Monday, December 9, 2013

இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை




இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் - அரங்கக் கூட்டம்


அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் பரிமளா




தோழர் பரிமளா:

மோடி அலை வீசும் இந்த தேர்தல் கால கட்டத்தில், பெரும்பான்மை நடுத்தர வர்க்க இந்துத்துவ சமூகம் மோடிக்கும், பா.ஜ.கவுக்கும் ஆதரவான மன நிலையில் உள்ளது. இச்சூழல் தான் இக்கூட்டத்தின் தேவையை உணர்த்துகிறது. ஒடுக்கப் படும் சமூகமாக இருக்கும் நாம் தினம் தினம் ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறோம். ஒன்றரை லட்சம் மக்களை ஈழத்தில் இழந்த வலியும், முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் இடிக்கப் பட்ட போது ஏற்பட்ட வேதனையையும் நாம் நன்கு அறிவோம். 450 ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் வரலாற்று சின்னமாக வீற்றிருந்த, அவர்கள் தொழுகை நடத்தக் கூடிய ஒரு மசூதி இடிக்கப் படும் போது, அவர்கள் எத்தகையதொரு துயரத்தையும், மனவேதனையையும் அடைந்திருப்பார்கள் என்பதும் நமக்கு புரிய வேண்டும். ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு நிகழும் போதும் இஸ்லாமியர்களே கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்கள் எந்தவொரு ஆவணமும், சாட்சியமும் இல்லாமலேயே, தம்மையே நீதிமன்றங்களாக, தாமே நீதிபதிகளாக இருந்து, முசுலிம்களை தீவிரவாதிகள் என்று பிரகடனப் படுத்தும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம்.
மேலும் கூட்டத்தின் பேச்சாளர்களை அறிமுகப் படுத்தி வைத்து பேச அழைத்தார் தோழர் பரிமளா.


தோழர் ஸ்நாபக் விநோத்:-

.

டிசம்பர் 6, பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களான தோழர்கள், ஸ்நாபக் விநோத் மற்றும் ஜோன்சன் ஆகியோர் சென்னையில் ஐ.டி துறையினரிடமும், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்தினரிடமும், அதற்கு நேர் எதிரான அடித்தட்டு வர்க்க தொழிலாளர்களான கூலி வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ வியாபாரிகள், சாக்கடை சுத்தம் செய்வோர் ஆகியோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினர். நடுத்தர வர்க்க, நகர்ப்புற மக்களின் இஸ்லாமியர்கள் மீதான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டி இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

அதில் நடுத்தர வர்க்கத்தில் 20% இஸ்லாமியர்களுக்கு எதிரான‌ மனநிலையில் இருப்பதாகவும், அடித்தட்டு மக்களை இன்னும் அந்த நோய் பீடிக்கவில்லையென்றும் தெரிவித்தார். ஆனால் 80% நடுத்தர வர்க்க மக்களுக்கு, பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்துக்கள் கைது செய்யப் படுகிறார்கள் என்ற செய்தி கூட சென்று சேரவில்லையென்றும், 30% அடித்தட்டு மக்கள் அந்த செய்தி தெரியும் என்றும் கருத்து தெரிவித்தனர். இக்கருத்து கணிப்பு பற்றி, பேசு முன்னர் 1991 சோவியத் சிதறுண்டதற்கு பிறகு, உலகளாவிய பச்சைக்கு எதிரான, இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை உலகெங்கும் எப்படி கட்டமைக்கப் பட்டது என்றும், இந்தியாவில் காங்கிரசும் பா.ஜ.கவும் எப்படி இந்த கட்டமைப்பை, உலகமய தாராளமய பொருளாதார கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, பயன்படுத்தினார்கள் என்றும் தெரிவித்தார்.


தோழர். கீதா



ஆய்வாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான தோழர் வ.கீதா, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் குறித்து வரலாற்றுப் பூர்வமாக அணுகி பேசினார். மேலும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு, மக்கள் எத்தகைய குழம்பிய மனநிலையில் இருக்கிறார்கள் என்றும், சுதந்திரத்திற்கு முன்பான கால கட்டங்களில், இஸ்லாமிய எதிர்ப்பை ஊடகங்கள், இந்த அளவு ஊதிப் பெருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.

