Saturday, June 21, 2014

இந்தி... இந்து... இந்தியா!


26,செப்டம்பர் 2013 அன்று பாரதிய சனதா கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசிய இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியில் உரையாற்றினார். ஒன்று அவருடைய தாய்மொழியான குஜராத்தியில் பேசியிருக்க வேண்டும் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இந்தியில் உரையாற்றியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

அன்று நாம் யாரும் மோடி இந்தியில் உரையாற்றியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் நீட்சிதான் இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி விருப்பத்தின் பேரில், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிடும் இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்தியையே பயன்படுத்த வேண்டும் என்று வந்திருக்கும் உத்தரவு.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்கூட,"பிரதம அமைச்சரான நரேந்திர மோடி வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளில் கூட இந்தியில்தான் உரையாடுகிறார்" என்பதுதான்.

முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர் அழகிரி(தி.மு.க) ஆங்கிலம் தெரியாமல், நாடாளுமன்றத்தில் உரையாட முடியாமல் போன போது, உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலம் தெரியாத தற்குறிகள் என்று எள்ளி நகையாடிய கார்ப்பரேட் ஊடகங்கள், இன்று ஆங்கிலம் தெரியாத மோடி ஹிந்தி பேசுகிறார் என்று பெருமை பேசுகின்றன.


இந்திய அரசின் ஊழியர்கள் தங்கள் அலுவல் மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கான சுற்றறிக்கையை மே மாதம் 27 ஆம் தேதி கொடுத்தது அலுவல் மொழிக்கான துறை. எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதோ சூன் 17ஆம் தேதி தான். ஆனால், இதற்கு முன்னரே என்டிடிவி(NDTV) என்னும் வட இந்திய ஊடகம் 14 சூன் அன்றே, அலுவலக மொழி குறித்த விவாதத்தை நடத்தியது. அப்படியானால், அரசின் உத்தரவை முன்னரே அறிந்து மக்களின் எண்ணங்களை அதற்கேற்றாற் போலக் கட்டமைக்கும் வேலையையே ஊடகங்கள் செய்துள்ளன. இவ்வாறுதான், சனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக செயல்படுகின்றன.

நரேந்திர மோடி மட்டுமல்ல,கட்சி பாகுபாடுகள் இன்றி  இந்திய ஆளும் வர்க்கம்  முழுக்க என்றுமே தேசிய இனங்களின் உரிமைகள் பற்றியும், அவர்களின் பண்பாடு பற்றியும் சிறிதும் சட்டை செய்ததில்லை. அத்தோடு தேசிய இனங்களின் மீது தொடர்ந்து பாகுபாடு காட்டுவதோடு, ஒடுக்கவும் செய்து வருகின்றது.

இந்தித் திணிப்பை எதிர்த்து பல போராட்டங்கள் தமிழகத்திலும், மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு காலகட்டம் சார்ந்ததாக அல்லாமல், எப்போதெல்லாம் இந்திய ஒன்றிய அரசு இந்தித் திணிப்புக்கு வழி கோலும் திட்டங்களைக் கொண்டு வருகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்தே வருகின்றது என்பது வரலாறு. இந்தித் திணிப்பைச் செய்வதில் ஆளும் பாரதிய சனதா மற்றும் காங்கிரசு இடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை.

சமூக வலைத்தளங்களில் தானே இந்தியைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள், அதில் என்ன சிக்கல் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். இந்தி பேசும் மக்கள் சமூக வலைத் தளங்களில் தங்கள் இடுகைகளை இந்தியில் பதிவது என்பது வேறு; இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் பதிவது என்பது வேறு. ஏனெனில், இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த மக்களுடனான தொடர்பு பாதிக்கப்படும் என்பதோடு, காலப்போக்கில் இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் மட்டும் தான் இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்துவர் என்பது உருவாகும்.

இங்கு இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் என்று குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், வட இந்தியாவில் , பீகாரி, ராஜஸ்தானி, போஜ்புரி, ஜார்க்கண்டி, சத்தீஸ்கரி போன்ற பல பிரதேச  மொழிகளைத்தான் இந்தி என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருகிறார்கள். அத்தோடு இந்த மாநிலங்களில் எல்லாம் இந்தியை பாடத்தில் கற்றவர்கள் மட்டும்தான் அரசு சொல்லும் இந்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

"வளர்ச்சிதான் நோக்கம்", "வளர்ச்சியை நோக்கிய பயணம்" என்று மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆயிரம் இருந்தும், இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறது.
தொடருந்து பயணக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு என்கிற பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த உத்தரவு என்பது நேரடிக் காரணம்.

இந்தியைத் தூக்கிக் கொண்டு நரேந்திர மோடியின் பாரதிய சனதா வருவதற்கான மிக முக்கியமான மறைமுகக் காரணம் என்பது அதன் இந்துத்துவக் கோட்பாட்டோடு தொடர்புடையது. உதாரணமாக, இந்தச் செய்தியை வெளியிட்ட "தி எகனாமிக் டைம்ஸ்" நாளிதழ் இதற்கு கொடுத்து இருந்த தலைப்பு " Home Ministry Asks Babus to Use Hindi on Social Networking Sites" என்பதாகும். இத்தலைப்பில் உள்ள "BABUS" என்கிற சொல்லுக்கான பொருள் என்பதை ஆங்கில அகராதியான மெர்ரியம் வெப்ஸ்டெர் (Merriam Webster) இணைய அகராதியில் தேடிய போது கிடைத்த முதல் பொருள், " எ ஹிந்து ஜென்டில்மென்" என்பதாகும்.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை எதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தியது என்பது தெரியவில்லை. ஆனால், ஆளும் பாரதிய சனதா கட்சியையும், ஆர்.எஸ்.எஸ் -சையும்  வைத்துக் கொண்டு பார்க்கும் போது, "இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்தி பேசும் இந்துக்கள்" என்கிற பொய்யைக் கட்டமைக்கும் இந்துத்துவ சனாதனக் கோட்பாடே இந்த ஆட்சியை இயக்குகிறது என்பது கண்கூடு.

நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்க, தேசிய இனங்களின் மீது இந்தியை திணிப்பது என்பது இந்தியாவின் பன்முகத் தன்மையைக் குலைக்கும் செயல்.இதை எதிர்த்து போராட வேண்டியது சனநாயக ஆற்றல்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

உருது மொழியை, வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் மீது திணித்ததே,பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் போராடிப் பிரிந்ததற்கான காரணம். இலங்கையில் சிங்கள மொழியை அங்கு வாழும், ஈழத்தமிழ் மக்களின் மீது திணித்த போது, கொல்வின் டி சில்வா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார், " ஒரு மொழி என்றால் இரு நாடு; இரு மொழி என்றால் ஒரு நாடு". இந்த சான்றுகள் வங்கதேசத்திற்கும், இலங்கைக்கும் மட்டுமல்ல; இந்தியாவிற்கும் பொருந்தும்.

இந்திய நாடு என்பது பல மொழி பேசும், பல்வேறு தேசிய இன மக்களை உள்ளடக்கிய ஒன்றியம், இதனை மீறி இந்தியைத் திணிப்பது என்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை உடைக்கும் என்பதே உண்மை.

