Wednesday, September 25, 2013

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 12014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும் நிலையில் இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க-வும் அதையொட்டிய தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன.காங்கிரசு ஆளும் கட்சி என்பதால் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் , பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வோ "குஜராத் பாணியிலான வளர்ச்சி" என்ற பிரச்சாரத்தை முன்வைத்து நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டது.

நரேந்திர மோடியை பிரதமராக்கினால்தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்று ஊடகங்களால் அவர் மீது பாய்ச்சப்பட்ட கட்டற்ற வெளிச்சம் பா.ஜ.க.-வுக்கு உள்ளிருந்த போட்டியை குறைத்து, 1990-களில் ரதயாத்திரை மூலம் கட்சியை வளர்த்த தனது குருவான அத்வானியையே பின்வாங்க வைத்து பிரதமர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார் குருவை மிஞ்சிய சீடரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி.இதில் விந்தை என்னவென்றால், என்ன காரணத்திற்காக அத்வானி பிரதமர் பதவியை வாஜ்பாயிடம் இழக்க வேண்டி வந்ததோ, அந்த காரணத்தைக் கொண்டே இந்த முறை ஆர்.எஸ்.எஸ்- சின் ஆசியுடன் அத்வானியிடமிருந்து மோடி அந்த வாய்ப்பைப் பறித்துள்ளார். ரதயாத்திரை நடத்தியவரிடமிருந்து ரத்தயாத்திரை நடத்தியவரை நோக்கி நகர்ந்துள்ளது, நகர வைக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கபடுவதற்கு முன்பிருந்தே இவர் மீது ஊடகங்களால் வெளிச்சம் பாய்ச்ச்சப்படுவதற்கான காரணம் என்ன ?, மூன்று முறை ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதே பிரதமராவதற்கான தகுதியா?, மோடிக்கு தொடர்ந்து பிம்பப்பெருக்கம் செய்து வரும் ரசிகர்கள் யார்?, மோடி மீது பாய்ச்சப்படும் கட்டற்ற வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படுவது யாது ? என்பதையே இக்கட்டுரைத் தொடர் பேச விழைகிறது.

மோடியின் ரசிகர்களாக இருப்பது பெரும்பாலும் 1990-களுக்குப் பிறகு உருவான தொழிற் பிரிவுகளிலும், புதிய நடுத்தர வர்க்கத்தைச்(NEO MIDDLE CLASS) சேர்ந்த இளைஞர்கள் என்பதை மறுக்க இயலாது.

மோடி பிரதமரானால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும், பத்தாண்டுகால காங்கிரசு ஆட்சியினால் ஏற்பட்ட சீர்கேடுகளையும், ஊழல் முறைகேடுகளையும் மோடி போன்ற "இரும்பு மனிதரால்தான்" மாற்ற முடியும் என்றும் தொடர்ந்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதிரியான பிரச்சாரங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், முகப்புத்தகத்திலும் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்களையும், புதிய நடுத்தர வர்க்க இளையோரையும் முன்வைத்தே நடத்தப்படுகின்றன. இந்தப் பிம்பப்பெருக்கத்தினால் இளைஞர்கள் அனைவரும் மோடிக்குப் பின்னால் இருப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அதை வைத்து இளைஞர்களை கவரும் வேலை நடந்து வருகிறது.


நரேந்திர மோடி என்றாலே நம் அனைவருக்கும் 2002-ல் குஜராத்தில் நடந்த வன்முறை நினைவுக்கு வரும் போது நம்மில் ஒரு சிலருக்கு மட்டும் அவர் வளர்ச்சியின் "தேவதூதராக" "பீஷ்மராகக்" காட்சியளிக்கிறார். இப்படியான பார்வை என்பது பெரும்பாலும் வளர்ச்சிதான் முக்கியம், கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று வாதிடுபவர்களால்தான் முன்வைக்கப்படுகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இந்துத்துவ சகதியில் உழல்பவர்களே. நடுத்தர வர்க்கத்தின் இரண்டு கண்களான வருமானமும், நுகர்வும் பெரும்பாலானவர்க்கு சாத்தியமாகி இருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் இதையே வளர்ச்சி என்று வாய்மொழி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவே மோடிக்கும், மோடியை விரும்புவோருக்கும் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது.

அன்னா ஹசாரேவைக் கொண்டு பா.ஜ.க -வால் மக்களைத் திரட்ட வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட பிறகு ஊடகங்களின் மொத்த வெளிச்சமும் மோடி பக்கம் திரும்பியது, திருப்பப்பட்டது. பா.ஜ.க என்கிற எதிர்க்கட்சி, அதன் கொள்கை, பலம், பலவீனம் பற்றிக் கூட ஊடகங்களின் பார்வை திரும்பவில்லை , நரேந்திர மோடி என்னும் தனிமனிதரை நோக்கியே திரும்பின.


தனியார் பெருமுதலாளிகள் என்றும் பாசிசத்தின் நண்பர்களே, பாசிசத்தின் தொடக்கம் தனிமனிதத் துதிகளிலேயே உள்ளது.தனியார் பெருமுதலாளிகளும், ஊடகங்களும் மோடியை முன்னிறுத்துவதற்கான முக்கியக் காரணம், அவர்களுடைய தொழில், வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே. அதற்காக தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான‌து ஒன்றும் இல்லை. ஆனால், அவர்களுக்கு மோடியைப் போன்று எதேச்சதிகாரப் போக்கு கொண்ட, முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக எடுக்கும் ஒரு நபரையே எதிர்பார்க்கின்றனர்.

குஜராத் படுகொலைகளை மறந்து, மோடியின் இந்துத்துவ வெறியைப் புறந்தள்ளி மோடியை முன்னிறுத்துவதற்கான காரணங்களாக சொல்லப்படுவது, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மலைக்க வைக்கும் வளர்ச்சி. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும்,பொருளாதாரமும் பெரும் பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது குஜராத்தில் மட்டும் எப்படி வளர்ச்சி அடைகிறது? இந்திய அரசு மாநில அரசுக்கு இவ்வளவு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கிறதா ? என்னும் ஐயம் எழாமல் இல்லை.


மோடியின் குஜராத்தில் வளர்ச்சி பற்றிய செய்திகளை நிறுவுவதற்கு கொடுக்கப்படும் சில விபரங்களைப் பார்ப்போம்.

ஒவ்வொரு வருடமும் "துடிப்புள்ள குஜராத்" (VIBRANT GUJARAT) என்ற பெயரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் பெருமுதலாளிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு மோடி அரசால் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. 2010-11 ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் மூலம் குஜராத்திற்கு 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கியின் தகவல்களின்படி, அந்த காலத்திற்கான, இந்தியா முழுமைக்கும் செய்யப்பட்ட முதலீடே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர்தான்.இந்தியாவிற்கு வரும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 2.38விழுக்காடு மட்டுமே குஜராத் மாநிலத்தின் பங்களிப்பாகும். இந்தியாவிற்கு வரும் முதலீடுகளில் மகாராஷ்டிரத்திற்கும், டெல்லிக்கும் வரும் பங்கு முறையே 45 மற்றும் 26 விழுக்காடு ஆகும். ஆனால் மோடி சொல்கிறார் தன்னுடைய ஆட்சியில் குஜராத் "இந்தியாவின் நுழைவாயிலாக" இருக்கிறது என்று, இதை ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு விளம்பரம் செய்கின்றன.

2009-ல் நடைபெற்ற தனியார் நிறுவனங்களுக்கான அமர்வின் மூலம் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாக மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. அத்தோடு 2011 ஆண்டு காலத்தில் இந்த புதிய வேலை வாய்ப்புகளின் அளவு 52 லட்சத்தை எட்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் திட்டக் கமிசனின் வேலைவாய்ப்பு பற்றிய அறிக்கை 2004-05 காலத்தில் 2.53 கோடியாக இருந்த வேலைவாய்ப்புகள் 2009-10 காலப் பகுதியில் 2.46 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலையைக் கூட மறைத்து புதிய வேலைவாய்ப்புகள் என்று வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.குஜராத் ஒரு மின்மிகை மாநிலம் என்றும், அங்கு மோடி அரசு அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தின் 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்று கூறுகிறது.இதில் 15 விழுக்காடு நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளாகும். அப்படியானால், 2010-ல் குஜராத் அரசு தன்னை மின்மிகை மாநிலமாக அறிவித்துக் கொண்டபோது சொன்ன 11500 மெகாவாட் மின்சாரம் யாருக்கு கொடுக்கப்படுகிறது?.அதுமட்டுமின்றி குஜராத்தில் மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலை மிக அதிகம்.


மோடி அரசால் வெளிச்சம் பாய்ச்சப்படும் வளர்ச்சி அளவுகளில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம், சமூக மற்றும் மனித வளர்ச்சி குறியீடுகளான கல்வி, வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே உள்ளது.


2009-2010 ஆம் ஆண்டுகளின் இறுதியில் திரட்டப்பட்ட விபரங்களின் படி, குஜராத்தின் கிராமப்புறங்களில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை ஹரியானா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாகவும், 90-களின் தொடக்கத்தில் இருந்த நிலையில் இருந்து பெருத்த முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கிறது.வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று விளம்பரத்தப்படும் குஜராத்தின் நிலைமை கல்வி மற்றும் எழுத்தறிவில் பின்தங்கியே உள்ளது.2000-2008க்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்டோர், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் கல்வி குறியீட்டில் 7 ஆவது இடத்திலயே உள்ளது. அத்தோடு எதாவது ஒரு கல்வி நிலையத்திற்காவது செல்லும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் கல்வி குறியீட்டில் 26 இடத்திலேயே உள்ளது இந்த வளர்ச்சியின் சொர்க்க பூமி.


சுகாதார தளத்தைப் பொறுத்த வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் எடை குறைந்து இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறியீட்டில் இந்திய சராசரியைவிட சொற்ப புள்ளிகளில் முன்னிருக்கிறது.இந்த குறியீட்டில் குஜராத் ஆண்களுக்கான வரிசையில் 11வது இடத்திலும், பெண்களுக்கான வரிசையில் 12 வது இடத்திலும் உள்ளது. இதைப் பற்றி பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்குத்தான் "குஜராத் பெண்கள் டயட்டில் இருந்து அழகை பராமரிக்க எண்ணுவதாக " மோடி குறிப்பிட்டார்.

இவ்வாறு தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கொடுக்க போலியான விளம்பரங்களும், சமூக வளர்ச்சி பற்றிக் கவலைப்படாத போக்கும்தான் குஜராத் பாணி வளர்ச்சி போலும். 1990 -களுக்குப் பிறகு உண்டான வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் பரவலாக மக்களைச் சென்றடையாத நிலையில், 120 கோடி மக்கள்தொகையில் ஒரு சொற்ப பிரிவினரை மட்டும் கருத்தில் கொண்டு வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்பது போலி விளம்பரமே அன்றி வேறன்று. இவ்வாறாக வெளிச்சம் பாய்ச்சப்படும் வளர்ச்சி வெறும் வீக்கமே.


வளர்ச்சி தவிர மோடியை முன்னிறுத்த சொல்லப்படும் இன்னொரு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஊழலற்ற நிர்வாகம். இப்படி சொல்லி அவர் மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தில் எதையெல்லாம் மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

2009-11 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் லஞ்சம், ஊழல், அதிகார விதிமீறல்கள் முதலியவற்றால் குஜராத் மாநில அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய். குஜராத்தில் செயல்பட்டு வரும் அதானி குழுமத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையில் இன்னும் 160 கோடி ரூபாய் குஜராத் மாநில அரசால் வசூலிக்கப்படாமல் அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பிரதிபலனாகத்தான் அதானி குழுமம் அமெரிக்காவிலுள்ள வார்டான் பல்கலைக்கழகத்தில் மோடியை முன்னிறுத்தி ஒரு கூட்ட அமர்வை நடத்த முன்வந்தது.

ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயு தொடர்பான ஒப்பந்தத்தில் 52.27 கோடி இந்திய ரூபாய் அளவு குஜராத் அரசிடம் இருந்து ஆதாயம் பெற்றுள்ளது.

லார்சென் & டூப்ரோ நிறுவனத்திற்கு நீராவி உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பதற்கான ஆலை அமைக்கும் இடத்தை மாநில நிலமதிப்பீட்டு ஆணையம் நிர்ணயித்த விலையான சதுர மீட்டருக்கு 2020 ரூபாய் என்பதைப் புறந்தள்ளி, மாவட்ட நில மதிப்பீட்டு அளவான 1050 சதுர மீட்டரை வெறும் 1000 ரூபாய்க்கு விற்று மாநில அரசுக்கு 128.71 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினர்.


