Tuesday, November 13, 2012

ட்விட்டர் கைதுகள் !… தூண்டும் விவாதங்கள் !

மூன்று வாரங்களுக்கு முன்பு, திரைப்படப் பின்னணி பாடகி சின்மயி ட்விட்டர் என்கிற சமூக வலைத்தளத்தினூடாக தன்னையும், தன் தாயையும் பற்றி தரக்குறைவான ஆபாச கருத்துக்களைச் சிலர் பரப்பிவருவதாகவும், தன்னுடைய படங்களை ஆபாசமாக்கி வெளியிட்டிருப்பதாகவும், தொலைபேசியில் சிலர் மிரட்டிவருவதாகவும் கூறி சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுத்து இருவரைக் கைது செய்தது காவல்துறை(தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர்).

ட்விட்டர், ஃபேஸ்புக்(முகநூல்) போன்ற சமூக இணையதளங்களில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக எழுதிப் பரப்புவது கடந்த பத்தாண்டுகளில் மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு கருவி. கைபேசி தொழில்நுட்பத்தின் அண்மை கால வளர்ச்சியால், குறைந்த விலையில் கைகளுக்குள் அடங்கும் ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால், இந்த ஊடகங்களின் வழியாக 'அதிகார மையங்களுக்கு' எதிராக எந்த சாமானியனும் தனது கருத்தைப் பதிவு செய்ய முடிகிறது.இணையத்தில் இயங்கும் பெரும்பாலோர் வீதிக்கு வந்து போராடுவதில்லை என்ற கருத்து உண்மையாக இருந்தாலும், இணைய வழியாகப் பாயும் எதிர்க்குரல், ஆளும் மற்றும் அதிகார வர்க்கங்களையும் ஏற்கெனவே இங்கு பொதுமக்களின் ஊடகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களையும் கூட திகைக்கவைக்கின்றது.

இத்தகைய பின்னணியில்தான், சின்மயி பிரச்சினையையும் அணுகவேண்டியுள்ளது. சின்மயிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் அவதூறுகளையும் தனது புகாரில் அவர் தெரவித்துள்ள மற்ற குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட நபர்களின் பொதுவான வசவுகள்(சிலசமயம் இவை கீழ்த்தரமான வார்த்தைகளாகவும் வெளிப்பட்டுள்ளது) உதாரணமாகக் காட்டப்படுகிறது. இந்த நிலையில் கைது நடவடிக்கை உடனடியாக,அதுவும் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஊடகங்க‌ள் 'செக்ஸ் டார்ச்சர்' என்றும் 'ஆபாச படங்கள் வெளியிட்டவர்கள்'என்றும் அவசர அவசரமாகச் செய்தி வெளியிடுகின்றன. பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த மாநகர ஆணையர், 'ஏற்கெனவே இதுமாதிரி 19 வழக்குகள் உள்ளன' என்று கூறியுள்ள நிலையில் இந்த வழக்கை மட்டும் முன்னிலைப்படுத்தியுள்ள நோக்கம் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது. ''பிரபலம், மேலும் முதலமைச்சரைக் கூட நேரில் சென்று சந்திக்கும் நிலையில் இருப்பவர் என்கிற காரணங்களுக்காக'' எனில், பிரபலங்களுக்கு மட்டுமேயான அரசு-காவல்துறை என்று எளிதில் கடந்துவிட்டுப் போய்விடலாம்.

ஆனால் அதையும் தாண்டி, சமூக வலைத்தளங்களில் இருக்கும் கட்டற்ற சுதந்திரத்தையும், அதிகார மையங்களுக்கெதிரான அறைகூவலையும் அதன் குரல்வளையிலேயே நசுக்குவதற்கான முதல்படியாக இது இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.இங்கிருக்கும் அதிகார மையங்கள் சில சாதியினரின் பிடிகளுக்குள்ளேயே இன்னமும் இருக்கின்றன என்பதையும் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது.

''நாட்டை ஆள்பவரைப் பொறுத்தே காவல்துறையின் செயல்பாடுகள் அமையும்'' என்று சமீபத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். 19 பேரின் புகார் மீது நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் 20-வது நபரின் புகார் மீது மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கு இந்த அரச மையத்தின் தன்மையை விளக்குகிறது. சாதாரண மக்களின் புகார்கள் குப்பைத்தொட்டிக்குப் போகவைக்கும் அரசு எந்திரங்களின் செயல்பாடுகள் நமக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும்,குறிப்பான இந்த நடவடிக்கை, சமூக வலைத்தளங்களின் தற்போதைய இயங்குதன்மையைக் குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

இனி வரும் காலங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கப்போகின்றது. அரசுகளின் தவறாக கொள்கைகள் மற்றும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் போக்குகளையும், கேள்விக்கு உள்ளாக்கும் நபர்களும் விமர்சிக்கும் நபர்களும் அதிகரிக்கப்போகின்றார்கள். இவர்களையெல்லாம் ஒருவிதமான கட்டுப்பாட்டுக்குள்ளும் குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளும் மட்டுமே கருத்துகளை எழுத வைப்பதற்கான ஒரு ஆயுதமாகவே, 'ஆபாசம்-அவதூறு' என்கிற முகமூடியுடன் இந்த வழக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி, சின்மயி விசயத்தில் நடவடிக்கை என்பது ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துகளையும் கூட 'ஆபாசம்' என்கிற குறிப்பான வகைக்குள் பொதுமைப்படுத்தி, அரச எந்திரம் இப்பிரச்சினையில் காட்டும் தீவிரத்தின் உள்நோக்கத்தை மறைத்துக்கொள்கிறதாகவே இருக்கிறது.

