இன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். 1946ல் இசுரேல் உருவானது முதல், இன்று வரை பாலசுதீனம் கொஞ்சம், கொஞ்சமாகச் சூறையாடப்பட்டு இன்று ஜெருசெலமை ஒட்டிய சில நிலப்பரப்புகளும், மேற்கு கரைப்பகுதி மட்டுமே பாலசுதீனமாக உள்ளது. இதில் மேற்கு கரைப் பகுதி முற்றிலுமாக உலகத்தொடர்புகளற்று உள்ளது. சென்ற ஆண்டு மேற்கு கரைப்பகுதிக்கு உணவு கொண்டு வந்த ஒர் ஐரோப்பிய கப்பல், நடுக்கடலிலேயே இசுரேலியர்களினால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதை உங்களுக்கு நினைவு கூறுகின்றேன். உணவு வழங்கு வந்த தொண்டு நிறுவன கப்பலுக்கே இந்தக் கதி என்றால், அங்கு வாழும் மக்களின் நிலை என்ன என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.
என்ன நடக்கிறது இன்று:
சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு கரை(காசா) பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போகின்றார்கள், மேற்கு கரைக்குள் நுழைந்து இசுரேலிய படையினர் தேடியதில் மூவரின் உடல்களும் குண்டடிப்பட்ட நிலையில் கிடைக்கின்றன, இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதற்கடுத்த நாள் காதீர் என்ற பாலசுதீன இளைஞர் இசுரேலிய வலது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிருடன் கொளுத்தப்படுகின்றார். பின்னர் காதீரின் 15 வயது சகோதரன் இசுரேலிய காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டுக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றான், இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கம் இசுரேலின் மீது ஒர் ஏவுகணைத் தாக்குதலை நடத்துகின்றது, இசுரேல் ஹமாஸ் இயக்கத்தின் மீதான போர் என்ற பெயரில் கடந்த இரண்டு வாரங்களாக தோராயமாக 200 பாலசுதீனர்களைக் கொன்றுள்ளது, கொல்லப்பட்டதில் பெரும்பகுதியினர் சிறு குழந்தைகள். பின்வரும் படத்தில் ஹமாஸ் வீசும் ஏவுகணையும், அதன் பாதிப்பும். இசுரேல் வீசும் ஏவுகணையும் அதன் பாதிப்பும் உள்ளன.
உலகின் அதி நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் இசுரேலின் குண்டுகளுக்கும், ஏவுகணைகளுக்கும் முன்னால், ஹமாஸ் வீசும் ஏவுகணைகள் ஒரு தூசு, மேலும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருக்கின்றது இசுரேல். இதில் ஹமாஸ் வீசும் ஏவுகணைகள் ஒரு கட்டடித்தின் மீது வீசப்பட்டால் ஒரு சில செங்கல்களைச் சேதப்படுத்தலாம், மேலும் ஹமாஸ் வீசிய ஏவுகணைகள் லேசான சிராய்ப்புக் காயம் மட்டுமே ஏற்படுத்தக்கூடியவை, இதனால் இதுவரை ஒரு யூதர் கூடக் கொல்லப்பட்டதில்லை. ஆனால் இசுரேல் மேற்கு கரை மீது வீசிய குண்டுகள் என்பவை போரில் பயன்படுத்தப்படும் அதிபயங்கரக் குண்டுகள். விழும் இடத்தில் புல் பூண்டுகள் கூட மிஞ்சாது (படத்தைப் பார்க்கவும்) . அது மட்டுமின்றிப் போரில் தடை செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைக் கூடப் பாலசுதீன மக்கள் மீது இசுரேல் அனுதினம் வீசி வருகின்றது. பாஸ்பரஸ் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடைய வேதி பொருள், இந்தப் பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படும் இடம் முழுவதும் தீப்பற்றிக்கொள்ளும் இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் தீயில் கருகி எரிந்து விடுவார்கள். இந்தக் குண்டுகளை ஐ.நா வாகனங்கள் மீதும், பாலசுதீனப் பள்ளிக்கூடங்கள் மீதும் பலமுறை வீசியுள்ளது இசுரேல்...
