Wednesday, September 25, 2013

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 1



2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும் நிலையில் இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க-வும் அதையொட்டிய தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன.காங்கிரசு ஆளும் கட்சி என்பதால் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் , பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வோ "குஜராத் பாணியிலான வளர்ச்சி" என்ற பிரச்சாரத்தை முன்வைத்து நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டது.

நரேந்திர மோடியை பிரதமராக்கினால்தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்று ஊடகங்களால் அவர் மீது பாய்ச்சப்பட்ட கட்டற்ற வெளிச்சம் பா.ஜ.க.-வுக்கு உள்ளிருந்த போட்டியை குறைத்து, 1990-களில் ரதயாத்திரை மூலம் கட்சியை வளர்த்த தனது குருவான அத்வானியையே பின்வாங்க வைத்து பிரதமர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார் குருவை மிஞ்சிய சீடரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி.



இதில் விந்தை என்னவென்றால், என்ன காரணத்திற்காக அத்வானி பிரதமர் பதவியை வாஜ்பாயிடம் இழக்க வேண்டி வந்ததோ, அந்த காரணத்தைக் கொண்டே இந்த முறை ஆர்.எஸ்.எஸ்- சின் ஆசியுடன் அத்வானியிடமிருந்து மோடி அந்த வாய்ப்பைப் பறித்துள்ளார். ரதயாத்திரை நடத்தியவரிடமிருந்து ரத்தயாத்திரை நடத்தியவரை நோக்கி நகர்ந்துள்ளது, நகர வைக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கபடுவதற்கு முன்பிருந்தே இவர் மீது ஊடகங்களால் வெளிச்சம் பாய்ச்ச்சப்படுவதற்கான காரணம் என்ன ?, மூன்று முறை ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதே பிரதமராவதற்கான தகுதியா?, மோடிக்கு தொடர்ந்து பிம்பப்பெருக்கம் செய்து வரும் ரசிகர்கள் யார்?, மோடி மீது பாய்ச்சப்படும் கட்டற்ற வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படுவது யாது ? என்பதையே இக்கட்டுரைத் தொடர் பேச விழைகிறது.

மோடியின் ரசிகர்களாக இருப்பது பெரும்பாலும் 1990-களுக்குப் பிறகு உருவான தொழிற் பிரிவுகளிலும், புதிய நடுத்தர வர்க்கத்தைச்(NEO MIDDLE CLASS) சேர்ந்த இளைஞர்கள் என்பதை மறுக்க இயலாது.

மோடி பிரதமரானால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும், பத்தாண்டுகால காங்கிரசு ஆட்சியினால் ஏற்பட்ட சீர்கேடுகளையும், ஊழல் முறைகேடுகளையும் மோடி போன்ற "இரும்பு மனிதரால்தான்" மாற்ற முடியும் என்றும் தொடர்ந்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதிரியான பிரச்சாரங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், முகப்புத்தகத்திலும் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்களையும், புதிய நடுத்தர வர்க்க இளையோரையும் முன்வைத்தே நடத்தப்படுகின்றன. இந்தப் பிம்பப்பெருக்கத்தினால் இளைஞர்கள் அனைவரும் மோடிக்குப் பின்னால் இருப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அதை வைத்து இளைஞர்களை கவரும் வேலை நடந்து வருகிறது.


நரேந்திர மோடி என்றாலே நம் அனைவருக்கும் 2002-ல் குஜராத்தில் நடந்த வன்முறை நினைவுக்கு வரும் போது நம்மில் ஒரு சிலருக்கு மட்டும் அவர் வளர்ச்சியின் "தேவதூதராக" "பீஷ்மராகக்" காட்சியளிக்கிறார். இப்படியான பார்வை என்பது பெரும்பாலும் வளர்ச்சிதான் முக்கியம், கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று வாதிடுபவர்களால்தான் முன்வைக்கப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இந்துத்துவ சகதியில் உழல்பவர்களே. நடுத்தர வர்க்கத்தின் இரண்டு கண்களான வருமானமும், நுகர்வும் பெரும்பாலானவர்க்கு சாத்தியமாகி இருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் இதையே வளர்ச்சி என்று வாய்மொழி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவே மோடிக்கும், மோடியை விரும்புவோருக்கும் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது.