கதிரவன்


Friday, June 20, 2014

ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் வேண்டும்! - ஐ பி எம்

கடந்த சூன் 9 ஆம் நாள் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்(IBM) ஒப்பந்தப் பணியாளர்களை(Contract Workers) வேலைக்கு அமர்த்துவதில் முதலிடத்தில் இருப்பதாகவும், 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை செலவிடுவதாகவும் தகவல் இருந்தது. ஐபிஎம்-மிற்கு அடுத்தபடியாக ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்களும் பட்டியிலடப்பட்டு இருந்தன.ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 15 விழுக்காடு அளவிற்கு ஒப்பந்தப் பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. அப்படியானால்  நிரந்தர ஊழியர்களில் 15 விழுக்காட்டினரை  பல்வேறு வழிகளில் காரணங்களைக் காட்டி பணி நீக்கம் செய்யும் என்பதே இதன் பொருள்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான், தன்னுடைய நிதிநிலை சரியில்லை என்றும், இலாப அளவு சரிகிறது என்றும் கூறி "வளங்களுக்கான செயல்பாடு" என்கிற பெயரில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஐபிஎம் நிறுவனம்.ஆனால், அதே நிறுவனம்தான் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்துவதில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது.மற்ற நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்பந்தப் பணியாளர்களை நோக்கி தங்கள் முதலீடுகளை செய்வதற்கான முக்கிய காரணம், குறைந்த செலவில் கொழுத்த இலாபம் மட்டுமே. நிரந்தர ஊழியர்களால் இலாபம் இல்லையா என்றால், அப்படியும் இல்லை. தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களால் அதிகமான இலாபம் என்பதோடு, அவர்களுக்கான மருத்துவக் காப்பீடு(Insurance), ஓய்வூதிய வைப்புப் பணம்(Provident Fund) போன்ற எவற்றையும்,நிறுவனம் தன்னுடைய நிதியிலிருந்து செலவழிக்க வேண்டியதில்லை.தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் எனும் போது ஏனைய நிறுவனத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச  பணி உத்தரவாதமும், சலுகைகளும் அளிக்க வேண்டிய தேவையே இல்லாமல் இருக்கிறது. இதனால்தான், நிறுவனங்கள் பெரிய முதலீட்டை தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் நோக்கி செய்கின்றன. அதுவும் அதிகபட்சம் ஆண்டுக்கு நான்கு லட்சம் இந்திய ரூபாய் ஊதியம் பெரும் இளநிலை பணியாளர்களையே பணிக்கு அமர்த்துகின்றன.


அமெரிக்காவில் உள்ள பணியிடங்களை குறைத்துவிட்டு இந்தியாவில் மட்டும் ஒன்றரை லட்சம் தற்காலிக ஒப்பந்தப் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துகிறது ஐபிஎம். இந்திய உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு அவுட்சோர்சிங்(OUTSOURCING) செய்யப்படும் தகவல் தொழில்நுட்பப் பணிகள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்துதான் வருகின்றன. அதனால் அமெரிக்க பணியிடங்கள் குறைவது என்பது நடைமுறைதான். இதில் விவாதிக்கவோ, அச்சப்படவோ எதுவும் இல்லை என்று சிலர் எண்ணலாம். ஆனால், அண்மைக் காலங்களில் இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களே (மேற்சொன்னவாறு ஐபிஎம் உட்பட)கூட பணி நீக்கம் செய்ததை நினைவில் கொள்ள வேண்டும்.


தங்களது இலாபக் கணக்குகளை எப்போதும் ஏறுமுகமாக வைத்திருக்க எண்ணும் நிறுவனங்கள், கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வரும் புது இளைஞர்களைக் கொண்டும், தற்காலிக ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டும் தங்களுடைய நிரந்தர, வேலை உத்தரவாதம் பெற்ற ஊழியர்களைக் வெளியேற்றுகிறது. இதன் மூலம் தொழிலாளர் சுரண்டலை நிகழ்த்தும் நிறுவனங்கள், தொழிலாளர் அமைப்புரீதியாக ஒருங்கிணைவதையும் திட்டமிட்டே தடுத்து வருகின்றன.

இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்படும் முரண்களைக் நம்முடைய உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைவதற்குறிய  வாய்ப்பாகக் கருதி, இணைந்து செயல்பட வேண்டும்

கதிரவன்

மேலும் படிக்க‌

http://timesofindia.indiatimes.com/tech/jobs/IBM-spends-heavily-on-contract-staffing-in-India/articleshow/36274381.cms

Wednesday, June 18, 2014

இசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..


சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

அனகாரிக தர்மபால சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதம் அந்த தீவில் எவரையும் விட்டுவைக்க வில்லை. அது முதலில் 1915 ஆம் அண்டு சூன் மாதம் கண்டி பகுதி தமிழ் இசுலாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 25 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பின் 1948 க்குப் பிறகு குடியுரிமை, வாக்குரிமை பறிப்பு என்று மலையகத் தமிழர்கள் மீது அரசியல் தாக்குதலும் ஆயுத தாக்குதலும் நடத்தியது. 150 ஆண்டுகளாக, 6 தலைமுறையாக அந்த மண்ணில் உழைத்து அந்தத் தீவை வளமாக்கியவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு துரத்தப்பட்டனர். அந்த மண்ணின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக எண்ணற்ற தாக்குதல்களை நடத்தி திட்டமிட்ட இனக்கொலையைப் புரிந்து வருகின்றது. அதன் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் பெரிய மனிதப் படுகொலைக்கு உள்ளாக்கியது.  தொடரும் இனப்படுகொலைக்கு பழியாகிவரும் தமிழர்களுக்கு அரசியல் நீதி கிடைத்திடவும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும் அண்டை நாடான இந்தியாவும், உலக நாடுகளும் இது வரை உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசு மீது எடுக்கவில்லை.


இந்த ஊக்குவிப்பே கடந்த சூன் 15 ஞாயிறு இரவு இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள அளுத்தகம, பேருவளை, தர்கா நகர் உள்ளிட்ட இடங்களில் பெளத்த பல சேனா எனும் சிங்கள பெளத்த அடிப்படை வாதிகளின் அமைப்பு கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளது. காவல்துறை, படையினர் கண் முன்னே இந்த தாக்குதல்கள் நடைபெறுவது இது இலங்கை அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் தாக்குதல் என்பதை நிறுவுகின்றது. இரண்டு நாட்களாக தொடர்ந்த இந்த தாக்குதலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், 80 க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வீடு, உடைமைகளை இழந்து பள்ளிவாசல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


தொடர்ந்து இசுலாமியர் வாழும் இடங்களில் ஊர்வலம் என்ற பெயரில் சிங்களர்கள் ஒன்று கூடி இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய அரசு இந்த தாக்குதல் குறித்து வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்து இலங்கை அரசைக் கண்டிக்காதது இலங்கைக்கு இந்தியா துணை நிற்பதை மீண்டும் நிறுவுகின்றது. எங்கோ இருக்கும் அமெரிக்கா இது குறித்து தன் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கும் நிலையில் கூப்பிடும் தூரத்தில் இருப்பதும், இந்த ப்ராந்தியத்தின் ஆகப் பெரும் ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் இந்தியா இதில் மெளனம் காப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்திய இலங்கை நட்புறவு என்றாலும் சரி இந்தியாவுடன் வேறு எந்த நாட்டுக்கும் இடையேயான நட்புறவாக இருந்தாலும் சரி அது இந்நாட்டு மக்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவாகத் தான் வேண்டுமே  ஒழிய இரு அரசுகளுக்குமிடையேயான உறவாக மட்டும் இருக்க கூடாது.
இந்திய அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு இசுலாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபட்டும், வன்முறையைத் தூண்டியும் வரும் சிங்கள பெளத்த இனவெறியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.  சொத்துக்கள் சூறையாடப்பட்டவர்களுக்கும், வீடு வாசல் இழந்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்குமாறு இலங்கை அரசை அறிவுறுத்துவது மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு நேரடியாக கொழும்பில் உள்ள தூதரகம் மூலமாக வழங்க வேண்டும்.

சிங்களப் பெளத்த பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு கட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது. அது ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமின்றி இன சிக்கலுக்கான தீர்வாக தமிழீழத்தை ஏற்காத ஜனநாயக ஆற்றல்களும் உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று சிங்களப் பெளத்த பேரினவாத அரசைத் தனிமைப்படுத்தும் போராட்டத்தை தொடர்வோமாக.

செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்ஸ் இயக்கம்.
மனித உயிரில் கிரிக்கெட் ஆடும் இந்துத்துவக் கும்பல்!"முதல் விக்கெட் விழுந்துவிட்டது" - இந்த செய்தியை வாசிக்கும் போது, இந்தியாவில் இருக்கும் பெரும்பாலனவரின் நினைவுக்கு வருவது கிரிக்கெட் விளையாட்டுதான். ஆனால், அண்மையில் இந்த வாக்கியம் மிகவும் வன்மம் மிகுந்த வழியில் ஒரு கும்பலால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் பூனேவில், மொஹ்சின் சாதிக் ஷெய்க் என்னும் 28 வயது தகவல் தொழில்நுட்பப் பணியாளர் தன்னுடைய மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு திரும்பும் வழியில் " இந்து ராஷ்டிரா சேனா" என்னும் அமைப்பைச் சார்ந்த இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டு உள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சத்ரபதி சிவாஜி குறித்த முகநூல் இடுகையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே, அதற்கு சற்றும் தொடர்பில்லாத மொஹ்சின் சாதிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மொஹ்சின் சாதிக் படுகொலை செய்யப்பட்டதைத்தான், "முதல் விக்கெட் விழுந்துவிட்டது" என்று வன்மம் நிறைந்த குறுஞ்செய்தியை தங்களுக்குள் பரப்பி தங்களுடைய இந்துத்துவ வெறியை வெளிப்படுத்தியுள்ளனர் "இந்து ராஷ்டிரா அமைப்பினர்".

