Tuesday, July 1, 2014

கெயில் எரிவாயுக்குழாய் விபத்து, தமிழ் நாட்டிற்கு ஒர் எச்சரிக்கை



ஜூன் 27 அன்று ஆந்திராவில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் நடந்த பயங்கர தீ விபத்தில் 19 பேர் இறந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோர் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.



நிலத்துக்கடியில் கெயில் பைப்லைன் :

ஆந்திர மாநிலத்தில், ஹைதராபாத்தில் இருந்து 560 கி.மீ தொலைவில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது நகரம் என்னும் கிராமம்.  விஜயவாடாவிற்கு அருகில் இருக்கும் லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் எரிவாயுக்குழாய் , நகரம் கிராமத்தின் வழியாக செல்கிறது. கெயில் (GAIL - Gas Authority of India Limited) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பைப்லைன்கள் நிலத்துக்கடியில் 4 மீட்டர் ஆழத்திற்குப் புதைக்கப்பட்டுள்ளன.

15 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட இக்குழாய்கள் துருப்பிடித்த நிலையில், இவற்றிலிருந்து எரிவாயு கசிவதாக கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். ஆனால், புகாருக்கு உரிய நடவடிக்கையை கெயில் நிர்வாகம் எடுக்கவில்லை.

வெடிப்பு எப்படி நடந்தது ?

இந்நிலையில் கடந்த ஜூன் 27 நள்ளிரவில் அதிகளவு எரிவாயு கசிந்து அந்தப் பகுதி முழுக்க எரிவாயு படர்ந்திருக்கிறது. அடுத்த நாள் ஜூன் 28 அதிகாலை 4.30 மணியளவில் அப்பகுதி டீக்கடைக்காரர் கடையைத் திறந்து அடுப்பைப் பற்றவைத்த போது, கசிந்திருந்த எரிவாயு தீப்பிடித்துப் பரவி எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியது. இதில், அதே இடத்திலேயே டீக்கடைக்காரர் உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது திடீர் வெடிச்சத்தம் கேட்டு வெளியில் வந்தவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதுவரை, 3 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.


குழாய் வெடித்ததில் 30 மீட்டர் உயரத்திற்கு தீ பற்றி எரிந்திருக்கிறது. அருகில் இருந்த வீடுகள், கால்நடைகள், பறவைகள், தென்னை மரங்கள் என அரைக் கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்தும் தீயில் கருகிச் சாம்பலாயின. காயமடைந்தவர்கள் 30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 சதவிகித தீக்காயங்களுடன் 5 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எரிவாயு கசிவு பற்றி தொடர்ச்சியாகப் புகார் அளித்த பின்னும் நடவடிக்கை எடுக்காத கெயில் நிர்வாகம் மீது ஆத்திரமுற்ற மக்கள் அருகிலிருந்த கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.


கெயில் நிறுவனமே பொறுப்பு :

ஆந்திர அரசு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்திற்கு கெயில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று ஆந்திர துணை முதல்வர் என்.சின்னராஜப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.

துருப்பிடித்த எரிவாய்க்குழாயிலிருந்து  எரிவாயு கசிந்ததை மக்கள் பலமுறை தெரிவித்தும் கெயில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று ஆந்திர நிதியமைச்சர் யனமல ராமகிருஷ்னுடு தெரிவித்துள்ளார்.

கெயில் நிறுவனம் மீது ஆந்திர காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ள்து.

இதையொட்டி, கெயில் நிறுவனம் இரண்டு அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது.

உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


ஆந்திர மக்களின் படிப்பினை :

நகரம் கிராமத்திற்கு அருகிலேயே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையமான ஓ.என்.ஜி.சி (ONGC - Oil & Natural Gas Commission) -க்கு சொந்தமான ’தாதிபாகா’ சுத்திகரிப்பு நிலையமும், எரிவாயு சேகரிப்பு நிலையங்களும் உள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று  நகரம் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் கெயில் பைப்லைன்கள் அமைத்து தங்கள் உயிரையும், உடைமைகளையும் நிரந்தர ஆபத்தில் வைத்திருப்பதாக அம்மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், வாழ்விடங்களுக்கு அருகிலேயே ஓ.என்.ஜி.சி & கெயில் நிலையங்கள் இருப்பது தங்களுக்கு விடப்பட்ட சாபமாகவும் அம்மக்கள் மிகுந்த கவலையோடு தெரிவித்துள்ளனர்.

இந்தத் தருணத்தில், கெயில் எரிவாயுக்குழாய் திட்டத்தைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களின் படிப்பினைகளையும் தீவிரமாகக் கவனத்தில் கொள்வது தமிழக மக்களின் உடனடித் தேவையாகும்.

தமிழகத்தில் கெயில் எரிவாயுக்குழாய் :

கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்கு எரிவாயு எடுத்துச் செல்வதற்கு தமிழகத்தின் வளமான மேற்கு மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயுக்குழாய் பதித்து வந்தது.

கேரளாவில் கொச்சியில் தொடங்கும் இந்த எரிவாயுக்குழாய் இணைப்பு தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் வழியாக பெங்களூரு வரை செல்கிறது. வழியில் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும் இணைப்பு மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு இருக்கும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


எரிவாயுக்குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.