இதே போல், எஸ்ஸார் இரும்பு நிறுவனத்திற்கு 238.50 கோடி ரூபாய் ஆதாயம் அளிக்கும் வகையில் நில மதிப்பீட்டு அளவில் உதவி செய்தது மோடியின் குஜராத் அரசு.அலைக்கற்றை ஊழலை வெளியே கொண்டுவந்த தலைமைத் தணிக்கை கணக்காளர் அறிக்கைதான் இந்த இழப்புகளையும் வெளியே கொண்டு வந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட டாட்டா நானோ தொழிற்சாலை 2000 கோடி மூலதனத்தோடு குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு குஜராத் அரசால் கொடுக்கப்பட்டுள்ள மானியம் 30000 கோடி ரூபாய்.இதில் 9750 கோடி ரூபாயை வெறும் 0.1% வட்டிக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட இன்னும் எட்டப்படாத ஒரு நாட்டில் லட்ச ரூபாய் விலையுள்ள ஒரு கார் தயாரிப்பதற்கான மானியமாக 60000 ரூபாய் கொடுக்கப்பட்டதிலேயே மோடி தலைமையிலான அரசு யாருக்காக செயல்படுகிறது என்பது தெளிவாகும்.

ஊழல் என்பது தங்களது கொள்கை முடிவுகளையோ அல்லது விதிகளையோ ஒரு சாராருக்கு சாதகமாக மாற்றி கையூட்டு/ஆதாயம் பெறுவது மட்டுமன்று, தனியார் பெருமுதலாளிகளுக்கு ஏதுவாக செயல்பட்டு மக்கள் வரிப்பணத்தை மானியமாக வாரி இறைத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதும் ஊழலே. இவைதான் வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நிர்வாகம் என்கிற விளம்பர வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படுபவை.

இதனால்தான் தனியார் பெருமுதலாளிகளும், ஊடகங்களும் மோடியைக் கொண்டாடுகிறார்கள். முழுச் சாப்பாட்டிலிருந்து நாம் எப்படி துரித உணவங்களை நோக்கிச் சென்றோமோ, கிரிக்கெட்டில் எப்படி திராவிடும், சச்சினையும் முந்திக் கொண்டு அதிரடியாக ஆடும் டோனி வந்தாரோ, அதே போல தனியார் பெருமுதலாளிகளுக்கு ஏதுவாக செயல்பட்டாலும், மெதுவாக செயல்படும் இப்போதிருக்கும் காங்கிரசு அரசுக்கு மாற்றாக அதிரடியாகவும், சர்வாதிகாரப் போக்குடனும் முடிவுகளைத் துரிதமாக எடுக்கும் நரேந்திர மோடியை முன்னிறுத்துகின்றனர்.

காங்கிரசு கட்சியால் இனி ஒருபோதும் வளர்ச்சி என்கிற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள முடியாது, அதே போலத்தான், பா.ஜ.க-வால் மதச்சார்பின்மை என்ற அரிதாரத்தைப் பூசிக் கொள்ளவே முடியாது. ஆனால், பல்வேறு பிரச்சாரங்களின் மூலம் காங்கிரசு எவ்வாறு மதச்சார்பின்மை என்ற அரிதாரம் பூசியுள்ளதோ, அதே முறையையே பா.ஜ.க தன்னுடைய இந்துத்துவ முகத்தை மறைத்து வளர்ச்சி என்பதைப் பூசிக்கொள்ள முயற்சித்து மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

நன்றி. கேலிச்சித்திர கலைஞர்.பாலா, themadeconomy.blogspot.com

Tuesday, September 24, 2013

மாற்று திறனாளிகளின் போராட்டமும், சினிமா நூற்றாண்டு விழாவும் - தமிழக அரசும்.கடந்த ஒருவார காலமாக தங்கள் 9 அம்ச சனநாயகக் கோரிக்கைகளுக்காக தமிழக அரசின், காவல்துறையின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையே தொய்வுறாது தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்திவருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள், அவர்கள் தங்களை புறம்தள்ளும் அரசை மாற்றியமைக்கும் திறன் படைத்தவர்கள், அவர்கள் வெறும் மாற்று திறனாளிகள் மட்டும் அல்லர்.....அவர்களின் தொடர்ச்சியான‌ முயற்சிக்கும், போராட்டத்திற்கும் பிறகும் கூட‌ பேச்சுவார்த்தைக்கு அழைத்து முறையாகப் பேசாமல் கோரிக்கைகளைக் குப்பைத்தொட்டிக்குள் போட்டுள்ளது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சகம், போராடும் மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்தி அலைக்கழித்து அட்டூழியம் செய்து மகிழ்ந்துள்ளது தமிழக அரசின் காவல்துறை. அதுமட்டுமின்றி 19.09.2013 அன்று சாலை மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத் தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல் கொடுமையானது.காவல்துறை அவர்களை எப்படிக் கையாண்டது என்பதை அனைவரும் அறிவோம்... காவல்துறையினர் பார்வையற்றோர் எனத் தெரிந்தும் அந்த மாற்றுத்திறனாளிகளைத் தாக்கியது தான் எல்லா காட்சிகளிலும் இருந்தது... ஆனால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் என்கிறது சன் தொலைக்காட்சி செய்தி... ஆளும் அரசிற்கு (கட்சிகளுக்கு) ஜால்ரா தட்டுவதல்ல ஊடகத்தின் பணி, உண்மையை உரக்கச் சொல்லி சனநாயகத்தின் நான்காவது தூணாக நிற்பது. அதையெல்லாம் இப்பொழுதுள்ள பல ஊடகங்கள் மருந்தளவு கூட நினைக்காமல், வாழ்த்துப்பா பாடி பரிசல் பெறும் புலவர்கள் போலுள்ளது அவர்களின் செயல்பாடு.


பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகள்:-

1.பார்வையற்றோருக்கு 550 இளங்கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

2.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு விகிதத்தை 40 சதவீதமாக குறைக்க வேண்டும்

3.கல்லூரி பேராசிரியர்கள் பதவி 100 பேருக்கு வழங்க வேண்டும்

4.முதுகலை ஆசிரியர்கள் 200 பணியிடங்களை ஒதுக்க வேண்டும்

5.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.450ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

6.முதுகலை படிப்பவர்களுக்கு லேப் டாப் வழங்க வேண்டும்

7.இசை ஆசிரியர்கள் பணியிடங்களில் 100 பதவிகள் வழங்க வேண்டும்

8.இசை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தேவாரம், திருவாசகம் பயிற்சி கொடுத்து, ஓதுவார் பதவிகள் வழங்க வேண்டும்

9.ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டு விதி விலக்கு அளிக்க வேண்டும்


இதை நிறைவேற்றுவதால் அரசிற்கு பெரிய நிதிப் பற்றாக்குறை வரப்போவதில்லை... இதனால் ஓராண்டில் அரசிற்கு ஒரு சில கோடிகள் அதிகமாகச் செலவாகலாம்... இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு திடீரெனப் பத்துகோடியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கி, விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர்.ஜெயலலிதாவால் ஒரு வாரத்திற்கும் மேலாக‌ தொடர்ந்து போராடிவரும் பார்வையற்றோரின் மனுவை வாங்க நேரமில்லாதது, அவரது அலட்சியத்தனத்தை காட்டுகின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தக் கோரிக்கைகளுக்கு ஏற்படும் நிதிச்செலவும் மிகக் குறைவே...
மாற்றத்திற‌னாளிகளுக்கென உருவாக்கப்பட்டத் துறை செயலிழ‌ந்து கிடக்கின்றது... அவர்களுக்கான சிறப்புக் கல்விக் கொள்கை, கல்விமுறை, கல்வித் திட்டங்கள் வேண்டும். சிறப்புத் தொழிற்கல்விகள், அவர்களுக்கு உதவும் புதியக் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும்... சமூகத்தில் எதற்கும் பிறர் துணை இல்லாமல் தாங்களாகவே இயங்க அவர்களுக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் (பெரும்பான்மையானக் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தனி வழிகள் இல்லை... பெரும்பாலான இடங்களில் அதிகக் கடினப்பட வேண்டியுள்ளது...). மிக முக்கியமாக சமூகத்தில் பொது மக்களிடம் மாற்றுத் திறனாளிகள் என்றாலே சுமை என்ற ஒரு கருத்து உள்ளது... அதை மாற்ற அரசும் சமூக சனநாயக முற்போக்கு இயக்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
சினிமா நூற்றாண்டு விழா போன்ற ஆடம்பர நிகழ்வுக்கு செலவு செய்வதற்கு பதிலாக,
விளிம்பு நிலை மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவது சமூகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலம் சரியான திசையில் செல்லவும் வழிவகுக்கும். மேலும் அவர்கள் கேட்பது எதுவும் சலுகைகள் அல்ல‌, அவர்களது உரிமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் பணி என்பது மக்கள் கோரிக்கைகளை செவிமடுத்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய‌ பணி, அதற்கு பின் தான் எல்லா கேளிக்கைகளும் என்பதை முதல்வராக வருபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். ஒடுக்குமுறைகளைத் தாண்டி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வெற்றிப்பெற்று, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்...

-வினோத்.
சேவ் தமிழ்சு இயக்கம்


நன்றி - ராஜ் மொஹம்மது (E-Poster)

உதவி: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=63152

Monday, September 23, 2013

நிதியமைச்சர் வீட்டு நாயும் - 66A சட்டமும்"அந்த நிதியமைச்சரின் வீட்டில் வளரும் நாய்க்குட்டி நல்ல புஷ்டியாக‌ மொசு மொசுவென்று வளர்ந்திருக்கிறது. நல்ல ஆரோக்கியமான பால் குடித்து வளருகிறது போல‌" என்று முகநூலில் ஒரு கருத்து வெளியிடுகிறீர்கள். நீங்கள் நிஜமாகவே நல்லவர். யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். அமைச்சர் வீட்டில் வாங்கும் பால் குறித்தோ, அல்லது இந்தியாவில் புழங்கும் பாலின் தரம் குறித்தோ, அல்லது அமைச்சர் அஃறிணை உயிரினங்களின் மீது காட்டும் பரிபாலனம் குறித்தோ புகழ்வதற்காகத் தான் உச்சி முகர்ந்து அக்கருத்தை வெளியிடுகிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கு கூட அது புரிந்து, லைக்குகளை வாரி வழங்குகின்றனர்.

ஆனால் உங்களின் போதாத நேரம், அமைச்சருக்கு அது வேறு மாதிரியாக‌ பட்டு விட்டது. தன் வீட்டில் கணக்கற்ற சொத்தின் காரணமாக, நாய்க்குட்டிகள் கூட மினுக்கித் திரிகின்றன என்று நீங்கள் அவரை ஏளனம் செய்வதாக கருதுகிறார். காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்கிறார். தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, 66அ சட்டப் பிரிவுகளை பிரித்து படித்துப் பார்க்கிறார் காவல்துறை அதிகாரி. அல்லது படிக்காமலே அமைச்சரின் சட்டப் புலமையின் மீது நம்பிக்கை வைத்தவராக, தலையாட்டுகிறார்.

"grossly" offensive or cause "annoyance or inconvenience", or, in case of information known to be false, cause "danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will".

“யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைதொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ : அ) விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது ஆ) தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது இ) யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசௌகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு) மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று வ‌ரைய‌றுக்க‌ப் ப‌டாத‌ அப‌ராத‌மும் விதிக்க‌ப் ப‌டும்.” என்று சட்டக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

நீங்கள் கைது செய்யப் படுகிறீர்கள். காரணம் உங்கள் விகல்பமான வார்த்தைகளால் நீங்கள் அமைச்சரை (Inconvenience) அசெளகரியப் படுத்தி வீட்டீர்கள். உங்கள் நண்பர்களுக்கு புரிந்த அந்த சுத்தமான கருத்து, விகல்பமான‌ கருத்தாக நினைக்கப் பட்டிருக்கிறது. அமைச்சரின் மனைவி கூட பின்னாளில், அக் கருத்தைப் பார்த்து, உங்களை பாராட்டியிருக்கக் கூடும்.


எது நல்ல வார்த்தை, எது அசெளகரியம், எது விகல்பம் என்று புரியாதவனாக நீங்கள் அழுது புலம்புகிறீர்கள். மேலும் அசெளகரியப் படுத்துதல் எப்படி சிறை செல்லுமளவுக்கு குற்றமாகும் என்றும் அழுகைக்கு நடுவே கேள்வியெழுப்புகிறீர்கள். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இது தான் நடைமுறை. இது தான் இந்திய தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, 66அ பிரிவு.

இது தான் இந்திய சனநாயகம்.

மேலே குறிப்பிட்டுள்ள பல விதமான காரணிகள் யாவும் நிச்சயத் த‌ன்மைய‌ற்றவைக‌ளாக‌ இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு புரிதல்களை ஏற்படுத்துபவைகளாகவும் இருக்கின்றன. அல்லது குழப்புகின்றன. தெளிவாக சொல்ல வேண்டுமானால், அதிகார வர்க்கத்தினரின் நலன்களுக்காக அப்படியான‌ சொற்கள் சட்டங்களாக்கப் பட்டிருக்கின்றன. அதிகார மையத்திற்கு நெருக்கமான அரசியல் தலைவரோ, பெருமுதலாளியோ, சிறு முதலாளியோ, சினிமா பிரபலமோ, பணமுதலையோ தங்களுக்கு ஒவ்வாத கருத்துகள், முகநூலிலோ, ட்விட்டரிலோ, வலைப்பூவிலோ பகிரப் படும் போது, அக்கருத்துகளை வெளியிட்டவர் மீது சட்டத்தின் உதவியுடன் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த‌ தகவல் தொழில் நுட்பச் சட்டம்.


ஸ்ரேயா சிங்கால் என்ற 21 வயதான டெல்லி மாணவி, 66அ சட்டப்பிரிவில் இருக்கும் குளறுபடிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012 நவம்பர் மாதம் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவ்வழக்கில்,66அ சட்டப்பிரிவில் இருக்கும் சொற்பிரயோகங்கள் நீளமானதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டவைகளாகவும், பல்பொருள் தன்மை கொண்டதாகவும் இருப்பதாகவும், மேலும் ஏற்கெனவே இருக்கும் கருத்துரிமை சட்டங்களான 14,19(1அ) மற்றும் 21 பிரிவுகளுக்கு அது முரணாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நீதித்துறை ந‌டுவ‌ரின் ஆணைக‌ளின்றி, காவ‌ல்துறை கைது ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்வ‌து குறித்தும் அவ்வழ‌க்கில் கேள்வி எழுப்பியிருந்தார்.

த‌லைமை நீதிப‌தி, அல்த‌மாஸ் கபீர் முன்னிலையில் இவ்வ‌ழ‌க்கு, அவ‌ச‌ர‌ கால‌ நிலையில் விசார‌ணைக்கு எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட்ட‌து. எதிர்பார்த்த‌து போல‌வே, பெரிதாக‌ ச‌ட்ட‌ திருத்த‌ங்க‌ள் ஒன்றும் மேற்கொள்ள‌ப் ப‌ட‌வில்லை. வ‌ழ‌க்க‌ம் போல, ச‌ட்ட‌ப்பிரிவை செய‌ல்ப‌டுத்துவ‌தில் மாநில அரசுகளுக்கு ஒரே ஒரு அறிவுரையை வ‌ழ‌ங்கி ம‌ட்டும் தீர்ப்ப‌ளித்த‌து. மாந‌க‌ர‌ங்க‌ளில் காவ‌ல்துறை ஐ.ஜி, மாவ‌ட்ட‌ங்க‌ளில் காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் ப‌த‌விகளுக்கு குறையாத‌ அதிகாரிக‌ளின் ஆணையின்றி, 66அ ச‌ட்ட‌ப்பிரிவை ப‌ய‌ன்ப‌டுத்தி காவல்துறை ஒருவ‌ரை கைது செய்ய‌க் கூடாது என்ப‌து தான் அந்த‌ அறிவுரை.
காவ‌ல்துறை உய‌ர‌திகாரிக‌ள் யாருக்காக வேலை செய்வார்கள் என்பது சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. சாதார‌ண‌மாக‌, பேருந்தில் ஈவ் டீசிங் செய்யும் ஒரு ஆணைப் ப‌ற்றி,காவல்துறையில் ஒரு சாமானியப் பெண் புகார் கொடுக்க‌ வேண்டுமாயின், எத்த‌கைய‌ கொடுமைக‌ளை அவ‌ள் அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌தையும் விள‌க்க‌த் தேவையில்லை. இருந்தாலும் மிகப் பெரிய சினிமாப் பாடகியாக இருக்கும் பட்சத்திலும், காவல் துறை தலைமை ஆணையர் அப்பெண்ணுக்கு நெருங்கிய உறவினராக இருக்கும் பட்சத்திலும் இணையத்தில் (முகநூல், ட்விட்டர், வலைப்பூ) தன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் ஒரு ஆணைப் பற்றி, காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கே சென்று அப்பெண்ணால் புகார் கொடுத்து, அடுத்த நாளே “அக்கொடிய நபரை” கைது செய்ய முடியுமல்லவா ?

வெறும் தனி நபர்களை பாதுகாக்க மட்டுமே, இச்சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன‌ என்று குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. பொழுது போக்கு ஊடகங்களாக, அறியப் பட்ட சமூக வலை தளங்களான ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் இன்று பெருவாரியான‌ இளைஞ‌ர்கள் அர‌சிய‌ல் பேசுகின்ற‌ன‌ர். சரியோ தவறோ, தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை, அரசியல் தலைவர்கள் பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைக்கின்றனர். சினிமா,பொழுது போக்கு, விளையாட்டு போன்ற விஷயங்களோடு, அரசியலே முதன்மையான பேசுபொருளாக எடுத்தாளப் படுகிறது. மக்கள் பிரச்சினைகள் அலசப் படுகின்றன. சாலைகளில் இறங்கி கத்த வேண்டும் போலிருக்கிறது என்று விரும்புவோருக்கு, ஒரு கருத்து வெளி உருவாகியிருக்கிறது. மக்களின் இயல்பான கோபங்களிலிருந்து அவர்களை திசை திருப்பி, அவர்களின் அரசியல் அறிவை, போராட்ட குணத்தை மழுங்கடித்து, காலம் முழுதும் அவர்களை அரசியலற்ற‌வர்க‌ளாகவே வைத்து அழ‌கு பார்க்க‌ விரும்பும் ஆளும் வ‌ர்க்க‌த் த‌லைவ‌ர்க‌ளுக்கு, இணைய‌ வெளியின் க‌ட்ட‌ற்ற‌ சுத‌ந்திர‌ம் குர‌ல்வ‌ளையில் க‌த்தியைச் சொருகுகிற‌து. அது மட்டுமின்றி, ஆளும் அரசுகளையே புரட்டிப் போடுமளவுக்கு, இணைய‌ப்புரட்சிகள் காலந்தோறும் செய்திகளாகி விட்டன.

எகிப்து,துனிஷியா போன்ற நாடுகளில், ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள், வீதிக்கு வந்து போராடினார்கள். அப்போராட்டங்களை ஒன்று திரட்டியது இணையம். வங்க தேசத்தில், இஸ்லாமிய மத வாத அமைப்புகளுக்கெதிராக, 1971 - வங்க தேச மக்களின் இனப்படுகொலைக்கான நீதி வேண்டி, ஷாபாக் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதும் அதே இணைய வெளியில் பரப்புரை செய்யப் பட்ட போது தான். அநியாய‌ கல்விக் கட்டணங்களை எதிர்த்து, லண்டன் மாநகரை முற்றுகையிடுவோம் என்று முகநூலில் ஒரு அழைப்பு விடுக்கப் பட்டது. மூன்று லட்சம் பேர் அவ்வழைப்பை ஏற்று, அம்முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கிலாந்து அரசு, பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்பப் பெற்றது. தமிழகத்தில் கூட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டமும், கடந்த மார்ச் மாதம் ந‌டைபெற்ற மாண‌வ‌ப் பேரெழுச்சியும் ஃபேஸ்புக்கின் மூல‌மாக‌வும் ப‌ர‌ப்புரை செய்யப்பட்டு வலுப்பெற்ற போராட்டங்கள். இந்த காரணங்களால் தான், இணையவெளியை கண்காணிக்க ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான “தமிழக காவல் துறையும்” பூட்சு கால்கள் தட தடக்க‌ ஃபேஸ்புக்கில் தற்போது களம் இறங்கியிருக்கிறது.


பலபேர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66அ பற்றி படும் படாமலும் தொட்டும் தொடாமலும் இணையத்தில் பேசினாலும், நாட்டில் சில இடங்களில் தான் தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கு எதிராக பொதுவெளியில் போராட்டங்கள் நடந்தன.

ஆனால் அதுவும் பெரிய கவனம் பெறவில்லை, பெருவாரியானவர்கள் இதற்கு எதிராக அணிதிரளவில்லை, இயக்கமாகவில்லை, போராடவில்லை... ஏன்? என்ற கேள்விக்கு போகுமுன், இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கும் தேசத் துரோக சட்டத்திற்கும் (இந்தியத் தண்டனைச் சட்டம் 124A) என்ன வேறுபாடு என்று பார்த்தால் சில நுணுக்கங்கள், விபரங்கள் இன்னமும் தெளிவாய்ப் புரியும்...

தற்போதையக் காலக்கட்டத்தில் சராசரி நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரே வழியான கட்டற்ற இணையம் மூலம் தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்களுக்கு விரோதமாக செயல்படும் அரசின் மீதான விமர்சனங்களை வைக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் எப்படி அவர்களை மட்டுப்படுத்த அரச அதிகாரங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைப் பாய்க்கிறதோ இதைப்போலத்தான் இதற்கு முந்தையக் காலக்கட்டத்தில் தேசத் துரோக சட்டம் பாய்ந்தது...
காசுமீர் மக்களின் மீதான இந்திய இராணுவ ஒடுக்குமுறையை எதிர்த்தும், காசுமீரத்தை சுதந்திரமாக காசுமீரிகளிடம் தான் கொடுக்க வேண்டும் என்றும் தன் கருத்தைச் சொன்னதற்காக அருந்ததிராய் மீது தேசத்துரோக வழக்குப் பதிந்து தன் கொடுங்கோன்மையை நிறுவியது அரசு... மத்திய இந்தியாவில் வனங்களை அழித்து சுரங்கம் தோண்டி கனிம வளங்களைச் சுரண்டி, பெருமளவு தரகு பணத்திற்கு தனியாருக்கு விற்றது அரசு, அதற்கு எதிராக இருந்த காரணத்தினால் பழங்குடியினரை இராணுவம் கொண்டு அகற்றும் இந்திய அரசை விமர்சித்ததாலும், பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துவந்ததாலும் மாவோயிஸ்ட் என்றும், பயங்கரவாதி என்றும் பட்டம் சுமத்தப்பட்டு அதேத் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு நெடுங்காலம் சிறையில் அடைக்கப்பட்டார் மருத்துவர் பினாயக் சென்...இந்திய ஒன்றியத்தின் தென் எல்லையில், பல மாநில மக்களும் அரசுகளும் ஏற்கமறுத்த அணுஉலையை கூடங்குளத்தில் ரசிய நாட்டு நிறுவன உதவியுடன் நிறுவிவருகிறது இந்திய அரசு, இதை எதிர்த்து போராடி வரும் மக்களின் மீது 2 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பாய்ந்துள்ளது, அவற்றில் பெரும்பான்மை தேச துரோக வழக்குகளாகும். இந்த பகுதியில் அணு உலையை நிறுவாதீர்கள், எங்களுக்கு உடன்பாடில்லை என்று தங்கள் கருத்தை சனநாயக பூர்வமான வழிகளில் தெரிவித்ததற்காக அரசு சர்வாதிகாரமான முறையில் அளித்த பரிசு தான் இவ்வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்றுதான், மக்களின் தயவால் வந்த அரசை, அமெரிக்கா போன்ற உலக ஆதிக்க அரசுகளின் நலன்களைக் காக்கும், பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களின் நலன்களைக் காக்கும், அதன் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் போராடினால் இது தான் நிகழும் என்ற எச்சரிக்கை...அரசியல் கட்சித்தலைவர்களானாலும் ஆளும் அரசிற்கு எதிராய் பேசினால் விமர்சித்தால் இந்த சட்டம் பாய்வது உறுதி... தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கொளத்தூர் மணி, வைகோ, சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் அரசை விமர்சிப்பதால், அரசிற்கு எதிராக கருத்தைச் சொன்னதால் பலமுறை இந்தச் சட்டத்தில் தண்டனை அனுபவித்துள்ளனர்.


அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து போராடுவதால் அரசு மக்களை ஒடுக்க பயன்படுத்திய இந்தச் சட்டம் ஏதோ கொஞ்சகாலமாக நடந்துவருகிறது என நினைத்துவிட வேண்டாம், இந்த நிகழ்வுகள் பெயரளவு சுதந்திர நாடாக ஆன நாள் முதல் இன்று வரை வெகுகாலமாக நடந்துவருகின்றன... தமிழகத்தைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் அரசிற்கு எதிராக கருத்து சொன்னால் என்னவாகும் என்பதை மக்களுக்கு விளக்கிய நிகழ்வு 1987ல் விகடனில் வந்த அரசியல்வாதிகள் குறித்த விமர்சன கேலிசித்திரத்திற்கு எதிராக அதன் ஆசிரியர் மீது அரசு எடுத்த நடவடிக்கை தான்...அரசிற்கு எதிராக, ஆளும் அதிகாரங்களுக்கு எதிராக, ஆளும் அதிகாரங்களின் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக கருத்தை மக்கள் போராட்டம் வடிவிலோ அரசியல் மேடையிலோ வைத்தால் தேசத் துரோகச் சட்டம், இணையத்தில் வைத்தால் தகவல் தொழில்நுட்பச் சட்டம்...அப்படி என்றால் இந்திய நாட்டில் போராடும் உரிமை, கருத்தைச் சொல்லும் உரிமை மக்களுக்கு இல்லையா? இதை உண்மையில் இந்திய அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்கிறதா?


