Wednesday, January 29, 2014

இஸ்லாமியர்களின் வாழ்வாதார உரிமைகளைக் கோரும் "சிறை செல்லும் போராட்டம்"
2004 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு 10% இடப்பங்கீடு அளிக்கப்படுமென்று மத்திய அரசு வாக்குறுதியளித்து, ஏமாற்றியது. கடந்த சட்டமன்ற தேர்தலில், 3.5% இருந்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை, 7% ஆக உயர்த்துவேன் என்று வாக்குறுதியளித்த ஜெயலலிதா இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

நவம்பர் 26,1949 ஆம் ஆண்டில், இந்திய அரசானது, பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தும் அரசியல் சட்டத்தையும், இதே அளவுகோலின் படி, பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டப்பிரிவு 340யும் ஏற்றுக் கொள்கிறது.ஆனால் சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டிகளின் அறிக்கை, பட்டியல் சாதியினரை விட‌‌, முஸ்லிம்களின் வாழ்நிலை மிக மோசமானதாக இருப்பதாக தெரிவிக்கிறது. ப‌ட்டிய‌ல் சாதியின‌ருக்கு ம‌க்க‌ள் தொகை விகித‌த்திற்கு ச‌ம‌மான‌ அள‌விற்கு இட‌ங்கள் ப‌ங்கிட‌ப்ப‌ட‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌ உரிமையை முஸ்லிம் ம‌க்க‌ளுக்கும் வ‌ழ‌ங்க‌ வேண்டும் என்ப‌து நியாய‌மான‌ கோரிக்கையே.

தொடர்ந்து மத்திய அரசாலும், மாநில அரசாலும் வஞ்சிக்கப்படும் இஸ்லாமியர்கள், தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க, மத்தியில் 10%, மாநிலத்தில் 7% ஆகவும் இடப்பங்கீடு அளிக்கக் கோரி, இன்று தமிழகமெங்கும் வீதிகளில் திரண்டு மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். தமிழ்நாடு த‌வ்ஹீது ஜ‌மாத் ஒருங்கிணைத்த‌ இப்போராட்ட‌த்தில், சென்னை, நெல்லை, கோவை, ம‌துரை, திருச்சி உள்ளிட்ட‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ இஸ்லாமிய‌ ஆண்க‌ளும், பெண்க‌ளும் குழ‌ந்தைக‌ளும் க‌லந்து கொண்டன‌ர். சென்னையில் எழும்பூர் ராஜ‌ர‌த்தின‌ம் விளையாட்ட‌ர‌ங்க‌ம் அருகிலும், கோவை காந்திபுர‌ம் ப‌குதியிலும், திருச்சியில் பொன்ம‌லை ஜி கார்ன‌ர் மைதான‌த்திலும், நெல்லையிலும் போராட்ட‌ங்க‌ள் ந‌ட‌ந்த‌ன‌.


கல்வி,வேலை வாய்ப்பு, அரசுப் பணிகள் என்று தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடும் இஸ்லாமிய மக்களோடு, சேவ் தமிழ்சு இயக்கமும் இணைந்தே இருக்கிறது.இப்போராட்டத்தின் நியாயங்களை இன்னும் விரிவாக எடுத்துரைக்கும் தவ்ஹீது ஜமாத்தின் இணைய தள துண்டறிக்கையை கீழே தருகிறோம்.


-------------------------------------

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்

முஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எதிர்வரும் ஜனவரி 28ல் (செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடி உரிமை முழக்க ஆர்ப்பாட்டத்துடன் சிறை செல்லும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போராட்டக்களத்தில் பங்கேற்பவராக நீங்களும் இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.

அன்புள்ள சகோதரா சகோதரிகளே உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறீர்கள். அதுபோன்ற போராட்டமாக ஜனவரி 28 போராட்டத்தை எண்ணிவிடவேண்டாம்.

தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ,அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதற்கோ, தலைவர்களின் தர்ம தரிசனத்திற்காகவோ உங்களை அழைக்கவில்லை.
இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும் உங்களின் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித் தோன்றல்கள் பெறக்கூடாது என்பதற்காகவும், நடத்தப்படும் உங்களுக்கான போராட்டம்.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்களித்தார். அவர் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவதாக அளித்த வாக்குறுதியை ஜெயட்லிதா அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை.


அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மாநில அரசை வலியுறுத்தியும்,
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று காங்கிரஸ் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் நாடெங்கும் பயணம் செய்து முஸ்லிம்களின் அவல நிலையை ஆதாரங்களுடன் கண்டறிந்து முஸ்லிம்களுக்கு பத்து விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதியையும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை செயல்படுத்தும் வகையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவிகித ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் தமிழக முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் திரளும் சிறை செல்லும் போராட்டம்(இன்ஷா அல்லாஹ்)

இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர்கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், மற்றவர்களுக்குச் சமமாக அரசியல் அதிகாரத்தை பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஆனால் உங்களின் நிலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

முஸ்லிம்களின் தியாகத்தில் இந்திய விடுதலை

இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடமிருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களைவிட நாம் அதிக உழைப்பு செய்துள்ளோம்.

வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனது மொழியைப் படிக்கக்கூடாது என்றோம்.
படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.

வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.

வழிபாட்டுத் தலங்களை கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது, வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன் படுத்தினோம்.

வெள்ளையன் கொடுத்த இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.

உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம்.

இன்றைய முஸ்லிம்களின் அவல நிலை

நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்றுவிட்டார்களே, அதுபற்றிச் சிந்தித்தீர்களா?

கூலித் தொழிலாளியாகவோ

இறைச்சிக் கடைக்காரராகவோ

நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ

கொல்லுப்பட்டரையில் கடின வேலை செய்பவராகவோ

தோல் பதனிடும் தொழிலாளியாகவோ

பெட்டிக்கடை நடத்துபவராகவோ


குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவராகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

சொந்த நாட்டில் தகுந்த கல்வியும், தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?

ஒட்டகம் மேய்த்தல்

சாலை போடுதல்

கழிவுகளைச் சுத்தம் செய்தல்

உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டடங்களில் கூலித் தொழில் செய்தல்

தனியாருக்குக் கார் ஓட்டுதல்

வீடுகளைச் சுத்தம் செய்தல்

சமையல் வேலை செய்தல்

இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?

மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?

இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா இல்லையா?


சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா
ஆகியோரின் அறிக்கைகள் கூறுவதென்ன?

88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்கவேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் பேர் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே? இந்த நிலை இனியும் தொடரலாமா?

பாதுகாப்பு தொடர்பான பணிகளில் முஸ்லிம்கள் மூன்று சதவிகிதம்தான் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையைவிட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?

முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?

முஸ்லிம்களின் அவலநிலைபற்றி நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குறிப்பிடும்போது…

முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார். அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஒன்றாம் வகுப்பு கூடப் படிக்கவில்லை.

ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்புவரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்புவரை படிக்கவில்லை.

எட்டாம் வகுப்புக்கு மேல் 10 ஆம் வகுப்புவரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11பேர்தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.

பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டுவரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 5 பேர்கள்தான் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளனர்.

பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் 3 பேர்தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.

இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இந்த அவலநிலை என்றால் பொருளாதர நிலையிலாவது நமது நிலை உயர்ந்திருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா?

பொருளாதாரத்தில் கடைசிநிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டி போடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது.

முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் 20 காசுகளும்தான் என்கிறது அந்த அறிக்கை.

அது மட்டுமன்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.

மற்ற சமுதாய மக்களில் 100க்கு 20 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், இருக்கும்போது, நமது சமுதாயத்தில் 100க்கு 31பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?

வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால்
அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.

சொந்தமாக இடம் இல்லாதவர்கள்

இரண்டு ஆடைகளுக்குக் குறைவாக வைத்துள்ளவர்கள்

ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள்

வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்

வீட்டு உபகரணங்கள்(டீவி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள்

படிப்பறிவு இல்லாதவர்கள்

கூலி வேலை செய்பவர்கள்

பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாதவர்கள்

நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்

இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா இல்லையா?

100 முஸ்லிம்களில் 35 பேர் குடி தண்ணீர் கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும்

100 முஸ்லிம்களில் 41 பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத வீடுகளிலும்

100க்கு 23 முஸ்லிம்கள்தான் வசிக்கத் தகுந்த வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.

நமக்குத் தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால், வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்துள்ளது.

குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தைவிட நான்கு மடங்கு இடம் கிடைத்துள்ளது.

நாட்டில் உள்ள சிறைச் சாலைகளிலும் நமக்கு தாரளமான இடம் கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர்.


நமது பேரன் பேத்திகளுக்கு இதைத்தான் நாம் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?

நம்முடைய சமுதாயமும் கலெக்டர்களாக ,உயர் அதிகாரிகளாக,டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, தொழில் நுட்ப வல்லுனர்களாக, வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணி புரிபவராக, பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா?

இதுபற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை.

அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்.

ரெங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரை

எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.

எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 100க்கு 10 என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகளில் மட்டுமின்றி சுய தொழில் தொடங்கக் கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் 100க்கு 10 பேர் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போல், முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்களைத் தளர்த்த வேண்டும்.

உத்திரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் இருப்பதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.

தரமான கல்வியை இலவசமாக வழங்கும் மத்திய அரசின் நவோதயா போன்ற கல்விக்கூடங்களை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.

கல்வியில் பின் தங்கியுள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தர வேண்டும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

மேற்கண்டவை முக்கிய பரிந்துரைகளாகும்.

நமது அவல நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன் மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழிகாட்டியுள்ளார்.

உரிமையை வென்றெடுக்க

சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கு எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மத்தியில் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் கிடைக்கும்.

ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதிப்படி 3.5 சதவிகிதம் உயர்த்தி தரப்படும்.
நாடு முழுவதும் பத்து சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் எனபதை மத்திய அரசுக்கு உணர்த்தவும்,

மாநிலத்தில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க மாநில அரசுக்கு உணர்த்தவுமே இந்தப் போராட்டம்.

தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க, உங்களைக் காட்டி விலை பேசுவோருக்கு, உங்களை அறியாமல் உதவ பல களங்களை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள்.

இப்போது உங்களுக்காக, நீங்கள் மானத்தோடும், மரியாதையோடும் வாழ்வதற்காக, உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்கள் சந்ததிகளுக்கு ஏற்படாமல் தடுத்து நிறுத்திட…

நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்லமாட்டோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய..

இத்தனை ஆண்டுகள் ஏமாந்தது போதும், இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட ..

இடஒதுக்கீட்டை அடைய எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட..

குடும்பத்துடன் புறப்பட்டு வாருங்கள்

அலை அலையாய் திரண்டு வாருங்கள்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கவிருக்கும் போரட்டக்களங்களை நோக்கி புயலென புறப்படத் தயாராகுங்கள் …

இறையருளால் வென்று காட்டுவோம்.

அணி திரள அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
30, அரண்மனைக்காரன் தெரு,
சென்னை – 600001 போன் – 044 2521 5226

---------------------

பிர‌பாக‌ர், செய்ய‌து
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

எப்படியிருக்கிறது இடிந்தகரை?சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் கவாஸ்கர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 25 தோழர்கள் சென்னையிலிருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி இடிந்தகரை நோக்கி இரயில் மார்க்கமாக பயணமானோம். பறை இசை, கானா பாடல்கள் என‌ நீண்ட இரவோடு களை கட்டியது இரயில் பயணம். மறுநாள் காலை 10 மணிக்கு வள்ளியூர் போய்ச் சேர்ந்தோம். தோழர் ஸ்நாபக் விநோத், பச்சைப் பசேல் வயல்வெளியொன்றில் பம்பு செட் குளியலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை மாநகர பக்கெட் குளியல்களின் பற்றாக்குறை தீரத்தீர ஆசையுடன் குளித்து முடித்த போது 11.30 மணி தொட்டு விட்டது. பிறகு கள்ளிகுளத்தில் விநோத்தின் வீட்டிலேயே காலை உணவு. சூடான இட்லி தோசை கறிக்குழம்பு மணத்தோடு விரல்களை முகர்ந்தவாறே கிளம்புகையில், பெங்களுருவிலிருந்து வந்திருந்த 4 தோழர்களும் இணைந்து கொண்டனர். மதியம் 1.30க்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடிந்த கரை மண்ணை நோக்கி..!வழி நெடுக தென்னை மரங்கள், காற்றாலைகள், ஆரல்வாய்மொழி கணவாயின் கொடையான‌ இதமான காற்று, மந்தாரமான மேகங்கள் என நெல்லையின் ரம்மியமான சூழலை ரசித்தவாறே வந்த போது, லேசாக உப்புக் காற்று வருடத் துவங்கியது. கருவேல மரங்களும் முட்செடிகளும் கடல் அலைகளின் சீற்றத்தை மறைத்த வண்ணம் இருந்தன. "விடிந்த கரை" என்றெழுதப்பட்ட சுவரொட்டிகளை ஆங்காங்கே காண முடிந்தது. அதுவரை பாடிக் கொண்டு வந்த எங்கள் வாகனத்தின் பாடல்கள் இசை நிறுத்தப்பட்டது. ஓட்டரசியல் கட்சித் தலைவர்களின் வழக்கமான புகழ் பாடும் சுவரொட்டிகளையோ பேனர்களையோ எங்குமே காண முடியவில்லை. எளிமையான கத்தோலிக்க வீடுகள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், ஒன்றிரண்டு சிறுகோயில்கள், அணு உலை எதிர்ப்பு வாசகங்கள், மீனவர் சகாயம், அந்தோணி இவர்களின் பழைய‌ கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள், யாரையோ ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக‌ அமைக்கப்பட்ட‌ மணல் மூட்டைகள் இவைகள் தான் இடிந்தகரை எனும் மீனவ கிராமத்தின் தனித்த அடையாளங்கள். மற்றபடி இயற்கையிலேயே வறண்ட மண்ணையும் வற்றாத நெஞ்சுரம் கொண்ட மனிதர்களையும் வாய்க்கப் பெற்றிருக்கிறார்கள் அந்நெய்தல் நிலத்து மக்கள்.

வாழ்கை போராட்டமயமானது; போராட்டம் இன்பமயமானது என்கிற கார்ல் மார்க்ஸின் கூற்றின் உண்மையை நேரில் காண வேண்டுமா? இடிந்தகரை வாருங்கள். புனித லூர்து மாதா ஆலயத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டப்பந்தல் தான் இன்றைய இடிந்தகரை மக்களின் களம்.. பூசை நேரங்களைத் தவிர‌ லூர்து மாதா ஆலயத்தில் மணி அடித்தால், ஊர் மக்கள் அனைவரும் அப்போராட்டப்பந்தலில் ஒன்று கூடி விடுகிறார்கள். நாட்கணக்காக அப்பந்தலில் தான் பட்டினிப் போராட்டம் நடக்கிறது. அந்த கொட்டகையின் கீழ் அமர்ந்து தான் அரசியல் பேச்சுகளை கேட்கின்றனர். விவாதிக்கின்றனர். பெண்கள் பீடி சுற்றுகிறார்கள். சிறுவர்கள் விளையாடுகிறார்கள். அணு உலை எதிர்ப்பு வாசகங்கள், பேனர்கள், குழந்தைகளின் ஓவியங்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கும் ஆதரவுக் குரல்களின் பதிவுகள் என போராட்ட மேடையை அலங்கரித்திருக்கிறார்கள். காவல்துறையின் அனுமதி பெற்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தி பழக்கப்பட்ட நமக்கு, ஒரு கிராமமே ஒரு போராட்டக் களமாகத் திகழ்வதும், மக்களின் அனுமதியின்றி காவல்துறையின் விரல் நுனி கூட நுழைய முடியாமல் இருப்பதும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. அதே நேரம் போராட்டத்திற்கு ஆதரவளித்து இடிந்தகரை வரும் தோழர்களை வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டதை நேரில் உணர்ந்தோம். எங்கள் பிள்ளைகள் நீங்கள் தான் என்று பெண்ணொருவர் சொன்ன போது, மிகவும் நெகிழ்ந்து போனோம்.


