Wednesday, January 9, 2013

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் , பெண் விடுதலைக்கான‌ போராட்டம் !



தோழர்களே ,

பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நேற்று திட்டமிடப்பட்ட மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்தது. இந்நிகழ்வுக்காக எம் இயக்கத் தோழர்களின் இடையறாத உழைப்பனைத்தையும் தவிடு பொடியாக்க வேண்டும் என்ற காழ்ப்பும் எக்காலத்திலும் இளைஞர்கள் மக்கள் சக்தியை திரட்டி விடக்கூடாது என்ற சனநாயக மறுப்பும் அங்கே அப்பட்டமாக போலிசின் வாயிலாக‌ பல்லிளித்தது. எனவே , மனிதச் சங்கிலி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டிய‌ சூழலுக்கு நாம் தள்ளப்பட்டோம் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் எங்கள் அழைப்பினை ஏற்று இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க முகநூலில் வி்ருப்பம் தெரிவித்ததற்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்

பெருந்திர‌ளான‌ ம‌க்க‌ள், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள்,ஐ.டி ஊழிய‌ர்க‌ள் என‌ ஓரிட‌த்தில் ஒன்று கூடிய‌மை காவ‌ல்துறையின் க‌ண்க‌ளை உறுத்தியிருக்க‌க்கூடும்.அத‌னால் குழுமியிருந்த‌ தோழ‌ர்களையும் பொதுமக்களையும் க‌லைந்து செல்லுமாறு தொட‌ர்ந்து நெருக்க‌டி கொடுக்க‌த் தொட‌ங்கிய‌து காவ‌ல்துறை.அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் கையில் ப‌தாகைக‌ள் ஏந்துவதற்கு  கூட  ஆட்சேபம் தெரிவித்தது . காவல்துறையின் இச்செய்கையை நிகழ்வில் பங்கேற்க வந்திருந்தவர்களும் வெகுவாக கண்டித்தனர்.இதனால் ஏற்பட்ட சலசலப்பு போலிசுக்கு கொஞ்சம் எரிச்சலை உண்டு பண்ணியது.எம் தோழர்களோடு கடும் வாக்குவாதத்தில் போலிசும் உளவுத்துறையும் ஈடுபட்டது. தோழர்கள் கையில் ஏந்தியிருந்த பதாகைகளை தம் முதுகில் அணிந்து மனித பதாகைகளாக மாறி துண்டறிக்கை விநியோகம் செய்யத் தொடங்கினர்.எஞ்சிய தோழர்கள் சிறுசேரி,துரைப்பாக்கம்,டைடல் பூங்கா, வேளச்சேரி, எஸ் ஆர் பி டூல்ஸ் என பல்வேறு இடங்களில் குழுக்களாக பிரிந்து துண்டறிக்கை விநியோகம் செய்தனர்.பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள்,ஐ.டி ஊழியர்கள்,தொழிலாளர்கள் என எல்லா உழைக்கும் மக்கள் கரங்களிலும் நிகழ்வின் செய்தி சென்று சேர்ந்தது.அது மட்டுமில்லாமல் "நான் பெண்.காமப்பொருளல்ல" என பெண்ணுரிமையை உயர்த்திப் பேசும் ஆகிருதியான பிளக்ஸ்கள் நகரின் ஐந்து முக்கிய இடங்களிலும் பொதும‌க்க‌ளின் காட்சிக்கு வைக்கப்பட்டன.எல்லா அடைப்புகளையும் மீறி தான் மக்கள் சக்தி திரண்டெழ வேண்டியிருக்கிறது என்ப‌த‌ற்கு இந்நிக‌ழ்வு ஒரு சிறு உதார‌ண‌ம்.

ஆகவே பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்தும் பெண்ணுரிமைக்கான போராட்டத்தையும் சேவ் தமிழ்சு இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். எதிர்வரும் நாட்களில் இப்போராட்டத்திற்கான அடுத்த நகர்வுகளை மேற்கொள்வோம்.அடுத்தகட்ட போராட்டத்திற்கான தேதியும் அறிவிக்கப்படும்.அனைவரும் பங்கேற்குமாறு வேண்டி கொள்கிறோம்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் , பெண் விடுதலைக்கான‌ போராட்டம் !

தோழமையுடன்,
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment