Wednesday, June 26, 2013

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர்வாளர்களாலும் பல்வேறு தளங்களில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கடும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி வருகிறது.ஆனால் பெருவாரியான மக்கள், ஏழைகளுக்கும் ஆங்கில வழிக்கல்வி கிடைக்கப் போகிறதே என்ற ஆதரவான மனநிலையில் தான் இருக்கின்றனர். இந்த "இங்கிலிஷ் மீடிய" போதை என்பது அணுஉலை வந்து விட்டால் மின்சாரம் கிடைத்து விடும் என்ற போதைக்கு நிகரானது. ஆங்கில வழிக்கல்வியில் பயின்று விட்டால் ஆங்கில அறிவு வளர்ந்து விடும். எனவே உயர்கல்வி, பன்னாட்டு நிறுவன வேலை என பிய்த்து உதறிவிடலாம் என்ற பொதுக்கருத்தே ஆங்கில வழிக்கல்வியை ஆதரிக்கச் செய்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீதான உண்மையான அக்கறையோடு தான் வெளியிடப்பட்டதா? இந்த அறிவிப்பு அடிப்படையில் யாருக்கு சேவகம் செய்யப் போகிறது ? என்ற பல கேள்விகளுக்கான விடையை யதார்த்த நிலையிலிருந்து அணுக வேண்டியிருக்கிறது.


ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வரமா? சாபமா ?

கடந்த ஆண்டு சென்னையில் சில குடிசைகள் நள்ளிரவோடு எரிந்து சாம்பலாயின. சென்னை கிரீம்ஸ் ரோடு, மக்கீஸ் கார்டன் போன்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அவை. இச்சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்கு முன், அவர்களின் குடிசைகளை விட்டு வெளியேறி சென்னையின் ஒதுக்குப்புறமான கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு குடியேறுமாறு ஆணையிட்ட சென்னை மாநகராட்சியை புறக்கணித்த அம்மக்களுக்கு கிடைத்த பரிசு அது. போராட்டத்தில் குதித்த அம்மக்கள் அக்குடிசைகளை விட்டு வெளியேற மாட்டோம் என்று உறுதியாக நின்றதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

ஒன்று அரசு மருத்துவமனை வெகு அருகாமையில் இருப்பது. மற்றொன்று கல்வி. அம்மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானாலும் பரவாயில்லை என்று தம் குழந்தைகளை நகரத்திற்குள் அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்திருந்தினர். அதில் ஒரு சிறுமி சர்ச் பார்க் கான்வென்ட் சீருடையோடு வந்து ஒலிபெருக்கியில் பேசினாள். "நாங்க இங்க தான் இருப்போம். எங்கயும் போக மாட்டோம்!"

நான் மேலே கூறிய நிகழ்வை, ஏழைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்க முடிகிறதே என்று தட்டையாக புரிந்து கொள்ளக் கூடாது. தரமான கல்வி தனியாரில் தான் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்ற தொடர் ஊடக பிரச்சாரத்தின் மூலம் நமது சமூகத்தில் உள்ள பொது கருத்து மற்றும் ஆங்கிலம் மீதான மக்களின் மோகம், அவ்வெளிய பெற்றோரை தனியாரை நோக்கி ஓட வைத்திருக்கிறது. இப்ப‌டி எல்லா ஏழை ம‌க்க‌ளாலும் த‌னியாரை நோக்கி ஓட‌ முடியுமா என்ன‌ ?

இன்றைய அரசு பள்ளிகளின் நிலைமை என்ன? அடிப்ப‌டை வச‌திக‌ளான‌ க‌ழிவ‌றையிலிருந்து, வ‌குப்ப‌றை முத‌ல் ஆசிரிய‌ர்க‌ள் வ‌ரை பெய‌ர் சொன்னாலே போதும் த‌ர‌ம் எளிதில் விள‌ங்கும் நிலைமை தான். மேலும் இருக்கும் ஒரு மொழிப்பாடமான ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கவே சரியான ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இல்லை, இருக்கும் ஒரு சிலரும் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிப்ப‌தில்லை.( தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலேயே ஆங்கில மொழிப் பாடம் சரியாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை) எனவே ஆங்கில பாடத்திற்கு மட்டும் தனியாக சிறப்பு பயிற்சி வகுப்பு(Tution) வைத்துக் கொள்ளும் சூழல் ஏற்கெனவே இருக்கிறது. ஆக அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல்,ஆங்கில வழிக்கல்வியை திணிப்பதில் ஒரு வியாபார நோக்கமிருப்பதை யூகிக்க முடிக்கிறது. அது என்ன வியாபார நோக்கம் என்பதை பிறகு பார்ப்போம்.


அரசு பள்ளிகளில் யார் அதிகம் படிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்ட, ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தான். இவர்களில் பெரும்பான்மை முதல் தலைமுறை கல்வி பெறுபவர்களாகவே இருக்கின்றனர். ஒரு குழந்தை கல்வியுலகில் காலடி எடுத்து வைத்து, தன் தாய்மொழியை கற்குமுன்னரே, அன்னிய மொழியான ஆங்கில வழிக்கல்வியை கற்க வேண்டிய அவலத்தை என்னவென்று சொல்ல? உலகின் எந்த பகுதியிலும் நிகழாத கொடுமை இது. அரசு பள்ளிகளில் இருக்கும் பல ஆசிரியர்களால் ஆங்கிலத்தை மாணவர்களுக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்க தெரியவில்லை, தெரிந்த சில ஆசிரியர்களாலும் கால அட்டவணையின் நிர்ப்பந்தத்தால் ஒருமுறை மட்டுமே ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம், அன்னிய மொழியில் ஒரு முறை மட்டுமே சொல்லிக் கொடுப்பதால் அது அரைகுறையாகத் தான் புரியும். வீட்டிற்கு வந்தால் பெற்றோர்களால் சொல்லி கொடுக்க முடியாத சூழல், சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு (Tution)செல்ல முடியாத பொருளாதார நிலைமைகளால், பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பிள்ளைகள் ஆளாக நேரிடுகிறது. அல்லது இந்த‌ மதிப்பெண் கலாச்சார சமூக அமைப்பில் அவர்கள் திறமை குறைந்தவர்களாக, வாய்ப்புகளை இழப்பவர்களாக முன்னிறுத்தப்படுவார்கள். ஆக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை நோக்கி வரும் இவ்வெளிய மக்களை இருகரம் நோக்கி வரவேற்கும் திட்டமாக இது நிச்சயம் இருக்க முடியாது. படித்தால் தனியார் பள்ளியில் போய் படி, இங்கே வந்தால் இப்படி தான் இருக்கும் என்று படிக்க வரும் ஏழை மாணவர்களை அரசு பள்ளிகளின் வாயிலோடு அடித்து விரட்டும் ஒரு சூழ்ச்சியாகத் தான் இதைக் கருத முடிகிறது.மொழிப்பாடங்களை பயிற்றுவிப்பதில்,பயில்வதில் ஆசிரியர்களும் மாணவர்களும் எத்தகைய அணுகுமுறையை கையாள்கின்றனர் ?

மேனிலைப் பள்ளி மாணவர்கள், மொழிப் பாடங்களான தமிழையும், ஆங்கிலத்தையும் தேர்வுகளுக்கு மட்டுமே படிக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.பிரதானமாக கணக்கு,வேதியியல்,இயற்பியல் போன்ற மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களை மட்டுமே வருடம் முழுதும் அதிக கவனம் செலுத்தி படிக்கின்றனர்.
ஆசிரியர்களும் பிரதான பாடங்களை மட்டுமே சிரத்தையோடு பயிற்றுவிக்கின்றனர். மற்றபடி மொழிப்பாட வகுப்புகள் சற்றே இளைப்பாற வசதியான வகுப்புகளாகத் தான் மாறிப்போயிருக்கின்றன. எனவே அரசோ தனியாரோ எப்பள்ளியானாலும் சரி, குறிப்பிட்ட ஒரு மொழியறிவை மேம்படுத்த‌ வாய்ப்பில்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. எனவே ஆங்கில வழிக்கல்வியில் கற்றாலும் கூட ஒரு சில ஆங்கில கலைச் சொற்களை கற்றுக் கொள்ள முடியுமே தவிர, ஆங்கில இலக்கண அறிவோ, ஆங்கில இலக்கிய புலமையோ பெற்று விட‌ முடியாது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியால் யாருக்கு லாபம்?

சமகால சமூக அமைப்பு என்பது மதிப்பெண்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நல்ல கல்வியைத் தேடி பெற்றோர்கள் சென்ற காலம் அருகி, எந்த‌ பள்ளியில் படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்? அதன் மூலம் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? அந்த கல்லூரி மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்குமா என்ற நிலைக்கு சமூக அமைப்பு இறங்கி வந்தாகி விட்டது. குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கப் படுகிறார்கள்.


பெற்றோர்கள் தங்கள் முதலீடுகளுக்கு இலாபமாக,குழந்தைகளின் மதிப்பெண்களைக் கேட்கின்றனர்.எந்த குழந்தை அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அதுவே அதிகம் விலைபோகும் சந்தைப் பொருளாக்கப் படுகிறது. ஆக போட்டி நிறைந்த இந்த சந்தையுலகில் தான் அரசுகளின் வியாபார யுக்திகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சமச்சீர் கல்வியை முடக்குவதில் தீவிர ஆர்வம் காட்டிய ஜெயலலிதா அரசின் கல்விக் கொள்கையானது தனியார் முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால், மெட்ரிகுலேஷன் பேனர் வைத்து அரசு நியமிக்கும் கட்டணத்தை விட அதிகமாக டொனேஷன் என்ற பெயரில் கொள்ளையடிக்க முடியாதே என்ற கவலையில், தனியார் முதலாளிகள் திரண்டு வந்து இத்திட்டத்தை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு தோல்வியடைந்தாலும், தற்பொழுது வந்துள்ள அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.