கல்யாண வீட்டின் அருமையான மதிய உணவுக்குப் பின், போராட்டக் குழுவோடு ஒரு சிறு சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. தோழர் சுப.உதயகுமார், தோழர் முகிலன், தோழர் புஷ்பராயன் ஆகியோரும் மற்ற போராட்டக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். எங்களோடு வந்திருந்த தோழர்கள் செந்தில், பரிமளா, சதீஷ் சிபிம்(மா.லெ), அருண் சோரி(தமிழ்நாடு மக்கள் கட்சி), மேரி ஆகியோர் அணு உலை எதிர்ப்பு போராட்டம் குறித்து தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கூடங்குள‌ அணு உலை முற்றுகை போராட்ட‌ம் உச்ச‌த்தில் இருந்த‌ போது, இடிந்த‌க‌ரைக்கு வ‌ந்து ஆத‌ர‌வ‌ளித்த‌ அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ப‌த‌வியேற்ற‌தை கொண்டாடும் வ‌கையில், அனைவ‌ருக்கும் இனிப்புக‌ள் வ‌ழங்க‌ப்ப‌ட்ட‌ன‌. மேடையில் சந்திப்பு நிறைவுற்ற பின், தோழர் சுப.உதயகுமார் எம் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களோடும், தமிழ்நாடு மக்கள் கட்சி தோழர்களோடும் ஒரு க‌ல‌ந்துரையாட‌லை நட‌த்தினார். நாடாளும‌ன்ற‌ தேர்த‌ல் குறித்து சில‌ க‌ருத்துக‌ள் முன் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஆம் ஆத்மி ப‌ற்றி உத‌ய‌குமார் பேசினார். ஊழலைத் தாண்டி, தமிழகத்தின் பிரச்சினைகளான ஈழம்,மீனவர்கள் பிரச்சினை, இயற்கை வளங்கள் சூரையாடல் ஆகியவை குறித்து தம் நிலைப்பாட்டை ஆம் ஆத்மி இன்னும் எடுத்துரைக்கவில்லை மேலும் கூடங்குளத்தில் 3,4 அணு உலை குறித்து தத்தம் நிலைப்பாட்டை தமிழகத்தின் மற்ற‌ அரசியல் கட்சிகள் சொல்ல வேண்டும் என்று தாம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தோழர்களும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். வட்ட நாற்காலி கூட்டம் இவ்வாறாக முடிவடைந்து, தேநீர் வழங்கப்பட்டது. சில தோழர்கள் வெண்குழல் சேவைக்காக ஒதுங்கினர்.
லேசாக வெளிச்சம் மங்கத் துவங்கியிருந்த மாலை நேரம், இடிந்தகரை தோழர் ஒருவர் வழிகாட்ட, சுனாமி காலனி வழியாக கடற்கரையோரம் நடக்கத் துவங்கினோம். அணு உலைக்கு சற்று பக்கமான கடற்கரை அது. முற்றுகை போராட்டத்தின் போது காவல்துறை தனது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட அக்கடற்கரை மணலில் தான் சந்தித்த அனுபவங்களை ஊர்ப்பெரியவர் ஒருவர் வெகுநேரம் தோழர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார். மற்ற தோழர்கள் அணு உலையின் மீது ஏறி நிற்பது போன்றும், மிதிப்பது போன்றும் அணு உலையை எதிர்க்கும் விதமாக‌ பல கோணங்களில் நிழற்படங்கள் எடுத்தனர்.பிறகு அங்கிருந்து கிளம்பி போராட்டப் பந்தலுக்கு வந்து சேர்ந்தோம். பந்தலில், மணமகன், மணமகள் தோழர் கவாஸ்கர், பெனிலாவோடு ஒரு சிறு சந்திப்பு, மற்ற விவாதங்கள் இளைப்பாறல்கள், இரவு உணவு, நள்ளிரவு வரை சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களுக்குள் கலந்துரையாடல் கூட்டம் என அந்த நாள் புரட்சிகரமானதாக இருந்தது.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். 5.30க்கு நாங்கள் வைத்த அலாரம் அடிக்குமுன்னே, லூர்து மாதா தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை பூசை ஆரம்பித்து விட்ட சத்தம் தூக்கத்திலிருந்து எம்மை மீட்டெடுத்தது. பாதிரியார் ஒரு சிறிய அறிவிப்பையும் செய்தார். "நமது வழக்குகளை கையாண்டு கொண்டிருக்கும் பிரசாந்த் பூஷன் இன்று மதியம் 12 மணிக்கு இடிந்தகரை வருகிறார். அக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்; திருப்பலி முடிந்தது அனைவரும் சென்று வாருங்கள்!" . இங்கே முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது அவர் சொன்ன "நமது வழக்குகளை" என்ற வார்த்தைப் பிரயோகம். காரணம் அங்கு இன்னார் மேல் தான் வழக்கு என்று கணக்கில்லாமல் பாதிரியார் முதற்கொண்டு குழந்தைகள் வரை அனைவர் மீதும் வழக்குகள் இருக்கின்றன. தேசத்துரோகம், இந்திய நாட்டின் மீது போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகள் அனைத்திலும் வழக்குகள் இருக்கின்றன. நாங்கள் ( 5 பேர்) அதிகாலை சூரிய உதயத்தைப் பார்க்கச் சென்ற போது, பாதிரியார் குறிப்பிட்ட எல்லா "தேசத்துரோகிகளும்" தேவாலயத்திலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.. தேசத் துரோகத் தீவிரவாதி மணமகனும் பல் விளக்கிக் கொண்டே கடற்கரை பாறை மீது நடந்து வந்து எங்களைப் பார்த்துச் சிரித்தார்.


----------

மேளதாள வாத்தியங்களோடு மண மக்கள் லூர்து மாதா ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். 11 மணிக்கு திருமண விழா தொடங்கியது. ஜெப வழிபாடுகள் நிறைவடைய, தனித் திருமண மண்டபத்தில் வரவேற்பு விழா தொடர்ந்தது. தோழர் உதயகுமார் உள்ளிட்ட தோழர்கள் மண்டபத்துக்குள் நுழையும் போது பலத்த வரவேற்பு இருந்தது. இடிந்தகரை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளிலும், கடைகளிலும் இருந்த அவரது படத்தைப் பார்த்த எங்களுக்கு பெரிய ஆச்சரியமொன்றுமில்லை. 800 நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டமொன்றின், தலைமையை அம்மக்களே தேர்ந்தெடுத்து விட்டார்கள். தலைவரென்றால் காலில் விழுந்து வணங்கி, குனிந்து வளைந்து குறுகிப் போய், அவர்கள் நிற்கவில்லை. சக தோழராகவே அவரோடு அளவளாவுகின்றனர். (உங்களில் ஒருத்தி, கட்டுமரம் என்று மக்களை ஏமாற்றுபவர்களையெல்லாம் அவர்கள் தூர எறிந்து விட்டார்கள்.


ஒவ்வொருவராக மேடையில் ஏறி மணமக்களை வாழ்த்திப் பேசினர். பெண் விடுதலை, குடும்பம் என்று சில பெரியாரின் கருத்துகளும் விவாதப் பொருளாக மாறின. தோழர் உதயகுமார், பெரியார் குடும்பத்தை பெண்களுக்கான சிறை என்றார். காரணம் அங்கே பெண்களுக்கான ஜனநாயகம் முற்றிலும் மறுக்கப்படுகிறது.அது ஆண்களுக்கான ஜனநாயகம் மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட குடும்பம். ஆகவே பெண்களுக்கும் குடும்பத்தில் சம உரிமை, சம பங்கு, சமத்துவம் இருக்குமாயின், பெண்களுக்கான ஜனநாயகமும் குடும்பத்தில் மதிக்கப்படுமாயின், அங்கு தான் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தம்பி கவாஸ்கர், நமது போராட்டத்தின் வாயிலாக கற்ற அனுபவங்கள் மூலம், நிச்சயம் பெனிலாவுடன் சமத்துவமான, ஜ‌னநாயக அமைப்பிலான வாழ்வியலை நடத்துவார் என்று நம்புகிறேன் என்று வாழ்த்திப் பேசினார். சேவ் தமிழ்சு இயக்கத்தின் சார்பாக, மணமக்களுக்கு பெரியார், அம்பேத்கர், பிரபாகரன் படங்கள் பரிசளிக்கப்பட்டன.


எல்லோரது பேச்சிலும் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் பாதிப்புகள் செறிவாக இறங்கியிருந்ததை அவதானித்தோம். தமிழகத்தில் திராவிட இயக்கமும், ஆந்திராவில் தெலுங்கானா போராட்டமும் மக்கள் சிந்தனையில் ஆழமாக வேரூன்றியதற்கு, அடிப்படை காரணம் இது தான். கல்யாண வீடாக இருந்தாலும் சரி, இழவு வீடாக இருந்தாலும் சரி. செல்லுமிடமெலாம் தத்தம் அரசியலை பேசிப் பேசித் தான் வளர்த்தார்கள். மக்களை அரசியல் மயப்படுத்தினார்கள். இடிந்தகரை கிராமம் அப்பேற்பட்ட அரசியல்,பண்பாட்டுப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னொரு புறம் நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கும் மத்திய தர வர்க்கம் அரசியல் ரீதியாக மழுங்கடிப்பட்டு, தமது உரிமைகளுக்காக போராடத் தயங்கும் சம காலத்தில் தான், இடிந்தகரை குழந்தைகள் கூட ஒரு மாபெரும் வல்லாதிக்க அரசை எதிர்க்கத் துணிந்து நிற்கிறார்கள்..கஷ்மீரில் இந்திய இராணுவ டாங்கிகளைக் குறி வைத்து கல்லெறியும் சிறுவர்களின் அதே துணிவு.

மதிய விருந்துக்கு பிறகு, தோழர்கள் அனைவரும் ஒரு படகில் ஏறி, கடல் பயணமாக கூடங்குளம் அணு உலையை நெருங்கிச் சென்று பார்த்தோம். நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். உப்புத் தண்ணீர் எங்களை நிறைத்து மகிழ்ந்தது. பிரெஞ்சு மன்னர்களின் வெர்செயில்ஸ் மாளிகையைப் போல, இந்த அணு உலையையும் ஒருநாள் அருங்காட்சியமாக மாற்றுவோம் என்று சொல்லிக் கொண்டோம். கடல் அலை சீற்றத்துடன் படகு கரையை நோக்கி முன்னேறியது. 2 மணியளவில், பிரசாந்த் பூஷன் உரையாற்றினார். முழுமையான மக்கள் திரள் போராட்டப் பந்தலில் குழுமியிருந்தது. தோழர் உதயகுமார், பூஷனின் பேச்சை உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார். இந்தியா முழுதும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்டி வருவதாகவும், ஆளும் காங்கிரசு அரசால் ஒடுக்கப்படும் இடிந்தகரை மக்களின் ஆதரவைக் கோரியும் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. ஒரு இடிந்தகரை வாசி, ஆம் ஆத்மியின் உறுப்பினர் கார்டு கொடுத்தால் உடனே அக்கட்சியில் சேர்ந்து விடத் தயார் என்று அறிவித்தார். பிறகு, ஈழம், மீனவர் பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இன்னும் ஈழம் சார்ந்து ஆம் ஆத்மிக்கு நிலைப்பாடு இல்லை. அரசியல் குழுவில் சந்தித்து விவாதித்து நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பதிலளித்தார் பூஷன். மேலும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து கேட்கப்பட்ட போது, இந்திய அரசின் மெத்தனப் போக்கு கண்டிக்கத் தக்கது, ஈழத்தில் நம் தமிழ்ச் சகோதர்கள் கொல்லப்பட்ட‌ போதும், இன்று தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதும் ஆளும் அரசு கண்டும் காணாமல் இருப்பது, தேச அவமானம் என்று குறிப்பிட்டார்.


கூட்டம் முடிந்து மீண்டும் தோழர் உதயகுமாரையும் மக்களையும் சந்தித்து விடைபெற்றோம். தோழர் முகிலன் இறுதி நேரத்தில் தேநீர் ஏற்பாடு செய்திருந்தார். தோழர் கவாஸ்கரின் குடும்பத்தினர், சகோதரர், ஃபிரான்சிஸ் சேவியர் வாசன் மற்றும் அவரது துணைவி ஆகியோர் நாங்கள் இரண்டு நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்தனர். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு முகப்பில் ஒட்டப்பட்டிருந்த, மாவீரர் தின அறிவிப்புப் படம் எங்கள் நினைவில் என்றென்றும் அகலாது இருக்கும்.

எத்தனை இழப்புகள்,வலிகள், வழக்குகள் வந்தாலும் வருடம் முழுதும் தொய்வின்றி போராடக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. அது இந்தியாவின் தென் கடலோரம் ஒரு சிறு மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது.

அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

Tuesday, January 28, 2014

மாரிசெல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்பரவலாக அறியப்பட்ட வரலாற்றில் இதுகாறும் சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை, செதுக்கப்பட்டவை என அனைத்தையும் தந்தது வென்றவர்களும் கொன்றவர்களும் அதைக் கொண்டாடியவர்களும் தான். அவர்கள் தம்மால் கொல்லப் பட்டவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று வீர வசனங்கள் பேசினார்கள், பாடல்கள் இயற்றினார்கள், புராணங்கள் பாடினார்கள். இப்படியாக வரலாற்றைச் சொந்தங் கொண்டாடுகிறார்கள். தனதென பறைசாற்றுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்களாகவும் துரோகிகளாகவும் வாழத் தகுதியற்றவர்களாகவுமே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். கொலைக்களத்தில் இருந்து தப்பித்தவர்களும்,கையொடிந்து மனம் நொடிந்தவர்களும், விடுபட்டுப்போனவர்களும் வரலாறு எழுதினால், அது இப்படித்தான் இருக்கும். கைநீட்டும். காறித்துப்பும். செவிட்டில் அறையும். பதற வைக்கும். அவர்களை அம்மணமாக்கி ஓட விடும். ‘தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்’ கதை எழுதினால், துப்பாக்கிக் குண்டுகளையும் அவற்றை ஏவி விட்ட நாற்காலிகளையும், வேடிக்கை பார்த்த வாய்களையும் பார்த்து இது போன்றும் இதை விடத் தீவிரமாகவும் கேள்விகள் கேட்பார்கள். திண்ணியத்தைப் பற்றி, பரமக் குடியைப் பற்றி, தர்மபுரியைப் பற்றி. அவர்கள் தான் இனி திருக்கோவிலுரை பற்றியும் கேட்பார்கள்.


