Friday, July 18, 2014

ஜெயலலிதாவின் புதிய பரிணாம‌ம்.......
2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம்  ஒரு அரசியல் முதிர்ச்சி தெரிந்தது.  முன்பு போல அதிரடியாக தனது சர்வாதிகாரத்தை செயல்படுத்தாமல் அரசியல் சாணாக்கியத்தனத்தோடு செயல்படத்தொடங்கினார்.  அதன் விளைவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு..... இன்னும் எல்லாம்,  இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான இரு தீர்மானங்களை இயற்றினார். பொது வெளியில் தனது பிம்பத்தை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் நன்கு கற்ற‌றிருந்திருந்தார்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி பெற மேற்கூறியவைக்கும் பங்குண்டு.  இதன் மூலம் ஜெயலலிதா மாறி விட்டாரோ என்று கூட சிலர் எண்ணினர்.   முன்னர் கூறியது ஊடகங்களில் ஜெயலலிதா பற்றி காட்டப்படும் பிம்பம் மட்டுமே...
தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் வதை முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கிய நேரத்தில் தான் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம்  இயற்றினார், அதெல்லாம் வெற்றுத் தீர்மானம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்,  அதுமட்டுமின்றி முள்ளிவாய்க்கால் முற்றச்சுவரை இடித்து, தனது சர்வாதிகாரத்தைத் தங்கு தடையின்றி செயல்படுத்தினார். அது போலவே நான்கு தமிழர்களின் விடுதலைக்காக தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது செங்கொடியின் உயிர்த்தியாகம் அந்த போராட்டத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்  நிலைமை இப்படியே செல்லக்கூடாது அதை தனது கட்டுக்குள் கொண்டுவர அடுத்த நாளே தீர்மானம் இயற்றினார்,  அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பொழுது, அவர்களையெல்லாம் விடுதலை செய்வேன் என்று அறிவிக்கவும் செய்தார், ஆனால் இன்று வரை விடுவிக்காமல் அவர்களை மேலும் ஒரு வழக்குச் சுழலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.        தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் நீக்குவேன் என்றார், மூண்றாண்டுகள் ஆகிய பின்னும் காகிதப்புலியாக வெறும் அறிக்கைகளில் மட்டும் மிந்தட்டுப்பாட்டை ஒழித்திருக்கின்றார்,  மின்சாரமே இல்லாத நிலையில் பொது மக்கள் பயன்படுத்தும்  மின்சாரத்தின் கட்டணம் மட்டும் ஆண்டாண்டுக்கு உயர்ந்தும்,  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட  பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான கட்டணம் குறைந்தும் வருகின்றது.  இதில் பின்னவர்களுக்கு  மட்டும் மிந்தட்டுப்பாடே இல்லை.   அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை ஒரு முதலாளியைப் போல  விற்பனை செய்யும் முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக செய்தார் ஜெயலலிதா.  மோடியை வீழ்த்திய லேடி என்று ஊடகங்கள் இவரை கொண்டாடுவது இதனால் தான், முதலாளித்துவத்தை செயல்படுத்துவதில்,  Vision 2023  போன்று ஒரு திடமான செயல்திட்டத்தை முதலாளிகளுக்காக உருவாக்குவதில் அவருக்கு இணையாக எந்த முதலமைச்சரும் முன் நிற்கமுடியாது.  அதனால் தான் ஊடகங்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.  பால் விலை, பேருந்து கட்டணம் என விலைவாசியை தன் பங்குக்கு உயர்த்தினார் இந்த மிகச்சிறந்த நிர்வாகி.