இனப்படுகொலை:
இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லரால் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டவர்கள் யூதர்கள், இதைச் சித்தரிக்கும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தத் திரைப்படங்கள் வந்த காலங்கட்டங்களில் யூதர்கள் பாலசுதீனர்கள் மீதான இனப்படுகொலையைத் தங்களது அரசு மூலம் நடத்தத் தொடங்கிவிட்டனர். ஒர் இனப்படுகொலைக்குள்ளான ஒரு சமூகம் எப்படி இன்னொரு சமூகத்தை இனப்படுகொலை செய்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். இசுரேலின் அனுதினத் தாக்குதல்களுக்கு நடுவே பாலசுதீனர்கள் உயிர் வாழ்வதே ஒரு போராட்டம் தான். இக்கட்டுரையில் முதல் வரைபடத்தில் ஒவ்வொரு ஆண்டும் இசுரேல் பாலசுதீனப் பகுதியை விழுங்கி வளர்ந்தது கண்கூடாகத் தெரியும், இதை எதிர்த்து போராடிய பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பாலசுதீன கைதிகளைச் சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்துகின்றது இசுரேல் ஆராய்ச்சித் துறை, அதுமட்டுமின்றிப் பாலசுதீன கைதிகளின் உடல் உறுப்புகளை இசுரேல் திருடியும் வருகின்றது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது நூறு பேராவது கொல்லப்பட்டு வருகின்றனர். தங்களைக் காத்துக் கொள்ளக் காவல்துறை கூட இல்லாத பாலசுதீனியர்களின் மீது போர் புரிகின்றோம் என இசுரேல் கூறுவதும், நாங்கள் பாலசுதீனியர்களை இனப்படுகொலை செய்கின்றோம், செய்வோம் என்பதும் வேறு வேறல்ல....
உலக நாடுகளும் ஊடகங்களும்:
இன்றைய உலக ஒழுங்கு என்பது 90க்குப் பின் மாறியதாகத் தோற்றம் கொண்டிருந்தாலும், இன்றும் அமெரிக்காவைச் சுற்றியே இயங்கி வருகின்றது. சீனா, இரசியா ஒரு புறம் வளர்ந்து வந்தாலும் இன்னும் உலக ஒழுங்கு மாறவில்லை. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இசுரேல் என்பது அரசியலறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஐ.நாவில் இசுரேலின் மீது கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா, இசுரேல் கூட்டணி தோற்கடிக்கும், அதையும் மீறி ஐ.நாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கால் தூசளவிற்குக் கூட இசுரேல் மதித்ததில்லை. பாலசுதீனியர்கள் இசுலாமியர்கள் தானே, இந்த அரபு நாடுகள் எல்லாம் இவர்களுக்கு ஆதரவளிக்கும் தானே என்று கேள்வி கேட்கும் பொதுமக்களுக்கு அரபு நாடுகளில் ஈரான், சிரியா தவிர்த்து எல்லா நாடுகளும் அமெரிக்காவின் அரசியலையே பின்பற்றுகின்றன அல்லது பின்பற்ற வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கே நினைவு கூறுகின்றேன். அருகிலுள்ள எகிப்து மட்டும் தற்சமயம் இந்தப் போரை (இனப்படுகொலையை) ஒர் அமைதி உடன்படிக்கையின் கீழ் நிறுத்தும் முயற்சியின் கீழ் செயல்பட்டு வருகின்றது, இதற்கு அமெரிக்கா, இசுரேல் எப்படிப் பதிலளிக்கும் என்பது கேள்விகுறியே....
உலக ஊடகங்களில் 90 விழுக்காட்டுக்கும் மேலாக யூதர்களின் கட்டுப்பாட்டிலே தான் உள்ளது, அதனால் எந்த ஊடகங்களிலும் பாலசுதீனர்கள் கொல்லப்பட்டது வராது, வேண்டுமென்றால் ஹமாசின் ஏவுகணை தாக்குதலில் யூதர் ஒருவருக்குக் காலில் லேசாகச் சிராய்ப்பு ஏற்பட்டது வேண்டுமானால் செய்தியாக வரலாம். ஊடகங்களில் வருவது மட்டும் தான் சரியான செய்தி என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்குப் பாலசுதீனியர்கள் தீவிரவாதிகளாகவும், இசுரேல் நல்லரசாகவும் காட்சியளிக்கும் .( புலிகள் தீவிரவாதிகளாகவும், இலங்கை அரசு நல்லரசாகவும் இந்திய ஊடகங்கள் இந்தியர்களிடையே கட்டமைத்தது போல....) மற்ற படி ஊடக அறமெல்லாம் அமெரிக்காவுக்கும், இசுரேலுக்கும் ஆதரவாகக் கூவுவது மட்டுமே. இதில் அத்திப் பூத்தார் போல அல்ஜசீரா போன்ற சில ஊடகங்கள் உள்ளன. இவர்கள் தான் இலங்கையின் உண்மை முகத்தையும் காட்டியவர்கள், இன்று இசுரேலின் உண்மை முகத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றவர்கள்....