மங்கலாக நினைவிருக்கிறது அந்தப் புகைப்படம். நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ நான் படித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆற்றுக்குள் சிதறி ஓடும் ஒரு கூட்டத்தை லத்தி கம்புகளோடு போலீஸ்காரர்கள் துரத்தும் புகைப்படம் அன்றைய தினசரியில் வெளியாகியிருந்தது. அந்த வயதில், பரபரப்பான செய்திகளின் மேல் ஏற்பட்டிருக்கக்கூடிய ஈர்ப்பினாலோ என்னவோ, மனதின் கடைசி மூலையில் பதுங்கியிருக்கிறது இன்னமும். அதன் பிறகு, வாசிக்கக்கற்றுக் கொண்டு இன்னது இன்னவென்று தெளிந்துணரும் காலத்தில் காட்சி எனும் வலைப்பூவில் மாரி செல்வராஜ் அதே சம்பவத்தை விவரித்து எழுதியிருந்ததை வாசித்தபோது சடாரென்று ஒரு நடுக்கம் கவ்விப்பிடித்து உலுக்கியது.இடிந்தகரையை போலீஸ் மூச்சுத்திணற வைத்த ஒரு மார்ச் மாதத்து மாலை வேளையில் எக்மோரில் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வழக்கம் போல அனைவரும் தொட்டும் தொடாமலும் பேசி முடித்த பின் ஒரு கருத்த ஜீவன், “அங்க எம்மக்கள் துப்பாக்கி முனையில நின்னுக்கிட்டு இருக்கானுவ. நீங்க சாவகாசமா பேசுறது எனக்குப் புரியல” என்ற தொனியில் தவிப்புடனும் கோபத்துடனும் கேள்வி கேட்டது. அது தான் மாரி செல்வராஜ்.தாமிரபரணியில் இருந்து நேரே புறப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அதே சீற்றத்துடன் வந்து விழுந்தது அந்தக் கேள்வி.


‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற கதையில் முகிலன் கேட்பான் “வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும்? வேடிக்கை பார்க்கத்தான் தெரியும்.’ நிற்க. வெகுநாட்களாக இந்தத் தொகுப்பைக் கைகளில் வைத்துக்கொண்டிருந்தும் இப்பொழுதுதான் முழுதாக வாசித்து முடிக்க முடிந்தது. சோம்பேறித்தனம் ஒரு காரணமென்றாலும் இந்தக்கதைகளை எதிர்கொள்ள மிகுந்த தயக்கம் இருந்து கொண்டிருந்தது. பல சமயங்களில் அதன் சூடு என்னை அலைகழித்திருக்கிறது, அதைத் தூக்கி எறியச்செய்திருக்கிறது. தனித்தனியாக ஒன்றிரண்டு கதைகளை வாசித்ததுண்டு. இவற்றை ஒரு சேர வாசிக்கையில் இந்தக் கதைகளுக்குள் ஒளிந்தி ருக்கும் முரண்களும் ஒற்றுமைகளும் தொடர்புகளும் மெல்லத் துலங்குகின்றன.


மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கேட்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்தை பற்றிய கதைதான் ’தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்’.அந்த ஆர்ப்பாட்டம் என்ன விதமான கோரமான முடிவைச் சந்தித்தது என்பது செய்தியாக தெரியு மென்றாலும்,ஒரு பள்ளி மாணவனின் பார்வையில் இருந்து அங்குலம் அங்குலமாக அந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘எம்.ஜி.ஆர் கலரில்’ இருக்கும் தலைவரைப் பார்க்கவும், தனது ‘ராஜகிளி மாமா’வால் ஈர்க்கப்பட்டும், இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கு கொள்வதற்காக அவன் திருநெல்வேலிக்கு முதன்முறையாக செல்கிறான். எங்குத் திரும்பினாலும் முண்டியடிக்கும் கூட்டமும், விண்ணைப் பிளக்கும் கோஷங்களும் தான் தென்படுகின்றன. பின் திடீரென, ‘ஈவு இரக்கமில்லாத அதிகாரம் வெறிபிடித்து சுழற்றிய சாட்டையின் தடம் பதிகிறது அனைவரின் முதுகிலும்’.


கண்காணாத ஊரில் இருந்து தமது உரிமைக்காகக் குரல் கொடுக்கத் திரண்டு வரும் மக்களைப் பற்றிய கதை இது. குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு முழக்கமிட்டு வரும் பெண்களும், இந்தப் பதினோராம் வகுப்புச் சிறுவனும், சில வயதானவர்களும் கூட அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சாதித்திமிர் கொண்ட அதிகாரம் ஒரு பக்கம் கூர்கம்பு களோடு துரத்த, இன்னொரு பக்கம் இது எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியைப் பற்றியும் அதன் தமிழைப் பற்றியும் கூட இந்தக் கதை பேசுகிறது. பொத்தாம்பொதுவாகத் தமிழ்ப் பெருமை சொல்லி தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடிப் புளகாங்கித மடைபவர்கள் எளிய மக்களின் சதையையும் கண்ணீரையும் குருதியையும் சேர்த்தே தமது உடலில் அப்பிக்கொள்கிறார்கள்.ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடுவதையும், தங்கள் அடையாளங்களை மீட்டெடுத்துக்கொள்வதையும் சகித்துக்கொள்ள முடியாத சாதிய நலன்கள் அங்கும் இது போன்ற கூட்டங்கள் எல்லாவற்றிலும் அந்த ஒரு கல்லை வீசுகிறது. “அவன் வீசிய ஒரு கல், மிகச்சரியாக விழ வேண்டிய இடத்தில் விழுந்தது”. தற்காலத்தில் நம் கண்முன்னே அதிகாரம் நிகழ்த்தும் சாதிய வெறியாட்டங்களைப் பற்றிய முக்கியமான பதிவு இது. வாசித்து முடித்த பின் ஆற்றாமையும் கையாலாகாத்தனமும் கோபமும் வெக்கமும் ஒருசேர பாய்ந்து வருகின்றன.உப்பிக்கிடக்கும் இந்த மௌனத்தை எதைக் கொண்டு வெல்ல?


இந்தக் கதையின் தொடர்ச்சியாகவோ அல்லது இதற்கு முன்னதாகவோ ‘மகாத்மாவைக் கொல்ல ஒரு சதித்திட்டம்’ என்ற கதையைக் கூறலாம். அம்பேத்கர் சிலையை அசிங்கப்படுத்தியவர்கள் மேல் கோபப்பட்டு காந்தி சிலையை உடைக்கக் கிளம்பும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் “பிராமணக்குடி வழியாக நுழைந்து, சாணக்குடி வழியாக வரும்போது மறக்குடியில் ஒரு நாய் மூவரையும் பார்த்து குலைத்து அதகளப்படுத்துகிறது”. அதே மாணவர்கள் அடுத்த நாள் “தேசப்பிதா காந்தியடிகள்” என்று கட்டுரை எழுத வேண்டியுள்ளது. குறுகுறுப்புத் தெறிக்கும் கதை இது.


இதே இழையில் கோர்க்கப்பட்ட கதைகளாக ‘அப்பாத்துரை மாமா’ என்ற கதையையும், ‘நின்றெரியும் பிணம்’ என்ற கதையையும் குறிப்பிடலாம். கோவில் திண்ணைகளிலோ, டீக்கடைகளிலோ ஊர் விவசாய சங்கங்களுக்கு முன்பாகவோ நின்று ‘எழுச்சியுரை’ ஆற்றிக்கொண்டிருக்கும் திராவிட இயக்க வழித்தோன்றலான அப்பாத்துரை மாமா தனிப்பட்ட வாழ்வில் ‘எம் பொண்டாட்டி தூம துணிய துவைச்சி கொடுக்கிற வண்ணாப்பய பொண்டாட்டி” என்று அமிலச் சொற்களால் தனது சாதியை நிலைநாட்டிக் கொள்கிறார். இந்தக் கதையில் இருந்து நீளும் மற்றொரு தளத்தில் நிற்கிறார் ‘காலசாமி கோவில் தெருக் குறிப்புகள்’ என்ற கதையில் வரும் தோழர்.ராமகிருஷ்ணன். இந்த இரண்டு கதைகளுமே பொது வாழ்விற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமுள்ள முரணை கேள்வி கேட்கிறது. களங்கமற்றவர்களாகவும், கொள்கைக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களாகவும் வெளியே தம்மை நிலைநிறுத்திக்கொள்பவர்கள் தமது கொல்லைகளில் எவ்வாறு வலம் வருகிறார்கள், என்பதைப் புட்டு புட்டு வைக்கிறது.


‘நின்றெரியும் பிணம்’ ,சாதிய அடுக்கு எப்படி கடைசிச் செங்கல் வரை தன்னை இறுக்கமாகத் தற்காத்துகொள்கிறது என்பதைக் காட்டுகிறது. எரியும் சிதையில் நரம்பு விறைத்து எழும் பிணத்தின் கால்கள் தத்தளிப்பான ஒரு சித்திரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. தத்தமது நலன் சார்ந்தே அனைவரும் இயங்குகிறார்கள். தமது பெருமைகளும் நலன்களும் ஆபத்துக்குள்ளாகும்போது எங்கும் எதுவும் நிகழலாம்.


இன்னொரு கோணத்தில் அடித்தட்டில் இருக்கும் பெண்களின் இருப்பு எவ்வளவு துச்சமாக கையாளப்படுகிறது என்பதையும் ஓரிரு வரிகளில் பேசுகிறது. ”பெண்கள் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்வார்கள் என்றே நினைத்திருந்தாள்” என்ற வரிகளும் அதன் பின் கொடுக்கப்பட்டுள்ள விவரணைகளும் தவிப்புக்குள்ளாக் குகின்றன. “பன்னி மேய்க்கிற சக்கிலிச்சிக்கு மளிகைக்கடை நாடார் மாப்பிள்ளை கேக்குதோ?அதான் கூட்டிட்டுப் போய் சொக்கப்பனை வச்சுட்டானுவ” என்று போகிறபோக்கில் எழுத்தப்பட்டிருக்கும் இந்த வரி,தனது கூர்முனையால் மனதை கீறிக்கொண்டு செல்கிறது.


இந்தத் தொகுப்பில் தென்படும் இன்னொரு இழையில் குற்றமும், குற்ற உணர்ச்சியும், தனிமையும்,காமமும், விரக்தியும், காதலும், குரூரமும் கொதித்துக் கொண்டிருக்கின்றன. மற்றொரு இழையில் தொலைந்து போன பால்யமும் அதன் நினைவுகளும் கனவுகளில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கின்றன. சிறுகதைகளாக‘முதல் கல்’, ‘தட்டான்பூச்சிகளின் வீடு’, ‘அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்’, ‘வன தெய்வம்’, ‘எனக்கு ரயில் பிடிக்காது’, ‘நினைவில் கொதிக்கும் பால்யம்’ , ‘செண்பகவள்ளி புராணம்’ , ‘என் தாத்தாவை நான் தான் கொன்றேன்’ ஆகிய கதைகள் மனதிற்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.


‘முதல் கல்’லில் தலை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அதன் மயிர் பிடித்து ஆட்டும் சீற்றம் கொண்ட இளங்காமத்தின் வேட்கையைப் பேசுகிறது. அழுகி ஊதிப்போகும் உடலில் இடையறாது சுரக்கும் ஆசைகளையும்,அவை பின்பு வெறியாகப் பரிணாமமடைந்து, நடு வெயிலில் எந்த செத்துப்போன கண்ணகிக்காகவும் அலைந்து திரியும் என்ற உண்மையையும் பட்டினத்தாரின் கோபத்தோடு நம்முன் வீசி எறிகிறார்.


ஆணின் காமத்தைப் பேசும் இந்தக்கதையின் இன்னொரு முனையில் நிற்கிறது ‘வன தெய்வம்’. தனது மகனிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போகும் ஒரு தாயின் வாக்குமூலமாக விரியும் இந்தக் கதையில், அந்தப்பெண் தனது பால்யகால மற்றும் இளம்பருவ காலத்து நினைவுகளைக் கூறத்தொடங்கும் இடத்தில் தொன்மங்களின் எல்லையைத் தொட்டுச் செல்கிறது. “உன் அம்மா பிறந்த போது சரியாக ஒரு மரம் சாய்ந்து நம் வீட்டின் ஓட்டில் விழுந்ததாகவும், அதிலிருந்த அணில் குஞ்சுகள் உன் பாட்டியின் உடலெங்கும் விழுந்து ஓடியதாகவும் உன் பாட்டி சொல்லுவாள். அவள் முலைக்காம்பில் இருந்து வடிந்த எனக்கான சீம்பாலை ஒரு அணில் நக்கியதாகக்கூட அவள் சொல்வதுண்டு” என்ற வரிகள் கவித்துவ எழுச்சியைத் தருகின்றன. காமம் பெருகிப்படர்ந்து வனமாய் எரியும் ஒருத்தியைப் பற்றிய கதை இது. இவ்விரு கதைகளையும் இணைத்துப்பார்க்கும் பொழுது, ஆணின் காமத்தையும் பெண்ணின் காமத்தையும் பற்றிய நுட்பமான அவதானிப்பு ஒன்றும் புலப்படுகிறது. ஆண்களின் காமம், கூட்டமாகச் சென்று, அருகருகே நின்று ஒண்ணுக்குப் போகும் உடனடித்தன்மையுடன் இயங்குகிறது. பின் தீர்ந்து போகிறது. பெண்களுடையதோ, அனைவரும் உறங்கிய ஒளி தீர்ந்த இரவுகளில், தனியே, மெதுவாக தலை தூக்கிப் பார்க்கிறது. பின் நினைவுகளில் பற்றி எரிகிறது. மேலும் தனது கணவனிடம் கூட பகிர்ந்து கொள்ள இயலாத, பகிர்ந்து கொள்வதற்கு வேறு தோழிகளும் இல்லாத, குடும்பச் சட்டகத்துக்குள் சிக்கிக்கொண்ட பறவையாகத் தவிக்கின்றன அவளது உணர்வுகள்.இவரது சில கதைகளில்தான் பெண்கள் பிரதான பாத்திரங்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வலிமையானவர்களாக, உரத்துப்பேசுபவர்களாக இருக்கிறார்கள். வனதெய்வத்தோடு சேர்த்து, சென்பகவள்ளியைப் பற்றியும், சுதாவை பற்றியும், விஜியலட்சுமியைப் பற்றியும் கூட சொல்ல வேண்டும்.


