Showing posts with label இலங்கை தூதரகம். Show all posts
Showing posts with label இலங்கை தூதரகம். Show all posts

Monday, March 4, 2013

சென்னையில் இலங்கை தூதரக முற்றுகை - நேரடி ரிப்போர்ட்



சிங்கள இனவெறி அரசால் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பெரும் கொந்தளிப்புடன் இன்று (மார்ச் 4, 2013) நடந்தது. தோழர்கள் பழ.நெடுமாறன்,வைகோ,கொளத்தூர் மணி,தமிமுன் அன்சாரி,பெ.மணியரசன்,தோழர் தியாகு,கவிஞர் தாமரை, வேல்முருகன்,மல்லை சத்யா, மே 17 திருமுருகன், த.வெள்ளையன், ஓவியர் டிராஸ்கி மருது, இயக்குனர் புகழேந்தி
உள்ளிட்ட பல கட்சிகள் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள்,உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமது கோரிக்கையையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.இப்போராட்டத்தில் சேவ் தமிழ்சு தோழர்களும் களத்தில் இருந்தனர்.

கடைசியாக நடந்த தூதரக முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள்,அத்துமீறல்கள் தமிழக காவல்துறையை கொஞ்சம் விழிப்படையச் செய்திருக்க வேண்டும்.நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து, லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, குளக்கரை சாலை முழுதும் காவல்துறை வாகனங்களும் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் அதிரடிப்படையினரும் குவிந்திருந்தனர். நிகழ்வை பதிவு செய்ய ஊடகங்களும் பெருமளவு வந்திருந்தனர்.ஒன்பது மணிக்கு சேரத் தொடங்கிய கூட்டம் நேரம் கூடக்கூட‌ தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது.சென்னையின் பல்முனைகளிலிருந்து தோழர்கள் லயோலா கல்லூரி அருகில் குவிந்த வண்ணம் இருந்தனர்.சிங்கள அரசை எதிர்க்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளோடு, இனப்படுகொலை கூட்டாளி இந்திய அரசையும் ஐ.நாவையும் கேள்விக்குள்ளாக்கும் பதாகைகளும் களம் முழுவதும் நிறைந்திருந்தன.

வழக்கமான ஆர்ப்பாட்டம்,முற்றுகை,கைது என்பதோடு அமையாமல் போராட்ட உணர்வெழுச்சி சற்று அதிகமாகவே இருந்தது. தோழர் வைகோ தொடர்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராட்ட முழக்கங்களை எழுப்பியபடி இருந்தார்.கருப்புக் கொடிகளோடு முழக்கமிட்டபடி, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையை தோழர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்க தொடங்கினர்.முழக்கமிட்டுக் கொண்டிருந்த போராட்டக்குழுவில் ஒரு பகுதியினர் ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தும் போது சற்றே பரபரப்பு தொற்றிக் கொண்டது. முழக்கத்தின் வீரியம் அதிகரித்தது. வழக்கமாக தயாரிப்புகளாக வைத்திருந்த தண்ணீர் குடங்களை காவல்துறை எடுத்துவந்து தீயை அணைக்க முயன்ற போது, தோழர்கள் அக்குடங்களை பிடுங்கி உடைத்தனர். இன்னும் ஒரு பகுதியினர் சாலையின் இருவழிகளிலும் அமர்ந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.ஒரு கட்டத்தில் முழு நுங்கம்பாக்கமே போக்குவரத்துக்கு வழியின்றி முடங்கிப் போனது.

"தோழர்கள் வன்முறையின்றி முந்திச் செல்லுங்கள்.ஆனால் அடக்குமுறைக்கு அஞ்சாமல் முன்னேறுங்கள்" என தோழர் வைகோ ஒலிபெருக்கியில் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.தோழர்கள் முன்னேறி தடுப்பரணை உடைத்தெறிய முயன்ற போது, காவல்துறையில் ஒரு இள ரத்தம், தோழர் ஒருவரின் கழுத்தில் அறைந்தது. திமிறிய கூட்டம், அந்த புதுப்போலிசை நோக்கி கொடிகளோடு அடிக்கப் பாய்ந்தது. ஒன்றிரண்டு வீசுகள் பதாகைகளோடு விழுந்தன.ஓடிவந்த காவல்துறை உயரதிகாரி, அந்த போலிசு இளைஞரை உடனடியாக ஒளித்துப் பதுக்கினார்.இதை எதிர்த்த தோழர்கள் அனைவரும் மல்லை சத்யா தலைமையில் அங்கேயே சாலையில் அமர்ந்து கைதாக மாட்டோம் என பிடிவாதத்தோடு போராட்டத்தை தொடர்ந்தனர்.பின் தோழர் பழ.நெடுமாறன் தோழர்களோடு பேசி,அமைதியாக கலைந்து சென்று காவல்துறை வாகனங்களில் ஏறி, போராட்டத்தை நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பழ.நெடுமாறன்,வைகோ உள்ளிட்ட தலைவர்களோடு 700க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகி, எழும்பூர் அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

போராட்டங்கள் உடனடி வெற்றிக்காக எழுதப்படுபவை அல்ல. போராட்டங்கள் வெற்றிக்கான பாதையின் முன்னகர்வுகள்.இக்கட்டத்தை கடக்காமல், வெற்றியை எட்ட முடியாது.உலகின் மிகப்பெரும் தேசிய இனங்களுள் ஒன்றான நம் தமிழினத்தின் உரிமைகள் மறுக்கப்படும் வரை இத்தகைய போராட்டங்கள் தொடரும். இத்தகைய உணர்வெழுச்சியும் உழைப்பும் தான் அப்போராட்டங்களுக்கு உரமேற்றும்.


==========================

இப்போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று கடலூரில் தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட தோழர் மணிக்கு வீர வணக்கங்கள்.




























முழு புகைப்படத் தொகுப்பைக் காண இங்கே சொடுக்கவும்.


===================================
=
========
==========================