Thursday, July 3, 2014

சாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் - தோழர். செந்தில்

நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில் 

கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களைச் சூறையாடி வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.  
 இந்த தாக்குதலில் 22 விடுகளும், பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. பகல் வேலையில் ஊர் மக்கள் அனைவரும் ஏரி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் ஆதிக்க சாதி கும்பல் குடியிருப்புகளை முழுமையாக கொளுத்தியுள்ளனர்.

நடந்ததை விபத்து என சித்தரிக்க முயன்று, சாதி வெறியர்களுக்கு துணை நிற்க முயன்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு பிறகு, விபத்து நடந்து நான்கு நாட்கள் கடந்த பிறகு இந்த தாக்குதல் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்களை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியும் சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.    

இந்நிலையில் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் 13 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காது சாதி வெறியர்களுக்குத் துணை நின்ற சித்தாமூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சீதேவியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மெத்தனம் காட்டிய காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாத காவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்முறையைத் தூண்டி வரும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிச் சங்கங்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் கட்சியின் சார்பாக சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆற்றிய கண்டன உரை:

”நேற்று நத்தம் இன்று நுகும்பல் என்று இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைப்பை கொடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது. பல நூறு ஆண்டுகளாக சாதி ஒடுக்குமுறைகளும் சாதி அடிப்படையிலான தாக்குதல்களும் நம் நாட்டில்  நடந்து வந்தாலும் நத்தத்தில் நடந்த தாக்குதலுக்கும் இந்த தாக்குதலக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது
முதலாவதாக, இது ஒரு இடைநிலை சாதியைச் (வன்னியர் வகுப்பை) சேர்ந்த ஒரு சிலர் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நடத்திய தாக்குதல். இரண்டாவதாக, வடக்கு தமிழகத்திலே நடந்த தாக்குதல்
மூன்றாவதாக, முந்தைய கொடியன்குளம், திண்ணியம் போன்ற இடங்களில்  நடந்த வன்கொடுமைகளுக்கு மாறாக இங்கு நடந்த தாக்குதலுக்கு உள்ள தொடர்பு என்பது இது முழுக்க முழுக்க தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பதவி அரசியலுக்காக பா.ம.க வால் துண்டிவிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தான் இந்த இரண்டு தாக்குதலுக்கும் உள்ள ஒற்றுமை. கடந்த கால தாக்குதலுக்கும் இவற்றுக்கும் உள்ள வேறுபாடு.

அனைத்தும் சாதிய தாக்குதலாக இருந்தாலும் இந்ததாக்குதல்களின் நோக்கத்தில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது தான் நாம் இங்கு உன்னிப்பாக‌ கவனிக்க வேண்டியதாகும்.  


இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வி அடைகின்றது. சட்டமன்றத் தேர்தலிலும் பெருந் தோல்வி அடைந்தது.   இந்த நிலையில் தான் முந்தைய காலங்களில் தேர்தல் அரசியலுக்காக வாக்கு நலனுக்காக தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடித்த மருத்துவர் இராமதாசு அவர்கள், தேர்தல் தோல்விகளுக்கு பிறகு சாதி வெறி அரசியலைத் தன்னுடைய மூல உத்தியாக கையிலெடுத்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்.அவர்கள் இளவரசன் – திவ்யா காதலில் இருந்து தொடங்கி நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி இந்த மூன்று கிராமங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தி வீடுகளையும் பொருட்களையும் சூறையாடினர். அதற்கு பிறகு மரக்காணத்தில் நடத்தப்பட்ட  தாக்குதல். தொடர் முயற்சியால் இளவரசனையும் திவ்யாவையும் பிரித்தார்கள். சந்தேகத்திற்குரிய வகையில் இளவரசன் இறந்து போனது. இக்காலகட்டங்களில் பா.ம.க. வால் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்ட தலித் எதிர்ப்பு சாதி அரசியல்,   இந்த தொடர் நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாகத் தான் நுகும்பலில் இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு இடையிலேயே ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது அந்த தேர்தலிலே இராமதாசு(ஐயா) என்ற மன்னரின் மகன் இளவரன் அன்புமனி(சின்ன ஐயா) என்பவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். அதுவும் பா.ம.க, பா.ச.க போன்ற இந்துத்துவ பாசிச சக்தியோடு கூட்டணியை வைத்து இந்த தேர்தலில் களம் கண்டது. ஆக மொத்தத்தில் இந்துத்துவமும் சாதி வெறி அரசியலை உயர்த்திப்பிடிக்கும் பா.ம.க வும் ’வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஒரு மிகப்பெரிய எதிரியாக நம் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
சூலை 4 வந்தால் இளவரசன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைகின்றது. அதற்காக ஒரு கண்டனக் கூட்டம் அல்லது நினைவுக் கூட்டம் நடதத வேண்டும் என நத்தம் ஊர் மக்கள் முயன்று வருகின்றார்கள். ஆனால் அங்குள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த துரை உள்ளிட்ட ஐந்து நபர்களை நேற்று இரவு காவல்துறை கடத்திச் சென்றுள்ளது

