Wednesday, June 18, 2014

இசுலாமியர்கள் மீதான சிங்கள பேரினவாத‌த்தின் தாக்குதல்... இந்திய அரசின் மௌனத்தை கண்டிக்கின்றோம் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் கண்டன‌ அறிக்கை..


சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் அடங்காத இரத்த வெறி – தொடர்ந்து துணை போகும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

அனகாரிக தர்மபால சிங்கள பெளத்த தேசியவாதத்தினூடாக கட்டிய எழுப்பிய சிங்கள பெளத்தப் பேரினவாதம் அந்த தீவில் எவரையும் விட்டுவைக்க வில்லை. அது முதலில் 1915 ஆம் அண்டு சூன் மாதம் கண்டி பகுதி தமிழ் இசுலாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 25 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பின் 1948 க்குப் பிறகு குடியுரிமை, வாக்குரிமை பறிப்பு என்று மலையகத் தமிழர்கள் மீது அரசியல் தாக்குதலும் ஆயுத தாக்குதலும் நடத்தியது. 150 ஆண்டுகளாக, 6 தலைமுறையாக அந்த மண்ணில் உழைத்து அந்தத் தீவை வளமாக்கியவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு துரத்தப்பட்டனர். அந்த மண்ணின் பூர்வகுடி மக்களான ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக எண்ணற்ற தாக்குதல்களை நடத்தி திட்டமிட்ட இனக்கொலையைப் புரிந்து வருகின்றது. அதன் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் பெரிய மனிதப் படுகொலைக்கு உள்ளாக்கியது.  தொடரும் இனப்படுகொலைக்கு பழியாகிவரும் தமிழர்களுக்கு அரசியல் நீதி கிடைத்திடவும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும் அண்டை நாடான இந்தியாவும், உலக நாடுகளும் இது வரை உறுதியான நடவடிக்கையை இலங்கை அரசு மீது எடுக்கவில்லை.


இந்த ஊக்குவிப்பே கடந்த சூன் 15 ஞாயிறு இரவு இலங்கையின் தென்மாகாணத்தில் உள்ள அளுத்தகம, பேருவளை, தர்கா நகர் உள்ளிட்ட இடங்களில் பெளத்த பல சேனா எனும் சிங்கள பெளத்த அடிப்படை வாதிகளின் அமைப்பு கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளது. காவல்துறை, படையினர் கண் முன்னே இந்த தாக்குதல்கள் நடைபெறுவது இது இலங்கை அரசின் ஒத்துழைப்போடு நடைபெறும் தாக்குதல் என்பதை நிறுவுகின்றது. இரண்டு நாட்களாக தொடர்ந்த இந்த தாக்குதலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர், 80 க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வீடு, உடைமைகளை இழந்து பள்ளிவாசல், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


தொடர்ந்து இசுலாமியர் வாழும் இடங்களில் ஊர்வலம் என்ற பெயரில் சிங்களர்கள் ஒன்று கூடி இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய அரசு இந்த தாக்குதல் குறித்து வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்து இலங்கை அரசைக் கண்டிக்காதது இலங்கைக்கு இந்தியா துணை நிற்பதை மீண்டும் நிறுவுகின்றது. எங்கோ இருக்கும் அமெரிக்கா இது குறித்து தன் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கும் நிலையில் கூப்பிடும் தூரத்தில் இருப்பதும், இந்த ப்ராந்தியத்தின் ஆகப் பெரும் ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் இந்தியா இதில் மெளனம் காப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்திய இலங்கை நட்புறவு என்றாலும் சரி இந்தியாவுடன் வேறு எந்த நாட்டுக்கும் இடையேயான நட்புறவாக இருந்தாலும் சரி அது இந்நாட்டு மக்களுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவாகத் தான் வேண்டுமே  ஒழிய இரு அரசுகளுக்குமிடையேயான உறவாக மட்டும் இருக்க கூடாது.
இந்திய அரசு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு இசுலாமியர்கள் மீதான தாக்குதலை நிறுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். வன்முறையில் ஈடுபட்டும், வன்முறையைத் தூண்டியும் வரும் சிங்கள பெளத்த இனவெறியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.  சொத்துக்கள் சூறையாடப்பட்டவர்களுக்கும், வீடு வாசல் இழந்தவர்களுக்கும் உரிய பாதுகாப்பும் இழப்பீடும் வழங்குமாறு இலங்கை அரசை அறிவுறுத்துவது மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு நேரடியாக கொழும்பில் உள்ள தூதரகம் மூலமாக வழங்க வேண்டும்.

