Wednesday, June 18, 2014

மனித உயிரில் கிரிக்கெட் ஆடும் இந்துத்துவக் கும்பல்!



"முதல் விக்கெட் விழுந்துவிட்டது" - இந்த செய்தியை வாசிக்கும் போது, இந்தியாவில் இருக்கும் பெரும்பாலனவரின் நினைவுக்கு வருவது கிரிக்கெட் விளையாட்டுதான். ஆனால், அண்மையில் இந்த வாக்கியம் மிகவும் வன்மம் மிகுந்த வழியில் ஒரு கும்பலால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநிலம் பூனேவில், மொஹ்சின் சாதிக் ஷெய்க் என்னும் 28 வயது தகவல் தொழில்நுட்பப் பணியாளர் தன்னுடைய மாலை நேரத் தொழுகையை முடித்துவிட்டு திரும்பும் வழியில் " இந்து ராஷ்டிரா சேனா" என்னும் அமைப்பைச் சார்ந்த இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டு உள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, சத்ரபதி சிவாஜி குறித்த முகநூல் இடுகையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே, அதற்கு சற்றும் தொடர்பில்லாத மொஹ்சின் சாதிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மொஹ்சின் சாதிக் படுகொலை செய்யப்பட்டதைத்தான், "முதல் விக்கெட் விழுந்துவிட்டது" என்று வன்மம் நிறைந்த குறுஞ்செய்தியை தங்களுக்குள் பரப்பி தங்களுடைய இந்துத்துவ வெறியை வெளிப்படுத்தியுள்ளனர் "இந்து ராஷ்டிரா அமைப்பினர்".

இந்த முதல் விக்கெட், எப்போது தொடங்கிய ஆட்டத்திற்கான முதல் விக்கெட்?, இவர்களைப் பொறுத்த வரையில் பாசிச பாரதீய சனதா ஆட்சி அமைந்ததில் இருந்து விழுந்திருக்கும் முதல் விக்கெட்டாகவே அவர்கள் மொஹ்சின் சாதிக்கின் கொலையைக் கணக்கிட்டுள்ளனர்.

இந்திய ஆளும் வர்க்கமும், இந்துத்துவக் கொள்கைகளை பின்பற்றும் இயக்கங்களும் மதச் சிறும்பான்மையினரான இசுலாமியர்களை எளிதில் அகற்றப்படக் கூடியவர்கள் என்று எண்ணுகின்றனர். அதே போன்று, வர்க்கப் பிரிவினரில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களாகிய நாம் சமூக அளவில் மிகவும் பலவீனமானவர்களாக உள்ளோம். 


                                           இந்துத்துவ அமைப்பினால் கொல்லப்பட்ட மொஹ்சின் சாதிக் ஷெய்க்


மொஹ்சின் சாதிக்கின் கொலை நம் முன் இரண்டு சவால்களை விடுத்துச் சென்றுள்ளது. முதலாவது, மதச் சிறுபான்மையினர் மற்றும் தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் காழ்ப்புப் பார்வைக்கும், செயல்பாடுகளுக்கும் எதிராக போராடுவது. இரண்டாவது, பல்வேறு சமயங்களில் பல்வேறு தரப்பினரால் தாக்குதலுக்கும், கொலைக்கும் உள்ளாகி வரும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைவது.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இசுலாமியர்களை உள்ளடக்கிய  அனைவருக்குமான வளர்ச்சி பற்றியும், பயங்கரவாதத்தைத் தம்முடைய அரசு சகித்துக் கொள்ளாது என்றும் பேசியுள்ளார். பயங்கரவாதம் சகித்துக் கொள்ள முடியாத செயல் என்று கூறும் மோடி முதலில் செயல்பட வேண்டியது இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராகத்தான்.
ஆனால், பாரதிய சனதா கட்சியின் பூனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அனில் ஷிரோல், " முகநூல் இடுகைகளின் அவதூறுக்கு எதிர்வினைகள் இருக்கத்தானே செய்யும்?" என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து மொஹ்சின் சாதிக் சித்திக்கின் கொலை யாருடைய ஆசியுடன் நடைபெற்றது என்பதையும், அவர்களின் உள்நோக்கம், திட்டம் எதன் அடிப்படையிலானது என்பதையும் கட்டியம் கூறுகின்றன.

"கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் அடக்குமுறையை ஏவுவதுதான் பாசிசத்தின் ஆதாரப்புள்ளி" - மொஹ்சின் சாதிக்கின் கொலையை வன்மையாக கண்டிப்பதுடன் பா.ச.க-வின் பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.

கதிரவன்

No comments:

Post a Comment