தாலும், இந்திய அரசு இந்திரா காலத்தில் கச்சத் தீவை முற்றாக இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது.


7.கச்சத்தீவு குறித்தும், மீன்பிடி உரிமைகள் குறித்தும் இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்னென்ன ?


இந்தப் பாரம்பரியக் கடலில் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையையும் அதன் தொடர்புடைய மற்றப் பிரச்சினைகளையும் இரு நாடுகளுக்கும் நியாயமானதும் பாரபட்சமற்ற வகையிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26, 28 தேதிகளில் இந்தியக் குடியரசுக்கும் இலங்கைக் குடியரசுக்கும் இடையே ஒர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் 1974 ஜூலை மாதம் 8-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.


அந்த ஒப்பந்தத்தின் முதல் பிரிவில்,``பாக் ஜலசந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான கடல் பகுதியில் இலங்கைக் கும் இந்தியாவுக்குமான எல்லை அட்சரேகை, தீர்க்கரேகை மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் 4-ஆம் பிரிவில், அவ்வாறு உறுதி செய்யப்பட்ட எல்லைக்கு அப்பால் அமையும் கடற் பகுதியும், தீவுகளும் கண்டப் படுகையும் (கான்டி னென்டல் ஷெல்ப்), கடலடி நிலமும் அந்தந்த நாட்டின் அதிகாரத் திற்கும் ஆளுகைக்கும் உட் பட்டதாக இருக்கும் என்றும், 5-ஆம் பிரிவில், மேலே குறிப்பிட்டவற்றிற்கு உட்பட்டு, இந்திய மீனவர்களும், பக்தர்களும், கச்சத் தீவிற்கு இன்று வரை சென்றது, வந்தது போன்றே போய் வரலாம், அதற்காக இலங்கையிடமிருந்து விசா போன்ற அனுமதி பெறத் தேவையில்லை என்றும்,

6-ஆம் பிரிவில், ``இலங்கை மற்றும் இந்தியக் கலங்கள், ஒன்று மற்றொரு நாட்டுக்கு உரிய கடலில் இதுவரை காலங்காலமாக (நெடுங்காலமாக) அனுபவித்து வந்த அனைத்து உரிமைகளையும் (தொடர்ந்து) அவ்வாறே அனுபவிக்க லாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த ஒப்பந்தத்தில் புதிய எல்லை தீர்மானிக்கப்பட்ட பின்னரும் இரு நாட்டுக் கலங்களும் காலங்காலமாகத் தொடர்ந்து அனுபவித்து வந்த உரிமைகள் அவ்வாறே தொடரும் என்று மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. `கலம் என்பது `மீன்பிடி கலத்தையும், `அதே உரிமை என்பது மீன் பிடிக்கும் உரிமையையும் உள்ளடக்கும்.

இதை அடுத்து 1976ல் இந்திய , இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர்கள் இந்திய இலங்கை கடல் எல்லை தொடர்பாகவும், மீனவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் சில கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். இறுதியில் இந்தக் கடிதங்களே ஒப்பந்தங்களாக்கப்பட்டன. கடிதத்தை ஒப்பந்தமாக்கிய கேலிக்கூத்து இங்கு நடந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் - இந்தியாவைச் சேர்ந்த மீன்பிடிக்கலங்களும், மீனவர்களும் இலங்கையின் கடல் எல்லைக்குள்ளும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளும் நுழையக்கூடாது, மீன்பிடிக்கக்கூடாதென்றும், அதே போல இலங்கையைச் சேர்ந்த மீன்பிடிக்கலங்களும், மீனவர்களும் இலங்கையின் கடல் எல்லைக்குள்ளும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குள்ளும் நுழையக்கூடாது, மீன்பிடிக்கக்கூடாதென்றும் ஒரு வரி வருகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட இவ்விரு ஒப்பந்தங்களும் அறமற்றவையே.

8.தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் சிங்கள இராணுவத்தினரை தண்டிக்க வழி இருக்கிறதா ?

பாக். வளைகுடாவில் மீன் பிடிக்கும் போது இந்திய (தமிழக) மீனவர்களைச் சுட்டுக் கொன்ற செயல்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கத் தக்க குற்றமாகும். அவற்றை விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் இந்திய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. இந்திய தண்டனைச் சட்டம் 4 ஆவது பிரிவில் நாட்டிற்கு வெளியில் நடக்கும் குற்றங்களைத் தண்டிக்க வகைச் செய்கிறது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது வானூர்திகளில் எந்த நபர்களால் எந்த இடத்தில் குற்றம் இழைக்கப் பட்டாலும் அவர்களைத் தண்டிக்க இந்திய நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு என்று சொல்லப் பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் இத்தாலிய கடற்படையைச் சேர்ந்த மாலுமிகள் இருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட படகில் சென்றவர்களைச் சுட்டுக் கொன்றதற்காக, கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்ததும் இதன் அடிப்படையில் தான். அதுபோன்றே பாக். வளைகுடாவில் இந்தியப் படகில் ஒப்பந்தத்தில் கண்ட உரிமைகளின் அடிப்படையில் மீன் பிடிக்கும்போது இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் போது அதற்குக் காரணமானவர்களை இந்திய நீதிமன்றங்கள் தண்டிக்கவும் இயலும். ஆனால், அதுபோன்ற நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.


9.மீனவர்கள் தொடர்பான இந்திய அரசின் பார்வை என்ன?


உலகிலேயே ஐந்தாவது பெரிய கடற்படை இந்திய கடற்படை. இந்தியா தான் இலங்கைக்குப் பல அதிவேக ரோந்து படகுகளையும், சில பெரிய கப்பல்களையும் கொடுத்தது. அவ்வாறிருக்கையில் இந்திய கப்பற்படை ஏன் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதில்ல? சில நேரங்களில் சிங்கள கடற்படை தமிழகக் கரைக்கு வந்து மீனவர்களைத் தாக்கியிருக்கின்றார்கள். இதனால் கரையோரம் இருந்த வீடுகளும் தாக்குதலுக்கு இரையாகி இருக்கின்றன. கடற்கரை மேலாண்மை சட்டம் போன்ற சட்டங்களின் மூலம் கரையோரத்தில் வாழும் மீனவர்களை அப்புறப்படுத்தி அங்குச் சுற்றுலாவிடுதிகள் போன்றவற்றைக் கட்டுவது, கட்டுமர, நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களை முற்றிலுமாக அப்புறப்படுத்தி அந்த இடத்தில் பெரிய கப்பல்களுக்கு மீன்பிடித்தொழிலை கையளிப்பது இது தான் இந்திய அரசின் திட்டம். விசைப்படகு மீனவர்களை அப்புறப்படுத்துவதற்கு இலங்கை அரசின் இனவாதக்கொள்கை உதவுவதால் இந்திய அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர். உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய கப்பற்படை தனது சொந்த குடிகள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் வெறுமனே வேடிக்கைப் பார்த்து வருகின்றது.


10.தமிழக அரசியல்வாதிகள் ஏன் மீனவர்கள் பிரச்சனையை அலட்சியப்படுத்துகின்றார்கள் ?


1000கி.மீட்டர் கடற்பரப்புத் தமிழகத்தில் இருந்தாலும், அவர்கள் ஒர் அரசியல் தொகுதியாக உருத்திரண்டு இல்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் துண்டாடப்பட்டுள்ளனர். மீனவர்களின் வாக்கு எந்த ஒரு தொகுதியிலும் வேட்பாளரை நிர்ணியிக்கும் இடத்தில் இல்லை. இதனால் திமுக, அதிமுகப் போன்ற எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கடித நாடகத்தை மட்டும் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அடுத்துத் தமிழ்ச் சமூகம் பிராந்திய ரீதியாகப் பிரிந்து கிடப்பதும், கரையோர, சமவெளி என்று பிரித்துப் பார்ப்பதும் மீனவர் பிரச்சனை தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சனையாக மாறாமல் இருக்கின்றது.

11.தீர்வு என்ன?

ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும் பாரம்பரியமாக இரண்டு பகுதிகளிலும் மீன்பிடித்து வந்தனர். இந்தப் பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்பதும், தடை செய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை முறையாகக் கண்காணித்துத் தடுப்பதுமே இதற்குத் தீர்வு. மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்தால், தாக்கும் சிங்கள கடற்படையை இந்திய குற்றவியல் சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் போராட வேண்டும், அப்பொழுதும் இந்தியா இலங்கையை நட்பு நாடு என்று கூறி பாதுகாக்க முற்பட்டால் இந்தியாவைக் கடந்து பன்னாட்டு அமைப்புகளான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளில் வழக்கு தொடர்ந்து இந்திய-சிங்கள கூட்டை அம்பலப்படுத்தி மீனவர்களின் நீதிக்காகப் போராடவேண்டும்


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

பாபர் மசூதி இடிப்பு - காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!
1992- ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு என்பது வெகு கவனத்துடன் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது வெளிவந்துள்ளது.


அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தச் சதிச் செயலை சங்பரிவாரக் கும்பல் திட்டமிட்டுதான் செய்தது என்று நாட்டின் முற்போக்கு ஆற்றல்கள் கூறிவந்தது இன்று உறுதி ஆகியுள்ளது. கோபத்துடன் கூடிய கூட்டத்தின் கும்பல் மனப்பான்மையால் நடந்தது என்று இன்றுவரை கூறிவந்த காவிக் கும்பல், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காணொளி ஆதாரங்களை வெளியிடுவதற்கான காரணம் என்ன என்று கதறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தல் கதியில் யாரும் இந்த நிகழ்வைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.


கோப்ராபோஸ்ட்(COBRAPOST) என்னும் இணையதள ஊடகம் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின் (OPERATION JANMABHOOMI) மூலம் தெரிய வந்துள்ளது. அயோத்தியா இயக்கம் என்ற பெயரில் ஆராய்ச்சி செய்யும் மாணவராகச் சென்ற நிருபரிடம் தங்களுடைய வெற்றி பெருமிதங்களாகக் கூறியுள்ள காவிக் கும்பலின் சுயதம்பட்டங்களே இவை.இவ்வாறான சுயதம்பட்டங்கள் சங்பரிவாரக் காவிக் கும்பலுக்கு ஒன்றும் புதிது இல்லை. 2002-ல் நடைபெற்ற குஜராத் படுகொலைகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு நடத்தினோம் என்று தெஹல்கா இணையதள ஊடகம் நடத்திய ரகசிய நடவடிக்கையில் இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும் இந்த நாடே பார்த்தது.