சிங்களப் பெளத்த பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு கட்டமைப்புரீதியான இனவழிப்புவாதமாக வளர்ந்து நிற்கின்றது. அது ஈழத் தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை தமிழீழ ஆதரவாளர்கள் மட்டுமின்றி இன சிக்கலுக்கான தீர்வாக தமிழீழத்தை ஏற்காத ஜனநாயக ஆற்றல்களும் உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று சிங்களப் பெளத்த பேரினவாத அரசைத் தனிமைப்படுத்தும் போராட்டத்தை தொடர்வோமாக.

செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்ஸ் இயக்கம்.
5 comments:

 1. yove ithela india enkirunthu vanthanthu srilankala ethu nadanthalum india nu sollaratha niruthunga

  ReplyDelete
 2. @பிரதீப் குமார், தமிழ்நாட்டை தன்னகத்தே கொண்டுள்ள இந்திய அரசு தமிழர்களின் குரலுக்காக தலையிடக் கோராமல் வேறு யாரை நீங்கள் கோர வேண்டும் என்கிறீர்கள்?

  ஈழத்தமிழர்கள் மீது நடக்கும் தொடர்ச்சியான இனப்படுகொலையை தடுத்து, தண்டித்து, இனப்படுகொலைக்கு ஈடுசெய் நீதியாக தமிழீழ விடுதலைக்கு துணைசெய்ய வேண்டும் என்பது தமிழக மக்களின் தமிழ்த்தேசிய கோரிக்கை... அதற்கு மாறாக இலங்கைக்கு துணைபோகிறது இந்தியா.... அதனால் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு துணைசெய்யும் இந்தியாவை எதிர்க்கிறோம்... இலங்கையை கண்டிக்க துப்பில்லாமல் காக்கும் இந்தியாவை எதிர்த்து போராட அழைக்கிறோம்....

  ReplyDelete
 3. இந்தியா தான் இலங்கையை உலகரங்கில் இலங்கையை காத்துவருகிறது என்பது உலகறிந்த விடயம்... இன்னமும் சிங்கள இலங்கை அரசை நட்பு நாடு என்று காத்தும், இலங்கையில் தொடர்ச்சியான சிங்கள பௌத்த பேரினவாத வன்முறைகளை, இனப்படுகொலைகளை கண்டிக்க கூட துப்பில்லாமல் கள்ள மௌனம் சாதித்தும் வரும் இந்தியாவை உலகிற்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் தோலரித்து காட்ட வேண்டியது நமது கடமை.

  தமிழக மக்களின் கோரிக்கைக்காக உதவினால் இந்தியா ஈழத்தமிழர்களுக்குத்தான் உதவ வேண்டும், அதற்கு இலங்கை-இந்திய நட்பை உடைத்தாக வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டின் நட்பை அது இழக்க நேரிடும் என்ற தமிழக மக்களின் ஒட்டுமொத்த இந்திய எதிர்ப்பால் மட்டுமே சாத்தியபடுத்த முடியும்.

  ReplyDelete
 4. சிங்கள இலங்கையா தமிழ்நாடா இந்தியா முடிவுசெய்ய வைக்க வேண்டிய தருணம் இது, தமிழ் நாட்டை அதனால் இழக்க முடியாது, ஆனால் தற்போது தமிழ் நாட்டில் ஈழ ஆதரவு சக்திகளுக்கு பெரிய பலமில்லை என சுசாமி போன்றவர்களால் நம்பவைக்கப்படுகிறது. எனவே இந்தியா தமிழ்நாட்டை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணி இலங்கைக்கு உதவி செய்துவருகிறது.

  இந்தியாவை நோக்கி குவிமையபடுத்தி போராட்டத்தை நகர்த்தும்போதெல்லாம் இப்படி இந்தியாவை ஏன் ஊடறு செய்ய வேண்டும் என இடைமறிப்பது போராட்டத்தை திசைதிருப்பவது சுசாமி சொல்வது சரியென ஆகிவிடும்... இந்தியாவை அம்பலப்படுத்தி, முறித்து வளைப்பதற்கு முயற்சிக்காமல் வேறு எதுவும் உதவாது, அது இந்திய-இலங்கையை காக்கத்தான் செய்யும்....

  ReplyDelete
 5. தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தில் உள்ள இந்துத் தமிழர்களுக்காக மட்டும்தான் குரல் கொடுக்கிறார்கள்; இசுலாமியத் தமிழர்களைக் கண்டு கொள்வதில்லை எனும் பழியை இந்தப் பதிவு மூலம் சேவ் தமிழ்சு இயக்கம் துடைத்திருக்கிறது!

  ReplyDelete