அரசுகளின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கின்றது. இன்றைக்கு ம‌த்தியில் ஆளும் ம‌ன்மோக‌ன் அர‌சு க‌ல்வி, ம‌ருத்துவ‌ம் உள்ளிட்ட‌ எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளையும் த‌னியாரிட‌ம் கைய‌ளித்து வ‌ருகின்ற‌து. அத‌ன் ஒரு ந‌ட‌வ‌டிக்கைகாக‌ தான் த‌னியார் ப‌ள்ளிகூட‌ங்க‌ளில் ப‌டிக்கும் ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ க‌ல்வி க‌ட்ட‌ண‌த்தை அர‌சே செலுத்தும் திட்ட‌ம். இந்த‌ திட்ட‌த்தில் அதிக‌ள‌வு மாண‌வ‌ர்க‌ளை சேர்க்க‌ வைப்ப‌த‌ற்காக‌வே ஜெய‌ல‌லிதா அர‌சு இந்த‌ அறிவிப்பை வெளியிட்டுள்ள‌து.


தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதற்கு அரசு உதவி பெறும் ( Government Aided ) அமைப்புகளாகும் நடைமுறை தான் வழக்கத்தில் இருந்தது.தமிழகத்தின் பெருவாரியான கிறித்துவ அமைப்புகள் இப்படியான அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றன. ஆனால் நிலைமை இப்போது தலை கீழாக மாறி வருகின்றது. அரசு பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதை தனியார் வசம் ஒப்படைக்கும் புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது.25 லட்சம் முன்பணமாக கட்டும் எந்த தனியார் முதலாளியும் அரசு பள்ளிகளை ஏற்று நடத்தலாம். தங்கள் விருப்பம் போல கட்டணமும் வசூலித்துக் கொள்ளலாம்.மாலை நேர சிறப்பு வகுப்புகள் வைத்து, தமக்கு தேவையான அடிமைக் கல்வியை போதிக்கலாம் என்ற தனியார் மயமாக்கலுக்கு முழுவீச்சில் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இந்த புதிய கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், தரத்தை உயர்த்தாமல் எப்படி கருணாநிதி, மருத்துவ‌ காப்பீட்டு திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தாரோ, அதே பாணியில் இப்போது ஜெயலலிதா அரசு, அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க, ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துகிறது. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆங்கில வழிக்கல்வி மூலம் அச்சேர்க்கை விகிதத்தை உயர்த்தி அதை தனியார் வசம் ஒப்படைப்பது, சேர்க்கை விகிதம் குறைந்தால் இருக்கும் பள்ளிகளை மூடிவிடுவது என்பதைத் தான் அரசு அமல்படுத்தப் போகின்றது. ஆகவே ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்துவதினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், குறைத்தாலும் லாபமென்னவோ தனியாருக்கு தான்.


அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வெறும் மொழிப்பிரச்சினை மட்டுந்தானா?


தாய்மொழியில் கல்வி கற்பதால் தொழிற்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் சக்கைபோடு போடும் சீனா, ச‌ப்பான், செர்மனி என பல எடுத்துக்காட்டுகள் நம் முன் வைக்கப்படுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதால் என்னென்ன சிறப்புகள் என்று ஓராயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அரசால் அமைக்கப்பட்ட எல்லா ஆணையங்களும் தாய்மொழி வழியில் தான் கல்வி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் உள்ளன. இருப்பினும் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அந்த ஆங்கில‌ மோகம், ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு ஆற்றலாக (Skill) பார்க்காமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதையே ஒரு அறிவாக, ஆங்கிலத்தில் பேசுபவர்களை மேதைகளாக பாவிக்கக் கூடிய அவல நிலையைக் காண்கிறோம்.

அது மட்டுமின்றி, நம் வாழும் சமூகத்தில் கல்வி என்பது சாதிய கட்டமைப்புக்கு நிகரான ஒரு அடுக்குமாடி வழிமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “வேதம் ஓதும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று! என்கிற மனுதர்மம், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை அடிப்படையிலேயே மறுக்கிறது. அந்த மனு விஷத்தை குடித்து வாழும் சமகால இன்டெக்லெக்ச்சுவல் பார்ப்பன சமூகம், அதன் வன்மத்தை எல்லா ஆதிக்க சாதி சமூகத்திலும் தூவிப் பார்க்கிறது.பார்ப்பனிய, சத்திரிய,வைசியர் என்ற வர்ண அடுக்குமுறையானது, கல்வியிலும் CBSE, Metriculation, State Board, தனியார்,அரசு பள்ளிகள் என்று பேதத்தை விளைவிக்கிறது. அக்கட்டமைப்புகளின் அடித்தளத்தை உலுக்கும் ஒரு முயற்சியாக அமைந்த சமச்சீர் கல்வியை, பத்மா சேஷாத்ரி வகையறா தனியார் , பார்ப்பனீய முதலாளிகள் தான் முன்னணியில் நின்று எதிர்த்தனர். வெண்ணெய், நெய் உண்டு ஆச்சாரமாக வாழும் உயர்சாதியும், சாக்கடை அள்ளுபவனும் ஒரே கல்வியை கற்பதா என்ற அடிப்படை மனுதர்ம சிந்தனை, வியாபார நோக்கங்களைக் கூட மிஞ்சி நிற்கின்றது.பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் கை கோர்ப்பது இந்த புள்ளியிலிருந்து தான்.


கல்வி தனியார் மயமாவது முதலாளிகளின்,அரசுகளின் லாபவெறி என்றால், அதோடு தாய்மொழி புறக்கணிக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட இன, கலாச்சார ஒடுக்குமுறை தான்.ஜெயலலிதா ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியின் மீதான‌ தனது தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறார். போரில் ஒரு நாட்டின் இராணுவம், எதிரி நாட்டை தாக்கும் போது, நூலகங்களைத் தான் திட்டமிட்டு முதலில் அழிப்பார்களாம்.சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்குவேன் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும்,செம்மொழி நூலகத்தை செல்லரிக்க விடுவதும் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாக,லாப நோக்குக்காக என மட்டுமே பார்க்காமல் தமிழ் இன,மொழி மீதான படையெடுப்பாக, ஒரு இனத்தின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையாக பார்த்தால் அந்த உண்மை புரியும். ஆகவே கல்வி மீதான எந்த ஒரு ஒடுக்குமுறையும், சமூக நீதியின் மீதான தாக்குதல் தான்.- அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்


Saturday, June 22, 2013

லண்டனில் ஆர்பாட்டம் நடத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதலை தமிழ் இளையோர் அமைப்பு - பிரித்தானியா வன்மையாக கண்டிக்கின்றது .

லண்டனில் ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட்ட‌ அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் நேற்று லண்டன் வாழ் ஈழதமிழர்களால் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவுக்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.ஸ்ரீலங்கா துடுபெடுத்தாட்ட அணியினை பார்வையிட சென்ற சிங்களவர்களால் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்த கவனியீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் மீது காவல்துறையினரையும் தாண்டி சிங்கள காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலின் பொது கவனயீர்ப்பு போராட்டத்தில்
பங்குகொண்ட சிறுமியை காலால் எட்டி உதைத்தும், சிறுவனை அடித்தும் மேலும் அங்கு
நின்றவர்களை பலமாக தாக்கியும் உள்ளனர் மற்றும் சிங்கள காடையர்கள்
அநாகரிகமான வார்த்தைகளால் பேசியும், சைகை மூலமாக‌ காட்டியும் சென்றுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களம் எவ்வாறு எமது மக்களை அடக்கி அடிமை
படுத்தவும் எமது நிலங்களை பறித்தும் கலாச்சாரத்தை சீர்கெடுக்க முனையும்
இப்பொழுதில் தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளிலும் தனது இனவெறியை
காட்டி எகத்தாளம் இடுகிறது.


இவ்வேளையில் தமிழ் இளையோர் அமைப்பு சிங்கள காடையர்களின் இனவெறியை வன்மையாக கண்டிக்கும் நேரத்தில் லண்டன் காவல்துறையினரிடம் குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டியும். சிறிலங்காவை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் அதிகமான மக்களை பங்குகொள்ளுமாறு தமிழ் மக்களை வேண்டி நிக்குறது.


தமிழ் இளையோர் அமைப்பு - பிரித்தானியா
--
Media Team
Tamil Youth Organisation - United Kingdom

Web: http://www.tyouk.org
Follow us: http://twitter.com/#!/TYOUK
Face Book: http://www.facebook.com/tyouk.media

Monday, June 10, 2013

அரசு இயந்திரமும் காவல்துறையும் யாருக்காக???கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி, ஒடிசா (பழைய பெயர் - ஒரிசா) மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டனா கிராமத்தில், POSCO இரும்பு ஆலை அமைவதற்கான பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் இறந்து போயினர். ஒருவர் படுகாயமுற்று கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவத்தின் போதும்,இதற்கு தொடர்புடைய நிகழ்வுகளிலும் அரசு இயந்திரமும், காவல் துறையும் யாருக்காக பணி செய்தன? என்பதை உண்மை அறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில் தெரிவிக்க விழைவதே இக்கட்டுரையின் நோக்கம்.


மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், கல்வியாளர்கள்,ஜனநாயக மற்றும் மக்கள் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகிய பன்னிரண்டு பேர் உண்மை அறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.POSCO இரும்பு ஆலை திட்டம்


2005 ஆம் ஆண்டு ஒடிசா மாநில அரசும், தென்கொரிய பன்னாட்டு நிறுவனமான POSCO வும் 54 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் இரும்பு ஆலை அமைவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதன் உற்பத்தி ஆண்டுக்கு 12 மில்லியன் டன் இரும்பு என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையுடன் சேர்த்து ஒருங்கமைந்த குடியிருப்புப் பகுதியும்,அனல் மின் நிலையமும், பாரதீப் துறைமுகத்தில் இருந்து தெற்கே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆலைக்குச் சொந்தமாக துறைமுகமும் அமைக்கப்படுவதாக உள்ளது.இந்த திட்டத்திற்காக சுமார் 4004 ஏக்கர் நிலம் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட எட்டு கிராமங்களில் இருந்து கையகப்படுத்த அரசு இயந்திரத்தால் முடிவு செய்யப்பட்டது.இந்த மூன்று கிராம பஞ்சாயத்துகளில் திங்கியா பஞ்சாயத்துக்குட்பட்ட மூன்று கிராமங்களான திங்கியா,கோபிந்தபூர் மற்றும் பட்டனா கிராமங்கள்தான் இந்த நில ஆக்கிரமிப்பால் அதிகம் பாதிக்கப்படுபவை.

காட்டு வளத்தை ஆதாரமாக கொண்டு பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளும் , வேளாண்மை,மேய்ச்சல்,மீன்பிடி தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் வாழும் பகுதிகளும்தான் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. இதனால் காடுகளை அழிப்பது மட்டுமின்றி, நிலங்களைப் பறிப்பதால் வேளாண்மையை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, கூலிக்கு வேலை செய்யும் நிலமற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.


மக்கள் எதிர்ப்பும், இயக்கமும்


கிராம மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி POSCO -விடம் கையளிக்கும் பணிகள் 2005 முதலே அரசு இயந்திரத்தால் தொடங்கப்பட்டது.


இன்றளவும் மனிதர்கள் மீதான அக்கறையும்,மண் சார்ந்த நேசமும் கொண்ட பாமர மக்களால்தான் மனித உரிமைகளுக்கான பெரும்பாலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தொடக்கம் முதலே மக்கள் POSCO ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

போராட முன்வந்த மக்களை ஒருங்கிணைத்து PPSS (POSCO Pratirodh Sangram Samiti) -POSCO எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு என்ற இயக்கம் தலைமையேற்று ஆலை நிர்வாகத்துக்கு எதிராக தொடர்ந்து மக்கள்திரள் போராட்டங்களை நடத்தி வருகிறது.


அரசு மற்றும் காவல்துறையின் அடக்குமுறை


தங்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க போராடி வரும் மக்களை ஒடுக்க மாநில அரசும், காவல் துறையும் இதுவரை இருநூறுக்கும் அதிகமான பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் இதுவரை 1500க்கும் அதிகமான கைது உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இதில் 340 பெண்களுக்கு எதிரான கைது உத்தரவுகளும் அடங்கும்.இவை மட்டுமின்றி மார்ச் மாதம் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு முன்னரே இது போன்ற சில திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை ஆலை நிர்வாகமும், அரசு இயந்திரமும் இணைந்து நிகழ்த்தியுள்ள‌னர்.


இத்திட்டத்தின் தொலைநோக்கு,இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் சட்டபூர்வமான அனுமதி தொடர்பாக தொடுக்கப்பட்ட மக்களின் கேள்விகளால் நில கையகப்படுத்துதல் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.இதற்கான நீதி மற்றும் சட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன.03-02-2013 அன்று ஜகத்சிங்பூர் மாவட்ட நிர்வாகம், கோபிந்தபூர் கிராமத்தில் மீண்டும் நில கையகப்படுத்தலை தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பின் போது நிலங்களில் விவசாயத்திற்காக வளர்க்கபட்டிருந்த வெற்றிலை செடிகள் அழிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் விதித்திருந்த தடைகளை மீறியே இந்த பணி மீண்டும் முடுக்கிவிடப்பட்டது.


இதுமட்டுமில்லாமல், ஒடிசா உயர் நீதிமன்றம் கஹண்டதர் சுரங்களில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.இந்த வழக்கில் அரசு தரப்பிலான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இப்படிப்பட்ட சூழலில்தான், ஜகத்சிங்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை எஸ்.பி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நில கையகப்படுத்துதல் தொடங்கப்பட்டது .

சட்டபூர்வ அனுமதியின்றி, விதிமுறைகளைப் பற்றி எவ்வித கவனமும் இல்லாமல் நிலங்களைப் பிடுங்கி, மக்களை விரட்டும் பணி அரசாலும், ஆலை நிர்வாகத்தாலும் வேகப்படுத்தப்பட்டது.


இந்த திட்டப் பணிகளை மேற்கொள்வதில் மாநில அரசாங்கத்திற்கு இருந்த முனைப்பும், மத்திய அரசு மற்றும் POSCO நிர்வாகத்தால் மாநில நிர்வாகத்தின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தமும் சேர்ந்து மக்களையும், அவர்களது வாழ்வாதார உரிமைகளையும் வதைத்து வருகின்றன.


தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடிய மக்களை ஒடுக்கவும்,அச்சுறுத்தவும் ஒடிசா மாநில காவல் துறை, கோபிந்தபூர் கிராமத்தில் ஆயுதம் தாங்கிய காவலர்களின் முகாமை அமைத்து மாநில அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு துணை நிற்கின்றது.


இதனால் மக்கள் எதிர்ப்பு இயக்கத்தில் முன்னின்று போராடியவர்கள் அண்டை கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியதாயிற்று. இத்தோடு, ரவுடிகளையும், குண்டர்களையும் கூலிக்கு அமர்த்தி மக்களைத் தொடர்ந்து தாக்கியும், குண்டு வீசி மக்களை கொன்றும் உள்ளது ஆலை நிர்வாகம். இதற்கு அரசும், காவல் துறையும் துணை நிற்கின்றன‌.


குண்டு வெடிப்பும்,நிர்வாகங்களின் பங்கும்


கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள்திரள் அறவழிப் போராட்டங்களும், சட்டரீதியான முன்னெடுப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் இந்தியாவில் உள்ள மற்ற ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்று தந்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்கள் உரிமை ஆர்வலர்கள் ஒடிசா மக்களின் மீது நடத்தப்படும் அரச வன்முறைப் பற்றி உணரலாயினர்.வழமையாக தங்களுக்குத் தேவையான செய்திகளை மட்டுமே வெளியிடும் கார்ப்பரேட் ஊடகங்கள் இப்போது POSCO திட்டப் பகுதியில் நடைபெறும் அரச பயங்கரவாதம் பற்றி வாய் திறப்பதில்லை.


உண்மை அறியும் குழு PPSS இயக்கத்தினர் மற்றும் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களை பதிவு செய்தது. அத்தோடு காவல் துறை எஸ்.பியையும், மாவட்ட ஆட்சியரையும் சந்திக்க முயற்சித்தது ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


2008 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் PPSS இயக்கத்தைச் சார்ந்த தபஸ் மண்டல் என்கிறவர் பலியானார். கடந்த மார்ச் மாதம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் PPSS இயக்கத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களான தருண் மண்டல், நரஹரி சாஹு, மனஸ் ஜெனாஆகியோர் உயிரிழந்தனர்.லக்ஷ்மன் ப்ரமணிக் என்பவர் படுகாயமுற்று மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் .


குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று இரவே, தொலைக்காட்சி ஊடகம் ஒன்று குண்டுவெடிப்பைப் பற்றியும்,அதில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் செய்தி ஒளிபரப்பியது. அந்த‌ ஒளிபரப்பில், ஜகத்சிங்பூர் காவல்துறை எஸ்.பி திரு.சத்யப்ரட்டா போய் அவர்கள் இந்த குண்டுவெடிப்பு ஒரு விபத்து என்றும்,இதில் பாதிக்கப்பட்டவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.குண்டு வெடிப்பு நிகழ்ந்த 15 மணி நேரத்திற்கு போலீஸ் அந்த இடத்திற்கு வரவில்லை என்பதே உண்மை.இதுவரை காவல்துறை தரப்பில் இருந்தும், மாநில அரசு நிர்வாகத்திடம் இருந்தும் இந்தச் சம்பவத்தை விசாரிப்பதற்க்கான எந்த ஒரு அக்கறையும் காட்டப்படவில்லை.


குண்டு வெடிப்பு நடந்த அடுத்த நாளே கோபிந்தபூர் கிராமத்தில் வெற்றிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டு நிலங்களை கையகப்படுத்தும் வேலைகள் தொடர்ந்தன.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லக்ஷ்மன் ப்ரமணிக், ' அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்த போது அவர்களின் மீது குண்டுகள் வீசப்பட்டதாகவும், மரணத்தின் விளிம்பில் இருக்கும் தான் பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதுமில்லை' என்று உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.


சம்பவம் நடந்த அன்று இரவு, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற காவலர்கள், வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் குண்டு வெடிப்பு ஏற்பட்டது என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.


இது மட்டுமின்றி, காவல் துறையில் புகார் அளிக்க சென்ற நரஹரி சஹுவின் உறவு பெண்ணான குசும்பதி சாஹூ போலீசாரால் வழக்குப் பதிவு செய்ய மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.


இந்த சம்பவத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையானது,வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத POSCO ஆதரவாளரான ரஞ்சன் பர்தான் என்பவரது வாக்குமூல அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டது.


பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை ஏற்க மறுத்த காவல் துறை, ரஞ்சன் பர்தனின் வாக்குமூலத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டது.PPSS இயக்கத்தவருக்கு எதிராக இந்த முதல் தகவல் அறிக்கை பதிவானது.