இந்திய அரசின் அரசிலமைப்புச் சட்டம் 19அ தெளிவாகச் சொல்கிறது, ஒவ்வொரு குடிமகனும் தனது கருத்தை சுதந்திரமாக எடுத்துரைக்கும் உரிமை(கருத்துரிமை) அடிப்படை சனநாயக உரிமை என்று... பின்னர் எப்படி இந்த வன்மையானச் சட்டங்கள், கைதுகள், வன்கொடுமைகள் அரசால் சாத்தியப்படுகிறது? சாத்தியப்படுத்த ஓட்டைகள் பல இல்லாமலா போய்விடும்... ஆம், அரசிலைப்புச் சட்டம் 19ஆ-வில் சொல்லப்பட்டுள்ள "19அ கருத்துரிமையில் அடங்காத குறிப்புகள்" என்றத் தெளிவற்றச் சரத்துகளைப் பயன்படுத்தியும், பாதுகாப்பு மற்றும் இறையாண்மை என்ற காரணங்களைச் சொல்லியும் குற்றங்கள் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படாதத் தேசத் துரோகச் சட்டம் (இது பிரித்தானியப் பேரரசு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது அதன் அடிமை நாட்டுக் குடிமக்களின் அடிப்படை போராடும், கருத்துச் சொல்லும் உரிமைகளைப் பறிக்க போட்டச் சட்டமாகும்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் என்ற இரு சட்டங்களை இயற்றியுள்ளது இந்திய அரசு... தன் சொந்த மக்கள் மீதே இந்த கொடுமையானச் சட்டங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இருக்கும் அதிகார மையங்கள் தங்களின் நலனையும், பெருமுதலாளிகளின் நலனையும் காத்து வருவதோடு சராசரி மக்களின் அடிப்படை சனநாயக உரிமையான கருத்துரிமையை போராடும் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது...இந்த பெயரளவு சுதந்திர நாட்டில் அதன் அரசினால் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவரும் அதன் சாமானிய மக்கள் மீது பாயும் இந்த வன்மையான சட்டங்களினால் நிகழ்ந்தேறும் சனநாயகப் படுகொலையைத் தகற்த்தெறிய சரியான செயல்திட்டங்கள் இல்லாமல் அதிகாரமற்ற பெருவாரியான உழைக்கும் சாமானிய மக்கள் வெற்றிபெற முடியாது...


உடனடியாக நாம் செய்யவேண்டியது:

தங்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுவதால் போராடித் தினம் தினம் துன்பத்தில் உழலும் சாதாரண மக்களையும், அன்றாடும் இணையத்தில் கலக்கத்துடன் கருத்துகளை பரிமாறிவரும் இளைஞர்களையும் இணைத்து, போராடும் உரிமைக்கு எதிரான-கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான சட்டங்கள், கைதுகள், வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு கூட்டியக்கம் ஏற்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போராடுவது.
வினோத் & செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்நன்றி. அனைத்து கேலி சித்திரக்காரர்களுக்கும், புகைப்பட உதவி புரிந்தவர்களுக்கும்...

பயன்படுத்திய தரவுகள்:

http://www.thehindu.com/news/cities/chennai/facebook-twitter-come-under-police-scanner/article4674196.ece

http://news.vikatan.com/article.php?module=news&aid=14433

ட்விட்டர் கைதுகள் !… தூண்டும் விவாதங்கள் ! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21970&Itemid=139

http://saffroninfo.blogspot.in/2012/05/blog-post_17.html

http://www.ndtv.com/article/cities/mamata-cartoon-row-defamation-charges-dropped-against-professor-ambikesh-mahapatra-279067

http://www.ndtv.com/article/india/sedition-charges-against-cartoonist-aseem-trivedi-dropped-278731?h_related_also_see

http://www.thehindu.com/news/national/other-states/sedition-charge-against-cartoonist-to-be-revoked/article3990964.ece

http://www.niticentral.com/2013/02/25/111-people-arrested-in-kerala-for-defaming-pj-kurien-online-49715.html

http://janamejayan.wordpress.com/2012/12/06/sec-66a-curbs-on-free-speech-are-part-of-nehru-family-legacy/

http://www.thehindu.com/news/national/supreme-court-to-hear-plea-against-vindhyala-arrest/article4717545.ece

http://www.aazham.in/?p=1958

http://guhankatturai.blogspot.in/2012/09/blog-post_11.html

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22145&Itemid=139

http://oosssai.blogspot.com/2012/04/blog-post_24.html

Wednesday, September 18, 2013

நேரடி பண பரிமாற்றச் சட்டமும், யதார்த்தமும்....ஆடிக் காற்றில் அதிர்ஷ்ட சேலைகள், பாதி விலையில் ஜோடி சேலைகள் என்று பல ஊர்களின் சாலைகளில் ஓடும் வாகன ஒலி நாடாக்கள் மூலமாக செய்யும் விளம்பரங்களை நாம் கேட்டிருப்போம். அதெப்படி நேற்று வரை இல்லாத அதிரடி சலுகைகள் ஆடி வந்தப் பிறகு மட்டும்? எந்த ஒரு வியாபாரியும் தன்னிடம் உள்ள சரக்கு விலைப் போகாது என்று தெரிந்த பிறகு தான், செல்லுபடியாகாதப் பொருளை தள்ளுபடியாக அறிவிப்பான். இதை அறியாத மக்கள் தான் அச்செல்லாப்பொருளை வாங்கிச் செல்வர். அதுப்போன்றே, சரக்கே இல்லாத அரசியல் வியாபாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு ஆடித் தள்ளுபடி திட்டத்தைப் பற்றித்தான் இக்கட்டுரை பேசவிருக்கிறது.கட்டுரைக்குள் செல்லும் முன் சில வார்த்தைகளுக்கான பொருளை முதலில் காண்போம்.


மானியம் - மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள், தொழில்துறைகள், வேளாண் பொருட்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் மின்சாரம் இவற்றில் ஏற்படும் மந்த நிலை, தொய்வு, நஷ்டம், விலைவாசி உயர்வு இதை சரி செய்யவோ அல்லது ஈடுசெய்யவோ ஒரு அரசு கொடுக்கும் தொகையே மானியம்.


நேரடி பணப்பரிமாற்றம் - மானியம் மக்களிடம் நேரடியாக சென்றடைய, மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் தான் இந்த "நேரடி பணப்பரிமாற்றம்", ஆம் மக்களே ! "உங்கள் பணம் உங்கள் கையில்" இது தான் இத்திட்டத்தின் முழக்கம்.நேரடி பணப்பரிமாற்றம் திட்டத்தின் மூலம் இனி மக்களுக்கு கொடுக்கப்படும் மானியமானது, பணமாக அவரவர் வங்கிக் கணக்கில் இடப்படும். இத்திட்டத்தின் அடிப்படை தேவையாக, பயனாளியின் "ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு" எடுத்துகொள்ளபடுகிறது. 26 திட்டங்களின் கீழ் மானியத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்ய, 26 பொதுத்துறை வங்கிகள், 12 கிராமப்புற வங்கிகள், சில தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளன.


லஞ்சம் மற்றும் மோசடிகளை குறைக்கவும், மானியம் பெறுவோர் பற்றிய விவரங்களை எளிமையாகயாகவும், சிறப்பாக கையாளவும் மற்றும் மானியப் பரிமாற்றத்தின் போது ஏற்படும் சுரண்டல்களை தடுக்கவும் இத்திட்டம் பயன்படும் என அரசு அறிவித்துள்ளது.


பணப்பரிமாற்றம் மக்களின் முன்னேற்றத்திற்கா அல்லது தேர்தலின் முன்னோட்டத்திற்கா ?மத்திய அரசு 2013க்குள் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நேரடி பணப்பரிமாற்ற திட்டத்திற்கு மூல காரணிகளாக பயனாளியின், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக்கணக்கு எடுத்துகொள்ளப்படுகிறது . ஆனால் 2013 ஜூலை வரையிலான நிலவரப்படி, 38 கோடி ஆதார் அட்டை தான் கொடுக்கப்பட்டுள்ளது, இது நமது மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடு தான். அது போலவே வங்கிக் கணக்கே இல்லாத ம‌க்க‌ளும் அதிகம்.

இத்திட்டத்தை செயல்படுத்த எவ்வாறு மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன?

ஆதார் அடையாள அட்டையானது 70 அல்லது 80 விழுக்காடு கொடுக்கப்பட்டு, அவற்றில் 50 விழுக்காடு வங்கிக் கணக்குடன் இணைக்கபட்டிருந்தாலே, அந்த மாவட்டங்கள் நேரடி பணப்பரிமாற்ற சேவைக்கு போதுமானதாக கருதி, மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படியாக மத்திய காங்கிரஸ் அரசின் அவசரத்தால் இதுவரை 78 மாவட்டங்களில் (இதில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களை தவிர ) இத்திட்டம் மேற்சொன்ன விழுக்காட்டின் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறது, இன்னும் முழுமையாக எந்தவொரு மாவட்டத்திலும், அதாவது 100 விழுக்காடு ஆதார் அட்டைக‌ளோ, வ‌ங்கி க‌ண‌க்குக‌ளோ இணைக்க‌ப்ப‌ட‌வில்லை. 65 ஆண்டு சுதந்திரத்திற்கு பின், 50 ஆண்டுக‌ளுக்கும் மேலான ஆட்சியில் காங்கிரசிற்கு திடீரென மக்களின் மேல் எப்படி, இப்படி ஒரு அக்கறை ? என்ன காரணம், இத்திட்டத்தில் எதற்காக இந்த அவசரம் ? இதோ வர இருக்கும் 2014 நாடாளமன்ற தேர்தல் தான் இதற்கான காரணமும், கரிசனமும். திட்டம் அமலில் இருக்கும் மாவட்டங்களிலேயே இன்னும் முழுமையாய் நிறைவேற்றாத போது, எதற்காக புதிய மாவட்டங்களில் அதே அரைவேக்காட்டுத்தனத்துடன் நிறைவேற்ற வேண்டும்? இதற்கான பதில் 2014 தேர்தலுக்கு முன், இந்தியாவின் பெருவாரியான மாவட்டங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று மக்களிடம் ஒரு பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ளத்தான்.

காங்கிரஸ் அரசின் எல்லையில்லா ஊழல், விலைவாசி உயர்வு இப்படியாக தொடர்ச்சியாக அதிருப்தியில் இருக்கும் மக்களைக் கவர, ஜனவரி 1 2013 முதல் தர்க்கமே(லாஜிக்) இல்லாம காட்டி வரும் ஒரு வேடிக்கை மற்றும் கவர்ச்சி படம் தான், இந்த நேரடி பணப்பரிமாற்றம்.

கிராமப்புறங்களில் வங்கிச் சேவை ?
கிராமப்புற மற்றும் ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கை உபயோகப்படுத்த தெரியாது அல்லது வங்கிக் கணக்கே கிடையாது என்று சொல்வதைவிட, இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களில் வங்கிகளே கிடையாது என்பது தான் உண்மை. இதுதான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் கிராமங்களின் நிலை.

இதற்கு என்ன காரணம் ? தனியார் வங்கிகள், கிராமப்புறங்களில் கிளைகள் திறக்க, ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தும் அதை அவர்கள் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதும், வங்கி ஊழியர்கள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஊர்களுக்கு சென்று வேலை செய்ய விரும்பாததும் ஒரு காரணம்.

ஒரு புள்ளி விபரத்தின் படி, இந்தியாவில் உள்ள 11 பெருநகரங்களில் மட்டும், இந்தியாவின் மொத்த வங்கிக் கிளைகளில் 11% உள்ளது. ஆனால், ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ள கிராமங்களுக்கு வெறும் 3 வங்கிகள் மட்டுமே உள்ளது. வங்கிகளின் தற்போதைய கட்டமைப்பை மேம்படுத்தாமல் இருப்பதும், இம்மாதிரியான கிராமப்புறங்களில் வங்கிகளை தொடங்காமல் இருப்பதும் இத்திட்டத்தின் மிகப்பெரிய ஓட்டை.