குழி விழுந்த கண்கள், பெருத்த உதட்டையே அத்துமீறும் முன்இரண்டு தெத்துப்பற்கள், கரிக்கட்டையாய்க் கிடக்கும் முகம் கொண்ட செண்பகவள்ளியை நாமனைவரும் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.பரீட்சையில் ஃபெயில் ஆனவர்கள், பதில் பேச்சு பேசாதவர்கள், தோத்தாங்குளிகள் போன்றவர் களுக்கு அவர்கள் மனைவிகளாக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள் இன்னமும். வகுப்பறையில் ஒன்னுக்குப் போய் அப்படியே ஓடிப்போன செண்பகவள்ளி நமது நினைவுகளின் பின்னடுக்குகளில் நின்று கொண்டு நம்மை நோக்கி கேள்வி கேட்டுக் கொண்டுதானிருக்கிறாள்.
‘சிவபாண்டியும் அவளைக் காதலித்தான்’ என்ற கதையில் வரும் விஜியலட்சுமியோ இதற்கு நேர் எதிர்.பெண்களுக்கேயுரிய பாய்ச்சலுடனும், ஆவேசத்துடனும் தன்னைக் காத்துக் கொள்கிறாள். “அவ்வளவு பேர் வேட்டியும் காத்துலதான் பறக்கும் ஜாக்கிரதை” என்று ஊர் பஞ்சாயத்தில் அவள் உறுமும் போது, அத்தனை பேரின் ஒழுக்கங்களும் மூக்கொழுகித் திரிகின்றன. ‘அலைந்து திரியும் பெருங்கடல்’ என்ற கதையில் வரும் சுதாவோ, திமிரும் பெண்மையைக் கண்டு பதறும் ஆணின் பீடத்தைப் பார்த்து கெக்கலிக்கிறாள்.


இவற்றிற்கெல்லாம், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் எதிர்த்திசையில் அமைதியாக அமர்ந்திருக்கிறது‘தட்டான்பூச்சிகளின் வீடு’. குழந்தைமையும், கறைபடியாத வெகுளித்தனமும் வழக்கொழிந்து போன காலத்தில்,நீலக்கலர் அரசாங்கப் பாவாடையும், கிரேந்திப்பூக்களும் நிரம்பிய பால்யத்தின் சிறு பொழுதுகள், கடல் மேல் ஒளி தரும் தொலைதூர நிலாப் போல மயக்கங் கொள்ள வைக்கின்றன. அந்தப் பொழுதுகளில் தட்டான்பூச்சிகளுக்கான வீடுகள் பெருங்கனவு. அவை மரண மடைவது பெருந்துக்கம். உருண்டு திரண்டு நிற்கும் ஒரு சிறிய நீர்த்துளியைப் போல உறங்குகிறது மனம். இது போன்ற தருணங்கள் தான் பின் நினைவில் கொதித்துக் கிடக்கின்றன. அது தான் ‘நினைவில் கொதிக்கும் பால்யம்’. “நாக்கைத் துருத்தி பயம் காட்டிய ஆச்சிமுத்தா கோவில் பூவரசம் மரம் தன் மஞ்சள் பூக்களைத் தலையில் கொட்டிச் சிரிக்கிறது” என்ற வரியில் மேலெழும்புகிறது நாஸ்டால்ஜியா.


நாஸ்டால்ஜியாவாக முடியாத விஷயங்களின் மீதும் எந்தத்தயவுமின்றி வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தக் கதையுலகம். குற்றவுணர்ச்சி முதுகைப்பிடித்து பிறாண்டும் பின்னிரவுப்பொழுதுகளில் தோன்றியிருக்க வேண்டும் இவை. ‘என் தாத்தாவை நான்தான் கொன்றேன்’, ‘எனக்கு ரயில் பிடிக்காது’, ‘அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்’ ஆகிய கதைகளும் பால்ய காலத்து நினைவுகளை ஒட்டியே எழுதப்பட்டிருந்தாலும், இழப்பும்,இழப்பு ஏற்படுத்தும் பயமும், தான் அதில் ஒரு பங்கு வகித்ததை ஒட்டி விடாது துரத்தும் குற்ற உணர்ச்சியும் ஒருங்கே வெடித்திருக்கின்றன இந்தக் கதைகளில்.
வழி தவறிய ஆடுகளே புதிய மலைகளைக் கண்டுபிடிக்கின்றன என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கதைகளை விட, அவை ஊற்றெடுக்கும் அனுபவங்கள்தான் அதிகம் ஈர்ப்புடையதாக இருக்கிறது, புதிராக இருக்கிறது, அதிர்ச்சியூட்டுகிறது. மலைத்துப்போகச் செய்கிறது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் நேர்மையும், உண்மையின் மீதான தீராத காதலும் உயிர்த்துடிப்புடன் அரங்கேறுகின்றன.


தனிப்பட்ட முறையில், இந்தத் தொகுப்பை எனக்குத் தட்டுப்பட்ட ஒரு உடைந்த கண்ணாடித் துண்டு என்றே உணர்கிறேன். முடிவு செய்யப்பட்ட எல்லைகளுக்குள் நிர்ணயிக்கப்பட்ட செயல்களைச் செய்து வளர்ந்த ஒரு நகரத்து சிறுவனின் கண்களுக்கு எதிர்பாராமல் தட்டுப்பட்ட கண்ணாடித் துண்டு. அதன் வழியே அறியப்படாத ஒரு தேசத்தின் மக்களும், அவர்களின் முகங்களும், அவர் களைச் சுட்டு வீழ்த்தும் அதிகாரமும், அவர்களை அலைகழிக்கும் காமமும், காதலும், சாவும், சிரிப்பும் எனப் புதிய பிம்பங்களையும் உலகையும் காட்டிச்செல்லும் கண்ணாடித்துண்டு. அதன் வழி நான் பார்த்திராத அம்மக்களை நோக்கிப் புன்னகைக் கிறேன். அவர்களும் புன்னகைக்கிறார்கள்.

எந்த அடையாளத்தைச் சொல்லிச் சொல்லித் தாக்குகிறார்களோ, அதே அடையாளத்தைத் தனது ஆயுதமாக்கி பதிலுக்குத் தாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். எந்தெந்த அனுபவங்களும் மனிதர்களும் அருவெறுப்பானவையாக இருந்தனவோ, எந்தெந்த இடங்களைப் பார்த்ததும் ஓடத் தோன்றியதோ, எவை எவை எல்லாம் தன்னை இருண்ட குகைகளுக்குள் அழைத்துச் சென்றனவோ, அவை அனைத்தையும் உரமாக்கி,குதிரையாக்கி, ஒளியேற்றி உண்மையை நம்முன் கொண்டு வந்து காட்டுகிறார்.

ஜி.நாகராஜனையும், மண்ட்டோவையும் தனது ஆதர்சங்களாகக் குறிப்பிடும் இவர், கதை சொல்லல் முறையைச் சிக்கலாக்காமல் அப்பட்டமாக, நேரிடையாகவே இதை எழுதியிருக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்கும் பொழுது, இந்தக் கதைத் தொகுப்பில் உள்ள அத்தனை இழைகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது, சாதிய ஒடுக்குமுறை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு தளங்களில் நீளும் வெவ்வேறு விதமான உரையாடல்கள், பால்ய கால நினைவுகள், விடலைப் பருவ ரவுடியிசங்கள் என்று பல அடுக்குகள் கொண்ட முடிக்கப்படாத ஓவியத்தின் முன் நின்று கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது.


தெருவில் இறங்கி ஓரடி கூட எடுத்து வைக்காமல், வார்த்தை ஜாலம் காட்டியும், சித்து வேலை செய்தும்,வயோதிகக் கைகளால் எழுதப்படும் அர்த்தமற்ற வாக்கியங்களால் நிரம்பியிருக்கும் சூழலுக்கு முன்,மனிதர்களுடனான உரையா டல்கள் நீர்த்துப்போன ஒரு சூழலுக்கு முன், உக்கிரமான வரலாற்று அநீதிகளை சாமர்த்தியமாக மறந்து, மறைத்து இலக்கியக் கதையாடல்கள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலுக்கு முன் ஆணித்தரமாக வந்து விழுந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

ஆல்பெர் காம்யுவின் இந்த வார்த்தைகள் இங்கே பொருத்தமானதாக இருக்குமென்று கருதுகிறேன்.


”வரலாற்றின் விளையாட்டரங்கில் எப்பொழுதும் சிங்கமும் சண்டை வீரனும் இருந்து கொண்டேயிருக்கிறார்கள்.சிங்கம் வரலாற்றின் பச்சை மாமிச ருசிக்காகவும், வீரன் தனது நீங்காப் புகழுக்காகவும் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறனர். சிறிது காலம் முன்பு வரை, படைப்பாளி ஓரத்தில் அமர்ந்து தனக்காகவோ, அந்தவீரனை உற்சாகப்படுத்தவோ, அல்லது அந்த சிங்கம் தனது பசியை மறப்பதற்காகவோ தான் பாடிக்கொண்டிருந்தான். ஆனால், இப்பொழுது படைப்பாளியும் அந்த விளையாட்டரங்கிற்குள் நின்று கொண்டிருக்கிறான்.”

முத்துவேல்
சேவ் தமிழ்சு இயக்கம்

- இந்த நூல் நோக்கு பதிவு செந்தலைக்குருவி இலக்கிய இதழில் முதலில் வெளிவந்துள்ளது. இங்கே மீள்பதிவு செய்கின்றோம்..

http://chenthalaykuruvi.blogspot.in/2013/11/blog-post_8587.html

Monday, January 27, 2014

மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 2
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டணி பேரங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய தேசிய அளவில் முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளன. காங்கிரசு கட்சி ராகுல் காந்தியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், பா.ஜ.க-விற்கோ எதிர்த்து விமர்சனம் செய்ய ராகுல் மட்டுமின்றி, இப்போது சாமானியர்களின் கட்சியாக தம்மை விளித்துக் கொள்ளும் ஆம் ஆத்மியும் சேர்ந்துள்ள‌து.

மோடியின் ஆதரவு அலையால் வெற்றி பெற்றதாக பாரதிய ஜனதாவால் விமர்சிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தவுடன் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டது பாரதிய ஜனதா கட்சியினரிடம் இருந்துதான். இப்படி இருக்கும் அரசியல் நடப்பில் 272 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியாக வேண்டும் என்று இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடியின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சம் பற்றிய இரண்டாவது கட்டுரை இது. நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் உத்தரப்பிரதேசத்தை முலாயம் சிங் யாதவால் ஒருநாளும் குஜராத்தாக மாற்ற முடியாது என்றும்(அமித் ஷா உத்தரப்பிரதேசம் அனுப்பப்பட காரணம் இதுதானோ!), அப்படி மாற்ற முலாயமிற்கு ஒன்றும் 56 இன்ச் உள்ள நெஞ்சம் இல்லை என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் மோடி.

நரேந்திர மோடியின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படும் விபரங்களைப் பற்றி பேச எழுதப்பட்ட இந்த கட்டுரையின் முதல் பாகத்தை வாசித்த நண்பர்கள் பலரிடமிருந்து எழும்பிய கேள்விகள் பின்வருமாறு,

1. காங்கிரசு ஆட்சிக்கு யார்தான் மாற்று?
2. காங்கிரசின் இத்தனை ஊழல்கள் பற்றி தெரிந்தும் மோடியை விமர்சிக்கிறீர்களே?
3. 2002- குஜராத் வன்முறை என்பது கடந்து போன ஒன்று. அதையே ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

இந்த கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுக்கான பதிலாவது, காங்கிரசு கட்சி மனிதப் புனிதர்களின் கட்சி என்றோ, அங்கு இருப்பவர்கள் மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான்கள் என்றோ நாம் சொல்லவரவில்லை. மாறாக, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியால் முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளும், அதற்கு நடைபெற்ற விதிமுறை மீறல்களும், வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் பிம்பப்பெருக்கம் பற்றி பேசுவதே இக்கட்டுரை தொகுப்பின் நோக்கம்.

காங்கிரசின் பத்தாண்டுகால ஆட்சியைப் பார்த்து 100 விழுக்காடு வெறுப்பில், இன்னும் சொல்லப்போனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும், ஊழல் என்கிற பிரச்சினை பற்றி மட்டுமே கவலைப்படுகிற நடுத்தரவர்க்கம், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஒளிர்ந்த லட்சணத்தை மறந்துவிட்டு மோடியை பிரதமராக்க துடித்துக் கொண்டிருக்கிறது, துடிக்க வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

பா. ஜ. க-வையும், மோடி என்கிற அதிகாரம் குவிக்கப்பட்ட தனிமனிதரையும் கொண்டாடும் நடுத்தர, புதிய நடுத்தர வர்க்கங்களைச் சார்ந்தோர் வாஜ்பாய் தலைமையிலான கடந்த பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற சவப்பெட்டி ஊழல் பற்றியோ, தங்க நாற்கரச் சாலை திட்டத்தில் வேலை பார்த்த சத்யேந்திர துபே என்கிற பொறியியலாளர் கொல்லப்பட்டதைப் பற்றியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையிலே எலிக்கறி உண்டு உயிர் வாழ முயன்ற விவசாயிகள் பற்றியோ பேச மறுக்கிறார்கள், மறக்கிறார்கள். அதே காலத்தில் ஆந்திராவில் வளர்ச்சியின் நாயகராக கொண்டாடப்பட்ட சந்திரபாபு நாயுடு மக்களால் நிராகரிக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இவர்கள் கொண்டுவந்ததாக சொல்லப்பட்ட வளர்ச்சி என்பது மக்களுக்கானதாக இருந்திருந்தால் "இந்திய ஒளிர்கிறது" என்கிற பிரச்சாரம் மூலம் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருக்கும்.ஆனால் அப்படி நடக்கவில்லை, மாறாக ஆட்சி பறிபோனது.
இவை எல்லாவற்றையும்விட ஒரு முக்கியக் காரணம், நரேந்திர மோடியால் ஊக்குவிக்கப்பட்டு குஜராத்தில் இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளே.2000-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொல்லப்பட்டதும், பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதும் இதே பா.ஜ.க ஆட்சிக்காலத்தில்தான் நடத்தப்பட்டது. இந்த வன்முறையின் பிதாமகராக பின்புலத்தில் இருந்து செயல்பட்டதும், ரகசியச் சந்திப்பைக் கூட்டி இந்துக்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு குறுக்கே நிற்கவேண்டாம் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதும் யார்?

குல்பர்க் சொசைட்டியில் நடைபெற்ற கொலைவெறித் தாக்குதலில் இசான் ஜாப்ரியிடமிருந்து வந்த பாதுகாப்புக் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி, காவல் துறை அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிவித்தது யார்?நரோடா பாட்டியா கொலை தாக்குதலில் வாள்களை ஆர்.எஸ்.எஸ் கர சேவகர்களுக்கு கொடுத்து, 97 பேர் கொலை செய்யப்படக் காரணமாக இருந்த மாயா கொத்னானிக்கு அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக (!) பதவி வழங்கி கௌரவித்தது யார்? (இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இவருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது)

போலி என்கவுன்டர் மோதலில் இஷ்ரத் ஜஹான் என்னும் பெண் கொல்லப்பட்டதும், மோடியின் ஆட்சியில் நடைபெற்ற போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து தொடர்புள்ள காவல்துறை அதிகாரிகள் காக்கப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி வன்சாரா வாக்குமூலம் அளித்ததும் யாருக்கு எதிராக?

இவ்வாறு நடந்த மனிதப் படுகொலைகளுக்கும், மனித உரிமையை காலில் போட்டு நசுக்கிய செயல்களுக்கும் சூத்ரதாரியான திருவாளர்.நரேந்திர மோடிதான் நாட்டை செழிப்புறச் செய்வார் என்று நினைப்பதைவிட ஆகப்பெரிய பிற்போக்குத்தனம் ஒன்று இருக்கவே முடியாது.