இந்த முதல் விக்கெட், எப்போது தொடங்கிய ஆட்டத்திற்கான முதல் விக்கெட்?, இவர்களைப் பொறுத்த வரையில் பாசிச பாரதீய சனதா ஆட்சி அமைந்ததில் இருந்து விழுந்திருக்கும் முதல் விக்கெட்டாகவே அவர்கள் மொஹ்சின் சாதிக்கின் கொலையைக் கணக்கிட்டுள்ளனர்.

இந்திய ஆளும் வர்க்கமும், இந்துத்துவக் கொள்கைகளை பின்பற்றும் இயக்கங்களும் மதச் சிறும்பான்மையினரான இசுலாமியர்களை எளிதில் அகற்றப்படக் கூடியவர்கள் என்று எண்ணுகின்றனர். அதே போன்று, வர்க்கப் பிரிவினரில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களாகிய நாம் சமூக அளவில் மிகவும் பலவீனமானவர்களாக உள்ளோம். 


                                           இந்துத்துவ அமைப்பினால் கொல்லப்பட்ட மொஹ்சின் சாதிக் ஷெய்க்


மொஹ்சின் சாதிக்கின் கொலை நம் முன் இரண்டு சவால்களை விடுத்துச் சென்றுள்ளது. முதலாவது, மதச் சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் காழ்ப்புப் பார்வைக்கும், செயல்பாடுகளுக்கும் எதிராக போராடுவது. இரண்டாவது, பல்வேறு சமயங்களில் பல்வேறு தரப்பினரால் தாக்குதலுக்கும், கொலைக்கும் உள்ளாகி வரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைவது.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இசுலாமியர்களை உள்ளடக்கிய  அனைவருக்குமான வளர்ச்சி பற்றியும், பயங்கரவாதத்தைத் தம்முடைய அரசு சகித்துக் கொள்ளாது என்றும் பேசியுள்ளார். பயங்கரவாதம் சகித்துக் கொள்ள முடியாத செயல் என்று கூறும் மோடி முதலில் செயல்பட வேண்டியது இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகத்தான்.
ஆனால், பாரதிய சனதா கட்சியின் பூனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அனில் ஷிரோல், " முகநூல் இடுகைகளின் அவதூறுக்கு எதிர்வினைகள் இருக்கத்தானே செய்யும்?" என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து மொஹ்சின் சாதிக் சித்திக்கின் கொலை யாருடைய ஆசியுடன் நடைபெற்றது என்பதையும், அவர்களின் உள்நோக்கம், திட்டம் எதன் அடிப்படையிலானது என்பதையும் கட்டியம் கூறுகின்றன.

"கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் அடக்குமுறையை ஏவுவதுதான் பாசிசத்தின் ஆதாரப்புள்ளி" - மொஹ்சின் சாதிக்கின் கொலையை வன்மையாக கண்டிப்பதுடன் பா.ச.க-வின் பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

கதிரவன்

Tuesday, June 17, 2014

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு படையெடுக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள்!


வலை போட்டு ”நல்ல பள்ளிகளைத் தேடி அலையும் அவலம்

நாம் படித்த காலத்தில்பெற்றோர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் குழந்தைகளை எங்கு படிக்க வைப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளுக்கே அனுப்புவார்கள்... அதிகம் அந்த பள்ளிகளைத்தான் காண முடியும். மிகக்குறைவாக தனியார் ஆங்கிலவழிக்கல்வி "மெட்ரிகுலேசனாக" இருந்தது...

இன்றைக்கு வேலை எங்கே என்பதைவிட,  அங்கே "நல்ல பள்ளி" இருக்கிறதா என்பதைத்தான் முதலில் பெற்றோர்கள் தேடுகிறார்கள். தூரமாக இருந்தாலும் குழந்தையின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ‘நல்லப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அப்படி என்ன அந்த "நல்ல பள்ளி"என்று பார்த்தோமேயானால்  அது சிபிஎஸ்இ (மத்திய அரசு பொது பாடத்திட்டம்) பள்ளி... அப்படி அதில் என்ன உள்ளதுஅதிகமான கட்டணம், "சாதாரண மக்கள் இன்னமும் பேசிவரும் அடித்தட்டு மக்கள் மொழி"யான‌ தமிழை ஒருபாடமாகக் கூட படிக்கத் தேவையில்லை....


அப்படியென்றால் இது அருமையான "#நல்ல_பள்ளி" தானே

அண்மை காலத்தில் இப்படியான பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்போது வாகன விபத்துகளும்குழந்தைகள் இறப்பும் தொடர் நிகழ்வாக இருக்கின்றனநம்மால் அதை நிறுத்த முடியவில்லைஇன்னமும் மாற்றை நோக்கி சிந்திக்கவும் முன்வரவில்லை.

அடிப்படை பிரச்சனை என்ன?

பெற்றோர்களுக்கு அடிப்படையில் இது பெரிய பிரச்சனையாக தெரிவதில்லை. அப்போதெல்லாம் சாதிப்படி நிலையிலும்பொருளாதாரத்திலும் கீழடுக்கிலிருந்த‌ மக்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள அரசு பள்ளிகளுக்கே பெரும்பாலும் அனுப்பினார்கள்,  அதனால் நடுத்தர வர்க்கத்தினர் பலர் தங்கள் குழந்தைகளை தூரமாக இருந்தாலும் வாகனங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெருமையாக கருதினர்... இப்போது அதே அடித்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளை எப்பாடுபட்டாவது மெட்ரிகுலேசன் பள்ளிக்கு அனுப்பி வருவதாலும்,  தமிழ்வழி பள்ளிகளின் சமச்சீர் பாடத்திட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இருப்பதாலும்நடுத்தர வர்க்கத்தினர் பலர் எவ்வளவு தூரமானலும் சிபிஎஸ்இ பள்ளிகள் நோக்கி படையெடுக்கின்றார்கள். பலரால் இங்கு கேட்கும் கட்டணத்தையும், ”நன்கொடையையும்  கொடுக்க முடியாவிட்டாலும் கடன் வாங்கியாவது இந்த "நல்ல" பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள். ஏன்ஏனென்றால் இங்குதான் குப்பத்து மக்களும்சேரி மக்களும் வரமாட்டார்கள்....

ஒரே வயது குழந்தைகள் இருவருக்கு ஒரே நோய் வந்தால் இப்படித்தான் வேறுவேறு மருந்து கொடுப்பீர்களாநாட்டின் ஒவ்வொரு குழந்தையும் ஏற்றத்தாழ்வான இந்த கல்வி அடுக்குகளால் ஏற்றத்தாழ்வை இயற்கை நியதி என்றுதானே புரிந்துகொள்வார்கள்... ஒரே மாதிரி பிரிவினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் குழந்தைகள் படித்தால் சமூகத்தை பற்றிய பார்வையும் ஒரே பரிமாணத்தில் தான் இருக்கும்பன்முகப்பார்வை இருக்காது... சமுத்துவ தளமாக பள்ளிகள் கூட இல்லையென்றால் எப்படித்தான் இந்நாட்டின் இக்கொடிய நோயை சரிசெய்ய‌ப்போகிறோம்...?

சிபிஎஸ்இ பள்ளியும் குழந்தைகளின் நாகரீகம் பற்றிய விவாதமும்

நீங்கள் அருகில் அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் குப்பத்துசேரி குழந்தைகளின் நாகரீகம் சரியாக இல்லைஅவர்களுடன் நம் பிள்ளைகள் படித்தால் அவர்களும் கெட்டுவிடுவார்கள்அதனால் தான் தொலைதூரத்தில் இருக்கும் சிபிஎஸ்இ நோக்கி போகிறோம் என்று பேசுவீர்களானால்,பலநூறு ஆண்டுகளாக‌ கல்வி மறுக்கப்பட்டு கடந்த சில தலைமுறைகளாக கல்வியின் நிழலை அடைந்த‌ ஒரு நடுத்தரவர்க்க இடைநிலை  சூத்திர சாதி(பிசிஎம்பிசி) குடும்பத்தின் நாகரீக” நிலை முன்னர் எப்படி இருந்தது என்ற வரலாற்றை வசதியாக மறந்துவிடுகிறோம் என்று பொருள்...