அன்றாடம் கஷ்டப்படும், பின் தங்கிய ஏழை மக்கள் நேரடிப்பயன்பெறுவ‌து தான் இதன் அடிப்படை நோக்கமே. ஆனால் இத்திட்டம் அப்படிப்பட்ட மேற்சொன்ன பின்தங்கிய கிராமங்களிலோ அல்லது ஊர்களிலோ முதலில் செயல்படுத்தப்படவில்லை. அன்றாடம் பசியால் வாடும் மக்களே பசி ! பசி ! என்று வயிற்றைத் தட்டாமல் இருக்கும் போது, இத்திட்டத்தை அரைகுறையாக செயல்படுத்திவிட்டு வெற்றி ! வெற்றி ! என்று மார் தட்டுவதில் எவ்வித பலனோ, நியாயமோ இல்லை.

பசிக்கு மாற்று பணமா ?
பொதுவிநியோக முறை இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்தின் உதவியுடன், அந்தந்த மாநில நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை வழங்குகிறது. ஆனால் நேரடிப் பணப்பரிமாற்ற திட்டத்தின் விரிவாக்கமாக பொதுவிநியோக பொருட்களுக்கும் மாற்றாக பணம் கொடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு மிகத்தவறான அணுகுமுறையைக் காட்டுகிறது. அதாவது திறந்த அல்லது நேரடிச் சந்தையில் அனைவரும் சென்று, சந்தை விலைக்கே பொருட்கள் வாங்குவதென்பது இயலாத காரியம், அதுமட்டுமில்லாது பொது சந்தையின் விலையேற்றத்திற்கேற்ப மானியத்தொகையின் அளவு உயர்த்திதரப்படும் போன்ற உத்தரவாதங்களை அரசு அளிக்காதென்பதும், தற்போதைய பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இவற்றின் விலையேற்றும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே தாரைவார்த்து கொடுத்ததை போல, எதிர்காலத்தில் திறந்த சந்தைகளுக்கும் விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை விட்டுவிட்டு, மானியம் கொடுத்தும் லாபம் இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்தபின்னர், கொடுக்கப்படும் மானியம் அனைத்தையும் முற்றிலுமாக முடக்குவதே இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது. "எந்த ஒரு பொருளுக்கான விலையும் பணமாகலாம், ஆனால் ஏழை மக்களின் பசிக்கான விலை பணமாகாது" என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.ஆணாதிக்க சமூகத்தில், அவசரகதித் திட்டங்கள்
ஆண்களும், பெண்களும் சமம், ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்களும் செய்கின்றனர் என்று நாம் ஒரு புறம் பேசிக்கொண்டாலும் கூட, இன்னும் நமது இன்றைய வீடுகள் பலவற்றில், ஆண்கள் தான் அத்தனை முடிவுகளையும், பணப்பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் மற்றும் உரிமைப் பெற்றவராக உள்ளனர். இத்திட்டத்தின் வாயிலாக, கொடுக்கப்படும் மானியம் குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கில் தான் சென்று சேரும். இந்திய குடிமகன்களுக்கு குடியை ஊக்குவித்து, மக்களைத் தவறான பழக்கத்திற்கு அடிமையாக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களிலெல்லாம், இத்திட்டத்தின் வாயிலாக கொடுக்கப்படும் மானியமானது, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள குடிமகன்கள் மூலமாக டாஸ்மாக் கல்லாக்களையே நிரப்பும். இதை ஏன் என்று கூட கேட்க முடியாத நிலையில் உள்ள ஏழை மற்றும் நடுதரவர்க்கப் பெண்களும், குழந்தைகளும் இதன் காரணமாக பசியால் வாடும் அவலநிலையும் ஏற்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், இத்திட்டத்தைச் சார்ந்த சமுதாயத்தின் எதார்த்த நிலைகளையும் உணர்ந்து செயல்படக்கூடிய கடமை, அரசிற்கு வேண்டும் என்பதையும் இங்கே வலியுறுத்துகிறோம்.

எப்போது மானியத்தொகை மக்களுக்கு கிடைக்கும் ?
தற்போதைய அரசின் அறிவிப்பின் படி, பயனாளிக்கு வழங்கும் மானியத்தொகை எப்போது அவர்களின் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும் என்ற ஒரு தெளிவான விவரம் அறிவிக்கப்படவில்லை. ஏன் என்றால் எரிவாயு உருளையை தவிர மற்ற எந்த ஒரு மானியப் பொருளுக்கான விலையை முன்கூட்டியே கிடைக்க வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. ஏன் என்றால் மானியத்தொகை முன்னதாகவே கொடுக்கப்பட்டுவிட்டாலோ அல்லது தாமதமாக கொடுத்தாலோ அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, முன்னதாகவே மானியத்தொகை வங்கிக்கணக்கில் இடபட்டால், மானியப் பொருளை உபயோகபடுத்தாத நபர்களும் மானியத்தொகையை அனுபவிக்கும் நிலை ஏற்படும். ஒருவேளை மானியப் பொருளை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகோ அல்லது காலம் தாழ்த்தியோ மானியத்தொகை கொடுத்தால் அது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். ஒரு யோசனையாக, பயனாளி அப்பொருட்களை வாங்கிய சில மணி நேரங்களுக்குள் அத்தொகை கிடைக்க வழிவகை செய்தால் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் மானியத்தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் சென்றடைகிறதோ அதைப் பொறுத்தே இத்திட்டத்தின் வெற்றியின் அளவீடு அமையும். மக்களளை காலம் தாழ்த்தாமல் பயனடையச் செய்ய, எந்த ஒரு வாக்கு வங்கியையும் எதிர்பார்க்காமல், அரசு இத்திட்டத்திற்கான போதுமான கால அளவை எடுத்துக்கொள்ளவேண்டும்.

தமிழக அரசின் நிலை ?
ஜூலை 1 2013 முதல், இரண்டாவது கட்டமாக, இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழகத்தின் அரியலூர், புதுகோட்டை மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆட்சியின் அதிகாரம் மற்றும் பொறுப்புகளிலிருந்து புறக்கணித்து, மத்திய அரசு இத்திட்டத்தில் தன்னிச்சைப் போக்குடன் செயல்படுவதாகவும், மேலும் பொது விநியோக முறை, எரிவாயு மற்றும் உரங்கள் போன்றவற்றை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது எனவும் கூறி, தற்காலிகமாக தமிழக அரசு இத்திட்டத்தை புறக்கணித்துள்ளது.


கல்வி ஊக்கத்தொகை, ஓய்வூதிய உதவி, தாய்சேய் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் மூலமாக அளிக்கப்படும் உதவித்தொகையை பயனாளியின் வங்கிக்கணக்கில் செலுத்தும் முறையை தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. ஆதலால், தமிழக அரசு, இத்திட்டம் ஒவ்வொரு மாநில அரசின் மூலமாக நிறைவேறினால் இன்னும் விரைவாக பயனாளியிடம் மானியத்தொகை சென்றடையும் என்ற கருத்தையும், மேற்ச்சொன்ன குறைகளை நீக்கி, இத்திட்டத்தின் அணுகுமுறைகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே இதனை தமிழகத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

எதை நோக்கி அடுத்து ?
அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் துறைகளும் இத்திட்டத்தில் பங்கு பெறுவதால் தனிநபர் விபரங்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் இத்திட்டத்தின் மூலம் அரசு தன் கதவுகளைப் பெருவாரியாக தனியார் துறைகளைகளுக்கு திறந்துவிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்தால் தற்போதுள்ள நியாய விலைக் கடைகளில் வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்படுமா என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் மத்திய அரசிடம் இல்லை. 1991 ஆம் ஆண்டு இந்தியா சந்தித்த மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைளிலிருந்து மாறி, தாராளமயமக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலை நடைமுறைபடுத்திய பின், இன்று கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை துறைகளெல்லாம் எப்படி தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனகளுக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறதோ, அதை போன்றே மத்திய காங்கிரஸ் அரசு இத்திட்டத்தின் மூலமாக மேலும் தனியாருக்கு தனது சேவையைக் கூட்டிக் கொடுத்துள்ளது.


பொது மக்களும், இயக்கங்களும் இது போன்ற தவறான கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்த‌ வேண்டும்.

ஆசாத்
சேவ் தமிழ்சு இயக்கம்

மூலப்பதிவு :
http://www.itecentre.co.in/node/190


பின் குறிப்பு: மூலப்பதிவை அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், மேலும் தகவல்களை சேர்த்து வெளியிட்டு இருப்பதால் இது மொழியாக்க கட்டுரை என குறிப்பிடப்படவில்லை...

Tuesday, September 17, 2013

ஈழ‌ப்போராட்ட‌த்தின் ந‌ம்பிக்கை ஒளிக்கீற்று - மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம்
த‌ஞ்சை ரெங்க‌ராஜ் க‌லைக்குழுவின‌ரின் ப‌றை இசையுடனும், க‌ரகாட்டத்துடனும் "பன்னாட்டு இளைஞர் மாநாட்டின்" மாலை அமர்வு தொடங்கிய‌து. அதற்கு முன்பாக, சுருக்கமானதொரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. மாநாட்டிற்கு வ‌ருகை த‌ந்திருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளும் செய‌ற்பாட்டாள‌ர்க‌ளும் இதில் ப‌ங்கேற்று, மாநாட்டு செய்திக‌ளை ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு அளித்த‌ன‌ர்.மாலை சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்களான மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் கம்யூனிசுட்டு கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா , திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொது செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றினர். தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில், காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடக்குமாயின், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைபதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் உரைக்குறிப்புகளிலிருந்து சில.சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்:
2009 இலங்கையில் நடந்த இறுதி கட்ட போருக்கு பிறகு ஈழப் போராட்டம் முடிவடைந்து விட்டதாக கருதினர். ஆனால் 2013 மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஈழப்போராட்டம் இன்னும் முடியவடையவில்லை என்பதை மெய்ப்பித்து காட்டியது. 2009க்கு முன்னர் ஈழத்தமிழர்களின் தாகமாக இருந்த சுதந்திரத் தமிழீழம் இன்று உலகத் தமிழர்களின் தாகமாக மாறியிருக்கின்றது. எந்த‌ ஒரு தேசிய‌ இன‌விடுத‌லை போராட்ட‌த்திற்கும் கால‌ எல்லை கிடையாது, ஆத‌லால் அடுத்த‌ த‌லைமுறைக்கு நாம் தேசிய‌ இன‌விடுத‌லை போராட்ட‌த்தை கைய‌ளித்த‌ல் முக்கிய‌மான‌து, இந்த‌ நோக்க‌த்தை மைய‌ப்ப‌டுத்தியே இந்த "ப‌ன்னாட்டு இளைஞ‌ர் மாநாட்டை" த‌மிழீழ‌த்திற்கான‌ மாண‌வ‌ர் போராட்ட‌க்குழுவுட‌ன் சேர்ந்து சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் முன்னெடுத்துள்ள‌து என்று மாநாட்டின் நோக்க‌த்தை கூறினார்.தோழர் வைகோ:அந்தப் பாலகன் என்ன செய்துவிட்டான்? அந்தப் பாலகனின் கண்கள் தான் மாணவர்களைத் தட்டியெழுப்பியது, சோர்ந்து கிடந்த போராட்டத்திற்குப் புது வீரியம் பாய்ச்சியுள்ளது...ஓ வாலிபனே வா! இதில் இணைந்துக் கொள்! ஓ அன்னியனே வெளியேறு! தாயக ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேறு! என்று முழக்கமிட்டு தெருவில் இருங்கிப் போராடினார்கள் இந்த மாணவர்கள்.


தமிழினத்திற்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்த இந்திய அரசைத் தூக்கியெறியும் தீப்பொறி இளைஞர்களிடம் இருந்துதான் புறப்பட்டுள்ளது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் சனநாயகம் மற்றும் மனித உரிமையை மீறிய நாடுகளை தற்காலிகமாக நீக்கி வைப்பர்... அப்படி நைஜீரியா, பாகிசுதான், பிஜி , தென் அப்பிரிக்கா போன்ற நாடுகள் நீக்கப்பட்டுள்ளன, பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போல சனநாயகம் மற்றும் மனித உரிமையை மீறிய இலங்கையை நீக்க முயற்சிக்காமல், அங்கே காமன்வெல்த் மாநாடு நடக்க இந்தியா ஏன் முயற்சிக்கிறது? கூட்டுக்குற்றவாளி என்பதாலா?இந்தியா ஈழப்போருக்கு ஆயுதங்கள், ரேடார்கள், போர்க்கப்பல்கள் வழங்கியது அம்பலமாகியுள்ளது. அதனால் இந்தியாவும் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் கூட்டுக்குற்றவாளி தான். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்தியா அதில் பங்கேற்கக் கூடாது என்பது மட்டுமல்ல நமது கோரிக்கை, ஏனென்றால் கடைசி நிமிடத்தில் அங்கே பிரதமர் செல்லவில்லை என்று சொல்வார் உடனே இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள் இதை வெற்றி என்று கொண்டாடுவார்கள். அதற்கு தாம் தாம் காரணம் என்றும் சொல்வார்கள். காமன்வெல்த் மாநாடே இலங்கையில் நிகழக்கூடாது என்பதே நமது பிரதானக் கோரிக்கை.அங்கு ஒருவேளை காமன்வெல்த் மாநாடு நடந்தால் அடுத்த இரண்டு வருடத்திற்கு இலங்கை சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்சே தான் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர் ஆவார். அப்படியிருக்கும் பொழுது நாம் கோரியுள்ள இனப்படுகொலைக்கான சுயேச்சையான பன்னாட்டு நீதி விசாரணை எப்படி நிகழும்? எப்படி நமக்கு நீதி கிடைக்கும்? சுதந்திர தமிழீழம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்பதில் முதலில் இருந்து ஒரே நிலைப்பாடோடு முன்னெடுத்துச் சென்றது நாங்கள் தான். அரசியல் காரணமாக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் இதில் நாங்கள் சமரசம் செய்துகொண்டதே இல்லை. மக்கள் விருப்பத்தின் படி ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் நாங்கள் தான் முதலில் பதிவு செய்தோம்.ஈழம் மலரும் வரை எங்கள் அர்ப்பணிப்பான போராட்டம் தொடரும்.