பன்னிரண்டு அணிகள் கொண்ட காவல் படையினர் துணையோடு தொடர்ந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதில் பெண்களும்,குழந்தைகள் உட்பட எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒடிசா தொழில் கட்டமைப்பு வளர்ச்சிக் குழும அதிகாரி திரு. சங்கரம் முஹபாத்ரா போராடும் மக்களை விரட்டி விரட்டித் தாக்கியது காவல்துறையின் செயலற்றத்தனத்தை காட்டும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்த நிகழ்வுகளைப் பற்றி அறிய ஜகத்சிங்பூரில் முகாமிட்டிருக்கும் காவல் துறை அதிகாரி திலீப் தாசை உண்மை அறியும் குழுவினர் தொடர்பு கொண்ட போது, அவர்கள் பேசுவதற்கு சரியான ஆள் என்று POSCO ஆதரவாளரான ரஞ்சன் பர்தனிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.உண்மை அறியும் குழுவினரிடம், முகாமிட்டிருக்கும் காவல் துறை சார்பில் POSCO ஆதரவாளர் ஒருவர் பேசியுள்ளார். இதிலிருந்து காவல் துறை POSCO நிர்வாகம் மற்றும் அரசின் ஏவல் படையாகவே செயல்பட்டுள்ளது என்பது திண்ணம்.


நில கையகப்படுத்தலுக்கு ஆதரவாக அவர் பேசிய போதிலும் அரசு தரும் பணத்தால் இன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில்,இழந்த நிலத்தையும், அதனால் கிடைத்த வாழ்வாதாரத்தையும் ஈடு செய்யவே முடியாது என்பதை ஒப்புக் கொண்டார்.


பெரும்பாலான கிராமமக்கள் கோபிந்தபூர் முகாமில் உள்ள காவலர்களை கண்டு அச்சமுறுவதாகவும், இயல்பாக நடமாட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.எத்தனையோ ஆடம்பர, சொகுசுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் அங்கு மக்களின் வீட்டு வாசலில் நிற்கிறது காவல் துறை.


பெண்களின் நிலை


POSCO - வை எதிர்த்து நடைபெறும் இந்த மக்கள்திரள் போராட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது.

PPSS இயக்கத்தின் பெண்கள் பிரிவு 'துர்கா பாஹினி ' என்றழைக்கப்படுகிறது. முகாமிட்டுள்ள காவல்துறையினரை வெளியேறச் சொல்லி மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தாக்குதலில் காயமுற்ற 41 பேரில் 35 பெண்களும் குழந்தைகளும் ஆவர்.நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில்தான் நம் அரசுக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தனர் இந்த கிராமத்து பெண்கள்.இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர் பின்வருமாறு கூறினார்,

'இன்னும் எவ்வளவு அடிகளை எங்களால் தாங்க முடியும்?,நீங்களே சொல்லுங்கள்,எங்களிடம் நிலங்கள் இல்லை; இங்கு நாங்கள் உழைப்பையே நம்பி வாழ்ந்தோம்; நாங்கள் ஒவ்வொரு முறை POSCO -விற்கு எதிராக போராடும் போதும் அரசு லத்தியைக் கொண்டே பேசியது, என்ன சொல்வதென்று தெரிவதில்லை,என் உடலில் உள்ள காயங்களையும்,வீக்கத்தையுமே காண்பிக்க முடியும்'.
கோபிந்தபூரில் முகாமிட்டுள்ள காவல் துறையினரைத் திரும்ப பெறாவிடில் பெண்கள் நிர்வாணமாக போராடுவார்கள் என்று PPSS இயக்கம் அறிவித்தது .இது அந்த பகுதி செய்தித்தாள்களிலும் வெளி வந்தது. இயக்கத்தில் இருந்த ஆதரவாளர்கள் பலரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டம் கைவிடப்பட்டது என்றாலும் தன்னெழுச்சியாக முன்வந்து மூன்று பெண்கள் நிர்வாணமாக போராடினர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களையும், காவல் துறையையும் பின்வாங்க வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறியது.


அதே சமயம், இந்த மூன்று பெண்கள் மற்றும் PPSS இயக்கத் தலைவர் அபய் சாஹூ மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது காவல் துறை.இந்த மாவட்டத்தில் வசிக்கும் மற்ற பெண்களின் மீது இதே பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


திரைப்படங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெண்களை வணிகப் பொருளாக சித்திரிப்பதையும், ஐ.பி.எல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் உள்ள ஆபாசத்தைப் பற்றியும் அக்கறை கொள்ளாத அரசு நிர்வாகம்,ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய பெண்களின் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தன் கடமையை ஆற்றியது.


முதல்வருக்குக் கடிதம்


பெண்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து பாலியல் வன்கொடுமை மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான பெண்கள் அமைப்பு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்,

'பன்னாட்டு நிறுவனத்திற்காக தன் சொந்த மாநில மக்களை நீங்கள் புறக்கணித்ததே பெண்களை இப்படிப்பட்ட முடிவை நோக்கித் தள்ளியது, ஆலை நிர்வாகத்தால் அமர்த்தப்பட்ட கூலிப் படைக்கு தங்கள் உறவினர்களையும்,நண்பர்களையும் பலியாக கொடுத்ததே அவர்களைத் தள்ளியது,ஆயுதம் தாங்கிய போலீசையே மாநில அரசு போராடும் மக்களின் முன்னால் நிறுத்தியது, அறவழியில் போராடிய மக்களை ஒடுக்கி அவர்களின் நிலங்களை பறித்தீர்கள்,சுற்றுச்சூழல் வாரிய அனுமதி பெறாத போதும் நீங்கள் ஆலை நிர்வாகத்தையே ஆதரித்தீர்கள்,ஒரு சிறிய மருத்துவ முதலுதுவி பெறாதவாறு எங்களை முடக்கியுள்ளீர்கள்' என்று எழுதினர்.


மருத்துவ உதவி வேண்டிக் கூட வெளியில் செல்லமுடியாமல் முடக்கப்பட்டுள்ளனர் இந்த கிராம மக்கள். 2011 அக்டோபர் மாத மத்தியில் மருத்துவமனைக்கு சென்ற 45 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளி வந்தார்.சிறையில் இருந்த போது 4 காவலர்கள் அவரைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கான சுதந்திரம் இதுதானா?


இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டம் கண்முன் வந்து நின்றது .குழந்தைகளுக்கான பால் கூட அங்குள்ள மக்களுக்கு கிடைக்காதவாறு எவ்வாறு அரசு மக்களை வதைக்கிறதோ, அதுபோலத்தான் ஓடிசாவில் மட்டுமின்றி மக்கள் எங்கு போராடினாலும் இந்த அரசும்,காவல் துறையும் தங்கள் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி அடக்கும் என்பதே நிதர்சனம்.


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை பற்றி பேசும் போது தொடக்கத்திலேயே போராடவேண்டியது தானே என்று கேட்கும் நடுநிலைவாதிகள்(கூடங்குளத்திலும் தொடக்கத்திலிருந்தே போராடி வருகின்றார்கள் என்ற போதிலும்), ஒடிசாவில் தொடக்கத்திலேயே போராடும் மக்கள் மீது ஆலை நிர்வாகத்தாலும், அரசாலும் ஏவப்படும் வன்முறையை தடுக்காமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்.


தலித்துகளின் நிலை


அண்மைக்காலம் வரை POSCO எதிர்ப்பு இயக்கத்தில் இணையாது இருந்த தலித்துகள் தற்போது அரசின் அடக்குமுறையால் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். வெற்றிலை தோட்டங்களில் வேலைப் பார்த்து வந்த நிலமற்ற தலித்துகளின் நிலை மிகவும் மோசமானது.இதனால் நாளைக்கு ரூபாய் 300 முதல் 350 வரை தாங்கள் பெற்று வந்த வருவாயை இழந்துள்ளனர். நில உரிமையாளர்கள் பெறும் ஈட்டுத் தொகையில் தொழிலாளர்களுக்கு செல்ல வேண்டிய பங்கு இதுவரை செய்யப்பட்ட கையகபடுத்துதலில் அரசு நிர்வாகத்தாலோ, ஆலை நிர்வாகத்தாலோ கொடுக்கப்படவில்லை.இதுமட்டுமில்லாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கான வேலை வாய்ப்பும் உறுதி செய்யப்படவில்லை.


உண்மை அறியும் குழுவினரால் கவனிக்கப்பட்டவை


மார்ச் மாதம் நான்காம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு இந்த கிராமங்களில் நிலவி வந்த சூழ்நிலையை மேலும் மோசமடைய செய்துள்ளது. 2012 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நிலங்களைப் பறிக்கும் பணியில் 105 வெற்றிலை தோட்டங்கள் கையகப்படுத்தபட்டதாக சொல்லப்பட்டாலும் அதில் சரி பாதி போலியாக அமைக்கப்பட்ட தோட்டங்கள். ஊடகங்கள் முன்னிலையில் மக்களாக முன்வந்து நிலங்களை தருவதைப் போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முன்தின இரவு அமைக்கப்பட்டவை அவை.

கிராம மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தை கொடுத்த பிறகும் நிவாரணம் கொடுக்கவில்லை என்று இருவர் புகார் அளித்துள்ளனர். எந்த நிவாரணமும் அறிவிக்கப்படாத நிலமற்ற தலித் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசாங்கத்திடமும், அரசு நிர்வாகத்திடமும் குவிந்துள்ள அதிகாரம் தங்களுடைய சொந்த மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு உள்ளது.பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவான மாநில நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயக அமைப்புக்கு எதிரானவை.


தன் சொந்த மக்களின் நலனை விட பன்னாட்டு நிறுவங்களுக்கு செய்து கொடுத்த ஒப்பந்தங்களுக்கே மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் தருகின்றன.வெளிநாட்டு நிறுவனத்தின் பணபலம் அதிகாரிகள் பலரையும் மேற்படி கிராமங்களில் உள்ள சில நபர்களையும் விலைக்கு வாங்கி தங்கள் தேவைகளை நடத்தப் பார்க்கிறது.தங்களுக்கு உரித்தான உரிமைகளுக்காக போராடும் மக்களை ஒடுக்கி, அவர்களின் அமைதியை குலைப்பது பணபலம் மட்டுமே. ஆனால் போராடும் மக்களுக்கு தேவையானது பணமல்ல, அவர்களின் நிலமும்,வாழ்வாதாரத்துடன் கூடிய உரிமைகள் மட்டுமே.


