Tuesday, July 8, 2014

கச்சத்தீவு ‍ - பல்லைக் கழட்டாத பாம்புகளின் வேடம் கலையும் தருணங்கள்





கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை என நேற்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு வாதிட்டிருக்கிறது.மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றிருக்கிறது என்பதை இப்போது இங்கே ஒரு தகவலுக்காக சொல்லி வைக்கிறேன்.தமிழக எல்லைக்குட்பட்ட விஷயங்களில்,  தமிழக உரிமைகளில், நமது தேசிய இனப்பிரச்சினைகளில், இந்திய அரசு வரலாறு முழுதும் நம் கழுத்தில் காலை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, நேற்றைய செய்தி மட்டும் போதுமான எடுத்துக்காட்டாக இருக்க முடியாது. இந்தி திணிப்பு, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை என இந்திய அரசிற்கும் தமிழர் என்ற தேசிய இனங்களுக்கும் இடையிலான தொடர் முரண்பாடுகளின் ஒரு கூறு தான் கச்சத்தீவு பிரச்சினையும்.


கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான மண்.  1874 முதல் 1956 வரையிலான நில அளவை ஆவணங்கள் இதை உறுதி செய்கின்றன. இவ்வளவு ஏன்? கச்சத்தீவின் வருவாயைக் கணக்கு வைக்கவே இராமநாதபுரம் மன்னரின், இராமநாத விலாசத்தில் தனி எழுத்தரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஆகவே கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என ஒருவர் விவாதம் செய்வாரேயானால்,  நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல பதில் சொல்லலாம். கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான பகுதி.  இந்தியாவிற்கோ இலங்கைக்கோ ஒரு பிடி மண் கூட அங்கு உரிமையில்லை.  இப்படி உறுதியான ஆவணங்கள் இருந்தும் கச்சத்தீவு ஏன் இப்போது இலங்கை வசமிருக்கிறது.  நம் சொந்த கடற்பரப்பிற்குள் மீன்  பிடிக்கும் உரிமையை, யார் தட்டிப்பறிப்பது ?  கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை மறுத்ததன் மூலம்,  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை மட்டும் இந்திய அரசு பறிக்கவில்லை. இது நமது தாயக உரிமை பறிப்பு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1974 மற்றும் 1976 ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியே திருவாய் மலர்ந்திருக்கிறார். ”ஆவணங்களின் அடிப்படையில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கொடுத்தோம்” என்று. அப்படி என்ன அரசியல் என்ன காரணம்?  



கச்சத்தீவு மிகவும் வளமான தீவு.  மீன் வளம் நிறைந்த பகுதி.  உலகிலேயே பால்கன் (ஐரோப்பாவில்) நீரிணைப்புக்கு நிகரான மீன்வளம் கொண்ட பகுதி கச்சத்தீவு மட்டுமே.  கடலின் நீர்ப்போக்கு, கடல்வாழ் உயிரின வளத்தையெல்லாம் கச்சத்தீவு அமைந்துள்ள பாக் நீரிணைப்பை நோக்கிக் கொண்டு வருகிறது.  கோடியக்கரையிலிருந்து, தனுஷ்கோடி வரை அமைந்துள்ள கடற்பரப்பு “பாக் நீரிணைப்பு” என்றழைக்கப்படுகிறது. இக்கடற்பரப்பில் தான் கச்சத்தீவும் அமைந்திருக்கிறது.  கோடியக்கரை பகுதியில் தான் THRISSOCIES என்றழைக்கப்படும் மீன்களுக்கு உணவாகக் கூடிய சிறுமீன்கள் அதிகம் கிடைக்கின்றன.  இந்த இறை மீனைத் தேடித் தான்,  எண்ணற்ற மீன்கள் இப்பகுதியில் வந்து வாழுகின்றன. அப்பகுதியை பெட்ரோ பேங்க் என அழைக்கிறார்கள். மேலும் அக்கடற்பரப்பில் அமைந்துள்ள தீவுகள் குன்றுகள் ஆகியவற்றும் அடிப்பரப்பும் படுகைகளும் ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளுக்கு வேண்டிய கனிம வளத்தைத் தரக்கூடியவை. இது மட்டுமின்றி பவளப்பாறைகளும், கடல் ஆமைகளும்  என வளம்மிக்க‌ பகுதியாக விளங்குகிறது கச்சத்தீவு. இப்படிப்பட்ட வளம்மிக்க பகுதியான கச்சத்தீவை 1956 முதல் இலங்கை அரசு சொந்தம் கொண்டாடத் தொடங்கியது. 