இவ்விசயத்தில் வெகுமக்கள் ஊடகங்களான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தங்களது ஒருபக்கச் சார்புடைய செய்திகளை வெளியிட்டு, ஒருவகையில் அதிகாரத்திற்கும் பிரபலங்களுக்குமான தமது சார்புநிலைகளையும், வளர்ந்துவரும் தனிமனிதப் பங்களிப்பு அதிகம் இருக்கிற, சமூக ஊடகங்களின் மீதான வெறுப்புணர்வையும் ஒருங்கே காட்டிக்கொள்கின்றன. அதுமட்டுமின்றி 'இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தாரின் விவரங்களையும் வெளியிட்ட இதே ஊடகங்களிடம் நாளை அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களிடம் மன்னிப்பு கோரும் நேர்மை இருக்கின்றதா?' என்று கேட்டால்'இல்லை' என்ற பதிலே கிடைக்க வாய்ப்புள்ளது. இது போன்று இன்னும் பல நிகழ்வுகளில் நாம் இத்தகைய மெத்தனப் போக்கைக்காண முடியும். மேலும், இந்த‌ ஊட‌க‌ங்களின் செய‌ல்பாடுகளில் திரை, அர‌சிய‌ல், விளையாட்டு வீர‌ர்க‌ளை முக்கிய‌ப்ப‌டுத்தி த‌னி ந‌ப‌ர் வ‌ழிபாடுக‌ளை உருவாக்கும் போக்கும், வணிக நோக்கோடு செய்திகளை வெளியிட்டு மக்களை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பி ஒரு மாய உலகத்தில் வைத்திருக்கும் போக்குமே காண‌ப்ப‌டுகின்ற‌து. 'சமூக‌ வ‌லைத‌ள‌ங்க‌ளில் ஆபாச‌மாக‌ எழுதுகின்ற‌ன‌ர்' என்று குற்ற‌ம் சாட்டும் எல்லா ஊட‌க‌ங்க‌ளுமே ஆபாச‌ குப்பைகளையே பெரும்பாலும் செய்திகள் என‌ வெளியிட்டு வ‌ருகின்ற‌ன‌. இந்த‌ ஊட‌க‌ங்க‌ளும் த‌ங்க‌ள‌து த‌வ‌றுக‌ளுக்கு வ‌ருந்தி மக்களின் உண்மையான பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சரியான வழியில் பயணிக்க‌ வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இந்த வழக்கு மற்றும் அது தொடர்பான கைதுகளை, ''பிரபலங்கள், ஊடகங்களின் அத்துமீறல், தனிநபர் ஒழுக்கப் பிரச்சினை''களையெல்லாம் தாண்டி, அதிகார மையங்களுக்கெதிரான சாமானியர்களின் சமகால, எதிர்காலக் குரல்களை அச்சுறுத்தும் ஒரு முன்னோட்ட நடவடிக்கையாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இதே போன்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளித்துள்ள 'இணையத்தில் அவதூறு' புகாரின் அடிப்படையில் நிகழ்ந்தப்பட்டுள்ளமற்றுமொறு கைது, இதனை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வாருங்கள் மேலும் விவாதிப்போம் - கருத்துக்களை முடக்க வரும் எதிர்ப்புகளைச் சமாளிப்போம்!

நாள்: 17 நவம்பர் 2012 , சனிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : பி.எட். அரங்கு, இலயோலா கல்லூரி , சென்னை

Saturday, September 8, 2012

அணு உலை முற்றுகை போராட்ட அழைப்பு


பத்திரிகைச் செய்தி
செப்டம்பர் 7, 2012
 
தமிழருக்காய் உழைக்கும் கட்சிகள், இயக்கங்கள்
தயவு செய்து உடனே வருக! ஒன்றாய்க் கூடுக!! தமிழரைக் காத்திடுக!!!
 
உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த எங்கள் மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில், மென்முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் எங்களுக்கு எதிராக நின்றாலும், பல அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, தோள் கொடுத்து நிற்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை, இன்றைய நிலையில் தமிழக அரசியல் களம் “ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு” என்று பிளவுபட்டுக் கிடக்கிறது.
 
இந்திய தேசிய காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற அன்னிய நாடுகளின் பொருளாதாரங்களைத் தூக்கி நிறுத்தவும், அவர்களின் பன்னாட்டு நிறுவனங்ளுக்கு லாபம் உருவாக்கிக் கொடுக்கவும் துடியாய் துடிக்கின்றனர். சில்லறை வணிகத்தில் கூட அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்து, இந்திய மக்களை தெருவுக்கு இழுத்து வரத் திட்டமிடுகின்றனர். நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாய் மத்திய அரசு மக்களை வதைத்து வருகிறது.
 
சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். எனும் இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் எங்களை உழைக்கும் மக்களாகவோ, உதவப்பட வேண்டியவர்களாகவோ கருதவில்லை. ஜைத்தாப்பூர் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் இவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கிறார்கள். பழைய கால ரஷ்ய காதல் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே அவர்கள் நெஞ்சில் இருக்கிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்குப் பிறகுதான் இவர்கள் அணு மின்சாரம் பற்றியேப் பேசத்துவங்கி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையின் முழு பரிணாமத்தையும் புரிந்து, இவர்கள் தங்கள் நிலையை மாற்றுவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகள் கூட ஆகலாம்.
 
தி.மு.க. திரு. மு. க. அவர்களின் குடும்பக் கட்சியாக மாறிவிட்ட நிலையில், அவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது, கூடாது. வீண் பேச்சுக்களால், வெறும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று நம்பிக்கொண்டு உண்ணாவிரதம், செம்மொழி மாநாடு, டெசோ மாநாடு என்று நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஆளும் அ.தி.மு.க.வோ தமிழக மக்களுக்காகக் குரல் கொடுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே, தன் சுயநலத்திற்காக தமிழ் மக்களை உபயோகிக்க முனைகிறது. இந்திய அணுமின் நிலையங்களில் உற்பத்தி விகிதம் வெறும் 40 சதவிகிதமாக இருக்கும் நிலையில்,கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்ஆனாலும் தமிழக முதல்வர் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்குக் கேட்டு பிரதமருக்கு திரும்பத் திரும்ப கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி தரக் கூடாதுஅந்நாட்டு விளையாட்டு வீரர்கள் இங்கே வந்து விளையாடக் கூடாது என்றெல்லாம் முடிவுகள் எடுக்கும் தமிழக அரசுஇங்குள்ளத் தமிழர் நலனையும்நமது இயற்கை வளங்களையும்எதிர்காலத்தையும் பேணிக் காப்பது பற்றி ஏனோ மவுனம் சாதிக்கிறது.
 
தமிழினத்தின் இயற்கை வளங்கள், மலைகள், காடுகள், ஆறுகள், கடல் வளம் என அனைத்தும் தனியாரால், அரசியல்வாதிகளால், அதிகாரிகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களிலிருந்து வெளிவரும் கழிவுகளால், வெப்ப நீரால் மீன்வளம் அழிந்து, மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து கேள்விக்குறியாகி, பெருத்த கதிர்வீச்சு ஆபத்தால் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வு அழிந்துவிடும் நிலை விரைவில் ஏற்படும். அதே போல, தமிழக விளைநிலங்கள் வீட்டு நிலங்களாக்கப்பட்டு நில வணிகத் தரகர்களாலும், அரசுகளாலும் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும்  நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாக ஓர் அண்மை ஆய்வு தெரிவிக்கிறது. தமிழினம் தனது இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றனவே, கொல்லப்படுகின்றனவே, எதிர்காலம் இருண்டு கிடக்கிறதே என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது.
 
இந்த இழிநிலைக்கு காரணமான “ஆபத்தான ஆறு” கட்சிகளை தமிழ் மக்கள் இனம்கண்டு கொண்டனர். ஆனாலும் இந்த “ஆபத்தான ஆறு” பேரும் தமிழ் மக்களை ஆட்டுவிப்பதற்கு காரணம் நமக்கு “ஆதரவான நூறு” பேரும் பிரிந்து கிடப்பதுதான்.
 
இந்த நிலையில் சாதாரண தமிழ் மக்களாகிய நாங்கள் “ஆதரவான நூறு” கட்சிகளின், இயக்கங்களின் தலைவர்களிடம் ஓர் அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். தங்கள் கருத்து வேறுபாடுகளை, மனமாச்சரியங்களை சற்றே மாற்றி வைத்து விட்டு, தமிழ் மக்களுக்காக, நமது இயற்கை வளங்களைக் காப்பாற்றிட, நமது எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.
 
எங்கள் உணர்வுகளைப் புறந்தள்ளி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருளை நிரப்பக் கூடாதுஇந்தத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்து கூடங்குளம் பகுதி மக்களாகிய நாங்கள் செப்டம்பர் 9–ம் நாள்ஞாயிற்றுக் கிழமை எங்கள் ஊர்களை விட்டு  வெளியேறி சத்தியாகிரகப் போராட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறோம். எங்களைப் போன்றே தமிழினமும் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக, ஏதிலியாக, அனாதையாக, ஆதரவற்று நடுத் தெருவில் நிற்கிறது.
 
வரலாறு வழங்குகிற இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி “ஆதரவான நூறு” கட்சிகளும், இயக்கங்களும் ஒன்று சேர்ந்து தமிழினத்துக்காக எழுந்து நின்று போராட  அன்போடுக் கேட்டுக் கொள்கிறோம். நாம் விரைவில் எதிர்கொள்ளவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்படி ஒன்றாக நின்று, தொகுதி ஒப்பந்தம் செய்து கொண்டு, போட்டியிட்டால் “ஆபத்தான ஆறு” பேரை ஓரங்கட்டிவிட்டு, ஒரு புதிய துவக்கத்தை நம் இனத்திற்கு நாம் வழங்க முடியும்.
 