விவசாயிகள் போராட்டம் :

எரிவாயுக்குழாய்  இடப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டிடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கேரளாவில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டம் போடும் கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. விளைநிலங்கள் வழியாகப் போடக்கூடாது, நெடுஞ்சாலை வழியாகப் போடவேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் இரத்துச் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு :

இதையடுத்து, கெயில்  எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாக செயல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கூடுதலாக, நெடுஞ்சாலை வழியே எரிவாயுக்குழாய் பதிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை கெயில் நிறுவனம் நிராகரித்துவிட்டது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


மக்கள் போராட்டமே தீர்வு :

கெயில்  திட்டங்கள் பெருமுதலாளிகளின் தனியார் அனல் மின் நிலையங்களுக்கு எரிவாயு கொண்டு சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், முதலாளியக் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய அரசுக் கட்டமைப்பில், கெயில் நிறுவனத்தின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே. 

சென்னை உயர் நீதிமன்றம் கெயில் பைப்லைன் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்ததுபோல், உச்ச நீதிமன்றம் கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவேளை, உச்ச நீதிமன்றம் கெயில் நிறுவனத்திற்கு சாதமாகத் தீர்ப்பளித்தால், அசுர வேகத்தில் தமிழகத்தின் விளைநிலங்கள் நாசம் செய்யப்படும் என்பது உறுதி. கண்முன்னே தங்கள் நிலம் வீணாவதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் அவலநிலைக்குத் தமிழக விவசாயிகள் தள்ளப்படுவார்கள். மேலும், உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதமின்றி, சொந்த மண்ணிலேயே திக்கற்றவர்களாக நிற்கும் மிக மோசமான நிலைக்கு விவசாயிகள் மட்டுமல்ல, மேற்கு மாவட்ட மக்களும் தள்ளப்படுவர். இதற்கு ஒரே மாற்று, கெயில் பைப்லைன் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் போராட்டம் என்பது பரந்துபட்ட மக்கள் போராட்டமாக விரிவடைய வேண்டும். தமிழகத்தின் வாழ்வாதாரங்களைச் சூறையாடும் இதர திட்டங்களான மீத்தேன் திட்டம், தாதுமணல் கொள்ளை, கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களுடன் கெயில் எரிவாயுக்குழாய் எதிர்ப்புப் போராட்டம் இணைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தின் கிழக்குப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டம் கொண்டுவருவதற்கு, தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நல்ல எரிவாயுக்குழாய் கட்டமைப்புகள் கொண்டு வரப்படுவதும் ஒரு காரணம் என்று மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனமே கருத்து தெரிவித்துள்ளது. எனவே, வாழ்வாதாரப் போராட்டங்களின் ஒற்றுமை வலிமை என்பது கட்டாயமாகக் காலத்தின் தேவையாக இருக்கின்றது.

எரிவாயுக் குழாய் திட்டங்கள் மேற்குலக நாடுகளில் செயல்முறையில் உள்ளன. ஆனால், அவை அவற்றுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டே செயல்படுத்தப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது, முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவை. ஆனால், இவை எதுவும் இந்தியத் துணைக்கண்டத்தில் பின்பற்றப்படுவதே இல்லை. மக்கள் அடர்த்தியாக வாழும் கிராமத்தில் எரிவாயுக் குழாய் பதித்தது மட்டுமல்ல, எரிவாயுக் கசிவைப் பற்றி மக்களே பல முறை புகார் தெரிவித்தபின்னும் கெயில் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது இன்று 16 பேர் உயிரை காவு வாங்கி, ஒரு கிராமத்தையே எரித்திரிக்கின்றது. முறையாக, ஆய்வுப் பணிகளை கெயில் நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்திருக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு எரிவாயு முக்கியம், அணுமின் நிலையம் முக்கியம் என்று நியாயம் பேசுபவர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பெருநிறுவனங்களின் இந்த அலட்சியப் போக்கையே. மக்கள் உயிரைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத இந்த ‘வளர்ச்சிக்கு’ ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் மக்களுக்கும் கிஞ்சித்தும் கிடையாது. மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்காத அரசும், அரசு மற்றும் தனியார் பெருநிறுவனங்களுக்கு தங்களின் அலட்சியப் போக்கை மாற்றிக் கொள்ளாத வரை
மக்களுக்கு ‘வளர்ச்சி’ உபதேசம் சேய்யும் யோக்கியதை சிறிதும் கிடையாது.

வாழ்விடங்களில் கெயில் எரிவாயுக்குழாய்களை அனுமதித்ததால் சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் இழந்ததோடு மட்டுமல்ல எதிர்கால வாழ்க்கை குறித்தும் சந்ததிகளின் நல்வாழ்வு குறித்தும் திக்குத் தெரியாமல் கண்ணீர் வடிக்கும் நகரம் பகுதி வாழ் ஆந்திர மக்களின் படிப்பினைகளிலிருந்து நாம் உடனடியாக கற்றுக் கொண்டு விரைந்து செயலாற்ற வேண்டிய தருணம் இது.

தமிழ் நாசர்


No comments:

Post a Comment