Monday, July 28, 2014

இன்றுமுதல் விசை.IN

தோழர்களுக்கு வணக்கம்.

''சேவ் தமிழ்ஸ் இயக்கம்'' என்ற பெயரில் செயல்பட்டுவந்த எமது இயக்கம், கடந்த 13-ம் தேதியிலிருந்து(13 சூலை 2014) 'இளந்தமிழகம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களின் ஒருபகுதியாக எங்களது வலைப்பக்கங்களை புதிய பெயர்களில் புதிய வடிவமைப்புகளில் மாற்றியுள்ளோம். மேலும், இத்தளத்தில் கட்டுரைகளை வெளியிடுவதையும் நிறுத்திக்கொள்கிறோம். இன்றுமுதல் எங்களது கட்டுரைகள் www.visai.in தளத்தில் வெளியிடப்படும். தோழர்கள், 'விசை' தளத்தில் தங்களது ஆதரவுகளைத் தர வேண்டிக்கொள்கிறோம்.

எமது கட்டுரைகளுக்கான இணையதளம்: www.visai.in
எமது இயக்கத்தின் இணையதளம்: www.ilanthamizhagam.com
எமது மின்னஞ்சல் முகவரி: ilanthamizhagam@gmail.com
ட்விட்டர் முகவரி: https://twitter.com/ilanthamizhagam
முகநூல் பக்கம்: https://www.facebook.com/ilanthamizhagam
யூடியூப் முகவரி: https://www.youtube.com/user/ilanthamizhagam


செய்திகளை மின்னஞ்சலில் படிப்பதற்காக இத்தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவுசெய்துள்ளவர்கள் கவனத்திற்கு:
உங்கள் மின்னஞ்சலுக்கு விசை தளத்திலிருந்து, மின்னஞ்சல் மூலம் செய்திகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான புதிய சுட்டிகளை (Links) அனுப்புகிறோம். அவற்றைச் சொடுக்கி, உறுதி செய்துகொள்ளவும். நன்றி.

-இளந்தமிழக இயக்கம் (முன்பு 'சேவ் தமிழ்ஸ் இயக்கம்). 

Friday, July 18, 2014

ஜெயலலிதாவின் புதிய பரிணாம‌ம்.......
2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவிடம்  ஒரு அரசியல் முதிர்ச்சி தெரிந்தது.  முன்பு போல அதிரடியாக தனது சர்வாதிகாரத்தை செயல்படுத்தாமல் அரசியல் சாணாக்கியத்தனத்தோடு செயல்படத்தொடங்கினார்.  அதன் விளைவே அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு..... இன்னும் எல்லாம்,  இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு  ஆதரவான இரு தீர்மானங்களை இயற்றினார். பொது வெளியில் தனது பிம்பத்தை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் நன்கு கற்ற‌றிருந்திருந்தார்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 36 தொகுதிகளில் வெற்றி பெற மேற்கூறியவைக்கும் பங்குண்டு.  இதன் மூலம் ஜெயலலிதா மாறி விட்டாரோ என்று கூட சிலர் எண்ணினர்.   முன்னர் கூறியது ஊடகங்களில் ஜெயலலிதா பற்றி காட்டப்படும் பிம்பம் மட்டுமே...
தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் என்றழைக்கப்படும் வதை முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கிய நேரத்தில் தான் சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம்  இயற்றினார், அதெல்லாம் வெற்றுத் தீர்மானம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்,  அதுமட்டுமின்றி முள்ளிவாய்க்கால் முற்றச்சுவரை இடித்து, தனது சர்வாதிகாரத்தைத் தங்கு தடையின்றி செயல்படுத்தினார். அது போலவே நான்கு தமிழர்களின் விடுதலைக்காக தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது செங்கொடியின் உயிர்த்தியாகம் அந்த போராட்டத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும்  நிலைமை இப்படியே செல்லக்கூடாது அதை தனது கட்டுக்குள் கொண்டுவர அடுத்த நாளே தீர்மானம் இயற்றினார்,  அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பொழுது, அவர்களையெல்லாம் விடுதலை செய்வேன் என்று அறிவிக்கவும் செய்தார், ஆனால் இன்று வரை விடுவிக்காமல் அவர்களை மேலும் ஒரு வழக்குச் சுழலுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.        தமிழகத்தின் மின்தட்டுப்பாட்டை ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் நீக்குவேன் என்றார், மூண்றாண்டுகள் ஆகிய பின்னும் காகிதப்புலியாக வெறும் அறிக்கைகளில் மட்டும் மிந்தட்டுப்பாட்டை ஒழித்திருக்கின்றார்,  மின்சாரமே இல்லாத நிலையில் பொது மக்கள் பயன்படுத்தும்  மின்சாரத்தின் கட்டணம் மட்டும் ஆண்டாண்டுக்கு உயர்ந்தும்,  தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட  பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான கட்டணம் குறைந்தும் வருகின்றது.  இதில் பின்னவர்களுக்கு  மட்டும் மிந்தட்டுப்பாடே இல்லை.   அரசு மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை ஒரு முதலாளியைப் போல  விற்பனை செய்யும் முறையை இந்தியாவிலேயே முதல் முறையாக செய்தார் ஜெயலலிதா.  மோடியை வீழ்த்திய லேடி என்று ஊடகங்கள் இவரை கொண்டாடுவது இதனால் தான், முதலாளித்துவத்தை செயல்படுத்துவதில்,  Vision 2023  போன்று ஒரு திடமான செயல்திட்டத்தை முதலாளிகளுக்காக உருவாக்குவதில் அவருக்கு இணையாக எந்த முதலமைச்சரும் முன் நிற்கமுடியாது.  அதனால் தான் ஊடகங்கள் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.  பால் விலை, பேருந்து கட்டணம் என விலைவாசியை தன் பங்குக்கு உயர்த்தினார் இந்த மிகச்சிறந்த நிர்வாகி.


                       ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் அரச இயந்திரத்தின் கடை நிலை ஊழியர்களை நடுத் தெருவிற்கு கொண்டு செல்வதன் மூலம் தனது அகங்காரத்திற்கு தீனி போட்டுக்கொள்வார்.  கடந்த ஆட்சியில் சாலைப்பணியாளர்களை வேலை விட்டுத்தூக்கி நடுத்தெருவிற்கு கொண்டு வந்தார், இந்த முறை 10,000 மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு நீக்கினார்.  பல போராட்டங்களை அவர்களும் தொடர்ந்து நடத்தி வந்தனர், இறுதியில் பட்டினியால் சிலர் மரணமடைந்தனர் (கொல்லப்பட்டனர் என்பதே சரி).  இன்று இவர்களெல்லாம் கிடைக்கும் ஏதோ ஒரு கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள்.   மாற்றுத்திறனாளிகள்  தாங்கள் முதல்வரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கையளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், ஆனால்  "அம்மா" என தனது தொண்டர்களால் அழைக்கப்படும் அவரால் அதற்கு நேரமில்லை,  அந்த நேரத்தில் அவர் நூற்றாண்டு சினிமா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு தன்னை மற்றவர்கள் புகழுவதை கேட்டு மனமகிழ்ந்து கொண்டிருந்தார்.  பின்னர் போராட்டம் ஒன்றே வழி என முடிவெடுத்து சாலைமறியல் செய்தவர்களை கடுமையாக ஒடுக்கினார்.  காவிரித்தீர்ப்பை அரசிதழில் கொண்டு வந்து "காவிரித்தாய்" ஆனார், ஆனால் ஏனோ காவிரி நீர் மட்டும் தமிழ்நாட்டிற்கு இன்னமும் வரவில்லை.  நிர்வாகப்புயல் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் தான் தமிழகத்தில் கொள்ளை, கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்த இடத்தில் இருந்ததாக சொல்லப்பட்ட‌ தமிழக காவல்துறை இன்று வடிவேலுவின் என்கவுண்டர் ஏகாம்பரம் கதாபாத்திரத்திற்கு நிகராக வந்துள்ளது. கொலை, கொள்ளைகளை தடுக்க இயலாத காவல்துறை முல்லைப்பெரியாறிலும், கெயில் எரிவாயுக்குழாய் எதிர்த்தும், கூடங்குளம் அணு உலையை எதிர்த்தும் போராடும் மக்கள் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் தங்கள் வீரத்தை காட்டிவருகின்றனர்.  சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதே இங்கு கொலை, கொள்ளைகள் அதிகரிக்கக் காரணம்,  "கற்றது தமிழ்" படத்தில் சொல்லப்படுவது போல நீங்க சாப்பிடுற ஒரு வாய் பீசாக்காக, போட்டுறக்க ஷீக்காக,  கண்ணாடிக்காக கொலை செய்யப்படலாம் என்பது இங்கே அதிகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.  சமூக ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சிறந்த நிர்வாகியான ஜெயலலிதா ஆட்சியில் ஏதும் செய்யப்படவில்லை.
                         2011 ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினத்தை அனுசரிக்க கூடிய மக்களை காவல்துறை ஏவி சுட்டுக்கொன்றார், சென்ற ஆண்டு முத்துராமலிங்கம் சிலைக்கு தங்க கவசம் அணிவித்துள்ளார். தர்மபுரியில் மூன்று கிராமங்களை எரித்தவர்கள்,  இளவரசன்-திவ்யா இணையரை பிரித்தவர்களும்,  தினம், தினம் சாதி வெறியை தூண்டி வருபவர்களும் சுதந்திரமான நடமாடிவருகின்றார்கள். ஆனால் இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரிக்க இருந்த மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, இன்று பாதிக்குமதிகமானோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார். சமூக ஒழுங்கை ஜெயலலிதா அவர்கள் இப்படித்தான் கட்டிக்காத்து வருகின்றார். தமிழக அரசு என்பது சாராயம் விற்றுக் கிடைக்கும் பணத்தால் தான் இயங்கிவருகின்றது, பொது மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் இது போன்ற சாராயக் கடைகளை மூடக்கோரி நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன, திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர், தோழர்.பாலபாரதி கலந்து கொண்டார், காவல்துறை அவரையும் கைது செய்தது.  ஒவ்வொரு நாளும் குடிகாரர்களின் எண்ணிக்கையை, குடிக்கும் அளவை உயர்த்தும் ஒப்பற்ற சாதனையைத் தான் இந்த மூண்றாண்டுகளில் ஜெயா செய்துள்ளார்.
         ஜெயலலிதாவின் புதிய பரிணாமம் என்பது "புதிய மொந்தையில் பழைய கள்ளேயன்றி" வேறல்ல.  அவர்  என்றுமே முதலாளிகளின் விசுவாசி, பார்ப்பணீயத்தின் சகோதரி தான்.   கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போல, அடுத்த சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அவரது கண்களில் தெரிகின்றது, அதற்காக அம்மா மருந்தகம் உள்ளிட்ட அடுத்த கட்ட திட்டங்களை அவர் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்.  சரியான மாற்று கட்சிக்காக‌  தமிழகம் காத்திருக்கின்றது.  தினந்தோறும் நடைபெறும் மக்கள் போராட்டங்களே மாற்று. மக்கள் போராட்டங்களுக்கே அரசை, அதிகாரங்களை மாற்றும் வல்லமை உண்டு. மக்கள் போராட்டங்கள் ஓங்குக...


நற்றமிழன்.ப‌

நன்றி: கேலி சித்திர கலைஞர்.பாலா

Thursday, July 17, 2014

நேற்று IBM...இன்று Bally Technologies...நாளை ???தகவல் தொழில்நுட்பத் துறைத் தொழிலாளர்களின் ஒவ்வொரு நாளும் விளையாட்டும், வேடிக்கையுமாகவே இருக்கும் என்று இருக்கும் பிம்பம் மீண்டும் ஒருமுறை சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது. ஆனால்,எந்தவித சத்தமோ, சிறு சலசலப்போகூட இல்லாமல் நடந்தேறியுள்ளது. இந்த முறையும் இது பற்றிய தகவல்கள் எதுவும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களையோ, பொது மக்களையோ எட்டவில்லை, எட்டாதவண்ணம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பேலி டெக்னாலஜீஸ் (Bally Technologies) என்னும் தொழில்நுட்ப நிறுவனம் தன்னுடைய மொத்த பணியாளர்  எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் மேலான ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது. இதற்கும் இந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களுரு கிளைகள் இரண்டையும் சேர்த்து மொத்தம் பணிபுரிபவர்கள் 1300 ஊழியர்கள்தான்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நேரில் கண்ட ஊழியர் ஒருவர் பின்வருமாறு கூறினார்,"எப்போதும் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களின் தளத்திற்குள், சிபிஐ ரெய்டு போல உள்நுழைந்த மனிதவள ஊழியர்கள் அடுத்த ஐந்து நிமிடங்களில் பணிநீக்கம் செய்யப்படவிருக்கும் ஊழியர்களை குற்றவாளிகளைப்  போன்று வெளியில் இழுத்துச் சென்றனர்."பேலி டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "எங்கள் நிறுவனம் நட்டத்தில் இயங்கவில்லை. அண்மையில் நாங்கள் விலைக்கு வாங்கிய ஒரு நிறுவனத்தை உட்கொண்டு வரும் மறுசீரமைப்பின் ஒருபகுதியாகவே ஆட்குறைப்பு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளது.

