26,செப்டம்பர் 2013 அன்று பாரதிய சனதா கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் பேசிய இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் உரையாற்றினார். ஒன்று அவருடைய தாய்மொழியான குஜராத்தியில் பேசியிருக்க வேண்டும் அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசியிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், இந்தியில் உரையாற்றியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
அன்று நாம் யாரும் மோடி இந்தியில் உரையாற்றியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் நீட்சிதான் இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி விருப்பத்தின் பேரில், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிடும் இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் இந்தியையே பயன்படுத்த வேண்டும் என்று வந்திருக்கும் உத்தரவு.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்கூட,"பிரதம அமைச்சரான நரேந்திர மோடி வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்புகளில் கூட இந்தியில்தான் உரையாடுகிறார்" என்பதுதான்.
முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர் அழகிரி(தி.மு.க) ஆங்கிலம் தெரியாமல், நாடாளுமன்றத்தில் உரையாட முடியாமல் போன போது, உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலம் தெரியாத தற்குறிகள் என்று எள்ளி நகையாடிய கார்ப்பரேட் ஊடகங்கள், இன்று ஆங்கிலம் தெரியாத மோடி ஹிந்தி பேசுகிறார் என்று பெருமை பேசுகின்றன.
இந்திய அரசின் ஊழியர்கள் தங்கள் அலுவல் மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கான சுற்றறிக்கையை மே மாதம் 27 ஆம் தேதி கொடுத்தது அலுவல் மொழிக்கான துறை. எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதோ சூன் 17ஆம் தேதி தான். ஆனால், இதற்கு முன்னரே என்டிடிவி(NDTV) என்னும் வட இந்திய ஊடகம் 14 சூன் அன்றே, அலுவலக மொழி குறித்த விவாதத்தை நடத்தியது. அப்படியானால், அரசின் உத்தரவை முன்னரே அறிந்து மக்களின் எண்ணங்களை அதற்கேற்றாற் போலக் கட்டமைக்கும் வேலையையே ஊடகங்கள் செய்துள்ளன. இவ்வாறுதான், சனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள், ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக செயல்படுகின்றன.
நரேந்திர மோடி மட்டுமல்ல,கட்சி பாகுபாடுகள் இன்றி இந்திய ஆளும் வர்க்கம் முழுக்க என்றுமே தேசிய இனங்களின் உரிமைகள் பற்றியும், அவர்களின் பண்பாடு பற்றியும் சிறிதும் சட்டை செய்ததில்லை. அத்தோடு தேசிய இனங்களின் மீது தொடர்ந்து பாகுபாடு காட்டுவதோடு, ஒடுக்கவும் செய்து வருகின்றது.
இந்தித் திணிப்பை எதிர்த்து பல போராட்டங்கள் தமிழகத்திலும், மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு காலகட்டம் சார்ந்ததாக அல்லாமல், எப்போதெல்லாம் இந்திய ஒன்றிய அரசு இந்தித் திணிப்புக்கு வழி கோலும் திட்டங்களைக் கொண்டு வருகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்தே வருகின்றது என்பது வரலாறு. இந்தித் திணிப்பைச் செய்வதில் ஆளும் பாரதிய சனதா மற்றும் காங்கிரசு இடையே எந்த வேறுபாடும் இருந்ததில்லை.
சமூக வலைத்தளங்களில் தானே இந்தியைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள், அதில் என்ன சிக்கல் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். இந்தி பேசும் மக்கள் சமூக வலைத் தளங்களில் தங்கள் இடுகைகளை இந்தியில் பதிவது என்பது வேறு; இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் பதிவது என்பது வேறு. ஏனெனில், இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த மக்களுடனான தொடர்பு பாதிக்கப்படும் என்பதோடு, காலப்போக்கில் இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் மட்டும் தான் இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்துவர் என்பது உருவாகும்.
இங்கு இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் என்று குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், வட இந்தியாவில் , பீகாரி, ராஜஸ்தானி, போஜ்புரி, ஜார்க்கண்டி, சத்தீஸ்கரி போன்ற பல பிரதேச மொழிகளைத்தான் இந்தி என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருகிறார்கள். அத்தோடு இந்த மாநிலங்களில் எல்லாம் இந்தியை பாடத்தில் கற்றவர்கள் மட்டும்தான் அரசு சொல்லும் இந்தியைப் பயன்படுத்துகிறார்கள்.
"வளர்ச்சிதான் நோக்கம்", "வளர்ச்சியை நோக்கிய பயணம்" என்று மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய சனதா கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆயிரம் இருந்தும், இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறது.
தொடருந்து பயணக் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீடு என்கிற பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த உத்தரவு என்பது நேரடிக் காரணம்.
இந்தியைத் தூக்கிக் கொண்டு நரேந்திர மோடியின் பாரதிய சனதா வருவதற்கான மிக முக்கியமான மறைமுகக் காரணம் என்பது அதன் இந்துத்துவக் கோட்பாட்டோடு தொடர்புடையது.
உதாரணமாக, இந்தச் செய்தியை வெளியிட்ட "தி எகனாமிக் டைம்ஸ்" நாளிதழ் இதற்கு கொடுத்து இருந்த தலைப்பு " Home Ministry Asks Babus to Use Hindi on Social Networking Sites" என்பதாகும். இத்தலைப்பில் உள்ள "BABUS" என்கிற சொல்லுக்கான பொருள் என்பதை ஆங்கில அகராதியான மெர்ரியம் வெப்ஸ்டெர் (Merriam Webster) இணைய அகராதியில் தேடிய போது கிடைத்த முதல் பொருள், " எ ஹிந்து ஜென்டில்மென்" என்பதாகும்.
எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை எதற்காக இந்த வார்த்தையை பயன்படுத்தியது என்பது தெரியவில்லை. ஆனால், ஆளும் பாரதிய சனதா கட்சியையும், ஆர்.எஸ்.எஸ் -சையும் வைத்துக் கொண்டு பார்க்கும் போது, "இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் இந்தி பேசும் இந்துக்கள்" என்கிற பொய்யைக் கட்டமைக்கும் இந்துத்துவ சனாதனக் கோட்பாடே இந்த ஆட்சியை இயக்குகிறது என்பது கண்கூடு.
நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்க, தேசிய இனங்களின் மீது இந்தியை திணிப்பது என்பது இந்தியாவின் பன்முகத் தன்மையைக் குலைக்கும் செயல்.இதை எதிர்த்து போராட வேண்டியது சனநாயக ஆற்றல்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
உருது மொழியை, வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் மீது திணித்ததே,பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் போராடிப் பிரிந்ததற்கான காரணம். இலங்கையில் சிங்கள மொழியை அங்கு வாழும், ஈழத்தமிழ் மக்களின் மீது திணித்த போது, கொல்வின் டி சில்வா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார், " ஒரு மொழி என்றால் இரு நாடு; இரு மொழி என்றால் ஒரு நாடு". இந்த சான்றுகள் வங்கதேசத்திற்கும், இலங்கைக்கும் மட்டுமல்ல; இந்தியாவிற்கும் பொருந்தும்.
இந்திய நாடு என்பது பல மொழி பேசும், பல்வேறு தேசிய இன மக்களை உள்ளடக்கிய ஒன்றியம், இதனை மீறி இந்தியைத் திணிப்பது என்பது இந்தியாவின் பன்முகத்தன்மையை உடைக்கும் என்பதே உண்மை.
கதிரவன்
ஒரு மொழியை எங்கள் மீது திணிக்கக் கூடாது என்பதில் எல்லோரும் உடன்படுகிறோம். ஆனால் இந்தியை வெறுப்பது என்பதுதான் பல தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது.
ReplyDeleteஇந்த விசயத்தில் இந்தி பேசாத மற்ற மாநிலங்கள் எந்த நிலை எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை இதே நிலை நீடித்தால் தமிழர்கள் தனிமைப்படுத்தப்படும் அபாயமும் இருக்கிறது.
சில வருடங்கள் முன் வரை தமிழன் வேலைதேடி மற்ற மாநிலங்களுக்குப் போய்க் கொண்டிருந்ததையும் மனதில் கொள்ளவேண்டும். அந்நிய முதலீடுகளை நம்பித்தான் தற்போது தமிழகம் இருக்கிறது. தமிழ் சிறந்த மொழி என்பதற்காக எவரும் இங்கே முதலீடு செய்ய வருவதில்லை. இங்கே வேலைதேடி அயல் மாநிலத்தவர்கள் வரும் அதே வேளையில், இங்குள்ள தமிழன் அரசு வழங்கும் இலவசங்களைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறான். இதில் தமிழன் பெருமைப்பட என்ன இருக்கிறது.
