Tuesday, December 17, 2013

இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை குற்றவாளி - நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்..
யார் இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? அவர்களது தீர்ப்பிற்கு உலக நாடுகள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை மட்டுமே இன்று வரை அது செய்து வருகின்றது. மேலும் இது அரசுகளின் கூட்டமைப்பாகும். இது அரசுகளைச் சாராத உலக‌ நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்கள் , எழுத்தாளர்கள், பண்பாட்டு, சமூகத் தலைவர்களை உள்ளிடக்கிய ஒரு அமைப்பின் தேவையை சர்வதேச அரசியல் வெளி உருவாக்கியது. 1966-67ல் வியட்நாமில் நடந்த போர் தொடர்பாகவும்,1974-76ல் நடந்த இலத்தின் அமெரிக்காவில் சர்வாதிகாரம் தொடர்பாகவும் நடைபெற்ற இரசல் தீர்ப்பாயத்தை தனது அடிப்படையாக கொண்டு 1979ல் உருவானது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். இதன் தலைமையகம் ரோமில் உள்ளது. இதுவரை 20 தீர்ப்பாயங்களை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியுள்ளது. ஐ.நா சபை போலல்லாமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அரசுகளின் கையிலில்லை, மக்களே அதன் பிரதிநிதிகள், இங்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சித்தாந்தம் கிடையாது. அதுமட்டுமின்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு நடுநிலையான அமைப்பு, அதற்கு இதுவரை இந்த தீர்ப்பாயம் நடத்திய 20 க்கும் மேற்பட்ட விசாரணைகளே சாட்சி. இந்த 20 விசாரணைகளின் அறிக்கையை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம் ..

http://www.internazionaleleliobasso.it/


2009 மே வரை ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை சர்வதேச சமூகமும், நாங்கள் தான் உலக பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்று நிற்கும் ஐ.நா சபையும், உலக நாட்டாமையுமான அமெரிக்க உள்ளிட்ட எந்த வல்லரசுகளோ, அமைப்புகளோ தடுக்காமல், வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அதற்கு பிறகான காலகட்டத்தில் சிங்கள படையினர் தங்கள் வீர பிரதாபங்களை காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த புகைப்படங்களும், காணொளிகளும் வெளிவரத் தொடங்கின. அப்பொழுதும் மேற்கூறியவர்கள் எல்லாம் கள்ள மௌனம் சாதித்தனர். இந்நிலையில் தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் மனித உரிமை அமைப்புகளும், பல அரசு சாரா அமைப்புகளும் சூலை மாதம் முதல் முறையிடத் தொடங்கினர். நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனக்கு கிடைத்த தரவுகள், செய்திகளை வைத்து நவம்பர்,19,2009 அன்று "சமாதானப் பேச்சுவார்த்தை முறிவுக்கு பின்னரான கால கட்டம்", "இறுதி போர்", "குறிப்பாக இறுதி மாதங்களில்(ஏப்ரல், மே-2009) நடைபெற்றவற்றை" விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன் படி அதற்கான பணிகளை தொடங்கிய தீர்ப்பாயம் 14 சனவரியில் இருந்து 16 சனவரி 2010 வரை தனது முதல் அமர்வை(விசாரணையை) நடத்தியது.


இதில் "போர்க்குற்றம், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை இலங்கை அரசு புரிந்துள்ளது" என்றும்,மேலும் இனப்படுகொலை நடந்தற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்றும், அதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை தேவைப்படுகின்றது என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. அதுமட்டுமின்றி இலங்கையில் நடைமுறையில் இருந்த அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைத்து இலங்கையை போரை நோக்கி நகர்த்திய குற்றத்திற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளும், தனது கடமையைச் செய்யத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையும் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விசாரணை அறிக்கை தான் சர்வதேச சமூகத்திற்கும், ஐ.நா சபைக்கும் அழுத்தத்தை கொடுத்தது. இதன் பின்னர் தான் ஐ.நா வின் பொதுச் செயலாளரால் ஒரு சிறப்புக் குழு அமைக்கப் பட்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான விசாரணை தொடங்கியது. சனவரி 2010-ல் நடந்த முதல் அமர்வின் தொடர்ச்சியாக திசம்பர் 7லிருந்து 10 ஆம் திகதி வரை ஜெர்மனியில் உள்ள ப்ரமன் என்ற நகரில் இரண்டாம் அமர்வு நடந்தது. இதில் இலங்கை இனப்படுகொலை செய்துள்ளதா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முக்கியத்துவம் என்ன? இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலை என்ற சொல்லை சர்வதேச சமூகமும், ஐ.நா.சபையும் தொடர்ந்து பேச மறுத்து வருகின்றனர். ஏனென்றால் எப்பொழுது இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது என்று சொல்லப்பட்டால், அடுத்த கட்டமாக ஈழத்தமிழர்களிடம் ஐ.நா சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தனி நாடு குறித்த பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும், எனவே தான் மேற்குலகும், ஐ.நா வும் இலங்கையில் நடந்தது போர்க்குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றம் என்பதோடு நிறுத்திக் கொள்கின்றது.
இலங்கையில் இனப்படுகொலை நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன என முதன் முதலாக கூறியது நிரந்தர மக்கள் தீர்ப்பாயே. அதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவை என்றும் சொன்ன தீர்ப்பாயம், இன்று தானே மீண்டும் இனப்படுகொலை தொடர்பாக விசாரித்து, இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை அரசு என்றும், மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் (இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்) ஈழத்தமிழர்கள் என்றும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் இதில் இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளன என்றும், இந்தியாவும் கூட்டாளியாக இருக்கக்கூடும் ஆனால் அதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவை என்றும் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் கூறியுள்ளது. இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என இராஜபக்சே பகிரங்கமாகவே கூறியுள்ளார். அதனால் இந்தியாவும் இலங்கையின் கூட்டாளி என்பதில் நமக்கு எந்த ஐயமும் இல்லை.நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இலங்கை அரசு மீதான இரண்டாம் அமர்வின் இறுதியில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை செய்தி...