கோப்ராபோஸ்ட் இணையதள ஊடகம் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையில் ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பி.எல்.ஷர்மா பிரேம், தர்மேந்திர சிங் குர்ஜார், கல்யாண் சிங், பவன் பாண்டே, சந்தோஷ் துபே, சாதவி ரிதம்பரா, ராம்ஜி குப்தா, ரமேஷ் பிரதாப் சிங்,பிரகாஷ் சர்மா, சம்பத் ராய் பன்சல்,மொறேஷ்வர் சாவே ஆகிய இருபத்தி மூன்று முக்கிய நபர்களிடம் இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டு உள்ளன.


1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் சர்க்கேஜ் என்ற இடத்தில் 38 பேர் கொண்ட குழுவுக்கு லட்சுமணச் சேனா என்ற பெயரில் ராணுவத்தில் இருந்த உயர் அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து நீல டீலா என்னும் இடத்தில் நடைபெற்ற பயிற்சியில் கொக்கிகளைச் செலுத்தி எப்படி ஒரு கட்டிட அமைப்பின் உச்சியில் ஏறுவது என்று பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.அத்தோடு எப்படியாவது மசூதியை இடித்துவிட வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் ரகசிய கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட கரசேவகர்களுக்கு மசூதி இடிப்பிற்கு ஒருமாதம் முன்பு வரை, பாபர் மசூதியை இடிப்பதற்குத்தான் பயிற்சியளிக்கப்படுகிறது என்பது சொல்லப்படவே இல்லை.கரசேவை நடத்தி இடிப்பதற்கு லட்சுமணச் சேனா என்று ஒரு தயார் செய்த இவர்கள், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போகும் போது மாற்றுத் திட்டமாக டைனமைட்டைக் கொண்டு இடிப்பதற்குச் சிவசேனாவின் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பிரிவு தயாராகவே இருந்துள்ளது.இந்த மாற்று திட்டத்திற்கும் பதிலியாகப் பெட்ரோல் குண்டைக் கொண்டு மசூதியைத் தகர்ப்பதற்கான திட்டத்தையும் வைத்திருந்தனர்.


பெட்ரோல் குண்டைப் பயன்படுத்துவது நிறைவேறாமல் போனதால், இறுதியில் கரசேவையில் ஈடுபட்டவர்களே மசூதியை இடித்துத் தள்ளியுள்ளனர்.பாபர் மசூதி இடிப்பு பற்றி அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்குடன் திட்டம் பற்றிய தகவல் தொடர்ந்து பரிமாறப்பட்டு வந்துள்ளது.டிசம்பர் 5 ஆம் தேதியே தகவல் பரிமாறப்பட்டு, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ செய்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 6 ஆம் தேதி தன்னுடைய பதிவியைக் கல்யான் சிங் ராஜினாமா செய்ய எடுத்த முடிவை, குடியரசு தலைவர் ஆட்சி வந்து இடையூறு செய்துவிடும் என்று முரளி மனோகர் ஜோஷி கேட்டுக் கொண்டதன் பேரில் நிறுத்தி வைத்துள்ளார்.


சந்தோஷ் துபே, வினய் கட்டியார், பி.எல் சர்மா போன்ற ராமஜென்ம பூமி இயக்கத்தின் முக்கிய நபர்கள் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிற்கும் பாபர் மசூதி இடிப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அப்போதிருந்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசு பாபர் மசூதி இடிப்பைப் பற்றி முற்றிலும் தெரிந்திருந்த போதிலும் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது.


பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் காங்கிரசின் பங்கு என்பது, 1949 ஆம் ஆண்டுக் குழந்தை ராமர் சிலையை மசூதியின் உள்ளே வைப்பதற்கான சதிச் செயலில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் ராகவ்தாசின் உதவியுடன்தான் நடைபெற்றது. அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வரான கோவிந்த வல்லப பந்தின் நெருக்கமே ராகவ்தாஸ் சதிச் செயலில் பங்கெடுக்கக் காரணமாக இருந்தது.


1986 -ல் நடைபெற்ற ஷா பனோ வழக்கை அடுத்து ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு மசூதி நுழைவாயிலை இந்துக்களின் வழிபாட்டிற்குத் திறந்துவிட்டது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில், காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் தங்களுடைய அரசியல் லாபத்திற்காகப் பாபர் மசூதி விவகாரத்தைப் பயன்படுத்தியே வந்துள்ளனர். இப்போது பாபர் மசூதி இடிப்பிலும் பங்கெடுத்து தனது மதச்சார்பின்மை முகமூடியை நிரந்தரமாகத் தொலைத்துள்ளது காங்கிரசு.ராமஜென்ம பூமி இயக்கத்தின் வீச்சும், வேகமும் அதிகரிக்க ஓரிருவர் இறக்க வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் உத்தரவிட்டதும் அம்பலமாகியுள்ளது.

அதுவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஓரிருவர் இறந்தால் கலவரம் நாடு முழுக்கப் பற்றிப் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வங்காளத்தைச் சார்ந்த கோத்தாரி சகோதரர்களும், ராஜஸ்தானைச் சார்ந்த மகேந்திர சிங்கும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பாபர் மசூதி இடிப்பு என்பது 1992-ஆம் ஆண்டோடு முடிந்த கதையல்ல. இன்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பதுதான் மதவாத பாரதிய ஜனதாவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது.


1990 ஆம் ஆண்டு மண்டல் பரிந்துரையை ஏற்று வி.பி.சிங் அரசுத் துறை வேலை வாய்ப்புகளிலும், கல்வித் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அப்போதைய பாரதிய ஜனதா கட்சிக்கு பெருத்த நெருக்கடியை கொடுத்தது. இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவே அத்வானி அயோத்தியில் கரசேவை நடத்துவதற்கான ரத யாத்திரையைத் தொடங்கினார்.இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் பரிந்துரையை வி.பி .சிங் ஏற்றது, அத்வானியின் ரத யாத்திரை, தொடர்ந்து கொண்டுவரப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரம், 1992-ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு ஆகிய இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.


அரசுத் துறையில் இட ஒதுக்கீடு வந்தவுடன், சந்தையைத் திறந்துவிட்டு சேவைத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை நோக்கி நம்மை நகர்த்திய இந்திய ஆளும் வர்க்கம் தான், பாபர் மசூதி இடிப்பிலும் பங்கெடுத்துள்ளது.


வஞ்சக நோக்கத்தோடு, மிகச் சாதுர்யமாகத் திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தவர்கள்தான் இன்று சட்டப்படி ராமனுக்குக் கோவில் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கை விடுகிறார்கள். இதனோடு சேர்த்து பெருமுதலாளிகளின் வளர்ச்சியையும் நம்முடைய வளர்ச்சியாகப் பதிவு செய்கிறார்கள்.


இவர்களுடைய தேர்தல் அறிக்கையும்,பாபர் மசூதி இடிப்பிற்கான அத்வானியின் ரத யாத்திரை, மண்டல் பரிந்துரை அமலாக்கத்திற்கு எதிராகவே இருந்ததும் நமக்குச் சொல்வது

ஒன்றே ஒன்றுதான். பாரதீய ஜனதா கட்சி நமக்கான கட்சி இல்லை என்பதே அது.


சமூக விரோத செயல்களைச் செய்துவிட்டு, அதைத் தாங்களின் வெற்றியாகப் பாவித்துப் பெருமிதத்தோடு நேர்காணல் கொடுக்கும் இந்தக் கயவர்கள்தான் வளர்ச்சி என்கிற போலிப் பூச்சோடு தேர்தலுக்காக நம்மிடம் வருகிறார்கள். இந்த மதவாதக் கும்பலை நிராகரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.

தரவு:
http://www.cobrapost.com/index.php/news-detail?nid=5785&cid=70

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

Thursday, April 10, 2014

பா.ஜ.க தேர்தல் அறிக்கை - ஒரு பருந்துப் பார்வை ....
பா.ஜ.க ஒருவழியாகத் தனது தேர்தல் அறிக்கையை முதல் கட்ட தேர்தல் தொடங்கிய ஏப்ரல் 7 அன்று வெளியிட்டுள்ளது. மோடி தான் மாற்று, மோடியினால் மட்டும் தான் முடியும், மோடி ஒருவரே இந்தியா எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அருமருந்து என்று நாம் பார்க்கும் இடமெல்லாம் ஊடகங்களும், முதலாளிகளும், இந்துத்துவவாதிகளும், வருங்கால முதலாளி கனவில் மிதக்கும் நடுத்தர வர்க்கத்தில் பெரும்பான்மையினரும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சரி இவர்களெல்லாம் மாற்று என்று சொல்லும் மோடியின் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் அப்படி என்ன தான் மாற்று இருக்கின்றது எனப் பருந்து பார்வை பார்க்கலாம் வாருங்கள்....
விலைவாசி உயர்வு:

முந்தைய வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தியது போல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்கிறார்கள்.... இந்நேரத்தில் வாசகர்களுக்கு வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் வெங்காய விலையைக் கூடக் கட்டுபடுத்த முடியாமல் போனது நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அடுத்து பின்வரும் காரணிகள் மூலம் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்கள்...

* பதுக்கலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள்...

* விலைவாசி உயர்வை கட்டுபடுத்த ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்குதல்

* விவசாயிகளுக்குச் சரியான புள்ளிவிவரங்களை வழங்குதல்.

இக்காரணிகளின் மூலம் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த முடியுமா என்பதைப் பார்ப்போம். விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணமே, சந்தை(Market) விவசாயப் பொருட்களின் விலையை நிர்ணயப்பதும், ஊகவணிகமும் (Speculation trading) தான். இது பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அப்படியே தான் நீடிக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாயப் பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்து, சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும், ஊக வணிகத்தை நிறுத்தவதன் மூலமும் தான் செய்ய முடியும். அடுத்ததாக விலைவாசி உயர்வுக்கு மற்றொரு முக்கியமான காரணம் போக்குவரத்திற்கு அடிப்படையான எரிபொருளின் விலை உயர்வு. எரிபொருள் விலை நிர்ணயத்தை அரசு நிறுவனங்களின் கையில் கொடுத்த பிறகு, அவர்கள் தங்கள் விருப்பம் போல, மாதமொரு முறை விலையை ஏற்றிவருகின்றார்கள். எரிபொருள் விலை உயர, பொருட்கள் உற்பத்தியிடத்திலிருந்து, சந்தைக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்காக ஆகும் செலவு அதிகரிக்கின்றது. காங்கிரசு அரசு செய்த இந்தக் கொள்கை மாற்றத்தை, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அப்படியே தான் தொடரும். விலைவாசி உயர்வுக்குக் காரணமான இதுபோன்ற முக்கியக் காரணிகளை விட்டுவிட்டு, இலைகளைக் கிள்ளி எறிவதால் விலைவாசி உயர்வு எக்காலத்திலும் கட்டுக்குள் கொண்டு வர‌முடியாது.