கல்வியில் முதல் தலைமுறை - அரசுதமிழ்வழிப்பள்ளி
இரண்டாம் தலைமுறை - தனியார்மெட்ரிகுலேசன் ஆங்கிலவழிப்பள்ளி
மூன்றாம் தலைமுறை - தனியார்சிபிஎஸ்இ ஆங்கிலவழிப்பள்ளி,

அப்படியென்றால் இரண்டு தலைமுறைக்கோஒரு தலைமுறைக்கோ முன்னால் இவர்களின் நாகரீகமென்ன? (கல்லூரிவேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு குறித்த விவாதங்களிலும் முன்னேறிய பிரிவினரின் உளவியலில் இதே மாற்றத்தை பார்க்கலாம்)இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தை சிபிஎஸ்இ கல்வியோடு இந்தியோ சம்ஸ்கிரதமோ ஒரு மொழிப்பாடமாக கற்றால் பெருமை நமக்கு... அப்படி என்ன இது உயர்ந்த நாகரீகம்பண்பாடு?


ஏற்றத்தாழ்வான படிநிலை கல்விமுறை

கல்விமுறையிலும் நான்கு வர்ணங்கள்(பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு அமைப்புமுறை) தெளிவாக உள்ளன...

கேந்திர வித்யாலயாபிஎஸ்பிபிவேல்ஸ்ஐசிஎஸ்இ 
இதர சிபிஎஸ்இ மத்திய அரசு பாடத்திட்டப் பள்ளிகள்
தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்...

"இங்கே எல்லாம் சமமாத்தான இருக்குஎதுக்குங்க இடஒதுக்கீடு?" என்று கேள்வி கேட்கும் இந்த முதல் இரண்டில் படித்து வந்தவர்கள்கல்வியில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வான வேறுபாட்டைக் கண்டு என்றும் பொங்கியதில்லைஏனென்றால் ..டி..எம் போன்ற உயர் கல்விக்கூடங்களில் படிப்புஐஏஎஸ்ஐஎஃப்எஸ் போன்ற உயர்ந்த பதவிகளில் வேலைபெரும்பாலும் வெளிநாட்டு வேலைஉள்நாட்டு பெருநிறுவனங்களில் வேலை என இதன் மூலம் பயனடைந்துவருபவர்கள் இவர்கள்சிந்தனை முறையும் சமூகம் குறித்த பார்வையும் ஒரு பரிமாணத்தில் தான் இவர்களுக்கு இருக்கும்அனைவருக்குமான வளர்ச்சிஒட்டுமொத்த சமூகத்திற்கான முன்னேற்றம் பற்றி சிந்திக்க இவர்களால் முடிவதில்லைஇதுதான் நாம் முன்வைக்கும் இந்த கல்விமுறையின் கோளாறு.

கிடப்பில் போடப்பட்டுள்ள அரசின் சீர்திருத்தங்கள்

இந்த உயர்தட்டு தனியார் பள்ளிகளில் அருகாமையில் இருக்கும் ஏழைக்கு 25% இடஒதுக்கீடு என்றத் திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த எந்த பள்ளியும் முன்வரவில்லைதனியார் பள்ளிகளுக்கு துணையாக இருக்கும் அரசும் தை கண்டும் காணாதது போல் இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைபடுத்த அரசு அமைத்த ஆணையத்தின் பரிந்துரையை அரசே கண்டுகொள்வதில்லை...

கல்விமுறையின் சிக்கலுக்கு தீர்வென்ன?

தெல்லாம் இல்லைநாங்கள் பார்ப்பது பள்ளியின் தரம்குழந்தைகளின் எதிர்காலம்வேலைவாய்ப்பு தான் என்பதெல்லாம் வெற்றுப்பேச்சிதான்... இவைகளை புறக்கணிக்க சொல்லவில்லைஅதே நேரத்தில் மாற்று இந்த படிநிலைக் கல்விமுறை இல்லை என்கிறோம்... ஏட்டில் மட்டுமில்லாது உண்மையான சமத்துவ சமூகத்தை நோக்கி நாம் செல்ல வேண்டுமென்றால் இது போன்ற எழுவகை கல்வித்திட்டங்களுடன் கூடிய நால்வர்ணப் படிநிலை கல்விமுறை ஒழிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படவேண்டும்.

கல்வியாளர் வசந்தி தேவி அவர்கள் ’தி இந்து’ வில்(சூன் 3) எழுதிய “தேவைதானா தூரத்து பள்ளிக்கூடங்கள்” என்ற கட்டுரையில் இன்னொரு தீர்வையும் முன்வைக்கிறார்அருகில் அமைந்துள்ள(அருகமைபள்ளிகளில் அனைத்து குழந்தைகளையும் சேர்ப்பதன் மூலம் சாதிவர்க்க பாகுபாடற்ற தளமாக பள்ளிகள் திகழும்சிறந்த கல்வியும் ஆற்றல் பெறுவதற்கான சம வாய்ப்பும் கிடைக்கும் என்கிறார்மேலும் வாகன விபத்துகள் குறைந்து குழந்தைகள் பாதுகாப்பாக கூடி ஓடி விளையாடி மகிழ்வாக வளர்வார்கள்பள்ளி வாகனங்களோடுவசதிபடைத்தவர்கள் தனித்தனியாக ஏற்றிச்செல்லும் வாகன்ங்களையும் குறைத்தால் எரிபொருள் மிச்சமாகும் (தமிழ்நாட்டில் 36,389 பள்ளி வாகனங்கள் இயக்கப் படுகின்றன என்று தமிழக அரசு அறிக்கை ஒன்று சொல்லுகிறது), அது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும்குரலற்றசமூகத்தில் சக்தியற்றவர்களின் குழந்தைகளே இந்த அருகமை அரசு பள்ளிகளில் படிப்பதால் தான் அவைகள் தரமற்று மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனஅதே பள்ளிகளில் வசதியும் அதிகாரமும் மிக்கவர்களின் குழந்தைகள் படித்தால் அந்த நிலை மாறி தரமிக்க பள்ளிகளாகும்.தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்கும் என்று அருகமை பள்ளிகளில் அனைத்து குழந்தைகளையும் சேர்ப்பதால் கிடைக்கும் பல்வேறு பலன்களை பட்டியிலிட்டுள்ளார்.

இதுவரை வந்த எந்த தமிழக அரசுகளும் இதற்கு ஏன் தீர்வு காணவில்லை?

தாய்மொழித் தமிழை அழித்து இந்திய அரசு செய்த‌ இந்திமொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியல் கட்சியின் தவப்புதல்வர்களே இன்று ஏராளமான தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் வைத்திருக்கும் முதலாளிகள், 500க்கு மேல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியவர்களும் இவர்களே.... ஒரு புறம் சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்த திமுக‌மறுபுறம் சி.பி.எஸ்.இ பள்ளிகளைக் கண்மூடித்தனமாக திறந்து விட்டது.  தெளிவான மாற்றுக் கல்விக் கொள்கை இல்லாமல் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பதை கடந்த காலம் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.  நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்தின் மூலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன் என பேசி வருபவர்களாலும் மாற்றுக்கல்விக் கொள்கையை முன்வைத்து மக்கள் மன்றத்தில் போராடாமல் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

கல்வியிலிருந்து  தனியாரை வெளியேற்றிஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அரசே எல்லாவற்றையும் எடுத்து நடத்த வேண்டும். கல்விமருத்துவம் போன்றவற்றை மட்டுமே எடுத்து நடத்த வேண்டிய அரசுமதுக்கடைகளை நடத்தி வருகின்றது. இந்த நிலை மாறவேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே கல்வி முறை மட்டுமே இருக்க வேண்டும். அருகமை பள்ளிகளுக்கு அனைத்து குழந்தைகளையும் அனுப்ப அரசே வலியுறுத்தி/சட்டமியற்றி அதை நடைமுறைபடுத்த வேண்டும்நமது தேசத்தின் இளம் தலைமுறையினர் அறிவுப்பூர்வமாக இந்த தேசத்தை வளர்த்தெடுக்க தற்போதைய கல்விமுறையில் மாற்றம் அவசியம் தேவை. அது சமூக மாற்றத்திற்குமுன்னேற்றத்திற்கு துணை செய்யும். அதற்காக‌ இணைந்து போராடுவோம்.