அன்னா ஹசாரேவைக் கொண்டு பா.ஜ.க -வால் மக்களைத் திரட்ட வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட பிறகு ஊடகங்களின் மொத்த வெளிச்சமும் மோடி பக்கம் திரும்பியது, திருப்பப்பட்டது. பா.ஜ.க என்கிற எதிர்க்கட்சி, அதன் கொள்கை, பலம், பலவீனம் பற்றிக் கூட ஊடகங்களின் பார்வை திரும்பவில்லை , நரேந்திர மோடி என்னும் தனிமனிதரை நோக்கியே திரும்பின.


தனியார் பெருமுதலாளிகள் என்றும் பாசிசத்தின் நண்பர்களே, பாசிசத்தின் தொடக்கம் தனிமனிதத் துதிகளிலேயே உள்ளது.



தனியார் பெருமுதலாளிகளும், ஊடகங்களும் மோடியை முன்னிறுத்துவதற்கான முக்கியக் காரணம், அவர்களுடைய தொழில், வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே. அதற்காக தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான‌து ஒன்றும் இல்லை. ஆனால், அவர்களுக்கு மோடியைப் போன்று எதேச்சதிகாரப் போக்கு கொண்ட, முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக எடுக்கும் ஒரு நபரையே எதிர்பார்க்கின்றனர்.

குஜராத் படுகொலைகளை மறந்து, மோடியின் இந்துத்துவ வெறியைப் புறந்தள்ளி மோடியை முன்னிறுத்துவதற்கான காரணங்களாக சொல்லப்படுவது, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மலைக்க வைக்கும் வளர்ச்சி. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும்,பொருளாதாரமும் பெரும் பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது குஜராத்தில் மட்டும் எப்படி வளர்ச்சி அடைகிறது? இந்திய அரசு மாநில அரசுக்கு இவ்வளவு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கிறதா ? என்னும் ஐயம் எழாமல் இல்லை.


மோடியின் குஜராத்தில் வளர்ச்சி பற்றிய செய்திகளை நிறுவுவதற்கு கொடுக்கப்படும் சில விபரங்களைப் பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் "துடிப்புள்ள குஜராத்" (VIBRANT GUJARAT) என்ற பெயரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் பெருமுதலாளிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு மோடி அரசால் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. 2010-11 ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் மூலம் குஜராத்திற்கு 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கியின் தகவல்களின்படி, அந்த காலத்திற்கான, இந்தியா முழுமைக்கும் செய்யப்பட்ட முதலீடே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர்தான்.



இந்தியாவிற்கு வரும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 2.38விழுக்காடு மட்டுமே குஜராத் மாநிலத்தின் பங்களிப்பாகும். இந்தியாவிற்கு வரும் முதலீடுகளில் மகாராஷ்டிரத்திற்கும், டெல்லிக்கும் வரும் பங்கு முறையே 45 மற்றும் 26 விழுக்காடு ஆகும். ஆனால் மோடி சொல்கிறார் தன்னுடைய ஆட்சியில் குஜராத் "இந்தியாவின் நுழைவாயிலாக" இருக்கிறது என்று, இதை ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு விளம்பரம் செய்கின்றன.

2009-ல் நடைபெற்ற தனியார் நிறுவனங்களுக்கான அமர்வின் மூலம் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாக மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. அத்தோடு 2011 ஆண்டு காலத்தில் இந்த புதிய வேலை வாய்ப்புகளின் அளவு 52 லட்சத்தை எட்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் திட்டக் கமிசனின் வேலைவாய்ப்பு பற்றிய அறிக்கை 2004-05 காலத்தில் 2.53 கோடியாக இருந்த வேலைவாய்ப்புகள் 2009-10 காலப் பகுதியில் 2.46 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலையைக் கூட மறைத்து புதிய வேலைவாய்ப்புகள் என்று வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.