பணம் படைத்தவர்களுக்கான அரசு
நிலங்களை அரசிடம் கையகப்படுத்திய மக்களை உள்நாட்டிலேயே அகதிகளாக்கியுள்ளது இந்த வளர்ச்சித் திட்டம். POSCO திட்டப் பகுதியில் புலம்பெயர்ந்தவர்களை அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அதிகாரியே மக்களை அடிக்கிறார், அதை வேடிக்கைப் பார்க்கிறது காவல்துறை, கூடிய விரைவில் நிலங்களை பிடுங்குமாறு சொல்லும் மத்திய,மாநில அரசுகள், வெடி குண்டு தயாரித்ததாக பொய் வழக்கு போடும் மாவட்ட எஸ்.பி..


இப்படித்தான் தோழர்களே,

தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அறவழியில் போராடும் மக்களை அடக்கி, ஒடுக்கி ஆயுதப் போராட்டங்களை நோக்கித் தள்ளும் வேலையை இந்த அரசுகளும், அரசு இயந்திரமும் செய்து வருகிறது.வளர்ச்சி என்பதற்கான அர்த்தம் மனிதர்களைப் பொறுத்து மாறும் இன்றைய சூழலில், கிராமங்களில் இருக்கும் மக்களை அங்கிருந்து பிடுங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த வளர்ச்சி யாருக்கானது?, சொந்தமாக தொழில் செய்து வாழும் மக்களை வேலையற்றவர்களாக நிறுத்தும் இந்த வளர்ச்சியின் பலன்கள் யாருக்கானது?. இதற்காக தன் சொந்த மக்களை தன் நாட்டிற்குள்ளயே அகதியாக்கும் வேலையை இந்த அரசு யாருக்காக செய்கிறது?


“பொருளாதாரத்தில் ஆதிக்கம் உள்ளவர்கள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் அடக்க உருவாக்கிக் கொண்ட கருவிதான் அரசு “ - தோழர் ஏங்கெல்ஸ்தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளால் வளமாக வேண்டிய மக்களின் வாழ்வாதாரத்தையே காவு கேட்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொழுத்த லாபம் ஈட்டும், அரசியல் தரகர்களின் செல்வ செழிப்பைக் கூட்டும் இந்த வளர்ச்சி மக்களுக்கானது இல்லை என்பதே நிதர்சனம்.தோழர்.கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

தரவுகள்

1. http://sanhati.com/excerpted/6693/

2 . http://sanhati.com/articles/3634/

Tuesday, June 4, 2013

சேது சமுத்திர திட்டமும் - கடல் வழி வர்த்தகமும்சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்றால் என்ன‌?

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்திற்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக் நீரிணை என்றும், பாம்ப‌னுக்கு பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள் இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திர திட்டமாகும்(பார்க்க-படம்). 300 மீட்ட‌ர் அக‌ல‌மும், 12.8 மீட்ட‌ர் ஆழ‌‌மும் கொண்ட‌து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த‌ கால்வாய் ஏற்ப‌டுத்தும் ப‌ணி தான் சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டுகின்ற‌து. இந்தியாவின் மேற்கு, கிழ‌க்கு ப‌குதிக‌ள் இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒருங்கிணைக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை மும்பை(மேற்கு), கொச்சின்(தென் மேற்கு) ப‌குதியிலிருந்து ஒரு க‌ப்ப‌ல் சென்னை வ‌ர‌ வேண்டுமெனில் அவை இல‌ங்கை சுற்றிக்கொண்டு தான் வ‌ரும், இனி அது த‌விர்க்க‌ப்ப‌ட்டு இந்த‌ கால்வாயின் மூல‌ம் அவை இந்திய‌ க‌டல் ப‌குதி வ‌ழியாக‌வே சென்று சென்னை, விசாக‌ப்ப‌ட்டின‌ம், பார‌தீப் போன்ற‌ கிழ‌க்கு ப‌குதியில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளை சென்ற‌டையும். உச்ச‌நீதிம‌ன்ற‌ம் இராமேசுவரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் திட்டு பகுதியில் கால்வாய் தோண்டுவ‌தற்கு த‌டை விதித்த‌தின் மூல‌ம் 17-09-2007ல் இந்த ப‌குதியில் கால்வாய் தோண்டும் ப‌ணி நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. பாக் நீரிணையில் கால்வாய் தோண்டும் ப‌ணி இந்த‌ திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்தி வ‌ரும் இந்திய‌ அக‌ழ்வாய்வு நிறுவ‌னத்தினால் (Dredging Company of India) 16-07-2009 அன்று நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.
தோண்ட வேண்டிய மணலின் அளவு = 82.5 Million Cubic Meter(82.5 இலட்சம் மீட்டர்)

இதுவரை தோண்டியுள்ள மணலின் அளவு = 33.99 Million Cubic Meter (33.99 இலட்சம் மீட்டர்) (1)

இதை முழுமையாக‌ முப்ப‌து விழுக்காடு ப‌ணிக‌ள் முடிந்துவிட்ட‌தாக‌ க‌ருத‌முடியாது. தொட‌ர் க‌ட‌ல்நீரோட்ட‌த்தின் கார‌ண‌மாக‌ இந்த‌ ப‌குதியில் 12.8 மீட்ட‌ரில்(தோண்ட‌ப்ப‌ட்ட‌ ஆழ‌ம்) ஒரு குறிப்பிட்ட‌ அள‌வு ம‌ண‌ல் மூடியிருக்கும். 2004ல் இந்த‌ கால்வாய் தோண்டுவ‌த‌ற்கான‌ திட்ட‌ ம‌திப்பு 2,400 கோடிக‌ளாகும், 2010லேயே இது இர‌ண்டு ம‌ட‌ங்காகி விட்டது(2). இன்றைய நிலையில் இந்த திட்டத்தை முடிக்க இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.

இப்பொழுது நாம் சேது சமுத்திர திட்டத்தில் உள்ள சில கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.

சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தினால் இந்தியாவிற்கு என்ன‌ ப‌ய‌ன்?

இந்தியாவிற்கு ஒரு புதிய‌ க‌ட‌ல்வ‌ழி கிடைக்கும். இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் இனி இலங்கையை சுற்றி செல்லும் நிலை மாறி மேற்கு ப‌குதிக்கும், கிழ‌க்கு ப‌குதிக்கும் இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் நேராக‌வே செல்லும்.


சேது சமுத்திர திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சியடையுமா?

இந்தியாவின் மேற்கிலிருந்து, கிழ‌க்கு (உதாரணம் -மும்பையிலிருந்து கல்கத்தாவிற்கு) ம‌ற்றும் கிழ‌க்கிலிருந்து மேற்கு (உதாரணம் -க‌ல்க‌த்தாவிலிருந்து - மும்பைக்கு) ந‌டைபெறும் க‌ட‌ல் வ‌ழி வர்த்தகம் கொழும்பு மூல‌மாக‌வே ந‌டைபெற்று வ‌ருகின்ற‌து. இந்நிலை மாறி இனி இந்த‌ க‌ட‌ல்வ‌ழி வர்த்தக‌‌ம் தூத்துக்குடி துறைமுக‌ம் மூல‌மாக‌ ந‌டைபெறும், அத‌ற்காக‌ தூத்துக்குடி துறைமுக‌த்தில் ஒரு இடைநிற் மையம் (Trans-shipment Hub) ஒன்றை உருவாக்க‌ வேண்டும். அவ்வாறான‌ ஒரு புதிய‌ இடைநிற் மையம் உருவாக்க‌வில்லையெனில் "சேது ச‌முத்திர‌ திட்ட‌ம்" எவ்வித வர்த்தக ப‌ய‌னையும் தூத்துகுடி துறைமுகத்திற்கு த‌ராது. 2004லிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய‌ இடைநிற் மையம் (Trans-shipment Hub) உருவாக்க‌வேண்டும் என்ற‌ கோரிக்கைக்கு இன்னும் ஒப்புத‌ல் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை, அத‌னால் தூத்துக்குடி துறைமுக‌ம் பெரிய வ‌ள‌ர்ச்சிய‌டையாது என்பதே உண்மை. இல்லை இது பொய் என்பவர்கள் இந்த படத்தை பார்க்கவும். ஒரு தெளிவான‌ க‌ட‌ல்வ‌ர்த்த‌க‌ம் அற்ற‌ இந்தியாவில் உள்ள‌, வ‌ரவி‌ருக்கும் க‌ப்ப‌ற்துறைமுக‌ங்க‌ள். உங்க‌ள் வீட்டுக்கு பின்னால் க‌ட‌ல் இருந்து உங்க‌ளுக்கு ஒரு துறைமுக‌ம் வேண்டுமென்றால், அதை உங்க‌ளால் க‌ட்ட‌முடியும் என்றால், நீங்க‌ள் கேட்டாலும் அனும‌தி கொடுக்கும‌ள‌விற்கு தான் உள்ள‌து இந்தியா. அதே நேர‌த்தில் இல‌ங்கையை க‌வ‌னியுங்க‌ள் ஏற்க‌ன‌வே கொழும்பு துறைமுக‌ம் 5 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை (Container)கையாளும் வ‌கையில் இருக்கும் பொழுது அவ‌ர்க‌ள் அடுத்து ஹ‌ம்ப‌ன்தோட்டாவில் 20 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை(Container) கையாளும் வ‌கையில் க‌ட்டி முடிக்கும் நிலையில் உள்ள‌து துறைமுக‌ம். அப்ப‌டியே இந்தியாவில் க‌ட்ட‌ப்ப‌டும் துறைமுக‌ங்க‌ளையும், அவ‌ற்றின் சரக்கு பெட்டகங்க‌ளை கையாளும் திற‌னையும் பாருங்க‌ள். இந்தியாவின் தெளிவற்ற கடற்வர்த்தம் விளங்கும்.
மேலும் சேது கால்வாயில் அதிக‌ப‌ட்ச‌மாக 30,000 DWT (Dead Weight in Tons- ) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். க‌ட‌ல் வ‌ழி போக்குவ‌ர‌த்து செல‌வை குறைக்க‌ எல்லா க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செலவை குறைக்க பெரிய‌ க‌ப்ப‌ல்க‌ளையே ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. 30,000 DWT அதிக‌மான‌ எடை கொண்ட‌ க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ர்த்த‌க‌ம் ந‌டைபெறும் பொழுது அவை முழுதும் கொழும்பு துறைமுக‌ம் வ‌ழியாக‌ ந‌டைபெறும்.