வேலை வாய்ப்பு, தொழில் முனைவு :

காங்கிரசு தலைமையிலான அரசு அமைந்த‌ கடந்த 10 ஆண்டுகளில் "வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சியே" நடைபெற்றுள்ளது. இதைச் சில பொருளாதார நடவடிக்கை மாற்றம் மூலம் மாற்றி வேலை வாய்ப்பையும், தொழில் முனைவோருக்கு சாதகமான நிலையையும் உருவாக்குவோம் எனக் கூறியுள்ளனர்.


* செயலுத்தியாகத் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்களை (டெக்ஸ்டைல், காலணி, மின்பொருள் ஒருங்கிணைப்பு.....) அதிகப்படுத்துதல்...

* விவசாயமும், அது சார்ந்த தொழில்களையும் வலுப்படுத்துதல்

* நாட்டின் கட்டமைப்பை (சாலைகள், மற்றப் போக்குவரத்து) வலுப்படுத்துதல்

* சுய தொழில் முனைவோரை உருவாக்குதல்.


மேற்கூறியவை மூலம் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியுமா? இதில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் உற்பத்தி நிறுவனங்களை அதிகப்படுத்துதல், குறிப்பாக டெக்ஸ்டைல், காலணி, மின்பொருள் ஒருங்கிணைப்பு போன்ற நிறுவனங்களை அதிகப்படுத்துதல் சாத்தியமா எனப்பார்ப்போம்........டெக்ஸ்டைல் நிறுவனங்களை இங்கே அதிகப்படுத்த முடியுமா? என்றால் அதற்கு முடியாது என்பதே பதில், காரணம், இங்கு இந்தியாவில் செயற்பட்டு வரும் நிறுவனங்களே, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரும் விலை கட்டுபடி ஆகாத காரணத்தினால் இங்கிருக்கும் நிறுவனங்களை மூடிவிட்டு, வங்க தேசம், கொரியா போன்ற நாடுகளில் நிறுவனங்களை வாங்கி, அங்கு உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர். மேலை நாட்டு முதலாளிகள் தங்களது இலாபத்தை அப்படியே வைத்து கொள்வதற்காக அடிமாட்டு விலையில் ஒப்பந்தங்களைக் கொடுப்பது தான் இதற்குக் காரணம். இதே போலத் தான் ஒவ்வொரு துறையின் நிலையும். இங்குச் சேவை சார் துறைகள் மட்டுமே அதிகம் வரும், அவர்களூக்கு மிகக்குறைவான ஊழியர்களே போதுமானது. மேலும் தற்பொழுது உற்பத்திசார் தொழிற்சாலைகள் கடுமையான ஆட்குறைப்பை செய்து வருவது தொடர்ச்சியாகச் செய்திகளைக் கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். வேலை வாய்ப்பின்மை அதிகரித்ததற்குக் காரணம் அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பணியில் இருந்து துண்டித்துக் கொண்டு அதைத் தனியாரிடம் கையளித்ததேயாகும். இதைத் தான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் செய்யும்.
ஊழல், கருப்புப் பணம் :

ஊழலை ஒழிப்போம், கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவோம் என்று முழங்கியுள்ளார்கள். ஊழலின் மூலாதாரம் 90களுக்குப் பின்னர் இங்கே நுழைக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், அதை மாற்றாமல் ஊழலை ஒழிப்போம் எனக்கூறுவது, புற்றுநோயை குணப்படுத்த வைட்டமின் -பி மாத்திரை சாப்பிட்டால் போதுமானது என்பதைப் போன்றதே... இந்நேரத்தில் பா.ஜ.க ஆட்சியில் நடந்த கார்கில் சவப்பெட்டி ஊழல், தங்க நாற்கரச் சாலை ஊழல் போன்றவையும், இரும்புத்தாது ஊழலில் தனது முதலமைச்சர் பதவியிழந்த எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளதும் உங்கள் நினைவுக்கு வரலாம்...


அரசின் செயல்பாடு:

இந்த ஒரு புள்ளியில் தான் காங்கிரசின் கொள்கையிலிருந்து, பா.ஜ.க மாறுபடுகின்றது. அரசு கொள்கை மட்டும் வகுத்துவிட்டு மீதியனைத்தையும் முதலாளிகளின் கையில் கொடுத்துவிட வேண்டும், முதலாளிகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் இது தான் பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை. முதலாளிகளுக்கு எதையும் பொறூமையாகச் செய்யும் Manmohanomics புளித்து விட்டதால் அவர்கள் அதிரடியாகவும், சர்வாதிகரத்துடனும் நடந்து கொள்ளும் Modinomics நோக்கிச் செல்கின்றார்கள். மோடி மாற்று தான் நமக்கல்ல, முதலாளிகளுக்கு என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகின்றது....மாநில அரசும் , மத்திய அரசும் :

மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கு இணையான அதிகாரங்கள் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யதார்த்தத்தில் மாநில அரசிற்கு இருக்கும் (பொதுப் பட்டியலில்) அதிகாரங்கள் காங்கிரசு/பா.ஜ.க ஆட்சியில் கொஞ்சம், கொஞ்சமாகப் பறிக்கப்பட்டு, இப்பொழுது மாநில அரசு என்பது வெறும் கண்காணிக்கும் அரசாக மட்டுமே உள்ளது. மாநில அரசின் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கொஞ்சம் கூடக் காங்கிரசு/பா.ஜ.க அரசுகள் மதித்ததேயில்லை. நானும் கச்சேரிக்குப் போறேன் என்பது போலத் தான் இந்த உறுதிமொழியைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ளது பா.ஜ.க. மற்றப் படி தமிழகம் எதிர் கொள்ளும், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக முந்தைய பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நடந்து கொண்டதைப் போலத் தான் மோடி ஆட்சிக்கு வந்தாலும் நடக்கும். அப்படி உண்மையிலேயே பா.ஜ.க-விற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்ற ஆசையிருப்பின், எல்லையோரத்தில் இருக்கும் மாநில அரசுகளுடன் கலந்து கொண்டு தான் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படும், மாநில மின்வாரியங்களின் உரிமையைப் பறித்துத் தனியாரிடம் மின்னுற்பத்தி, பகிர்மானத்தை வழங்கும் 2003 மின்சாரச் சட்டம்(முந்தைய பா.ஜ.க ஆட்சியில் இயற்றப்பட்டது), அடுத்து வர இருக்கும் குடிநீர் சட்டம் போன்றவற்றை நீக்கி, அந்தந்த மாநிலங்களுக்குத் தேவையானவற்றை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்கும் உரிமையையும், சுவிட்ஸர்லாந்தில் இருப்பது போன்ற ஒரு கூட்டாச்சி அமைப்பு முறையை இங்கே உருவாக்குவோம் என்று கூறவேண்டும், அவர்களால் சொல்ல முடியுமா?....... அரசியலமைப்பு சட்டப்படி மாநிலம் என்ற வார்த்தையே இல்லை, அரசுகள்(States) என்றும், இந்திய ஒன்றியம் (Union of India) என்றும் தான் உள்ளது, முதலில் மையம், மத்திய என்ற வார்த்தைகளை தவிர்த்து உண்மையான ஒன்றிய அரசாக செயல்படுவார்களா ? ........... அது மட்டுமின்றி மக்களுக்கு அதிகாரம் என்றெல்லாம் வார்த்தைகள் ஆங்காங்கே வருகின்றது, அப்படியானால் இடிந்தகரை மக்களின் விருப்பத்திற்கிணங்க கூடங்குளம் அணு உலையை மூடிவிடுவார்களா என்றால், மக்கள் என்ன சொன்னாலும் சரி தனது அதிகபட்ச அதிகாரத்தையும், அடக்குமுறையையும் பயன்படுத்தி இது போன்ற திட்டங்களைத் தொடருவது தான் அவர்களது எண்ணம். மக்களுக்கு அதிகாரம் என்பதெல்லாம் பகல்கனவே....


ஜம்மு காசுமீர்:

காசுமீர் எப்பொழுதும் இந்தியாவின் பகுதியே, அதே போலக் காசுமீர் பண்டிட்டுகள் மீண்டும் குடியேற தேவையான பாதுகாப்பை வழங்குவோம், அரசியலமைப்புச் சட்டம் 370வதை நீக்குவதே பா.ஜ.கவின் நிலை இது குறித்து அம்மாநிலத்துடன் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.....

முதல் வரியிலிருந்தே பொய்யுடன் தொடங்கின்றார்கள், காசுமீர் எப்பொழுதும் இந்தியாவுடனான பகுதி அல்ல.
காசுமீர் ஆகஸ்டு 17,1947லிருந்து அக்டோபர் 26,1947 வரை ஒரு சுதந்திர தேசமாக இருந்தது என்ற தீர்ப்பை ஜம்மு காசுமீர் நீதிமன்றம் 1953 அன்று மேகர் சிங் எதிர் ஜம்மு காசுமீர் அரசு வழக்கில் வழங்கியது(1). அதாவது ஒக்டோபர் 26, 1947அன்று மன்னன். ஹரிசிங், இந்தியாவின் கவர்னர் செனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் Instrument of Access என்ற ஒப்பந்தம் போட்டதிலிருந்து காசுமீர் இந்தியாவின் வசமானது எனப் பொருள் (2).

நேரு இந்த ஒக்டோபர் 26 ஒப்பந்ததிற்குப் பிறகும் கூட காசுமீர் மக்கள் தான் யார் பக்கம் இணைய வேண்டும் என முடிவு எடுக்க வேண்டும், நாங்கள் அவர்களுக்கு உதவ மட்டுமே சென்றுள்ளோம் என பல உரைகளில் குறிப்பிட்டுள்ளார் (3). இருந்தாலும் இந்துத்துவ இந்தியர்களுக்காக அந்த ஒப்பந்ததில் இருந்து சில வரிகள்…


இந்த ஒப்பந்ததில் இருக்கும் எந்த சரத்தும் எனது அரசின் இறையாண்மையையோ, எனது அதிகாரத்தையோ கட்டுப்படுத்தாது. மேலும் இந்த ஒப்பந்தம் எனது அரசின் தற்போதைய சட்டதிட்டங்களையும் கட்டுப்படுத்தாது.