வளர்ச்சி என்பது மக்களுக்கு ஆனதாக, உயிர்நேயத்துடன் இருக்க வேண்டும். 2002-ல் குஜராத் படுகொலையில் கொல்லப்பட்ட நம் சகமனிதர்களின் மீது ஏறி நின்றுதான் வளர்ச்சி என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால், குஜராத் படுகொலைகளை புறந்தள்ளிவிட்டு மோடியின் வளர்ச்சி மாயைப் பற்றி நாம் பேசவே முடியாது.

2002 குஜராத் வன்முறை என்பது கடந்த கால நிகழ்வு என்றும், வன்முறையில் கொல்லப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் மீது ஏறி நின்று வளர்ச்சி என்று மோடி போடும் கூச்சலைக் கேட்க வேண்டும் என்றும் சொல்பவர்கள் கண்டிப்பாக குஜராத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தர்யபூர் மற்றும் சுஹுபுரா பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.


குஜராத்தின் இந்த பகுதிகளில் இசுலாமியர்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக 2012-ல் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி தலைமையிலான குஜராத் பாரதிய ஜனதா அங்கு பிரச்சாரமே மேற்கொள்ளவில்லை. 2002 வன்முறைக்குப் பிறகு சுஹுபுரா பகுதியில் இருந்து இந்துக்கள் வெளியேறிய பிறகு அங்கு மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன. 2012 தேர்தலுக்கு முன் அமித் ஷாவின் தொகுதிக்கு உட்பட்டிருந்த இந்த பகுதிக்கு அவர் ஒருமுறை கூட வந்ததேயில்லை. அவர் இந்த குறிப்பிட்ட தொகுதிக்கு நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

"பாரதிய ஜனதா கட்சி குஜராத்தில் வெற்றி பெறவில்லை என்றால் உங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது" என்ற எண்ணத்தை சாமானிய இந்து மக்களின் மனதில் பரப்பியுள்ளதாக 75 வயதுடைய மதீனா.எம்.மன்சூரி என்னும் மூதாட்டி கூறியுள்ளார். அவர் குஜராத்தில் இது போன்ற பல வன்முறைகளை நடந்திருந்தாலும் 2002-க்குப் பிறகு விஷம் அப்படியே மக்கள் மனதில் தங்கிவிட்டதாக பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.மூதாட்டி கூறிய இதே கருத்தைத்தான் நந்திதா தாஸ் தான் இயக்கிய " ஃபிராக் (FIRAAQ)" திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.

அந்தப்படத்தில் தன்னுடைய வீட்டை எரிக்கக் காரணமான இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த தன்னுடைய பக்கத்துக்கு வீட்டுக்கரனைப் பழிவாங்க துப்பாக்கி வாங்கச் செல்லும் இசுலாமிய இளைஞன் தன்னுடைய நண்பர் ஒருவர் வைத்திருந்த பழைய கலை பொருட்கள் விற்கும் கடையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுக்கிறான். அப்போது தன்னோடு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நண்பனின் செயலால் துப்பாக்கியில் இருந்த ஒரு குண்டும் வெடித்துவிடுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டு காவல்துறையினர் அவர்களைச் சூழ்ந்து கொள்வர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் அந்த இசுலாமிய இளைஞனை தன்னுடைய வீட்டின் முதல் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பான் ஒரு இந்து. அப்போது அந்த பக்கம் வரும் காவல்துறை அதிகாரி அந்த இந்துவிடம் இங்கு ஒருவன் வந்தானா? என்று விசாரிப்பார். அதற்கு அவன் யார் என்று திருப்பிக் கேட்கும் இந்து ஆணிடம் அவன் ஒரு இசுலாமிய சமூக விரோதி என்று சொல்லிச் செல்வார். சில நொடிகளுக்குப் பிறகு, போலீசிடமிருந்து தப்பி இந்துவின் வீட்டின் கீழ் மூச்சிறைக்க வந்து உட்காரும் இசுலாமிய இளைஞனின் தலையில் ஒரு ஜாடியை போட்டு கொன்றுவிடுவான் அந்த இந்து. இவ்வாறாக, சாமானிய இந்து மக்களின் மனதில் 2002-க்குப் பிறகு விதிக்கப்பட்டுள்ள இசுலாமியருக்கு எதிரான வன்ம நஞ்சைப் பற்றி பேசும் இந்த காட்சி.

இன்று வளர்ச்சி என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு, இசுலாமிய மக்களின் வாக்குகளுக்காக தன்னை அனைவருக்கும் ஆனவராக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.வியட்நாம் போரை நமக்கு நினைவூட்டும் "ஓடி வரும் சிறுமியின் புகைப்படத்திற்கும்", ஈழ இனப்படுகொலையை நினைவூட்டும் "பாலச்சந்திரனின் புகைப்படத்திற்கும்", சற்றும் குறையாத முக்கியத்துவம் உடையது "தன்னுயிரை காத்துக்கொள்ள கையேந்தி நிற்கும் குத்புதின் அன்சாரியின் புகைப்படம்". யாரவது எங்களை காப்பாற்றுங்கள் என்கிற
அந்த பார்வையே குஜராத் வன்முறையின் கோரத்தை இன்னும் பல ஆண்டுகள் கடந்தும் பேசும்.

பெஸ்ட் பேக்கரி வழக்கில், குழந்தைகளும், பெண்களும் எரித்துக் கொல்லப்படும் போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த "நவீனயுக நீரோ" என்று நரேந்திர மோடியை விமர்சித்தது உச்ச நீதிமன்றம்.ரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோவைவிட மோசமானவர்கள் அதைக் கேட்டு கொண்டிருந்த அவரது விருந்தினர்கள்.
வளர்ச்சி என்னும் பிரச்சாரத்திற்காக நரேந்திர மோடியை நாம் ஆதரிப்போமானால், நமக்கும், நீரோ-வின் விருந்தினர்களுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை.
முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் ஒரு பத்திரிக்கை செய்தியில் பின்வருமாறு கூறியிருந்தார், " குஜராத் கலவரத்திற்குப் பிறகு வாஜ்பாய் திறம்பட எதையும் செய்யவில்லை. குஜராத் வன்முறையை ராணுவத்தை அனுப்பியாவது நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகள் செவி மடுக்கவில்லை. நான் மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விரும்பிய போது, பாரதிய ஜனதா ஆட்சியின் மறைமுகத் திட்டங்களுக்கு நான் குறுக்கே இருந்ததால் அவர்கள் அதை விரும்பவில்லை. அப்போதைய பா.ஜ.க. அரசு அரசு கல்வி துறையில் பல்வேறு மறைமுக மாற்றங்களை கொண்டுவர நினைத்தது. அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவே அவர்கள் என்னை ஆதரிக்கவில்லை."

இன்று இந்துத்துவ அடிப்படைவாதத்தையும், ராமர் கோவில் பிரச்சனை பற்றியும் பேசாமல் வாக்குகளுக்காக வளர்ச்சி பற்றி பேசும் மோடிக்கு ஆதரவாக பேசுவோரை எண்ணும் போது, நான் அண்மையில் வாசித்த கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது,

" உங்கள் வீட்டின் ஓர் அறை பற்றி எரியும் போது
அடுத்த அறையில் உங்களால் தூங்க முடியுமா?

உங்கள் வீட்டில் ஓர் அறையில் பிணங்கள் அழுகிக்கொண்டிருக்கையில்
அடுத்த அறையில் உங்களால் பிரார்த்தனை செய்ய முடியுமா ?

உங்களால் முடியும் என்றால் உங்களிடம் சொல்வதற்கு
என்னிடம் ஏதுமில்லை...."


- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!

க‌திர‌வ‌ன்
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.htmlபுகைப்படங்கள் ரெய்ட்டர்ஸிலிருந்தும், மற்ற வலைதளங்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. நன்றி...

Sunday, January 26, 2014

நூறாவது குடியரசு தினம்


வழிப்பறி கூட

வளமான தொழில் தான்

பாதையோர மரங்களை

பாதுகாப்போம்

மறைந்து

பறிக்க

ஏதுவாய் இருக்கும்

பிரதமர் சூளுரை.
பசியோ

பஞ்சமோ

கொஞ்சமும்

நுழைய

வழியேல்லை

அணுமின்

குப்பையை

அவுல்,பொறி

ஆக்கலாம்

கலாய்க்கிறார்

கலாம்

தள்ளாத வயதிலும்.
ஒழிக்கவே

முடியாது

ஊழலும்

லஞ்சமும்

உச்சவரம்பையாவது

தீர்மானிக்கலாம்

முடிவுக்கு

வராமல்

முடங்கி

போனது

பாராளுமன்றம்.காடும்

மரமும்

காணாமல்

போனது

பாலித்தின்

குப்பையில்

ஒட்டிய

சிறகொன்று

உச்சரித்தது

கடைசியாய்

விட்டு விடுதலையாகி நிற்பாய்

அந்த சிட்டுக்குருவியை போல.- பாரதிதாசன்

படம் - ரெய்ட்டர்ஸ்

Wednesday, January 22, 2014

வரலாறென்பது.....

வரலாறென்பது
வாக்கியங்களால்
நிரப்பப்படுவதன்று!
வழிந்தோடும் மனிதக்குருதிகளால்
வரையப்படுவது
இன்று வரைக்கும்
போராட்டமும் பேரழிவுந்தான்
வாழ்க்கையாகிவிட்டது
வரலாறென்பது
வாக்கியங்களால்
நிரப்பபடுவதன்று!


சந்தாவில் துவங்கி
ஜார்கண்ட் வரை
நீளும்...நீளும்
கழுமரங்களாய் நீளும்
கலிங்கத்தை மிஞ்சும்
மனிதப்படுகொலைகள்
காக்கிச் சட்டைகள்
நிகழ்த்திய காமக்கொடூரங்கள்
புழை கிழிந்த பெண்டீர்தம்
மரண ஓலம்
பாறைகளும் வருத்தப்படும்
மறைவிடம் தந்த மகாபாவத்துக்காய்
லத்தி தந்த குற்றத்துக்காய்
தலைகுனிந்து வெட்கப்படும்
மரங்கள்....!


அஹிம்சையை அரிதாரமாய்
பூசிக்கொண்ட அசோகச் சக்கரமே
எங்களை இந்தியன் என்று
இம்சிக்காதே
வரலாறென்பது
வழிந்தோடும் மனிதக்குருதிகளால்
வரையப்படுவது!

எங்கள்
வில்லையும்
அம்பையும்
களவாடியவர்களுக்குத் தெரியாது
கண்ணிவெடிகளை
எங்களுக்குக் கண்டுபிடிக்கத்
தெரியுமென்று!!! - பாரதி தாசன்

Friday, January 10, 2014

ஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம்- ஒரு கலந்துரையாடல்...
ஐ.டி துறையில் வேலை பாதுகாப்புச் சட்டம் தொடர்பான ஒரு கலந்துரையாடல் 26 திசம்பர் அன்று பெங்களூரில் மென்பொருள் பணியாளர் நடுவத்தினால்(ITEC) ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடல் குறிப்பாக "கர்நாடக அரசு - வேலைபாதுகாப்புச் சட்டத்தை(Industrial Act Or Employment Act) அமல்படுத்துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்திருப்பது" குறித்து விவாதிக்கப்பட்டது. பல தொழிற்சங்க நிர்வாகிகளும், மென்பொருள் பணியாளர் அமைப்புகளை சேர்ந்தவர்களும், மென்பொருள் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மென்பொருள் நிறுவனங்களில் "தொழிற்சாலை சட்டத்தை"(Industrial Act) அமல்படுத்துவதற்கு கடந்த 14 ஆண்டுகளாக விலக்களிக்கப்பட்டிருந்தது. மென்பொருள் பணியாளர்களின் கவர்ச்சிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் இருட்டில் தான் இருக்கின்றது என்ற வாதத்தோடு நிகழ்வை தொடங்கினார் ஹெயின்ஸ்.அவரை தொடர்ந்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளரான சரத் பேசும் பொழுது தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து மென் பொருள் நிறுவனங்களுக்கு 1999லிருந்து 2011 வரை முதல் விலக்கும், 2011லிருந்து ஏப்ரல் 2013 வரை இரண்டாவது விலக்கும் மாநில அரசால் கொடுக்கப்பட்டது. 2013 திசம்பர் இறுதிக்குள் எல்லா நிறுவனங்களும் தங்களது அறிக்கையை தொழிலாளர் ஆணையத்தில் சமர்பிக்கும் படி ஏப்ரல் 2013ல் சுற்றறிக்கை கொடுக்கப்பட்டது. இதற்குள் புதிதாக பதவியேற்றுள்ள‌ காங்கிரசு அரசின் முதலமைச்சர் சித்தராமையா தொழிற்சாலை சட்டத்தை அமல்படுத்துவதற்கு மேலும் 5 ஆண்டுகள் விலக்களித்துள்ளார். இந்த அரசின் புதிய ஐ.டி கொள்கையின் படி மேலும் அதிகமான முதலீடுகளை கவருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பெங்களூரை தவிர்த்து மற்ற இடங்களில் 1000 பேருக்கு அதிகமான பேரை பணிக்கமர்த்தும் ஐ.டி நிறுவனங்களுக்கு சலுகை விலையில் நிலம், மின்சாரம் மற்றும் வரி விலக்கு போன்ற சலுகைகளும் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது எல்லாம் போதாதென்று தகவல் தொழில்நுட்ப துறையை அத்தியாவசிய சேவைகள் என்ற பட்டியலின் கீழ் கொண்டுவரும் என்று கூறியுள்ளார் ????? வெளிநாட்டு நிறுவனங்களுக்காக இங்கே உட்கார்ந்து கொண்டு Code எழுதுவதும், அதை சரிபார்ப்பதும் மக்களின் அத்தியாவசிய தேவையா? என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.அடுத்து அகில இந்திய தொழிலாளர் சங்க மைய கவுன்சிலைச்(AICCTU - ML) சேர்ந்த‌ சங்கர் பேசும் பொழுது எப்படி இந்த தொழிற்சாலை சட்டம் உருவானது, அதன் தேவை என்ன என்பதை விளக்கினார். தொழிலாளிக்கும், முதலாளிக்கும் இடையிலான உறவை ஒழுங்குபடுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது. இதிலும் மொத்தமுள்ள 60 கோடி தொழிலாளர்களில் 7 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்கம் என்ற அமைப்பில் உள்ளனர், மீதமுள்ள 93 விழுக்காடு தொழிலாளர்கள் எந்த அமைப்பிலும் இல்லாமல் இருப்பவர்களே. நாம் கூறும் இந்த சட்டங்கள் எல்லாம் தொழிற்சங்கம் என்ற அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மட்டுமே. முதலாளித்து சனநாயகத்தில் உள்ள இந்த சட்டங்களைக் கூட அரசு முதலாளிகளின் நலன் காக்க தூக்கியெறிகின்றது என்றால் ஐ.டி-யில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை என்ன? தங்களது உரிமைகளை பாதுகாத்து கொள்ள எந்தவித வழிமுறையும் இல்லாததால் தொழிலாளர்கள் தெருவில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார் ச‌ங்க‌ர். மேலும் சங்கர் பேசுகையில் ஐ.டி துறை என்பது தற்சமயம் தொழிற்சங்கங்கள் உருவாவதற்கான முந்தைய கால கட்டத்தில்(Pre Trade Union Era) உள்ளது என கூறினார்.அடுத்து பாரதிய மஸ்தூர் சங்கத்தைச்(BMS- BJP) சேர்ந்த சூரிய‌ நாராய‌ணன் அவ‌ர்க‌ள் 60 ஊழிய‌ர்க‌ளுக்கு மேல் கொண்ட‌ எந்த‌ ஒரு த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ நிறுவ‌ன‌மும் தொழிற்சாலை ச‌ட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து விதி. இந்த‌ விதி மகாராஷ்ட்ரா உள்ளிட்ட‌ மாநில‌ங்க‌ளில் ந‌டைமுறையில் உள்ள‌து, க‌ர்நாடக அரசு முத‌லாளிக‌ளின் ந‌ல‌னை காப்ப‌த‌ற்காக‌ வேண்டுமென்றே மீண்டும், மீண்டும் நிறுவனங்களுக்கு வில‌க்க‌ளித்து வ‌ருகின்ற‌து. இன்று காலை வேலைக்கு செல்லும் ஒரு த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ ப‌ணியாளரின் அலுவ‌ல‌க‌ அடையாள அட்டைவேலை செய்ய‌வில்லை என்றால், அவ‌ர்க‌ள்பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்க‌ள் என‌ப்பொருள். அலுவலகத்தில் தான் வைத்துள்ள‌ பொருட்க‌ளை எடுத்துச் செல்ல‌க்கூட‌ உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டாம‌ல் பாதுகாவ‌ல‌ரே அந்த‌ ப‌ணியை செய்கின்றார். இது தான் இன்றைய‌ ய‌தார்த்த‌ம், அதும‌ட்டுமின்றி த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ ப‌ணியாள‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌டும் ச‌ம்ப‌ள‌ம் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்காக‌ இருந்தாலும், அவ‌ர்க‌ளின் அடிப்ப‌டை ச‌ம்ப‌ளம்(Basic Salary) சில‌ ஆயிர‌ங்க‌ளாக‌வே உள்ள‌து. ப‌ணியாள‌ர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து நிறுவ‌ன‌த்தின் மீது வ‌ழ‌க்கு தொடுந்தால் கூட‌ அவ‌ர்க‌ளுக்கு இழ‌ப்பீடு வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ அடிப்ப‌டைச் ச‌ம்ப‌ள‌த்தை வைத்து தான், ம‌ற்ற‌ப‌டி ச‌ம்ப‌ள‌ ப‌ட்டிய‌லில் இருக்கும் வீட்டு வாட‌கைப் ப‌டி, இத‌ர‌ப் படி (House Rent Allowance, Dearness Allowance) போன்ற‌வைக‌ளுக்கும் இழ‌ப்பீட்டிற்கும் ஏந்தா ஒரு தொட‌ர்பும் கிடையாது என்று தெளிவாக‌ விள‌க்கினார்.