இதுவரை இந்தியாவின் கிழக்கு பகுதி(சென்னை, விசாகப்பட்டினம்,கொல்கத்தா), வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கான ப‌ன்னாட்டு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம் கொழும்பு மூல‌ம் ந‌டைபெற்ற‌து, இது மாறுமா?

முதலில் பன்னாட்டு கடல் வர்த்தகம் பற்றி பார்ப்போம். அத‌ற்கு முன்னால் சில‌ வார்த்தைக‌ளை ப‌ற்றிய அறிமுகத்தையும், அதற்கான விள‌க்க‌த்தை தெரிந்து கொள்ள‌ வேண்டியது அவ‌சிய‌ம்.

சிறிய கப்பல் (Feeder Vessal ) - அதிக‌ப‌ட்ச‌ம் ஆயிரம் சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த‌ க‌ப்ப‌ல்க‌ள் இடைநிற் மையம் (Transit Point) என்ற‌ குறிப்பிட்ட‌ இட‌ம் வ‌ரை ம‌ட்டுமே செல்லும்.
பெரிய கப்பல் (Mother Vessal) - ஆயிரத்திற்கும் அதிகமான‌ சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த கப்பல்கள் இடைநிற் மையத்திலிருந்து (Transit Point) பொருட்கள் செல்ல வேண்டிய துறைமுகம் வரை செல்பவவை.

இடைநிற் மையம் (Trans-shipment Hub) - தொடக்க துறைமுகத்திலிருந்து கிளம்பி வரும் சிறிய கப்பல்க‌ள் இங்கு நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ க‌ப்ப‌ல்க‌ளிலுள்ள‌ சரக்கு பெட்டகங்க‌ள் அங்குள்ள துறைமுகத்தில் இற‌க்க‌ப்ப‌ட்டு பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். மேற்கூறிய‌ நாடுகளுக்கான பன்னாட்டு கடல் வழியில் மொத்தம் இரண்டு இடைநிற் மையங்க‌ள் உள்ள‌ன‌. ஒன்று சிங்க‌ப்பூர், ம‌ற்றொன்று கொழும்பு. சிங்க‌ப்பூர் அமெரிக்கா செல்லும் பொருட்க‌ளுக்கும், கொழும்பு ஐரோப்பிய நாடுக‌ளுக்கு செல்லும் பொருட்க‌ளுக்கான‌ இடைநிற் மையங்க‌ளாக‌வும் உள்ள‌து.

இந்தியா, இலங்கை,வ‌ங்க‌ தேச‌ம், சீனா, ஜ‌ப்பான்,சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட‌ நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக அந்த நாடுகளிலுள்ள துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல்க‌ள் மூலமாக கிளம்பி சிங்கப்பூர் வரை செல்கின்றன. சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் இந்த சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். இந்த கப்பல்கள் அமெரிக்காவில் தாங்கள் சென்று சேர வேண்டிய துறைமுகம் வரை செல்லும். இதுவே ஐரோப்பிய‌ நாடுகளுக்கு செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக கொழும்பு துறைமுகம் வரை வந்து அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்பட்டு தங்கள் இலக்கிற்கான துறைமுகம் வரை செல்லும்.

இதில் இந்தியாவில் உள்ள‌ மும்பை துறைமுக‌ம் போன்ற‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு வில‌க்கு இந்த‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு பெரிய க‌ப்ப‌ல்க‌ளே வ‌ந்து செல்லும். ச‌ரி ஒரு துறைமுக‌ம் பன்னாட்டு துறைமுக‌மாக‌ மாற‌ என்ன‌ வேண்டும்? ஒன்று பெரிய க‌ப்ப‌ல்க‌ள் வ‌ரும‌ள‌விற்கு க‌டலின் த‌ரைத்த‌ள‌ம் ஆழ‌மாக‌ இருக்க‌ வேண்டும் (15 மீட்டருக்கு மேல்). இன்னொன்று அதிக‌ள‌வு சரக்கு பெட்டகங்கள் அந்த‌ துறைமுக‌த்திற்கு வ‌ர‌ வேண்டும்.


இந்தியாவில் மேற்கு பகுதியில் மும்பை த‌விர்த்து கிழ‌க்கிலும், தெற்கிலும் எந்த‌ ஒரு பன்னாட்டு துறைமுக‌மும் இல்லாத‌தால் இந்த‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளிலுருந்து சிறிய‌ க‌ப்ப‌ல்க‌ள் ம‌ட்டுமே வ‌ந்து செல்கின்ற‌ன‌. சென்னையிலும், கொச்சினில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ வள்ளார்படம் துறைமுக‌த்திலும் ஒரு பெரிய கப்பல் ம‌ட்டுமே வ‌ந்து போகின்ற‌து.

சேது கால்வாய் பணி முடிந்தாலும் மேற்சொன்ன‌வையே ந‌ட‌க்கும். அதாவது பன்னாட்டு கடல் வர்த்தகம் கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகவே நிகழும். ஒரே ஒரு மாற்ற‌ம் ம‌ட்டுமே இதில் உண்டு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட தென் கிழக்கு, கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரைக‌ளிலிருந்தும், வ‌ங்க‌தேச‌ க‌ட‌ற்க‌ரையிலிருந்தும் கிள‌ம்பும் க‌ப்ப‌ல்கள் இல‌ங்கையின் கிழ‌க்கு ப‌குதியை சுற்றி கொழும்பு செல்லாம‌ல் தூத்துக்குடி க‌ட‌ல் வ‌ழியாக‌ கொழும்பு செல்லும், இதனால் பயண‌ தூரம் குறையும். அதே ச‌ம‌ய‌ம் மூன்று முக்கிய‌ கார‌ணிக‌ளையும் நாம் க‌ண‌க்கில் கொள்ள‌ வேண்டும்.

1. அதிகபட்சமாக 30,000 DWT (Dead Weight in Tons) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். ஏனென்றால் சேது சமுத்திர கால்வாயின் ஆழ‌ம் 12.8 மீட்ட‌ரே. மேலும் க‌ப்ப‌ல்க‌ள் இந்த‌ கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கு இந்திய‌ அர‌சிற்கு ஒரு குறிப்பிட்ட‌ தொகையை செலுத்த‌ வேண்டும் (தேசிய‌ நெடுஞ்சாலையில் சுங்க‌ வ‌சூல் மைய‌ம் போல)

2.இந்த‌ கால்வாய் ப‌குதியில் அந்த‌ க‌ப்ப‌லின் மாலுமி க‌ப்ப‌லை இய‌க்க‌ கூடாது, இந்த‌ கால்வாய் ப‌குதியின் நீரோட்ட‌ங்க‌ளை அறிந்த‌ ஒரு உள்ளூர் மாலுமி தான் க‌ப்ப‌லை ஓட்ட‌ வேண்டும். இந்த‌ உள்ளூர் மாலுமி ந‌டைமுறைதான் எல்லா துறைமுக‌ங்க‌ளிலும் நடைமுறையில் உள்ளது. ஆக‌வே இந்த‌ உள்ளூர் மாலுமிக்கும் ஒரு குறிப்பிட்ட‌ தொகையை இந்த‌ கால்வாய் வ‌ழி செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் கொடுக்க‌ வேண்டும்.

3.இந்த‌ கால்வாயின் வ‌ழியே ஒரு குறிப்பிட்ட‌ வேக‌த்தில் தான் செல்ல‌ வேண்டும். இலங்கையை சுற்றி கொண்டு செல்லும் போது செல்லும் வேகத்தை விட 30 விழுக்காடு குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.
மேற்கூறிய‌ மூன்றில் முத‌ல் இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளினால் இல‌ங்கையை சுற்றி செல்வ‌த‌ற்கும், சேது கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கும் பெரிய‌ அள‌வில் பொருட் செலவில் வித்தியாச‌ம் இருக்காது என‌ முன்னால் க‌ப்ப‌ற் ப‌டை மாலுமியான‌ பால‌கிருஷ்ண‌ன் கூறியுள்ளர்(3,4,5). மேலும் இவர்‌ பொருட் செலவிற்கான கணக்கீட்டிற்காக‌ சேது கால்வாய் திட்டத்தின் தொடக்க மதிப்பை வைத்திருந்தார். இன்று சேது கால்வாய்‌ திட்ட‌ செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு கூடியுள்ள‌து, அந்த‌ செல‌வை எல்லாம், இந்த‌ கால்வாயில் செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் செலுத்தும் ப‌ண‌த்தின் மூல‌மாக‌வே அடைய‌ வேண்டியிருப்ப‌தால் ஒரு க‌ப்ப‌ல் இந்த‌ கால்வாயில் செல்லுவ‌த‌ற்காக‌ இந்திய‌ அர‌சிற்கு செலுத்த‌ வேண்டிய‌ தொகை அவ‌ர் க‌ண‌க்கிட்ட‌தை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிகமாக‌ இருக்கும். மேலும் சேது கால்வாய் வழியாக செல்வதால் பயண நேரத்திலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது, குறைந்த‌ வேகமும், உள்ளூர் மாலுமியை ஏற்றி, இற‌க்குவ‌த‌ற்கான‌ நேர‌மும் ப‌ய‌ண‌ நேரத்தை வெகுவாக‌ பாதிக்கின்ற‌ன‌.