------------

இலங்கையின் மீதான மக்கள் தீர்ப்பாயம் - இரண்டாம் அமர்வு
7-10 திசம்பர் 2013 - ப்ரமன், ஜெர்மனி.


இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது; இந்த இனப்படுகொலை குற்றத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இந்தியாவும் இலங்கையின் கூட்டாளியாக செயல்பட்டதற்கு மேலதிக ஆதாரங்கள் தேவைப்படுவதால் இந்தியா கூட்டாளியாக அறிவிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாம் அமர்வு இன்று (10 திசம்பர்) ஜெர்மனியில் உள்ள ப்ரமன் நகரில் தீர்ப்பு கூறலுடன் முடிவுற்றது. இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது, அது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என 11 நீதிபதிகளும் ஒருமனதாக தங்கள் தீர்ப்பில் கூறினர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் (இனப்படுகொலைக்குள்ளானவர்கள்) ஈழத்தமிழர்கள் என்ற தேசிய இனம் என்பதை தீர்ப்பாயம் குறிப்பிடுகின்றது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை அவர்களது அடையாளத்தை இன்னும் முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதையும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இனப்படுகொலை திட்டங்கள் 2009 மே மாதத்தில் அதன் இறுதி கட்டத்தை எட்டின. ஆனால் இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டத்தை இன்றும் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் இனப்படுகொலை என்பது ஒரு ஒரு திட்டம், அந்த திட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குற்றவாளிகள் நிலப்பரப்பை கைப்பற்றியவுடன் தங்களது இனப்படுகொலை செயல்திட்டத்தை மாற்றினார்கள். ‌மக்களை கொல்வதற்கு பதிலாக மற்ற பணிகளை செய்யத் துவங்கினார்கள். ஆனால் மக்கள் குழுவையும்,அவர்களது அடையாள‌த்தையும் அழிக்கும் அவர்களின் நோக்கம் ஈழத்தமிழின மக்களை உடலளிவிலும் ,மனதளவிலும் பெரிதாக காயப்படுத்துவதன் மூலம் இன்றும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.கீழ்க்காணும் செயல்களை இலங்கை அரசு செய்துள்ளது என்பது ஐயத்திற்கிடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பாயம் கருதுகின்றது.

அ) (ஈழத்தமிழ்) மக்கள் குழுவில் உள்ளவர்களை கொல்லுதல். இதில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளும், வேண்டுமென்றே மக்கள் மீது குண்டு வீசி தாக்கியதும், மக்களை "போரில்லாப் பகுதி" என்றழைக்கப்பட்ட பகுதிக்குள் ஒன்று சேரச் செய்து மிகப்பெரிய அளவிலான படுகொலைகளைத் திட்டமிட்டுச் செய்தது. இலங்கையின் இனப்படுகொலைத் திட்டத்தை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஈழத்தமிழ்ச் சமூகத் தலைவர்களை திட்டமிட்டு சதிக்கொலை செய்தது என எல்லாம் அடங்கும்.

ஆ) (ஈழத்தமிழ்) மக்கள் குழுவில் உள்ளவர்களுக்கு உடலளவிலும் , மனதளவிலும் பெரிய அளவில் காயங்களை ஏற்படுத்துதல், இதில் சித்ரவதை செய்தல், மனிதத்தன்மைக்கு கீழாக நடத்துதல், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், விசாரணை என்ற பெயரில் அடித்தல், உயிர்ப்பயத்தை உருவாக்குதல், உடலில் ஆறாவடுக்களை உருவாக்கும் அளவிற்கு காயப்படுத்துதல் என எல்லாம் அடங்கும்.

இ) மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களைத் திட்டமிட்டு செய்தல், இதில் *பாதிக்கப்பட்டவர்களை அவர்கள‌து வீடுகளிலிருந்து வெளியேற்றுதல், *தனியார் இடங்களை கைப்பற்றுதல், *மிகப்பெரியப் பகுதிகளை உயர் பாதுகாப்பு இராணுவ வளையங்களாக பிரகடனப்ப‌டுத்தி தமிழ் மக்களின் நிலங்களை இராணுவம் கையக‌ப்படுத்துதல் என எல்லாம் அடங்கும்.இதுமட்டுமின்றி கீழ்க்காணும் செயல்களுக்கும் ஆதாரம் உள்ளது என‌ தீர்ப்பாயம் கருதுகின்றது...


ஈ) ஒரு இனத்திற்குள்ளே பிறப்புகளை தடுக்கும் செயல்களை மேற்கொள்ளுதல், இதில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, கட்டாயக் கருக்கலைப்பை மேற்கொள்ளுதல் என எல்லாம் அடங்கும். இதை உறுதிப்படுத்தவும், இதே நிகழ்வு மற்ற தமிழர் பகுதிகளிலும் நடக்கின்றதா என்ற விசாரணையும் தேவைப்படுகின்றது. இதை வைத்தே இந்த செயலும் இனப்படுகொலை திட்டத்தில் ஒன்று என சொல்ல இயலும்.

இங்கிலாந்தும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இலங்கை செய்த இனப்படுகொலை குற்றத்தின் கூட்டாளிகளாவர். இதில் - ஆயுதங்களும், கருவிகளும் வழங்குதல், இவற்றை எல்லாம் அவர்கள்(இலங்கை) இனப்படுகொலைக்கு பயன்படுத்துவார்கள் எனத் தெரிந்தே தேவையான உதவிகளைச் செய்தல், என எல்லாம் அடங்கும்.