இவ‌ரைத் தொட‌ர்ந்து இந்திய‌ தேசிய‌ தொழிலாள‌ர் சங்க காங்கிரசைச்(INTUC- Congress) சேர்ந்த சாக‌ர் குமார் , நம‌து உரிமைக‌ளுக்காக‌ நாம் போராட‌த‌தும், ந‌ம‌து உரிமைக‌ளைப் ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு இல்லாத‌தும் ந‌மது(தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள்) த‌வ‌று தான் என‌க்கூறினார். ஏப்ர‌ல் 2013ல் தொழிற்சாலை ச‌ட்ட‌ம் அம‌லுக்கு வ‌ர‌வேண்டிய‌ பொழுதே நாம் போராடியிருக்க‌ வேண்டும் என்றார், இன்றாவ‌து இது போன்ற‌ ஒரு கூட்ட‌த்தை ஒருங்கிணைத்து உங்க‌ள‌து உரிமைக‌ளை ப‌ற்றி விவாதிக்கின்றீர்க‌ளே, இது ஒரு ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் என்றார். தியாக‌ம் செய்ய‌த்த‌ய‌ங்க‌க்கூடாது என்று கூறிய‌ அவ‌ர் இந்திய‌ தொழிற்ச‌ங்க‌ வ‌ர‌லாற்றில் ந‌டைபெற்ற‌ தியாக‌ங்க‌ளைப் ப‌ற்றி குறிப்பிட்டார். முத‌ல‌மைச்ச‌ர் தான் இன்னும் 5 ஆண்டுக‌ள் ஐ.டி நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு வில‌க்க‌ளிப்ப‌து ப‌ற்றி குறிப்பிட்டுள்ளார், இது இன்ன‌மும் அர‌சாணையாக‌ வெளிவ‌ர‌வில்லை , அத‌ற்குள் ஒருங்கிணைந்து உங்க‌ள‌து உரிமைக‌ளுக்காக‌ குர‌ல் கொடுக்க‌ வேண்டும், அதில் நாங்க‌ள் உங்க‌ளுட‌ன் இணைந்து செய‌ல்ப‌டுவோம் என்றும் கூறினார்.இவரைத் தொடர்ந்து அகில இந்திய தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பேசும் பொழுது, தில்லியில் தான் பணியாற்றும் பொழுது தொழிற்சங்கம் அமைப்பது தவறு என சட்டம் சொல்கின்றதா என மனித வள அதிகாரியிடம் கேட்டேன், சட்டம் அப்படியெல்லாம் சொல்லவில்லை, ஆனால் நீங்கள் அமைப்பாக திரண்டால் உங்களது வேலைத்திறன் குறையும் என நாங்கள் அஞ்சுகின்றோம் , அதனால் நீங்கள் அமைப்பாக திரளக்கூடாது என்றார். அதாவது எந்த சட்டமும் நாம் அமைப்பாக திரள்வதை தடுக்கவில்லை, அவர்களது பயம் தான் நம்மை தடுக்கின்றது. நமது அணியில் வேலை செய்யும் சக பணியாளர் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் பொழுது அந்த அணியில் உள்ள நாம் ஒன்றாக சேர்ந்து ஏன் அவரை பணி நீக்கம் செய்தீர்கள் என கேட்க வேண்டும், இல்லையென்றால் இன்று அவருக்காக நாம் பேசாதது போல,நாளை நமக்காகவும் யாரும் பேசமாட்டார்கள். மேலும் அவர் பேசும் பொழுது நாம் அமெரிக்காவில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகளை அணிவோம், அமெரிக்க அரசியலை தினமும் பேசுவோம் ஆனால் வேலைப்பாதுகாப்பு என்று வரும் பொழுது இந்தியாவில் உள்ள சட்டத்தை கூட அமல்படுத்து எனக்கோராமல் அமைதியாக இருக்கின்றோமே? இந்த முரண் ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி நாம் வேலையை விட்டு போனால் ஒப்பந்தப்படி இரண்டு அல்லது மூன்று மாதம் வேலைபார்த்து விட்டுப் போ எனக்கூறும் நிர்வாகம், நம்மை பணி நீக்கம் செய்யும் போது மட்டும் அன்றே போகச் சொல்கின்றது, நமக்கான உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். 9 இலட்சம் பணியாளர்கள் இந்த துறையில் பணிபுரிகின்றார்கள், நமக்கான ஒரு தலைமை நம்முள்ளிருந்தே வர வேண்டும் எனக்கூறினார்.

இறுதியில் கேள்வி - பதில் நிக‌ழ்வு ந‌டைபெற்ற‌து.

நற்றமிழன்.ப‌

வீடு தோறும் மோடி...இல்லங்கள் தோறும் புளுகு மூட்டை...


முன் குறிப்பு - கோயபல்சு என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு.... அவர் ஹிட்லரின் கொள்கை பரப்பு செயலாளர். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப மக்களிடம் சொல்வதன் மூலம் அந்த பொய்யை மக்கள் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதை செயல்படுத்தி காட்டியவர்.


வரலாற்றில் எப்பொழுதெல்லாம் ஹிட்லர்கள் தோன்றுகின்றார்களோ, அப்போதெல்லாம் கோயபல்சுகளும் உடன் தோன்றுவார்கள். கோயபல்சுகள் இல்லாமல் ஹிட்லர்கள் கிடையாது.... அன்றைய ஹிட்லருக்கு ஒரு கோயபல்சு என்றால், இன்றைய ஹிட்லருக்கோ பல நூறு கோயபல்சுகள். உதயமாகிவரும் இந்திய ஹிட்லரான திருவாளர். மோடிக்கு ஆத‌ர‌வு தேடி அவ‌ர‌து க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளை (எத்த‌னை பேர் இருக்கின்றார்க‌ள் என்றெல்லாம் கேட்க‌க்கூடாது) "வீடு தோறும் மோடி" என்ற‌ துண்ட‌றிக்கையை விநியோகித்து வ‌ருகின்றார்க‌ள். அந்த‌ துண்ட‌றிக்கையின் உண்மைத் த‌ன்மையை ஆராய்கின்ற‌து இக்க‌ட்டுரை....


"அழிவு பாதையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற‌ திற‌மையான‌, துணிச்ச‌ல் மிக்க‌, த‌ன்ன‌ல‌ம் க‌ருதாத‌, ம‌க்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே வாழ்கின்ற‌ திரு.ந‌ரேந்திர‌ மோடி அவ‌ர்க‌ள் பிர‌த‌ம‌ராக‌ வ‌ர‌வேண்டும் என‌ ம‌க்க‌ள் முடிவெடுத்துள்ளார்க‌ள்"

--தேர்த‌லே இன்னும் ந‌ட‌க்காத‌ நிலையில் அத‌ற்குள் ம‌க்க‌ள் மோடி தான் பிர‌த‌ம‌ராக‌ வ‌ர‌ வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்க‌ள் என‌க்கூறி தாங்க‌ள் கூறும் ச‌ன‌நாய‌க‌ம் என்பது சர்வாதிகார‌ம் தான் என‌ முர‌ச‌றைந்து கூறுகின்றார்க‌ள்...


இந்த‌ துண்ட‌றிக்கையின் இர‌ண்டாவ‌து ப‌க்க‌த்தில் வாஜ்பாய் அவ‌ர்க‌ளின் பொற்கால‌ தாம‌ரை ஆட்சி என்ற‌ த‌லைப்பில் ப‌ல‌ பொய்க‌ளை வாரி இறைக்கப்பட்டுள்ளன‌...இதோ...

* இல‌ங்கை த‌மிழ‌ர் ந‌ல‌னிலும், இந்திய‌ த‌மிழ் மீன‌வ‌ர் பாதுகாப்பிலும் அதிக‌ க‌வ‌ன‌ம் கொடுத்து பாதுகாத்தார்...

ஈழத்தமிழர் என்றால் அவர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றார்கள் எனப்பொருள், இலங்கை தமிழர் என்றால் இலங்கை அரசமைப்பிற்குள் தீர்வு எனப்பொருள், 1,60,000த்திற்கும் அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னரும் இலங்கை அரசமைப்பிற்குள் தான் தீர்வு என்பதே பா.ஜ.க-வின் கொள்கை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை நட்பு நாடு தான் .... அடுத்து இந்திய தமிழ் மீனவர் பாதுகாப்பு ... தற்சமயம் நடந்து வருவது போலவே அப்போதும் தமிழக முதல்வர்கள் கடிதம் எழுதுவதும் , அதற்கு பிரதமர் பதில் கடிதம் எழுதுவதும் தான் நடந்ததே தவிர மீனவர்களை யாரும் பாதுகாக்கவில்லை. அதுமட்டுமின்றி கச்சதீவை மீட்பதில் இவர்களது கொள்கையும், காங்கிரசின் கொள்கையும் ஒன்றே, விரிவாக படிக்க...

http://www.tamiltribune.com/04/0901.html

* காவிரி, முல்லை பெரியாறு ந‌திக‌ளில் இருந்து த‌மிழ‌க‌ விவ‌சாயிக‌ளுக்கு கிடைக்க வேண்டிய ‌நீரை உறுதியுட‌ன் பெற்று த‌ந்தார்.

2002 செப்ட‌ம்ப‌ர் 8 அன்று 0.8 டி.எம்.சி நீரை த‌மிழ‌க‌த்திற்கு கொடுக்க‌ வேண்டும் என்று காவிரி ந‌தி நீர் ஆணைய‌ம் உத்த‌ர‌விட்ட‌து. அதற்கு தலைவர், அப்போதைய பிரதமர் வாஜ்பாய். இது மிகவும் குறைவான நீர் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அவ‌ர் உத்த‌ர‌விட்ட‌ அந்த‌ 0.8 டி.எம்.சி நீரையே க‌ர்நாட‌க‌ அர‌சு கொடுக்க‌வேயில்லை என்ப‌து தான் வ‌ர‌லாறு. (http://www.thehindu.com/news/resources/cauvery-issue-timeline/article4714418.ece)

முல்லைப் பெரியாறு அணையின் உய‌ர‌ம் தொட‌ர்பான‌ பிர‌ச்ச‌னையில் அப்போதைய‌ ம‌த்திய‌ அர‌சு ஒன்றுமே செய்ய‌வில்லை, வ‌ழ‌மை போல‌ த‌மிழ‌க‌ அர‌சு உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொடுத்து 2006ல் நீதியைப் பெற்ற‌து. இதில் வாஜ்பாயோ, அவரது அரசோ ஒன்றும் செய்ய‌வில்லை.

அதே போல‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் வாழ்வாதார‌த்தைப் பாதிக்கும் சில்ல‌றை வ‌ணிக‌த்தில் அன்னிய‌ முத‌லீடு, கூட‌ங்குள‌ம் அணு உலை, கெயில் எரிவாயு குழாய் ப‌திப்பு உள்ளிட்ட‌ எல்லா முக்கிய‌ பிர‌ச்ச‌னைக‌ளிலும் ஆளும் காங்கிர‌சை விட‌ ஒரு ப‌டி மேலே சென்று ம‌க்க‌ளை ஒடுக்கும் கொள்கையை கொண்ட‌து தான் பா.ஜ‌.க‌.....

* 50 ஆண்டு கால‌ காங்கிர‌சு ஆட்சியில் வாங்கிய‌ க‌ட‌னை அடைத்தார்....

--- வாஜ்பாய் ஆட்சிகால‌த்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 விழுக்காடாக இருந்த க‌ட‌ன் 61 விழுக்காடாக அதிக‌ரித்த‌தே த‌விர‌, எந்த‌ க‌ட‌னும் அடைக்க‌ப்ப‌ட‌வில்லை...
(http://data.worldbank.org/indicator/GC.DOD.TOTL.GD.ZS?page=2)


* அனைவ‌ருக்கும் தொலைபேசி, செல்போன் வ‌ச‌தியை ஏற்ப‌டுத்தி கொடுத்தார்....