இந்த நிலையிலும் உங்கள் பிடிவாதத்தால் கைகோர்க்காமல் போனால், “ஆபத்தான ஆறு” பேரும் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் மக்களுக்கு எதிராக இயங்குவார்கள், நம் இனத்தை தொடர்ந்து அழிப்பார்கள். அந்த தீராப் பழியை நாம் அனைவரும் சேர்ந்து சுமக்க வேண்டி வரும். எதிர்கால தமிழ் சந்ததியினரின் சாபத்துக்கு நாம் ஆளாக நேரிடும்.
 
எனவே “ஆதரவான நூறு” பேரும் உடனடியாக எங்களைக் காக்க ஓடோடி இடிந்தகரை வரவேண்டும், அனைவரும் கைகோர்த்து இயங்க வேண்டும், இங்கிருந்து ஒரு புதிய துவக்கத்தை தமிழகத்துக்குத் தர  வேண்டும், தமிழினத்தை பேரழிவின் பிடியிலிருந்து காக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
 
போராட்டக்குழு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Sunday, August 26, 2012

ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்: நினைவுக் கூட்டம்



  மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் உருவாக்கம் பெரும் முதன்மைத்துவம் வாய்ந்தது. மரபணுக்களில் (டி.என்.ஏ) மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த வாழ்வதற்கான அறிவு, மொழியின் மூலமும் எழுத்தின் மூலமும் புதியதொரு வடிவம் பெற்றது. மனித சமூகத்தின் வளர்ச்சியில் எழுத்தின் பங்கும், மொழியின் பங்கும் மகத்தானது. கால மாற்றத்தில் 'எழுதுகோலின் முனை வாள்முனையை விட கூர்மையானது' என்ற நிலை ஏற்பட்டது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியைப் பெரும் பாய்ச்சல்களில்  கொண்டு சென்றன இலக்கிய மற்றும் விஞ்ஞான நூற்கள். ஆனால் காலப்போக்கில் பல்வேறு மொழிகள் தோன்றியும் அழிந்தும் போயின. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்  வழுவள கால வகையின நானே' என்ற நன்னூல் கூற்றுக்கேற்ப,   எவ்வளவு பழமை மிக்க செறிவு கொண்ட மொழியாயினும், காலத்துக்கேற்றவாறு தம்மை தகவமைத்துக் கொள்ளாமல் இருப்பவை அழிந்து போயின, போகின்றன. மொழியுடன் சேர்ந்து அதனூடாக வளர்க்கப்பட்ட மரபார்ந்த அறிவும், கலாச்சாரமும், வரலாறும் அழிந்து போகின்றன.

'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு'.

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பல்வேறு மாற்றங்களை செரித்து ஆயிரமாண்டுகளாக மக்களின் மொழியாக மக்களுடன் பீடு நடை போட்டு வரும் தமிழ் மொழி, கணினி எனும் உலகை ஆளும் அசுர இயந்திரத்திற்குள்ளும் தன்னைப் பொருத்தி கொள்வதன் மூலமே இனி வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்க முடியும்.



-------------------------

'மறைவாக பழங்கதைகள் நமக்குள்ளே சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்' என்று பாரதி கூறியது போல,

தமிழ் மொழியின் வளத்தையும், செழுமையையும் இணையத்தில் ஏற்றி அதன் வளர்ச்சிக்கு அளப்பரியப் பங்கை ஆற்றியிருக்கிறார் திரு. ஆண்டோ பீட்டர். இதற்கு மகுடஞ் சேர்த்தாற் போல அவர் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டதோடு சேர்த்து தமிழ் மக்கள் மீதும் பற்று கொண்டவராக இருந்தார்.  தகவல்தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் இத்தகையதோர் ஆளுமை ஆற்றிய பணிகளுக்காக  இந்த நினைவுக் கூட்டத்தின் மூலமாக நன்றி செலுத்துகிறோம்.அவரது பணிகளை நினைவுகூறவும்  போற்றவும் விவாதிக்கவும் விழைகிறோம். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரு. ஆண்டோ பீட்டர் அவர்களது நினைவுகளையும் பணிகளையும் பகிர்ந்து கொள்ள தங்களை அழைக்கிறோம்.

                                                      நினைவுக் கூட்டம்

 02 செப்டம்பர், ஞாயிற்றுக் கிழமை | மாலை 5 மணி | லாரன்சு சுந்தரம் அரங்கு, இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்.

             Save Tamils Movement | 98844 68039 | www.save-tamils.org







Friday, August 17, 2012

இடிந்த கரை - பற்ற வைத்த நெருப்பும் கடந்து வந்த பாதையும்


ஒன்று கூடுவார்கள் ! முழக்கமிடுவார்கள் ! பின் கலைந்து சென்று விடுவார்கள் என்று அரசும், அதிகார வர்க்கமும் எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது ? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா ? செய்தார்கள். அந்நிய‌ சக்திகளிடமிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்று ஊடகங்கள் முழுதும் நஞ்சைக் கக்கினார்கள். போராடும் மக்களில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள். முடிந்தது வேலை.ஆகவே பரப்புங்கள் !கிறிஸ்துவ மிஷினரியின் சதி என. பரப்பினார்கள்.எளிய மக்களை கடித்துக் குதற‌ இந்துத்துவ நரிகளை அவிழ்த்து விட்டார்கள். அப்போதும் அம்மக்கள் காயத்தோடு களத்தில் நின்றார்கள்.