இலங்கை அரசினால் மட்டுமே தங்களது இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டு, தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும், தீர்ப்பாயத்தின் விசாரணையையும் அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, இந்தியா என்ற மூன்று நாடுகளும் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்தில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளனர் என தீர்ப்பாயம் நம்புகின்றது. மேலும் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை பார்க்க போதிய நேரமின்மையால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலையில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளார்கள் என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கின்றோம்.


30க்கும் அதிகமான நேரடி சாட்சிகளும், பல நிபுணர்களும், பிரதிவாதியின் தரப்பை வலுப்படுத்த தேவையான ஆதாரங்களை அளித்தனர், இந்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இக்குற்றங்கள் எல்லாம் இனப்படுகொலை குற்றத்திற்கு தேவையான அடிப்படை அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்று ரீதியாகவும் இக்குற்றத்திற்கு உதவிய கூட்டாளிகளையும் அடையாளம் காட்டுகின்றன.
இந்த இரண்டாம் அமர்வு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த காணொளியை பின்வரும் இணையத்தில் நீங்கள் பார்க்கலாம்.

http://ptsrilanka.org/

2009ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக 2010 சனவரி மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்த முதல் அமர்வின் தொடர்ச்சியாக இனப்படுகொலையை உறுதிப்படுத்தவே ஜெர்மனியில் உள்ள ப்ரமன் நகரில் இந்த இரண்டாவது அமர்வை நாங்கள் மேற்கொண்டோம்.

பன்னாட்டு மனித உரிமை அமைப்பு ப்ரமன்(IMRV- International Human rights Association Bremen), இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் மன்றம் (Irish forum for peace in Sri Lanka - IFSPL) என்ற இரண்டு அமைப்புகளும் தாக்கல் செய்த அறிக்கைகளை ஏற்று இலங்கை தொடர்பான இந்த இரண்டு அமர்வுகளையும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியது. முதல் அமர்வைப் போலவே, இந்த அமர்விலும் கலந்து கொண்ட நீதிபதிகள் குழுவில் - இனப்படுகொலை ஆராய்ச்சி தொடர்பான நிபுணர்களும், முன்னாள் ஐ.நா அதிகாரிகளும், பன்னாட்டு சட்ட நிபுணர்களும், பிரபல மனித உரிமை , சமாதானச் செயற்பாட்டாளர்களையும் கொண்டிருந்தது.

10 திசம்பர் 2013
மனித உரிமை நாள்

PERMANENT PEOPLES’ TRIBUNAL
General Secretary:
GIANNI TOGNONI (ITALY)
GENERAL SECRETARIAT: VIA DELLA DOGANA VECCHIA 5 ‐ 00186 ROME
Tel/Fax:0039 06 6877774
E‐mail; tribunale@internazionaleleliobasso.
Web: http://www.internazionaleleliobasso.it

--------------------------

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்னெட் நிருபர் "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பின் மேல் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியது சரியா என்ற‌ கேள்விக்கு பதில் சொன்ன பர்மிய சனநாயக செயற்பாட்டாளரும், நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் குழுவில் ஒருவருமான‌ மௌங் சர்னி - தீவிரவாதிகள் என்ற சொல்லே ஒரு "மேலோட்டமான,செயலுத்தி கொண்ட ஒரு அரசியல் பதம்". இதை உலக நாடுகள் தங்களது புவிசார் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றார் அவர்.

தமிழீழ விடுதலை புலிகளையும், நெல்சன் மண்டேலா பங்கு கொண்ட ஆப்பிரிக்க‌ தேசிய காங்கிரசு அமைப்பையும் ஒப்பிட்டு பேசிய அவர், சில செயல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முழு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என வரையறுக்கக்கூடாது என்றார்.


குறிப்பு: இக்கட்டுரையில் முதல் ஐந்து பத்திகளுக்கு பிறகு வருபவை அனைத்தும் மொழியாக்கம் செய்யப்பட்டவை. ஆங்கில மூலங்கள் தரவுகளாக கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மே 17 இயக்கம் சார்பாக தோழர்.திருமுருகனும், தோழர்.உமரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த இரண்டாம் அமர்வில் கலந்துகொண்டனர்.

தரவுகள்:
1. http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/426-sri-lanka-guilty-of-genocide-against-tamils-with-uk-us-complicity-ppt-rules

2. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36878


நற்றமிழன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம்


Monday, December 9, 2013

இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை
இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் - அரங்கக் கூட்டம்


அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் பரிமளா
தோழர் பரிமளா:

மோடி அலை வீசும் இந்த தேர்தல் கால கட்டத்தில், பெரும்பான்மை நடுத்தர வர்க்க இந்துத்துவ சமூகம் மோடிக்கும், பா.ஜ.கவுக்கும் ஆதரவான மன நிலையில் உள்ளது. இச்சூழல் தான் இக்கூட்டத்தின் தேவையை உணர்த்துகிறது. ஒடுக்கப் படும் சமூகமாக இருக்கும் நாம் தினம் தினம் ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறோம். ஒன்றரை லட்சம் மக்களை ஈழத்தில் இழந்த வலியும், முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் இடிக்கப் பட்ட போது ஏற்பட்ட வேதனையையும் நாம் நன்கு அறிவோம். 450 ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் வரலாற்று சின்னமாக வீற்றிருந்த, அவர்கள் தொழுகை நடத்தக் கூடிய ஒரு மசூதி இடிக்கப் படும் போது, அவர்கள் எத்தகையதொரு துயரத்தையும், மனவேதனையையும் அடைந்திருப்பார்கள் என்பதும் நமக்கு புரிய வேண்டும். ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு நிகழும் போதும் இஸ்லாமியர்களே கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்கள் எந்தவொரு ஆவணமும், சாட்சியமும் இல்லாமலேயே, தம்மையே நீதிமன்றங்களாக, தாமே நீதிபதிகளாக இருந்து, முசுலிம்களை தீவிரவாதிகள் என்று பிரகடனப் படுத்தும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம்.
மேலும் கூட்டத்தின் பேச்சாளர்களை அறிமுகப் படுத்தி வைத்து பேச அழைத்தார் தோழர் பரிமளா.