                       ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் அரச இயந்திரத்தின் கடை நிலை ஊழியர்களை நடுத் தெருவிற்கு கொண்டு செல்வதன் மூலம் தனது அகங்காரத்திற்கு தீனி போட்டுக்கொள்வார்.  கடந்த ஆட்சியில் சாலைப்பணியாளர்களை வேலை விட்டுத்தூக்கி நடுத்தெருவிற்கு கொண்டு வந்தார், இந்த முறை 10,000 மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு நீக்கினார்.  பல போராட்டங்களை அவர்களும் தொடர்ந்து நடத்தி வந்தனர், இறுதியில் பட்டினியால் சிலர் மரணமடைந்தனர் (கொல்லப்பட்டனர் என்பதே சரி).  இன்று இவர்களெல்லாம் கிடைக்கும் ஏதோ ஒரு கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்.   மாற்றுத்திறனாளிகள்  தாங்கள் முதல்வரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கையளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், ஆனால்  "அம்மா" என தனது தொண்டர்களால் அழைக்கப்படும் அவரால் அதற்கு நேரமில்லை,  அந்த நேரத்தில் அவர் நூற்றாண்டு சினிமா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தன்னை மற்றவர்கள் புகழுவதை கேட்டு மனமகிழ்ந்து கொண்டிருந்தார்.  பின்னர் போராட்டம் ஒன்றே வழி என முடிவெடுத்து சாலைமறியல் செய்தவர்களை கடுமையாக ஒடுக்கினார்.  காவிரித்தீர்ப்பை அரசிதழில் கொண்டு வந்து "காவிரித்தாய்" ஆனார், ஆனால் ஏனோ காவிரி நீர் மட்டும் தமிழ்நாட்டிற்கு இன்னமும் வரவில்லை.  நிர்வாகப்புயல் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் தான் தமிழகத்தில் கொள்ளை, கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்த இடத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட‌ தமிழக காவல்துறை இன்று வடிவேலுவின் என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரத்திற்கு நிகராக வந்துள்ளது. கொலை, கொள்ளைகளை தடுக்க இயலாத காவல்துறை முல்லைப்பெரியாறிலும், கெயில் எரிவாயுக்குழாய் எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும் போராடும் மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தங்கள் வீரத்தை காட்டிவருகின்றனர்.  சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதே இங்கு கொலை, கொள்ளைகள் அதிகரிக்கக் காரணம்,  "கற்றது தமிழ்" படத்தில் சொல்லப்படுவது போல நீங்க சாப்பிடுற ஒரு வாய் பீசாக்காக, போட்டுறக்க ஷீக்காக,  கண்ணாடிக்காக கொலை செய்யப்படலாம் என்பது இங்கே அதிகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.  சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சிறந்த நிர்வாகியான ஜெயலலிதா ஆட்சியில் ஏதும் செய்யப்படவில்லை.
                         2011 ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினத்தை அனுசரிக்க கூடிய மக்களை காவல்துறை ஏவி சுட்டுக்கொன்றார், சென்ற ஆண்டு முத்துராமலிங்கம் சிலைக்கு தங்க கவசம் அணிவித்துள்ளார். தர்மபுரியில் மூன்று கிராமங்களை எரித்தவர்கள்,  இளவரசன்-திவ்யா இணையரை பிரித்தவர்களும்,  தினம், தினம் சாதி வெறியை தூண்டி வருபவர்களும் சுதந்திரமான நடமாடிவருகின்றார்கள். ஆனால் இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிக்க இருந்த மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, இன்று பாதிக்குமதிகமானோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். சமூக ஒழுங்கை ஜெயலலிதா அவர்கள் இப்படித்தான் கட்டிக்காத்து வருகின்றார். தமிழக அரசு என்பது சாராயம் விற்றுக் கிடைக்கும் பணத்தால் தான் இயங்கிவருகின்றது, பொது மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் இது போன்ற சாராயக் கடைகளை மூடக்கோரி நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன, திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர், தோழர்.பாலபாரதி கலந்து கொண்டார், காவல்துறை அவரையும் கைது செய்தது.  ஒவ்வொரு நாளும் குடிகாரர்களின் எண்ணிக்கையை, குடிக்கும் அளவை உயர்த்தும் ஒப்பற்ற சாதனையைத் தான் இந்த மூண்றாண்டுகளில் ஜெயா செய்துள்ளார்.
         ஜெயலலிதாவின் புதிய பரிணாமம் என்பது "புதிய மொந்தையில் பழைய கள்ளேயன்றி" வேறல்ல.  அவர்  என்றுமே முதலாளிகளின் விசுவாசி, பார்ப்பணீயத்தின் சகோதரி தான்.   கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போல, அடுத்த சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அவரது கண்களில் தெரிகின்றது, அதற்காக அம்மா மருந்தகம் உள்ளிட்ட அடுத்த கட்ட திட்டங்களை அவர் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்.  சரியான மாற்று கட்சிக்காக‌  தமிழகம் காத்திருக்கின்றது.  தினந்தோறும் நடைபெறும் மக்கள் போராட்டங்களே மாற்று. மக்கள் போராட்டங்களுக்கே அரசை, அதிகாரங்களை மாற்றும் வல்லமை உண்டு. மக்கள் போராட்டங்கள் ஓங்குக...


நற்றமிழன்.ப‌

நன்றி: கேலி சித்திர கலைஞர்.பாலா

No comments:

Post a Comment