மறுக்கப்பட்டாலும் நீதி அழியாது. நமது இளைஞர்கள் மறுக்கப்பட்ட நீதியை ஈழத் தமிழர்களுக்குப் பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.தோழர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர்:
உகாண்டா , ருடிசியா, நைஜிரியா , தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஜனநாயகத்தை, மனித உரிமைகளை மதிக்கவில்லை என ஏற்கனவே காமன்வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட வர‌லாறுகள் உண்டு, எனவே அது போல பல மடங்கு குற்றம் புரிந்த இலங்கையும் காமன்வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட வேண்டும்.
காம‌ன்வெல்த் அமைப்பு நாடுக‌ளின் சாற்றுரைக‌ளில் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ உறுப்பின‌ர்க‌ளின் த‌குதிக‌ளான‌, சனநாய‌க‌ம், பாதுகாப்பு, ச‌கிப்புத்த‌ன்மை, ப‌த்திரிக்கைச் சுத‌ந்திர‌ம் போன்ற‌ எந்த‌ த‌குதியும் இல‌ங்கையில் துளியும் இல்லாத பொழுது எப்படி காமன்வெல்த் அமைப்பு இன்னும் இலங்கையை உறுப்பு நாடாக வைத்துள்ளது? என்ற கேள்வியை த‌ன‌து உரையில் ப‌திவு செய்தார் தோழர் ஜவாஹிருல்லா.

எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி:மாணவர்கள் போராட்டம் ஈழப் போராட்டப் பாதையில் புது நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.அண்மையில் ஐநா மனித உரிமை மன்றச் செயலாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு சென்றிருந்தார், அங்கு நடப்பதை ஆய்வு செய்துவிட்டு, அங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது என்றார். இதைச் சொன்னதால் இலங்கை அமைச்சரே நவநீதம் பிள்ளையைப் பற்றி கொச்சையாகவும், கேவலமாகவும் பரப்புரைச் செய்துள்ளார். இது போதாதா? இலங்கை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேறு என்ன தகுதி வேண்டும்? ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் இந்திய மன்மோகன் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாற்றாக பிஜேபி இருக்க முடியாது, அப்படியான மாற்றுக்கொள்கை அக்கட்சிக்கு துளியும் கிடையாது. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்துகிற‌ தமிழ்நாட்டில் தமிழர் நலனில் அக்கறையுள்ள மூன்றாவது அணி இந்தியாவில் உருவாக வேண்டும். அதை நாம் தான் உருவாக்க வேண்டும்.தோழர் வீரபாண்டியன் - இந்திய கம்யூனிசுட்டு கட்சி:சர்வாதிகாரத்திற்காக ஒரு நாடு தடை செய்யப்பட வேண்டுமானால் இலங்கை தான் முத‌லில் தடை செய்யப்பட வேண்டிய நாடு. நான்கு மந்திரிகளும் நான்கு அதிகாரிகளும் மட்டுமே முடிவு எடுக்கின்றனர்.இந்திய‌ மக்களின் உரிமைகளும், ஜன‌நாயகமும் காங்கிரசு அரசால் குழி தோண்டி புதைக்கப் படுகின்றன.குணசேகரன் - மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்:நாங்கள் மலேசிய அரசும் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என போராடிக் கொண்டு இருக்கிறோம். வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மலேசிய பாராளுமன்ற கூட்டத்தில் இதை வலியுறுத்தி பேச உள்ளோம். ஆனாலும் மலேசிய அரசு கலந்து கொள்ளும். காரணம் மலேசிய ஆளும் அரசாங்க‌த்தில் உள்ள மந்திரிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையில் முதலீடு செய்து உள்ளனர். நான் எதிர் கட்சியில் இருந்து கொண்டு இது போல் பேசுவதால் மலேசியாவுக்கான இலங்கை தூதர் என்னை சந்திக்க இரண்டு முறை அழைப்பு விடுத்தார். நான் செல்லவில்லை, இதுபோல் அழைப்பு கிடைத்து செல்லுபவர்களுக்கு 50,000 வெள்ளி மதிப்புள்ள பொருட்களை இலங்கை தூதர் பரிசாக கொடுப்பார். இப்படித்தான் இலங்கை அரசு தனக்கு ஆதரவாக பேச பத்திரிக்கைகளையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்குகிறது.
சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா:இந்திரா காந்தி போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரவளித்தார். இராஜிவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தங்களுக்கு மெனக்கெட்டார் என்றெல்லாம் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அவையெல்லாம் ஈழ விடுதலைக்கான அக்கறைகளோ, ஈழத்தமிழர்களின் மீதான பாசமோ கிடையாது. இந்திய விரிவாதிக்க நலன்களையொட்டியும், இலங்கை ஒரு போதும் எந்தவொரு வல்லாதிக்கத்தின் கீழும் சென்று விடக்கூடாது என்ற கவன ஏற்பாடுமே, இந்திரா காந்தியின் புலிகள் ஆதரவு நடவடிக்கைகளுக்கான காரணமாக இருந்தன.ராஜபக்சே இந்தியாவுக்கான போரைத் தான் நாங்கள் நடத்தினோம் என்று பகிரங்கமாக அறிவித்தாரோ, அதைப் போலத் தான், இலங்கை அரசின் நலனுக்காகவும், இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மூடி மறைப்பதற்காகவுமே, இந்திய அரசு தான் இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறது. ஆகவே காமன் வெல்த் அமைப்புகளின் உறுப்பு நாடுகளிடம் "இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது" என்று கோரிக்கை வைப்பதை விட‌ அக்கோரிக்கையை இந்தியாவை நோக்கி வைப்பதே முக்கிய‌மானது.


பாதிக்கப் பட்ட ஈழத்தமிழர்களின் தற்போதைய வாழ்வாதாரங்க‌ளை பாதுகாக்க ஈழத்தில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகம் அமைப்பதையோ அல்லது அங்கீகரிக்கப் பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பின் மேற்பார்வையிலான பாதுகாப்பையோ உறுதி செய்வதை நோக்கித் தான் நமது அடுத்த கட்ட முன்னகர்வுகளும், போராட்டங்களும் அமையப் பெற வேண்டும். இங்குள்ள‌ அரசியல் இயக்கங்களும் மாணவர் அமைப்புகளும் இதை பரிசீலித்து, அதற்கான‌ வேலைகளை முன்னெடுக்க வேண்டும். இது வெறும் மனிதாபிமான நடவடிக்கையல்ல, தமிழர் தாயக நிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகும். நமது இறுதி இலக்கு எப்பொழுதும் தமிழீழ விடுதலையே.Monday, September 16, 2013

“நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது"
“நீங்கள் பூக்களைப் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது" -
என்கிறது பாப்லோ நெருதாவின் கவிதைக் குறிப்பொன்று.இலங்கை அரச படைகளின் சப்பாத்துக் கால்களால் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெறுவார்கள். அடுத்த முறை, போராட்டம் இன்னும் வலுவடைந்ததாக இருக்கப் போகிறது. வீரியமானதாக இருக்கப் போகிறது. அனுபவம் அவர்களுக்கு கை கொடுக்கப் போகிறது. இனப்படுகொலையின் ஆறா வடுக்களை அவர்கள் மறக்கப் போவதில்லை"டெல்லி ப‌ல்க‌லைக் க‌ழ‌க மாண‌வ‌ர் மிருத்ஞ்ஜெய், சென்னை ப‌ன்னாட்டு இளைஞ‌ர் மாநாட்டுக்கு அனுப்பிய‌ க‌டித‌மொன்றில் இவ்வாறாக‌ குறிப்பிட்டிருந்தார்.இனப்படுகொலை நாடான இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமீழழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவும் சேவ் தமிழ்சு அமைப்பும் இணைந்து நடத்திய பன்னாட்டு இளைஞர் மாநாடு, கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா நகரில் விஜய் ஸ்ரீ மண்டபத்தில் புதிய உத்வேகத்துடன் நடந்து முடிந்தது.


தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழுவினரின் பறை முழங்க காலை அமர்வு எழுச்சியுடன் துவங்கியது. பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் நூற்றுக்கணக்கில் மாநாட்டு அரங்கில் குழுமியிருந்தனர்.தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழக கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவத் தலைவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர்.மணிவண்ணன், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மடல் அனுப்பியிருந்தனர்.

தோழர் இளையராஜா


தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் இளையராஜா, துவக்க உரையை பதிவு செய்தார். கடந்த நான்கு பத்தாண்டுகளில் மாணவர் போராட்டங்களின் பங்கு குறித்த பதிவு செய்த தோழர் இளையராஜா, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அடுத்தடுத்த முன்னகர்வுகளை நோக்கி மாணவர் எழுச்சி இடம் பெறல் வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

அடுத்து, காலை அமர்வுக்கு தலைமை தாங்கிய தோழர் திவ்யா பேசினார்.இவ்வமர்வில் பங்கேற்ற பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த‌ மாணவத் தலைவர்களின் உரைகளிலிருந்து சில குறிப்புகளை மட்டும் சுருக்கமாக‌ இங்கே கொணர்ந்திருக்கிறோம்.

தோழர் திவ்யாஇந்தித் திணிப்புக்கெதிரான மொழிப்போர் போராட்டத்திற்கு பிறகு மாணவர்களின் மிகப்பெரிய எழுச்சிப் போராட்டம் ஈழ விடுதலைக்கான மார்ச் மாத போராட்டம் ஆகும். பல்வேறு மாவட்டத்தில் இருந்து இந்த மாநாட்டிற்கு மாணவர்கள் வந்துள்ளார்கள், இவர்கள் மாணவர்கள் அல்ல, மாணவப்போராளிகள். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு என்பது பிரித்தானிய காலனி அடிமை நாடுகளின் கூட்டமைப்பு, அதில் இருந்து பிஜி நாடு இராணுவ ஆட்சி நடப்பதால் நீக் கி வைப்பட்டுள்ளது, இலங்கையில் ஒன்றரை இலட்சம் மக்களை அரசே கொன்றுள்ளது, ஆனால் அதைக் கூட்டமைப்பில் இருந்து விலக்காமல் அங்கேயே காமன்வெல்த் மாநாடு நடத்துவது எப்படி சரியாகும்? பாலின, இன, மத, மொழி ரீதியாக மக்களை ஒடுக்கினால் அதன் அடிப்படையில் அந்த நாடு/அரசு வெளியேற்றப்படும் என்று காமன்வெல்த் கொள்கை சொல்கிறது, அப்படியானால் இலங்கை? இந்த மாணவர்கள் கூட்டமைப்பு இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப் போராடிக் கொண்டிருக்கிறது. அதில் மாற்றம் வர அரசு முனைப்புக் காட்டவில்லை, மாற்றம் வரும் வரை மாணவர்களும் விடப்போவதில்லை. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, கூட்டமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்.இந்தக் கோரிக்கையில் மாணவர்கள், இளைஞர்கள் நாம் வெற்றியடைவோம்.
தோழர் இளங்கோஈழத்தில் போருக்குப்பின் முடங்கிக் கிடந்த மக்கள் எழுந்து நிற்க மாணவர்கள் போராட்டம் துணை நின்றுள்ளது. ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு நீண்ட நெடிய போராட்டம், அதற்கு நீடித்த வரலாறு உண்டு, தோல்விகள் நமக்கு பலப் படிப்பினைகளைத் தந்துள்ளது. இங்குள்ள அரசியல் கட்சிகள் தங்கள் நலன் கருதி தான் ஈழ விடுதலை விடயத்தைக் கையிலெடுத்தார்கள், அல்லாமல் அக்கறையோ வெற்றிக்கான வழிமுறையோ மக்களிடம் செய்தியைக் கொண்டு சென்று வெறும் ஆதரவோடு நில்லாமல் தங்களுக்கான போராட்டமாக அதை நகர்த்தவோ முயற்சிக்கவேயில்லை.ஈழ விடுதலையில் அல்லது தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் எதிர்ப்பு என்பது ஏதோ இராசீவ் காந்தியின் சாவிற்கு பின்பு வந்தது போன்று சித்தரிக்கப்படுகிறது, அப்படி அல்ல, தமில்நாட்டிலுருந்து ஒன்றரை நூற்றாண்டு காலம் முன்பே கொண்டுசெல்லப்பட்டு தேயிலைத் தோட்டத்தைக் கட்டியெளுப்பிய மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை அரசிடம் இருந்து 1964ம் ஆண்டில் பாதிபேரை (சுமார் 5.1/2 இலட்சம் பேர்) திரும்பப் பெற்றபோதும், கட்சத் தீவை 1974ம் ஆண்டுத் தாரவார்த்தபோதும் இந்திய அரசு தமிழர் நலனில் எப்படியான நிலைப்பாடு எடுத்துள்ளது என்பது நமக்குப் புரியவேண்டும்.அரசியல் என்றாலே தீங்கு என்று ஒதுங்கியிருந்த மக்களை, மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு அரசியலை எடுத்துச் சென்று அரசியல்படுத்தியதன் விளைவாக சமூகத்தில் அரசியல் மாற்றம் குறித்த சிந்தனையை இன்னமும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்கள்.எத்தனை எதிர்ப்புகள், தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து மாணவர்கள், இளைஞர்கள் நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