தோழர் ஸ்நாபக் விநோத்:-

.

டிசம்பர் 6, பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களான தோழர்கள், ஸ்நாபக் விநோத் மற்றும் ஜோன்சன் ஆகியோர் சென்னையில் ஐ.டி துறையினரிடமும், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்தினரிடமும், அதற்கு நேர் எதிரான அடித்தட்டு வர்க்க தொழிலாளர்களான கூலி வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ வியாபாரிகள், சாக்கடை சுத்தம் செய்வோர் ஆகியோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினர். நடுத்தர வர்க்க, நகர்ப்புற மக்களின் இஸ்லாமியர்கள் மீதான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டி இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

அதில் நடுத்தர வர்க்கத்தில் 20% இஸ்லாமியர்களுக்கு எதிரான‌ மனநிலையில் இருப்பதாகவும், அடித்தட்டு மக்களை இன்னும் அந்த நோய் பீடிக்கவில்லையென்றும் தெரிவித்தார். ஆனால் 80% நடுத்தர வர்க்க மக்களுக்கு, பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்துக்கள் கைது செய்யப் படுகிறார்கள் என்ற செய்தி கூட சென்று சேரவில்லையென்றும், 30% அடித்தட்டு மக்கள் அந்த செய்தி தெரியும் என்றும் கருத்து தெரிவித்தனர். இக்கருத்து கணிப்பு பற்றி, பேசு முன்னர் 1991 சோவியத் சிதறுண்டதற்கு பிறகு, உலகளாவிய பச்சைக்கு எதிரான, இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை உலகெங்கும் எப்படி கட்டமைக்கப் பட்டது என்றும், இந்தியாவில் காங்கிரசும் பா.ஜ.கவும் எப்படி இந்த கட்டமைப்பை, உலகமய தாராளமய பொருளாதார கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, பயன்படுத்தினார்கள் என்றும் தெரிவித்தார்.


தோழர். கீதாஆய்வாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான தோழர் வ.கீதா, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் குறித்து வரலாற்றுப் பூர்வமாக அணுகி பேசினார். மேலும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு, மக்கள் எத்தகைய குழம்பிய மனநிலையில் இருக்கிறார்கள் என்றும், சுதந்திரத்திற்கு முன்பான கால கட்டங்களில், இஸ்லாமிய எதிர்ப்பை ஊடகங்கள், இந்த அளவு ஊதிப் பெருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.

80களுக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் எத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கொண்டிருந்தனர். அ.தி.மு.க அரசு நேரடியாகவே இந்து மத ஆதரவும், ஆதிக்க சாதி ஆதரவையும் கொண்டு விளங்கியது. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு காவல்துறையுமே இந்து அடையாளங்களோடு வளர்த்தெடுக்க அ.தி.மு.க அரசு உதவியிருக்கிறது எனவும் தோழர் வ.கீதா விளக்கினார்.திராவிட கொள்கைகளைக் கொண்ட தி.மு.க வும் ஓட்டரசியலுக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த கதையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

92க்கு பிறகு, இந்த இஸ்லாமிய எதிர்ப்பு பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. அதில் ஊடகங்களின் பங்களிப்பு, சமீபத்திய உதாரணமாக போலிசு பக்ரூதின் வழக்கில், எத்தகைய இந்துத்துவ சார்பு தன்மையோடு ஊடகங்கள் நடந்து கொண்டன? ஊடகங்களே நீதிமன்றங்களாக இருந்து பொய்யாக தீர்ப்பு வழங்கிய விதம், அதே நேரம் CBI காஷ்மீரத்தில் அரங்கேற்றிய பாலியல் ( ஷோஃபியான் வழக்கு) வன்கொடுமைகளை திட்டமிட்டு செய்தியாக வரவிடாமல் அரசு எந்திரம் தடுத்தது, ஊடகங்களும் அச்செய்திகளை இருட்டடிப்பு செய்தமை ஆகியவை குறித்து பகிர்ந்து கொண்டார்.

மேலும் மதக்கலவர தடுப்புச் சட்டத்தை அ.தி.மு.க அரசு எதிர்க்கும் காரணங்களையும் அதன் போலித் தனங்களையும் அம்பலப் படுத்தி பேசினார் தோழர் கீதா. மாநில அரசின் உரிமைகளை பறிப்பது முதல் காரணமாகவும், முடிவெடுக்கும் அதிகாரத்தின் மீதே கை வைப்பதாகவும் அதாவது காவல்துறையை மீறி விசாரணைகள் நடத்தப் படக்கூடாது என்று கவலைப் படுவதாகவும் தமிழக அரசு இம் மசோதாவை எதிர்க்கிறது. இதிலிருந்தே இவர்கள் மதக்கலவரங்களை எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள் என்பதும், முசுலிம்கள் மீது எந்த கரிசனமும் இல்லையென்பதும் விளங்கும்.