இந்தியாவும், தமிழர்களும்......
உலகில் சீனாவிற்கு அடுத்து மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று ஊடகங்களால் விதந்தோதப்படுவதுமுண்டு. 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடு, இதுபோன்ற இனப்படுகொலை நடக்கும் பொழுது யாருக்கும் ஆதரவாகப் பேசுவதில்லை என்பதையே முடிவாகக் கொண்டு இயங்கிவருகின்றது. "ஒரு இனப்படுகொலை நடக்கும் பொழுது நடுநிலைமை என்பது, இனப்படுகொலை செய்பவர்களுக்கு ஆதரவேயன்றி வேறல்ல" என்ற டெஸ்மாண்ட் டூட்டுவின் வரிகளின் படி, இந்தியா இசுரேலின் இனப்படுகொலையைத் தனது கள்ள மௌனம் மூலம் ஆதரித்து வருகின்றது என்பதே உண்மை. அதுமட்டுமின்றித் தில்லியிலும், காசுமீரிலும் இசுரேலை கண்டித்து ஊர்வலம் சென்றவர்களின் மீது காவல்துறை தாக்குதலை நடத்தி, இந்துத்துவமும், சியோனிசமும், பாசிசமும் வேறு வேறல்ல, எல்லாம் ஒன்றே என நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
இசுரேலுக்குத் தனது கள்ள மௌனம் மூலம் ஆதரவளிக்கும், இந்திய அரசை எதிர்த்து போராடுவதே ஒவ்வொரு இந்திய, தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்.
உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள்:
இசுரேல் பாலசுதீனர்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலை எதிர்த்து உலகெங்கிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசுகள் எப்பொழுதும் மற்றொரு அரசைத் தான் ஆதரிக்கும், அவர்கள் இனப்படுகொலை செய்யும் பொழுதும், அதே நிலை தான், உலகெங்கும் உள்ள மக்கள் நடத்தும் போராட்டங்கள் தான் அரசை அச்சுறுத்தும் ஒரே ஆயுதம், ஒவ்வொரு நாட்டில் உள்ள மக்களும், அந்தந்த நாடுகளின் அரசை எதிர்த்துப் போராடி, அவ்வரசுகளின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி அதை மாற்றச்செய்ய வேண்டும்.
மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இசுரேல் உள்ளிட்ட அரசுகள் தான் உலகில் மிகப்பயங்கரமான அமைப்புகளாகும். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியை உலகெங்கிலும் உள்ள எல்லா சனநாயக, மனித உரிமை, இடதுசாரி இயக்கங்களும் தங்கள் முதல்பணியாக எடுத்துச் செயல்பட வேண்டும்.எப்படி அரசுகள் தங்களுக்குள்ளே ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனவோ, அது போல உலகெங்கும் வாழும் மக்களும், அரசுகளற்ற தேசிய இனங்களும்(பாலசுதீனம், காசுமீர், ஈழம்........) ஒரு கூட்டணியை உருவாக்கித் தொடர்ந்து போராடி சனநாயகத்தையும், தேசிய இனங்களின் தன்தீர்வுரிமையையும் மீட்டெடுப்போம், இனப்படுகொலை இல்லா மனித சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்.
நற்றமிழன்.ப
Yes, Agree
ReplyDeleteநன்றி. ராஜன்.
ReplyDeleteGood artcle. I have shared with my Israel support friend.
ReplyDeleteKANNEERUDAN KAASIMIN MAGAN
ReplyDeleteநன்றி தோழர்.அன்னராஜ். ஒடுக்கும் இசுரேலின் ஆதரவாளர்கள் திருந்துவார்களா என பார்ப்போம்.
ReplyDeleteஉங்களது வலி எங்களுக்கு புரிகின்றது தோழர்.ரா.