Wednesday, February 19, 2014

செங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்!



முன் குறிப்பு:

(இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தமிழின உணர்வாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. மேலும் எல்லோரும் தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதல்ல.)



மற்றுமொரு நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு தீக்குளிப்பு நடந்துள்ளது. தீக்குளித்தவர் தியாகி ஆகிவிட்டார். 21 வயதே ஆன அவளின் பெயர் தோழர் செங்கொடி.(தோழர் என்று தான் அவள் தன்னை குறிப்பிட்டிருக்கின்றாள்). இருந்தாலும் பலருக்கு மகளாகவும், இளைஞர்களுக்கு தங்கையாகவும் ஆகிவிட்டாள்.

இந்த தீக்குளிப்பிற்குப் பின் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. இன்னொருபுறம் தீக்குளிப்பு சரியா? தவறா? என்ற வாதமும் நடக்கின்றது. ’யாரும் தீக்குளிக்க வேண்டாம்’ என்ற அறிக்கைகள் பறந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தீக்குளிப்புகளுக்கான அரசியல் காரணங்கள் விவாதிக்கப்படாமல் இருப்பது வேறு. ஆனால் யார் இந்த செங்கொடி? ஏன் இது போன்றவர்கள் தீக்குளிக்கின்றார்கள்? அவளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பவையும் விவாதிக்கப்பட வேண்டும்.

செங்கொடி – இதுவரை அவள் மக்களுக்காகவே வாழ்ந்தவள். கொத்தடிமைகளாக வாழ்ந்து வரும் இருளர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபட்டவள். அவள் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரை நிறுத்த வேண்டும் என்று போராடியவள். மருத்துவர் பினாயக் சென் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பேசியவள். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக பறை எடுத்து முழங்கியவள்; திருப்பெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலையில் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அம்பிகாவுக்காகப் போராடியவள். பண்பாட்டைச் சீர்குலைக்கும் ’பாய்ஸ்’ படத்தை எதிர்த்து போராடியவள். இப்படி அவளுடைய பரிமாணங்கள் மிகப் பெரியது. இன்னும் அதிகமாக விரிந்து செல்லக்கூடியது. அவள் தன் 21 வயதுக்குள் சிறைக்கு போன அனுபவம் கொண்டவள். யாரையும் திருப்பி அடிப்பதற்கும் காவல்துறையை எதிர்த்துப் பேசுவதற்கும் பழக்கப்பட்டவள். இந்த சிறு வயதில் அவள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஏறி இறங்கி வந்தவள். அவள் வாழ்ந்தாலும் மக்களுக்காகத் தான் வாழ்ந்திருக்கப் போகின்றாள். அவள் இறந்ததும் மக்களுக்காகவே. எனவே, அவள் வாழ்வு இத்தோடு முடிந்தது என்பது இத்தேசத்திற்கு நேர்ந்திருக்கும் பேரிழப்பே. இந்தளவில் செங்கொடியின் தீக்குளிப்பும் அவளை இழந்ததும் மற்ற தீக்குளிப்புகளில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது.

அவள் நம்மிலிருந்து எப்படி வேறுபட்டவள்? நம்மைப் போலவே அவள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் உலவி வந்தவள். நம்மைப் போலவே பாசம், நட்பு, அன்பு, காதல், தாய்மை என்ற உணர்ச்சிகள் கொண்டவளாகத் தான் இருந்திருக்க வேண்டும். அவளுக்கு விடுதலை உணர்ச்சியும் சேர்ந்தே இருந்தது. அது எல்லாவற்றையும் புறந்தள்ளும் ஆற்றல் கொண்டதும் உண்மை தன்மை கொண்டதுமாக இருந்திருக்கின்றது. நம்மைப் போலவே அவள் பேரணிகளில் பீடுநடை போட்டவள்; பிரச்சாரப் பயணங்களில் பங்கு கொண்டவள்; ஆர்ப்பாட்டங்களில் முழங்கியவள்; ’பேரறிவாளன்,சாந்தன், முருகனைத் தூக்கிலிட விட மாட்டோம்’ என்று நம்மைப் போல் தான் முழக்கம் போட்டாள். செப்டம்பர் 9 என்று அவர்களைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது என்றவுடன் நம்மைப் போல தான் அவளும் பதறியிருப்பாள். ஆனால் அந்த பெருங்கொடுமை நடந்துவிடக் கூடாது என்று அவள் உயிரைக் கொடுத்தாள். அவள் வெறும் வாயளவில் முழக்கங்கள் போடவில்லை. தன் சிந்தனையாலும் , சொல்லாலும் , செயலாலும் அந்த கோரிக்கைகளுக்காக வாழ்ந்திருக்கின்றாள். அதற்காகவே வாழ்வை முடித்துக் கொண்டும் இருக்கின்றாள். அதில் மட்டும் அவள் நம்மைவிட முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றாள். அவளுக்கு இரட்டை மனநிலை இல்லை. அவள் தன் வாழ்க்கையை ஏற்கெனவே மக்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் உயிரைக் கொடுப்பது குறித்து எந்த சலனமும் அவளுக்கு இருக்கவில்லை. நம்மைப் போல ’இருந்து போராட வேண்டும்’ என்று சொல்லிக் கொள்பவள் அல்ல. அவள் இருந்தவரை போராடித்தான் வாழ்ந்திருக்கின்றாள்.



காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையே கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார் என்று சொல்லிக் கொள்கிறோமே. மாலை நேர விருந்திற்கு செல்வது போல் பொது கூட்டங்களுக்கு செல்லும் நாம் கருணாநிதியிலிருந்து எப்படி மாறுபட்டவர்கள்?. 60 ஆண்டுகளாக கொள்ளையடித்த சொத்தையும், அரசியல் செல்வாக்கையும், முதல்வர் பதவியையும் இழக்கத் துணியாத கருணாநிதி ஒரு பக்கம். 21 ஆண்டுகளே வாழ்ந்துவிட்டு இத்தோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என்று உயிரை இழந்த செங்கொடி இன்னொரு பக்கம். இதில் நாம் எந்த பக்கம்? ஏதோ நேரத்தையும் உழைப்பையும் தந்துவிட்டால் போதும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். சமூக அந்தஸ்த்தையும், குடும்ப உறவுகளையும், நமது வாழ்க்கை முறைகளையும் பாதிக்காமல் ஒரு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. எந்த பாதிப்பும் இல்லாமல் என்ன செய்வோமோ அதை செய்வோம் என்று கருதுவது ஆறுதலுக்காக ஆலயம் செல்வதற்கு ஒப்பாகும். அடிப்படையில் இவை எல்லாம் சேதம் அடையும் போது தான் உண்மையான போராட்டத் திசையில் பயணிக்கின்றோம் என்று பொருள் ஆகும். எந்த சேதாரமும் இன்றி இந்தியா போன்ற ஒரு கொடுங்கோல் அரசை எதிர்த்து போராடி நாம் மக்களைக் காத்துவிட முடியாது. இழப்புகள் இன்றி வெற்றிகள் இல்லை. பெரிய அதிகாரங்கள் இல்லாத சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கே ஒரு உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளதென்றால் ஈழ விடுதலை, தமிழ்நாட்டுத் தேசிய உரிமைகள் எனப்தற்கு எல்லாம் எத்த்னை இழப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

இந்த முறையும் செங்கொடியைப் புதைக்கும் பொழுது நம் மனசாட்சியையும் சேர்த்தே புதைத்துவிட்டு மறுநாளிலிருந்து நம் அன்றாட வாழ்வில் அமுங்கிப் போய்விட்டோம். மீண்டும் ஒரு நெருக்கடி வரும். முதல் ஆளாக நாம் முகநூலில் எழுத தொடங்குவோம். மீண்டும் துண்டறிக்கை, சுவரொட்டி, பிரச்சாரப் பயணம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம், முழக்கங்கள் என்று சூடு பிடிக்கும் அரசியல் களம். பிறகு கையறு நிலையில் தலைவர்களைக் குறை சொல்லிக் கொண்டு எப்படியும், முத்துகுமரன், செங்கொடி போன்றவர்கள் தீக்குளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருக்கப் போகின்றோம். ஏனென்றால் செங்கொடிகள் விடுதலை உணர்ச்சியை எல்லாவற்றிலும் மேலானதாக எண்ணுகின்றார்கள். தன் சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் இத்தேசத்தையும், மக்களையும் நேசிக்கின்றார்கள். நாம்?



உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண் டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.

உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற் றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல், கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் தானாகவே விழுந்துவிடும்

தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்று பவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற் குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.

- (23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)


செந்தில்
ஒருங்கிணைப்பாளர் - சேவ் தமிழ்சு இயக்கம்


பின் குறிப்பு: இந்த கட்டுரை செங்கொடி தனது உயிரைத் தியாகம் செய்த அன்று எழுதப்பட்டு, கீற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம்...

No comments:

Post a Comment