அதாவது வன்னிய சாதி வெறி சக்திகள்  எங்கு வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம்; அவர்கள் சாதி வெறியை தூண்டிவிடலாம். ஆனால் சாதிய தாக்குதலுக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராக கண்டனக் கூட்டமோ நினைவுக் கூட்டமோ நடத்த வேண்டும் என்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அவர்கள் மீது வழக்குப் போடுவதற்கும் அவர்களை ஒடுக்குவதற்கும்தான் இந்த காவல்துறை பயன்படுத்தப் படுகின்றது. பொதுவாக பல்வேறு ஒடுக்குமுறைகளில் நாம் சந்தித்துவரும் பிரச்சனை இது தான். தாக்கியர்களையும் தாக்கப்பட்டவர்களையும் ஒன்றைப் போல் நடத்துவதாக காட்டி கொண்டு அதன் இறுதி அர்த்தத்தில் தாக்கியவர்கள் பக்கம் நிற்பது தான் இந்த அரசின் வேலையாக இருக்கின்றது. பொதுவாக எல்லா அரசுகளும் இப்படி நடந்து கொள்கின்றன.நேற்று மாலை கைது செய்யப்பட்டவர்களை இப்போது வரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை காவல் துறை. ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றொரு பொய்வழக்கைச் சோடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக் காரணம் கைதுசெய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்று இளவரசனுக்கு ஒரு  நினைவுக் கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று முயன்று வருகின்றார்கள். காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அதனால் எங்களை மீறி நீங்கள் நீதிமன்றம் சென்று நினைவுக் கூட்டம் நடத்திவிடுவீர்களா என்று இந்த ஐவரை கைது செய்வதன் மூலம் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்திப் பார்க்கின்றது காவல் துறை.

அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தலாம்; காவல்துறை தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தும் விதமாக கைது செய்யலாம்; தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு இங்கு நாதி இல்லை என்ற நிலைதான் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இங்குஇருந்து வருகின்றது.