சென்னை, பெங்களூர் உள்ளிட்ட கிளைகளில் 150 பேரோடு சேர்த்து, உலகம் முழுக்க 270 ஊழியர்களை, அதாவது நிறுவனத்தின் மொத்த மனித வளத்தில் 7 விழுக்காட்டைக் குறைக்கும் நடவடிக்கையினால் சந்தையில் தன் மதிப்பு சரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தனது போட்டி நிறுவனமான SHFL எண்டெர்டைன்மெண்ட்(SHFL Entertainment) என்னும் நிறுவனத்தை அண்மையில் விலைக்கு வாங்கியது பேலி டெக்னாலஜீஸ்.

மென்மேலும் லாபம் சேர்க்க போட்டி நிறுவனத்தை கையகப்படுத்துவதையும், புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதையும் செய்து கொண்டே பணியில் இருந்த 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பேலி டெக்னாலஜீஸ். இப்போது பணிக்கமர்த்தும் புதிய ஊழியர்களை வேறொரு காரணம் காட்டி வெளியே விரட்டமாட்டர்கள் என்று எந்தவொரு உத்திரவாதமும் இல்லை.
பேலி டெக்னாலஜீஸ் மட்டுமல்ல, புதிய ஊழியர்களையும்,கல்லூரி முடித்து வரும் இளம் பட்டதாரிகளையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஒருபக்கம் வேலைக்கு அமர்த்திக் கொண்டே, மறுபுறம் வெவ்வேறு காரணங்களைக் கூறி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள்.

வேலையிழந்த ஊழியர்களுக்காக வருத்தப்படுவதோடு நில்லாமல்,எங்கள் நிறுவனத்தில் அவ்வாறு எல்லாம் இல்லை; எங்கள் நிறுவனம் ஒப்பீட்டளவில் நன்றாகவே நடத்துகிறது என்று நிறுவனப் பெருமை பேசுவதில் இருந்து வெளியில் வந்து தகவல் தொழில் நுட்பத் துறை ஊழியர்களாக ஒருங்கிணைவதன் அவசரமும், அவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வேறொரு நிறுவனத்தில் பணிநீக்கம் செய்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும், என்னுடைய வேலைக்கு பங்கம் வந்தால்தான் கோபப்படுவேன் என்று இருந்தால் நாம் கோபப்பட்டு கொந்தளிக்கும் வேளையில் நமக்காக பேச யாரும் வரமாட்டார்கள் என்பதை ஒருமுறை நாம் மனதில் இருத்தி சிந்திக்க வேண்டும்.

நம்முடைய உரிமைகளை பாதுகாக்கவும், வென்றெடுக்கவும் தகவல் தொழில் நுட்பத் தொழிலாளர்கள் ஒன்றிணைவதின் அவசியத்தை இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நமக்கு அறிவிக்கின்றன என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

கதிரவன்

Wednesday, July 16, 2014

என்ன நடக்கிறது பாலஸ்தீனத்தில்.....


இன்று பாலசுதீனத்தில் என்ன நடக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பு, வரலாற்றைச் சற்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். பின்வரும் இவ்வரைபடம் 2010 வரையிலான பாலசுதீனத்தின் வரலாற்றை விவரிக்கின்றது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டியதை இந்த ஒரு படம் சொல்லிச் செல்கின்றது.இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை(இசுரேல்) பாலசுதீன பூமியை பிழந்து பெறுகின்றார்கள். 1946ல் இசுரேல் உருவானது முதல், இன்று வரை பாலசுதீனம் கொஞ்சம், கொஞ்சமாகச் சூறையாடப்பட்டு இன்று ஜெருசெலமை ஒட்டிய சில நிலப்பரப்புகளும், மேற்கு கரைப்பகுதி மட்டுமே பாலசுதீனமாக உள்ளது. இதில் மேற்கு கரைப் பகுதி முற்றிலுமாக உலகத்தொடர்புகளற்று உள்ளது. சென்ற ஆண்டு மேற்கு கரைப்பகுதிக்கு உணவு கொண்டு வந்த ஒர் ஐரோப்பிய கப்பல், நடுக்கடலிலேயே இசுரேலியர்களினால் தாக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதை உங்களுக்கு நினைவு கூறுகின்றேன். உணவு வழங்கு வந்த தொண்டு நிறுவன கப்பலுக்கே இந்தக் கதி என்றால், அங்கு வாழும் மக்களின் நிலை என்ன என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.


என்ன நடக்கிறது இன்று:

சில வாரங்களுக்கு முன்னர் மேற்கு கரை(காசா) பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போகின்றார்கள், மேற்கு கரைக்குள் நுழைந்து இசுரேலிய படையினர் தேடியதில் மூவரின் உடல்களும் குண்டடிப்பட்ட நிலையில் கிடைக்கின்றன, இதற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதற்கடுத்த நாள் காதீர் என்ற பாலசுதீன இளைஞர் இசுரேலிய வலது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிருடன் கொளுத்தப்படுகின்றார். பின்னர்  காதீரின் 15 வயது சகோதரன் இசுரேலிய காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டுக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின்றான், இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கம் இசுரேலின் மீது ஒர் ஏவுகணைத் தாக்குதலை நடத்துகின்றது, இசுரேல் ஹமாஸ் இயக்கத்தின் மீதான போர் என்ற பெயரில் கடந்த இரண்டு வாரங்களாக தோராயமாக‌ 200 பாலசுதீனர்களைக் கொன்றுள்ளது, கொல்லப்பட்டதில் பெரும்பகுதியினர் சிறு குழந்தைகள். பின்வரும் படத்தில் ஹமாஸ் வீசும் ஏவுகணையும், அதன் பாதிப்பும். இசுரேல் வீசும் ஏவுகணையும் அதன் பாதிப்பும் உள்ளன.உலகின் அதி நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும் இசுரேலின் குண்டுகளுக்கும், ஏவுகணைகளுக்கும் முன்னால், ஹமாஸ் வீசும் ஏவுகணைகள் ஒரு தூசு, மேலும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ஆயிரக்கணக்கில் குவித்து வைத்திருக்கின்றது இசுரேல். இதில் ஹமாஸ் வீசும் ஏவுகணைகள் ஒரு கட்டடித்தின் மீது வீசப்பட்டால் ஒரு சில செங்கல்களைச் சேதப்படுத்தலாம், மேலும் ஹமாஸ் வீசிய ஏவுகணைகள் லேசான சிராய்ப்புக் காயம் மட்டுமே ஏற்படுத்தக்கூடியவை, இதனால் இதுவரை ஒரு யூதர் கூடக் கொல்லப்பட்டதில்லை. ஆனால் இசுரேல் மேற்கு கரை மீது வீசிய குண்டுகள் என்பவை போரில் பயன்படுத்தப்படும் அதிபயங்கரக் குண்டுகள். விழும் இடத்தில் புல் பூண்டுகள் கூட மிஞ்சாது (படத்தைப் பார்க்கவும்) . அது மட்டுமின்றிப் போரில் தடை செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைக் கூடப் பாலசுதீன மக்கள் மீது இசுரேல் அனுதினம் வீசி வருகின்றது. பாஸ்பரஸ் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடைய வேதி பொருள், இந்தப் பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்படும் இடம் முழுவதும் தீப்பற்றிக்கொள்ளும் இதனால், அந்தப் பகுதியில் இருக்கும் அனைவரும் தீயில் கருகி எரிந்து விடுவார்கள். இந்தக் குண்டுகளை ஐ.நா வாகனங்கள் மீதும், பாலசுதீனப் பள்ளிக்கூடங்கள் மீதும் பலமுறை வீசியுள்ளது இசுரேல்...இனப்படுகொலை:

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஹிட்லரால் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டவர்கள் யூதர்கள், இதைச் சித்தரிக்கும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்தத் திரைப்படங்கள் வந்த காலங்கட்டங்களில் யூதர்கள் பாலசுதீனர்கள் மீதான இனப்படுகொலையைத் தங்களது அரசு மூலம் நடத்தத் தொடங்கிவிட்டனர். ஒர் இனப்படுகொலைக்குள்ளான ஒரு சமூகம் எப்படி இன்னொரு சமூகத்தை இனப்படுகொலை செய்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும். இசுரேலின் அனுதினத் தாக்குதல்களுக்கு நடுவே பாலசுதீனர்கள் உயிர் வாழ்வதே ஒரு போராட்டம் தான். இக்கட்டுரையில் முதல் வரைபடத்தில் ஒவ்வொரு ஆண்டும் இசுரேல் பாலசுதீனப் பகுதியை விழுங்கி வளர்ந்தது கண்கூடாகத் தெரியும், இதை எதிர்த்து போராடிய பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பாலசுதீன கைதிகளைச் சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்துகின்றது இசுரேல் ஆராய்ச்சித் துறை, அதுமட்டுமின்றிப் பாலசுதீன கைதிகளின் உடல் உறுப்புகளை இசுரேல் திருடியும் வருகின்றது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது நூறு பேராவது கொல்லப்பட்டு வருகின்றனர். தங்களைக் காத்துக் கொள்ளக் காவல்துறை கூட இல்லாத பாலசுதீனியர்களின் மீது போர் புரிகின்றோம் என இசுரேல் கூறுவதும், நாங்கள் பாலசுதீனியர்களை இனப்படுகொலை செய்கின்றோம், செய்வோம் என்பதும் வேறு வேறல்ல....உலக நாடுகளும் ஊடகங்களும்:

இன்றைய உலக ஒழுங்கு என்பது 90க்குப் பின் மாறியதாகத் தோற்றம் கொண்டிருந்தாலும், இன்றும் அமெரிக்காவைச் சுற்றியே இயங்கி வருகின்றது. சீனா, இரசியா ஒரு புறம் வளர்ந்து வந்தாலும் இன்னும் உலக ஒழுங்கு மாறவில்லை. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இசுரேல் என்பது அரசியலறிந்த அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஐ.நாவில் இசுரேலின் மீது கொண்டு வரப்படும் எந்த ஒரு தீர்மானத்தையும் அமெரிக்கா, இசுரேல் கூட்டணி தோற்கடிக்கும், அதையும் மீறி ஐ.நாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக் கால் தூசளவிற்குக் கூட இசுரேல் மதித்ததில்லை. பாலசுதீனியர்கள் இசுலாமியர்கள் தானே, இந்த அரபு நாடுகள் எல்லாம் இவர்களுக்கு ஆதரவளிக்கும் தானே என்று கேள்வி கேட்கும் பொதுமக்களுக்கு அரபு நாடுகளில் ஈரான், சிரியா தவிர்த்து எல்லா நாடுகளும் அமெரிக்காவின் அரசியலையே பின்பற்றுகின்றன அல்லது பின்பற்ற வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கே நினைவு கூறுகின்றேன். அருகிலுள்ள எகிப்து மட்டும் தற்சமயம் இந்தப் போரை (இனப்படுகொலையை) ஒர் அமைதி உடன்படிக்கையின் கீழ் நிறுத்தும் முயற்சியின் கீழ் செயல்பட்டு வருகின்றது, இதற்கு அமெரிக்கா, இசுரேல் எப்படிப் பதிலளிக்கும் என்பது கேள்விகுறியே....உலக ஊடகங்களில் 90 விழுக்காட்டுக்கும் மேலாக யூதர்களின் கட்டுப்பாட்டிலே தான் உள்ளது, அதனால் எந்த ஊடகங்களிலும் பாலசுதீனர்கள் கொல்லப்பட்டது வராது, வேண்டுமென்றால் ஹமாசின் ஏவுகணை தாக்குதலில் யூதர் ஒருவருக்குக் காலில் லேசாகச் சிராய்ப்பு ஏற்பட்டது வேண்டுமானால் செய்தியாக வரலாம். ஊடகங்களில் வருவது மட்டும் தான் சரியான செய்தி என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களுக்குப் பாலசுதீனியர்கள் தீவிரவாதிகளாகவும், இசுரேல் நல்லரசாகவும் காட்சியளிக்கும் .( புலிகள் தீவிரவாதிகளாகவும், இலங்கை அரசு நல்லரசாகவும் இந்திய ஊடகங்கள் இந்தியர்களிடையே கட்டமைத்தது போல....) மற்ற படி ஊடக அறமெல்லாம் அமெரிக்காவுக்கும், இசுரேலுக்கும் ஆதரவாகக் கூவுவது மட்டுமே. இதில் அத்திப் பூத்தார் போல அல்ஜசீரா போன்ற சில ஊடகங்கள் உள்ளன. இவர்கள் தான் இலங்கையின் உண்மை முகத்தையும் காட்டியவர்கள், இன்று இசுரேலின் உண்மை முகத்தைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றவர்கள்....


இந்தியாவும், தமிழர்களும்......