ஸ்நாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.


பி.கு: இந்த கட்டுரை ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழிவழிக்கல்வியின் தேவை குறித்தோதாய்மொழித் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட காட்டாய படுத்தக்கூடாது என்ற பெற்றோர் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் போட்டுள்ள வழக்கு பற்றியோ பேசவில்லை. விரைவில் அவைகளைப் பற்றியும் விவாதிப்போம்.

Friday, June 13, 2014

Green Peaceம் , PUCLம் தேச பக்தர்களா? அன்னிய கைக்கூலிகளா?......          இந்திய உளவுத்துறை(Intelligence Bureau) பிரதமருக்கு அனுப்பிய அறிக்கையில் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராக Green Peace  போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளும், Amnesty International, Action Aid  போன்ற மனித உரிமை அமைப்புகளும் செயல்பட்டு வருவதாகவும், இவர்களுக்கு அன்னிய நாட்டிலிருந்து பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இவ்வமைப்புகள் இங்குள்ள மக்கள் சிவில் உரிமை அமைப்பு (PUCL), நர்மதை அணையெதிர்ப்பியக்கம் போன்ற அமைப்புகள் மூலம் செயல்பட்டு வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளது.  இவ்வறிக்கையில் சில பகுதிகள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.  உளவுத்துறை பிரதமருக்கு அனுப்பிய ஒரு அறிக்கை எப்படி ஊடகங்களுக்கு அதே நாளே கிடைக்கும் நிலையில் தான் உளவுத்துறை அறிக்கைகளின் இரகசியத்தன்மை இந்த நாட்டில் கட்டிகாக்கப்படுகின்றது.  சில நேரங்களில் இது போன்ற அறிக்கைகள் ஊடகங்களின் செய்திகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது போல் இருக்கும். சனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்க வேண்டிய ஊடக‌ங்களில், பெரும்பான்மையான ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகவே பல நேரங்களில் செயல்பட்டுவருகின்றன.

 
       சரி, அன்னிய கைக்கூலிகள் கதைக்கு வருவோம்... உளவுத்துறை கூறியபடி இந்திய நாட்டின் வளர்ச்சியை அவர்கள் எப்படி தடுத்தார்கள் எனப்பார்ப்போம்...  சுற்றுச்சூழல் அமைப்புகள் நாட்டிலுள்ள நிலக்கரி, அணு உலை மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எதிராக போராடிவருகின்றன, அதனால் நாட்டின் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டு இதன் மூலம் பொருட்கள் உற்பத்தி குறைந்து வளர்ச்சி குறைகின்றது... சரி அப்படி சுற்றுச்சூழல் அமைப்புகள் போராடி இதுவரை எத்தனை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை நிறுத்தியிருக்கின்றார்கள் என்றால் அதற்கு பதில் சுழியம்..  அணு உலை எதிர்ப்பு போராட்டங்களும் அப்படியே, என்ன தான் மக்கள் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடத்தினாலும், அரசு காவல்துறை மூலம் வன்முறையை ஏவி அணு உலைப்பணிகளை தொடர்ந்தது தானே இங்கு வரலாறு.... சரி அப்படி துவங்கியதாக சொல்லப்பட்ட அணு உலையிலிருந்து மின்சாரம் வருகின்றதா என்றால் வரும் ஆனா வராது என்ற பதிலே எஞ்சியுள்ளது. 
     அடுத்து மனித உரிமை அமைப்புகள் கதைக்கு செல்வோம்.... மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டினால் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாம். இந்த மனித உரிமை அமைப்புகள் பழங்குடி இன மக்களின் உரிமைக்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக‌வும், தீவிரவாதிகளாக கருதப்படுபவர்களுக்காகவும் போராடுகின்றனர்,  இதனால் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  இவ்வ‌றிக்கை மூலம் உளவுத்துறை சொல்லவரும் கருத்து  இது தான் ... சத்தீஸ்கர் உள்ளிட்ட மத்திய மாநிலங்களில் சுரங்கங்களினால் வாழ்வாதாரம் இழந்து போராடும் பழங்குடி இன மக்களை அரசு ஒடுக்கிவருகின்றது, இதை யாரும் தடுக்கக்கூடாது. அதே போல பழங்குடி மக்களின் சுகாதாரத்திற்காக உழைத்த பினாயக் சென் உள்ளிட்டோர் மீது  நாங்கள் குற்றம் சாட்டினால் அவர்கள் அனைவரும் குற்றவாளிகளே அவர்களுக்கென்று எந்த உரிமையும் இல்லை.  அதே போல உளவுத்துறையும், காவல்துறையும் குற்றம் சாட்டும் அனைவரும் தீவிரவாதிகளே அவர்களுக்கென்று எந்த உரிமையும் இல்லை.  ஒருவரியில் சொல்வதானால் அரசியல் சாசனப்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடும், போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் யாருக்கும் செல்லப்படியாகாது.  அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு வாழுங்கள், இல்லையென்றால் சிறைச்சாலையில் வாடுங்கள்.....

    இந்திய நாடாளுமன்ற விவாதத்திற்கே வராமல் அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதை நாடாளுமன்றத்தில் கண்துடைப்பிற்காக விவாதம் செய்ய பல கோடி ரூபாய்களை இறைத்தது இந்த அன்னிய கைக்கூலி அரசு, அதே போல 4 கோடிக்கும் அதிகமான மக்கள் நடுரோட்டிற்கு வந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு அன்னிய முதலாளிகளின் நலனே முக்கியம் என்று சில்லறை வணிகத்திலும்,  இந்திய மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இராணுவத்தில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக‌ அன்னிய முதலீட்டை திணித்த இந்த அன்னிய கைக்கூலி அரசு, இந்த மக்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக போராடுபவர்களையும், அதற்கு துணை நிற்கும் அமைப்புகளையும் அன்னிய கைக்கூலி என்று கூறுவதை கேட்டு சிரிப்பதா, அழுவதா எனத்தெரியவில்லை... அடுத்த முக்கியமான புளுகு அன்னிய நாட்டு பணம் மூலம் தான் இவர்கள் போராடுகின்றார்கள் என்பது, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள இந்த அரசு அப்படி அன்னிய நாட்டு பணம் வருகின்றது என்றால் அதை தகுந்த ஆதாரங்களோடு வெளியிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, அதைவிடுத்து டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான் என்று சிறுபிள்ளைப் போல கோள் மூட்டுவது ஏன்????

 

      அரசு, அதன் திட்டங்கள், சட்டங்கள் அதை எதிர்த்து யாரும் எதுவும் பேசக்கூடாது,  போராடக்கூடாது, அப்படி செய்தால் அவர்கள் அனைவரும் தேசத்துரோகிகளே, அன்னிய கைக்கூலிகளே, அவர்களுக்கென்ற எந்த அடிப்படை உரிமையும் இல்லை. அரசையும், அதன்  கொள்கையையும் ஆதரிப்பவர்களுக்கு மட்டுமே கருத்துரிமை, மற்றவர்களுக்கு எதுவுமில்லை என்பதே இந்த உளவுத்துறையின் அறிக்கை....  இதன் பெயர் சனநாயகமல்ல, சர்வாதிகாரம்.  தேர்தல் திருவிழாவில் பங்கு கொள்வது மட்டுமல்ல சனநாயகத்தில் மக்களின் கடமை, அரசு ஒரு சிறுபான்மை முதலாளிகள் கூட்டத்தின் நலன்களுக்காக, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் போது அதை எதிர்ப்பதும் மக்களின் கடமை தான்...

சனநாயகத்தை காக்க ஒன்றிணைவோம்... தொடர்ந்து  போராடுவோம்.......

நற்றமிழன்.ப‌

தரவுகள்...Thursday, June 12, 2014

கால்பந்தை திருப்பி உதைக்கும் பிரேசில் மக்கள்!


2014-உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்னும் சில மணிநேரங்களில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரத்தில் தொடங்கவிருக்கிறது. கால்பந்து என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வரும் பிரேசில் நாட்டில்தான் இந்தமுறை உலகக் கோப்பை போட்டி நடக்கவிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிகளை FIFA எனப்படும் உலகக் கால்பந்து சம்மேளனம் நடத்துகிறது. வழமையாக, வேறு நாடுகளில் நடக்கும் போது தங்களுடைய வீட்டின் சுவர்களிலும், தெருக்களிலும் வண்ணம் பூசி கோலாகலமாகக் கொண்டாடி வந்த பிரேசில் நாட்டு மக்கள், இந்த முறை அந்த நாட்டு அரசுக்கு எதிராகவும், மக்கள் வரிப் பணத்தை விழுங்கும் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கும் எதிராகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.மக்களின் அடிப்படைத் தேவைகள் , தொழிலாளர் உரிமைகள், ஊழல் எதிர்ப்பு, அரசின் மேட்டுக்குடிப் பாசம் ஆகிய காரணங்களே மக்களின் இந்தப் போராட்டத்திற்கு அடிப்படை.