1971 வங்கதேசப் போருக்கு பின் இலங்கையில் விமானத்தளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதியான இலங்கையில்,  தனது எதிரி நாடு விமானத் தளம் அமைப்பது இந்திய அரசிற்கு அவ்வளவு உவப்பாக இல்லை. எப்படியாவது இத்திட்டத்தை தடுக்க, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகாவிடம் பேசத் தொடங்கினார். “கச்சத்தீவை எங்களுக்கு தந்து விட்டால், தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்” என்று பண்டார நாயகா பேரம் பேசத் தொடங்கினார். பேரம் படிந்தது.  தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது குறித்து கவலைப்படாமல் பொறுப்பற்ற முறையில், கச்சத்தீவை இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமலேயே இலங்கைக்குத் தாரை வார்த்தார் இந்திரா.  1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் மூலம், கத்தியின்றி இரத்தமின்றி கச்சத்தீவு இலங்கை வசம் வீழ்ந்தது. 


இருந்தாலும் சில உரிமைகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 1974  ஜூன் 26 மற்றும் மற்றும் 28 ஆம் திகதிகளில் கையெழுத்தான முதல் ஒப்பந்தத்தில்  கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், அந்தோணியார் திருவிழாவிற்குச் செல்லவும் உரிமை மிகத் தெளிவாக வழங்கப்பட்டிருக்கிறது. 

அந்த ஒப்பந்தத்தின் விதி 5 :

இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத்தீவுக்கு இது நாள் வரை வந்து போனது போல் வந்து போகவும், கச்சத்தீவை அனுபவிப்பதற்கும்  முழு உரிமையுடையவர்கள். இதற்காக சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ, நுழைவு அனுமதிகளோ பெற வேண்டியதில்லை. 


இந்த ஒப்பந்தங்களின் நகல்கள் அனைத்தும் கீழ்க்கண்ட பக்கத்தில் 
 இணைக்கப்பட்டிருக்கிறது.




மேலும் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தான அன்றைய தினமே, அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஸ்வரன் சிங் பாராளுமன்றத்தில் வாசித்த அறிக்கையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றும் வாக்குறுதிகள் அளித்தார். இப்போது அந்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்து விட்டன.

ஆனால் இன்று காங்கிரசு களவாணிகள் முதற்கொண்டு பா.ஜ.க  பெருச்சாளிகள் வரை ’ஒப்பந்தம்’ என்று கூவுவது 1976 ஆம் ஆண்டு இரு வெளியுறவுச் செயலர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒரு கடிதப் போக்குவரத்து மட்டுமே. இதை ஒப்பந்தம் என்று சொல்வதே அபத்தமாக இருக்கும். “எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது” என்பது இந்திய வெளியுறவுச் செயலர் கேவல்சிங், அப்போதைய இலங்கை வெளியுறவுச் செயலர் ஜெயசிங்கேவுக்கு எழுதிய கடித்ததில் மட்டுமே உள்ளது.  

இந்த ஒப்பந்தங்களின் பின்னணியில்,1983ல் எண்ணற்ற ஈழத்தமிழர்கள், சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.அப்போதிருந்து, இப்போது வரை கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் கொத்து கொத்தாகக் கொல்லப்படுவதும், வலைகள் அறுக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் என அநியாயங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

எல்லை மீறி வந்ததால் சுடுகிறோம் என வழக்கம் போல இலங்கை அரசு  கை விரிக்கும். ஆனால் பல துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள், இந்திய எல்லைக்குள்ளே நடந்தவைகள் தாம்.அப்படியே எல்லை மீறி மீன் பிடித்தாலும் அது சுட்டுக் கொல்லப்படும் அளவுக்கு கொடுங்குற்றமாகாது. இந்தியக்கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படை சுடுவதில்லை. மேலும் கடல் எல்லை என்பது நாடுகள் உருவாக்கிக் கொண்டது தான். பல நாட்டு மீனவர்கள் அந்நிய கடற்பரப்பில் மீன் பிடித்தலென்பது வழக்கமான விஷயம் தான் என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம். கடலில் எல்லைக் கோடு போட முடியாது என்பது எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்ட உண்மை. 