உலகில் சீனாவிற்கு அடுத்து மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா, உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று ஊடகங்களால் விதந்தோதப்படுவதுமுண்டு. 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாடு, இதுபோன்ற இனப்படுகொலை நடக்கும் பொழுது யாருக்கும் ஆதரவாகப் பேசுவதில்லை என்பதையே முடிவாகக் கொண்டு இயங்கிவருகின்றது. "ஒரு இனப்படுகொலை நடக்கும் பொழுது நடுநிலைமை என்பது, இனப்படுகொலை செய்பவர்களுக்கு ஆதரவேயன்றி வேறல்ல" என்ற டெஸ்மாண்ட் டூட்டுவின் வரிகளின் படி, இந்தியா இசுரேலின் இனப்படுகொலையைத் தனது கள்ள மௌனம் மூலம் ஆதரித்து வருகின்றது என்பதே உண்மை. அதுமட்டுமின்றித் தில்லியிலும், காசுமீரிலும் இசுரேலை கண்டித்து ஊர்வலம் சென்றவர்களின் மீது காவல்துறை தாக்குதலை நடத்தி, இந்துத்துவமும், சியோனிசமும், பாசிசமும் வேறு வேறல்ல, எல்லாம் ஒன்றே என நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.


இசுரேலுக்குத் தனது கள்ள மௌனம் மூலம் ஆதரவளிக்கும், இந்திய அரசை எதிர்த்து போராடுவதே ஒவ்வொரு இந்திய, தமிழக மக்களின் சனநாயகக் கடமையாகும்.உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள்:

இசுரேல் பாலசுதீனர்கள் மீது நடத்தி வரும் இனப்படுகொலை எதிர்த்து உலகெங்கிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசுகள் எப்பொழுதும் மற்றொரு அரசைத் தான் ஆதரிக்கும், அவர்கள் இனப்படுகொலை செய்யும் பொழுதும், அதே நிலை தான், உலகெங்கும் உள்ள மக்கள் நடத்தும் போராட்டங்கள் தான் அரசை அச்சுறுத்தும் ஒரே ஆயுதம், ஒவ்வொரு நாட்டில் உள்ள மக்களும், அந்தந்த நாடுகளின் அரசை எதிர்த்துப் போராடி, அவ்வரசுகளின் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி அதை மாற்றச்செய்ய வேண்டும்.

மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இசுரேல் உள்ளிட்ட அரசுகள் தான் உலகில் மிகப்பயங்கரமான அமைப்புகளாகும்.  இவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியை உலகெங்கிலும் உள்ள எல்லா சனநாயக, மனித உரிமை, இடதுசாரி இயக்கங்களும் தங்கள் முதல்பணியாக எடுத்துச் செயல்பட வேண்டும்.எப்படி அரசுகள் தங்களுக்குள்ளே ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனவோ, அது போல உலகெங்கும் வாழும் மக்களும், அரசுகளற்ற தேசிய இனங்களும்(பாலசுதீனம், காசுமீர், ஈழம்........) ஒரு கூட்டணியை உருவாக்கித் தொடர்ந்து போராடி சனநாயகத்தையும், தேசிய இனங்களின் தன்தீர்வுரிமையையும் மீட்டெடுப்போம், இனப்படுகொலை இல்லா மனித சமுதாயத்தை நோக்கி பயணிப்போம்.


நற்றமிழன்.ப

Monday, July 14, 2014

தமிழக அரசே உன் சாதி என்ன?
அன்புமணி அமைச்சராகவும், சில பா.ம.க-வினர் எம்.எல்.ஏ, எம்.பி ஆவதற்காக‌ பா.ம.க திட்டமிட்டு நடத்திய காதல் எதிர்ப்பு பிரச்சாரத்தினூடாகக் காதல் திருமணம் செய்திருந்த இளவரசன், திவ்யா இவர்களைப் பிரிக்க வேண்டியும், பா.ம.கவினர் நடத்திய சாதி வெறி வன்முறையில் நத்தம் காலணி, கொண்டாடம் பட்டி, அண்ணாநகர் என்ற மூன்று கிராமங்களில் இருந்த 400க்குமதிகமான வீடுகள் நாட்டு வெடிகுண்டு வீசி அழிக்கப்பட்டன, இத்தோடு நிறுத்தாமல் திருமணமான இளவரசன்- திவ்யா இணையரை பிரித்து(இதில் நீதிமன்றத்தின் பங்குமுண்டு) இளவரசனை கொலை செய்து வட மாவட்டங்களில் சாதி வெறியை தங்களது சுயநலத்துக்காகத் தூண்டி விட்டது பா.ம.க . இந்த ஆதிக்கச் சாதி வெறியை பா.ம.க சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் வாக்குகளாக அறுவடையும் செய்தது. அன்புமணி தர்மபுரியில் வெற்றி பெற்றார், சிலர் இரண்டாமிடம் பிடித்தனர், பலர் மூன்றாமிடம் பிடித்தனர். "ருசி கண்ட பூனை சும்மா இருக்காது" என்பது போல அண்மையில் மதுராந்தகம் அருகிலுள்ள நுகும்பல் என்ற கிராமத்தை திட்டமிட்டு அழித்துள்ளது இந்தக் கும்பல். அதுமட்டுமின்றி வட மாவட்டங்களில் பல சாதி வெறித் தாக்குதல்களை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அன்றாடம் நிகழ்த்தி வருகின்றனர்.


2011ல் தோழர்.இம்மானுவேல் சேகரன் அவர்களது நினைவுதினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்த கூடிய மக்களின் மேல் திட்டமிட்ட வகையில் அரச வன்முறையை ஏவப்பட்டு ஆறு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டு முத்துராமலிங்கத்தின் நினைவு தினத்தன்று ஜெயலலிதா அவரது சிலைக்குத் தங்க கவசம் அணிவித்தார். 2012 சித்திரை முழு நிலவு மாநாட்டில் சாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசிய காடு வெட்டி குரு, இராமதாஸ் போன்றோர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் பதியாமல், கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாகக் கூட்டம் நடத்தினார்கள் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்ததன் மூலம், நாங்கள் உங்களுக்கு ஆதரவாகத் தான் உள்ளோம் என்று அவர்களுக்குச் சமிஞ்சை கொடுத்தது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து நவம்பரில் நத்தம் காலணி, கொண்டாடம்பட்டி, அண்ணா நகர் உள்ளிட்ட மூன்று கிராமங்கள் சாதி வெறியர்களினால் அறு மணி நேரத்துக்கும் மேலாகக் கொள்ளையடிக்கப்பட்டும், ஒவ்வொரு வீடும் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி அழிக்கப்படும் வரை தமிழக அரசும், காவல் துறையில் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தன. அதுமட்டுமின்றி ளை திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யாமல் அவர்கள் மேலும் பல வன்முறைகளில் ஈடுபட ஊக்குவித்தும் வருகின்றது. இப்பொழுது இளவரசன் நினைவு தினத்தை ஒரு கருவியாகப் பாவித்து அரசு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

முதலில் தர்மபுரி மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு, சாதி வெறியர்கள் மூன்று கிராமத்தை தாக்கும் போதும், அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்து , ஊக்குவித்த அரசு, இன்று இளவரசனின் நினைவு தினத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாதென்று 144 தடையுத்தரவை விதித்தது. அடுத்து சூன் 28ஆம் திகதி ஊர்த்தலைவர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தது, , அடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் இளவரசன் நினைவுதினத்தன்று குண்டு வைக்கத்திட்டமிருந்தார்கள் என்று பொய்ப்புகார் சுமத்தி பலரைக் கைது செய்தனர், இத்தோடு நிறுத்தாமல் நத்தம்காலணியிலிருந்து பிழைப்பிற்காகப் பெங்களூர் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஐந்து நபர்களைப் பெங்களூர் பதுங்கியுள்ளனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பொழுது இளவரசன் நினைவு தினத்தை ஒரு கருவியாகப் பாவித்து அரசு தொடர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலில் தர்மபுரி மாவட்டம் முழுக்க 144 தடையுத்தரவு, சாதி வெறியர்கள் மூன்று கிராமத்தை தாக்கும் போதும், அங்குப் பதட்டமான சூழ்நிலை நிலவிய போதெல்லாம் அதை மௌனமாக ஆதரித்து , ஊக்குவித்த அரசு, இன்று இளவரசனின் நினைவு தினத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாதென்று 144 தடையுத்தரவை விதித்தது. அடுத்து சூன் 28ஆம் திகதி ஊர்த்தலைவர் உள்ளிட்ட ஐவரைக் கைது செய்தது, , அடுத்து ஊரில் உள்ள இளைஞர்கள் இளவரசன் நினைவுதினத்தன்று குண்டு வைக்கத்திட்டமிருந்தார்கள் என்று பொய்ப்புகார் சுமத்தி பலரைக் கைது செய்தனர், இத்தோடு நிறுத்தாமல் நத்தம்காலணியிலிருந்து பிழைப்பிற்காகப் பெங்களூர் வந்து பணிபுரிந்து கொண்டிருந்த ஐந்து நபர்களைப் பெங்களூர் பதுங்கியுள்ளனர் என்ற குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.


தமிழகத்தின் வரலாறெங்கிலும் எந்த அரசும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நின்றதில்லை, அது காங்கிரசாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி. கீழ் வெண்மணியும், தாமிரபரணியும், திண்ணியமும் நமக்கு உணர்த்துவது இதைத் தான். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் துணை நிற்கவேண்டிய அரசு, ஒடுக்குபவர்களுக்குத் துணை நின்று, தன் பங்குக்கு மேலும் ஒடுக்குகின்றது. இங்கே நத்தம் காலணியில் முன்பு நக்சல்கள் இருக்கும் பொழுது இது போன்ற சாதிய ஒடுக்குமுறைகள் இல்லை, ஒரு சமத்துவமான சமூகமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழக அரசு நக்சல்களை அழித்த பிறகு சாதிய பிரச்சனைகள் உருவாகின்றன. முன்பு நக்சல்பாரி கிராமங்களான இம்மூன்று கிராமங்களூம் தாக்கப்பட்டதில் அரசிற்கும், சாதி வெறியர்களூக்கும் கள்ள கூட்டு உள்ளது என்பது திண்ணம்.


வட தமிழகத்தில் வரவிருக்கும் அனல் மின்நிலையங்கள், மிகப்பெரிய தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றினால் வாழ்வாதாரத்தை இழக்கவிருக்கும் பெரும்பான்மை மக்கள் ஒன்றிணைந்து போராடினால் அரசுக்குப் பிரச்சனை என்பதால் இங்கே சமூகப் பிளவை சாதி வெறி மூலம் அரசு திட்டமிட்டு வளர்ந்து வருகின்றது . இதைத் தமிழகத்தின் எதிர்கட்சியாகக் கருதப்படும் திமுகவோ, கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றது. சனநாயக ஆற்றல்களும், இடதுசாரி இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் ஒன்றிணைந்து இதை முறியடிப்போம். உழைக்கும் மக்களே உங்களைச் சாதி வெறியூட்டி அதன் மூலம் அரசியல் இலாபமடையை நினைக்கும் இராமதாசையும், ஜெயலலிதாவையும் புறக்கணிப்பீர், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தந்து வட தமிழகத்தில் பாசிசத்திற்கும், பெரு முதலாளிச் சுரண்டல்களுக்கும், சாதி வெறிக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பீர்.

"அரசு அதிகாரம் என்பது ஆளும் வர்க்கங்கள், நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும் தங்களுடைய சமூகச் சலுகைகளைப் பாதுகாப்பாதற்குத் தமக்கென்று ஏற்படுத்திக் கொண்டுள்ள அமைப்பு முறை என்பதைக் காட்டிலும் கூடுதலான வேறு ஒன்றல்ல - ஏங்கல்ஸ்  (தேர்வு நூல்கள் தொகுதி 4, பக்கம் எண்-185)"

நற்றமிழன்.ப‌

Tuesday, July 8, 2014

கச்சத்தீவு ‍ - பல்லைக் கழட்டாத பாம்புகளின் வேடம் கலையும் தருணங்கள்

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என நேற்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு வாதிட்டிருக்கிறது.மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றிருக்கிறது என்பதை இப்போது இங்கே ஒரு தகவலுக்காக சொல்லி வைக்கிறேன்.தமிழக எல்லைக்குட்பட்ட விஷயங்களில்,  தமிழக உரிமைகளில், நமது தேசிய இனப்பிரச்சினைகளில், இந்திய அரசு வரலாறு முழுதும் நம் கழுத்தில் காலை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, நேற்றைய செய்தி மட்டும் போதுமான எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. இந்தி திணிப்பு, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை என இந்திய அரசிற்கும் தமிழர் என்ற தேசிய இனங்களுக்கும் இடையிலான தொடர் முரண்பாடுகளின் ஒரு கூறு தான் கச்சத்தீவு பிரச்சினையும்.


கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான மண்.  1874 முதல் 1956 வரையிலான நில அளவை ஆவணங்கள் இதை உறுதி செய்கின்றன. இவ்வளவு ஏன்? கச்சத்தீவின் வருவாயைக் கணக்கு வைக்கவே இராமநாதபுரம் மன்னரின், இராமநாத விலாசத்தில் தனி எழுத்தரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஆகவே கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என ஒருவர் விவாதம் செய்வாரேயானால்,  நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பதில் சொல்லலாம். கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதி.  இந்தியாவிற்கோ இலங்கைக்கோ ஒரு பிடி மண் கூட அங்கு உரிமையில்லை.  இப்படி உறுதியான ஆவணங்கள் இருந்தும் கச்சத்தீவு ஏன் இப்போது இலங்கை வசமிருக்கிறது.  நம் சொந்த கடற்பரப்பிற்குள் மீன்  பிடிக்கும் உரிமையை, யார் தட்டிப்பறிப்பது ?  கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை மறுத்ததன் மூலம்,  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை மட்டும் இந்திய அரசு பறிக்கவில்லை. இது நமது தாயக உரிமை பறிப்பு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே திருவாய் மலர்ந்திருக்கிறார். ”ஆவணங்களின் அடிப்படையில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கொடுத்தோம்” என்று. அப்படி என்ன அரசியல் என்ன காரணம்?  கச்சத்தீவு மிகவும் வளமான தீவு.  மீன் வளம் நிறைந்த பகுதி.  உலகிலேயே பால்கன் (ஐரோப்பாவில்) நீரிணைப்புக்கு நிகரான மீன்வளம் கொண்ட பகுதி கச்சத்தீவு மட்டுமே.  கடலின் நீர்ப்போக்கு, கடல்வாழ் உயிரின வளத்தையெல்லாம் கச்சத்தீவு அமைந்துள்ள பாக் நீரிணைப்பை நோக்கிக் கொண்டு வருகிறது.  கோடியக்கரையிலிருந்து, தனுஷ்கோடி வரை அமைந்துள்ள கடற்பரப்பு “பாக் நீரிணைப்பு” என்றழைக்கப்படுகிறது. இக்கடற்பரப்பில் தான் கச்சத்தீவும் அமைந்திருக்கிறது.  கோடியக்கரை பகுதியில் தான் THRISSOCIES என்றழைக்கப்படும் மீன்களுக்கு உணவாகக் கூடிய சிறுமீன்கள் அதிகம் கிடைக்கின்றன.  இந்த இறை மீனைத் தேடித் தான்,  எண்ணற்ற மீன்கள் இப்பகுதியில் வந்து வாழுகின்றன. அப்பகுதியை பெட்ரோ பேங்க் என அழைக்கிறார்கள். மேலும் அக்கடற்பரப்பில் அமைந்துள்ள தீவுகள் குன்றுகள் ஆகியவற்றும் அடிப்பரப்பும் படுகைகளும் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு வேண்டிய கனிம வளத்தைத் தரக்கூடியவை. இது மட்டுமின்றி பவளப்பாறைகளும், கடல் ஆமைகளும்  என வளம்மிக்க‌ பகுதியாக விளங்குகிறது கச்சத்தீவு. இப்படிப்பட்ட வளம்மிக்க பகுதியான கச்சத்தீவை 1956 முதல் இலங்கை அரசு சொந்தம் கொண்டாடத் தொடங்கியது. 

1971 வங்கதேசப் போருக்கு பின் இலங்கையில் விமானத்தளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதியான இலங்கையில்,  தனது எதிரி நாடு விமானத் தளம் அமைப்பது இந்திய அரசிற்கு அவ்வளவு உவப்பாக இல்லை. எப்படியாவது இத்திட்டத்தை தடுக்க, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகாவிடம் பேசத் தொடங்கினார். “கச்சத்தீவை எங்களுக்கு தந்து விட்டால், தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்” என்று பண்டார நாயகா பேரம் பேசத் தொடங்கினார். பேரம் படிந்தது.  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது குறித்து கவலைப்படாமல் பொறுப்பற்ற முறையில், கச்சத்தீவை இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமலேயே இலங்கைக்குத் தாரை வார்த்தார் இந்திரா.  1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் மூலம், கத்தியின்றி இரத்தமின்றி கச்சத்தீவு இலங்கை வசம் வீழ்ந்தது. 


இருந்தாலும் சில உரிமைகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 1974  ஜூன் 26 மற்றும் மற்றும் 28 ஆம் திகதிகளில் கையெழுத்தான முதல் ஒப்பந்தத்தில்  கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், அந்தோணியார் திருவிழாவிற்குச் செல்லவும் உரிமை மிகத் தெளிவாக வழங்கப்பட்டிருக்கிறது. 

அந்த ஒப்பந்தத்தின் விதி 5 :

இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இது நாள் வரை வந்து போனது போல் வந்து போகவும், கச்சத்தீவை அனுபவிப்பதற்கும்  முழு உரிமையுடையவர்கள். இதற்காக சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ பெற வேண்டியதில்லை. 


இந்த ஒப்பந்தங்களின் நகல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட பக்கத்தில் 
 இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான அன்றைய தினமே, அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஸ்வரன் சிங் பாராளுமன்றத்தில் வாசித்த அறிக்கையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றும் வாக்குறுதிகள் அளித்தார். இப்போது அந்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்து விட்டன.

ஆனால் இன்று காங்கிரசு களவாணிகள் முதற்கொண்டு பா.ஜ.க  பெருச்சாளிகள் வரை ’ஒப்பந்தம்’ என்று கூவுவது 1976 ஆம் ஆண்டு இரு வெளியுறவுச் செயலர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒரு கடிதப் போக்குவரத்து மட்டுமே. இதை ஒப்பந்தம் என்று சொல்வதே அபத்தமாக இருக்கும். “எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது” என்பது இந்திய வெளியுறவுச் செயலர் கேவல்சிங், அப்போதைய இலங்கை வெளியுறவுச் செயலர் ஜெயசிங்கேவுக்கு எழுதிய கடித்ததில் மட்டுமே உள்ளது.  

இந்த ஒப்பந்தங்களின் பின்னணியில்,1983ல் எண்ணற்ற ஈழத்தமிழர்கள், சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.அப்போதிருந்து, இப்போது வரை கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் என அநியாயங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

எல்லை மீறி வந்ததால் சுடுகிறோம் என வழக்கம் போல இலங்கை அரசு  கை விரிக்கும். ஆனால் பல துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள், இந்திய எல்லைக்குள்ளே நடந்தவைகள் தாம்.அப்படியே எல்லை மீறி மீன் பிடித்தாலும் அது சுட்டுக் கொல்லப்படும் அளவுக்கு கொடுங்குற்றமாகாது. இந்தியக்கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படை சுடுவதில்லை. மேலும் கடல் எல்லை என்பது நாடுகள் உருவாக்கிக் கொண்டது தான். பல நாட்டு மீனவர்கள் அந்நிய கடற்பரப்பில் மீன் பிடித்தலென்பது வழக்கமான விஷயம் தான் என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம். கடலில் எல்லைக் கோடு போட முடியாது என்பது எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்ட உண்மை. 

இந்திய எல்லையாக இருந்தாலும் சரி, இலங்கை எல்லையாக இருந்தாலும் சரி. இலங்கை இந்தியாவுடனான மட்டைப் பந்தாட்டப் போட்டியில் தோற்றாலும் கூட இந்திய மீனவன் தான் சிங்களத் துப்பாக்கிகளின் எளிய இலக்காகிறான். வரலாற்றின் பக்கங்கள் முழுதும், இந்தியா எனும் வல்லாதிக்க அரசிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதாக வேண்டி, இலங்கை தொடர்ந்து இந்தியாவை எதிரி முகாமிலே தான் இன்னமும் வைத்திருக்கிறது. அதற்கு நேர்மறையாக, தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை தன் வசம் வைத்திருக்க வேண்டி, இலங்கையை இன்னமும் நட்பு நாடு என்று அழைத்துக் கொண்டாடி வருகிறது இந்தியா. இந்த நட்பு பாராட்டும் நாடகங்களில் வாயிலாகத் தான், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் உயிர்களும் உடைமைகளும் விலை பேசப்படுகின்றன. தமிழகத்தின் தாயக உரிமையான கச்சத்தீவும் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் தான் ஐக்கிய நாடுகள் கடற்சட்டத்தின் 145 ஆம் பிரிவு ( Article 145th of the UN Law of the Sea) "கடலில் மனித உயிருக்கு (மீனவர்களுக்கு ) போதிய பாதுகாப்பு வழங்கி உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"  என உறுதியளிக்கிறது. மேலும் மேற்கண்ட சட்டத்தின் 75 ஆம் பிரிவு "கடலோரம் அமைந்துள்ள அரசு, சட்டத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்ப சோதனை செய்தல், கைது செய்தல், வழக்குமன்ற நடைமுறையை பின்பற்றுதல்  ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்" எனச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவே கடல் எல்லைகளைத் தாண்டும் மீனவர்களைக் கொல்வது, ஐ.நாவின் கடற்சட்டத்தை மீறுவதாகும்.


=============


தமிழக மீனவர்கள் உரிமை மறுக்கப்பட்ட அதே கேவல்சிங் ஜெயசிங்கே கடிதத்தில் இலங்கை மீனவர்கள் கன்னியாகுமரிக்கு மிக அருகில் உள்ள வாட்ஜ் பேங்க் என்னும் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன்  பிடிப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டிருக்கிறது என்பது தான் கொடூர நகைச்சுவை. அதை விட நகைப்புக்குரிய விஷயம் “இலங்கை மீனவர்கள் ஆறு படகுகளில் மட்டுமே வந்து ஆண்டுக்கு 2000 டன் மீன்கள்  பிடித்துக் கொள்ளலாம்” என்று கேவல்சிங் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த படகுகளை எண்ணுவது யார்? மீன்களை எடை போடப் போவது யார்?

கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு, தமிழகத்தின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 22. தமிழகத்திலிருந்து சென்ற கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16. கண்டனக்குரல்களுக்கும் அறிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் பஞ்சமில்லை. அப்போதைய முதல்வர் கருணாநிதி, இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து, அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். ஆனால் கடுமையான எதிர்ப்பெல்லாம் இல்லை. அப்போது தி.மு.கவிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், கருணாநிதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், இந்திரா தலைமையிலான காங்கிரசு அரசின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ளவும், எம்.ஜி. ஆரை சமாளிக்கவும் காங்கிரசு பக்கம் சாய வேண்டியதாக இருந்தது. தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எப்படி சாய்ந்தார்களோ அப்படி ஒரு சாய்வு. 

அதிமுக அரசும் வெகுநாட்களுக்கு பிறகு 2008ல் தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால் அவ்வப்போது இருவரும் வீர வசனங்களை மாறி மாறிப் பேசினாலும், கண்டனம் கடிதம், இவைகளைத் தாண்டி பெரிய சலசலப்புகள் இல்லை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் ஒப்பந்தங்களின் வாயிலாக‌ தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, வழக்குகள் மூலம் கேள்வி கேட்க முடியும் என்ற நிலையை அடைவதற்கு, நமக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன என்றால் மாநில அரசுகளிலும் ஒருவித சமசரங்கள் இருந்திக்கின்றன என்பது தெளிவு.காங்கிரசு அரசு தமிழர் விரோத அரசு, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வந்தால் கச்சத்தீவை மீட்டுத் தந்துவிடுவார் என்ற மோடிக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எல்லாம், இன்று வாயடைத்து போயிருக்கின்றனர். பா.ஜ.கவின் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாம்பனில் நடைபெற்ற கடல் தாமரை மாநாடெல்லாம், ஓட்டுப் பொறுக்கவே அன்றி மீனவர் உரிமையை மீட்டெடுக்க அல்ல. 

ஆக இந்திய ஒன்றியத்தின் நலன்களுக்காக, இந்திய அரசால் விலங்கிடப்பட்டிருக்கும் தேசிய இனங்களின் நலன்களும் உரிமைகளும் ஒட்டுமொத்தமாக அடகு வைக்கப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உரிமையை இலங்கைக்கு அடகு வைத்ததன் மூலம், தமிழகத்தின் இறையாண்மையை நாம் விட்டுக் கொடுத்து நிற்கதியாக நிற்கிறோம். பா.ஜ.க வந்தால் சரியாகி விடும், ஆம் ஆத்மி வந்தால் சரியாகி விடும்  என்ற முனகல்களை பார்க்கும் போது, கவிஞர் காசி அனந்தனின் கவிதை நினைவுக்கு வருகிறது.

பாம்பு தோலைக் கழற்றி வைத்துவிட்டு புறப்பட்டது.

ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அது போனது.

"அதோ..பாம்பு உங்களுடைய இடத்தை நோக்கித் தான் போகிறது..நச்சுப்பாம்பு..பல் பட்டாலே போதும்" என்று கூவியது சேவல்.

"அப்படி ஒன்றும் நடந்து விடாது. பாம்பு தோலைக் கழற்றிப் புதிதாய்
பிறந்திருக்கிறது.." என்றது ஆடு.

சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது. ஓசை வந்த‌
திசை நோக்கி சேவல் ஓடியது.

அங்கே பாவம்.. அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்கு பலியாகிச் செத்துக் கிடந்தன.

சேவல் சொல்லியது,
"பல்லைக் கழற்றாத பாம்பு 
தோலைக் கழற்றி என்ன?
வாலைக் கழற்றி என்ன?"

