ஒன்று கூடுவார்கள் ! முழக்கமிடுவார்கள் ! பின் கலைந்து சென்று விடுவார்கள் என்று அரசும், அதிகார வர்க்கமும் எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது ? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா ? செய்தார்கள். அந்நிய சக்திகளிடமிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்று ஊடகங்கள் முழுதும் நஞ்சைக் கக்கினார்கள். போராடும் மக்களில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள். முடிந்தது வேலை.ஆகவே பரப்புங்கள் !கிறிஸ்துவ மிஷினரியின் சதி என. பரப்பினார்கள்.எளிய மக்களை கடித்துக் குதற இந்துத்துவ நரிகளை அவிழ்த்து விட்டார்கள். அப்போதும் அம்மக்கள் காயத்தோடு களத்தில் நின்றார்கள்.
ஒரு போதும் அவர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதி மக்களிடமிருந்து ஆதரவோ அனுதாபமோ கிடைத்து விடக்கூடாது. அந்நியப்படுத்துங்கள் ! எப்படியேனும் தனிமைப்படுத்துங்கள் அவர்களை. இம்முறை "தேசத்துரோகி" என்ற பட்டம். நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள் என்ற முத்திரை. நக்சலைட்டுகளோடு தொடர்பு என குதித்தார்கள்.கிடைத்தது தீவிரவாத முத்திரை. அப்போதும் அக்கூட்டம் சிதறி ஓடவில்லை. லத்தியடிகளுக்கோ துப்பாக்கிகளுக்கோ பயந்த கூட்டமா அது. ஊடகங்களோ ஒரு படி மேலே சென்று அந்த மக்கள் சமூகத்தையே "போராட்டக்காரர்களாக" சுருக்கினார்கள். பட்டி தொட்டிகளிலும் சந்து பொந்துகளிலும் எங்கு மின்சாரம் தடைபட்டாலும், அந்த உதயகுமார அடிங்கடா ! என்று டீக்கடை முதல் ஐ.டி நிறுவனங்கள் வரை மின் தடையால் கொந்தளித்து போயிருந்த ஒரு சமூகத்தை பேச வைத்தார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள் அம்மக்கள். எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமிருந்தது அவர்களிடம்.எப்படியேனும் இந்த அணு உலையை மூடியாக வேண்டும். இல்லையேல் கூண்டோடு மரணத்தை தழுவியாக வேண்டும். ஏனெனில் தப்பியோடுவதற்கு அவர்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எமக்கான கல்லறைகளை எழுப்பி விட்டு அணு உலைகளை கட்டுங்கள் என்றுரைத்தவாறு, தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இம்மியளவு கூட பின்வாங்காமல் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கடலோர மக்கள்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வெதிர்ப்பு தொடங்கி விட்டது, அணு உலை ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு, மீண்டும் அணு உலை கட்டத்தொடங்கிய பொழுது எதிர்ப்பு போராட்டமும் வளர்ச்சியடைந்து மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டமாக எழுச்சி பெற்றது கடந்த ஆண்டின் இதே தேதியில் தான். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அழுத்தமான முத்திரையை பதிவு செய்து கொண்டிருக்கும் அம்மக்கள் சென்ற ஓராண்டில் கடந்து வந்த பாதை, ஒரு சராசரி மனிதனின் மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நெஞ்சுரம் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது.144 தடை உத்தரவு, இராணுவ முற்றுகை, பொய்ப்பிரச்சாரம் ,வழக்குகள், சிறை வாசம்,தொடர்ச்சியான மன உளைச்சல் எதுவாக இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம் என்பது தான் அவர்களின் அசைக்க முடியாத கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.