மேலும் இஸ்லாமியர்களிடையே எந்தவொரு விவாதத்தையும் நடத்தாமலேயே அவர்களை பிற்போக்கு வாதிகள் என்று சித்தரிக்கிறார்கள். அவர்கள் விசுவாசமற்றவர்களாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாகவும் , நவீன காலத்திற்கு உகந்தவர்களல்ல என்றும் ஊடகங்களில் பொய்ப் பரப்புரை செய்யப் படுகிறது. ஆக இந்திய அரசு என்பது பிறவியிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கொண்டதாகத் தான் இருக்கிறது. Structurally Indian State is anti-Muslim.

தோழர் செந்தில்
சேவ் தமிழ்சு இயக்கத் ஒருங்கிணைப்பாளர். செந்தில், உலக மயமாக்கல் கொள்கையையும் தனியார் தாராளமயமாக்கச் சூழலில் எப்படி இந்துத்வ சக்திகள் எப்படி வளர்ந்தார்கள் என்பது பற்றி பேசினார். மேலும் இந்திய சுதந்திரமே, ஜனநாயக போராட்டமாக அமையாமல், வேத கால பெருமையுடைய இந்தியாவை அந்நியர் ஆள்வதா என்ற இந்துத்துவ சிந்தனையிலிருந்து தான் உதயமானதாக தெரிவித்தார். இந்திய தேசியவாதமும் சிங்கள பெளத்த பேரினவாதமும் இந்த புள்ளியில் தான் ஒன்றிணைவதாக குறிப்பிட்டார்.

1984ல் தான் இந்தியாவில் சங்க பரிவாரங்கள் அரசியல் சக்திகளாக வளர்த்தெடுக்கப் பட்டார்கள். முதலாளித்துவமும், இந்த்துவமும் தனி மனிதனின் சிந்தனைகளிலிருந்து தான் ஒன்றிணைகின்றன. மனிதன் நல்லவனாக இருந்தால் வீடு முன்னேறும். வீடு முன்னேறினால் தெரு முன்னேறும், தெருக்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று இந்துத்துவ சிந்தனையைத் தான், முதலாளித்துவமும் தனி மனிதனாக இருந்து உழைத்து முன்னேறு என்று ஒத்ததிர்வுகளாக கருத்துகளை முன் வைக்கின்றன. அத்தகைய சங்க பரிவாரங்களின் வர்க்க அடையாளமாக பார்ப்பன பனியாக்கள் தான் இருந்தனர். அவர்கள் அரசியல் தளத்தில் வளர்ந்ததற்கு பிறகு, பண்பாட்டு தளத்தில் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்கும் பரப்புரைகளை மேற்கொண்டனர். தொலைக்காட்சி தொடர்களில் ராமாயணம் மகாபாரதம் ஒளி பரப்புவது, ரத யாத்திரை மேற்கொள்ளுதல், என்று தீவிரமாக கருத்து பரப்புரைகளில் ஈடுபட்டனர்.

உலகமயமாக்கல் கொள்கையை ஆதரிக்கக் கூடிய , அரசியல் ரீதியாக அதனை எவ்வித தங்கு தடையுமின்றி மக்களிடையே திணிக்க, இந்துத்துவ சக்திகளை வளர்த்தெடுத்தல் இந்திய அரசுக்கு அத்தியாவசியமனதாக இருக்கின்றது.


தோழர் அப்துல் சமது


த.மு.மு.க பொதுச்செயலாளர் தோழர்.அப்துல் சமது பேசுகையில் மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்துக்களுக்கு எதிராக மாபெரும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று திரிபு தான். ஜோதி பா பூலே வருணாசிரம பார்ப்பனிய தருமங்களை கடுமையாக எதிர்த்தவர்களுள் முதன்மையாக இருந்தார். அதற்கு முன்பு, மராட்டியத்தில் சாஹூ மஹராஜ் என்ற மன்னர் 50% பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் இட ஓதுக்கீடு நடைமுறைப் படுத்தப் பட்ட போது தான், அங்கிருந்த சித் பாவன பார்ப்பனர்கள், தம் கொள்கைகளுக்கு எதிராக உள்ள இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு துவக்கி வைத்தனர்.


1893 புனேவில் தான் முதன் முதலாக இந்து முசுலிம் கலவரத்தை நடத்தினர். 80களுக்கு பிறகான கால கட்டங்களில், அது தொடர்ந்தது. பொது இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, நபிகள் நாயகத்தை கொச்சை படுத்துவது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டுக்கறி உண்ணும் தலித்துகளையும், இஸ்லாமியர்களையும் கேவலமாக பேசுவது, விநாயகர் ஊர்வலங்களில் மசூதிகளுக்கு முன்பு திரண்டு, “பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு”, “துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு” போன்ற அறுவெறுக்கத் தக்க முழக்கங்களை இட்டு, திட்டமிட்டு கலவரங்களுக்கு முகாந்திரம் அமைப்பது என்று இந்துத்துவ சக்திகளின் இஸ்லாமிய வெறுப்பின் தொடர் நிகழ்வுகளை தோழர் அப்துல் சமது பதிவு செய்தார்.இஸ்லாமியர்கள் எப்போதும் பிரிவினையை விரும்பாதவர்களாகவும், சமூக நீதியை மட்டுமே அவர்களின் நோக்கமாகவும் கொண்டே போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் அரேபிய இறக்குமதிகளல்ல. இங்குள்ள தீண்டாமை, சாதிக் கொடுமை தாங்க முடியாமல் தான் இசுலாத்தை தழுவியர்களாக இருந்தனர். அதனால் தான் சேரமான் பள்ளிவாசல் இன்று இந்தியாவின் முதல் பள்ளிவாசலாக கேரளாவில் அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.