எப்பாடுப்பட்டலும் அம்பலம் ஏற்ற முடியாத தங்களின் சொற்களை, உலகக் கால்பந்து போட்டிகளுக்குக் கிடைக்கும் வெளிச்சத்திலாவது இந்த உலகம் உற்று பார்க்கட்டும் என்றே பிரேசில் நாட்டு ஏழை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்படும் மைதானங்கள் போட்டிகள் முடிந்த பின்பு கேட்பாரற்று கிடப்பது என்பது நாம் அறிந்ததே. பிரேசிலிலும் பல ஆயிரம் கோடிகள் செலவில் புது மைதானங்கள் கட்டப்பட்டும், பழைய மைதானங்கள் புதுபிக்கப்பட்டும் வருகின்றன.

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாத ஏழை நாடான பிரேசிலில், இந்திய மதிப்பில் 65000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்து கால்பந்து போட்டிகள் தேவையா என்பதே மக்களின் முழக்கம்.
இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகிய அனைத்து உழைக்கும் வர்க்க மக்களும் முன்னின்று போராட்டத்தை நடத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு எதிரான இந்தப் போராட்டங்களுடன் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டங்களும் வெடித்துள்ளது.

காமன்வெல்த் அமைப்பில் தன்னுடைய பிடிப்பைக் காட்டிக்கொள்ள எப்படிக் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்திய அரசு நடத்தியதோ, அதே போன்று தான் பிரேசில் இந்தக் கால்பந்து உலகக் கோப்பையையும், 2016-ல் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்துகிறது. காமன்வெல்த் போட்டிகளை இந்திய அரசு நடத்திய லட்சணம் நாம் யாவரும் அறிந்ததே. இப்போது நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான தயாரிப்புகளில் நடைபெற்ற ஊழலும்,அதற்கு தண்ணீராக செலவிடப்படும் மக்கள் பணமும், 2016-ல் நடத்தப் போகும் ஒலிம்பிக் போட்டிகளும் பிரேசில் மக்களை சினந்து எழச் செய்துள்ளது."உணவுக்கே அல்லல்படும் எங்களுக்கு உலகக் கோப்பை கால்பந்து தேவையில்லை", " நெய்மரை (பிரேசில் கால்பந்து வீரர்) விட இங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பானவர்கள்", " பிபா-வே (FIFA) திரும்பிப் போ" என்று பிரேசில் தெருக்களில் மக்கள் முழங்குகிறார்கள்.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் சொல்லும் அதிமேதாவிகள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், " இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் முதல்நாள் தொடக்க ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டுகளில் வெறும் 40 விழுக்காடு மட்டும் ரசிகர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 60 விழுக்காடு நுழைவுச் சீட்டோ வர்த்தக நிறுவனங்களின் வியாபர நலன்களுக்காகவும், உலகப் பிரபலங்களுக்கும் விற்கப்பட்டுள்ளது".
1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணியில் விளையாடிய ரொமாரியோ, " மக்கள் இன்றும் கால்பந்தை நேசிக்கிறார்கள், ஆனால் அடிப்படைத் தேவைகள், மருத்துவம், விலைவாசி உயர்வு என்று வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தராமல், கால்பந்து போட்டிகளுக்காக வாரி இறைக்கப்படும் பணம், அதில் நடக்கும் ஊழல் ஆகியவற்றை எதிர்த்தே போராடுகிறார்கள்.இந்த சூழ்நிலையில் நாங்கள் அப்படித்தான் சிந்திக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.இந்த மக்களின் போராட்டங்களைத் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகள் என்று அடக்குமுறைகளை ஏவி ஒடுக்கும் பிரேசில் அரசு, போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகில் வசித்துவரும் ஏழை மக்களையும், பூர்வக்குடி மக்களையும் வெளியேற்றி வருகிறது.
கால்பந்து விளையாட்டைத் தாங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகப் பார்த்த மக்கள் இன்று தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளை எதிர்த்து போராடி வருகின்றனர். மக்களைக் காக்க வேண்டிய அரசோ, கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து கொண்டு மக்களின் உரிமைக் குரலை ஒடுக்குகிறது.


விறுவிறுப்பான கால்பந்து போட்டிகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தை விட, முக்கியமானது பிரேசில் மக்களின் போராட்டங்கள். பிரேசில் கால்பந்து அணியின் உலகக் கோப்பை வெற்றியைவிட, பிரேசில் மக்களின் போராட்டங்கள் வெற்றி பெறுவதே காலத்தின் தேவை.

கதிரவன்

Monday, June 9, 2014

கூடங்குளம் ஆயிரம் மெகாவாட் புளுகும், ஊழலும்......
      நேற்று (சூன் 9 2014) அன்று வெளிவந்த பெரும்பான்மையான நாளிதழ்களில் பின்வரும் செய்தி வெளியாகியிருந்தது. "சாதித்தது கூடங்குளம், 1000 மெகாவாட் மின்னுற்பத்தியை எட்டியது கூடங்குளம்"(1,2).  சென்ற வாரம் தான் கூடங்குளம் மின்னுற்பத்தி தொடர்பாக "அதோ வந்துவிட்டார்..... இதோ வந்துவிட்டார்....." என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்த எனக்கு இச்செய்தி எந்த அதிர்ச்சியுமளிக்கவில்லை... அக்கட்டுரையில் நாங்கள் எழுப்பியிருந்த எந்த கேள்விக்கும், இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. ஒரு கேள்விக்கு பாதி பதிலை மட்டும் கூடங்குளம் அணு உலை வளாக இயக்குநர்.சுந்தர் பதிலளித்துள்ளார்.  கேள்வி இது தான்...

1) ஊடங்கள், அணு உலை நிர்வாகக் கூற்றுப்படி இதுவரை கூடங்குளத்தில் உற்பத்தியான மின்சாரம் எங்கே?