இந்திய எல்லையாக இருந்தாலும் சரி, இலங்கை எல்லையாக இருந்தாலும் சரி. இலங்கை இந்தியாவுடனான மட்டைப் பந்தாட்டப் போட்டியில் தோற்றாலும் கூட இந்திய மீனவன் தான் சிங்களத் துப்பாக்கிகளின் எளிய இலக்காகிறான். வரலாற்றின் பக்கங்கள் முழுதும், இந்தியா எனும் வல்லாதிக்க அரசிடமிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதாக வேண்டி, இலங்கை தொடர்ந்து இந்தியாவை எதிரி முகாமிலே தான் இன்னமும் வைத்திருக்கிறது. அதற்கு நேர்மறையாக, தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையை தன் வசம் வைத்திருக்க வேண்டி, இலங்கையை இன்னமும் நட்பு நாடு என்று அழைத்துக் கொண்டாடி வருகிறது இந்தியா. இந்த நட்பு பாராட்டும் நாடகங்களில் வாயிலாகத் தான், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் உயிர்களும் உடைமைகளும் விலை பேசப்படுகின்றன. தமிழகத்தின் தாயக உரிமையான கச்சத்தீவும் சமரசம் செய்து கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் தான் ஐக்கிய நாடுகள் கடற்சட்டத்தின் 145 ஆம் பிரிவு ( Article 145th of the UN Law of the Sea) "கடலில் மனித உயிருக்கு (மீனவர்களுக்கு ) போதிய பாதுகாப்பு வழங்கி உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்"  என உறுதியளிக்கிறது. மேலும் மேற்கண்ட சட்டத்தின் 75 ஆம் பிரிவு "கடலோரம் அமைந்துள்ள அரசு, சட்டத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்ப சோதனை செய்தல், கைது செய்தல், வழக்குமன்ற நடைமுறையை பின்பற்றுதல்  ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்" எனச் சுட்டிக் காட்டுகிறது. ஆகவே கடல் எல்லைகளைத் தாண்டும் மீனவர்களைக் கொல்வது, ஐ.நாவின் கடற்சட்டத்தை மீறுவதாகும்.


=============


தமிழக மீனவர்கள் உரிமை மறுக்கப்பட்ட அதே கேவல்சிங் ஜெயசிங்கே கடிதத்தில் இலங்கை மீனவர்கள் கன்னியாகுமரிக்கு மிக அருகில் உள்ள வாட்ஜ் பேங்க் என்னும் இந்திய கடல் எல்லைக்குள் வந்து மீன்  பிடிப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டிருக்கிறது என்பது தான் கொடூர நகைச்சுவை. அதை விட நகைப்புக்குரிய விஷயம் “இலங்கை மீனவர்கள் ஆறு படகுகளில் மட்டுமே வந்து ஆண்டுக்கு 2000 டன் மீன்கள்  பிடித்துக் கொள்ளலாம்” என்று கேவல்சிங் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த படகுகளை எண்ணுவது யார்? மீன்களை எடை போடப் போவது யார்?

கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு, தமிழகத்தின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 22. தமிழகத்திலிருந்து சென்ற கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16. கண்டனக்குரல்களுக்கும் அறிக்கைகளுக்கும் தீர்மானங்களுக்கும் பஞ்சமில்லை. அப்போதைய முதல்வர் கருணாநிதி, இந்த ஒப்பந்தங்களை எதிர்த்து, அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். ஆனால் கடுமையான எதிர்ப்பெல்லாம் இல்லை. அப்போது தி.மு.கவிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர், கருணாநிதி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால், இந்திரா தலைமையிலான காங்கிரசு அரசின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ளவும், எம்.ஜி. ஆரை சமாளிக்கவும் காங்கிரசு பக்கம் சாய வேண்டியதாக இருந்தது. தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எப்படி சாய்ந்தார்களோ அப்படி ஒரு சாய்வு. 