ஈழ விடுதலை, தமிழக மீனவர் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை திணிப்பு, அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பு என எல்லா முரண்பாடுகளிலும் தமிழக மக்களை ஒரு பொருட்டாக மதிக்காத‌, முழுக்க முழுக்க தமிழின விரோதப் போக்கு கொண்ட அரசுகளே மாறி மாறி இந்தியாவை ஆண்டு வருகின்றன. கச்சத்தீவை பொறுத்தமட்டில், தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என மீண்டும் மீண்டும் பொய்யுரைத்து நம்மை அலட்சியப்படுத்தும் இந்திய‌ அரசுக்கு நாம் சில விஷயங்களை சொல்ல வேண்டிய கட்டாயமிருக்கிறது. அது நமது தொடர் போராட்டங்களினூடாக நாம் ஆற்றப்போகும் எதிர்வினை. அரசப் பாம்புகளின் பல்லை பிடுங்கியே ஆக வேண்டுமல்லவா?


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்:

கல்வெட்டறிஞர் முனைவர் செ.இராசு அவர்கள் எழுதிய 
"நமது கச்சத்தீவு" புத்தகத்தைத் தழுவியும், தோழர் கண.குறிஞ்சியின் தகவல்களை முன் வைத்தும்.


முப்பது நாளில் வல்லரசானது எப்படி - மோடி ??????       அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவர‌து முகத்தில் தான் எத்தனை கருணை,  ஆகா, அவர‌து கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி  குஜராத்தை எப்படி  வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்... கற்காலத்தில் இருந்த குஜராத்தை ஒரே பாய்ச்சலில் கணிப்பொறி காலத்திற்கு கொண்டு வந்துவிட்டார் பாருங்கள்,  அந்த சாத்தான்களைப் பாருங்கள் எப்போதோ குஜராத்தில் நடந்த  இசுலாமியர் படுகொலைகளை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இன்று  நமது தேவ தூதருக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் நமது தேவ தூதரின் முகத்தில் தான் எத்தனை கருணை,   தனது புஷ்பகவிமானத்தில் தான் செல்லும் போது மோதி வீழ்ந்த‌ பறவைக்காக எப்படி தான் வருந்தினாரோ, அப்படி தான் வருந்தியதாக  நமது தேவ தூதர்  அந்நிகழ்வைப் பற்றி இன்றும் குறிப்பிடுகின்றாரே நமது தேவ தூதர், ஆனால் இந்த சாத்தான்கள் தான் கேட்க மாட்டேன் என்கிறார்கள்... என்றைக்கு கேட்டிருக்கின்றனர் இந்த சாத்தான்கள்... நல்ல வேளை இந்த சாத்தான்களின் பேச்சை மக்கள் கேட்காமல் நமது தேவ தூதரையே இந்திய லோக மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்கள்... தேவதூதனே லோக வளர்ச்சி... லோக வளர்ச்சியே தேவ தூதன்.....        இப்படித்தான் கடந்த சில மாதங்களாக ஊடகங்களும், மோடி ஆதரவாளர்களும் கூறிவந்தனர்.  ஏன் இன்றும் கூட மோடியைப் பற்றி, அவரது ஆட்சியைப் பற்றிய புகழுரைகளை மோடிக்கே கூசும்(?) அளவிற்கு தொடர்ந்து எழுதிவருகின்றார்கள்,  இவற்றை  மட்டுமே படித்து வரும் ஒருவர் இந்தியா வல்லரசாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு உள்ளது,  ஆனால் உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. மோடியின் 30 நாட்கள் ஆட்சியைப் ப‌ற்றி ஒரு பருந்து பார்வை பார்க்கலாம் வாருங்கள்....
1) இராணுவத்தில் 100 விழுக்காடு அன்னிய முதலீடு

2) தொடர்வண்டி பயணக்கட்டத்தை 14.2 விழுக்காடு உயர்த்தியது.

3) மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும்.

இவை மட்டுமல்ல பின்வருவனவும் பரிசீலனையில் உள்ளன...

1) கேஸ் விலையை மாதம் ஐந்து ரூபாய் உயர்த்துவது.

2) முதலாளிகளின் வசதிக்கேற்ப  தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது.     சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தற்போதைக்கு இல்லை, ஆனால் இராணுவத்தில் அன்னிய முதலீடு என்று அறிவித்திருக்கின்றது அரசு. 2,45,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சில்லறை வர்த்தகத்தை தற்சமயம் திறந்துவிட முடியாததால் 2,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவத்தை அன்னிய பெரு முதலாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளது அரசு.  இதில் இராணுவத்திற்காக அரசு ஒதுக்கும் பணம் ஒவ்வொரு ஆண்டும் 5 விழுக்காடு (குறைந்தபட்சம்) அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பில் அன்னிய முதலீட்டை உள்ளே விட்டிருக்கும் பா.ஜ.கவும், மோடியும் இங்கே சுதேசி என்றும்,  அன்னிய நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது என்று அறிக்கை வெளியிடுவது வேடிக்கையிலும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.


  அடுத்து தொடர்வண்டி பயணக்கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்தியுள்ளது, சாலைப் போக்குவரத்திற்கான பயணக்கட்டணங்கள் உயர்ந்து வருவதால் மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது தொடர்வணடியைத் தான் இன்று அதையும்  உயர்த்தியுள்ளது மோடி தலைமையிலான அரசு. பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமலேயே,  தொடர்வண்டித்துறையை இலாபத்தில் நடத்திக்காட்டியது காங்கிரசு தலைமையிலான முதல் அரசு. ஆனால் நான் காங்கிரசுக்கு மாற்று, இந்திய மக்களை சுபீட்சமடைய செய்யப்போகிறேன் என்ற மோடியோ, மக்களை காரிருளை நோக்கி நகர்த்தி வருகின்றார். மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் ஹிந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதன் மூலம் , தான் ஒரு சர்வாதிகாரி என்பதையும், தனது திட்டம் ஹிந்தி, ஹிந்து , ஹிந்தியா தான் என்பதையும் வெளிக்காட்டியுள்ளார் மோடி. சிலர் கேட்கக்கூடும் மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தானே உபயோகிக்க சொல்லுகின்றார் ,மத்திய அரசு ஊழியர்கள் அரசு சார்ந்த அறிவிப்புகளை சமூக தளங்களில் வெளியிடும் போது அது எல்லா மாநில மக்களுக்கும் புரிய வேண்டும், இந்த அறிவிப்பினால் ஹிந்தி மட்டும் தெரிந்த மக்களுக்கு தான் அந்த அறிவிப்புகள் புரியும், மற்ற மாநில மக்களுக்கு எதுவும் புரியாது.  அது மட்டுமின்றி சமூக வலைதளங்கள் என்பவை அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் உட்பட்டவை அல்ல, உத்திரபிரதேசத்தில் ஒரு மத்திய அரசு ஊழியர் பதிவதை தமிழகத்தில் இருந்து நாமும், தெலங்கானாவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்து பார்க்கலாம், அப்படியிருக்க ஹிந்தியில் தான் சமூக வலைதளங்களில் பேச வேண்டும் என்பது இங்குள்ள மொழி பன்மைத்துவத்தை அழித்து ஹிந்தி ஆதிக்கமாகும், அதுமட்டுமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவரின் கருத்தை வெளியிடும் உரிமையை இது ஹிந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்களுக்கு மறுக்கின்றது.  இதையெல்லாம் கேட்டால்  இந்த மூன்று கொள்கைகளையும் முந்தைய காங்கிரசு அரசு தான் பரிந்துரைத்தது என்கிறார்கள் பா.ஜ.க அமைச்சர்கள். அப்படியென்றால் இவ்வளவு நாள் மோடி தான் மாற்று , அவரால் மட்டும் தான் எல்லாம் முடியும் என்று கூறியது ஏமாற்று வேலை என்று ஒப்புக்கொள்கின்றார்களா பா.ஜ.கவினர் ????? இத்தோடு முடியவில்லை கேஸ் விலை மாதம் 5 ரூபாய் ஏற்றவிருக்கும் பரிசீலனை இறுதிக்கட்டத்தில் உள்ளது,  ஏன் இந்த விலை உயர்வு என்றால் கேஸ் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவாம்... இந்த ஆண்டு ஒரு இலட்சம் கோடி இலாபம் ஈட்ட வேண்டும் என்று இலக்கை நிர்ணயிக்கின்றார்கள், ஆனால் ஆண்டிறுதியில் கணக்கு பார்த்தால் 70,000 கோடி ரூபாய் மட்டுமே இலாபம் வந்துள்ளது, ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 30,000 கோடி ரூபார் நட்டமாம்..இப்படி தான் உள்ளது இவர்கள் கூறும் நட்டக்கணக்கு, இப்படித்தான் பெட்ரோல், டீசல் விலையை மாதாமாதம் விலை உயர்ந்துவதற்கு அந்த நிறுவனங்களுக்கே அதிகாரம் வழங்கியது காங்கிரசு அரசு.  பொருட்கள் உற்பத்தியிடத்திலிருந்து சந்தைக்கு வருவதற்கு ஆகும் பயணச்செலவு மாதாமாதம் இதனால் உயர்வதால் உணவு பொருட்களின் விலையும் மாதா மாதம் உயர்கின்றது, இதுவே பண வீக்கத்தின் அடிப்படை காரணமும் ஆகும். உலகிலேயே சிறந்த நிர்வாகி என்று ஊடகங்களால் உச்சி முகர்ந்து பாராட்டப்படும் திருவாளர். மோடியின் ஆட்சியில்  பணவீக்கம் உச்சத்தில் இருக்கின்றது, இந்த உலகிலேயே சிறந்த நிர்வாகி பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்த 30 நாட்களில் என்ன திட்டத்தை செயல்படுத்தி மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பாற்றினார் என்ற கேள்விக்கு  பதிலே இல்லை. வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது, ஒரு வெங்காய விலையேற்றத்தைக் கூட கட்டுபடுத்த முடியாதவர் தான் இந்தியாவை வல்லரசாக்குவார் என எண்ணுவது "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்" என்ற முதுமொழியைத் தான் நினைவு கூறுகின்றது.  மோடியின் இந்த (சோ)சாதனைகளை எல்லாம் பார்த்து வரும் மோடிக்கு வாக்களித்த (அவர் வளர்ச்சியை கொண்டு வருவார் என்று ஊடகங்கள் கூறியதை நம்பி வாக்களித்தவர்கள்) மோடி ஆதரவாளர்கள் இன்று வாயடைத்து போயுள்ளனர்.    மோடியும், ஊடகங்களும் கூறும் வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கானதே, அது மக்களுக்கானதல்ல என்று இன்றாவது அவர்கள் புரிந்து கொண்டால் நல்லது, அப்படி உங்களுக்கு புரியவில்லை என்றால், புரியவைக்கவே அடுத்த வரவிருக்கின்றது தொழிலாளர் நலச்சட்டத்திருத்தங்கள், இது தொடர்பாக எந்த தொழிலாளர் அமைப்பிடமும் எந்த கோரிக்கையும் கேட்கவில்லை அரசு, ஆனால் முதலாளி அமைப்புகளிடம் வரிசையாக கருத்து கேட்டு வருகின்றார்கள், இது தொடர்பாக ஒரு விரிவான கட்டுரை எமது வலைதளத்தில் வரவிருக்கின்றது.  மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகி என்ற ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை வெங்காயமே நொறுக்கிவிட்டது என்பது தான் உண்மை.  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதமென்பதைப் போல  இந்த முப்பது நாட்களாட்சியே மோடி இனி எப்படி ஆளுவார், எதை நோக்கி கவனம் செலுத்துவார் என புரிந்துகொள்ளலாம். இன்றைய நிலையில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், கொள்கை முடிவையும் எதிர்ப்பதே இந்தியாவை(அதன் மக்களை) நேசிப்பவர்களின் கடமையாகும், அதைவிடுத்து அரசு திட்டங்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் மோடியை நேசிப்பவர்களேயன்றி இந்தியாவை நேசிப்பவர்களல்ல...

நற்றமிழன்.ப‌

புகைப்படங்கள் - நன்றி கேலிச்சித்திர கலைஞர்.பாலா, வட-கிழக்கு மாநில மாணவர்களின் போராட்டம், தி இந்து, கேலி சித்திர கலைஞர். முத்து, கருத்து உதவி - இரமிலா இராஜேந்திரன், கே.பி.பன்னீர்செல்வன். 

Monday, July 7, 2014

உங்களுக்குத் தெரியுமா?

பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 2 பேர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர்  தமிழக முதலமைச்சர் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.  இங்கே ஒவ்வொரு விதிமுறைகளும், சட்டத்திருத்தங்களும் கொண்டு வருவதற்கு பல பெண்களின் உயிர்த்தியாகங்களும், பெருந்திரள் போராட்டங்களும் தேவையாக இருக்கின்றன என்பது வேதனையான உண்மை. இப்படித்தான் நிர்பயாவின் படுகொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றச்சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது.

 என்ன சொல்கின்றது விடுதிகளுக்கான விதிமுறைகள்:

எல்லா விடுதிகளிலும் கட்டயமாக கண்காணிப்புக் கருவி

50 மகளிர்க்கு ஒரு மகளிர் காவலாளி

விடுதியில் 24 மணி நேர காவலாளி கண்காணிப்பு  போன்றவையே அவை.