இதையே தான் ப‌.சித‌ம்ப‌ர‌மும் சொல்கின்றார். எங்க‌ள் ஆட்சியில் அறுப‌டி கோடி பேரிட‌ம் அலைபேசி உள்ளது(2010ல்), அப்ப‌டியானால் எங்க‌ள் ஆட்சியில் இந்தியா வ‌ள‌ர்ந்து விட்ட‌து என்ப‌து தானே பொருள் என்றார். அலைபேசி இணைப்போ, தொலைபேசி இணைப்போ வ‌ள‌ர்ச்சியின் குறியீடு அல்ல‌. மேலும் விரிவாக‌ ப‌டிக்க‌...

http://natramizhan.wordpress.com/2010/08/12/


இவ‌ற்றையெல்லாம் இல‌ஞ்ச‌ம், ஊழ‌லே இல்லாம‌ல் ஆட்சி ந‌ட‌த்தினார் என‌ சொல்கின்றார்க‌ள்.. தற்சமயம் ந‌ட‌ந்த‌ 2G ஊழ‌லில் கூட‌ வாஜ்பாய் அர‌சிற்கு தொட‌ர்பு உள்ள‌தென‌ பாராளும‌ன்ற‌ கூட்டுக்குழு (இதில் பா.ஜ‌.க‌-வின‌ரும் உள்ள‌ன‌ர்) கூட‌ கூறியுள்ளது(http://www.thehindu.com/news/national/pm-innocent-but-vajpayee-caused-rs-42080-crore-loss-jpc-report/article4634416.ece).

அடுத்த‌தாக‌ ந‌ரேந்திர‌ மோடியின் சாத‌னைக‌ள்...

* இந்தியாவில் ம‌துக்க‌டைக‌ள் இல்லாத‌ ஒரே மாநில‌ம் குஜராத்...

இது மோடியோட சாத‌னை இல்லைங்க‌. காந்தி பிற‌ந்தார் என்ற ஒரே கார‌ண‌த்திற்காக‌ குஜராத்தில் மட்டும் 1947லிருந்தே ம‌துக்க‌டைக‌ள் இல்லை. அப்ப‌டி இதை சாத‌னையா சொல்ல‌னும்னா காங்கிர‌சு வேணும்னா சொல்ல‌லாம்...


* ம‌க்க‌ளுக்கு ஏற்ப‌டும் பிரச்ச‌னைக‌ளை வீடியோ கான்பர‌ன்ஸ் மூல‌ம் தெரிந்து உட‌னுக்குட‌ன் தீர்வை கொடுக்கிறார்.

முத‌ல்வ‌ன் ப‌ட‌த்தில் வ‌ந்த‌தை அப்ப‌டியே எழுதியிருக்கின்றார்க‌ள். என்ன அந்த படத்தில் தொலைபேசி மூலம் பேசுவதை நேரடியாக காட்டினார் சங்கர். இவர்கள் வீடியோ கான்பரன்ஸ் என்று சொல்லுகின்றனர். இயக்குனர்.சங்கர் வேண்டுமென்றால் பா.ஜ.க மீது காப்புரிமை வழக்கு தொடுக்கலாம்...
*23% மட்டுமே பெண்கள் கல்வி பயின்று வந்த நிலையை மாற்றி 96% பெண்கள் கல்வி பெறும் நிலைக்கு உயர்த்தினார்.

2001ல் பெண்கள் கல்வி கற்கும் எண்ணிக்கை 60.40%, 2011ல் 63.31% . வெறும் 2.9% தான் முன்னேறியுள்ளது. (http://www.census2011.co.in/census/state/gujarat.html).


*26% வீடுகள் மட்டுமே குடிநீர் இணைப்பு பெற்றிருந்த குஜராத்தை 10 ஆண்டுகளில் 73% குடிநீர் இணைப்பு பெற்ற மாநிலமாக மாற்றினார்...

2001ல் 84% ம‌க்க‌ளுக்கு குடிநீர் கிடைத்திருந்த‌து, 2011ல் இது 90% இருந்த‌து. 6% ம‌ட்டுமே அதிக‌ரித்துள்ள‌து. (http://planningcommission.nic.in/data/datatable/1612/table_223.pdf)

இவ‌ர்க‌ள் கூறுவ‌தை பார்த்தால் 2001ல் குஜ‌ராத் என்ன‌வோ கற்கால‌த்தில் இருந்த‌ மாதிரியும் , மோடி தான் அந்த‌ மாநில‌த்தையே ந‌வீன‌ யுக‌த்திற்கு கொண்டு வ‌ந்த‌வ‌ர் மாதிரியும் சொல்கின்றார்க‌ள்... இராணுவ‌மே 10,000 ம‌க்க‌ளை க‌ங்கை வெள்ள‌த்திலிருந்து காப்பாற்ற‌ ப‌ல‌ நாட்க‌ளெடுத்த‌ பொழுது 15,000 குஜ‌ராத்திக‌ளை மோடி ஒரே நாளில் காப்பாற்றினார் என்று பொய் சொன்ன‌வ‌ர்க‌ள் தானே இவ‌ர்க‌ள்...

வ‌ள‌ர்ச்சியின் நாய‌க‌ன் மோடியின் மாநில‌த்தில் இன்னும் 41% குழ‌ந்தைக‌ள் ஊட்டச்சத்து குறைவோடே இன்றும் உள்ள‌ன‌ர். ஏன் இந்த நிலை என்று கேட்டதற்கு பெண்கள் தங்களது உடலழகில் கவனம் செலுத்துவதது தான் இதற்கு காரணம் என்ற முத்தை உதிர்த்தவர் தான் திருவாளர்.மோடி. இதையெல்லாம் மோடியினால் எப்ப‌டி ச‌ரி செய்ய‌ முடியும் என‌ நீங்க‌ள் கேட்கக்கூடும். மேற்கு வ‌ங்க‌த்தில் இருந்து நானோ தொழிற்சாலை வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ போது ஓரு நானோ காருக்கு 60 ஆயிர‌ம் ரூபாய‌ம் மானிய‌ம்(அர‌சு ப‌ண‌ம்) கொடுத்து, இலவசமாக இடமும் கொடுத்து அந்த‌ தொழிற்சாலையை குஜ‌ராத்தில் அமைக்க‌ முடிந்த‌ மோடிக்கு, இது முடியாதா?


எப்படி இந்திரன் என்ற மன்னன் அவனது அவை கவிஞர்களால் தேவலோக மன்னனாக புகழப்பட்டு இன்று தேவாதி தேவர்களுக்கும் தலைவன் என்று இந்து புராணங்களால் வர்ணிக்கப்படுகின்றனோ... அதே போலவே இந்துத்துவ அடிப்படை வாத கட்சியான‌ பா.ஜ.க-வும் அவர்களது பிரதம வேட்பாளர் மோடியை ஏதோ யுக புருசனாய், தேவ தூதனாய் காட்டுகின்றார்கள்.. தப்பி தவறி மோடி பிரதமராகிவிட்டால் நம் பிள்ளைகள் மோடி என்ற மீட்பனின் வரலாற்றை அவர்களது பள்ளிக்கூடங்களில் படிக்கக்கூடும். வரலாற்றை ஆதிக்க சக்திகள் இப்படி தான் எழுதி வருகின்றார்கள். இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க இன்றே மோடியின் உண்மை முகத்தை மக்களிடம் தோலுரித்து காட்ட வேண்டியது சனநாயக ஆற்றல்களின் கடமையாக உள்ளது. இதில் அடியேனின் ஒரு சிறு துளியே இக்க‌ட்டுரை...

பி.கு- இக்க‌ட்டுரை பா.ஜ‌.க‌-வின் துண்ட‌றிக்கையை மைய‌ப்ப‌டுத்தியே எழுத‌ப்ப‌ட்டுள்ள‌தால் மோடி குஜ‌ராத்தில் ந‌ட‌த்திய‌ இன‌க்கொலைகளைப் ப‌ற்றி இங்கு பேச‌வில்லை.

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

Thursday, January 9, 2014

என்.ராம் வருந்தவும் இல்லை…திருந்தவுமில்லை….லசந்தா விகரம்சிங்கே, என்.ராம் - இருவருக்கும் இரு ஒற்றுமை உண்டு. ஒன்று இருவரும் இராசபக்சேவின் நண்பர்கள். மற்றொன்று இருவரும் பத்திரிக்கையாளர்கள். ஆனால் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு. இருவரில் ஒருவர் இன்று உயிருடன் இல்லை. 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசு பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த நாட்களில் அதை கண்டித்து, இந்த போர் தமிழர்களை சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என்று எழுதியதால் சிங்கள அரசின் துப்பாக்கிச் சூடுக்கு பலியானவர் லசந்தா. ஆசியாவின் பத்திரிக்கை வரலாற்றில் இவருக்கு நிச்சயம் இடமுண்டு. மற்றவரான என்.ராமோ இலங்கையில் இன அழிப்புப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 2014, ஜனவரி 1 ஆம் தேதி ’தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு வழங்கியப் பேட்டியில் தான் முதல் முறையாக ”இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஓர் இந்திய அரசியல்வாதி போல் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் ஈழப் போராட்டம் குறித்து அவர் கூறிய அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும். எனினும், போராட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சில கருத்துகள் மட்டும் இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்து….

இது குறித்த கேள்வி அவரிடம் முன் வைக்கப்படும் போது எச்சரிக்கையாக இனக்கொலை குற்றம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் என்று சொல்லும் பொழுது தான் அதற்கு சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் என்று இருவரையும் காரணம் சொல்லி குற்றத்தைச் சமப்படுத்த முடியும். நல்ல வேளையாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு தி இந்து பத்திரிக்கை சொல்லி வந்த ‘zero civilian casualities’, ’humanitarian rescue operation’ ,’war on terror’ என்ற பல்லவியைக் கைவிட்டுவிட்டார்கள். போர் முடிந்தவுடன் இலங்கை சென்று வந்து ’ Visiting the Vavuniya IDP camps: an uplifting experience’ என்று என்.ராம் தன் கைப்பட எழுதி இந்திய மக்களிடம் உருவாக்கிய கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது. ஆனால் இந்த நான்காண்டுகளில் வெளிவந்த டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை(1), ஐ.நா. செயலர் பான் கீ முனால் நியமிக்கப்பட்ட மார்சுகி தாருசுமன், ஸ்டீபன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு முன் வைத்த அறிக்கை(3), அண்மையில் ஜெர்மனியில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு(2), சானல் – 4 தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்த ஆவணங்கள் என்று அடுத்தடுத்த அதிர்ச்சியை என்.ராம் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. சானல்-4 இன் கேலம் மேக்ரே போர்க்குற்றங்களை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. ”எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம். போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.” என்று வாசகர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் என்.ராம் போன்றவர்களின் ஊடக அறத்தையும் அம்பலப்படுத்தி உள்ளார். இன்றும் தி இந்துவின் நிருபராக இலங்கையில் பணியாற்றிவரும் இராதாகிருஷ்ணன் மட்டும் தான் போர்க் காலத்தில் மிக சுதந்திரமாக போர்ப்பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரே ஒரு வெளிநாட்டு ஊடகர் ஆவர். ஆனால் அவராலும் அவர் சார்ந்திருக்கும் ஊடகமும் வேண்டுமென்றே எந்தப் போர்க்குற்ற ஆவணத்தையும் வெளியே விடவில்லை, ஏனென்றால் அது நண்பர்.இராஜபக்சேவிற்கு சங்கடத்தை உருவாக்குமல்லவா....போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்திய மக்கள் மேற்குலக ஊடகங்களை எதிர்நோக்கி இருக்க வேண்டி இருக்கின்றது.எப்படியோ, என்.ராம் வாயில் இருந்து முத்து உதிர்ந்துவிட்டது. ’போர்க்குற்றங்கள் நடந்துள்ளது’ என்று சொல்லிவிட்டார். அதே நேரத்தில் இனப்படுகொலைக்கு விடுதலைப் புலிகளைப் பொறுப்பாக்கும் நோக்கத்தோடு ‘பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு’ என்ற முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான் விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன்.” என்று தன்னுடைய பதிலைத் தொடங்குகின்றார். தமிழர்களின் 60 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு அடிப்படை காரணம் சிங்களப் பேரினவாதம் தான். சிங்களப் பேரினவாதம் தான் இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக்கி நாட்டைவிட்டு வெளியேறச் செய்தது. அது தான் பல இலட்சம் மக்களைக் கொன்றொழித்து இலங்கையில் இன சுத்திகரிப்பு செய்து வருகின்றது. அது தான், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஆயுதம் ஏந்திப் போராட வைத்தது. இனியும் மக்களை வீதிக்கு இழுத்து வந்து போராட வைக்கப் போகின்றது. ஆனால் சிங்களப் பேரினவாதத்தைப் பற்றி பேச மறுத்து இந்திய மக்களை முட்டாளாக்கி வருகின்றது ’தி இந்து’.


சந்திராகாவிடமிருந்து சிங்கள ரத்னா விருதை பெறுகின்றார் திருவாளர்.என்.ராம்...

நடந்த படுகொலைகளைப் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று சொல்வதன் மூலம் இனக்கொலை என்பதை மூடி மறைத்து ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு’ என்ற தங்கள் அரசியல் விருப்பங்களை நியாயப்படுத்த நினைக்கின்றார் என்.ராம். சி.பி.எம் கட்சியின் நிலைப்பாடும் இதுவாகத் தான் இருக்கின்றது. இந்த படுகொலைகள் விசாரணைக்குள்ளானால் இன அழிப்புக்கு உள்ளான மக்களுக்கு அரசியல் நீதி என்ற வகையில் தம்மை பாதுகாத்துக் கொள்ள தனியரசு அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தினால் சி.பி.எம். மும், என்.ராமும் போர்க்குற்றம் என்றும், உள்நாட்டு விசாரணை என்றும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான மூன்றாண்டுகளில் 1,46,679 பேர் காணவில்லை என்று மன்னார் பிஷப் இராயப்பு ஜோசப் அறிக்கை வெளியிட்டுள்ளார்(4). 2009 ஜனவரி முதல் 2009 மே வரையிலான காலகட்டத்தில் மட்டும் 40000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை சொல்கின்றது. இந்தியாவின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தப் போரில் 65000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள் என்று அண்மையில் பேசி உள்ளார்(5).

1983 ஆம் ஆண்டு ஜீலை மாதம் நடந்த இனக்கலவரத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர். அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் அதையே ’இனப்படுகொலை’ என்று இலங்கையைக் கண்டித்தார். அதே கருத்தைத் தான் இன்று இந்தப் பேட்டியில் என்.ராம் சொல்கின்றார். ஆனால், 2009 ஆம் ஆண்டு முடிந்தப் போரில் சிங்கள இராணுவம் செய்த படுகொலைகளை ’மனித உரிமை மீறல்’ என்கின்றார். இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைதான் ’தி இந்து’ மற்றும் தன்னுடைய கொள்கை என்று அவரே ஒப்புக்கொள்வதற்கிணங்க இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்றாற் போல் மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலை போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி மார்க்சியத்தின் பெயராலும் சர்வதேசியத்தின் பெயராலும் ஒரு தேசிய இனத்தை இல்லாதொழிக்கும் வேலையை தி இந்து செய்து வருகின்றன.