மேலும் பாபர் மசுதி குறித்த வழக்கில், சங்க பரிவாரங்கள் அங்கு சிலையை திருட்டுத் தனமாக கொண்டு போய் வைத்தாலும், 1986ல் அலகாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கே வழிபடும் உரிமையை வழங்கிற்று எனவும், மேல் முறையீடு செய்யப் போனால், உயர் நீதிமன்றமும் அதை மறுக்காமல் வழிமொழிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இன்று பயங்கரவாதிகளாக சித்தரிக்கப் படும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியும், அதே இந்துக்கள் கைது செய்யப் பட்டாலோ அல்லது அவர்கள் வழக்கை கையாளும் போதோ நடைபெறும் பாரபட்ச நடைமுறைகளைச் சாடி பேசிய அவர், இந்தியா நிச்சயம் மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியாது என இந்திய அரசின் போலி மதச் சார்பின்மையை சாடி பேசினார்.
சிறப்பு பேச்சாளர்கள் பேசி முடிந்த முன், கலந்துரையாடல் நடைபெற்றது. கேள்விகள் கேட்கப் பட்டன. அதோடு பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

ஒடுக்கப் பட்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே போராட வேண்டியிருக்கும் இச்சூழலில், அனைத்து சனநாயக முற்போக்கு இயக்கங்களும் ஒடுக்கப் பட்ட அம்மக்களுக்காக இது போன்ற கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டும் என்று பரவலாக கருத்து பதியப் பட்டது. கொட்டும் மழையிலும் எழுச்சியுடன் நடைபெற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.Thursday, December 5, 2013

பாபர் மசூதி இடிப்பும் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறையும்

இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும்,அடுத்த சில நொடிகளில் தாடி வைத்த ஒரு முகம் சிவப்பு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, தலைப்புச் செய்திகளில் மீண்டும், மீண்டும் பெரிதாக்கிக் காட்டப்படும். இவர் இந்தியன் முஜாஹிதினைச் சேர்ந்தவர். இவர் தான் அந்த குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று பரபரப்பாக, எடிட் செய்யப்பட்ட கொட்டை எழுத்துகளில், ஊடகங்களில் பிரைம் டைம் செய்திகளாக‌ வெளியாகி கொண்டிருக்கும். கவனமாக பக்கத்தில் ஒரு கேள்விக்குறி போட்டப்பட்டிருக்கும்.. வேறொன்றுமில்லை. ஊகிக்கிறார்களாம். குண்டு வெடித்த‌ இட‌த்திற்கு, மோப்ப‌ நாயே போய்ச் சேர்ந்திருக்காது, அதற்குள்ளாக குற்றவாளியை எப்படித் தான் கண்டுபிடிக்கின்றார்களோ !!எளிதில் ச‌ந்தேகிக்க‌லாம். க‌ற்ப‌னைக்கெட்டிய‌வாறு ஊகிக்க‌லாம். நிரூபிக்க‌த் தேவையில்லை. எளிதில் கைது செய்ய‌லாம். இது தான் இஸ்லாமிய‌ர்க‌ள் மீது இந்திய‌ அர‌சும் ஊட‌க‌ங்க‌ளும் கொண்டுள்ள‌ நிலைப்பாடு. ஆஜ்மீர் த‌ர்கா, தானே, நாண்டெட், ம‌க்கா ம‌ஸ்ஜித் ஆகிய‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டு வெடிப்பு நட‌ந்த‌ போது, இப்ப‌டித் தான் ப‌ல‌ இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். பயங்கரவாதிகள் என்று அடையாள‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்டு, ஊட‌க‌ங்க‌ள் முன் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். பிற‌கு அவ‌ர்க‌ள் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌டாம‌ல், அபின‌வ் பார‌த் என்று இந்துத்துவ‌ அமைப்பு, இக்குண்டு வெடிப்புக‌ளுக்கு பொறுப்பாக குற்ற‌ஞ்சாட்ட‌ப் ப‌ட்டு கைது செய்ய‌ப்ப‌ட்ட‌து. அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் வழக்கம் போல லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள் தான் இதன் பின்னே உள்ளது என அரசு வழக்கம் போல பொய்யான அறிக்கைகளை விட்டது.ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப்பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர். ச‌ங்க‌ ப‌ரிவார‌ங்க‌ளுட‌ன் இந்திய‌ இராணுவ‌ம்,உள‌வுத்துறை ஆகிய‌ அனைத்து அர‌சு எந்திர‌ங்க‌ளின் கூறுக‌ளும் இணைந்தே செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர் என்ப‌த‌ற்கு இது ஒரு எளிய‌ உதார‌ண‌ம். இந்தக் குற்றங்களின் பின்னணியையும், பிரக்யா சிங் தாகூர் சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட இந்து சாமியார்களையும் அவர்களின் வலைப்பின்னலையும் கண்டு பிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்திய, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை ஆணையர், 26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலினூடே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். காவி பயங்கரவாதத்தை தோலுரிக்காமல் விட மாட்டேன் என்ற சவாலுடன் கிளம்பிய கர்கரேவுக்கு சிவசேனை, சங்க பரிவார கும்பல்களால் தொடர் மிரட்டல் வந்திருக்கிறது என்பதை காங்கிரசு அமைச்சர் திக் விஜய்சிங்,கர்கரே தன்னுடன் பேசிய தொலைபேசி உரையாடல்களை கொண்டு உறுதி செய்திருக்கிறார். ஊடகங்களும் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போது, பரபரப்பாக்கும் ஊடகங்கள், அவர்கள் விடுவிக்கப்படும் போதும் சங்க பரிவாரங்கள் கைது செய்யப்படும் போதும் அமைதியாக அச்செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. முஸ்லிம்கள் கைதாகும் போது தீவிரவாதி கைது செய்யப் பட்டான், அவன் இவன் என்று மிகக் கேவலமாக சித்தரிக்கும் அதே ஊடகங்கள், இந்து இளைஞர்கள் கைது, இந்தியன் முஜாஹிதினால் மூளைச் சலவை செய்யப்பட்டனரா? என்று பவ்யமாக பம்முவதையும் பார்க்கிறோம். இதற்கு நல்ல உதாரணம், வெகு சமீபத்தில் மோடி வருகையை ஒட்டி, வெடித்த பாட்னா குண்டுகள்.போராடும் ம‌க்க‌ள் மீதோ, ஒரு இன‌த்தின் மீதோ ஒடுக்குமுறை செலுத்துவது என்று முடிவெடுத்து விட்டால், அரசு இயந்திரம் முத‌லில் செய்வ‌து க‌ருத்துருவாக்க‌ம். வெகும‌க்க‌ள் ம‌த்தியில் போராடுப‌வ‌ர்க‌ளின் ந‌ன் ம‌திப்பைச் சீர்குலைப்ப‌து, தீவிர‌வாதிக‌ள் என்று அடையாள‌ப் ப‌டுத்துவ‌து, அந்நிய‌ ஏஜென்டுக‌ள், அந்நிய‌ ச‌தி என்று முத்திரை குத்துவ‌து.மண்ணைக் காக்க‌ போராடும் விவசாயிக‌ள் அனைவ‌ரும் ந‌க்ச‌லைட்டுக‌ள், இயற்கை வளங்களை காக்கப் போராடும் ப‌ழ‌ங்குடியின‌ர் அனைவ‌ரும் மாவோயிஸ்ட்டுக‌ள், கூடங்குள அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் அந்நிய நிதி பெறும் தேசத் துரோகிகள், இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். இது தான் அரசு எந்திரங்கள் இடையறாது ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்துருவாக்கத்தின் விளை பொருட்கள்.'முஸ்லிம் தீவிரவாதம்' பற்றி மிக அதிகமாகப் பேசப் பட்டுவரும் நம் நாட்டில் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசப்படுவதில்லை. 1992 ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட நிகழ்வு இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை என்பது நடைமுறையில் இல்லை என்பதை உலகில் அம்பலமாக்கிய ஒன்றாகும். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் எல்லோரும் இந்து பெரும்பான்மைவாதத்திற்கும் இந்துத்துவ பாசிசத்திற்கும் எதிராகவும் போராட வேண்டிய கடமையை உணர்த்தி நிற்கும் நாள். மேலும், ’வளர்ச்சி’ என்ற பெயரில் பா.ஜ.க வை வரவேற்கும் போக்கு பெருகி வரும் இன்றைய சூழலில், இந்துத்துவ வெறி அரசியல் இது வரை இச்சமூகத்தில் விளைவித்த தீங்குகளை நினைவுப்படுத்த வேண்டிய தேவையும் அதிகமாகின்றது.