அதிமுக அரசும் வெகுநாட்களுக்கு பிறகு 2008ல் தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஆனால் அவ்வப்போது இருவரும் வீர வசனங்களை மாறி மாறிப் பேசினாலும், கண்டனம் கடிதம், இவைகளைத் தாண்டி பெரிய சலசலப்புகள் இல்லை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் ஒப்பந்தங்களின் வாயிலாக‌ தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை, வழக்குகள் மூலம் கேள்வி கேட்க முடியும் என்ற நிலையை அடைவதற்கு, நமக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன என்றால் மாநில அரசுகளிலும் ஒருவித சமசரங்கள் இருந்திக்கின்றன என்பது தெளிவு.காங்கிரசு அரசு தமிழர் விரோத அரசு, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வந்தால் கச்சத்தீவை மீட்டுத் தந்துவிடுவார் என்ற மோடிக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எல்லாம், இன்று வாயடைத்து போயிருக்கின்றனர். பா.ஜ.கவின் சுஷ்மா சுவராஜ் தலைமையில் பாம்பனில் நடைபெற்ற கடல் தாமரை மாநாடெல்லாம், ஓட்டுப் பொறுக்கவே அன்றி மீனவர் உரிமையை மீட்டெடுக்க அல்ல. 

ஆக இந்திய ஒன்றியத்தின் நலன்களுக்காக, இந்திய அரசால் விலங்கிடப்பட்டிருக்கும் தேசிய இனங்களின் நலன்களும் உரிமைகளும் ஒட்டுமொத்தமாக அடகு வைக்கப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உரிமையை இலங்கைக்கு அடகு வைத்ததன் மூலம், தமிழகத்தின் இறையாண்மையை நாம் விட்டுக் கொடுத்து நிற்கதியாக நிற்கிறோம். பா.ஜ.க வந்தால் சரியாகி விடும், ஆம் ஆத்மி வந்தால் சரியாகி விடும்  என்ற முனகல்களை பார்க்கும் போது, கவிஞர் காசி அனந்தனின் கவிதை நினைவுக்கு வருகிறது.

பாம்பு தோலைக் கழற்றி வைத்துவிட்டு புறப்பட்டது.

ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பக்கம் அது போனது.

"அதோ..பாம்பு உங்களுடைய இடத்தை நோக்கித் தான் போகிறது..நச்சுப்பாம்பு..பல் பட்டாலே போதும்" என்று கூவியது சேவல்.

"அப்படி ஒன்றும் நடந்து விடாது. பாம்பு தோலைக் கழற்றிப் புதிதாய்
பிறந்திருக்கிறது.." என்றது ஆடு.

சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல் புல்வெளியை உலுக்கியது. ஓசை வந்த‌
திசை நோக்கி சேவல் ஓடியது.

அங்கே பாவம்.. அப்பாவி ஆடுகள் இரண்டு பாம்புக்கு பலியாகிச் செத்துக் கிடந்தன.

சேவல் சொல்லியது,
"பல்லைக் கழற்றாத பாம்பு 
தோலைக் கழற்றி என்ன?
வாலைக் கழற்றி என்ன?"

ஈழ விடுதலை, தமிழக மீனவர் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை திணிப்பு, அரசு அலுவலகங்களில் இந்தி திணிப்பு என எல்லா முரண்பாடுகளிலும் தமிழக மக்களை ஒரு பொருட்டாக மதிக்காத‌, முழுக்க முழுக்க தமிழின விரோதப் போக்கு கொண்ட அரசுகளே மாறி மாறி இந்தியாவை ஆண்டு வருகின்றன. கச்சத்தீவை பொறுத்தமட்டில், தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என மீண்டும் மீண்டும் பொய்யுரைத்து நம்மை அலட்சியப்படுத்தும் இந்திய‌ அரசுக்கு நாம் சில விஷயங்களை சொல்ல வேண்டிய கட்டாயமிருக்கிறது. அது நமது தொடர் போராட்டங்களினூடாக நாம் ஆற்றப்போகும் எதிர்வினை. அரசப் பாம்புகளின் பல்லை பிடுங்கியே ஆக வேண்டுமல்லவா?


அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

தரவுகள்:

கல்வெட்டறிஞர் முனைவர் செ.இராசு அவர்கள் எழுதிய 
"நமது கச்சத்தீவு" புத்தகத்தைத் தழுவியும், தோழர் கண.குறிஞ்சியின் தகவல்களை முன் வைத்தும்.


2 comments:

  1. நன்றி...தெரியாத சில உண்மைகளை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete