அதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவரது முகத்தில் தான் எத்தனை கருணை, ஆகா, அவரது கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி குஜராத்தை எப்படி வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்... கற்காலத்தில் இருந்த குஜராத்தை ஒரே பாய்ச்சலில் கணிப்பொறி காலத்திற்கு கொண்டு வந்துவிட்டார் பாருங்கள், அந்த சாத்தான்களைப் பாருங்கள் எப்போதோ குஜராத்தில் நடந்த இசுலாமியர் படுகொலைகளை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இன்று நமது தேவ தூதருக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் நமது தேவ தூதரின் முகத்தில் தான் எத்தனை கருணை, தனது புஷ்பகவிமானத்தில் தான் செல்லும் போது மோதி வீழ்ந்த பறவைக்காக எப்படி தான் வருந்தினாரோ, அப்படி தான் வருந்தியதாக நமது தேவ தூதர் அந்நிகழ்வைப் பற்றி இன்றும் குறிப்பிடுகின்றாரே நமது தேவ தூதர், ஆனால் இந்த சாத்தான்கள் தான் கேட்க மாட்டேன் என்கிறார்கள்... என்றைக்கு கேட்டிருக்கின்றனர் இந்த சாத்தான்கள்... நல்ல வேளை இந்த சாத்தான்களின் பேச்சை மக்கள் கேட்காமல் நமது தேவ தூதரையே இந்திய லோக மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்கள்... தேவதூதனே லோக வளர்ச்சி... லோக வளர்ச்சியே தேவ தூதன்.....
இப்படித்தான் கடந்த சில மாதங்களாக ஊடகங்களும், மோடி ஆதரவாளர்களும் கூறிவந்தனர். ஏன் இன்றும் கூட மோடியைப் பற்றி, அவரது ஆட்சியைப் பற்றிய புகழுரைகளை மோடிக்கே கூசும்(?) அளவிற்கு தொடர்ந்து எழுதிவருகின்றார்கள், இவற்றை மட்டுமே படித்து வரும் ஒருவர் இந்தியா வல்லரசாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு உள்ளது, ஆனால் உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. மோடியின் 30 நாட்கள் ஆட்சியைப் பற்றி ஒரு பருந்து பார்வை பார்க்கலாம் வாருங்கள்....
1) இராணுவத்தில் 100 விழுக்காடு அன்னிய முதலீடு
2) தொடர்வண்டி பயணக்கட்டத்தை 14.2 விழுக்காடு உயர்த்தியது.
3) மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும்.
இவை மட்டுமல்ல பின்வருவனவும் பரிசீலனையில் உள்ளன...
1) கேஸ் விலையை மாதம் ஐந்து ரூபாய் உயர்த்துவது.
2) முதலாளிகளின் வசதிக்கேற்ப தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தற்போதைக்கு இல்லை, ஆனால் இராணுவத்தில் அன்னிய முதலீடு என்று அறிவித்திருக்கின்றது அரசு. 2,45,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சில்லறை வர்த்தகத்தை தற்சமயம் திறந்துவிட முடியாததால் 2,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவத்தை அன்னிய பெரு முதலாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளது அரசு. இதில் இராணுவத்திற்காக அரசு ஒதுக்கும் பணம் ஒவ்வொரு ஆண்டும் 5 விழுக்காடு (குறைந்தபட்சம்) அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பில் அன்னிய முதலீட்டை உள்ளே விட்டிருக்கும் பா.ஜ.கவும், மோடியும் இங்கே சுதேசி என்றும், அன்னிய நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது என்று அறிக்கை வெளியிடுவது வேடிக்கையிலும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.
அடுத்து தொடர்வண்டி பயணக்கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்தியுள்ளது, சாலைப் போக்குவரத்திற்கான பயணக்கட்டணங்கள் உயர்ந்து வருவதால் மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது தொடர்வணடியைத் தான் இன்று அதையும் உயர்த்தியுள்ளது மோடி தலைமையிலான அரசு. பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமலேயே, தொடர்வண்டித்துறையை இலாபத்தில் நடத்திக்காட்டியது காங்கிரசு தலைமையிலான முதல் அரசு. ஆனால் நான் காங்கிரசுக்கு மாற்று, இந்திய மக்களை சுபீட்சமடைய செய்யப்போகிறேன் என்ற மோடியோ, மக்களை காரிருளை நோக்கி நகர்த்தி வருகின்றார்.
மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் ஹிந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதன் மூலம் , தான் ஒரு சர்வாதிகாரி என்பதையும், தனது திட்டம் ஹிந்தி, ஹிந்து , ஹிந்தியா தான் என்பதையும் வெளிக்காட்டியுள்ளார் மோடி. சிலர் கேட்கக்கூடும் மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தானே உபயோகிக்க சொல்லுகின்றார் ,மத்திய அரசு ஊழியர்கள் அரசு சார்ந்த அறிவிப்புகளை சமூக தளங்களில் வெளியிடும் போது அது எல்லா மாநில மக்களுக்கும் புரிய வேண்டும், இந்த அறிவிப்பினால் ஹிந்தி மட்டும் தெரிந்த மக்களுக்கு தான் அந்த அறிவிப்புகள் புரியும், மற்ற மாநில மக்களுக்கு எதுவும் புரியாது. அது மட்டுமின்றி சமூக வலைதளங்கள் என்பவை அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் உட்பட்டவை அல்ல, உத்திரபிரதேசத்தில் ஒரு மத்திய அரசு ஊழியர் பதிவதை தமிழகத்தில் இருந்து நாமும், தெலங்கானாவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்து பார்க்கலாம், அப்படியிருக்க ஹிந்தியில் தான் சமூக வலைதளங்களில் பேச வேண்டும் என்பது இங்குள்ள மொழி பன்மைத்துவத்தை அழித்து ஹிந்தி ஆதிக்கமாகும், அதுமட்டுமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவரின் கருத்தை வெளியிடும் உரிமையை இது ஹிந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்களுக்கு மறுக்கின்றது. இதையெல்லாம் கேட்டால் இந்த மூன்று கொள்கைகளையும் முந்தைய காங்கிரசு அரசு தான் பரிந்துரைத்தது என்கிறார்கள் பா.ஜ.க அமைச்சர்கள். அப்படியென்றால் இவ்வளவு நாள் மோடி தான் மாற்று , அவரால் மட்டும் தான் எல்லாம் முடியும் என்று கூறியது ஏமாற்று வேலை என்று ஒப்புக்கொள்கின்றார்களா பா.ஜ.கவினர் ?????