அந்நிய நாட்டின் சதி. போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேள்வியெழுப்பியவர்கள் அக்குற்றத்தை நிருபீத்தார்களா ? போராட்டக்குழு தங்கள் போராட்டச் செலவீனங்களையும் கணக்குகளையும் வெளிப்படையாக பொதுவெளியில் சமர்ப்பித்தார்களே! அதை ஏன் இந்த அரசும் ஊடகங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பணம் கொடுத்ததாக கூறி, அரசு செலவில் விமானம் ஏற்றி அனுப்பப்பட்ட ஜெர்மானியர் ஹெர்மனை ஏன் விசாரிக்காமல் அனுப்பினார்கள் ? அவர் பேசினால் ஆளும் இந்திய அரசின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தானே? நக்சலைட்டுகளோடு தொடர்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்களே ? அச்செய்தியெல்லாம் இப்போது எங்கே ? முடிந்தவரை போராட்டத்தை ஒடுக்கியாகி விட்டது ஆகவே இப்போது அந்த பொய்ப் பிரச்சாரம் தேவைப்படாது என்ற காரணம் தானே ? பொதுக்கருத்துக்கு எதிராக பேசினால் ஓட்டுகளைப் பொறுக்க முடியாது என்று வாய் திறக்காத ஓட்டுப்பொறுக்கி அரசியல் நரிகள் இன்று வரை மெளனிகளாகவே நீடிக்கின்றனரே? கூடன்குளம் அடையாள அரசியல் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார்களோ ? அரசு, ஊடகங்களின் அளவில்லா குற்றச்சாட்டுகளும், பொய் வழக்குகளும், போலிப் பரப்புரைகளும் இப்போது என்ன ஆனது ? அணு உலை திறந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே. எத்தனை ஆயிரம் மெகாவாட் இதுவரை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அணு உலையிலிருந்து.
எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்க முடியும். அரசின் எல்லா புளுகு மூட்டைகளும் அவிழ்ந்து இப்போது அரசும், அணு உலை ஆதரவாளர்களும் தங்கள் உடலை மறைக்க ஏதுமின்றி முச்சந்தியில் நிற்கின்றனர்.
மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலை திறக்கப்படாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த "உங்களில் ஒருத்தி" ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த அடுத்த நாளே அணு உலை திறக்கப்படும் என அறிவிக்கின்றார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் தமிழக அரசு நியமித்த விஞ்ஞானிகள்(!) குழு கடைசி வரை போராடும் மக்களை சந்திக்கவேயில்லை.மக்களின் அச்சமும் இன்று வரை தீர்க்கப்படவேயில்லை. மேலும் அம்மக்களை அமைதிபடுத்த பல கோடி லஞ்சத்திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.
அந்நிய நிதி,வெளிநாட்டு சதி போன்ற புனைகதைகள் எடுபடாமல் போகவே பத்து மணி நேர செயற்கை மின்வெட்டை மாநில முழுவதும் ஏற்படுத்தி, அணு உலை திறப்பதற்கான ஆதரவுக்கருத்தை மக்களிடையே உருவாக்கிய அரசு, மின்வெட்டின் மீதான கோபத்தை போராடும் மக்களின் மீது சூழ்ச்சிகரமாக திசை திருப்பியது. அமைதியாக போராடும் மக்களை முப்படை முற்றுகை,காவல் துறை அடக்குமுறையின் மூலம் தனிமைப்படுத்தி, பால் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட தடை செய்தது. மேலும் இலங்கையில் நடைபெறும் வெள்ளைவேன் கடத்தல் போலவே தமிழக அரசு தோழர்.முகிலன்,வன்னி அரசு,சதீசை கடத்தி கைது செய்தது. எல்லா அடக்குமுறைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியாக எதிர்த்து நின்றனர் அம்மக்கள்.
சர்வதேச அணுசக்தி முகமையின் விதிப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தாமல் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியாது. ஆனால் ஆனால் கடந்த ஜூன் 9 அன்று அணு உலை அருகே சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம் , பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை.அணு உலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நக்கநேரியில் கண்ணில் தென்பட்ட மக்களிடம் கதீர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை சாப்பிடுமாறு மட்டும் அறிவுரை வழங்கி விட்டு அணு உலை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் சென்று விட்டனர். அதாவது புற்றுநோய் போகவேண்டுமென்றால் முகத்திற்கு தினமும் பவுடர் அடிக்கவேண்டும் என்ற ரீதியிலேயே "பேரிடர் மேலாண்மை பயிற்சியை" நடத்தியுள்ளார்கள்.
அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் விபத்து நடந்தால் காப்பீடு வழங்க முடியாது என்ற ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றிய ஒரு ஆபத்தான தகவல் அம்பலமாகியிருக்கிறது. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன.ஆனால் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த வடிவமைப்பை மாற்றுவதற்கும் சாத்தியமில்லை.ஆக வடிவமைப்பிலும் கோளாறு, காப்பீடும் கிடையாது என்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் அணு உலை இயக்கப்பட்டு வருகிறது.
அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் வளமும், செல்வமும் கொழிக்கும் என்று கொண்டாடிய அரசுகள், சென்ற வாரம் அணுசக்தி தலைவர் கூறிய "மூன்று மாதங்களுக்கு பிறகும் 300 மெகாவாட் தான் தயாரிக்க முடியும்" உண்மையை தெளிவு படுத்த வேண்டும். அணுசக்தி தலைவரின் வாக்குறுதிகள் இவ்வாறிருக்க, மத்திய அமைச்சர் நாராயணசாமி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் "அணு உலை இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தியை தொடங்கும்" என்று சொல்லும்படி பழக்கப் பட்டிருக்கின்றார். அணு உலை இல்லையேல் மின்சாரம் இல்லை என்ற பொய்ப்பிரச்சாரம் இன்று காற்றாலை மின் உற்பத்தியால் தவிடு பொடியாகியிருக்கிறது. காற்றாலையிலிருந்து அதிக மின்சாரம் வருகின்றது அதை எடுத்துச்செல்ல போதிய வசதிகள் இல்லாததால் காற்றாலைகளை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வையுங்கள் என்று அறிவுரை வழங்கியது தமிழக மின்வாரியம். இதன் மூலம் அணு மின்சாரம் ஒன்றே மாற்று என்ற தவறான கருத்தியல் அம்பலமாகியிருக்கிறது. மாற்றுவழிகளிலும் மின்சாரம் கிடைக்கும் என்ற உண்மை சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது.
போராடும் மக்களை இந்திய அரசு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்த ஒவ்வொரு நாளும் ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே எப்படி ஒரு போராட்ட வடிவமாக வெற்றி பெற முடியும் என சந்தேகித்த மற்ற புரட்சியாளர்கள் கூட புருவம் உயர்த்தும் வண்ணம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய போராட்ட உத்திகளை தொடர்ந்து கையிலெடுத்து அவர்கள் நடத்தி வருகின்றனர்..உண்ணாவிரதம் மட்டுமே அவர்களின் போராட்ட வழிமுறை இல்லை. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.
சாதாரண மக்களால் என்ன சாதித்து விட முடியும் என்று வாதிட்டவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை வாய் திறக்காத இந்திய அணு சக்திக் கழகத்தை, தன்னளவிலான நிலைப்பாட்டை எடுத்துரைக்குமளவுக்கு இறங்கி வர வைத்தவர்கள் அவ்வெளிய மக்கள். சிறு வன்முறையைக் கூட கையிலெடுக்காது அறத்தை கடுகளவும் மதிக்காத அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் குறியீடாக எழுந்து நிற்கும் அணு உலையின் தீங்குகளை இன்று உலகிற்கே கற்பித்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் இடிந்தகரை மக்களை கவனத்தோடு கற்று வருகின்றார்கள். அவர்கள் பற்ற வைத்த இந்நெருப்பு இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் முளைக்கின்றனவோ அங்கெல்லாம் எழுச்சி மிக்க போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமையப் போகிறது. உலகின் கடைசி அணு உலை மூடப்படும் வரை இப்போராட்டங்கள் ஓயப்போவதில்லை.
மக்கள் போராட்டங்கள் ஓங்குக.....
No comments:
Post a Comment