அது மட்டுமின்றி சில பரிந்துரைகளையும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாவட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், ராணுவத்தினர்களைக் கணக்கு எடுத்து, அவர்களைக் காவலாளிகளாக பணியில் அமர்த்தலாம்

காவாலாளியாக பணிக்க‌மர்த்தும் முன் அவர்கள் பார்த்த பணிகளின் வரலாறு, அரசு மருத்துவரின் மன நலச் சான்று, காவல் துறையின் ஒழுக்கச்சான்றும் பெற வேண்டும்.  

மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளையும் கண்கானிக்க வேண்டும், விடுதிகளின் பட்டியல் வைத்திருக்க வேண்டும். காவல் துறையினர் விடுதிகளை மாதம் ஒரு முறைப் பார்வையிட வேண்டும்.

பெண்கள் தங்கிருக்கும் எல்லா அரசு, தனியார், பள்ளி, கல்லூரி, அறக்கட்டளை, தொழிற்சாலை மற்றும் நிறுவனம் நடத்தும் விடுதிகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

  2 சிறுமிகள் விடுதியிலிருந்து கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட‌ பின்னர் தான் இந்த விதிமுறை வந்துள்ளது , இது போன்ற விதிமுறைகள் இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமலிருக்கவே  உருவாக்கப்பட்டுள்ளன.

இப்படி ஒரு விதிமுறைகள் வெளியானது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் விடுதிகளில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா?


--
சமந்தா

போரூர் கட்டிடப் படுகொலையில் கொலையுண்ட தொழிலாளர்களின் அவலம்!தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரிடர்!

கடந்த சனி (ஜூன் 28) மாலை சென்னையில் மழை பெய்த பொழுது போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்ததில் இதுவரை கட்டிடத் தொழிலாளர்கள் 61 பேர் இறந்துள்ளனர், 27 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர், இன்னமும் 25 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. மீட்புப் பணியை தமிழக தீயணைப்பு துறையும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் இரவும் பகலுமாக கடந்த 6 நாட்கள் செய்து வந்து வெள்ளிக்கிழமையோடு (சூலை 4) மீட்பு பணி முடிந்துவிட்டது என அறிவித்திருக்கின்றார்கள், நூற்றுக்கதிமனோர் உள்ளே சிக்கியிருக்கக்கூடும் என்பதே தொழிலாளர்கள் மற்று பொது மக்களின் கணக்கு, ஆனால் இன்றோ மீட்பு பணி முடிந்துவிட்டு என்று அறிவித்துள்ளார்கள், அப்படியானால் மீதமுள்ள , காணாமல் போன தொழிலாளர்கள் எங்கே?  தமிழக முதல்வர் மட்டுமல்ல இறந்ததில் சீமாந்திர தொழிலாளிகள் அதிகம் என்பதால் சீமாந்திர முதல்வரும் வந்து மீட்புப் பணியை பார்வையிட்டுள்ளனர். இருவரும் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு அறிவித்துள்ளார்கள். கட்டிட உரிமையாளர் மனோகரன், பொறியாளர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரழப்பும் கண்டனக்குரலும் அதிகமானதால் ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையும் ஒன்றை அமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பேரிடர் என்று மத்திய அரசின் பேரிடர் குழுமம் கூறியுள்ளது.


உண்மையில் இடிபாட்டுக்குள் சிக்கியவர்கள் எத்தனை பேர்?

முதலில் 72 தொழிலாளர்கள் சிக்கியுள்ளார்கள் என்று அந்த கட்டிட உரிமையாளர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது, இறந்தவர்களோடு சேர்ந்து வெளியில் எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90ஐ நெருங்கிவிட்டது, இன்னமும் 25 பேர் இருக்க‌க்கூடும் என்கின்றார்கள் மீட்புப் பணியினர். ஆனால் அன்று சம்பளம் வாங்கும் நாள் என்பதாலும், பெரும்பாலானவர்கள் அந்த கட்டிடத்தின் அடித்தளத்தில்தான் தங்கிவந்தார்கள் என்பதாலும் 200பேர்க்கு மேல் கட்டிட இடிவில் சிக்கினார்கள் என கட்டிடத்தில் வேலை பார்த்து அன்று வேலைக்கு வராத சில தொழிலாளர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள்... அப்படி என்றால் உண்மையில் சிக்கியவர்களும், இறந்தவர்களும் எத்தனை பேர்? அரசு இதை வெளிப்படையாக சொல்ல தயங்குவதேன்? அனைத்து தொழிலாளர்கள் பற்றி சரியான ஆவணம் இல்லை, மருத்துவ காப்பீடும் இல்லை என தெரிகிறது. அதற்குத்தான் இதனை மறைக்கப்பார்க்கிறார்கள் என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக இருக்கிறது.


விதிகளை தளரத்தி சி.எம்.டி.ஏ வெளியிட்ட அரசாணைகள்

சென்னையை சுற்றி அவசர கதியாக, சரியாக திட்டமிடப்படாமல் சதுப்பு நிலங்களை அழித்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து நீராதாரங்களைப் பற்றி கவலைப்படாமல் பல கட்டிடங்கள் இவ்வாறு எழுப்பப்பட்டு வருகின்றன. இடிந்த கட்டிடப்பகுதி ஏரி அருகாமையில் அமைந்திருக்கும் களிமண் அதிகமான பகுதி, அங்கு எப்படி 11 மாடி கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தார்கள்? மண் பரிசோதனை செய்து உறுதி சான்றிதழ் எப்படி பெற்றார்கள்? என்ற கேள்விகளை அந்த பகுதியில் உள்ள மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் நீண்ட நாட்களாக கேட்டும், புகார் கொடுத்தும் வந்துள்ளார்கள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கீழ் செயல்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சி.எம்.டி.ஏ) முறைகேடுகள் செய்தது தெரியவந்துள்ளது. சாலை அகலம் குறைவான இடத்தில் அதிக அகலம் காட்டி விதியை மீறி 11 மாடி கட்டவும், கட்டிடத்தை சுற்றி இருக்க வேண்டிய இடத்திற்கான விதிக்கு குறைவான இடம் விட்டும் அனுமதி வாங்கி கட்ட ஆரம்பித்த பின் அந்த இரு விதிகளையும் தளர்த்தி அரசாணைகள் வெளியிட்டிருக்கிறார்கள் (வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசாணைகள், எண்: 239, எண்: 106).அதிமுக-விற்கும் திமுக-விற்கும் சம பங்குண்டு

தமிழக முதல்வர் மீட்புப் பணியை பார்வையிடச் சென்றபோது செய்தியாளர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு “சி.எம்.டி.ஏ அனுமதி வழங்கியதில் எந்தத் தவறும் செய்யவில்லை. கட்டிட நிறுவனம் தான் விதியை மீறி கட்டியுள்ளது” என்று கூறினார். இது இந்தக் கோரப் படுகொலைகளின் மொத்த குற்றத்தையும் கட்டிட நிறுவனத்தின் மீது ஏற்றி சி.எம்.டி.ஏ-வையும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையை காப்பாற்றும் முயற்சி அல்லவா? தமிழக அரசு தனக்கான பொறுப்பில் இருந்து தவறியது சரி என ஆகிவிடுமா? திமுக தலைவர் கருணாநிதியும் இந்த கேள்விகளை முன் வைக்கிறார். ஆனால் முந்தைய ஆட்சிக்காலத்தில் நிலத்தரகு(ரியல் எஸ்டேட்) குண்டர்களாக திமுக பொறுப்பாளர்கள் பலர் செயல்பட்டதும், அப்பாவி மக்களை மிரட்டி பல நிலங்களை பிடுங்கி -  விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் எழும்பியதும் நமக்குத் தெரியும். இந்த கட்டிட உரிமையாளர் மனோகரும் அப்படி திமுக பெரிய கைகளின் உதவியோடுதான் வங்கி கணக்காளராக இருந்து மிக விரைவாக பெரிய பல அடுக்கு கட்டிட கட்டுமான உரிமையாளராகியுள்ளார். இந்த சம்பவத்திற்கு மட்டும் சி.பி.ஐ. விசாரணை கோரும் கருணாநிதியை கடந்த பத்தாண்டுகள் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சொன்னால் அமைதியாகி விடுவார் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆக இப்படியான தரமற்ற முறையில், விதிகளை மீறி முறைகேடாக, தொழிலாளர்களை காவு வாங்க கட்டப்படும் ”நகர்ப்புற வளர்ச்சி”யின் குறியீடுகளான இந்த கட்டிடங்கள் இருவரின் ஆசியுடன் தான் கட்டப்பட்டு வருகின்றன, இந்த பிரச்சனை இந்த கட்டிடத்தை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல. இப்படி பாதுகாப்பற்ற முறையில் எண்ணற்ற கட்டிடங்கள் ஏற்கனவே கட்டியும், கட்டப்பட்டும் வரப்பட்டுள்ளன. இதனைக் குறித்து தீவிர ஆய்வும், விசாரணையும், தடுக்கத் திட்டமும் உடனடித் தேவையாகும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் வேண்டும்!

கட்டிட இடிபாட்டுகளுக்குள் சிக்கி 60க்கும் மேலான தொழிலாளர்கள் கொலையுண்டது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று தானே முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை அனுப்பும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழிலாளர்களின் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் தாராவி, மலேசியா என இங்கிருந்து தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக இடம் பெயர்ந்தது போல தங்கள் ஊர்களில் விவசாயமும், பிற தொழில்களும் நலிவுற்றதால் புலம்பெயர்ந்து வரும் ஆந்திரா மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த சட்ட பாதுகாப்பும், பெரிய காயம்பட்டால் மருத்துவ வசதி பெற காப்பீடும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு இவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், இவர்களின் குழந்தைகளுக்கு தரமான இலவச கல்வியை அரசு வழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்போம்!

குறைந்த கூலிக்கு சொந்த பந்தங்களை பிரித்து அழைத்து வந்து இழி பிறவியைப் போல சக்கைபோல பிழிந்து வேலை வாங்குகிறார்கள் இங்குள்ள முகவர்களும் முதலாளிகளும். இந்த முகவர்களை, முதலாளிகளை பார்த்து சுண்டுவிரலைக் கூட அசைக்காத சில இனவாத தமிழ்த்தேசியவாதிகள் “வெளியாரை வெளியேற்ற வேண்டும், அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது” என குறைந்த பட்ச சனநாயக உணர்வுமற்று பேசிவருகிறார்கள். ஒரு தேசத்தின் விடுதலைக்கு அந்த தேசத்தை அடிமைபடுத்தி வைத்திருக்கும் பலம் வாய்ந்த ஆதிக்க அரசும், அதற்கு துணையாக இருக்கும் உள்நாட்டு அதிகார கும்பலும், பக்கபலமாக இருக்கும் பெரும் முதலாளிகளுமே எதிரிகளன்றி பிற தேசத்து உழைக்கும் மக்களல்ல. அவர்கள் நம் சகோதரர்கள், நம்மைப் போலவே அதிகாரமற்றவர்கள், நம் தோளோடு தோள் நிற்கும் நேச சக்திகள்.முதலாளிகளின் இலாப வெறி!

காலங்களைக் கடந்து நீடித்து நிற்க வேண்டிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே  இடிந்து வீழ்கின்றன.  ஒரு காலத்தில் இலாபம் கிடைத்தால் போதும் என்றிருந்த முதலாளிகள், இன்று கொள்ளை இலாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்படுகின்றார்கள். தமிழ்நாட்டில் சமூக நிலை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேறிய நிலையில் இருப்பதால் இங்கு கூலி சற்றே உயர்ந்திருக்கின்றது, ஆனால் எங்களுக்கு அதே 100 ரூபாய் கூலியில் ஆட்கள் தேவை என்பதால் சமூக நிலையில் பிந்தங்கிய மாநிலத் தொழிலாளர்களை நோக்கிச் செல்கின்றனர், இதனால் தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வேலை பறி போகும் அதே நேரத்தில், வரும் தொழிலாளர்களின் உரிமையும் பறிபோகின்றது.  அடுத்து கட்டுமானப் பொருட்களின் தரத்தில், கட்டப்படும் இடத்தின் தரத்தில் என ஒவ்வொன்றிலும் சமரசம் செய்து தனது இலாபத்தை கொள்ளை இலாபத்தில் மட்டும் எந்த வித சமரசமுமின்றி செயல்பட்டுவருவதே இந்த கட்டிடப்படுகொலைக்கும், 61 தொழிலாளர்களின் கொலைக்கும் காரணமாகும்.  தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுப்பதே இது போன்ற படுகொலைகளைத் தவிர்க்கும்.சிக்குண்ட தொழிலாளர்களை மீட்க உறவினர்கள் எழுப்பிய ஓலம் அந்த பகுதியை மட்டுமல்ல, தமிழகத்தையே உலுக்கியுள்ளது. திக்கற்றவர்களாக நிற்கும் பிற மாநில தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தோழிலாளர்களின் உரிமைகளுக்காக நாமும் சேர்ந்து குரல் கொடுப்போம். இது போல ஒரு கோரச்சம்பவம் கூட வருங்காலத்தில் நடக்காமல் தடுத்து நிறுத்த அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் படியான போராட்டங்களை தீர்க்கமாக முன்னெடுப்போம்.