80களுக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் எத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கொண்டிருந்தனர். அ.தி.மு.க அரசு நேரடியாகவே இந்து மத ஆதரவும், ஆதிக்க சாதி ஆதரவையும் கொண்டு விளங்கியது. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு காவல்துறையுமே இந்து அடையாளங்களோடு வளர்த்தெடுக்க அ.தி.மு.க அரசு உதவியிருக்கிறது எனவும் தோழர் வ.கீதா விளக்கினார்.திராவிட கொள்கைகளைக் கொண்ட தி.மு.க வும் ஓட்டரசியலுக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த கதையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

92க்கு பிறகு, இந்த இஸ்லாமிய எதிர்ப்பு பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. அதில் ஊடகங்களின் பங்களிப்பு, சமீபத்திய உதாரணமாக போலிசு பக்ரூதின் வழக்கில், எத்தகைய இந்துத்துவ சார்பு தன்மையோடு ஊடகங்கள் நடந்து கொண்டன? ஊடகங்களே நீதிமன்றங்களாக இருந்து பொய்யாக தீர்ப்பு வழங்கிய விதம், அதே நேரம் CBI காஷ்மீரத்தில் அரங்கேற்றிய பாலியல் ( ஷோஃபியான் வழக்கு) வன்கொடுமைகளை திட்டமிட்டு செய்தியாக வரவிடாமல் அரசு எந்திரம் தடுத்தது, ஊடகங்களும் அச்செய்திகளை இருட்டடிப்பு செய்தமை ஆகியவை குறித்து பகிர்ந்து கொண்டார்.

மேலும் மதக்கலவர தடுப்புச் சட்டத்தை அ.தி.மு.க அரசு எதிர்க்கும் காரணங்களையும் அதன் போலித் தனங்களையும் அம்பலப் படுத்தி பேசினார் தோழர் கீதா. மாநில அரசின் உரிமைகளை பறிப்பது முதல் காரணமாகவும், முடிவெடுக்கும் அதிகாரத்தின் மீதே கை வைப்பதாகவும் அதாவது காவல்துறையை மீறி விசாரணைகள் நடத்தப் படக்கூடாது என்று கவலைப் படுவதாகவும் தமிழக அரசு இம் மசோதாவை எதிர்க்கிறது. இதிலிருந்தே இவர்கள் மதக்கலவரங்களை எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள் என்பதும், முசுலிம்கள் மீது எந்த கரிசனமும் இல்லையென்பதும் விளங்கும்.

மேலும் இஸ்லாமியர்களிடையே எந்தவொரு விவாதத்தையும் நடத்தாமலேயே அவர்களை பிற்போக்கு வாதிகள் என்று சித்தரிக்கிறார்கள். அவர்கள் விசுவாசமற்றவர்களாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாகவும் , நவீன காலத்திற்கு உகந்தவர்களல்ல என்றும் ஊடகங்களில் பொய்ப் பரப்புரை செய்யப் படுகிறது. ஆக இந்திய அரசு என்பது பிறவியிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கொண்டதாகத் தான் இருக்கிறது. Structurally Indian State is anti-Muslim.

தோழர் செந்தில்




சேவ் தமிழ்சு இயக்கத் ஒருங்கிணைப்பாளர். செந்தில், உலக மயமாக்கல் கொள்கையையும் தனியார் தாராளமயமாக்கச் சூழலில் எப்படி இந்துத்வ சக்திகள் எப்படி வளர்ந்தார்கள் என்பது பற்றி பேசினார். மேலும் இந்திய சுதந்திரமே, ஜனநாயக போராட்டமாக அமையாமல், வேத கால பெருமையுடைய இந்தியாவை அந்நியர் ஆள்வதா என்ற இந்துத்துவ சிந்தனையிலிருந்து தான் உதயமானதாக தெரிவித்தார். இந்திய தேசியவாதமும் சிங்கள பெளத்த பேரினவாதமும் இந்த புள்ளியில் தான் ஒன்றிணைவதாக குறிப்பிட்டார்.

1984ல் தான் இந்தியாவில் சங்க பரிவாரங்கள் அரசியல் சக்திகளாக வளர்த்தெடுக்கப் பட்டார்கள். முதலாளித்துவமும், இந்த்துவமும் தனி மனிதனின் சிந்தனைகளிலிருந்து தான் ஒன்றிணைகின்றன. மனிதன் நல்லவனாக இருந்தால் வீடு முன்னேறும். வீடு முன்னேறினால் தெரு முன்னேறும், தெருக்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று இந்துத்துவ சிந்தனையைத் தான், முதலாளித்துவமும் தனி மனிதனாக இருந்து உழைத்து முன்னேறு என்று ஒத்ததிர்வுகளாக கருத்துகளை முன் வைக்கின்றன. அத்தகைய சங்க பரிவாரங்களின் வர்க்க அடையாளமாக பார்ப்பன பனியாக்கள் தான் இருந்தனர். அவர்கள் அரசியல் தளத்தில் வளர்ந்ததற்கு பிறகு, பண்பாட்டு தளத்தில் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்கும் பரப்புரைகளை மேற்கொண்டனர். தொலைக்காட்சி தொடர்களில் ராமாயணம் மகாபாரதம் ஒளி பரப்புவது, ரத யாத்திரை மேற்கொள்ளுதல், என்று தீவிரமாக கருத்து பரப்புரைகளில் ஈடுபட்டனர்.