கோபாலன்
Suguna Diwakar
ReplyDelete**********************
’வெளிநாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் இந்தியில்தான் உரையாடுவார், அரசு அதிகாரிகள் சமூகவலைத்தளங்களில் இந்தியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு’ என்று இந்து-இந்தி-இந்தியா என்ற தன் ஒற்றை நோக்கம் நோக்கி அடியெடுத்துவைக்க ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசு. இதை நியாயப்படுத்தி, தொலைக்காட்சி சேனல்களில் பேசும் பா.ஜ.க. ஆதரவாளர்கள் இந்தியாவில் அலுவல்மொழியாக ஏன் ஆங்கிலம் இருக்கவேண்டும், அது அடிமைத்தனம், இந்திய மொழிகளில் ஒன்றான இந்தி இருக்கலாமே என்று வாதாடுகின்றனர். உண்மைதான். ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்திய மொழிகளில் ஒன்றான தமிழை ஆக்கக்கூடாது? இந்தியைவிட தொன்மையான, வளமிக்க மொழி தமிழ். மேலும் தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்கிவிட்டு வட இந்தியாவில் தமிழைக் கற்றுக்கொடுத்தால், வரும் காலத்தில் பிழைப்புக்காகத் தமிழகத்துக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
‘இந்தி படிக்காததால் இழப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஒரு தலைமுறையின் வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டது’ என்ற பழக்கமான பல்லவி அவ்வப்போது தமிழ்நாட்டில் கேட்பதுண்டு. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைவிட தொழில் வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழகம் எவ்வளவோ முன்னேறியுள்ளதைப் புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. ஆனால் வடமாநிலத்திலிருந்து தமிழகத்தில் பிழைக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இப்போதே அவர்களைத் தமிழ் படிக்கவைத்துவிடுங்கள். இல்லாவிட்டால் ‘தமிழ் படிக்காததால் தலைமுறை இழப்பு’ என்கிற பல்லவி வடமாநிலங்களில் ஒலிக்கப்போகிறது.
//சமூக வலைத்தளங்களில் தானே இந்தியைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள், அதில் என்ன சிக்கல் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். இந்தி பேசும் மக்கள் சமூக வலைத் தளங்களில் தங்கள் இடுகைகளை இந்தியில் பதிவது என்பது வேறு; இந்திய ஒன்றிய அரசு ஊழியர்கள் பதிவது என்பது வேறு. ஏனெனில், இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த மக்களுடனான தொடர்பு பாதிக்கப்படும் என்பதோடு, காலப்போக்கில் இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் மட்டும் தான் இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்துவர் என்பது உருவாகும்.
ReplyDeleteஇங்கு இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்த மேட்டுக்குடியினர் என்று குறிப்பிட்டு சொல்வதற்கான காரணம், வட இந்தியாவில் , பீகாரி, ராஜஸ்தானி, போஜ்புரி, ஜார்க்கண்டி, சத்தீஸ்கரி போன்ற பல பிரதேச மொழிகளைத்தான் இந்தி என்னும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருகிறார்கள். அத்தோடு இந்த மாநிலங்களில் எல்லாம் இந்தியை பாடத்தில் கற்றவர்கள் மட்டும்தான் அரசு சொல்லும் இந்தியைப் பயன்படுத்துகிறார்கள்.// well said comrade...
ஹிந்தி இந்தியால மட்டும்தான் இருக்கு. ஆனா எங்க தமிழ் மலேசியா, சிங்கப்பூர் , இலங்கை போன்ற நாடுகளில் ஆட்சி மொழியா இருக்கு.
ReplyDeleteஎங்களுக்கு எதுக்குடா இன்னொரு ஆட்சி மொழி?
எங்களுக்கு உங்க ஹிந்தி தேவையேயில்லை.
என்னோட சொந்த passport-ல எங்க அழகு தமிழ் இல்லை. ஆனா இலங்கை, சிங்கப்பூர் , மலேசிய நாட்டு passport, coins-ல எங்க தமிழ் இருக்கு. அந்த பெருமை உங்க ஹிந்திக்கு இருக்கா? அப்புறம் ஏன்டா எங்ககிட்ட அதை திணிக்கிறீங்க?
ReplyDelete