சுந்தர் - "கூடங்குளத்தில் உற்பத்தியான 1000 மெகாவாட் மின்சாரம் திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள பவர் கிரிட் நிறுவனத்துக்குச் சென்றது. இங்கிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் இணைப்பு உள்ளதால், மின்சாரம் எங்கு சென்றது என்பதை எங்களால் கணிக்க முடியாது. பெங்களூருவில் உள்ள மண்டலக் கட்டுப்பாட்டு அலுவலகம்தான் இதனைக் கண்காணிக்கும். இருப்பினும், தமிழகத்துக்குதான் அதிக மெகாவாட் அளவில் மின்சாரம் வழங்கப்படும். எஞ்சியவை ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பகுதிக்குச் சென்றிருக்கலாம்' என பவர்கிரிட் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. (2)சுந்தர் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்றால், நாங்கள் மின்னுற்பத்தி செய்தோம், அதை பவர் கிரிட்டிற்கு கொடுத்தோம், அங்கிருந்து எங்கு சென்றது, யாருக்கு சென்றது என்பது எமக்கு தெரியாது.  ஒரு உற்பத்தியாளராக அவரது பதில்,  சரியான பதிலே. இதைக் கேட்ட ஊடகங்கள் எல்லாம் என்ன செய்திருக்க வேண்டும். பவர் கிரிட்டிடமோ, அல்லது இந்த நான்கு மாநில மின்வாரியங்களிடமோ இது தொடர்பாக கேள்வி எழுப்பி, அந்த பதிலை தங்களது செய்தியறிக்கையில் இணைத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் இந்த பக்கமும் இல்லை, அந்த பக்கமும் இல்லை, நாங்கள் எல்லோரும் நடுநிலை ஊடகங்கள் என்று சொல்லும் எந்த ஒரு ஊடகமும் இந்த பணியைச் செய்யவில்லை. சரி அவர்கள் தான் கேட்கவில்லை, நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பானதே.. எங்களால் அவர்களை தொடர்பு கொண்டு கேட்கமளவிற்கு வசதியில்லாததால், அவர்களது இணையதளத்தில் கிடைத்த செய்தியைச் சொல்கின்றோம். பவர் கிரிட் இணையதளத்தில் என்ன தேடியும், கூடங்குளத்தில் மின்னுற்பத்தியான 1000 மெகாவாட்டைப் பற்றி ஒரு செய்தியைக் கூட காணவில்லை, சரி தமிழக மின்வாரியத்திலாவது கிடைக்குமா எனத் தேடினோம், இன்றைய நிலவரப்படி தமிழக மின்வாரியத்திற்கு கூடங்குளத்திலிருந்து ஒரு மெகாவாட் கூட வரவேயில்லை(3).  கூடங்குளத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதி கிடைக்கவேண்டிய தமிழகத்திற்கே ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், மற்ற மாநில மின்வாரியங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை.
 பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு பழைய நாற்காலியை,  நவாப் நாற்காலி என்று ஏமாற்றவும், அந்த நாற்காலியை வாங்குவதற்கு  எல்லோரும் வரிசையில் நிற்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஏற்பாடு செய்திருப்பார். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம்... ஆயிரம், ரெண்டாயிரம், மூவாயிரம், நாலாயிரம்..... பிம்பிளிக்கி பிளாக்கி (10 ஆயிரம்)... என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள்...  இன்று அந்த பாண்டியராஜன் வேடத்தில் அரசும், அணு உலை நிர்வாகமும்  இன்னும் செயல்படாத அணு உலையை  உலகிலேயே மிகவும் அதிக திறனுடன் (100 விழுக்காடு) செயல்படும் அணு உலை என்ற ஏமாற்றி மக்களின் தலையில் கட்டுவதற்காக 100 மெகாவாட்... 300 மெகாவாட்.... 600 மெகாவாட்... 1000 மெகாவாட் என்று மட்டுமே  கூறும் ஊடகங்களை பணிக்கமர்த்தியுள்ளனர்.  இவ்வூடகங்களும்  அந்த நகைச்சுவை காட்சியில் வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல திரும்ப, திரும்ப அணு உலை நிர்வாகம் சொல்லிக்கொடுப்பதை மக்களாகிய நம்மிடம் ஒப்பித்து வருகின்றார்கள். மனிதனுக்கு, மிருகத்திற்கும் உள்ள ஒரே வேறுபாடு ஆறாவதறிவு எனும் பகுத்தறிவு மட்டுமே... சொல்வதை திரும்பச் சொல்வதற்கு கிளி போதும், பகுத்தறிவுள்ள ஊடகங்கள் தேவையில்லை.  அணு உலை நிர்வாகமும், அரசும் இறைக்கும் பணத்தில் மூழ்கித்திளைக்கும் ஊடகங்கள் அறத்தையும், நேர்மையையும், தங்களுக்குள்ள பகுத்தறிவையும் காற்றில் பறக்கவிட்டு கிளிகளாகிவிட்டனர். இந்த கிளிகள் கூறுவதை அப்படியே கேட்டு ஏமாறுவதற்கு மக்கள் ஒன்றும் மாக்களல்ல...


உலகிலேயே கூடங்குளம் அணு உலை தான் 100 விழுக்காடு உற்பத்தி திறனில் செயற்படும் முதல் அணு உலை... இதை ஏன் இந்திய பிரதமர், தமிழக முதல்வர், இந்திய அணு சக்தி கழகம், அணுத்தளபதி அப்துல்கலாம் பெருமையாக உலகுக்கு அறிவிக்கக்கூடாது ? அறிவித்தால் அவர்கள் உற்பத்தியான 1000 மெகாவாட் எங்கே என்று கேட்பார்கள் என்று அச்சமா?

100 விழுக்காடு பாதுகாப்பான அணு உலையில் வெந்நீர் குழாய் விபத்தில் சிக்கிய ஊழியர்களின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு எப்பொழுதும் போல இப்பொழுதும் பதில் இருக்காது, இருந்தும் கேட்டு வைப்போம்...

தென் மேற்கு பருவக்காற்று தொடங்கும் சூன் மாதத்தில் காற்று மின்சாரம்  முழுக்கொள்ளவிற்கு செல்லும், அதனால் தமிழகத்தில் மிந்தடை குறையும் இந்த நேரத்தில் நாம் 1000 மெகாவாட் பொய்யைச் சொன்னால் நாம் நம்பிவிடுவோம் என்று நம்பி அணு உலை நிர்வாகமும், ஊடகங்களும் இப்பொழுது இதை சொல்கின்றன...., ஆனால் அவர்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முற்பட்டு அம்பலப்பட்டு நிற்கின்றனர். கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்காத பொழுதே 1000 மெகாவாட் மின்னுற்பத்தி என அவர்கள் சொல்வதிலிருந்தே தெரிகின்றது அவர்கள் ஒரு மிகப்பெரிய ஊழலை மறைக்க முற்படுகின்றார்கள். 20000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் கூடங்குளத்தில் இறைக்கப்பட்டுள்ளது....  இதில் ஊடகங்களுக்கும் பங்குள்ளதால், அவர்கள் எப்பொழுதும் இவ்வூழலை வெளியிடப்போவதில்லை, நாம் தான் அதையும் வெளிக்கொணரவேண்டும்.... இந்த ஊழலை அம்பலப்படுத்த வருமாறு ஊழல் எதிர்ப்பு போராளிகளுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்...

நற்றமிழன்.ப

தரவுகள் :

1) http://www.dinamalar.com/news_detail.asp?id=993410&Print=1
2)  http://www.dinamani.com/tamilnadu/2014/06/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE/article2269354.ece

3) http://tnebldc.org/reports/peakdet.pdf

 

Friday, June 6, 2014

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்....... உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்... இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை மறுத்து அவர்களை வேலைக்கு வரச்செய்ததைத் தமிழகத்தில் பார்த்தோம்....


விப்ரோ (WIPRO), ஹெச் சி எல் (HCL), டெக் மகிந்திரா (TechMahindra), சுடக் ஷோ (Sodexho) 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களூம்(சுடக் ஷோ தவிர்த்த) தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று பணிசெய்தன.  அதை அறிந்த தேர்தல் ஆணையம் அந்நிறுவனங்களுக்குச் சென்று ஊழியர்களை வெளியேற்றியது, அது மட்டுமின்றித் தேர்தல் நாளில் பணி செய்ததற்கு அந்நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தன.


நேற்று ஹெச் சி எல்-லில் பணி புரியும் ஊழியர்களுக்கு மேலிடத்திலிருந்து பின்வரும் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

//Important: Extra day pay for Election Day and May Day working

 The employees who have worked on Election day and/or May Day are eligible for extra day pay.

This communication is intended for all India-based permanent employees of HCL Apps and Infra.

Allowance for Working on Election Day and/ or May Day

·Employees who have worked on Election Day and/ or May Day  are eligible for double wages for these days.

·For billable employees up to E3: Employees, who have worked on Election and / or May Day, should raise the request in SMM with necessary approval from their Reporting Managers./////

தேர்தல் நாளிலும், மே நாளிலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு  அவ்விரு தினங்களுக்கு இரட்டை ஊதியம்  வழங்கப்படுமென்றும், அந்நாளில் பணி புரிந்தவர்கள் இதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மேலே உள்ள இம்மின்னஞ்சலின் சாரம்...  அதுமட்டுமின்றி இந்த இரட்டை ஊதியம் அதே நிறுவனத்தில் பணி புரியும், ஒப்பந்த, பணி நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு உண்டா, இல்லையா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.