ஒரு போதும் அவர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதி மக்களிடமிருந்து ஆதரவோ அனுதாபமோ கிடைத்து விடக்கூடாது. அந்நியப்படுத்துங்கள் ! எப்படியேனும் தனிமைப்படுத்துங்கள் அவர்களை. இம்முறை "தேசத்துரோகி" என்ற பட்டம். நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள் என்ற முத்திரை. நக்சலைட்டுகளோடு தொடர்பு என குதித்தார்கள்.கிடைத்தது தீவிரவாத முத்திரை. அப்போதும் அக்கூட்டம் சிதறி ஓடவில்லை. லத்தியடிகளுக்கோ துப்பாக்கிகளுக்கோ பயந்த கூட்டமா அது. ஊடகங்களோ ஒரு படி மேலே சென்று அந்த‌ மக்கள் சமூகத்தையே "போராட்டக்காரர்களாக" சுருக்கினார்கள். பட்டி தொட்டிகளிலும் சந்து பொந்துகளிலும் எங்கு மின்சாரம் தடைபட்டாலும், அந்த உதயகுமார அடிங்கடா ! என்று டீக்கடை முதல் ஐ.டி நிறுவனங்கள் வரை மின் தடையால் கொந்தளித்து போயிருந்த ஒரு சமூகத்தை பேச வைத்தார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள் அம்மக்கள். எதிர்கொள்ள வேண்டிய‌ கட்டாயமிருந்தது அவர்களிடம்.எப்படியேனும் இந்த அணு உலையை மூடியாக வேண்டும். இல்லையேல் கூண்டோடு மரணத்தை தழுவியாக வேண்டும். ஏனெனில் தப்பியோடுவதற்கு அவர்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எமக்கான கல்லறைகளை எழுப்பி விட்டு அணு உலைகளை கட்டுங்கள் என்றுரைத்தவாறு, தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இம்மியளவு கூட பின்வாங்காமல் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கடலோர மக்கள்.




கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வெதிர்ப்பு தொடங்கி விட்டது, அணு உலை ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு, மீண்டும் அணு உலை கட்டத்தொடங்கிய பொழுது எதிர்ப்பு போராட்டமும் வளர்ச்சியடைந்து மிகப்பெரிய‌ மக்கள் திரள் போராட்டமாக எழுச்சி பெற்றது கடந்த ஆண்டின் இதே தேதியில் தான். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அழுத்தமான முத்திரையை பதிவு செய்து கொண்டிருக்கும் அம்மக்கள் சென்ற‌ ஓராண்டில் கடந்து வந்த பாதை, ஒரு சராசரி மனிதனின் மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நெஞ்சுரம் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது.144 தடை உத்தரவு, இராணுவ முற்றுகை, பொய்ப்பிரச்சாரம் ,வழக்குகள், சிறை வாசம்,தொடர்ச்சியான மன உளைச்சல் எதுவாக இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம் என்பது தான் அவர்களின் அசைக்க முடியாத கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.

அந்நிய நாட்டின் சதி. போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேள்வியெழுப்பியவர்கள் அக்குற்றத்தை நிருபீத்தார்களா ? போராட்டக்குழு தங்கள் போராட்டச் செலவீனங்களையும் கணக்குகளையும் வெளிப்படையாக பொதுவெளியில் சமர்ப்பித்தார்களே! அதை ஏன் இந்த அரசும் ஊடகங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பணம் கொடுத்ததாக கூறி, அரசு செலவில் விமானம் ஏற்றி அனுப்பப்பட்ட ஜெர்மானியர் ஹெர்மனை ஏன் விசாரிக்காமல் அனுப்பினார்கள் ? அவர் பேசினால் ஆளும் இந்திய அரசின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தானே? நக்சலைட்டுகளோடு தொடர்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்களே ? அச்செய்தியெல்லாம் இப்போது எங்கே ? முடிந்தவரை போராட்டத்தை ஒடுக்கியாகி விட்டது ஆகவே இப்போது அந்த பொய்ப் பிரச்சாரம் தேவைப்படாது என்ற காரணம் தானே ? பொதுக்கருத்துக்கு எதிராக பேசினால் ஓட்டுகளைப் பொறுக்க முடியாது என்று வாய் திறக்காத ஓட்டுப்பொறுக்கி அரசியல் நரிகள் இன்று வரை மெளனிகளாகவே நீடிக்கின்றனரே? கூடன்குளம் அடையாள அரசியல் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார்களோ ? அரசு, ஊடகங்களின் அளவில்லா குற்றச்சாட்டுகளும், பொய் வழக்குகளும், போலிப் பரப்புரைகளும் இப்போது என்ன ஆனது ? அணு உலை திறந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே. எத்தனை ஆயிரம் மெகாவாட் இதுவரை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அணு உலையிலிருந்து.





எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்க முடியும். அரசின் எல்லா புளுகு மூட்டைகளும் அவிழ்ந்து இப்போது அர‌சும், அணு உலை ஆத‌ர‌வாள‌ர்க‌ளும் தங்கள் உடலை ம‌றைக்க‌ ஏதுமின்றி முச்சந்தியில் நிற்கின்றனர்.

மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலை திறக்கப்படாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த "உங்களில் ஒருத்தி" ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த அடுத்த நாளே அணு உலை திறக்கப்படும் என அறிவிக்கின்றார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் தமிழக அரசு நியமித்த விஞ்ஞானிகள்(!) குழு கடைசி வரை போராடும் மக்களை சந்திக்கவேயில்லை.மக்களின் அச்சமும் இன்று வரை தீர்க்கப்படவேயில்லை. மேலும் அம்மக்களை அமைதிபடுத்த‌‌ பல கோடி லஞ்சத்திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.




அந்நிய நிதி,வெளிநாட்டு சதி போன்ற புனைகதைகள் எடுபடாமல் போகவே பத்து மணி நேர செயற்கை மின்வெட்டை மாநில முழுவதும் ஏற்படுத்தி, அணு உலை திறப்பதற்கான ஆதரவுக்கருத்தை மக்களிடையே உருவாக்கிய அரசு, மின்வெட்டின் மீதான‌ கோபத்தை போராடும் மக்களின் மீது சூழ்ச்சிகரமாக திசை திருப்பியது. அமைதியாக போராடும் மக்களை முப்படை முற்றுகை,காவல் துறை அடக்குமுறையின் மூலம் தனிமைப்படுத்தி, பால் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட தடை செய்தது. மேலும் இலங்கையில் நடைபெறும் வெள்ளைவேன் கடத்தல் போலவே தமிழக அரசு தோழர்.முகிலன்,வன்னி அரசு,சதீசை கடத்தி கைது செய்த‌து. எல்லா அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியாக எதிர்த்து நின்றனர் அம்மக்கள்.



சர்வதேச அணுசக்தி முகமையின் விதிப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தாமல் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியாது. ஆனால் ஆனால் கடந்த ஜூன் 9 அன்று அணு உலை அருகே சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம் , பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை.அணு உலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நக்கநேரியில் கண்ணில் தென்பட்ட மக்களிடம் கதீர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை சாப்பிடுமாறு மட்டும் அறிவுரை வழங்கி விட்டு அணு உலை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் சென்று விட்டனர். அதாவது புற்றுநோய் போகவேண்டுமென்றால் முகத்திற்கு தினமும் பவுடர் அடிக்கவேண்டும் என்ற ரீதியிலேயே "பேரிடர் மேலாண்மை பயிற்சியை" நடத்தியுள்ளார்கள்.

அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் விபத்து நடந்தால் காப்பீடு வழங்க முடியாது என்ற ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றிய ஒரு ஆபத்தான தகவல் அம்பலமாகியிருக்கிறது. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் செய்து கொண்ட‌ ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன.ஆனால் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த வடிவமைப்பை மாற்றுவதற்கும் சாத்தியமில்லை.ஆக வடிவமைப்பிலும் கோளாறு, காப்பீடும் கிடையாது என்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் அணு உலை இயக்கப்பட்டு வருகிறது.


அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் வளமும், செல்வமும் கொழிக்கும் என்று கொண்டாடிய அரசுகள், சென்ற வாரம் அணுசக்தி தலைவர் கூறிய "மூன்று மாதங்களுக்கு பிறகும் 300 மெகாவாட் தான் தயாரிக்க முடியும்" உண்மையை தெளிவு படுத்த வேண்டும். அணுசக்தி தலைவரின் வாக்குறுதிகள் இவ்வாறிருக்க, மத்திய அமைச்சர் நாராயணசாமி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் "அணு உலை இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தியை தொடங்கும்" என்று சொல்லும்படி பழக்கப் பட்டிருக்கின்றார். அணு உலை இல்லையேல் மின்சாரம் இல்லை என்ற பொய்ப்பிரச்சாரம் இன்று காற்றாலை மின் உற்பத்தியால் தவிடு பொடியாகியிருக்கிறது. காற்றாலையிலிருந்து அதிக மின்சாரம் வருகின்றது அதை எடுத்துச்செல்ல போதிய வசதிகள் இல்லாததால் காற்றாலைகளை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வையுங்கள் என்று அறிவுரை வழங்கியது தமிழக மின்வாரியம். இதன் மூலம் அணு மின்சாரம் ஒன்றே மாற்று என்ற தவறான கருத்தியல் அம்பலமாகியிருக்கிறது. மாற்றுவழிகளிலும் மின்சாரம் கிடைக்கும் என்ற உண்மை சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது.


போராடும் மக்களை இந்திய அரசு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்த ஒவ்வொரு நாளும் ஆளும் மத்திய மாநில‌ அரசுகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே எப்படி ஒரு போராட்ட வடிவமாக வெற்றி பெற முடியும் என சந்தேகித்த மற்ற புரட்சியாளர்கள் கூட புருவம் உயர்த்தும் வண்ணம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய‌ போராட்ட உத்திகளை தொடர்ந்து கையிலெடுத்து அவர்கள் நடத்தி வருகின்றனர்..உண்ணாவிரதம் மட்டுமே அவர்களின் போராட்ட வழிமுறை இல்லை. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.