குஜராத் ஒரு மின்மிகை மாநிலம் என்றும், அங்கு மோடி அரசு அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தின் 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்று கூறுகிறது.இதில் 15 விழுக்காடு நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளாகும். அப்படியானால், 2010-ல் குஜராத் அரசு தன்னை மின்மிகை மாநிலமாக அறிவித்துக் கொண்டபோது சொன்ன 11500 மெகாவாட் மின்சாரம் யாருக்கு கொடுக்கப்படுகிறது?.அதுமட்டுமின்றி குஜராத்தில் மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலை மிக அதிகம்.


மோடி அரசால் வெளிச்சம் பாய்ச்சப்படும் வளர்ச்சி அளவுகளில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம், சமூக மற்றும் மனித வளர்ச்சி குறியீடுகளான கல்வி, வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே உள்ளது.


2009-2010 ஆம் ஆண்டுகளின் இறுதியில் திரட்டப்பட்ட விபரங்களின் படி, குஜராத்தின் கிராமப்புறங்களில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை ஹரியானா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாகவும், 90-களின் தொடக்கத்தில் இருந்த நிலையில் இருந்து பெருத்த முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கிறது.



வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று விளம்பரத்தப்படும் குஜராத்தின் நிலைமை கல்வி மற்றும் எழுத்தறிவில் பின்தங்கியே உள்ளது.2000-2008க்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்டோர், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் கல்வி குறியீட்டில் 7 ஆவது இடத்திலயே உள்ளது. அத்தோடு எதாவது ஒரு கல்வி நிலையத்திற்காவது செல்லும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் கல்வி குறியீட்டில் 26 இடத்திலேயே உள்ளது இந்த வளர்ச்சியின் சொர்க்க பூமி.


சுகாதார தளத்தைப் பொறுத்த வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் எடை குறைந்து இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறியீட்டில் இந்திய சராசரியைவிட சொற்ப புள்ளிகளில் முன்னிருக்கிறது.இந்த குறியீட்டில் குஜராத் ஆண்களுக்கான வரிசையில் 11வது இடத்திலும், பெண்களுக்கான வரிசையில் 12 வது இடத்திலும் உள்ளது. இதைப் பற்றி பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்குத்தான் "குஜராத் பெண்கள் டயட்டில் இருந்து அழகை பராமரிக்க எண்ணுவதாக " மோடி குறிப்பிட்டார்.

இவ்வாறு தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கொடுக்க போலியான விளம்பரங்களும், சமூக வளர்ச்சி பற்றிக் கவலைப்படாத போக்கும்தான் குஜராத் பாணி வளர்ச்சி போலும். 1990 -களுக்குப் பிறகு உண்டான வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் பரவலாக மக்களைச் சென்றடையாத நிலையில், 120 கோடி மக்கள்தொகையில் ஒரு சொற்ப பிரிவினரை மட்டும் கருத்தில் கொண்டு வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்பது போலி விளம்பரமே அன்றி வேறன்று. இவ்வாறாக வெளிச்சம் பாய்ச்சப்படும் வளர்ச்சி வெறும் வீக்கமே.


வளர்ச்சி தவிர மோடியை முன்னிறுத்த சொல்லப்படும் இன்னொரு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஊழலற்ற நிர்வாகம். இப்படி சொல்லி அவர் மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தில் எதையெல்லாம் மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

2009-11 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் லஞ்சம், ஊழல், அதிகார விதிமீறல்கள் முதலியவற்றால் குஜராத் மாநில அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய். குஜராத்தில் செயல்பட்டு வரும் அதானி குழுமத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையில் இன்னும் 160 கோடி ரூபாய் குஜராத் மாநில அரசால் வசூலிக்கப்படாமல் அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பிரதிபலனாகத்தான் அதானி குழுமம் அமெரிக்காவிலுள்ள வார்டான் பல்கலைக்கழகத்தில் மோடியை முன்னிறுத்தி ஒரு கூட்ட அமர்வை நடத்த முன்வந்தது.





ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயு தொடர்பான ஒப்பந்தத்தில் 52.27 கோடி இந்திய ரூபாய் அளவு குஜராத் அரசிடம் இருந்து ஆதாயம் பெற்றுள்ளது.