போர் முடிந்த இந்த ஐந்தாண்டுகளில் எவ்வித உள்நாட்டு விசாரணையையும் இலங்கை அரசு தொடங்கவில்லை. மாறாக போரில் பங்குபெற்ற இராணுவ தளபதிகளை வேக வேகமாக ‘diplomatic immunity’ உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச பொறுப்புகளில் அமர்த்திக் கொண்டிருக்கின்றது(6). இறுதிப் போர் மட்டுமல்ல, இதற்கு முன்னர் ந‌டந்த இன அழிப்புக் குற்றங்கள் எதற்கும் முறையான விசாரணை செய்து குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கிய வரலாறு ஏதும் இல்லாத நிலையில் இராசபக்சேவுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்.ராம். இராசபக்சே இதுவரை சிங்கள இராணுவம் போர்க்குற்றங்கள் செய்துள்ளன என்று சொல்லவும் இல்லை. அதை நேர்மையான வகையில் விசாரிக்கத் தயார் என்று உறுதியளிக்கவும் இல்லை. அப்படி சொன்னால் சிங்களப் பேரினவாத பூதம் அவரை தூக்கியெறியும். எனவே ஒருநாளும் தன்னாட்டு இராணுவ வீரர்கள் மீதொரு நேர்மையான விசாரணைக்கு அவர் முன்வரப் போவதில்லை.
அரசியல் தீர்வு குறித்து…

”ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்” - கிழக்குப் பகுதியில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள் என்று சொல்கின்றார். இதுதான் 1948 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய போது இருந்த நிலையா? 1987 ஆம் ஆண்டு இருந்த நிலை என்ன? எந்த அடிப்படையில் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்று இந்திய இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்த வரைவில் என்.ராமுக்கும் பங்கிருக்கின்றது அல்லவா? அந்த ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கு இசைவு உண்டா? என்று கிழக்கு பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை நடத்துமாறு வலியுறுத்த என்.ராமுக்கும், இந்திய அரசுக்கும் துணிவு உண்டா? 1948 ஆம் ஆண்டிற்கு பின் நடந்த சிங்களக் குடியேற்றங்களை மூடி மறைத்துவிட்டு கிழக்குப் பகுதியின் மக்கள் தொகை விகிதம் பற்றி பேசுகின்றார் என்.ராம். இப்போது வடக்கிலும் சிங்களமயமாக்கி வருகின்றார்கள். வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படுவதை சிங்களப் பேரினவாதம் செய்து வருகின்றது. அப்போது என்.ராம் இன்னும் அழுத்தமாக கிழக்கிலும் வடக்கிலும் தமிழர்கள் சிறுபான்மையினர் என்றும் தனிநாட்டிற்கு தேவையான தாயகம் இல்லை என்றும் வாதிடக் கூடும். தாயகத்தை அங்கீகரித்துவிட்டால் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தாக வேண்டும். எனவே தான் என்.ராம் சிறுபான்மை மக்களாக தமிழர்களைக் காட்ட முயல்கின்றார். தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப உண்மையைத் திரித்தும் குறைத்தும் மறைத்தும் பேசுவதைத் தான் வழமையாக செய்து வருகின்றார் என்.ராம்.”அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது”

தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை என்று சொல்வது தான் தன்னை இடதுசாரிகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் சி.பி.எம் காரர்களின் மார்க்சியப் பார்வையாக இருக்கின்றது. ஆனால். என்.ராம் தன்னுடைய பேட்டியில் எங்குமே சிங்கள அரசிடம் உள்ள பேரினவாதம் பற்றி பேசத் தயாராக இல்லை. இது தான் அவருடைய சிங்கள அரச சார்பைக் காட்டி நிற்கின்றது. சி.பி.எம் கட்சிக் கூட சிங்கள இனவாதம் குறித்துப் பேசுவது இல்லை. அதைவிட சிங்களப் பேரினவாதம் எப்படி வளர்ந்து நிற்கின்றது என்ற எந்த வரலாற்று அறிவும் இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதே வருத்தத்திற்கு உரிய உண்மையாக இருக்கின்றது. அவர்களிடம் முரண்பாட்டில் உள்ள இரண்டு கூறுகளையும் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற இயங்கியல் பாடத்தை யாராவது சொல்லிக் கொடுத்தால் நன்று.


”ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.” – என்று இலங்கையின் இனமுரண்பாட்டிற்கான அரசியல் தீர்வை சி.பி.எம் கட்சியும், என்.ராமும் சொல்லி வருகின்றார்கள். கடந்த நான்கு சதாப்தங்களாக அவர்கள் இதை தான் சொல்லிவருகின்றார்கள். இலங்கை அரசமைப்பின் இரண்டாம் உறுப்பில் இருக்கும் ’ஒற்றையாட்சி’ தான் அவர்கள் சொல்லும் அதிக பட்ச அதிகாரப் பகிர்வாம், சுயாட்சிக்கு தடையாய் இருப்பது. அதை மாற்றுவதற்கு சிங்கள மக்களிடம் வாகெடுப்பு நடத்தியாக வேண்டும். 13 ஆம் சட்டத்திருத்தத்தின்படி காணி, போலீஸ் அதிகாரம் கூடத் தருவதற்கு இராசபக்சே தயாரில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருந்தாலும் என்.ராமும், சி.பி.எம் கட்சியும் இந்த ஒற்றையாட்சி முறையை மாற்றுவது குறித்து ஆக்கப்பூர்வமான போராட்டங்களையும், கருத்துருவாக்கத்தையும் நடத்துவதற்கு தயாரா ?.


”தமிழீழம் சாத்தியமில்லை“ என்றும் நூறாண்டுகளுக்குப் பின்னான இந்தியாவைப் பற்றியும் எதிர்வு கூறியுள்ள என்.ராமுக்கு ஒரு சிறு தகவல். 1990 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 26 புதிய அரசுகள் இப்பூமி பந்தில் தோன்றியுள்ளன(7). வரலாற்றின் வளர்ச்சி விதிகள் உங்கள் விருப்பங்களுக்கு எதிராக இருக்கின்றன.


2008 ஆம் ஆண்டு தான் சி.பி.எம். கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உணர்ந்தது. இதற்கு முன்னரும் பல பணிகளை சி.பி.எம் செய்திருந்தாலும், தனிப்பட்ட கவனம் செலுத்தி ஒரு உள் அமைப்பை ஏற்படுத்தியது 2008ல் தான்...அது போல் என்.ராமும் சாதி எதிர்ப்பில் தங்கள் பங்களிப்பு குறித்து இந்த பேட்டியிலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவை பின்வருமாறு:

“சாதி நம் நாட்டின் பெரும் சாபம். அதை ஒழிக்க வேண்டிய கடமை எல்லோருக்குமே இருக்கிறது. முக்கியமாக ஊடகங்களுக்கு. ஒரு காலகட்டம் வரை நாம் போதிய கவனம் கொடுத்திருக்கிறோம் என்றுதான் நினைத்தோம். ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது அதன் போதாமை புரிகிறது. அதே சமயம், இதற்கான பின்னணியில் பல காரணிகள் உண்டு……. அப்புறம், இந்தத் தொழிலில் ஏனையோருக்கு இல்லாமல் இருந்த பிரதிநிதித்துவம். இன்றைக்கும் பத்திரிகைத் துறையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இப்படிப் பல காரணிகள். ஆனால், இப்போது சரியான திசையில் செல்கிறோம் என்று நினைக்கிறேன். ” – இதில் தங்கள் அரசியல் நேர்மையின்மையை சுயவிமர்சனம் செய்யாமல், தலித் மக்கள் அதிகம் ஊடகத்துறையில் இல்லாததை எல்லாம் ஒரு காரணமாக சொல்கின்றார்.

தங்களை இடதுசாரிகள் என்று காட்டிக் கொண்டு ஒடுக்கப்படும் மக்களின் போராட்ட நியாத்திற்கு துணை நிற்காமல், ஒடுக்கப்படும் மக்களையே பிரச்சனைக்கு என்.ராம் குற்றம் சுமத்திவருகின்றனர். இப்படி அனைத்து வகையிலும் ஒடுக்குபவர்களுக்கு சேவகம் செய்யும் வேலையையே இவர்களைப் போன்றவர்கள் செய்து வருகின்றனர்.


ஒரு தேசிய இனத்தை ஆளும் வர்க்கம் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யும் பொழுது இடதுசாரிகள் ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும். ஆனால் இங்கே இவர்கள் ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாகவே செயல்படுகின்றனர்.

"சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்து போகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது" - லெனின்...

குறிப்பு: தமது நிலைப்பாடே புலி எதிர்ப்பு என்ற ஒப்புதல் வாக்குமூலம் தந்த பின்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும், அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் என்.ராம் சொல்லிய கருத்துகளுக்கு இக்கட்டுரையில் பதிலளிக்க தேவையில்லை என்று கருதுகின்றோம்.


செந்தில்
ஒருங்கிணைப்பாளர் - சேவ் தமிழ்சு இயக்கம்

2,3 புகைப்படம்:மே 17 இயக்கம்.

த‌ர‌வுக‌ள்:
1) http://ptsrilanka.org/
2) http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/426-sri-lanka-guilty-of-genocide-against-tamils-with-uk-us-complicity-ppt-rules
3) http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf
4) http://mannardiocese.net/details.php?content=Statements_Reports
5) http://tamil.oneindia.in/news/tamilnadu/india-won-t-rest-till-implementation-13th-amendment-pc-188570.html#slide435856
6) http://www.thesundayleader.lk/2011/01/23/the-militarisation-of-sri-lanka%E2%80%99s-diplomatic-and-administrative-services/
7) http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=776c764a-4d05-4528-8a4f-e44285eba9fd

Wednesday, January 1, 2014

பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழி

உலகளாவிய தமிழ் அமைப்புக்களின் கூட்டுப் புத்தாண்டுச் செய்தி:

பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணைக்கு உழைக்க உறுதிமொழி

சனவரி 01, 2014
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு இருக்கும் வடக்குக்கிழக்கில் வாழும் எம் உடன்பிறந்த தமிழ் மக்களுக்கு விடுதலையும், நீதியும், நிலையான அமைதியும் கிடைக்க ஒன்றுபட்டு உழைப்போமென்று புத்தாண்டு நாளாகிய சனவரி 1, 2014 இல் உலகளாவிய தமிழ் உருவாக்கங்கள் சார்பாக மீண்டும் எமது உறுதிப்பாட்டை வழங்குகின்றோம். இலங்கைத் தீவு “சுதந்திரம்” பெற்ற 1948ஆம் ஆண்டு முதல், சிறிலங்கா அரசினால் ஒடுக்கப்பட்டுவரும் எம் மக்களுக்காகக் குரல் கொடுக்க, பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றோம். அத்துடன் தமிழ்த் தேசத்தின்மீது தொடரும் ஒடுக்குமுறையை எதிர்த்துநிற்போம் என உறுதியளிக்கின்றோம்.


செப்டம்பர் 2013 இல் நடந்த வடக்கு மாகாண அவைத் தேர்தலில், சிறிலங்கா அரசில் தமக்கு அண்ணளவு நம்பிக்கையும் இல்லையென்பதை வெளிப்படுத்தியும், பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை வேண்டியும், மக்களாட்சி முறைப்படி தமிழ் மக்கள் கொடுத்த மிகப் பெரும் ஆணைக்கு நாம் முதன்மைத்துவம் அளிக்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் புறந்தள்ளி, தமிழ் மக்களுக்கு நீதியையும் அரசியல் உரிமையையும் கொடுக்க மறுக்கும் சிறிலங்கா அரசின் எதேச்சையான போக்கை நாம் அனைத்துலக சமூகத்திற்குச் சுட்டிக் காட்டுகின்றோம். 2008 ஆம் ஆண்டில் “அனைத்துலக பக்கசார்பற்ற பேராளர் குழுமம்“ என்று, பதினொரு பன்னாட்டுப் புகழ்மிக்க வல்லுனர்களை உள்ளடக்கியும் கூட, சிறிலங்கா அரசின் உள்ளக விசாரணை ஆணைக்குழு தமிழர்களுக்கு நீதிவழங்கத் தவறியதை நாம் எடுத்துக் காட்டுகின்றோம்.
ஆக, அனைத்து உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகளையும் நாம் அடியோடு நிராகரிக்கிறோம். எமது மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை ஆய்ந்து பொறுப்புக்கூறும் பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் அவையின் துணையுடன் உருவாக்குவதற்கு அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவை அணிதிரட்ட இப்புத்தாண்டில் உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.
இந்த மங்களகரமான புத்தாண்டு நன்நாளில், நீதியும் சமத்துவமும் சுதந்திரமும் தழைத்தோங்கும் அமைதி நிறைந்த உலகை, நாம் வேண்டி நிற்கின்றோம்.

----
The following Tamil entities from Australia, Canada, India, Malaysia, Mauritius, New Zealand, South Africa, Sweden, UK, and the USA are jointly releasing this 2014 New Year Message:
1. Academy of Tamil Studies, Malaysia

2. Association For Community and Dialogue, Malaysia

3. Australian Tamil Congress, Australia

4. British Tamil Conservatives, UK

5. Center for War Victims & Human Rights, Canada

6. Communist Party of India - Tamil Nadu Secretariat, India

7. Council of Temples, Malaysia

8. Dravida Munnetra Kazhagam , Tamil Nadu, India

9. Dravidar Viduthalai Kazhagam , Tamil Nadu, India

10. Eastern Cape Tamil Federation, South Africa

11. Eluthenhi Arakkaddallai , Tamil Nadu, India

12. Federation of Tamil Sangams of North America, USA

13. Group of Concerned Citizens, Malaysia

14. Hindu Defence Brigade, Malaysia

15. Ilankai Tamil Sangam, USA

16. Islamic Youth Movement Against Genocide, Tamil Nadu, India

17. Malaysian Indian Youth Council, Malaysia

18. Malaysian Tamil Forum, Malaysia

19. Naam Thamilar , Tamil Nadu, India

20. New Zealand Tamil Society, New Zealand

21. Pattali Makkal Katchi , Tamil Nadu, India

22. People for Equality and Relief in Lanka, USA

23. Save Tamils Movement, Tamil Nadu, India

24. Southside FM Radio, South Africa

25. Student Front For the Freedom of Tamil Eelam, UK

26. Students Federation For Free Eelam, Tamil Nadu, India

27. Students Federations Of TamilNadu, Tamil Nadu, India

28. Students Movement For Change, Tamil Nadu, India

29. Students Struggle For Tamil Eelam, Tamil Nadu, India

30. Swedish Tamils Forum, Sweden

31. Tamil Federation of Gauteng, South Africa

32. Tamil Federation of Kwa-Zulu Natal, South Africa

33. Tamil League, Mauritius

34. TamilNadu Makkal Katchi, Tamil Nadu, India

35. Tamil National Liberation Movement, Tamil Nadu, India

36. Tamil Renaissance Front, Malaysia

37. Tamils Against Genocide UK, USA

38. Tamils Cultural Center, Tamil Nadu, India

39. Tamils For Labour, UK

40. Tamil Students Initiative, UK

41. Tamil Youth Front, USA

42. Tamil Youth Organisation, UK

43. Tamil Youth and Students Federation, Tamil Nadu, India

44. Thamil Creative Writers Association, Canada

45. Thamil Ellhuchip Peravai , Tamil Nadu, India

46. Thamizhar Munnetrak Kazhagam , Tamil Nadu, India

47. The Mauritius Tamil Temples Federation, Mauritius

48. The Movement Against Tamil Genocide, Mauritius

49. The South African Tamil Federation, South Africa

50. The Union Tamoul, Mauritius

51. Secretariat, Transnational Government of Tamil Eelam

52. United States Tamil Political Action Council, USA

53. Western Cape Tamil Federation, South Africa

54. World Tamil Confederation, Tamil Nadu, India

55. World Thamil Organization, USA


---------------