சாதாரண மக்களால் என்ன சாதித்து விட முடியும் என்று வாதிட்டவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை வாய் திறக்காத இந்திய அணு சக்திக் கழகத்தை, தன்னளவிலான நிலைப்பாட்டை எடுத்துரைக்குமளவுக்கு இறங்கி வர வைத்தவர்கள் அவ்வெளிய‌ மக்கள். சிறு வன்முறையைக் கூட கையிலெடுக்காது அறத்தை கடுகளவும் மதிக்காத‌ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் குறியீடாக எழுந்து நிற்கும் அணு உலையின் தீங்குகளை இன்று உலகிற்கே கற்பித்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் இடிந்தகரை மக்களை கவனத்தோடு கற்று வருகின்றார்கள். அவர்கள் பற்ற வைத்த இந்நெருப்பு இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் முளைக்கின்றனவோ அங்கெல்லாம் எழுச்சி மிக்க போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமையப் போகிறது. உலகின் கடைசி அணு உலை மூடப்படும் வரை இப்போராட்டங்கள் ஓயப்போவதில்லை.


                           ம‌க்க‌ள் போராட்ட‌ங்க‌ள் ஓங்குக‌.....



Tuesday, August 14, 2012

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்



இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.



சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.






ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.






அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.





ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டது.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம்.


மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.








புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.








முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.





















**********************






Saturday, August 4, 2012

இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்இடிந்தகரை 627 104


பத்திரிகைச் செய்திஆகஸ்ட் 2, 2012



     இழப்பீடு வழங்க மறுக்கும் ரஷ்யாவும், ஏதுமறியாத பிரதமரும்



கூடங்குளத்தில் தாங்கள் நிறுவியிருக்கும் அணு உலைகளில் விபத்துக்களோ, வேறு பாதிப்புக்களோ ஏற்பட்டால், தமது நாட்டு நிறுவனங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது; நட்ட ஈடு எதுவும் வழங்க மாட்டோம் என்று ரஷ்ய அரசு துவக்கம் முதலே வாதிட்டு வருகிறது. பாரத பிரதமர் திடீரென விழித்துக் கொண்டவர்போல, ரஷ்யாவுக்கு இப்படிப்பட்ட சலுகை கொடுத்தால், அமெரிக்கர்களும், பிரெஞ்சு நாட்டவரும் கேட்பார்கள், எனவே அந்த சலுகையை தரமுடியாது என்று முதல் முறையாக பேசியிருக்கிறார்.

இந்திய அரசு நிறுவனமான நியுகிளியர் பவர் கார்பரேஷனும், கூடங்குளத்திற்கு அணு உலை விநியோகிக்கும் ரஷ்ய நிறுவனமான ஆட்டம்ஸ்ட்ரோய் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனமும் 2010-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. ரஷ்ய கம்பெனி நிறுவுகின்ற உலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த கம்பெனியிடமிருந்து நட்ட ஈடு கோருவோம் என இந்திய அரசு வாதித்தது. ஆனால் 2008-ம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தில் அப்படி எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று காரணம் காட்டி ரஷ்யா நட்ட ஈடு தர மறுக்கிறது.

2008-ம் ஆண்டு ஒப்பந்தம் பிரிவு 13 அணு உலை கட்டும்போதோ அல்லது இயங்கும்போதோ நிகழும் அனைத்து விபத்துகளுக்கும், நட்டங்களுக்கும் இந்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் முழுப் பொறுப்பு ஏற்பதாக தெரிவிக்கிறது. இந்திய அரசு இரகசியமாக, தான்தோன்றித்தனமாக இந்த மக்கள் விரோத ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின்படி மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தினால், மாசு ஏற்படுத்துபவரே நட்ட ஈடு வழங்கவேண்டும். 1963-ம் ஆண்டின் வியன்னா அணு விபத்து உரிமையியல் பொறுப்படைவு சட்டத்தின்படியும் அணு உலைகள் தயாரித்து விற்கின்ற கம்பெனி நட்டங்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்துகிறது.

நம் நாட்டு சட்டங்களுக்கு எதிராக நமது அரசே இரகசிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதையும், அனைத்துலக விதிகளுக்கு எதிராக ரஷ்ய அரசு செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

போபால் விடவாயு முதன்மைக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் தப்பியோட உதவி செய்துவிட்டு, 26 ஆண்டுகள் கழித்து முக்கியமற்ற எட்டு பேரைப் பிடித்து இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து, அன்று மாலையே அவர்களை ஜாமீனில் விட்டது இந்திய அரசு. இன்றும் இதே மனப்போக்குடன் இந்திய அரசு செயல்படுவதை சுட்டிக்காட்டி அதனைத் தட்டிகேட்கிறோம்.

“தரமற்ற அணு உலை வியாபாரத்தால் வரும் லாபமெல்லாம் எங்களுக்கு, அதனால் வரும் பாதிப்பு, நட்டமெல்லாம் உங்களுக்கு” என்று பொறுப்பற்ற முறையில் செயல்படும் ரஷ்ய அரசினை கடுமையாக எதிர்க்கிறோம்.

இந்திய மக்களின், தமிழர்களின் உயிருக்கு விலையுமில்லை, மதிப்புமில்லை என்று எண்ணும் அமெரிக்க, ரஷ்ய, பிரெஞ்சு அரசுகளையும், கம்பெனிகளையும் உறுதியுடன் நிந்திக்கிறோம். இந்த இனவெறி சித்தாந்தத்திற்கு உறுதுணையாக செயல்படும் இந்திய அரசின் துரோகத்தை வன்மையாகச் சாடுகிறோம்.