லார்சென் & டூப்ரோ நிறுவனத்திற்கு நீராவி உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பதற்கான ஆலை அமைக்கும் இடத்தை மாநில நிலமதிப்பீட்டு ஆணையம் நிர்ணயித்த விலையான சதுர மீட்டருக்கு 2020 ரூபாய் என்பதைப் புறந்தள்ளி, மாவட்ட நில மதிப்பீட்டு அளவான 1050 சதுர மீட்டரை வெறும் 1000 ரூபாய்க்கு விற்று மாநில அரசுக்கு 128.71 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினர்.


இதே போல், எஸ்ஸார் இரும்பு நிறுவனத்திற்கு 238.50 கோடி ரூபாய் ஆதாயம் அளிக்கும் வகையில் நில மதிப்பீட்டு அளவில் உதவி செய்தது மோடியின் குஜராத் அரசு.அலைக்கற்றை ஊழலை வெளியே கொண்டுவந்த தலைமைத் தணிக்கை கணக்காளர் அறிக்கைதான் இந்த இழப்புகளையும் வெளியே கொண்டு வந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட டாட்டா நானோ தொழிற்சாலை 2000 கோடி மூலதனத்தோடு குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு குஜராத் அரசால் கொடுக்கப்பட்டுள்ள மானியம் 30000 கோடி ரூபாய்.இதில் 9750 கோடி ரூபாயை வெறும் 0.1% வட்டிக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட இன்னும் எட்டப்படாத ஒரு நாட்டில் லட்ச ரூபாய் விலையுள்ள ஒரு கார் தயாரிப்பதற்கான மானியமாக 60000 ரூபாய் கொடுக்கப்பட்டதிலேயே மோடி தலைமையிலான அரசு யாருக்காக செயல்படுகிறது என்பது தெளிவாகும்.

ஊழல் என்பது தங்களது கொள்கை முடிவுகளையோ அல்லது விதிகளையோ ஒரு சாராருக்கு சாதகமாக மாற்றி கையூட்டு/ஆதாயம் பெறுவது மட்டுமன்று, தனியார் பெருமுதலாளிகளுக்கு ஏதுவாக செயல்பட்டு மக்கள் வரிப்பணத்தை மானியமாக வாரி இறைத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதும் ஊழலே. இவைதான் வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நிர்வாகம் என்கிற விளம்பர வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படுபவை.

இதனால்தான் தனியார் பெருமுதலாளிகளும், ஊடகங்களும் மோடியைக் கொண்டாடுகிறார்கள். முழுச் சாப்பாட்டிலிருந்து நாம் எப்படி துரித உணவங்களை நோக்கிச் சென்றோமோ, கிரிக்கெட்டில் எப்படி திராவிடும், சச்சினையும் முந்திக் கொண்டு அதிரடியாக ஆடும் டோனி வந்தாரோ, அதே போல தனியார் பெருமுதலாளிகளுக்கு ஏதுவாக செயல்பட்டாலும், மெதுவாக செயல்படும் இப்போதிருக்கும் காங்கிரசு அரசுக்கு மாற்றாக அதிரடியாகவும், சர்வாதிகாரப் போக்குடனும் முடிவுகளைத் துரிதமாக எடுக்கும் நரேந்திர மோடியை முன்னிறுத்துகின்றனர்.

காங்கிரசு கட்சியால் இனி ஒருபோதும் வளர்ச்சி என்கிற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள முடியாது, அதே போலத்தான், பா.ஜ.க-வால் மதச்சார்பின்மை என்ற அரிதாரத்தைப் பூசிக் கொள்ளவே முடியாது. ஆனால், பல்வேறு பிரச்சாரங்களின் மூலம் காங்கிரசு எவ்வாறு மதச்சார்பின்மை என்ற அரிதாரம் பூசியுள்ளதோ, அதே முறையையே பா.ஜ.க தன்னுடைய இந்துத்துவ முகத்தை மறைத்து வளர்ச்சி என்பதைப் பூசிக்கொள்ள முயற்சித்து மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.



- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

நன்றி. கேலிச்சித்திர கலைஞர்.பாலா, themadeconomy.blogspot.com

2 comments:

  1. வாய்மையே வெல்லும் . வாழ்த்துக்கள் கதிரவன்

    ReplyDelete