உலகமயமாக்கல் கொள்கையை ஆதரிக்கக் கூடிய , அரசியல் ரீதியாக அதனை எவ்வித தங்கு தடையுமின்றி மக்களிடையே திணிக்க, இந்துத்துவ சக்திகளை வளர்த்தெடுத்தல் இந்திய அரசுக்கு அத்தியாவசியமனதாக இருக்கின்றது.


தோழர் அப்துல் சமது


த.மு.மு.க பொதுச்செயலாளர் தோழர்.அப்துல் சமது பேசுகையில் மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்துக்களுக்கு எதிராக மாபெரும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று திரிபு தான். ஜோதி பா பூலே வருணாசிரம பார்ப்பனிய தருமங்களை கடுமையாக எதிர்த்தவர்களுள் முதன்மையாக இருந்தார். அதற்கு முன்பு, மராட்டியத்தில் சாஹூ மஹராஜ் என்ற மன்னர் 50% பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் இட ஓதுக்கீடு நடைமுறைப் படுத்தப் பட்ட போது தான், அங்கிருந்த சித் பாவன பார்ப்பனர்கள், தம் கொள்கைகளுக்கு எதிராக உள்ள இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு துவக்கி வைத்தனர்.


1893 புனேவில் தான் முதன் முதலாக இந்து முசுலிம் கலவரத்தை நடத்தினர். 80களுக்கு பிறகான கால கட்டங்களில், அது தொடர்ந்தது. பொது இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, நபிகள் நாயகத்தை கொச்சை படுத்துவது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டுக்கறி உண்ணும் தலித்துகளையும், இஸ்லாமியர்களையும் கேவலமாக பேசுவது, விநாயகர் ஊர்வலங்களில் மசூதிகளுக்கு முன்பு திரண்டு, “பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு”, “துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு” போன்ற அறுவெறுக்கத் தக்க முழக்கங்களை இட்டு, திட்டமிட்டு கலவரங்களுக்கு முகாந்திரம் அமைப்பது என்று இந்துத்துவ சக்திகளின் இஸ்லாமிய வெறுப்பின் தொடர் நிகழ்வுகளை தோழர் அப்துல் சமது பதிவு செய்தார்.



இஸ்லாமியர்கள் எப்போதும் பிரிவினையை விரும்பாதவர்களாகவும், சமூக நீதியை மட்டுமே அவர்களின் நோக்கமாகவும் கொண்டே போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் அரேபிய இறக்குமதிகளல்ல. இங்குள்ள தீண்டாமை, சாதிக் கொடுமை தாங்க முடியாமல் தான் இசுலாத்தை தழுவியர்களாக இருந்தனர். அதனால் தான் சேரமான் பள்ளிவாசல் இன்று இந்தியாவின் முதல் பள்ளிவாசலாக கேரளாவில் அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.


மேலும் பாபர் மசுதி குறித்த வழக்கில், சங்க பரிவாரங்கள் அங்கு சிலையை திருட்டுத் தனமாக கொண்டு போய் வைத்தாலும், 1986ல் அலகாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கே வழிபடும் உரிமையை வழங்கிற்று எனவும், மேல் முறையீடு செய்யப் போனால், உயர் நீதிமன்றமும் அதை மறுக்காமல் வழிமொழிந்ததாகவும் குறிப்பிட்டார்.

இன்று பயங்கரவாதிகளாக சித்தரிக்கப் படும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியும், அதே இந்துக்கள் கைது செய்யப் பட்டாலோ அல்லது அவர்கள் வழக்கை கையாளும் போதோ நடைபெறும் பாரபட்ச நடைமுறைகளைச் சாடி பேசிய அவர், இந்தியா நிச்சயம் மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியாது என இந்திய அரசின் போலி மதச் சார்பின்மையை சாடி பேசினார்.
சிறப்பு பேச்சாளர்கள் பேசி முடிந்த முன், கலந்துரையாடல் நடைபெற்றது. கேள்விகள் கேட்கப் பட்டன. அதோடு பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

ஒடுக்கப் பட்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே போராட வேண்டியிருக்கும் இச்சூழலில், அனைத்து சனநாயக முற்போக்கு இயக்கங்களும் ஒடுக்கப் பட்ட அம்மக்களுக்காக இது போன்ற கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டும் என்று பரவலாக கருத்து பதியப் பட்டது. கொட்டும் மழையிலும் எழுச்சியுடன் நடைபெற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.







No comments:

Post a Comment