இதை க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ண‌க்கில் கொண்டு பார்க்கும் பொழுது அவ‌ர்க‌ள் இல‌ங்கையை சுற்றிக் கொண்டு கொழும்பு செல்வார்க‌ளே த‌விர‌ சேது கால்வாய் வ‌ழியாக‌ அல்ல‌ என்றே அறிய‌ முடிகின்ற‌து. மேலும் தொட‌ர்ச்சியான‌ க‌ட‌ல் நீரோட்ட‌த்தினால் கொண்டு வ‌ந்த‌ கொட்ட‌ப்ப‌டும் ம‌ண‌லை வெளியேற்ற‌ தொடர்ந்து பராமரிப்பு தேவையும் இந்த கால்வாய்க்கு உள்ளது (பொதுவாக எல்லா கடல் கால்வாய்களுக்கும் இந்த பராமரிப்பு தேவை உண்டு) இந்த பராமரிப்புக்குக்காக தூரெடுப்பு(De-Silting) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்ய வேண்டும். பெரிய‌ அள‌வு வ‌ருவாயே இல்லாம‌ல் ந‌ட்ட‌த்தில் இய‌ங்க‌ப்போகும் ஒரு கால்வாய்க்கு இது மேலும் பொருள் ந‌ட்ட‌த்தையே ஏற்ப‌டுத்தும். இத‌னால் சேது சமுத்திர‌ திட்ட‌ம் பொருளாதார‌ ரீதியாக‌ இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் ஒரு திட்ட‌மே.


தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் வ‌ள‌ம் பெருகுமா ? சூழிய‌லுக்கு என்ன‌ பாதிப்பு ?

சேது சமுத்திரம் திட்டம் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளரும், இதனால் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் கூறினாலும், உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. நாம் முன்னரே பார்த்தது போல தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது அதிகபட்சமாக 10 விழுக்காடு அளவிற்கு சரக்கு பெட்டகப் போக்குவ‌ர‌த்து அதிக‌ரிக்கும். அதே நேர‌த்தில் தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளின் பெரும் ப‌குதி வருவாய் மீன‌வ‌ர்க‌ள் மூலமாக‌ வ‌ருப‌வையே. சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு க‌ப்ப‌ல்க‌ள் அவ்வ‌ழியாக‌ செல்ல‌த் தொட‌ங்கினால் முத‌லில் அந்த‌ ப‌குதியில் மீன்பிடிப்ப‌து சில‌ வ‌ரைமுறைக‌ளுக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டும். அதாவ‌து க‌ப்ப‌ல்க‌ள் போக்குவ‌ர‌த்தினால் மீன‌வ‌ர்க‌ள் சில‌ குறிப்பிட்ட‌ தூர‌ம் வ‌ரை ம‌ட்டுமே சென்று மீன் பிடிக்க‌ நிர்ப்ப‌ந்திக்க‌ப்ப‌டுவார்கள்.
சேது கால்வாய் தோண்ட‌ப்ப‌டும் பாக் நீரிணை ப‌குதியில் 54 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கு 12.8 மீட்டர் ஆழத்திற்கு ம‌ண‌ல் தோண்ட‌ வேண்டும். இவ்வாறு தோண்ட‌ப்ப‌டும் ம‌ண‌ல் மீத‌முள்ள‌ க‌ட‌ல் ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் நாக‌ப்ப‌ட்டின‌த்தில் இருந்து இராமேஸ்வ‌ர‌ம் வ‌ரையிலான‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ நுண்ணுயிரிக‌ள் முத‌லில் இற‌க்கும், உணவு ச‌ங்கிலியில் முத‌ல் க‌ண்ணியாக இருக்கும் நுண்ணுயிரிக‌ளின் இற‌ப்பு க‌ட‌லின் உண‌வு ச‌ங்கிலி ச‌ம‌த்துவ‌த்தை கெடுத்து கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ ம‌ற்ற‌ க‌ட‌ல் வாழ் உயிரினங்கள் இற‌ப்ப‌த‌ற்கு வ‌ழி ச‌மைக்கும். அடுத்து இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரையுள்ள‌ ம‌ண‌ல் திட்டுக‌ளை ஒட்டியே ம‌ன்னார் வளைகுடா ப‌குதி உள்ள‌து. இந்த‌ ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியான‌து அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், ப‌வ‌ள‌ப்பாறைகளும்(இது ஒரு‌ க‌ட‌ல் தாவ‌ரம்) இருக்க‌க்கூடிய‌ ஒரு ப‌குதி.இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளே அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், மீன்க‌ளும் இந்த‌ ப‌குதியில் இருக்க‌க்கார‌ண‌ம். இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ள் சூரிய‌ ஒளியின் மூல‌ம் வாழ்ப‌வை. சேது கால்வாய் திட்ட‌த்தில் வ‌ரும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக்க‌ளுக்கு அடியில் சுண்ணாம்பு பாறைக‌ள் உள்ள‌ன‌. இந்த‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌மாக‌வே கால்வாய்க்கான‌ வ‌ழிய‌மைக்க‌ முடியும். இந்த‌ திட்ட‌த்தின் அக‌ல‌ம் 300 மீட்ட‌ர்க‌ளே என்றாலும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக‌ளுக்கு கீழே வ‌லுவாக‌ அமைந்துள்ள‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌ம் ஏற்ப‌டும் க‌ல‌ங்கள் த‌ன்மை (Turbidity)என்பது அருகிலுள்ள‌ ம‌ன்னார் வ‌ளைகுடாவையும், அங்குள்ள‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளையும் வெகுவாக‌ப் பாதிக்கும். இத‌னால் அத‌னை சார்ந்து வாழும் எல்லா அரிய வ‌கை உயிரின‌ங்க‌ளையும், மீன்வ‌ள‌த்தையும் பாதிக்கும். அதும‌ட்டுமின்றி வெடி வைத்து ப‌ல நூற்றாண்டு கால‌மாக‌ இருக்கும் சுண்ணாம்பு பாறைக‌ளை அக‌ற்றுவ‌து என்ப‌து ம‌ன்னார் வ‌ளைகுடாவின் அடித்த‌ள‌த்தை வெகுவாக‌ பாதிக்கும்.


கால்வாய் தோண்டுவ‌தினால் ஏற்ப‌டும் சூழ‌ல் பாதிப்பினாலும், தொட‌ர் க‌ப்ப‌ல் போக்குவ‌ர‌த்தினாலும் (மேற்கு - கிழ‌க்கு , கிழ‌க்கு- மேற்கு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம்) நாக‌ப்ப‌ட்டின‌ம் முத‌ற்கொண்டு தூத்துக்குடி வ‌ரையிலான‌ மீன்வ‌ள‌ம் அழிவ‌தால், இத‌ன் மூல‌ம் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ அழியும் நிலை ஏற்ப‌டும். இதை மன்மோகன் சிங் அமைத்த அறிவியலாளர் பச்சூரி தலைமையிலான குழு தெளிவாக தனது அறிக்கையில் சொல்லியுள்ளது. வழமை போலவே இந்த அறிக்கையை அரசு பரணில் எறித்து விட்டது.(6,7,8,9) தென் மாவ‌ட்ட‌ம் வ‌ள‌மாவ‌த‌ற்கு ப‌திலாக‌ அழியும் நிலைதான் ஏற்ப‌டும், த‌மிழ‌க‌த்தில் க‌ட‌ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளாக‌ இருக்கும் க‌டும் மின்வெட்டால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ தொழிற்வ‌ளைய‌ங்க‌ளில் உள்ள‌ தொழிற்சாலைக‌ள் மூடும் நிலையில் உள்ள‌ன‌. இந்த‌ நிலையில் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் அழிவ‌தால் ஒட்டுமொத்த‌மாக‌ தென் மாவ‌ட்ட‌ம் பாதிக்க‌ப்ப‌டும்.


இந்த‌ திட்ட‌த்தின் இப்போதைய‌ நிலை என்ன‌? த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ளின் இந்த‌ திட்ட‌த்தை ப‌ற்றிய‌ நிலை என்ன‌?

இந்த‌ திட்டத்திற்கு 2007ல் உச்ச‌நீதிம‌ன்றம் இடைக்கால‌ த‌டை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த‌ ஆண்டு ஜெ தலைமையிலான த‌மிழ‌க‌ அர‌சு சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தை நிறுத்த‌க்கோரி ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌து(10). மதமாற்ற தடை சட்டம் போன்ற‌வை மூலம் ஜெய‌ல‌லிதாவின் இந்துத்துவ‌ பாச‌ம் எல்லோருக்குமே வெளிப்ப‌டையாக‌ தெரிந்த‌து தான். அதே போல‌ இங்கும் இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரை உள்ள‌ ம‌ண‌ல் திட்டை இந்துக‌ள் இராம‌ர் பால‌ம் என்று புராண கதைகளை ஆதாரமாகக் கொண்டு மூடநம்பிக்கை (இதை ஆதாம் பாலம் என்றும் சிலர் நம்புகின்றனர்) கொண்டிருப்பதே இந்த‌ திட்ட‌த்தை இப்பொழுது ஜெ கைவிட‌ சொல்ல‌க்காரணம், அதை வெளிப்ப‌டையாக‌ சொல்லாம‌ல் மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்தையும், சூழ‌லையும் கார‌ணமாக‌ காட்டியுள்ளார். கூட‌ங்குள‌த்தில் சூழ‌லையும், மீன‌வ‌ர்க‌ளையும் எப்ப‌டி ஜெய‌ல‌லிதா காத்துவ‌ருகின்றார் என்ப‌து நாம் அறியாத‌த‌ல்ல‌... தி.மு.க‌ இந்த‌ திட்ட‌த்தை ஆத‌ரிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம் இது த‌மிழ‌னின் 150 ஆண்டு கால‌ க‌ன‌வு என்று கூறி வந்தாலும், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சேது கால்வாய் வழி செல்லக்கூடிய சிறிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு முத‌லாளிகளாக‌ இருப்பதும் ஒரு காரணம்.

மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்திற்கும், சூழ‌லுக்கும் பேர‌ழிவையும், பொருளாதார‌ அள‌வில் எந்த‌ ஒரு ப‌ய‌னும் அற்ற‌ சேது கால்வாய்த்‌ திட்டத்தை ஒட்டுமொத்த‌மாக‌ கைவிட‌ வேண்டும் என்பதே இதுவே சனநாயக சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

நன்றி - ஆர்.ஆர்.சிறீனிவாசன், இராகேஷ், விஜய்.

நற்றமிழன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

தரவுகள்:

1) http://sethusamudram.gov.in/projectstatus/status.htm
2) http://www.business-standard.com/article/economy-policy/shipping-ministry-to-double-cost-estimates-of-sethusamudram-project-110010500015_1.html
3) http://sethusamudram.info/content/view/62/30/
4) http://timesofindia.indiatimes.com/home/opinion/sa-aiyar/swaminomics/150-year-dream-for-150-year-old-ships/articleshow/2393766.cms?
5) http://sethusamudram.info/content/view/50/30/
6) http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2285503/Pachauri-committee-punctures-holes-government-claims-controversial-Sethusamudram-canal-project.html
7) http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/pachauri-warns-of-ecological-consequences-on-sethusamudram/article4591153.ece
8) http://sethusamudram.info/content/view/36/27/
9) http://sethusamudram.info/content/view/30/27/
10) http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-plea-to-scrap-sethusamudram-project/article4667030.ece

Monday, June 3, 2013

நான்கு பேரின் ந‌லனுக்காக‌ ஒரு ஊரையே ப‌லிகொடுக்க‌லாம் - உச்ச நீதிம‌ன்ற‌ம்மின்சாரமில்லாமல் மனிதன் இயங்கமுடியா இன்றைய நிலையில், தமிழகம் மட்டும் "மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி?" என்ற கட்டாய கல்வியைப் பயின்று வருகின்றது. தெற்காசிய நாடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை வகுத்துள்ள இந்தியா, தன்னளவில் மின்பாற்றாக்குறையுடனே உள்ளது. அதே போன்ற சரியான திட்டமிடல் இல்லாத மத்திய அரசினால் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அண்டை மாநிலங்களிடம் பங்கிட்டு கொடுக்கப்பட்டு‌ தமிழ்நாடு 30 விழுக்காடு மின்பாற்றக்குறையுடன் உள்ளது; ஆனால், தமிழகத்திற்குள் மின்சாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது - ஆம், ஒரு நாளுக்கு 14 மணிநேரத்திற்கு மேல் உலவினால் கைது! இரவில் எல்லோரும் உறங்கும் போது, உலவ தடை! எப்போது கைதாவார், எப்போது விடுதலை ஆவார் என்பதை அறியாதவராய், பாவம் இந்த மின்சாரம். இவ்வாறாக வேடிக்கையாய் போன மின்சாரம், சிறு குறு தொழில்களையும், நிலத்தடி நீர் சார் விவசாயிகளையும், அவர்களின் குடும்பங்களையும் பொருளாதார புழுக்கத்தில் தள்ளி, அவர்களது கனவுகளுக்கான வழியை இருளால் அடைத்துள்ள‌து. அதே ச‌ம‌ய‌ம், ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், உள்நாட்டு பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ளுக்கும், வணிக கேளிக்கையாக நடத்தப்படும் IPL -க்கும் தடையில்லா மின்சாரம்.

இந்த மின்நெருக்கடி சூழலில், மின்பற்றாகுறையை சீர்செய்ய தொலைநோக்கு திட்டம் வகுக்காத தமிழக அரசு, மத்திய அரசின் அணுசக்தி கொள்கைக்கு இரையானது. கூடங்குளம் அணுஉலை மிகவும் மேப்பட்ட முறையில் அமைக்கபட்டது, என அரசு விளம்பரம் செய்த நிலையில், அந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில், "உபகரணங்கள் பழுது; அதனால் கசிவு" என மத்திய அமைச்சர் அம்பலமாக்கியதும், இதை திறப்பதில் ஏற்படும் கால தாமதமும், அணு உலையில் பல தொழில்நுட்ப கோளாறும் இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. zio-podolsk என்ற ரஷ்ய நிறுவனம், கூடங்குளம் அணுஉலைக்கு உபகரணங்கள் வழங்கியதும், மேலும் அந்நிறுவனத்தின் அதிகாரி, ஊழல் மற்றும் தரமற்ற உபகரணங்கள் விநியோகம் செய்த குற்றத்திற்காக, பெப்ரவரி மாதம், 2012ல் கைதாகிய தகவலும், அணுஉலையின் பாதுகாப்பற்ற தன்மையை மேலும் வலுப்படுத்தியது. புகுசிமா அணு உலை பேரழிவிற்கு பின்னர் இந்திய அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் அமைத்த 17 விதிகளை கூடங்குளத்தில் கட்டப்படும் 1,2 அணு உலைகளில் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்பப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தொடுத்திருந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேற்கூறிய 17 விதிகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே அணு உலையில் எரிபொருளை நிரப்ப அனுமதிக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பில் எந்த வித சமர‌சமும் செய்யக்கூடாது போன்ற கோரிக்கைகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வைத்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம், நீதி செய்த முறையோ விநோதமானது...

"பெருவாரியான மக்களின் நலனுக்காக, ஒரு சிறிய கூட்டம் தியாகம் செய்யலாம்", என தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது , ஹிட்லரின் போதனையான, "ஜெர்மானிய மக்களின் நலனுக்காக, யூதர்களை கொல்வது தவறில்லை"என்பதை தான் நினைவூட்டுகிறது. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் அணு உலையின் மூலம் மின்சாரம் என்பது "ஒரு சிறிய கூட்டத்தின் நலனுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை பலிகொடுப்பதே". எனவே இது பெருவாரியான மக்களின் பிரச்சனை; அணு உலையால் உருவாகும் கதிரியக்கம் அதை சுற்றி வாழும் மக்களை மெல்ல, மெல்ல கொல்லும். அதே போல் அணு கழிவு என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அழியா அணுகுண்டுகளை, நமக்காக ஆங்காங்கே புதைத்து கொள்ளும் ஒரு உயர் தொழில்நுட்பமாகும். தெரு குப்பைகளையும், கழிவு நீர் கால்வாய்களையும் பராமரிக்க இயலாத அரசு நிர்வாகம், அணு கழிவைப் பாதுகாக்கும் இடத்தைக் கூடத் தெரிவு செய்யாமல் நாங்கள் அணுக்கழிவை முறையாக பராமரிப்போம் என்பது நகைமுரணேயாகும். இதுவரை கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.6 இலட்சம் கோடி, ஏன் அணு சக்தி தான் மின்பற்றாகுறைக்கான ஒரே தீர்வு என அரசுகளும், அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும், சில விஞ்ஞானிகளும் பிரச்சாரம் செய்கின்றார்கள் என்பதற்கு பதில் இங்கே தான் உள்ளது.
"தடையில்லா வளர்ச்சியையும், வாழ்வுரிமையையும் சமப்படுத்த அணு உலை அவசியம் ஆகும்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறுகின்றது. அணு சக்தி கொள்கை வளர்ச்சிக்கானது என்ற அடிப்படை எண்ணத்திலேயே இந்த வழக்கு அணுகபட்டுள்ளது. இயற்கையாக நிகழும் பரிணாமம்(கூர்ப்புக் கொள்கை) கூட எப்போதும் வளர்ச்சியை நோக்கி பயணித்ததும் இல்லை. உதாரணமாக, 'டோடோ' என்பது மொரிசியஸ் தீவில் வாழ்ந்த ஒரு பறவையின் பெயராகும். தீவில் தன்னை வேட்டையாட எந்த உயிரினமும், பல நூற்றாண்டுகளளாக, இல்லாத சூழலில், பரிணாம மாற்றத்தில் தனது பறக்கும் திறனை இழந்தது. இதன் விளைவாக, 16ஆம் நூற்றாண்டில் குடியேறிய மக்களுக்கு, 'டோடோ'வை வேட்டையாடுவது எளிதானது. 17ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாக இந்த பறவையினம் அழிந்தது. பரிணாமம் என்ற இயற்கை மாற்றமே, என்றும் வளர்ச்சியை நோக்கி பயணிக்காத நிலையில், அணுசக்தி என்ற செயற்கையான முன்னெடுப்புகள், வளர்ச்சிக்கானது என முடிவுக்கு வருவது, பாதுகாப்பான முறையில் மின்சாரத்தை பெறுவதையும், அதில் ஆய்வு மேற்கொள்வதையும் தடை செய்து(டோடோ பறக்கும் தன்மையை இழந்தது போல), பல அணுஉலைகளை சுமந்து கொண்டு, அதன் கதிர் இயக்கத்தால் வேட்டையாடப்படும் நிலைக்கு ஆளாவோம்.கருவறை நுழைந்து கதிர் இயக்கும்,

கருவின் அவயம் வளர்ச்சி அறுக்கும்

அணு உலைகளை மறுப்போம்.

பாதுகாப்பான முறையில் மின்சாரம் பெற தொடர்ந்து போராடுவோம்.

ஏர்வளவன்
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)