Nothing in this Instrument affects the continuance of my sovereignty in and over this state, or, save as provided by or under this Instrument, the exercise of any powers, authority and rights now enjoyed by me as Ruler of this State or the validity of any law at present in force in this State (4).

அன்று காந்தி காசுமீர் பற்றிக் கூறியது இன்றும் பொருந்தக் கூடியது, ஆம் அந்த தேசத்தின்(மக்களின்) இறையாண்மை இன்னும் அவர்களுக்கு வழங்கப்படவே இல்லை. அதற்கு நேர்மாறாக அன்று நேரு எதிர்த்த அதே மன்னனின் பணியை இன்று அவரது வம்சாவளியினர் தொடர்ந்து கொண்டுள்ளார்கள். (விரிவாகப் படிக்க - http://natramizhan.wordpress.com/2010/12/03) . இதிலிருந்து நமக்குத் தெரியவருவது, காசுமீர் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே இணைக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் 370வதை நீக்கும் அதே நேரத்தில் அம்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உடனடி நடவடிக்கையாகக் காசுமீர், வட-கிழக்குப் பகுதிகளில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய அனுமதிக்கும் "இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம்" உள்ளிட்ட எல்லாக் கொடுங்கோன்மை சட்டங்களும் நீக்கப்படவேண்டும் என்பது தான் உண்மையான மக்களாட்சியை விரும்பும் ஒருவனின் கோரிக்கையாக இருக்கும். மக்களுக்கு அதிகாரம், மக்கள் பங்குகொள்ளும் சனநாயகம் போன்ற வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசும் பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை உண்மையில் சர்வாதிகாரத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. இந்த இலட்சணத்தில் வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும் எனச் சொல்வதற்கு, மேலும் அதிகமான கொடுங்கோன்மை சட்டங்களை இயற்றுவோம் என்பது தான் பொருளாகும்.....பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி:

பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளின் படிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும், தீண்டாமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார்கள். யதார்த்ததில் இந்துத்துவத்தைத் தனது கொள்கையாக வகுத்துக்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் பிரிவு தான் பா.ஜ.க-வும் மோடியும். மனுநீதி தான் இந்துத்துவத்தின் உயிர் மூச்சு. பிறபடுத்தப்பட்ட மக்களுக்குச் சமூகநீதியின் அடிப்படையில் இடப்பங்கீட்டை வி.பி.சிங் கொண்டுவந்த பொழுது, அந்த அரசை கவிழ்த்ததே பா.ஜ.க தான்... அது மட்டுமின்றி.... மோடியின் பத்தாண்டுகளுக்குமேலான ஆட்சியில் குஜராத்தில் தீண்டாமை ஒழிந்து விடவில்லை, உறுதியாக வலுப்பெற்றே வருகின்றது. தீண்டாமை காரணமாக ஐந்தில் ஒரு தலித் குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்க‌ப்படவில்லை என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று(5). அரசு நலத்திட்டத்திலேயே இப்படியான தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென்றால், அங்குச் சமூகத்தில் நிலவும் தீண்டாமையைத் தனியே விளக்க தேவையில்லை. ஒரு புறம் தீண்டாமையை நியாயப்படுத்தும் மனுநீதியை தனது அடிப்படையாக ஏற்றுக்கொண்டு தீண்டாமை ஒழிப்பு என்பது, ஆட்டுக்குட்டியை ஓநாய் பாதுகாக்கும் என நம்புவதற்கு ஒப்பானது.

சிறுபான்மையினருக்குச் சமவாய்ப்பு:

சிறுபான்மையினருக்குச் சமவாய்ப்பு வழங்கப்போவாதாகப் பா.ஜ.க வாக்குறுதியளித்துள்ளது. நடைமுறையில் இருக்கும் மதநல்லிணக்கத்தைக் கெடுத்து சிறுபான்மையினரின் மேல் வெறுப்புப் பிரச்சாரம் செய்வது, சிறுபான்மையின மக்களின் மேல் திட்டமிட்ட முறையில் வன்முறை நிகழ்த்தி, கருவில் இருக்கும் குழந்தையைக் கூடக் கொல்லும் பா.ஜ.கவினர், இரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரை நடத்தும் பா.ஜ.கவினரின் இவ்வாக்குறுதி, தமிழ் மக்களைப் பாதுகாப்பது தான் என் முதல் வேலை என இராஜபக்சே சொல்வதற்கு ஒப்பானாது. பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளரான மோடி ஆளும் மாநிலத்தில் இசுலாமியர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக 2012-ல் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி தலைமையிலான குஜராத் பாரதிய ஜனதா தர்யப்பூர், சுஹீபுரா நகரங்களில் பிரச்சாரமே மேற்கொள்ளவில்லை. 2002 வன்முறைக்குப் பிறகு சுஹுபுரா பகுதியில் இருந்து இந்துக்கள் வெளியேறிய பிறகு அங்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன(விரிவாகப் படிக்க - http://save-tamils.blogspot.in/2014/01/2.html), ஒரு வேளை மோடி பிரதமரானால், நாடெங்கும் உள்ள சிறுபான்மையினருக்கு, இதே போலச் சமவாய்ப்பு வழங்கப்படும் என்பதைத் தான் தங்களது தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொல்கின்றார்களோ என்னமோ....... பா.ஜ.கவின் இந்துத்துவ வெறியும் இந்தத் தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளது. பொதுச் சிவில் சட்டம் என்ற பெயரில் சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்கும் திட்டத்தை முன்வைப்பதிலும், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவேன் எனக்கூறுவதன் மூலமும் நாங்கள் காவி தான், மற்ற மதத்தினருக்கும், இந்து மதத்திலேயே உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் தான் என முரசறைந்து கூறுகின்றார்கள்.


மோடி தான் மாற்று, அவர் அப்படிச் செய்வார், இப்படிச் செய்வார் என இதுவரை சொல்லி வந்த புதிய நடுத்தர வர்க்கத்திற்குத் தனது தேர்தல் அறிக்கை மூலம், காங்கிரசு செய்ததைத் தான் நானும் செய்வேன், அதைக் கொஞ்சம் அதிரடியாக, இந்துத்துவ வாசனையோடும் செய்வேன் எனச் சொல்லி அவர்களுக்கு இருட்டுக்கடை அல்வாவை கிண்டி கொடுத்துள்ளது இந்தத் தேர்தல் அறிக்கை...........மோடி, பா.ஜ.க மாற்று தான், முதலாளிகளுக்கும், இந்துத்துவவாதிகளுக்கும்....பொது மக்களுக்களுக்கல்ல....

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்...
1) Conveyor Magazine August 2009 Edition, 16th Page, Also in International Crisis group report on Kashmir dated 21 Nov 2002. Page no 3.

2) http://en.wikipedia.org/wiki/Dominion_of_India\

3) http://www.thehindu.com/news/national/article918002.ece

4) House of Commons Library research paper on Kashmir 30th Mrach 2004 , Page no 47. Also available in below link , http://www.parliment.uk

5) http://www.downtoearth.org.in/content/children-gujarats-backward-communities-left-out-vaccination-drives#.U0VrkYm6Ym8

Friday, April 4, 2014

தேவை குற்றப்பத்திரிக்கை அல்ல; தேர்தல் அறிக்கையே???

2014 நாடாளுமன்றத் தேர்தல் முதல்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரச்சாரங்கள் மும்முரப்பட்டு அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், மக்கள் நரேந்திர மோடியை தேர்தலுக்கு முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று கூறி வெகுநாட்களுக்கு முன்னரே பிரச்சாரக் களத்தையும், சமூக வலை தளங்களையும் ஆக்கிரமித்த பாரதீய ஜனதா கட்சியால் இன்று வரை தங்களுடைய 2014 தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை.

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை, தேர்தல் அறிக்கை வெளிவரவில்லை. அதற்குப் பதிலாக, ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மீதான குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் ஒன்றை வெளியிட்டுள்ளது பா.ஜ.க தலைமை.

தேர்தல் அறிக்கையும், காங்கிரசு மீதான தாக்குதல் தொடுக்கும் குற்றப்பத்திரிக்கையும் எப்படி ஒன்றாக முடியும்?. முடியவே முடியாது. இவை இரண்டும் முற்றிலும் வேறானவை.

தேர்தல் அறிக்கை என்பது " எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலோ, வெற்றி பெற்றாலோ" என்று தொடங்கி, அந்தந்த கட்சி மக்களுக்கு என்ன செய்யப் போகிறது என்பதே ஆகும்.

பாரதீய ஜனதா வெளியிட்டுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீதான குற்றப்பத்திரிக்கை என்பது காங்கிரசு தலைமையிலான அரசின் மீதான குற்றச்சாட்டுகள் கொண்டது. இந்தக் கூச்சல்களைத்தான் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோமே. பின்னர் ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது பா.ஜ.க.

பாரதீய ஜனதா கட்சிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல் காரணமாகத்தான், இதுவரை அவர்களால் தேர்தல் அறிக்கையை வெளியிட முடியவில்லை. நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் தொடங்கி ஏதோ ஒரு வழியில் உட்கட்சிப் பூசல் வெளிவந்து கொண்டே இருக்கிறது.


மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வதால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், மன்னிக்கவும். மோடி ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்று அவர்கள் சொல்லியாக வேண்டும். ஆனால், இதற்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோர்
ஆதரவளிக்காமல் முரண்டு பிடிக்கின்றனர்.

இவர்கள் இப்படியிருக்க, அத்வானியோ " மூவரில் ஒருவர்தான் மோடி" என்று திரி கிள்ளியுள்ளார். அதாவது, மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்து வரும் சிவராஜ்சிங் சௌகான், ராமன் சிங் ஆகியோரைப் போலத்தான் நரேந்திர மோடியும் என்பதே இதன் அர்த்தம்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன், பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அத்வானி அன்று கூறியதற்கான காரணமும் இதேதான். 2013 டிசம்பரில்தான் சிவராஜ்சிங் சௌகான், ராமன் சிங் ஆகிய இருவரும் மூன்றாவது முறை மாநில முதல்வராகப் பதவியேற்றனர். மோடிக்குப் போட்டியாக இவர்கள் இருவரையும் நிறுத்தி தான் பிரதமர் வேட்பாளராகிவிடலாம் என்கிற அத்வானியின் ஆசையில் மண் விழுந்து நாளாகிவிட்டது. ஆனால், இன்று வரை, மோடிக்கான பெருங்குடைச்சல் கட்சிக்குள்ளிருந்து வந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு விதமாக இதைப் பார்ப்போமானால், 1990-களில் காங்கிரசு கட்சி தலைமையிலான அரசால் திறந்துவிடப்பட்ட சந்தையை, மென்மேலும் திறந்துவிட்டு உலகமயமாக்கலையும், தனியார்மயத்தையும் நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சென்றது 1999 முதல் 2004 வரை ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசுதான். ஆகையால், இவர்கள் மக்களுக்குத் தேவையான கொள்கை அளவிலும், இதரப் பிரச்சனைகளிலும் காங்கிரசின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபடுவதில்லை. குற்றப்பத்திரிக்கை வெளியிடும் இவர்களால் மாற்று கொள்கைகளைக் கொண்ட அறிக்கையை வெளியிட முடியுமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி???