இத்தோடு முடியவில்லை கேஸ் விலை மாதம் 5 ரூபாய் ஏற்றவிருக்கும் பரிசீலனை இறுதிக்கட்டத்தில் உள்ளது, ஏன் இந்த விலை உயர்வு என்றால் கேஸ் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவாம்... இந்த ஆண்டு ஒரு இலட்சம் கோடி இலாபம் ஈட்ட வேண்டும் என்று இலக்கை நிர்ணயிக்கின்றார்கள், ஆனால் ஆண்டிறுதியில் கணக்கு பார்த்தால் 70,000 கோடி ரூபாய் மட்டுமே இலாபம் வந்துள்ளது, ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 30,000 கோடி ரூபார் நட்டமாம்..இப்படி தான் உள்ளது இவர்கள் கூறும் நட்டக்கணக்கு, இப்படித்தான் பெட்ரோல், டீசல் விலையை மாதாமாதம் விலை உயர்ந்துவதற்கு அந்த நிறுவனங்களுக்கே அதிகாரம் வழங்கியது காங்கிரசு அரசு. பொருட்கள் உற்பத்தியிடத்திலிருந்து சந்தைக்கு வருவதற்கு ஆகும் பயணச்செலவு மாதாமாதம் இதனால் உயர்வதால் உணவு பொருட்களின் விலையும் மாதா மாதம் உயர்கின்றது, இதுவே பண வீக்கத்தின் அடிப்படை காரணமும் ஆகும். உலகிலேயே சிறந்த நிர்வாகி என்று ஊடகங்களால் உச்சி முகர்ந்து பாராட்டப்படும் திருவாளர். மோடியின் ஆட்சியில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கின்றது, இந்த உலகிலேயே சிறந்த நிர்வாகி பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்த 30 நாட்களில் என்ன திட்டத்தை செயல்படுத்தி மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பாற்றினார் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது, ஒரு வெங்காய விலையேற்றத்தைக் கூட கட்டுபடுத்த முடியாதவர் தான் இந்தியாவை வல்லரசாக்குவார் என எண்ணுவது "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்" என்ற முதுமொழியைத் தான் நினைவு கூறுகின்றது. மோடியின் இந்த (சோ)சாதனைகளை எல்லாம் பார்த்து வரும் மோடிக்கு வாக்களித்த (அவர் வளர்ச்சியை கொண்டு வருவார் என்று ஊடகங்கள் கூறியதை நம்பி வாக்களித்தவர்கள்) மோடி ஆதரவாளர்கள் இன்று வாயடைத்து போயுள்ளனர்.
மோடியும், ஊடகங்களும் கூறும் வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கானதே, அது மக்களுக்கானதல்ல என்று இன்றாவது அவர்கள் புரிந்து கொண்டால் நல்லது, அப்படி உங்களுக்கு புரியவில்லை என்றால், புரியவைக்கவே அடுத்த வரவிருக்கின்றது தொழிலாளர் நலச்சட்டத்திருத்தங்கள், இது தொடர்பாக எந்த தொழிலாளர் அமைப்பிடமும் எந்த கோரிக்கையும் கேட்கவில்லை அரசு, ஆனால் முதலாளி அமைப்புகளிடம் வரிசையாக கருத்து கேட்டு வருகின்றார்கள், இது தொடர்பாக ஒரு விரிவான கட்டுரை எமது வலைதளத்தில் வரவிருக்கின்றது. மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகி என்ற ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை வெங்காயமே நொறுக்கிவிட்டது என்பது தான் உண்மை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதமென்பதைப் போல இந்த முப்பது நாட்களாட்சியே மோடி இனி எப்படி ஆளுவார், எதை நோக்கி கவனம் செலுத்துவார் என புரிந்துகொள்ளலாம். இன்றைய நிலையில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், கொள்கை முடிவையும் எதிர்ப்பதே இந்தியாவை(அதன் மக்களை) நேசிப்பவர்களின் கடமையாகும், அதைவிடுத்து அரசு திட்டங்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் மோடியை நேசிப்பவர்களேயன்றி இந்தியாவை நேசிப்பவர்களல்ல...
நற்றமிழன்.ப
புகைப்படங்கள் - நன்றி கேலிச்சித்திர கலைஞர்.பாலா, வட-கிழக்கு மாநில மாணவர்களின் போராட்டம், தி இந்து, கேலி சித்திர கலைஞர். முத்து, கருத்து உதவி - இரமிலா இராஜேந்திரன், கே.பி.பன்னீர்செல்வன்.
அருமையான கருத்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராபின்.
செம்மை.
ReplyDeleteதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி அபிலாஷ்
ReplyDelete