Monday, February 24, 2014

உமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்




சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்குள் டிசிஎஸ் ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து , இன்று ( 24 பிப் 2014) சிப்காட் நுழைவாயிலில் 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்ட‌த்தை ஒருங்கிணைத்த சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் , செயற்குழு உறுப்பினர் பரிமளா ஆகியோர் க‌ண்டன உரையாற்றினர்.


கடந்த சனிக்கிழமை(22 பிப் 2014) , சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள டாட்டா க‌ன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உமா மகேஸ்வரி(23) என்கிற பெண் பணியாளரின் சடலம், அருகில் உள்ள புதரில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு பத்து மணியளவில் நிறுவனத்தில் இருந்து கிளம்பியவர் வீடு சென்று சேரவில்லை. ஒரு வாரம் கழித்து அவருடைய சடலம் அலுவலகத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 'உமா மகேஸ்வரியைக் காணவில்லை' என்ற அவரது தந்தையின் புகார் மீது சரியான விசாரணை நடத்தாத காவல்துறையின் மெத்தனம் கண்டனத்திற்குரியது. இதுவரை , இக்கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.


இப்படுகொலையைக் கண்டித்தும் , கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் , பெண் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தியும் , சேவ் தமிழ்சு இயக்கம் சிறுசேரியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது. சிப்காட் தொழிற்பூங்கா நுழைவாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் தோழர் பரிமளா பேசும் போது,

பெண் என்பதால் அவள் மீது அதிகாரம் செலுத்தலாம்; பெண் உடல் மீது எத்தகைய பாலியல் வன்முறையையும் ஏவலாம் என்ற கருத்தியலுக்கு இச்சமூகம் பழகியிருக்கிறது. அதிலும் இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்கப் படுகிறது. சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுவதில்லை.

பெண் உடலை ஒரு போகப் பொருளாக (commercial), ஒரு பாலியல் பண்டமாகத் தான் இச்சமூகம் சித்தரிக்கிறது. இந்த சிந்தனைப் போக்கை பெண்களாகிய நாம் தாம் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் முற்றாக தகர்க்க முடியும். இப்போராட்டத்தோடு கலைந்து செல்லாமல், தொடர்ந்து இது குறித்து பேசவும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவும் சேவ் தமிழ்சு இயக்கத்தோடு இணைந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.



சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் செந்தில் பேசும் பொழுது,

பதினைந்து நாட்களுக்கு முன்பு, உமா மகேஸ்வரி காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பெண் பணிபுரியும் TCS நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காமல், 'அந்த பெண் ஏன் பத்து மணிக்கு கிளம்ப வேண்டும்?' என்ற அலட்சியமான கேள்வியை வேறு முன் வைத்திருக்கிறது. இறுதியில் ஒரு பெற்றோர் தன் மகளின் உடலைக் கூட நல்ல நிலையில் பார்க்க முடியாதபடி, அழுகிப்போக வைத்திருக்கிறது, காவல்துறை மற்றும் நிறுவனத்தின் அலட்சியப்போக்கு.


பெண் என்பதால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பல்வேறு வகையான கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பாதுகாப்பின்மை, பாலியல் வன்முறை இவைகளோடு, வேலைத் திறனாய்வு, பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற கூறுகள் வரும் போது, “உங்களுக்கெல்லாம் பாதுகாப்பில்லை. ஷிஃப்ட் நேரம் சரி வராது. வெளிநாடு சென்றால் உங்களால் வேலை செய்ய முடியாது, போக்குவரத்து வசதிகள் ஒத்து வராது” என்று பல்வேறு காரணங்களைக் காட்டி, பெண்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை, வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் மறுக்கின்றன.

இன்று TCS நிறுவனத்தில் உமா மகேஸ்வரிக்கு ஒரு மாற்று தேடி அமர்த்தியிருப்பார்கள். அப்பெண்ணின் வேலைப் பளுவை இன்னொரு பெண் சுமந்து கொண்டிருப்பாள். இதோடு தங்கள் வேலை முடிந்தது என அந்நிறுவனம் கை கழுவி விடக் கூடும். ஆனால் உமா மகேஸ்வரியின் வீட்டில்

அவளுக்கு யார் மாற்று தேடித் தரப் போகிறார்கள் ?