இந்த கையாலாகாதனத்தையும் காவி ஆதரவு ஊடகங்கள், " பா.ஜ.க -வின் குற்றப்பத்திரிக்கைக்கு காங்கிரசு என்ன பதில் சொல்லப் போகிறது? " (TIMES NOW) என்று காவிக் கொடி பிடிக்கின்றன. 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில்,அடுத்த இரண்டு நாட்கள் தேர்தல் காலத் தடை உத்தரவு இருக்கும். அப்படியிருக்கையில், பா.ஜ.க ஏன் இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள் நம்முடைய பார்வையை திசைதிருப்பும் வேலையை செய்து வருகின்றன.

தன்னுடைய நிலையான கொள்கையான இந்துத்துவத்தை முன்வைத்தால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள் என்று அச்சத்தில்தான் வளர்ச்சி என்கிற பெயரில் மோடியின் மீது சவாரி வருகிறது பாரதீய ஜனதா கட்சி. இவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டால், தற்போது இருக்கும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான மாற்றையும், அது எப்படி மக்களுக்கு உதவும் என்பதையும் முன்வைக்க வேண்டும். முந்திரா துறைமுகம் அமைக்க அதானிக்கு உதவி, எரிவாயு விலை நிர்ணயத்தில் அம்பானிக்கு ஆதரவு என்று இவர்களால் அறிக்கை வெளியிட முடியாது.

இந்துத்துவத்திற்கும், சுரண்டல் முதலாளித்துவத்திற்கும் உகந்த கொள்கைகளை எப்படி மாற்று என்று முன்வைக்கப் போகிறார்கள் என்பது அயோத்தியில் வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்ட‌ அந்த ராமனுக்கே வெளிச்சம்.

கதிரவன்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

Thursday, April 3, 2014

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 - அறிக்கை
தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை அரசே நலிவுறச் செய்திருக்கிறது. முன்னமே காவிரி நீர் மறுக்கப்பட்டமையாலும், ஓ.என்.ஜி.சி பெட்ரோலியம் & எரிவாயு எடுத்ததன் விளைவாக நிலத்தடி நீர் வறண்டு போனமையாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து, வேதிப்பொருள் கலந்து, குடிக்கத் தகுதியற்றதாக மாறிவிட்டது.இந்நிலையில் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’ என்ற நிறுவனத்திற்கு 2010-ல் அனுமதியளித்தது. 2011-இல் அன்றைய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு, அப்பெருமுதலாளிய நிறுவனத்திற்கு நடைமுறப்படுத்த முன்வந்தது. இன்றைய தமிழக அரசு மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்தாலும் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி-இன் பெயரில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சூழலில், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு “விவசாயம் பாதிக்கும் வகையில் தொழில்துறையை இந்த அரசு ஊக்குவிக்காது”என்று அறிவித்தது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இது குறித்து அதிமுக தலைமை ஏதும் குறிப்பிடவில்லை.
2011-இல் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்ட திமுக ‘இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கும்’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இத்திட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் என்பதற்கு எந்தக் கட்சியும் உத்தரவாதம் வழங்கவில்லை. மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இத்திட்டம் பற்றி வாயே திறக்கவில்லை. ஆகவே, தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் நிலை குறித்து காவிரிப் படுகை மக்கள் கவலையடைந்துள்ளனர். காவிரிப்படுகையில் உள்ள நாகை, தஞ்சை, மயிலாடுதுறைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், இத்திட்டத்தை ஏற்கமாடோம் என்றும், தடுத்து நிறுத்த முழுமையாக முயற்சிப்போம் என்றும், அவ்வாறு தடுக்க இயலா நிலையில் பதவி விலகி, மக்களோடு நின்று இத்திட்டத்தை முறியடிப்போம் என்றும் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று கோரி, எதிர்வரும் 07-04-2014 அன்று திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இறுதிவரை உண்ணாநிலைப் போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. மக்களின் சார்பாக கூட்டமைப்பு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டு ஒத்துழைக்க வேட்பாளர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோருகிறது.இடம்: திருவாரூர்
நாள் : 2-4-14


தலைமை ஒருங்கிணைப்பாளர்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
Tuesday, April 1, 2014

இரண்டாயிரம் பேரை கொலை செய்தால் பிரதமர் வேட்பாளர்....மோடி- வெளிச்சங்களின் நிழலில் நூல் வெளியீட்டு விழா - 30/03/2014 ஞாயிற்றுகிழமை மாலை 5 மணிக்கு வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், பனகல் பூங்கா, தியாகராயர் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 150 பேர் கலந்து கொண்டனர்தோழர்.செந்தில் அவர்கள் 'மோடி - வெளிச்சங்களின் நிழலில்' நூலின் தேவை குறித்தும், சேவ் தமிழ்சு இயக்கம் ஏன் இந்நூலை வெளியிடுகின்றது என்பது குறித்து பேசினார். மோடி மட்டுமே ஆக்கிரமித்திருந்த ஊடகத்தை புது தில்லி சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற ஆம் ஆத்மி உடைத்து, அவர்களும் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். பா.ஜ.க தமிழகத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கியது தான் இங்கே இருக்கும் பிரச்சனை. ’வளர்ச்சி’யின் பெயரால் மோடியை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம், ஈழத்தின் பெயரால் காங்கிரசுக்கு மாற்று என்று கருதிக் கொண்டு பா.ஜ.க.வை ஆதரிக்கும் மற்றொரு சாரார், என இரு சாரார் தமிழகத்தில் உள்ளனர். தேர்தலைக் கடந்து நீண்ட காலக் கண்ணோட்டத்தில் செயல்பட்டு வரும் சங் பரிவார் அமைப்புகள், தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் சமூகத்தின் ஆழ்மட்டத்தில் வேரூன்றி கிளைப் பரப்பக் கூடியவை. இதற்கு மாற்றாக , நாம் தொடர்ந்து புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தும், போலி வளர்ச்சி கொள்கைகளை எதிர்த்தும் பரப்புரை தொடர வேண்டியுள்ளது என்றார்.


சேவ் தமிழ்சு இயக்கத்தின் தோழர்.செய்யது பேசும் பொழுது இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொருத்தவரை அவர்கள் விரும்பும் ’வளர்ச்சியை’ வேகமாக உருவாக்க காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க. அதிலும் குறிப்பாக, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கொள்கை மாற்றங்களை அமல்படுத்தும் பாசிஸ்ட் ஒருவர் தான் இன்று இந்திய ஆளும்வர்க்கத்திற்கு தேவை. அந்த தேவையை நிறைவு செய்யபவர்தான் மோடி. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரசு தலைமையிலான அரசு செய்ததைவிட, அதிக சேதாரத்தையும், பயங்கரங்களையும் மிகக் குறுகிய காலத்தில் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்தும் என்பது அபாயகரமான உண்மை.. வளர்ச்சி என்ற பெயரில் மோடி முன்னிறுத்தப்படுவதில் இருக்கும் பிரச்சனைகள் பல. இந்துத்துவமும், முதலாளித்துவத்துவமும் மனித சமூகத்தை தனிமனிதர்களாக மாற்றும் பணியை செவ்வனே செய்கின்றன, சில மாதங்களுக்கு முன்னர் டைம் மாத இதழில் மன்மோகன் அரசை 'Under Achiever" என சொன்னார்கள், இதன் பொருள் அரசு மக்களுக்காக உழைக்கவில்லை என்றல்ல, முதலாளித்துவத்தை நடைமுறைபடுத்துவதில் அவர் மிகவும் மெதுவாக செயல்படுகின்றார். இதை மாற்றி முதலாளித்துவத்தை வேகமாக செயல்படுத்த மோடி முன்னிறுத்தப்படுகின்றார். மோடியின் குஜராத் மிளிர்கின்றது. என்றாலும், அங்கு மோடி அரசை எதிர்த்து பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, அங்கே வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவினாலும், அந்த வளர்ச்சி என்பது எல்லோருக்குமானது என்பது பொய், அது ஒரு சிலருக்கானது என்பது நடைபெற்று வரும் போராட்டங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளவேண்டும். வல்லபாய் படேல், காந்தி இருவருமே குஜராத்தில் பிறந்தாலும், வல்லபாய் பட்டென் முன்னிறுத்தப்படுவதற்கான காரணம், மக்களின் சனநாயக விருப்பங்களை மீறி இராணுவ பலத்தை கொண்டு செயல்திட்டத்தை முன்னெடுத்தவர் படேல். இந்த ஒத்திசைவே மோடி படேலை முன்னிறுத்துவதற்கான காரணமாகும் என்றார்.


இன்று நம்முன் உள்ள பணி - மோடி வெற்றி பெற்றாலும் சரி, வெற்றி பெறாவிட்டாலும் சரி நாம் தமிழகத்தில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும், வாக்குவங்கி அடிப்படையில் தமிழகத்தில் குறைவாக தென்படும் பா.ஜ.க, பரப்புரை அடிப்படையில் வலுவாக இருக்கின்றது, தமிழகத்தில் உள்ளவர்கள் சுற்றுசூழலாளர்களானாலும் சரி, மனித உரிமை செயற்பாட்டாளர்களானாலும் சரி, சமூக செயற்பாட்டாளார்களானாலும் சரி அவர்கள் தொடர்ந்து மோடியை எதிர்த்து பணிபுரிந்தேயாக வேண்டும் என்றார் செய்யது.


தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர். தைமிய்யா பேசும் பொழுது - ஈழத்தமிழர் பிரச்சனை, அணு உலை எதிர்ப்பு போராட்டம், பெண்கள் மீதான பாலியல் வல்லுணர்வுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பணியாற்றிவரும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களை பாராட்டுகிறேன், இந்நூலை எழுதிய தோழர்.கதிரவனையும் பாராட்டுகின்றேன். இந்தியாவில் முதன் முதலில் பயங்கரவாத செயலைச் செய்தவர்கள் மோடியின் முன்னோர்கள், காந்தியை கொன்று விட்டு அவரது சிலைக்கு சிறிதளவும் வெட்கமின்றி மாலையணிப்பவர்கள் தான் இவர்கள், இந்த நாட்டில் ஒன்றுபட்டிருக்கும் இந்து-கிறித்துவ-இசுலாம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதை தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள் தான் இந்த பா.ஜ.க-வினர். இது பார்ப்பனர்களை , அவர்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்பு. வெறும் 2 விழுக்காடு உள்ள பார்ப்பனர்கள் இந்து என்ற சொல்லாடலின் மூலம் பெரும்பான்மையாகி, தங்களது நலன்களை பாதுகாக்க செயல்பட்டுவருகின்றனர். பா.ஜ.க இசுலாமியர்கள், கிறுத்துவர்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல, அவர்கள் பார்ப்பனரல்லாத எல்லா மக்களுக்கும் எதிரானவர்களே.

கார்ப்பரேட்டுகள் மோடி, மோடி என்று ஜெபிக்கின்றனர், இதற்காக காங்கிரசு முதலாளிகளுக்கு எதிரானவர்கள் என்பதல்ல, அவர்களுக்கு இன்னும் அதிகமான தேவை உள்ளது, மோடியின் ஆட்சி அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும், டாட்டாக்களுக்குமானது .... இந்த நூலானது குஜராத்தில் உள்ள வளர்ச்சியின் உண்மை நிலையை கூறுகின்றது. இந்நூல் நம்மெல்லோரிடமும் இருக்கவேண்டும், இதன் மூலம் மோடியை, ஆர்.எஸ்.எஸை, பா.ஜ.கவை தோலுரித்து காட்ட முடியும், அதே போல இந்நூலில் மோடியை பற்றி கூறும் ஊடகவியலாளர்களின் வேலை பறிக்கப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது, உதாரணத்திற்கு சன் டிவியின் வீரபாண்டியன், இந்துவின் சித்தார்த் வரதராஜனை குறிப்பிடலாம். இந்திய அரசின் அமைப்பு முழுவதும் ஆர்.எஸ்.எஸாக காவிமயமாகி வருகின்றது,

டெல்லி ஜிம்மா மசூதி குண்டு வெடிப்பு நடந்த உடன் உளவுத்துறை இதற்கு காரணம் டெக்கான் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் என சொன்னார்கள், பின்னர் விசாரணையில் இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது அபினவ் பாரத் என்ற ஆர்.எஸ்.எஸின் கிளை அமைப்பும், ஆர்.எஸ்.எஸின் வனவாசிகள் பிரிவு தலைவருமான அசிமனாந்தாவும் தான். இவர் கேரவன் பத்திரிகைக்கு அளித்த அண்மைய பேட்டியில் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இது போன்ற குண்டுவெடிப்புகளை நடத்தச்சொன்னார் என்றார். அதே போல பாகிசுதான் செல்லக்கூடிய சம்ஜவதா இரயில் குண்டுவெடிப்பு ஏற்பட்டவுடன் இதை பாகிசுதானின் I.S.I தான் செய்தது என்றார்கள், பின்னர் இதை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பதும், புரோகித் இந்திய இராணுவத்தில் இருந்து தான் இதற்கான வெடிமருத்தை எடுத்துச்சென்றுள்ளார் எனக் கண்டுபிடித்தார் திவிரவாத தடுப்புதுறை தலைவர்.ஹேமந்த் கர்கரே. காந்தியை கொல்ல வேண்டும், அந்த பழியை முசுலிம் மீது போட வேண்டும் என திட்டம் தீட்டியவர்கள் தான் இவர்கள், "Who Killed Karkare" என்ற புத்தகத்தை முன்னால் ஐ.ஜி. முசுரிஃப் எழுதியுள்ளார், இந்த 26/11ல் நடந்த நிகழ்வு முழுவதும் I.B-யினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது, இதில் இந்துத்துவத்தின் தீவிரவாதத்தை கண்டுபிடித்த கர்கரே கொல்லப்படுவது தான் அவர்களது மைய இலக்கு என்று எழுதியுள்ளார். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வைத்தது மட்டுமின்றி, அந்த இடத்தில் முசுலிம் தொப்பியை போட்டார்கள், பின்னர் விசாரித்து பார்த்தால் அதுவும் ஆர். எஸ்.எஸ்ன் வேலை தான் இது, இதன் மூலம் இந்து முசிலிம் கலவரம் உருவாக வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என்றார்கள். இவ்வளவு நடந்த பின்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்னும் இங்கு தடை செய்யப்படவில்லை.


அதுமட்டுமின்றி I.B. " Stock Terrorist" என்ற சில திட்டங்களையும் நடத்தி வருகின்றார்கள். அதாவது நேபாளத்தையொட்டிய இந்திய பகுதியில் அனுமதி இல்லாமல் வணிகம் செய்து வரும் நபர்களை, குறிப்பாக முசுலிம்களை கைது செய்து வைத்திருந்து, ஒரு குண்டுவெடிப்பு, அல்லது தாக்குதல் போன்றவை நடந்த பின்னர், ஏற்கனவே பிடித்து வைத்துளவர்கள் அந்த தாக்குதலில் பங்குகொண்டது போலான புகைப்படம் அல்லது காணொளியை வெளியிடுவது, இப்படிதான் அஜ்மல் கசாப்பின் காணொலியும் ஊடகங்களுக்கு I.Bயால் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழருக்காக பேசிய வைகோ, சாதி வெறிபிடித்து அலையும் பா.ம.க போன்றவை இன்று தாமரை மலர துடித்து வருகின்றார்கள், வாஜ்பாய் ஆட்சியில் என்ன நடந்தது, அவர் இலங்கைக்கு ஆதரவாக போர்க்கப்பலை அனுப்பினார். ஈழத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது, என்கிறார் வெங்கய்யா நாயுடு, மக்கள் எங்கு துன்புறுத்தப்பட்டாலும் நாம் அதை எதிர்த்து போராட வேண்டும், ஒரு பக்கம் ஆதரித்துவிட்டு, ஒரு பக்கம் எதிர்ப்பது என்பது கபட நாடகம், இதை தான் வைகோ செய்கின்றார். மோடிக்கும், இராஜபக்சேவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, அது இந்த நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா போன்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்பதும், கருப்பு துண்டை வைத்து கொண்டு மோடியை ஆதரிக்கின்றார் என்றால் எங்கோ கோளாறு இருக்கின்றது,. நாம் ஒருங்கிணைத்து இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும்.திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தோழர்.பால தனசேகரன் பேசும் பொழுது, "மோடி ஏன் பிரதமராகக்கூடாது" என தொடர் கூட்டங்களை நடத்திவருகின்றோம், அதற்கு உடனே காவல்துறை அனுமதி கொடுத்தது எங்களை ஆச்சரியப்படுத்தியது, எப்போதும் எங்களுக்கு இரு பிரச்சனைகள் இருக்கும் ஒன்று காவல்துறை, இரண்டாவது மது அருந்திவிட்டு யாராவது வந்து வம்பிழுப்பார்கள், ஆனால் இந்த கூட்டத்திற்கு வந்த காவல்துறை எங்களிடம் வம்பிழுக்க வந்த ஒரு குடிகாரனின் காவல்துறையே பேசியதை வைத்து, சரி ஏதோ ஒரு பின்னணி இருக்கின்றது என புரிந்து கொண்டோம். இந்நூல் சிறிய நூலாக இருந்தாலும், மோடி குறித்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இருக்கின்றது. 1925ல் தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுகின்றது அதே போல ஆர்.எஸ்.எஸூம் அப்போது தான் துவங்குகின்றது. இன்று அவர்கள் எங்குள்ளார்கள், நாம் எங்குள்ளோம் என்பதை வைத்து நாம் நம்மை ஒரு சுயவிமர்சனம் செய்து பார்க்கவேண்டும். பா.ஜ.கவை வைத்து ஒரு கூட்டணி அமைப்பது முட்டாள்தனமானது, அதில் பா.ம.க, வைகோ போன்றோர் உள்ளனர். ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்று சொல்லும் பா.ஜ.க தீண்டாமை நடைபெறும் இடங்களின் இதை பேசுவார்களா? அதே போல அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற இடத்தில் அவர்கள் இந்துக்களே திரண்டு வா என இரட்டை நிலைப்பாட்டை எடுக்கின்றார்கள். இசுலாமியர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கக்கூடாது என சொல்கின்றார்கள், நேரடியாக பார்ப்பனர்களுக்கு வழங்கு என்று சொல்லமுடியாதவர்கள் இவர்கள். நான் குஜராத்திற்கு பலமுறை சென்று வந்துள்ளேன். வளர்ச்சியெல்லாம் அங்கு இல்லை, இந்துத்துவம் தான் உள்ளது, பொருளாதார கொள்கையில் காங்கிரசிற்கும், பா.ஜ.கவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. புதிய ஓய்வூதிய திட்டம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்றவை உதாரணங்களாக உள்ளன, இவர்களிடம் எந்த மாற்றுத்திட்டமும் இல்லை, சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை உருவாக்கவதையே தங்களது Agenda-வாக இருக்கின்றது, இவர்களை எதிர்ப்பது நமது அடிப்படை கடமையாகும். மதச்சார்பற்ற கட்சிகள், மதச்சார்பு கட்சிகளை கேள்வி கேட்காமல் திமுக வெறுமனே ஜெயலலிதாவை எதிர்ப்பது தான் நடக்கின்றது. இங்கு நாம் தான் இப்பணியை செய்ய வேண்டும், இந்நூலை பரப்பும் பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என்றார் தோழர்.


நூல் வெளியீடு தோழர்.இராமகிருஷ்ணன் நூலை வெளியிட தோழர்.தைம்மியா பெற்றுக்கொள்ள, மற்றொரு பிரதியை தோழர்.மீ.த.பாண்டியன் வெளியிட தோழர்.அமீர் அம்சா பெற்றுக்கொண்டார்.தோழர்.அமீர் அம்சா, மாநில செயலளார், S.D.P.I - இக்கட்சி மதச்சார்பற்ற, ஒடுக்கப்படுபவனின் கட்சியாகும், காந்தியை கொன்றவர்களுக்கு ஆதரவாக காந்திய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துள்ள தமிழருவி மணியின் தரகு வேலை செய்து வருகின்றார் !!! நம்முடைய இரத்தச் சொந்தங்களான ஈழத்தமிழர்களை கொன்ற இராஜபக்சேவைப் போன்றவன் தான் மோடியும். தேமுதிகவின் சுதீஷ் சில நாட்களுக்கு முன் சேலத்தில் பிரச்சாரம் செய்த பொழுது எங்களை அழிக்கும் பா.ஜ.க-வின் கூட்டணியில் உள்ள உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க முடியாது என சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார்கள் என்றார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்- மா.ச.சிந்தனைச் செல்வன் பேசும் பொழுது, இந்நூலில் நிறைவான தர்க்க, நியாயங்களும், புள்ளி விவரங்களும் உள்ளன. இந்நூலில் எனைக் கவர்ந்த பகுதி இராஜபக்சேவோடு மோடியை ஒப்பிட்டு எழுதியிருந்த பகுதி, மோடியை பற்றி புரிந்து கொள்ள இராஜபக்சே உடனான அந்த உரையாடல் உதவியாக இருக்கின்றது. வைகோ போன்றவர்கள் இந்துத்துவத்தை சுமந்து செல்லும் பல்லக்கு தூக்கிகளாகி விட்டனர். மனிதன் சமூகமாக வாழ்வதை பிரித்து உதிரியாக வாழ்ச்செய்யும் வேலையை தனியார்மயமும், இந்துத்துவமும் செய்துவருகின்றன. நெய்வேலியில் அண்மையில் நடந்த ஒரு கொலை மிகவும் அற்பமான ஒரு காரணத்திற்காக நடந்துள்ளது, இங்கு என்னை அதிகம் பாதித்தது கொலை நடந்த பிறகு எந்த ஒரு பெரிய போராட்டத்தையும், யாரும் முன்னெடுக்காததே. மத்திய பாதுகாப்பு படை முதலில் நெய்வேலிக்கு வந்த பொழுது மத்திய தர வர்க்கத்தினர் வரவேற்றனர். இதனால் நெய்வேலியின் வளங்களும், தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்கள், அன்றே நாங்கள் இதை எதிர்த்தோம். இன்று ஒரு தொலைபேசியை பயன்படுத்தும் உரிமைக்காக இங்கே ஒருவர் கொல்லப்படுகின்றார். தேர்தல் அரசியல் வாக்கு வங்கி அடிப்படையில் வேண்டுமானால் பா.ஜ.க -வின் வீச்சு குறைவாக இருக்கலாம். ஆனால், மக்கள் பரப்புரையிலும், இந்துத்துவத்தை கொண்டு சேர்ப்பதிலும் இந்த அமைப்புகளின் வேகம் பலமடங்காக பெருகியுள்ளது. இந்த பலம்தான் எச்.ராஜாவும், சி.பி.ராதாகிருஷ்ணனும் பெரியாரை இகழ்ந்து பேசியதன் பின்னணியில் இருப்பது. தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுக்க போராடி நமக்குக் கற்று கொடுத்த சுயமரியாதை நிலைக்க வேண்டுமெனில், இது பெரியார் மண் என்ற இறுமாப்பில் இருந்து வெளிவர வேண்டிய தருணம் வந்துவிட்டது. நம்மை சூழ்ந்துள்ள இந்துத்துவ அபாயத்தையும், மோடி முகமூடி அணிந்து வரும் பாசிசத்தையும் எதிர்த்து வருகின்ற தேர்தல் கடந்தும் போராட வேண்டிய தேவை நம்முன் உள்ளது. என்ற பின்னட்டையில் வரும் கருத்தை அவர் மீண்டும்வலியுறுத்தினார்.கடந்த ஆண்டு தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் விநாயகர் சதுர்த்தி நடந்துள்ளது, இதற்காக நிதி திரட்டும் பணியை 9ஆம், 10 ஆம் வகுப்பு பையன்கள் செய்கின்றனர். இதை நாம் தவிர்த்துவிட்டு பார்க்கமுடியாது. எப்படி மோடி தூய்மையானவராக காட்டப்படுகின்றாரோ, அதே போல இங்கே இராமதாசு உள்ளார். எப்படி மோடிக்கும், இராஜபக்சேவும் ஒத்திசைவானவர்களாக உள்ளார்களோ, அதே போல மோடியும், இராமதாசும் இணைந்துள்ளார்கள். சத்ரியன் என்ற சொல்லாடல் இங்கே வலுவாகி வருகின்றது, இதை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸீற்கும் காந்திக்கும் தத்துவார்த்த பகையில்லை, அது வெறும் பங்காளி சண்டை, இவ்வளவு தான் பிரச்சனை, இந்துத்துவத்தை எதிர்ப்பவரல்ல காந்தி, காந்தியை பின்பற்றுபவர்கள் கடைசியாக சென்று சேர வேண்டிய இடம் தான் ஆர்.எஸ்.எஸ். தமிழருவி ஆர்.எஸ்.எஸை எதிர்த்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். நமக்கான தத்துவார்த்த பலத்தை தோழர்.பெரியார் வழங்கியுள்ளார். பெரியார் மீதான விமர்சனத்தை நாங்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கின்றோம். பெரியாரின் கொள்கைகளை நாம் வளர்த்தெடுக்கவில்லை, பொது தொகுதியில் நாங்கள் நின்று பெரிய வாக்குவித்தியாசத்தில் தோற்றோம், அது யூசுப்பின் தோல்வியா, அல்லது திராவிட கட்சிகளின் தோல்வியா? நாம், நமது தத்துவத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். நாம் இந்துத்துவத்தை முழுமையாக விரட்டியடிக்கவில்லை. பார்ப்பனர்களை தான் விரட்டியடித்திருகின்றோம். ஒவ்வொரு ஊரிலும், பத்து கோவில்கள் உள்ளன. 1881ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது முதன்முதலாக, இதில் எல்லோரும் கவுண்டர், வன்னியர் எனக்கூறும் பொழுது, எங்களை தமிழர் என்று பதிவு செய் என்ற குரல் அயோத்திய தாசரிடம் இருந்து எழுந்தது. இந்துத்துவ கோட்டை வெறும் பொய்களால் மட்டும் இல்லை, அது கலாச்சார பண்பாடாக உள்ளது. நாம் செய்திருக்கின்ற பிழைகளை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும். இங்கே இந்துத்துவம் சாதியமாக உள்ளது, இந்தியா முழுமைக்குமான ஒற்றை பண்பாடாக சாதியம் தான் உள்ளது. நாம் முன்வைப்பது தமிழ் தேசியமானதாக இருந்தாலும் சரி, திராவிட தேசியமானதாக இருந்தாலும் சரி, இந்திய எதிர்ப்பாக இருந்தாலும் சரி இவையெல்லாவற்றிலும் சாதிய எதிர்ப்பு அடிப்படையாக இருக்க வேண்டும். இங்கு விகிதாச்சார தேர்தல் முறை வந்தால் தவிர்க்க முடியாத சமரசத்தில் நாம் ஈடுபட வேண்டியதில்லை. இதை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.


தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாலர். தோழர்.கோவை இராமகிருஷ்ணன், பேசும் பொழுது இங்கே மோடி அலையெல்லாம் இல்லை, மோடி தான் அலைகின்றார் ஒவ்வொரு கட்சித் தலைவர் வீடாக.... ஒரு மாதமாக இந்த கூட்டணிக்காக அலைந்தார்கள். தான் காலை ஊன்றுவதற்காக எவ்வளவு அவமானத்தையும் இவர்கள் தாங்குவார்கள், இதே பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் பா.ஜ.கவிடம் சென்று கூட்டணிக்காக வரிசையில் நிற்பார்கள். பெரியாரிய இயக்கங்களாகிய நாம் நம்மை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் எதையுமே திட்டமிட்டு செய்கின்றார்கள். மோடியை இங்கே திட்டமிட்டு பரப்புகின்றான். எங்களிடமும்ம் காந்தி மாதிரி ஒரு ஆள் இருக்கார்னு வாஜ்பாயை முன்னிறுத்தினார்கள். பின்னர் ஆயிரம் பேரை கொன்ன அத்வானி வந்த உடன் வாஜ்பாயை கைவிட்டார்கள், அடுத்து இரண்டாயிரம் பேரை கொன்னவன் என்பது தான் மோடியின் தேர்வுக்கான அடிப்படை. எத்தனை கொலை என்பது தான் இங்கு அவர்களுக்குஅடையாளம்.

மக்களிடம் செல்லும் பொழுது இரண்டாயிரம் பேரை கொன்றவன்னு சொல்லமுடியாது, அதனால் தான் முதலில் மோடியை, குஜராத்தை பரப்பினான், மிளர்கிறது என்றான், இங்கே மின்தடை ஏற்பட்ட போது அவன் குஜராத்தில் மின்மிகை மாநிலம் என்றான், இது எளிதாக மக்களை சென்றடைந்தது. ஆனால் உண்மை நிலை வேறானது, குஜராத்தில் 11 இலட்சம் மக்களை இன்னும் மின்சாரம் சென்றடைவதில்லை, அதே போல மின்கட்டணம் பலமடங்கு அதிகம். அவர்கள் திட்டமிட்டு பரப்புகின்றார்கள். பத்ரிநாத்தில் மக்கள் இறந்து கொண்டிருந்த பொழுது , போனவர்கள் என்னானர்கள் என்று எல்லோரும் பதறிக்கொண்டிருந்த பொழுது மோடி சென்று 15,000 குஜராத்தியர்களை காப்பாற்றினார்கள் என செய்தி வந்தது, இதை கேட்ட மக்கள் மோடியின் சாகசத்தை நம்பத்தொடங்கினார்கள். அதே போல மோடி இந்தியாவை நேசிக்கின்றார் எனக்காட்ட படேலை கொண்டு வந்தன், இரும்பு மனிதருக்கு, இரும்பில் சிலை, இதற்காக எல்லா கிராமங்களிலும் இரும்பு வாங்குகின்றேன் என்ற போர்வையில் பா.ஜ.க-விற்கு பிரச்சாரம் செய்கின்றான்.

மாயாவதி 400 கோடியில் அம்பேத்கருக்கும், யானை சின்னத்திற்கும் சிலை வைத்த பொழுது கேள்வியெழுப்பிய ஊடகங்கள் 2300 கோடியில் அமைய இருக்கும் படேல் சிலையை எந்த கேள்வியும் எழுப்பாமல் அப்படியே சொல்லின. இந்த விளம்பரத்திற்கு மட்டும் 500 கோடி செலவாகியுள்ளது. அவர்களது கணக்கு எப்பவும் தெளிவாக உள்ளது. இப்படி தான் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுகின்றோம் என மக்களிடம் இருந்து செங்கல்லை வாங்கினான், அதை வைத்து எதையும் கட்டவில்லை, அந்த செங்கல்லின்மூலம் அவன் மக்கள் தலையில் இந்துத்துவத்தை ஏற்றுகின்றான் , அதே போல மோடித்துவத்தை ஏற்றுகின்றான் இரும்பின் மூலம். ஒப்பீட்டின் படி பார்த்தாலும் தமிழ்நாடு குஜராத்தை விட பல மடங்கு முன்னேறியே உள்ளது. காந்தி எதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார், மார்வாடிக்காக வழக்கு நடத்த சென்றார், சென்ற இடத்தில் பொது பயணச்சீட்டு எடுத்து விட்டு ரிசர்வ்டு வகுப்பில் பயணம் செய்வதால் வெளியேற்றப்படுகின்றார், ஆனால் அதை திறமையாக நான் கறுப்பனாக இருந்ததால் தான் வெளியேற்றப்பட்டேன் என கதைவிட்டு அதன் மூலம் இங்கே ஒரு கதாநாயகனாக மாறிவிட்டார், பி.ஜே.பி முசுலிம்களுக்கு மட்டும் எதிரியல்ல, பார்ப்பனரல்லாத எல்லோருக்கும் எதிரி தான். குஜராத் மிளர்கிறது என்றால் ஏன் பீகார், உத்திரபரதேசம், ஒரிசா போன்ற மாவட்டங்களிலிருந்து குஜராத்திற்கு செல்லாமல் அங்குள்ள மக்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு வருகின்றான், மொழியே தெரியாமல் அவன் இங்கு வருவதற்கு பதிலாக ஹிந்தி தெரிந்த குஜராத்திற்கு செல்வதில்லை ? என்றார் தோழர்.

அடுத்து மாணவர் இயக்கத்தோழர். முகமது இரஃபீக் மோடி எதிர்ப்பு கவிதை ஒன்றை வாசித்தார்.


தோழர்.மி.த.பாண்டியன் - கம்யூனிசுட்டு கட்சி - மக்கள் விடுதலை பேசும் பொழுது ஜெய் காளி, ஓம் காளியின் மாறுபட்ட வடிவம் தான் ஹர...ஹர.... நமோ... நமோ எல்லாம். பாசிச எதிர்ப்பு என்பதும், இந்துத்துவ எதிர்ப்பும் தேர்தல் கால Agenda-வாக இருக்கின்றது, இதை இடது சாரி கட்சிகளும் செய்கின்றன. தொடந்த பாசிச , இந்துத்துவ எதிர்ப்பு எல்லா கட்சிகளின் நிகழ்ச்சி நிரலிலும் , எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும். தம்முடைய இயக்கங்களில் பா.ஜ.க எதிர்ப்பை வைத்திருந்த திராவிடம், கட்சியாக மாறிய பொழுது அது எங்கே போனது என்பதை நாம் யோசிக்க வேண்டும், 2002ல் குஜராத் இனப்படுகொலை நடந்த பொழுது வாஜ்பாயுடன் இருந்த தமிழக கட்சிகளையும் நாம் நினைவு கூறவேண்டும். பெரியாரின் கொள்கைகளை வரித்து கொண்டவர்கள் இன்று அவரது கொள்கைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டனர்.

அரசியல் களத்தில் கருத்தியல் ஊழல் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 1925ல் அம்பேத்கரின் பின்னால் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள்கின்றார்கள், அது சித்பவன் பார்ப்பனர்களை அதிரவைக்கின்றன. .அம்பேத்கர் நாங்கள் இந்துவல்ல என்றார். அவர்கள் அம்பேத்கரை எதிர்த்தால் அழிந்துவிடுவோம் என புரிந்து கொண்டு, ஒரு புதிய எதிரியை உருவாக்குகின்றான், இசுலாமியர்கள் தான் எதிரி என்கின்றான், அதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களையும் தன் பின்னே திரட்டுகின்றான். இவனின் தத்துவார்த்த பின்ணனி கோயபல்சு, ஹிட்லரே. ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னத்தை தான் இவன் எடுத்துக்கொண்டான். இந்தியாவின் பயங்கரவாத இயக்கங்களில் முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ் தான். கடந்த பத்தாண்டுகளில் நாம் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியான பணியை செய்யாத அந்த நேரத்தில், அவர்கள் சிந்திக்க தொடங்குகின்றார்கள். ஆர்.எஸ்.எஸ் பெண்களுக்கும் எதிரான அமைப்பு, இந்துத்துவா அரசியல் என்பது எவன் வேண்டுமென்றாலும் வாழுங்கள், ஆனால் இந்து தான் ஆள வேண்டும் என்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்பது சிறுபான்மையினரை விழுங்கக்கூடிய, ஒடுக்கக்கூடிய ஒரு வன்முறை ஸ்தாபனம் ஆகும். வெறும் காவியரசியலை மட்டும் பார்க்காதீர்கள், அவனது வர்க்க பின்னனியையும் பாருங்கள் என்று 1996ல் பேசினால், இன்று அவன் தெளிவாக வளர்ச்சி என்று பிரச்சார வடிவத்தை முன்னெடுக்கின்றான்

2000த்திற்கு பிறகு உருவான இந்த புதிய நடுத்தர வர்க்கம், தான் மட்டுமே வாழ்வது, தான் மட்டுமே சொகுசாக இருப்பது என்பதை மட்டுமே சிந்திக்கின்றது, சிந்திக்க வைக்கப்படுகின்றது. இந்நூலில் உள்ள முதல் கட்டுரை குஜராத்தின் வளர்ச்சியை பற்றி சொல்கின்றது, இது இன்றைய காலத்தில் நாம் எதை பேச வேண்டுமோ அதை பேசுகின்றது , அதே போல தமிழகத்தில் இந்துத்துவ அபாயம் பற்றிய கட்டுரையும் காலத்துடன் பொருந்தி போகின்றது. சில கட்டுரைகளில் எனக்கு உடன்பாடில்லை, ஏனென்றால் அவை காலத்துடன் பொருந்திப் போகவில்லை. எப்படி காங்கிரசை இங்கே தனிமைப்படுத்தினோமோ, அதே போல ஆர்.எஸ்.எஸை, பா,ஜ,க.வை நாம் இங்கே தனிமைப்படுத்த வேண்டும். வீதி தான் களம், தேர்தல் களமல்ல.. திமுகவின் பிரச்சாரமும் சரி, அதிமுகவின் பிரச்சாரமும் சரி மோடிக்கு எதிராக பா.ஜ.கவிற்கு எதிராக நடக்கவில்லை. இது தான் இங்கே தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அபாயம். 99ல் திமுக, மதிமுக, பா.ம.க கூட்டணி வைக்கின்றது, அடுத்த ஆட்சியில் அதிமுக கூட்டணி வைக்கின்றது. இது தான் இங்கே தமிழகத்தை சூழ்ந்திருக்கும் அபாயம். 99ல் திமுக, மதிமுக, பா.ம.க கூட்டணி வைக்கின்றது, அடுத்த ஆட்சியில் அதிமுக கூட்டணி வைக்கின்றது. இப்படி மாறி , மாறி இங்கே தமிழகத்தின் கிராமம் தோறும் தாமரையை மக்கள் மனதில் நிறுத்தியது திராவிடகட்சிகள். சிறைச்சாலைக்கு உள்ளே இருக்க வேண்டியவர்கள் பிரதம வேட்பாளர்களாக உள்ளனர் என்றார் தோழர்.


இறுதியாக பேசிய நூலாசிரியர் தோழர்.கதிரவன் , இந்த கட்டுரைத் தொடரை என்னை எழுத வைத்தது, என்னுடன் பணிபுரியும் சக பணியாள‌ர்களே, மதிய உணவு இடைவேளையில், தேனீர் இடைவேளையில் திரும்பத் திரும்ப மோடி புராணம் பாடி, இக்கட்டுரை தொகுப்பை என்னை அவர்கள் எழுதத்தூண்டினார்கள். இதற்கான தகவல்களை எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது. என்னை இந்நூலை எழுத வைத்தவர்களைத் தான் ஊடகங்கள் Cyber Hindus, Internet Hindus என்கின்றனர். 2004, 2009 தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைகின்றது. 2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலை இந்த நடுத்தர வர்க்கம் அறிந்தது தான். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஆண்ட காங்கிரசு அரசு உண்டாக்கிய சோர்வு, தொடர்ச்சியாக வெளிவந்த ஊழல்குற்றச்சாட்டுகள் இவர்களை மாற்றை நோக்கி நகர வைத்தது, முதலாளிகளுக்கும் மாற்று தேவையாக இருந்தது. இந்த நேரத்தில் தான் நம் நாட்டில் உள்ள அனைத்து நோய்களுக்குமான ஒரே மருந்தாக மோடி முன்வைக்கப்படுகின்றார். உண்மையில் மோடி யாருக்கானவர். 2002ல் மோடி முதல்வராக மீண்டும் பணியிலமர்ந்த பொழுது வெறும் 7.6 கோடி அமெரிக்க டாலர் சொத்து வைத்திருந்த ஒருவர் தற்சமயம் 880 கோடி அமெரிக்க டாலர் அளவு அதை அதிகரித்துள்ளார், அவர் தான் அதானி, மோடி அதானி, அம்பானி, மிட்டல், டாட்டாக்களுக்கானவர். 1992ல் டி.டி-யில் ஒளிபரப்பாகிய இராமயணம் மூலம் இந்துத்துவம் பரவியது, இன்று அது குழந்தைகளுக்கான சோட்டா பீம் என பல வடிவங்களில் உள்ளது. அதே போல ஆர்.எஸ்.எஸ் ஆதிவாசிகளை வனவாசிகள் என்றே குறிப்பிடுவர், "Making of an Muslim Terrorist" என்ற ஆவணப்படத்தில் இந்த உலகமே இந்துக்களாலானது, அவர்கள் தான் ஆதிகள் என்று வினய் கட்டியார் கூறுகின்றார், அதனால் அவர்கள் ஆதிவாசிகள் என கூறினால் அது முரண்பாடாகிவிடும் என்பதால் எப்பொழுதும் வனவாசி என்றே அழைத்து வருகின்றார்கள். மதமாற்றம் கூடாது எனக்கூறிக்கொண்டே கந்தமால் பகுதியில் இருந்த ஆதிவாசிகளை இந்துக்களாக மதம் மாற்றியுள்ளர்கள் இவர்களே என்றார் தோழர்.

நூல் வாங்க தொடர்பு கொள்ள - 09884468039 - சென்னை, 09886002570 - பெங்களூர்.

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்.