இந்தியாவில் இருக்கும் எந்த நிறுவனமானாலும் முக்கியமான அரசு விடுமுறை நாட்களான "சுதந்திர நாள், குடியரசு நாள்,  தேர்தல் நாள்" உள்ளிட்ட நாட்களில் வேலை செய்யக்கூடாது. அப்படி வேலை செய்தால் அந்நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை அதிகாரம் அரசுக்கு உள்ளது.  ஆனால் இங்கோ தேர்தல் நாள், மே நாளில் பணிபுரிந்தது மட்டுமின்றி, அவ்வேலை நாட்களுக்கு இரட்டை ஊதியம் வழங்க உள்ளது ஹெச்.சி.எல் நிறுவனம். இதே நிலையைத் தான் மற்ற நிறுவனங்களும் எடுத்திருக்கும். அதாவது தான் தவறு செய்தது மட்டுமின்றி... ஆமாப்பா நாங்க அப்படித் தான் செய்வோம் உன்னால என்ன செய்ய முடியும்? என்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சியைப் பார்த்துக் கொக்கரிக்கின்றன இந்நிறுவனங்கள்...  இதே நிறுவனங்கள் தான் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளிற்கெல்லாம் இங்கே இந்தியாவில் விடுமுறை விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உடனே நீங்கள் சொல்லலாம்... அவர்களின் வாடிக்கையாளர்கள் அமெரிக்கா சார்ந்து இருப்பதால் அவர்கள் அங்கு விடுமுறை இருக்கும் பொழுது, இங்கும் விடுமுறை விடுகின்றார்கள் என்று... விடுமுறை மட்டும் ஏன்... ஊதிய முறைகளிலும், வேலைப்பாதுகாப்பு சட்டங்களிலும் ஏன் அதைத் தொடரவில்லை ????  அப்பொழுது மட்டும் உங்களுக்கு இம்மண்ணின் சட்டம் (Law of the Land)  வரும்.. சரி அதையாவது இவர்கள் கடைபிடிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.


உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நினைவு கூறும் நாள் தான் மே நாள்,  இந்தியாவின் பல மாநிலங்களில் மே நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, அன்றும் தங்கள் பணியாளர்களைப் பணிக்கு வரச்சொல்வதிலிருந்தே  தெரிகின்றது, இந்நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் உரிமைகளை மதிக்கும் இலட்சணமும், இம்மண்ணின் சட்டங்களுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதையும்... இந்தியாவில் அமைப்பு சார் பணியாளர்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச சட்டங்கள் கூடத் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இல்லை, அதைக்கூட நான் செயல்படுத்த மாட்டேன் என்பது சர்வாதிகாரத்தனமேயன்றி வேறல்ல... மக்களாட்சியையும், இம்மண்ணின் சட்டங்களையும் கொஞ்சமும் மதிக்காத இந்நிறுவனங்களுக்குத் தான் சென்ற முறை மின்சாரக்கட்டணம் தமிழகத்தில் குறைக்கப்பட்டது. அதே சமயம் அரசின் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றும் பொது மக்களுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது, இவ்வரசுகள் முதலாளிகளின் நலன்களுக்காவே இயங்குகின்றன  என்பதும்,  விதிகளும் , சட்டங்களும் சாமானியர்களுக்காகவே என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றன...


 முதலாளிகள் இருக்கும் கொஞ்ச, நஞ்ச விதிகளையும் தங்கள் காலில் போட்டு மிதித்து வரும் நிலையில், இதைப் பற்றிய பிரஞையற்று தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இருப்பதும், தாங்கள் தொழிலாளி என்று அழைக்கப்படுவதையே அவமானமாகக் கருதுவதும்,  அடுத்த முதலாளி என்ற கனவில்  இருப்பதும் அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது.  ஐ.டி பணியாளர்கள் முதலில் இம்மாய உலகில் இருந்து யதார்த்த உலகிற்கு வரும் நேரம் வந்துவிட்டது. முதலில் அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, மறுக்கப்படும் உரிமைகளைக்காகப் போராடத்தொடங்க வேண்டும்....

நற்றமிழன்.ப‌

Thursday, June 5, 2014

அதோ வந்துவிட்டார்..... இதோ வந்துவிட்டார். .....


 எனது பள்ளி, கல்லூரி காலங்களில் (1990-2000) எங்களூரில்(கரூர்) நடக்கும் அரசியல் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடக்கும்... அக்கூட்டங்களில் யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது திரை நடிகர்கள் கலந்து கொண்டால்  மாலை 4 மணிக்கு ஒலிப்பெருக்கியில் அறிவிக்கத்தொடங்குவார்கள், அதோ வந்துவிட்டார், இதோ வந்து விட்டார் என... மக்களும் அவர் வந்துவிட்டார் என நம்பத்தொடங்கிக் கூட்ட மைதானத்தில் கூடத்தொடங்குவர்..... இறுதியாகத் தலைவர்கள் வந்து சேருவதற்கு இரவு 9 மணிக்கு மேலே ஆகிவிடும்....


  இதே போலச் சென்ற அக்டோபர் (2013) மாதத்தில் இருந்து கூடங்குளத்தில் இருந்து 160, 200, 300 மெகாவாட்... பின்னர் 400 மெகாவாட்.... 600 மெகாவாட்.... என  ஊடகங்கள்  அதோ, இதோ என்று தொடர்ந்து அறிவித்து வருகின்றன(1,2). அதே நேரத்தில் தமிழக மின்வாரியத்திற்குக் கூடங்குளத்திலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வரவில்லை என்று மின்வாரியத்தின் அறிக்கைகளைக் கொண்டு ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிவரும் பொய்யை அம்பலப்படுத்தினர் அணு உலை எதிர்ப்புப் போராளிகள்... நிலைமை இப்படியிருக்கையில் மே 19 அன்று ஒரு செய்தி ஊடகங்களில் வந்தது 22 அக்டோபர் 2013 அன்றே கூடங்குளம் அணு உலை உற்பத்தி தொடங்கினாலும் சில பிரச்சனைகளால் மின்வாரியத்திற்கு இதுவரை மின்சாரம் கொடுக்கவேயில்லை... அக்டோபர் 2013லிருந்து கூடங்குளம் அணு உலை தொடர்ச்சியாக மின்சாரம் கொடுக்கவில்லை, சோதனையோட்டமே நடந்தது. 2014 சூலை 22லிருந்து தொடர்ச்சியாக மின்சாரம் கொடுக்கப்போகின்றோம் என்று அறிவித்துள்ளனர்.(3) முதலில் கூறிய அரசியல் கூட்டத்திலாவது  மாலை 4 மணிக்கு அறிவிக்கத் தொடங்கி இரவுக்குள்ளாகக் கூறிய நபர் வந்துவிடுவார், ஆனால் கூடங்குளத்திலோ 22 அக்டோபர் 2013ல் மின்னுற்பத்தி தொடங்கியதாக அறிவிக்கத் தொடங்கினாலும் இன்றுவரை 1 மெகாவாட் கூட உற்பத்தி செய்து மின்வாரியத்திற்குக் கொடுத்ததாக எந்த  அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை. 22 சூலை 2014லிருந்து நாங்கள் மின்வாரியத்திற்கு நாங்கள் மின்சாரம் கொடுப்போம் என்று ஆரூடம் கூறியுள்ளார்கள், அதுவும் நடக்குமா என்பது ஐயப்பாடே. கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நடத்திய போது, நாட்டையே இருளில் தள்ளுகின்றார்கள், கூடங்குளம் வந்துவிட்டால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று போராடிய மக்களை எதிர்த்தவர்கள், 14,000 கோடிக்கு மேல் செலவு செய்தாகி விட்டது என்று சொன்னவர்களும், போராடிய மக்களைத் தேசத்துரோகிகள் என்று தூற்றியவர்களும் இன்று வாய் மூடி கள்ள மௌனம் சாதித்து வருகின்றார்கள்.


எங்களிடம் சில கேள்விகள் உள்ளன, அவற்றுக்கு யாரிடமாவது பதில் இருக்குமா எனத் தெரியவில்லை.. இருந்தும் கேட்கின்றோம்........


1) ஊடங்கள், அணு உலை நிர்வாகக் கூற்றுப்படி இதுவரை கூடங்குளத்தில் உற்பத்தியான மின்சாரம் எங்கே?

2) அப்துல் கலாம் மற்றும் பல அணு உலை ஆதரவாளர்கள், அரசின் கூற்றுப்படி 100 விழுக்காடு பாதுகாப்பான அணு உலையில் வெந்நீர் குழாய் வெடித்தது எப்படி ?

3) உண்மையிலேயே கூடங்குளம் இயங்கும் என்று நம்புகின்றீர்களா? எதை வைத்து?.......

அணு உலைக்கெதிரான மக்கள் போராட்டத்தைப் பழித்த எவரும் இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் நேர்மையை இப்பூவுலகிற்குப் பறைசாற்றிக்கொள்ளலாம்....

நற்றமிழன்.ப‌

தரவுகள்:
1) http://timesofindia.indiatimes.com/india/Kudankulam-nuclear-plant-starts-generating-power-connected-to-southern-grid/articleshow/24518920.cms

2) http://www.business-standard.com/article/current-affairs/unit-i-of-kudankulam-to-start-commercial-production-by-year-end-114040900318_1.html

3) http://www.millenniumpost.in/NewsContent.aspx?NID=58391