ஸ்நாபக் வினோத்

Sunday, July 6, 2014

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை


                                              
சேவ் தமிழ்ஸ் இயக்கம்  2008 -09 ஆம் ஆண்டுகளில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி போராட்டக் களத்திற்கு வந்த தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் சிலரால் தொடங்கப்பட்டது; ”குளிரூட்டப்பட்ட கண்ணாடிக் கூடங்களுக்குள் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் சமூகத்தைப் பற்றி அதிகம் அக்கறை கொள்ளாதவர்கள்;  போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை  உரிமையைப் பறிகொடுத்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவர்கள்; அரசியலை சாக்கடை என்று சொல்லி ஒதுங்கி நிற்பவர்கள்; நுகர்வியல் பண்பாட்டிற்குள் சிக்கி தனி மனிதர்களாக மாற்றப்பட்டவர்கள்; தனி மனித உழைப்பு, தனி மனித வெற்றி, தனி மனித உணர்வு, தனி மனித சிந்தனை, தனி மனிதப் பிரச்சனை என்று சமூகத்தை விட்டுப் பெருமளவில் அந்நியப்பட்டு போனவர்கள்.” இப்படியெல்லாம் அறியப்படுகின்ற நகர்ப்புறத்தில் உள்ள புதிய நடுத்தர வர்க்கப் பிரிவினரில் இருந்து வந்த சிலரால் தோற்றுவிக்கப்பட்டதே இவ்வியக்கம்.


 அன்றைய  நிலைமையில் ‘போரை நிறுத்துங்கள்; தமிழர்களைக் காப்பாற்றுங்கள்’ (Stop War; Save Tamils ) என்ற முழக்கத்தோடு செயல்படத் தொடங்கியதால் இவ்வியக்கத்தின் பெயரே ’சேவ் தமிழ்சு’ (Save Tamils) என்று மாறிப் போனது. போர் நின்றுவிடும் என்று நம்பினோம். ஆனால் அது பேரழிவோடு முடிவுக்கு வந்தது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று வகைதொகையின்றி நடந்த படுகொலைகள், உலகின் மிகப் பெரிய ’ சனநாயக’ நாடென்று சொல்லப்படும் இந்தியா போருக்கு துணை நின்றமை, மெளனத்தோடு வேடிக்கை பார்த்த சர்வதேச  சமூகம், தமிழ்நாட்டில் நடந்த தீக்குளிப்புகள், போரை நிறுத்த முடியாமல் கையறு நிலையில் நின்ற  தமிழ்நாடு – இவை அனைத்தும் வாழ்நாள் அர்ப்பணிப்புக்கும் நீண்ட போராட்டத்திற்கும் கட்டளையிட்டன. தொடர்ந்து செயல்பட்டோம். ஒன்றன் பின் ஒன்றாக தமிழ்நாட்டில் நிலவும் சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட அனைத்துவகை  முரண்பாடுகளிலும் ஒடுக்கப்பட்டோர்  பக்கம் நிற்கத் தொடங்கினோம். வளங்களையும், வாழ்வாதாரங்களையும் காக்கும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆதரவாக நடுத்தர வர்க்கத்தினரிடையே கருத்தை உருவாக்க முயன்றோம். ’வளர்ச்சி’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் உலகமய பொருளாதார கொள்கைகளை அம்பலப்படுத்தத் தொடங்கினோம். சமூகத்தில் இருந்து பிரித்து தனி மனிதர்கள் ஆக்கப்பட்ட  நகர்ப்புற நடுத்தர வர்கத்தினரிடம் கூட்டு உணர்வும், கூட்டு சிந்தனையும், கூட்டு உரிமை பற்றி விழிப்பும் வளர்க்கப் பாடுபடுகின்றோம்.

சமூகத்தின் உழைப்பால் விளைந்த நாங்கள் எங்களுக்கு வாய்க்கப்பெற்றுள்ள தொழில்நுட்ப ஆற்றல்களை இச்சமூகத்தின் நீடித்த வளர்ச்சிக்கும் நேர்வகை மாற்றத்திற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.   இந்தப் பயணத்தில் சமூக மாற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயக்கங்களும், அமைப்புகளும், பல ஆண்டுகள் போராட்டக் களத்தில் நின்றதால் பட்டறிவு பெற்ற தோழர்களும் எமக்கு தோள் கொடுத்து இச்சமூகத்திற்கு பயனுறும் வகையில் எம்மை வளர்த்தெடுத்தார்கள்.
இப்போது  எமக்கு அகவை ஐந்து நிறைந்து  ஆறாம் ஆண்டில் நடை போட்டுக் கொண்டிருக்கின்றோம். இயக்கத்தின் பெயர் தமிழில் இல்லை என்பதும் பாதிக்கப்பட்ட கையறு நிலையினராக தமிழர்களைக் காட்டுவதும் பெயர் மாற்றத்தைக் கோரி நிற்கும் முதன்மைக் காரணங்கள். வரலாற்றின் இந்தக் கட்டத்திற்கும்  எமது செயற்பாட்டுக்கும் பொருத்தமான  ஒரு பெயரைத்  தேடி கண்டடைந்துள்ளோம். அப்பெயர் தான் இளந்தமிழகம்!

கடந்த காலத்தை உள்வாங்கி நிகழ்காலத்தில் ஊன்றி நின்று எதிர்காலத்தை நோக்கிப் பயணித்து, பழையன கழித்து புதியன புகுத்தும் மரபினை ஏற்று, புதுமையை உட்செரித்து மாறவும் மாற்றவும் துணிவு கொண்டு, புதிய சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணாய் திகழும் இளம்பருவத்தின் பண்புகளோடு மிளிரும் இளந்தமிழகத்தின் ஓர் அமைப்பு வடிவமே இந்த இளந்தமிழகம். இது இளந்தமிழகம்! சமூக நீதிக்காகவும், சனநாயகத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் உள்ளாற்றலுடன் எழும் தமிழகம்!
21 ஆம் நூற்றாண்டில் தமிழகம் என்ற தலைப்பிட்ட இந்நிகழ்வினூடாக புதிய பெயரை அறிவித்து எமது கொள்கை அறிக்கையை வெளியிடுகின்றோம். தமிழகத்தின் இன்றைய நிலை, தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால தேவை ஆகியவைக் குறித்து பல்வேறு அரசியல் நீரோட்டங்களைச் சேர்ந்த தோழர்களும், ஆன்றோர் அறிஞர் பெருமக்களும் உரையாற்ற இருக்கின்றார்கள். இதை படித்துக்  கொண்டிருக்கும் உங்களையும் இந்நிகழ்வுக்கு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
                                    
தலைப்பு: 21 ஆம் நூற்றாண்டில் தமிழகம்

நாள்: 13-ஜூலை-2014, நேரம்: மாலை 3 மணி முதல் 8 மணி வரை

இடம்: செ.தெ. நாயகம் பள்ளி, வெங்கட்நாராயணா சாலை,(திருப்பதி கோயில்) எதிரில்), தியாகராய நகர், சென்னை.

சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் பெயர் மாற்றம், கொள்கை அறிக்கை வெளியீடு
இளந்தமிழகம் இயக்கம்
Young Tamil Nadu Movement
www.ilanthamizhagam.com
iianthamizhagam@gmail.com  , 98844 68039, 99419 06390
முகநூல், ட்விட்டர்: இளந்தமிழகம்
அலுவலக முகவரி: 42/21, மேட்டுத் தெரு, வேளச்சேரி, சென்னை 600 042.

                                                
முதலாம் அமர்வு:

தலைமை: தோழர். சமந்தா, பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

வரவேற்புரை:  தோழர். சரவணக்குமார், பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

சிறப்புரை:

கவிஞர் இன்குலாப்

பேராசிரியர் மணிவண்ணன், அரசியல் துறை தலைவர், சென்னை பல்கலைகழகம்
தோழர் சுந்தரி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

தோழர் சீதாராம், மாணவ செயற்பாட்டாளர், தெலங்கானா

சேவ் தமிழ்ஸ் முதல் இளந்தமிழகம் வரை – தோழர் செய்யது, பொதுக் குழு உறுப்பினர், இளந்தமிழகம்
நன்றியுரை: தோழர் சஃபானா, இளந்தமிழகம்
கலை நிகழ்ச்சிகள்  - பறை இசை, நடன நிகழ்ச்சிகள், நாடகம், கவிதை , பாடல்.

தோழமைகள் மதிப்பியல் நிகழ்வு

இரண்டாம் அமர்வு:

தலைமை: ஜார்ஜ், பொருளாளர், இளந்தமிழகம்

வரவேற்புரை: தோழர் நற்றமிழன், பொதுக்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

சிறப்புரை:

தோழர் ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி

தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் மீ.த. பாண்டியன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட கட்சி(மா.லெ), மக்கள் விடுதலை, தமிழ்நாடு

தோழர் வ.கீதா, அரசியல் செயற்பாட்டாளர்.

ஈழ விடுதலை – எமது பார்வை: தோழர் இளங்கோ, செய்தித் தொடர்பாளர், இளந்தமிழகம்

தமிழகத்தின் சமூக வளர்ச்சி நிலை – எமது பார்வை தோழர் பரிமளா, செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம்

தமிழகத்தின் அரசியல் வளர்ச்சி நிலை – எமது பார்வை தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்

இளந்தமிழகம் இயக்கத்தின் நோக்கமும், தேவையும்  - தோழர் கதிரவன், செயற் குழு உறுப்பினர், இளந்தமிழகம்
நன்றியுரை: தோழர் பிரவீன் ராஜ், செயற்குழு உறுப்பினர், இளந்தமிழகம்.

Thursday, July 3, 2014

சாதி வெறிக் கட்சிகளை அரசியலில் தனிமைப்படுத்துவோம் - தோழர். செந்தில்

நுகும்பல் தாக்குதல்: சாதிய தாக்குதல்களைத் தொடரும் சாதி வெறிக் கட்சிகளை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் – தோழர். செந்தில் 

கடந்த 16 சூன் திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா நுகும்பல் கிராமத்தில் பகல் 1 மணி அளவில் சாதி வெறியர்கள் கும்பலாக சென்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி பொருட்களைச் சூறையாடி வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.  
 இந்த தாக்குதலில் 22 விடுகளும், பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன. பகல் வேலையில் ஊர் மக்கள் அனைவரும் ஏரி வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் ஆதிக்க சாதி கும்பல் குடியிருப்புகளை முழுமையாக கொளுத்தியுள்ளனர்.

நடந்ததை விபத்து என சித்தரிக்க முயன்று, சாதி வெறியர்களுக்கு துணை நிற்க முயன்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு பிறகு, விபத்து நடந்து நான்கு நாட்கள் கடந்த பிறகு இந்த தாக்குதல் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்களை பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காட்டியும் சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.    

இந்நிலையில் தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் 13 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காது சாதி வெறியர்களுக்குத் துணை நின்ற சித்தாமூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சீதேவியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மெத்தனம் காட்டிய காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாத காவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்முறையைத் தூண்டி வரும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதிச் சங்கங்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் கட்சியின் சார்பாக சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்தத் தாக்குதலை கண்டித்து சேவ் தமிழ்சு இயகக்த்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆற்றிய கண்டன உரை:

”நேற்று நத்தம் இன்று நுகும்பல் என்று இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைப்பை கொடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது. பல நூறு ஆண்டுகளாக சாதி ஒடுக்குமுறைகளும் சாதி அடிப்படையிலான தாக்குதல்களும் நம் நாட்டில்  நடந்து வந்தாலும் நத்தத்தில் நடந்த தாக்குதலுக்கும் இந்த தாக்குதலக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது
முதலாவதாக, இது ஒரு இடைநிலை சாதியைச் (வன்னியர் வகுப்பை) சேர்ந்த ஒரு சிலர் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது நடத்திய தாக்குதல். இரண்டாவதாக, வடக்கு தமிழகத்திலே நடந்த தாக்குதல்
மூன்றாவதாக, முந்தைய கொடியன்குளம், திண்ணியம் போன்ற இடங்களில்  நடந்த வன்கொடுமைகளுக்கு மாறாக இங்கு நடந்த தாக்குதலுக்கு உள்ள தொடர்பு என்பது இது முழுக்க முழுக்க தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பதவி அரசியலுக்காக பா.ம.க வால் துண்டிவிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தான் இந்த இரண்டு தாக்குதலுக்கும் உள்ள ஒற்றுமை. கடந்த கால தாக்குதலுக்கும் இவற்றுக்கும் உள்ள வேறுபாடு.

அனைத்தும் சாதிய தாக்குதலாக இருந்தாலும் இந்ததாக்குதல்களின் நோக்கத்தில் ஓர் ஒற்றுமை உள்ளது. அது தான் நாம் இங்கு உன்னிப்பாக‌ கவனிக்க வேண்டியதாகும்.  


இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க தோல்வி அடைகின்றது. சட்டமன்றத் தேர்தலிலும் பெருந் தோல்வி அடைந்தது.   இந்த நிலையில் தான் முந்தைய காலங்களில் தேர்தல் அரசியலுக்காக வாக்கு நலனுக்காக தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடித்த மருத்துவர் இராமதாசு அவர்கள், தேர்தல் தோல்விகளுக்கு பிறகு சாதி வெறி அரசியலைத் தன்னுடைய மூல உத்தியாக கையிலெடுத்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த அரசியலை செய்து கொண்டிருக்கின்றார்.அவர்கள் இளவரசன் – திவ்யா காதலில் இருந்து தொடங்கி நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி இந்த மூன்று கிராமங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தி வீடுகளையும் பொருட்களையும் சூறையாடினர். அதற்கு பிறகு மரக்காணத்தில் நடத்தப்பட்ட  தாக்குதல். தொடர் முயற்சியால் இளவரசனையும் திவ்யாவையும் பிரித்தார்கள். சந்தேகத்திற்குரிய வகையில் இளவரசன் இறந்து போனது. இக்காலகட்டங்களில் பா.ம.க. வால் தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்ட தலித் எதிர்ப்பு சாதி அரசியல்,   இந்த தொடர் நிகழ்ச்சிப் போக்கின் பகுதியாகத் தான் நுகும்பலில் இப்போது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதற்கு இடையிலேயே ஒரு நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது அந்த தேர்தலிலே இராமதாசு(ஐயா) என்ற மன்னரின் மகன் இளவரன் அன்புமனி(சின்ன ஐயா) என்பவர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கின்றார். அதுவும் பா.ம.க, பா.ச.க போன்ற இந்துத்துவ பாசிச சக்தியோடு கூட்டணியை வைத்து இந்த தேர்தலில் களம் கண்டது. ஆக மொத்தத்தில் இந்துத்துவமும் சாதி வெறி அரசியலை உயர்த்திப்பிடிக்கும் பா.ம.க வும் ’வளர்ச்சி’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஒரு மிகப்பெரிய எதிரியாக நம் முன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
சூலை 4 வந்தால் இளவரசன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைகின்றது. அதற்காக ஒரு கண்டனக் கூட்டம் அல்லது நினைவுக் கூட்டம் நடதத வேண்டும் என நத்தம் ஊர் மக்கள் முயன்று வருகின்றார்கள். ஆனால் அங்குள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த துரை உள்ளிட்ட ஐந்து நபர்களை நேற்று இரவு காவல்துறை கடத்திச் சென்றுள்ளது

அதாவது வன்னிய சாதி வெறி சக்திகள்  எங்கு வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம்; அவர்கள் சாதி வெறியை தூண்டிவிடலாம். ஆனால் சாதிய தாக்குதலுக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு எதிராக கண்டனக் கூட்டமோ நினைவுக் கூட்டமோ நடத்த வேண்டும் என்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கும் அவர்கள் மீது வழக்குப் போடுவதற்கும் அவர்களை ஒடுக்குவதற்கும்தான் இந்த காவல்துறை பயன்படுத்தப் படுகின்றது. பொதுவாக பல்வேறு ஒடுக்குமுறைகளில் நாம் சந்தித்துவரும் பிரச்சனை இது தான். தாக்கியர்களையும் தாக்கப்பட்டவர்களையும் ஒன்றைப் போல் நடத்துவதாக காட்டி கொண்டு அதன் இறுதி அர்த்தத்தில் தாக்கியவர்கள் பக்கம் நிற்பது தான் இந்த அரசின் வேலையாக இருக்கின்றது. பொதுவாக எல்லா அரசுகளும் இப்படி நடந்து கொள்கின்றன.நேற்று மாலை கைது செய்யப்பட்டவர்களை இப்போது வரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை காவல் துறை. ஆயுதங்கள் வைத்திருக்கின்றார்கள் என்றொரு பொய்வழக்கைச் சோடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குக் காரணம் கைதுசெய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்று இளவரசனுக்கு ஒரு  நினைவுக் கூட்டத்தை நடத்திவிட வேண்டும் என்று முயன்று வருகின்றார்கள். காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அதனால் எங்களை மீறி நீங்கள் நீதிமன்றம் சென்று நினைவுக் கூட்டம் நடத்திவிடுவீர்களா என்று இந்த ஐவரை கைது செய்வதன் மூலம் நத்தம், அண்ணாநகர், கொண்டாம்பட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்திப் பார்க்கின்றது காவல் துறை.

அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தலாம்; காவல்துறை தாழ்த்தப்பட்ட மக்களை அச்சுறுத்தும் விதமாக கைது செய்யலாம்; தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கலாம். ஆனால் இவற்றை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பதற்கு இங்கு நாதி இல்லை என்ற நிலைதான் கடந்த இரண்டு ஆண்டு காலமாக இங்குஇருந்து வருகின்றது.

பா.ம.க வை பொறுத்த வரை தன்னுடைய பதவி அரசியலுக்காக முதலில் தமிழ்த்தேசியம் பேசினார்கள் பதவி அரசியலுக்காக தமிழ்நாட்டை இரண்டாக உடைத்து வடக்கு தமிழகத்திலாவது தாங்கள் முதல்வர் பதவிக்கு வந்துவிட முடியாதா என்று கனவு கண்டார்கள். பதவி அரசியலுக்காக காங்கிரசோடு கூட்டணியில் இருந்தார்கள் இப்பொழுது பதவிக்காக பா.ச.க வோடு கூட்டணியில் இருக்கின்றார்கள்.
காங்கிரசோடு இருந்தாலும் சரி, பா.ச.க. வோடு இருந்தாலும் சரி  தமிழ்நாட்டு மக்களின் நலனை ஆளும் வர்க்கத்திற்கு பலியிடுவதுதான் இதுவரை பா.ம.க செய்து வந்தது எனதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே பா.ம.க வை அரசியல் களத்தில் இருந்து தனிமைப்படுத்த வேண்டியது தமிழகத்தில் உள்ள அனைத்து சனநாயக சக்திகளின் முதன்மைக் கடமையாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் கடந்த தேர்தலின் பொழுதும் பா.ம.க – பா.ச.க கூட்டணியைப் பொறுத்தவரை நாம் பா.ச.க. வை தோற்க வேண்டும் என்று முனைந்த அளவுக்கு பா.ம.க வை நோக்கி நாம் வினையாற்றவில்லை. வை  பா.ம.க வை வீழ்த்த வேண்டும் என்பதை ஒரு அரசியல் முழக்கமாக முன்னெடுத்து அதற்கான போதிய முயற்சிகளை செய்யவில்லை என்பதை குற்ற உணர்ச்சியோடு நான் இங்கு பதிவு செய்கின்றேன்.


ஏனென்றால் அந்த தேர்தலுக்கு முந்தைய மார்ச் மாதத்தில் ஐ.நா. தீர்மானம் உள்ளிட்ட வேறு பிரச்சனைகளில்  நாம்  கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பா.ம.க வை வீழ்த்துவதற்கான வியூகத்தை நாம் வகுக்கவில்லை அதற்கான போதிய தயாரிப்பை நாம் செய்யவில்லை. அதன் விளைவு தான் இன்று அன்புமனி முடி சூடியவராக நாடாளுமன்றத்திற்குள் சென்றிருக்கின்றார்.

தமிழக அரசு இது போன்ற தாக்குதலில் என்ன பாத்திரத்தை வகிக்கின்றது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது. தமிழக அரசு மக்கள் நல அரசாக இன்று காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது ஆனால் உள்ளார்ந்த பொருளில் இது உண்மையில்லை. இதை நாம் தோலுரித்துக் காட்டாவிட்டால் சனநாயகத்திற்கான நமது போராட்டத்தில் ஓர் அங்குலம் கூட நம்மால் முன்னேறிவிட முடியாது.


ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதல் ஆனாலும் சரி, இளவரசன் மரணம் ஆனாலும் சரி இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீதோ அதை தூண்டியவர்கள் மீதோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்க எடுக்கவில்லை. சித்திரை திருவிழாவிற்காக மாமல்லபுரத்திலே நடந்த வன்னியர் சங்கக் கூட்டத்தில் தமிழக முதல்வர் செயலலிதாவை நோக்கி சவால் விடுவது போல் பேசிய காரணத்திற்காகத்  தான் பா.ம.க. வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்தார்களே ஒழிய,  அந்த கூட்டத்தைக் கால நீட்டிப்பு செய்து நடத்தினார்கள் என்ற காரணத்திற்காக தான் கைது செய்தார்களே ஒழிய சாதி வெறியை தூண்டியதற்காகவோ தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  தாக்குதலை நடத்தியதற்காகவோ வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்யவில்லை. ஏனென்றால் தமிழக அரசு எண்ணிக்கை அளவிலே பெரும்பான்மையாக இருக்கும் சாதிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கட்சிகளைப் பார்த்து அச்சப்படுகின்றது. தனது தேர்தல் நலன் பாதித்துவிடக் கூடாதென்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களைப் பலி பீடத்தில் ஏற்றத் தயங்குவதில்லை. 

தமிழக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு பொதுவான அரசாக நடந்து கொள்ளவில்லை. எனவே தமிழக அரசு தோற்றத்திலே தமிழ் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது போல காட்சியளித்தாலும்  இங்குள்ள உழைக்கும் மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் எதிராகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும். எல்லாமே தோற்றத்தில் நன்றாக போய்க் கொண்டிருப்பது போலத் தெரியும். நாமும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் ஆனால் நம்முடைய சனநாயகத்திற்கான போராட்டத்திலே ஒரு சிறு அடி கூட நாம் முன்னேறி சென்றுவிட முடியாது என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

இன்று தமிழகம் இரண்டு தமிழகமாக இருக்கின்றது. ஒன்று நகரம் இன்னொன்று கிராமம். நகரத்திலே பளபளக்கும் சாலைகள் இருக்கின்றன. பல்வேறு பன்னாட்டு நிறுவன‌ங்களின் மூலதனம் இறங்கிக் கொண்டிருக்கின்றது. அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் நகர வாழ் மக்களைக் குறி வைத்து வந்து கொண்டிருக்கின்றது. நகரத்தின் நுகர்வுக் கலாச்சாரமும், நகரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வளர்ச்சியும் நகரத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் மூலதனமும் ஒருபக்கம். மறுபக்கத்தில் கிராமங்களில் படுத்துக் கிடக்கும் விவசாயமும் எந்த நுகர்வுக்கும் உள்ளாகாத கிராமப்புற மக்கள், நகரங்களின் வளர்ச்சிக்காக தங்களுடைய நிலம், நீர் வளங்களை அள்ளிக் கொடுத்தார்கள். 

ஆனால் நகர்ப்புற மக்களின் நுகர்வுக்கும் கிராமப் புற மக்களின் நுகர்வுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உருவாகியுள்ளது. நகரங்களும் கிராமங்களும் நாட்டில் இரு இரு துருவங்களாக மாறிப் போயுள்ளன. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட சென்னை நகர வளர்ச்சிக்கு தன்னுடைய மண் வளத்தையும், நீர் வளத்தையும் தந்துள்ளது. இப்படி நகரத்திற்கும் கிராம‌த்திற்குமான முரண்பாடு பகைத் தன்மையை அடைந்துள்ளது. நகரத்தில் நடப்பவை அனைத்துமே நாட்டின் பேசு பொருளாகின்றது. 

இன்று தமிழ்நாட்டில் அரசியலைப் பார்த்தால் இராக்கில் நடந்து கொண்டிருக்கும் சண்டையை பற்றி பேசுகின்றோம், இலங்கையில் நடக்கும் தாக்குதலைப் பற்றிப் பேசுகின்றோம், உத்திரப் பிரதேசத்தில் நடப்பதைப் பற்றிப் பேசுகின்றோம். ஆனால் தமிழ் நாட்டில் நடக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலோ அநீதியோ ஒரு பேசு பொருளாகக் கூட மாறுவதில்லை. 

முகநூலில் பார்த்தால் அண்மையில் வந்த ‘with you and without you’ திரைப்படம் எந்த அளவிற்கு பேசு பொருளானதோ அதில் ஒரு சதவிகிதம் கூட நுகும்பல் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் விவாதிக்கப்பட வில்லை. எது பேசப்பட வேண்டும், எது இந்நாட்டு அரசியலில் மைய விவாதப் பொருளாக வேண்டும் என்பதை நகரங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.


தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டு மக்களின் சனநாயகத்திற்கான போராட்டத்தைத் குறிக்கும் சொல்.    சமூக நீதி, சமூக ஜனநாயகம் ஆகியவற்றைக் கைவிட்டுப் பேசப்படும் தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேசியம் அல்ல. அது இனவாதமாகவும், சாதியவாதமாகவும்தான் இருக்க முடியும்.எனவே தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் சனநாயகத்திற்கானப்போராட்டத்தை முன்னெடுப்பது தான் நமது முதன்மைக் கடமையாக கருதி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முதலில் நகரங்களில் பேசு பொருளாக்குவோம். 

ஒடுக்கப்படும் மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்ற சனநாயக உணர்வை வளர்த்தெடுப்போம். இவை மட்டுமின்றி பா.ம.க வை அரசியல் அரங்கிலிருந்து தனிமைப்படுத்தவதற்காக சூளுரைத்து அதற்கான வியூகங்களை நாம் வகுக்க வேண்டும் என்று கூறி என்னுடைய உரையை முடிக்கின்றேன்.  

உரை குறிப்பு, தட்டச்சு : இளங்கோவன்

புகைப்படங்கள் : நுகும்பல் கிராமம் பா.ம.க-வின் தாக்குதலுக்கு பிறகு