>

நிச்சயமாக இதில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும்இருக்கக் கூடும். மாற்றுக் கருத்துகளுக்கு இடையேயானப் போராட்டம் தான் கருத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. மாற்றுக் கருத்து இருப்பினும் இந்த கருத்தரங்கத்திற்கு வருமாறு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக அன்போடு அழைக்கிறோம். திறந்த மனதுடன் நேரில் விவாதிப்போம்.

Monday, December 2, 2013

மின்வெட்டுக் காலங்களும் - கூடங்குள அணுமின் நிலையக் கதைகளும்கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவிய‌ போதெல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தான், மின் தட்டுப்பாடு குறையும். தமிழ்நாடு பெரும் வளம் பெறும், தொழில் வளம் பெருகும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களால் தான் அந்த மடை திறக்காத மின்சார வெள்ளம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களால் தான் மின் வெட்டு நிலவுகிறது என்று ஒரு மாபெரும் பொய் பரப்புரையை ஊடகம் முழுதும் அரசு பரப்பியது. ஆனால் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கி எத்தனை நாட்கள் ஆகின்றது. தமிழகத்தில் இன்று நிலவும் கடும் மின்வெட்டுக்கு அவர்களால் குறைந்த பட்சம் சோளப் பொறியாவது அளக்கும் திராணியிருக்கிறதா? மின் உற்பத்தி தொடங்கியாகி விட்டது. பிளக்கை மாட்டி சுவிட்சைப் போடுங்கள். மின்சாரம் பிய்த்துக் கொண்டு வருவதை உணர்வீர்கள். என்றெல்லாம் கூவிக் கும்மியடித்த அணுமின் வளாக அதிகாரிகளும் மத்திய அரசும் கொஞ்சம் மக்கள் முன் வந்து அவர்களின் வழக்கமான‌ வாய்ச்சவடால்களை இப்போது அவிழ்க்கட்டுமே!இப்பொழுது தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கியிருக்கின்றது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 மணி நேரமும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 6 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமும், நகர்ப்புறங்களில் அறிவிக்கப்படாத நிலையிலும் மின் வெட்டு வழக்கமாகி இருக்கிறது.சிறு குறு தொழில்முனைவோர் மீண்டும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடும் மின் தட்டுப்பாடுக்கான காரணங்களாக அரசு சொல்லும் சாக்கு போக்குகளை கவனிக்க வேண்டும்.பருவமழை சரியாக கிடைக்கவில்லையாம்.மேலும் தீபாவளி சமயங்களில் மின் நுகர்வு அதிகமாக இருந்ததாம். அதாவது மக்கள் தான் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தி, மின் தட்டுப்பாடுக்கு வழி செய்து விட்ட மாதிரி இருக்கிறது இவர்களின் பதில். இன்னும் கொஞ்சம் மேலே போய், மக்களே மின் வாரிய நிலையங்களுக்கு சென்று ஃபியூஸை பிடுங்கி விடுகிறார்கள் என்று கூட தினமலரில் செய்தி வரலாம். மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்ற அடிப்படை அறிவியல் தெரியாத மூடர்களே தீபாவளி நேரத்தில் அதிகம் செலவு செய்து விட்டார்கள், அதனால் தான் இப்பொழுது மின்வெட்டு எனக்கூறுகின்றார்கள்.
காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டதும் மின் தட்டுப்பாடுக்கான ஒரு காரணமே என்பது அவர்கள் முன்வைக்கும் அடுத்தச் சாக்கு. சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவைகளெல்லாம், பெருகி வரும் மின் தேவைக்கு போதுமானதாக இருக்காது. அணு மின்சாரமே தீர்வு என்று அணு ஆற்றல் கொள்கைக்கு கொடி பிடித்தவர்கள், தற்போது சேம் சைடு கோல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் காற்றாலை மின்சாரத்தை மட்டும் நம்பியா தமிழகம் இருக்கிறது? இன்று தமிழகத்தின் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முக்கி முனகி தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. முறையான பராமரிப்பு இல்லை. அல்லது பராமரிப்புகளுக்கான செலவீனங்கள் குறித்து அரசுக்கு போதுமான அக்கறை இல்லை.

தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களின் தற்போதைய நிலை:

1. வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட இரண்டாவது அலகில் உள்ள இரண்டு யூனிட்டுகளும் பழுதானதால் சுமார் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

2. மேட்டூர், வ‌ல்லூர் அன‌ல்மின் நிலைய‌ங்க‌ளில் ப‌ராம‌ரிப்பு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ மின் உற்ப‌த்தி நிறுத்தம்.

3. தூத்துக்குடி அன‌ல்மின் நிலைய‌த்தில் தொட‌ர்ந்து ப‌ழுது. மூன்றாவ‌து அல‌கின் கொதிக‌ல‌னில் கோளாறு ஏற்ப‌ட்டு ச‌ரி செய்ய‌ப்ப‌ட்டு இய‌ங்குமுன், மீண்டும் இய‌ந்திர‌க் கோளாறு என்று மின் உற்ப‌த்தி நிறுத்த‌ம். ப‌ழுதுக‌ள் ம‌ட்டுமில்லாம‌ல், தூத்துக்குடி அன‌ல் மின் நிலைய‌த்தில் அடிக்க‌டி நிக‌ழும் தீ விப‌த்துக‌ள்.
ஒவ்வொரு முறை அன‌ல் மின் நிலைய‌ங்க‌ளில் ப‌ழுது ஏற்ப‌டும் போதும், ப‌ராம‌ரிப்பு ப‌ணிக்காக‌ நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றும் இன்னும் ஓரிரு நாளில் மின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ப் ப‌டும் என்றும் ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வெளியிடுவ‌து இவ‌ர்க‌ளின் வாடிக்கையாக‌ இருக்கிறது. அரசு நடத்திவரும் மின் நிலையங்கள் வேண்டுமென்றே சரியாக பராமரிக்கப்படுவதில்லை, அப்பொழுது தானே எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கமுடியும்....
ம‌த்திய‌ அர‌சின் வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்தில், ஆற்றல் சார் ஆய்வுக‌ளுக்கு ஒதுக்க‌ப்ப‌டும் தொகையில் 25 விழுக்காடு, அணுச‌க்தி ஆய்வுக‌ளுக்கு மட்டுமே ஒதுக்க‌ப்ப‌டுவ‌து, மத்திய அரசின் ஊதாரித் தனம் என்ப‌து ம‌ட்டுமின்றி, "நான்" "என‌து த‌லைமையிலான‌ அர‌சு" என‌ அட‌க்க‌மே உருவான தமிழக முதல்வர், மரபு சார் அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தாமல், மாற்று எரிசக்திகளுக்கான தேவை குறித்து சட்டமன்றங்களில் விவாதிக்காமல், சீமான்கள் விளையாடும் செஸ் போட்டிகளுக்கும்,கலை நிகழ்ச்சிகளுக்கும் மக்களின் வரிப்பணத்தையும், அரசுகளின் அலுவல் நேரத்தையும் ஊதாரித்தனமாக செலவிடுவதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.


கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதாகவும், ஜனவரிக்கு மேல் 1000 மெகாவாட் உற்பத்தி அளவை அடைந்து விடுவோம் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிக்கடி வெளியிடுகிறார். இது போன்று பொய்யான தகவல்களை, வாய்ச்சவடால்களை அவ்வப் போது வெளியிடுவது இந்திய அணுசக்திக் கழக புனிதப் பசுக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஹோமி பாபா காலத்திலிருந்து கடந்த மூன்று பத்தாண்டுகளாக, இவர்களின் கையாலாகாத திறன் ஏற்கெனவே அம்பலமான ஒன்று தான். ஆனால் இன்றோ , கடுமையான மின்வெட்டு நிலவும் நேரத்தில் கூட, தமிழகத்தில் அது ஒரு விவாதப் பொருளாக இன்னும் மாறாமல், ஒரு திட்டமிட்ட ஊடக இருட்டடிப்பு நடந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம்.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உச்சமடைந்த நேரத்திலும், கடுமையான மின்வெட்டு இருந்தது. அப்போதெல்லாம் மின்வெட்டுக்கு போராட்டக்காரர்கள் தான் காரணமென்று ஊடகங்கள் முழுதும் ஒரு மாய பிம்பம் உருவாக்கப் பட்டது. இப்போது அந்த காரணம் என்ன ஆனது? அணு உலை திறக்கப் பட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என பரப்புரை செய்தவர்களெல்லாம், இன்று தமிழகத்தில் மீண்டும் உருவெடுத்திற்கும் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

-நன்றி - விகடன், Cartoonist.பாலா