இன்றைக்கு எதுமறியாதவர்போல பிரதமர் நட்ட ஈடு பற்றி பேசுவது நடிப்பா, அல்லது கூடங்குளம் அணு உலைகள் 3, 4-க்கும் முன்பு போலவே சலுகைகள் கொடுப்பதற்கான ஒத்திகையா, அல்லது கூடங்குளம் அணு உலைகள் “ஊத்திக்கிச்சு” என்பது தெரிந்து நடத்தும் கபட நாடகமா – தெரியவில்லை.

இந்திய மக்களே, தமிழர்களே, விழித்துக்கொள்ளுங்கள். இல்லையேல், போபால் மக்களின் கதிதான் உங்களுக்கும்.

போராட்டக்குழு

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Thursday, August 2, 2012

ஆகஸ்ட் 6 - ஹிரோஷிமா தினம்



அணுமின் நிலையம் இல்லாத, அணு ஆயுதங்கள் அற்ற தமிழகம்                     படைப்போம்!______________________________________________________________________________

அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களே!


வணக்கம். 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் நாள் அமெரிக்கா ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா எனும் நகரின் மீது முதல் அணு குண்டை வீசியது. சுமார் 80,000 மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள்; லட்சக்கணக்கான மக்கள் கதிர்வீச்சுக்கு ஆளாகி இன்னும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி எனும் நகரின் மீது அடுத்த அணு குண்டு வீசப்பட்டது. அங்கும் இதே சாவு, சங்கடம், சந்ததிகள் அழிப்பு என ஜப்பான் நாடே சரிந்து விழுந்தது.

போன வருடம் மார்ச் மாதம் 11-ம் நாள் ஃபுகுஷிமா எனும் நகரிலுள்ள அணுமின் நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து அபாயகரமான கதிர்வீச்சை உமிழ்ந்தன. முப்பது கி.மீ. தூரத்தில் உள்ள மக்கள் இடப்பெயற்சி செய்யப்பட்டார்கள். கட்டுக்கோப்பான, கடமை உணர்வு மிக்க, அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்த ஜப்பான் நாட்டு மக்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர், அவதிப் பட்டுகொண்டிருக்கின்றனர். இதே துயரங்களை நாமும், நமது குழந்தைகளும் அனுபவிக்க வேண்டுமா?

ஜப்பான், ஜெர்மனி போன்று மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்கலாமே? கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் நமது தமிழ் மண்ணுக்கு, நீருக்கு, காற்றுக்கு, கடலுக்கு, கடல் உணவுக்கு, நமது எதிர்கால சந்ததிகளுக்கு பெரும் கேடாக வந்து முடியும்.

[1] நாமெல்லாம் ஒன்றாகப் பயணம் செய்யும் இந்த மிகப் பெரிய விமானமாம் பூமியை அணுகுண்டு, அணுமின் நிலையங்களுடன் கடத்த முனையும் தீவிரவாதிகளை ஏன் கண்டிக்கவில்லை நீங்கள்?

[2] கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைகள் துவங்கி நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. மத்திய அமைச்சர் நாராயணசுவாமி இரண்டு மாதங்களில் வருகிறது, பத்தே நாட்களில் வந்துவிடும் எனப் பல முறை சொல்லிவிட்டார். இவரை நம்பி முதல்வரும் ஒரு முறை சொன்னார். என்ன ஆயிற்று? ஏன் எதுவும் வரவில்லை? வந்தாலும், நமது மின் பற்றாக்குறைத் தீராதே?

[3] சிங்கள ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது, ஹஜ் பயணத்தில் தமிழர்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், தமிழ் மீனவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் குரல் கொடுக்கும் தமிழக முதல்வர்,நம் எதிர்காலத் தமிழ் சந்ததிகளை அழிக்க வரும் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை தமிழ் மண்ணில் அனுமதிப்பதேன்?

[4] ஈழத் தமிழர் நலன் காக்க டெசோ மாநாடு நடத்தும் தி.மு.க.வும் அதன் தலைவரும், இங்குள்ளத் தமிழர் நலன் காக்கத் தவறியது ஏன்? கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை ஆதரிப்பது ஏன்?

[5] அரசு நலத்திட்டங்களின் அடிப்படையில், கூடங்குளம், செட்டிகுளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை இன்னும் ஓராண்டுக்குள் அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த இருப்பதாகவும், உவரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இருப்பதாகவும் தமிழக அரசு கூறுகிறது. அணுமின் நிலையத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால், இத்தனை மருத்துவமனைகள் எதற்கு?

[6] கூடங்குளம் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களுக்காக தமிழக அரசு திட்டமிட்டப்படி 10,000 வீடுகள் 3 கட்டங்களில் 3ஆண்டுகளுக்குள் கட்டித் தருமாம். அப்படியானால் மக்கள் இடப்பெயர்ச்சி செய்யப்படுவார்களா?

[7] தமிழரை நேசிக்கும் அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும், சமூக இயக்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து அணுமின் நிலையம் இல்லாத, அணு ஆயுதங்கள் அற்ற தமிழகம் படைப்போம்!



                          தமிழர்களே! சிந்திப்பீர்!! செயல்படுவீர்!!!



அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்,


இடிந்தகரை 627 104,  திருநெல்வேலி மாவட்டம்