அருணனக்

பொது செயலாளர்- சனநாயக மாணவர்கள் சங்கம் (தெலங்கானா)மக்கள் விடுதலை போராட்டங்கள் ஓங்குகஇலங்கை பாசிச அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்த பிறகு, இந்தியாவிலுள்ள சனநாயக சக்திகளும், குறிப்பாக தமிழக மக்களும், மாணவர்களும் "இலங்கையில்

நடந்தது போரல்ல, இனப்படுகொலை" என்ற கோரிக்கையை உலகின் முன்வைத்து போராடினார்கள். அதே நேரம் 2013 மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமைக் குழுவில் "40,000 தமிழர்கள் போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டார்கள் என்ற அறிக்கையை" தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராடினார்கள். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர், பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட பின்னர் இனப்படுகொலையாளி இராஜபக்சேவிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமாக நடைபெறத் தொடங்கியது, தொடக்கத்தில் 8 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தது இந்த போராட்டத்தை இயக்கும் உந்துசக்தியாக மாறிய‌து. இந்த உண்ணாவிரதம் சங்கிலி தொடர் விளைவாக தமிழகமெங்கும் மாணவர்களின் தொடர் போராட்டத்தையும், இந்தியாவெங்கும் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தையும் நடத்தியது. மாணவர்கள் கல்லூரி புறக்கணிப்புகளையும், கொலைகார‌ன் இராஜ‌ப‌க்சேவின் உருவ‌ பொம்மைக‌ளை எரித்தும், இந்த‌ மாண‌வ‌ர் போராட்ட‌த்தில் இந்தியாவெங்கும் உள்ள‌ ச‌ன‌நாய‌க‌ ஆற்ற‌ல்க‌ள் க‌ல‌ந்து கொள்ள‌ கோரிக்கை வைத்து கையெழுத்து இய‌க்க‌ம் ந‌ட‌த்தியும் தொட‌ர்ந்து போராடினார்க‌ள்.

த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம், இந்தியாவின் ம‌ற்ற‌ ப‌குதிக‌ளிலுள்ள‌ மாண‌வ‌ர்க‌ளையும் க‌வ‌ர்ந்த‌து, இதே போல‌ ம‌க்க‌ள‌து கோரிக்கைக‌ளுக்கு த‌லைமை ஏற்று சன‌நாய‌க‌ வ‌ழியில் போராடும் ப‌டி தூண்டிய‌து. தெல‌ங்கானா மாநில‌த்திற்கான‌ ம‌க்க‌ள‌து கோரிக்கைக‌ளின் தொட‌க்க‌த்தில் இருந்தே (1960க‌ளில் இருந்து) மாண‌வ‌ர்க‌ள் முன்னிலையில் இருந்து போராடி வ‌ந்தார்க‌ள். அதே போல‌ இப்பொழுது ந‌ட‌ந்த‌ போராட்டங்க‌ளிலும் மாண‌வ‌ர்க‌ளே முன்னிலை வ‌குத்து முன்னெடுத்து சென்றார்க‌ள். த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ம், தெல‌ங்கானா மாண‌வ‌ர்க‌ள் தொட‌ர்ந்து

போராடுவ‌த‌ற்கான‌ உத்வேக‌த்தை வ‌ழ‌ங்கிய‌து. த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் கோரிக்கைக‌ளையும், ஒருங்கிணைத்து உல‌கிட‌ம் ச‌ரியாக‌ எடுத்துச் சென்ற‌து த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ம். அதே போல‌ இல‌ங்கை அர‌சால் தமிழர்கள் க‌டுமையாக‌ ஒடுக்க‌ப்ப‌ட்டு, கொல்ல‌ப்ப‌ட்டு, இன‌ப்ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌தை இந்தியா முழுக்க‌ எடுத்துச் சென்ற‌து மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம். அதே போல‌

மாண‌வர் இய‌க்க‌ங்க‌ள் ச‌ரியான‌ முறையில் செய‌ல்ப‌ட்டு த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கையில் ப‌டும் இன்ன‌லையும், இல‌ங்கை அர‌சின் பாசிச‌ முக‌த்தையும் கடைக்கோடி ம‌னித‌னுக்கும் எடுத்துச் சென்ற‌து.த‌ங்கு த‌டையின்றி துணிச்ச‌லுட‌ன் இந்திய‌ அர‌சுக்கு எதிரான‌ போராட்ட‌த்தை த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தினார்க‌ள், அது ம‌ட்டுமின்றி அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை த‌ங்க‌ள் போராட்ட‌த்தில் இணைந்து

ம‌னித‌த் த‌ன்மைய‌ற்ற‌ இல‌ங்கை அர‌சை க‌ண்டிக்க‌வும் , இந்தியாவை ஐநா ம‌னித‌ உரிமை குழுவில் இல‌ங்கைக்கு எதிராக‌ வாக்க‌ளிக்க‌வும் செய்யும் ப‌டி நிர்ப்ப‌ந்தித்த‌ன‌ர்.ச‌ன‌நாய‌க‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ம் (தெல‌ங்கானா) போராடி வ‌ரும் மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு த‌ள‌த்தையும், மாண‌வ‌ர்க‌ளுடன் தோழ‌மையை ஏற்ப‌டுத்துவ‌திலும் முன்னின்று ப‌ணியாற்றிய‌து. இத‌ற்காக‌ Foreign Languages University-யில் ஆங்கில‌த்திலும், பிற‌ மொழிக‌ளிலும் ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளை ஒருங்கிணைந்து ந‌ட‌த்திய‌து, இந்த நிகழ்வுகள் ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிடுத‌ல், ஊர்வ‌ல‌ம் செல்லுத‌ல்,

க‌ருத்த‌ர‌ங்‌குகளை ந‌ட‌த்துத‌ல் மூல‌ம் ந‌டைபெற்ற‌து, ம‌க்க‌ளின் ச‌ன‌நாய‌க‌ கோரிக்கைக‌ள் இல‌க்கை அடையாத‌ வ‌ரை அவ‌ர்க‌ளின் போராட்ட‌ம் ஓய்வ‌தில்லை.ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ஓங்குக‌...பெத்த‌ன‌வேல் IIT சென்னை


மாணவர்கள் இது பொன்ற போராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாரயணன் , சிவசங்கர மேனன், நிருபமாராவ் போன்ற இடங்களில் தமிழர்கள் இருந்திருந்தால் தமிழின படுகொலை தடுக்கப்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தமிழர்கள் பிரச்சினை என்பதை தாண்டி அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். எல்லா இடங்களிலும் மனித உரிமையும், வாழும் உரிமையும் ஒன்றுதான். எனவே நாம் நமது நியாயங்களை உரக்கச் சொல்வோம்.

மாணவர்.விசாகன்

இலண்டலிருந்து வந்திருந்த இம்பீரியல் கல்லூரி மாணவரும், பிரிட்டன் தமிழ் மன்றத்தின்(BTF) உறுப்பினருமான விசாகன் பேசும் பொழுது 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போருக்கு பின்னரான நிகழ்வுகளை சுட்டினார், வளர்ச்சி என்ற பெயரில் தமிழ் விவசாயிகளின் நிலம் பிடுங்கப்பட்டு இராணுவம் கையப்படுத்துவதையும், தமிழர் தாயகப் பகுதியில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகத்தத்தில் இராணுவம் நிலைகொண்டு, மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது என்றும், தமிழர் தாயகப்பகுதியில் உள்ள ஊர்களின், தெருக்களை சிங்கள பெயர்களுக்கு மாற்றுவதையும், புதிது புதிதாக சிங்கள குடியேற்றங்களும், புத்த விகாரைகளும் தமிழர் பகுதியில் முளைத்து வருவதைப் பற்றியும் கூறினார், மேலும் அவர் கூறுகையில் இது ஒரு திட்டமிட்ட கலாச்சார படுகொலையே அன்றி வேறல்ல என்றும் குறிப்பிட்டார். பன்னாட்டு சமூகம் சிரியாவில் காட்டிவரும் அக்கறையை இனப்படுகொலை நடந்த ஈழ மண்ணில் ஏன் காட்டவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார். அதே சமயம், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பெருந்திரளான மாணவர் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது என்றும் கூறினார். இந்த பன்னாட்டு இளைஞர் மாநாடு உலகில் எல்லா பகுதியில் உள்ள தமிழர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தளத்தை அமைத்து கொடுத்துள்ளது என்றும் கூறினார் அவர்.மாணவர்களின் இவ்வமர்வில், எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும், வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையனும், பேராசிரியர்.மணிவண்ணனும்(கால தாமதத்தால் மாலை அமர்வில் பேசினார்) பங்கேற்றிருந்தனர்.70-களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சிக்கு பிறகு, மாபெரும் மாணவர் போராட்டமாக,கடந்த‌ மார்ச் மாதத்தில் நடைபெற்ற‌ மாணவர் போராட்டம் அமைந்திருந்தது எனவும்.தற்போதுள்ள அரசியல் களத்தில் நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருக்கிறது என பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டார்.


மாணவர்கள் போராட்டங்கள் தொட‌ர்ச்சியாகவும், துல்லியமான எதிர்கால‌திட்ட‌ங்களுடனும் இருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். அதே போல‌ மாண‌வ‌ர்க‌ள் போராட்ட‌ம் அடுத்து யார் ஆள்வ‌து என்ப‌தை தீர்மானிப்ப‌வையாக‌வும் இருக்க‌ வேண்டும் என்று சென்னை ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் அர‌சிய‌ற் பிறிவு த‌லைவ‌ரும், பேராசிரிய‌ருமான‌ ம‌ணிவ‌ண்ண‌ன் குறிப்பிட்டார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக்கூடாது என்பது மட்டுமல்ல. இலங்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை நாமனைவரும் புறக்கணிக்க வேண்டும். இலங்கை பொருட்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கங்கள் முடிவெடுப்போம் என்று தோழர் த.வெள்ளையன் தனது உரையில் தெரிவித்தார்.


Monday, September 9, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது - பன்னாட்டு இளைஞர் மாநாடு
நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் இரத்தம் தோய்ந்த இலங்கைத் தீவில் “காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா.மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு ‘காமன்வெல்த் தலைவர்’ என்ற மகுடம் சூட்டப் போகின்றது.

2009 இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் 1.5 இலட்சம் தமிழர்களை கொன்று குவித்தது சிங்கள இனவெறி அரசு; போருக்கு பின்னாலும், தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் இராணுவ சர்வாதிகார அரசு; தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்த மயமாக்கி வரும் பெளத்த மதவெறி அரசு; தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களர்களைக் குடியேற்றிவரும் இன அழிப்பு அரசு; இந்த இனக்கொலை இலங்கை அரசு மீது படிந்து கிடக்கும் அழிக்க முடியாத இரத்தக் கறையைத் துடைப்பதற்கான ஏற்பாடே அங்கு நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாடு.


சேவ் தமிழ்சு இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில் பல்வேறு போராட்டக்குழுக்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு, மாநாடு கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர்.


தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் தோழர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது. தமிழக கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவத் தலைவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும்
வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர். உஸ்மானியா பல்கலை கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மடல் அனுப்பியுள்ளார்.தில்லிப் பல்கலை கழகத்தை சேர்ந்த மிர்த்யுன் செய் அவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி மடல் அனுப்பியுள்ளார். மேலும் உலகத் தமிழர் அமைப்பு (WTO), USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET),நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் ‘காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது’என்று கோரியும் இம்மாநாட்டை வாழ்த்தியும் மடல் அனுப்பியுள்ளார்கள்.

தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழு அவர்களின் பறை இசையோடு துவங்கிய மாநாட்டின் மதிய நிகழ்வும் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிக்கு பிறகு மதிய அமர்வு தொடங்கியது.

மாலை சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் செந்தில் தலைமையில், அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்களான மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், தமிழக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா , திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருள், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பேராசிரியர் மணிவண்ணன் ,தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொது செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்சு இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஆகியோர் கலந்து கொண்டு, உரையாற்றினர்.தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில், காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடக்குமாயின், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைபதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.


சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரித்து ஈழத் தமிழர்களின் அரசியல் வேட்கையை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசைக் கண்டிக்கும் முகமாகவும், அதைத் தடுத்து நிறுத்த ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ள, உலங்கெங்கும் பரவி வாழும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றோம் என்பதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

இம்மாநாட்டில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். 2013 மார்ச் மாதம் சுடர்விடத் துவங்கிய மாணவப் போராட்டங்களின் பேரெழுச்சியின் தொடர் நிகழ்வாக இம்மாநாடு அமைந்திருக்கிறது.இந்நிகழ்வோடு அமைந்து விடாமல், இலங்கை புறக்கணிப்பு கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் இப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்டனர்.


பன்னாட்டு இளைஞர் மாநாட்டுத் தீர்மானங்கள் சேவ் தமிழ்சு இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த ’இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது’ என்ற முழக்கத்தோடு இன்று (செப்டம்பர் 7) சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு இளைஞர் மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் பின்வருமாறு:

இலங்கை அரசு ஒன்றை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இன்வெறி அரசு ; போருக்குப் பின்னாலும்,தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான் சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் இராணுவ சர்வாதிகார அரசு; தமிழர்களின் இந்து , இசுலாமிய,கிருத்துவ
மத அடையாளங்களை அழித்து பெளத்த மதவெறி அரசு; தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களவர்களைக் குடியேற்றிவரும் இன அழிப்பு அரசு; இலங்கை அரசின் இந்த இனக்கொலைக் குற்றங்களை மூடி மறைக்கவே ’காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை’ கொழும்புவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இம்மாநாடு கருதுகின்றது. பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்காக நீதியின் பக்கம் நிற்காமல், இலங்கையில் இம்மாநாட்டினை நடத்த முன்னின்று ஏற்பாடு செய்து, இந்திய அரசு மீண்டும் ஒரு முறை தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. இது மிகுந்த வருத்தமளிக்கிறது.1971-ம் ஆண்டின் சிங்கப்பூர் சாற்றுரையில் “இனம், நிறம், மதம் , அரசியல் நம்பிக்கைகள் என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி” என்பது காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவையனைத்தையும் இலங்கை அரசு காலில் போட்டு மிதித்துள்ளது.1961 முதல் 1994 வரை, வெள்ளை நிற வெறி பிடித்த தென் ஆப்பிரிக்கா காமன்வெல்த்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டதும், பர்வேஷ் முஷாரப் இராணுவ ஆட்சியின் போது பாகிஸ்தான் இடைநீக்கம் செய்யப்பட்டதும், இப்போதும் கூட, இராணுவ ஆட்சியால் ஜனநாயகம் மறுக்கப்படுவதற்காக ஃபிஜி (Fiji) விலக்கிவைக்கப்பட்டிருப்பதுமான முன்னுதாரணங்கள் இருக்கின்றன.


1) 1971 சிங்கப்பூர் சாற்றுரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் அமைப்பின் அடிப்படை விழுமியங்களைக் காலில் போட்டு மிதித்து கொண்டிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாத இலங்கையில் ,காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டினை நடத்தக்கூடாது என காமன்வெல்த் அமைப்பு நாடுகளையும் குறிப்பாக இந்திய அரசையும் இம்மாநாடு கோருகின்றது.

2) மேலும், ஒன்றை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்து , இன்றும் கட்டமைப்புரீதியாகவும் , பண்பாட்டுரீதியாகவும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது

3) ஏழு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களின் சனநாயக கோரிக்கைகளை ஏற்று , இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டினை கொழும்பிலிருந்து வேறொரு காமன்வெல்த் தலை நகரத்திற்கு மாற்றும்படி கேட்க வேண்டும். இடமாற்றம் இல்லையென்றால் கொழும்பில் நடைபெறும்
காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும். கனேடிய பிரதமர் இம்மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது. இதைப் போன்று இந்திய பிரதமரும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது“ என இம்மாநாடு கோருகின்றது.

4) 2008-2009ஆம் ஆண்டு இலங்கைப் போரில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் ஆகியன குறித்து ஒரு சுயாதீன பன்னாட்டு விசாரணை ஒன்றை நிறுவ வலியுறுத்தி காமன்வெல்த் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

5) இன்றும் இலங்கையில் இராணுவமயமாக்கலாலும் , சிங்களமயமாக்கலாலும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படும் தமிழர்களைக் காக்கும் பொருட்டு தமிழர்களின் தாயகப்பகுதியான இலங்கைத் தீவின் வடக்கிழக்கில் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால சிவில் நிர்வாகத்தினை நிறுவப்பட சர்வதேச நாடுகள் ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

6)கடந்த 60 வருடங்களாக சிங்கள பெளத்த பேரினவாத இலங்கை அரசினால் இன அழிப்புக்குள்ளாகப்படும் ஈழத்தமிழர்கள் சனநாயக அடிப்படையில் தங்களுக்கான அரசியல் தீர்வினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம் , இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும்
ஈழத்தமிழர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

7) இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால், அதில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.மேலும், ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ”இலங்கை மீதான பொருளாதார தடை கோரும் தீர்மானத்தினை தமிழகத்திலும் இந்தியாவிலும் அமல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகின்றது.

இம்மாநாட்டில், உலகத் தமிழர் பேரவை (WTO), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) , USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET) ஆகிய அமைப்புகளைச சார்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ள இருந்தனர். பல்வேறு காரணங்களால்
கலந்துகொள்ள இயலவில்லை. இம்மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தியினை அனுப்பி இம்மாநாட்டின் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்துள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு

சேவ் தமிழ்சு இயக்கம்

சென்னை

7- செப்டம்பர் , 2013Wednesday, September 4, 2013

பன்னாட்டு இளைஞர் மாநாடு
தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!
பன்னாட்டு இளைஞர் மாநாடு

செப்டம்பர் 7 | சனிக்கிழமை |காலை 10 மணி |சென்னை

இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை வேண்டும்!


ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்து! என்று கோரி கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் எழுச்சி மிக்க போராட்டங்கள் நடந்தன. ஆனால் இந்திய அரசோ எப்போதும் போல ஐ.நா மன்றத்தில் இலங்கை அரசை பாதுகாத்து தமிழர்களுக்கு அநீதியிழைத்தது.


இனப்படுகொலைக் குற்றத்தை மூடி மறைக்கவும் இலங்கை அரசை உலக நாடுகள் மத்தியில் பாதுகாக்கவும் இந்திய அரசின் ஆதரவுடன் 23வது ”பொது நலவாய அரசுகளின் தலைவர்கள்” மாநாடு வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17 வரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற உள்ளது.

தமிழர் தம் இரத்தம் தோய்ந்த அந்த மண்ணில் இம்மாநாடு நடப்பதால் சிங்கள இனவெறிப் பிடித்த இலங்கை அரசு ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் போரில் கொன்றொழித்த குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள துணை செய்யும். மிச்சமுள்ள தமிழர்களின் நிலங்களையெல்லாம் சூறையாடி ‘தமிழன் அந்த தீவில் வாழ்ந்தான் என்ற அடையாளத்தையே அழித்துவிடுவதற்கு வழி வகுக்கும். ஏன் என்றால்,

• மாநாடு நடந்த அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ‘காமன்வெல்த் தலைமைகளுக்கு’ இனப்படுகொலை குற்றவாளி மகிந்த இராசபக்சே தலைவராவார்

• இந்த மாநாட்டுக்கு வரும் 53 நாடுகளை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளும். அது இலங்கை அரசு புரிந்து வரும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பு வேலைக்கு பொருளாதார வலுசேர்க்கும்

• தமிழர் தாயக பகுதி முழுவதும் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவத்தை நிறுத்தி வைத்திருப்பதை உலக நாடுகள் நியாயப்படுத்தியதாக அமைந்துவிடும்.

• தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்தமயமாக்கி வருவதை ஊக்குவிப்பதாகும்.


இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 54 நாடுகளின் கூட்டமைப்பாகவே இந்த ‘பொது நலவாய தேசங்கள்’ அமைப்பு உள்ளது. மனித உரிமைகளை மீறியதற்காகவும், மக்களாட்சியை நடத்தாமல் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தியதற்காகவும் பாகிசுதான், சிம்பாப்வே, நைசீரியா உள்ளிட்ட நாடுகளை சில காலம் தங்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ள வரலாறும் ’காமன்வெல்த்தில்’ உண்டு. தற்பொழுது கூட 2009 முதல் இன்று வரை பிஜீ தீவை இராணுவ ஆட்சி நடைபெறும் காரணத்தினால் தங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.


கடந்த காலத்தில் வெள்ளை நிறவெறி அரசிற்கு எதிராக நடைபெற்ற தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் தென்னாப்பிரிக்க அரசை எல்லா நாடுகளும் புறக்கணித்தன. 1961 முதல் 1994 வரை தென்னாப்பிரிக்கா காமன் வெல்த்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்காலத்தில் பாலசுதீன மக்கள் மீதான இசுரேல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக உலகெங்கும் உள்ள அறிஞர்கள் ’இசுரேலை புறக்கணிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
நிறவெறிக்காக தென்னாப்பிரிக்க அரசை உலக நாடுகள் புறக்கணித்திருக்கும் போது இன வெறிக்காக சிங்கள அரசை ஏன் புறக்கணிக்கக் கூடாது?


• போரின் இறுதி நான்கு மாதங்களில் மட்டும் 40000 அதிகமான மக்களை இலங்கை அரசப்படைகள் கொன்றுள்ளது என்று ஐ.நா நிபுனர் குழு அறிவித்துள்ளது,

• இலங்கை அரசு புரிந்த மனித உரிமை மீறல்கள் மீது பன்னாட்டு விசாரனை வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை மன்றத்தின் தலைவர் நவி பிள்ளை அவர்கள் கோரியுள்ளார்

• பொது நலவாய வழக்கறிஞர்கள் கழகத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வழக்கறிஞர்கள் இலங்கையில் நடைபெற உள்ள மாநாட்டை பொது நலவாய நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்


இத்தகைய சூழலிலும் இனவெறிபிடித்த இலங்கை அரசை காமன்வெத்தில் இருந்து வெளியேற்ற கோராமல் தமிழர்களின் இரத்தத்தால் இலங்கைக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வேலையை இந்தியா செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மா தான் தற்பொதைய காமன்வெல்தின் பொதுச் செயலாளராக உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் நாம் இலங்கையை புறக்கணிக்க கோருகின்றோம். ஆனால் இந்திய அரசோ, ’ஊரை கொழுத்துபவனுக்கு, ஊர் நடுவில் சிலை வைப்பது போல’ இனப்படுகொலை குற்றவாளி இராசபக்சேவுகு மகுடம் சூட்டி மகிழ்கின்றது. உலக அரங்கில் இலங்கைக்கு பாதுகாப்பும் கெளரவமும் அளித்து தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகமிழைக்கிறது.


எங்கோ உள்ள கனேடிய அரசோ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்தியாவோ இலங்கையின் தலைநகரம் கொழும்புவில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள தனிக்குழு அமைக்கின்றது.


இலங்கையை காமன்வெல்த்திலிருந்தே வெளியேற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்! காமன்வெல்த் மாநாட்டை தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் நடத்தக் கூடாது!
மீறி நடந்தால் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்! இது உலகத் தமிழர்களின் கோரிக்கை. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. தமிழகத்தின் படித்த இளைஞர்களின் கோரிக்கை. படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கோரிக்கை. பிற மாநிலங்களில் இருக்கும் முன்னணி மாணவத் தலைவர்களின் கோரிக்கை. உலகெங்கும் பரவி வாழும் ஈழத் தமிழ் இளையோர்களின் கோரிக்கை. இதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவே இந்த மாநாடு.


இந்திய அரசே!

இலங்கை அரசைப் பாதுகாக்காதே!, தமிழர்களுக்கு துரோகமிழைக்காதே!

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! இலங்கையை புறக்கணி!

மாநாடு ஒருங்கிணைப்பு
தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு – 95000 44452, 95516 29055, 76391 27574, 72000 29093
சேவ் தமிழ்சு இயக்கம் – 9884468039, 99419 06390