பா.ம.க வை பொறுத்த வரை தன்னுடைய பதவி அரசியலுக்காக முதலில் தமிழ்த்தேசியம் பேசினார்கள் பதவி அரசியலுக்காக தமிழ்நாட்டை இரண்டாக உடைத்து வடக்கு தமிழகத்திலாவது தாங்கள் முதல்வர் பதவிக்கு வந்துவிட முடியாதா என்று கனவு கண்டார்கள். பதவி அரசியலுக்காக காங்கிரசோடு கூட்டணியில் இருந்தார்கள் இப்பொழுது பதவிக்காக பா.ச.க வோடு கூட்டணியில் இருக்கின்றார்கள்.
காங்கிரசோடு இருந்தாலும் சரி, பா.ச.க. வோடு இருந்தாலும் சரி  தமிழ்நாட்டு மக்களின் நலனை ஆளும் வர்க்கத்திற்கு பலியிடுவதுதான் இதுவரை பா.ம.க செய்து வந்தது எனதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே பா.ம.க வை அரசியல் களத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து சனநாயக சக்திகளின் முதன்மைக் கடமையாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் கடந்த தேர்தலின் பொழுதும் பா.ம.க – பா.ச.க கூட்டணியைப் பொறுத்தவரை நாம் பா.ச.க. வை தோற்க வேண்டும் என்று முனைந்த அளவுக்கு பா.ம.க வை நோக்கி நாம் வினையாற்றவில்லை. வை  பா.ம.க வை வீழ்த்த வேண்டும் என்பதை ஒரு அரசியல் முழக்கமாக முன்னெடுத்து அதற்கான போதிய முயற்சிகளை செய்யவில்லை என்பதை குற்ற உணர்ச்சியோடு நான் இங்கு பதிவு செய்கின்றேன்.


ஏனென்றால் அந்த தேர்தலுக்கு முந்தைய மார்ச் மாதத்தில் ஐ.நா. தீர்மானம் உள்ளிட்ட வேறு பிரச்சனைகளில்  நாம்  கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பா.ம.க வை வீழ்த்துவதற்கான வியூகத்தை நாம் வகுக்கவில்லை அதற்கான போதிய தயாரிப்பை நாம் செய்யவில்லை. அதன் விளைவு தான் இன்று அன்புமனி முடி சூடியவராக நாடாளுமன்றத்திற்குள் சென்றிருக்கின்றார்.

தமிழக அரசு இது போன்ற தாக்குதலில் என்ன பாத்திரத்தை வகிக்கின்றது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. தமிழக அரசு மக்கள் நல அரசாக இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது ஆனால் உள்ளார்ந்த பொருளில் இது உண்மையில்லை. இதை நாம் தோலுரித்துக் காட்டாவிட்டால் சனநாயகத்திற்கான நமது போராட்டத்தில் ஓர் அங்குலம் கூட நம்மால் முன்னேறிவிட முடியாது.


ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதல் ஆனாலும் சரி, இளவரசன் மரணம் ஆனாலும் சரி இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீதோ அதை தூண்டியவர்கள் மீதோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்க எடுக்கவில்லை. சித்திரை திருவிழாவிற்காக மாமல்லபுரத்திலே நடந்த வன்னியர் சங்கக் கூட்டத்தில் தமிழக முதல்வர் செயலலிதாவை நோக்கி சவால் விடுவது போல் பேசிய காரணத்திற்காகத்  தான் பா.ம.க. வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்தார்களே ஒழிய,  அந்த கூட்டத்தைக் கால நீட்டிப்பு செய்து நடத்தினார்கள் என்ற காரணத்திற்காக தான் கைது செய்தார்களே ஒழிய சாதி வெறியை தூண்டியதற்காகவோ தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  தாக்குதலை நடத்தியதற்காகவோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்யவில்லை. ஏனென்றால் தமிழக அரசு எண்ணிக்கை அளவிலே பெரும்பான்மையாக இருக்கும் சாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கட்சிகளைப் பார்த்து அச்சப்படுகின்றது. தனது தேர்தல் நலன் பாதித்துவிடக் கூடாதென்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களைப் பலி பீடத்தில் ஏற்றத் தயங்குவதில்லை. 

தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு பொதுவான அரசாக நடந்து கொள்ளவில்லை. எனவே தமிழக அரசு தோற்றத்திலே தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போல காட்சியளித்தாலும்  இங்குள்ள உழைக்கும் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும். எல்லாமே தோற்றத்தில் நன்றாக போய்க் கொண்டிருப்பது போலத் தெரியும். நாமும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் ஆனால் நம்முடைய சனநாயகத்திற்கான போராட்டத்திலே ஒரு சிறு அடி கூட நாம் முன்னேறி சென்றுவிட முடியாது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இன்று தமிழகம் இரண்டு தமிழகமாக இருக்கின்றது. ஒன்று நகரம் இன்னொன்று கிராமம். நகரத்திலே பளபளக்கும் சாலைகள் இருக்கின்றன. பல்வேறு பன்னாட்டு நிறுவன‌ங்களின் மூலதனம் இறங்கிக் கொண்டிருக்கின்றது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் நகர வாழ் மக்களைக் குறி வைத்து வந்து கொண்டிருக்கின்றது. நகரத்தின் நுகர்வுக் கலாச்சாரமும், நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வளர்ச்சியும் நகரத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் மூலதனமும் ஒருபக்கம். மறுபக்கத்தில் கிராமங்களில் படுத்துக் கிடக்கும் விவசாயமும் எந்த நுகர்வுக்கும் உள்ளாகாத கிராமப்புற மக்கள், நகரங்களின் வளர்ச்சிக்காக தங்களுடைய நிலம், நீர் வளங்களை அள்ளிக் கொடுத்தார்கள். 

ஆனால் நகர்ப்புற மக்களின் நுகர்வுக்கும் கிராமப் புற மக்களின் நுகர்வுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உருவாகியுள்ளது. நகரங்களும் கிராமங்களும் நாட்டில் இரு இரு துருவங்களாக மாறிப் போயுள்ளன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட சென்னை நகர வளர்ச்சிக்கு தன்னுடைய மண் வளத்தையும், நீர் வளத்தையும் தந்துள்ளது. இப்படி நகரத்திற்கும் கிராம‌த்திற்குமான முரண்பாடு பகைத் தன்மையை அடைந்துள்ளது. நகரத்தில் நடப்பவை அனைத்துமே நாட்டின் பேசு பொருளாகின்றது. 

இன்று தமிழ்நாட்டில் அரசியலைப் பார்த்தால் இராக்கில் நடந்து கொண்டிருக்கும் சண்டையை பற்றி பேசுகின்றோம், இலங்கையில் நடக்கும் தாக்குதலைப் பற்றிப் பேசுகின்றோம், உத்திரப் பிரதேசத்தில் நடப்பதைப் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலோ அநீதியோ ஒரு பேசு பொருளாகக் கூட மாறுவதில்லை. 

முகநூலில் பார்த்தால் அண்மையில் வந்த ‘with you and without you’ திரைப்படம் எந்த அளவிற்கு பேசு பொருளானதோ அதில் ஒரு சதவிகிதம் கூட நுகும்பல் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் விவாதிக்கப்பட வில்லை. எது பேசப்பட வேண்டும், எது இந்நாட்டு அரசியலில் மைய விவாதப் பொருளாக வேண்டும் என்பதை நகரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.


தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டு மக்களின் சனநாயகத்திற்கான போராட்டத்தைத் குறிக்கும் சொல்.    சமூக நீதி, சமூக ஜனநாயகம் ஆகியவற்றைக் கைவிட்டுப் பேசப்படும் தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசியம் அல்ல. அது இனவாதமாகவும், சாதியவாதமாகவும்தான் இருக்க முடியும்.எனவே தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் சனநாயகத்திற்கானப்போராட்டத்தை முன்னெடுப்பது தான் நமது முதன்மைக் கடமையாக கருதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முதலில் நகரங்களில் பேசு பொருளாக்குவோம். 

ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்ற சனநாயக உணர்வை வளர்த்தெடுப்போம். இவை மட்டுமின்றி பா.ம.க வை அரசியல் அரங்கிலிருந்து தனிமைப்படுத்தவதற்காக சூளுரைத்து அதற்கான வியூகங்களை நாம் வகுக்க வேண்டும் என்று கூறி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.  

உரை குறிப்பு, தட்டச்சு : இளங்கோவன்

புகைப்படங்கள் : நுகும்பல் கிராமம் பா.ம.க-வின் தாக்குதலுக்கு பிறகு

No comments:

Post a Comment