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது நம்மை ஒரு குழு மனப்பான்மையோடு நினைப்பதும், நமக்கான பிரச்சினைகளைப் பேசவும் முடிந்திருக்கும். மற்ற தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் கூட இது சாத்தியமே. ஆனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் நாம் தனி நபராக்கப் படுகிறோம். நமக்கான பிரச்சினைகளைப் பேசவோ, நமது உரிமைகளைப் பெற குரல் எழுப்பவோ முடியாத ஒரு சூழல் தான் இப்பெரு நிறுவனங்கள் என்று சொல்லக் கூடிய நம் பணியிடங்களில் நிலவுகிறது. ஏடிஎம் அட்டையும், நவீன ரக அலைபேசி சாதனங்களும் நம் பாதுகாப்பை உறுதி செய்யாது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் நாம் ஒரு அமைப்பாக ஒன்று திரள வேண்டிய அவசியமிருக்கிறது. அது நம் பாதுகாப்பையும், நமது பிரச்சினைகளைப் பேசவும், நமது உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒரு நல்வாய்ப்பாக அமைய முடியும்.


ஐ.டி ஊழியர்கள் என்றாலே அதிக சம்பளம் பெறுபவர்கள். சுயநலமாக சிந்திப்பவர்கள். சமூகப் பிரச்சினைகளில் தலையிட மாட்டார்கள். அவர்கள் பிரச்சினைகள் பற்றி அவர்களே பேச மாட்டார்கள் என்று ஐ.டி ஊழியர்களைப் பார்த்து வைக்கும் குற்றச்சாட்டை இன்றைய போராட்டத்தின் மூலம் தகர்த்து எறிந்திருக்கிறார்கள். சேவ் தமிழ்சு இயக்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தாலும், அறுநூற்றுக்கும் அதிகமான‌ ஐ.டி ஊழியர்கள், தங்கள் அடையாள அட்டைகளோடு, தன்னெழுச்சியாக சிப்காட் வாயில் முன்பு குவிந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பல பெண்களின் கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்திருந்தன. இதுவரை முழக்கமிடாத குரல்கள், முதன் முறையாக தம்மைச் சேர்ந்த இளம் மலரொன்றின் இறப்புக்கான நீதி வேண்டி முழக்கமிட்டன. இது ஆரம்பம் மட்டுமே.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பின்வரும் கோரிக்கைகள் தமிழக அரசுக்கும் , தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கும் முன் வைக்கப்பட்டன.

தமிழக அரசுக்கு கோரிக்கைகள்:

1) உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்!

2) சிப்காட் வளாகத்திற்குள் உரிய பாதுகாப்பு தரத்தவறிய சிப்காட் அலுவலர்களை பணியிலிருந்து இடை நீக்கம் செய்.

3) சிப்காட்-டிற்கு செல்லும் வழியில் காவல்துறை சோதனைச் சாவடி அமை. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறை சிப்காட்-டினுள் ரோந்து செல்லவேண்டும், இதனால் சிப்காட்-டை சுற்றியுள்ள கிராம மக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது.

4) சிப்காட்-டில் இருந்து அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிகளான நாவலூர், சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும், சிப்காட்-டைச் சுற்றியுள்ள சாலைகளிலும், இரவு நேரங்களில் முழு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும்.

5) சிப்காட் நிர்வாகத்தின் கட்டுபாட்டின் கீழ், சிப்காட்-வளாகத்திற்கு உள்ளும், வெளியும் செல்லக்கூடிய வகையில் போக்குவரத்து வசதியை உருவாக்கு.


6) சிப்காட் பாதையெங்கும் காணொலிபதிவுக் கருவியை நிறுவு.

7) காவல்துறைக்கும், நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் பெண்ணியவாதிகளும், பல்வேறு தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சமூகப் பணியாற்றும் நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும்.

8) பாலியல் தொந்தரவு தடுப்புக்குழு எல்லா நிறுவனங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும், அப்படி ஒரு குழு இருப்பது ஊழியர்களுக்கு தெரிந்துள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.

9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவசர தொடர்பு எண்ணை உருவாக்கு

10) நீதிபதி.வர்மா கமிசன் பரிந்துரைத்த மாற்றங்களான, சட்டத்திருத்தத்தையும், விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதையும், காவல்துறை சீரமைப்பையும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனை முறையை மாற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்து.

11)தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு மட்டுமின்றி.அப்பகுதி வாழ் மக்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கையும் அகற்ற வேண்டும்.


தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான கோரிக்கைகள்:

1) வெவ்வேறு பணி நேரங்கள் இருப்பதால் நாள் முழுக்க பேருந்து வசதியை வழங்கு

2) பணியாளர்களை வார இறுதியிலும் வேலைக்கு வர நிர்ப்பந்திக்கப்படுவதால் பேருந்து வசதி வார இறுதியிலும் வேண்டும்

3) சுழற்சி (shift) முறையில் வேலை பார்க்காத பெண்களுக்கான வேலை நேரத்தை மாலை 7 மணியோடு நிறுத்து.

4) அவசர பணி காரணமாக இரவு 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடு செய்.

5) அலுவலகத்திற்குள் ஏற்படும் பாலியல் தொந்தர‌வு தொடர்பாக விசாரிக்க உட்குழுக்களை ஏற்படுத்து.


சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment