Thursday, April 3, 2014

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - செய்தியாளர் சந்திப்பு, திருவாரூர் : 2-4-14 - அறிக்கை




தொன்மைத் தமிழின நாகரீகம் வளர்ந்த தொட்டிலாகிய காவிரிப் படுகை இன்று வரை தமிழகத்தின் உணவுக் கோப்பையாக விளங்கி வருகிறது. ஆனால், காவிரிப் படுகையில் பல்வேறு அழிவுத் திட்டங்களை அனுமதித்து, விளைநிலப் பரப்பை கணிசமாகக் குறைத்து, சுற்றுச்சூழலைப் பாதித்து, வேளாண்மையை அரசே நலிவுறச் செய்திருக்கிறது. முன்னமே காவிரி நீர் மறுக்கப்பட்டமையாலும், ஓ.என்.ஜி.சி பெட்ரோலியம் & எரிவாயு எடுத்ததன் விளைவாக நிலத்தடி நீர் வறண்டு போனமையாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைந்து, வேதிப்பொருள் கலந்து, குடிக்கத் தகுதியற்றதாக மாறிவிட்டது.



இந்நிலையில் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன்’ என்ற நிறுவனத்திற்கு 2010-ல் அனுமதியளித்தது. 2011-இல் அன்றைய தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு, அப்பெருமுதலாளிய நிறுவனத்திற்கு நடைமுறப்படுத்த முன்வந்தது. இன்றைய தமிழக அரசு மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு தற்காலிக தடை விதித்தாலும் பல இடங்களில் ஓ.என்.ஜி.சி-இன் பெயரில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் இச்சூழலில், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு “விவசாயம் பாதிக்கும் வகையில் தொழில்துறையை இந்த அரசு ஊக்குவிக்காது”என்று அறிவித்தது. ஆனால், தேர்தல் அறிக்கையில் இது குறித்து அதிமுக தலைமை ஏதும் குறிப்பிடவில்லை.




2011-இல் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்ட திமுக ‘இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கும்’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இத்திட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் என்பதற்கு எந்தக் கட்சியும் உத்தரவாதம் வழங்கவில்லை. மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இத்திட்டம் பற்றி வாயே திறக்கவில்லை. ஆகவே, தேர்தலுக்குப் பிறகு இத்திட்டத்தின் நிலை குறித்து காவிரிப் படுகை மக்கள் கவலையடைந்துள்ளனர். காவிரிப்படுகையில் உள்ள நாகை, தஞ்சை, மயிலாடுதுறைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், இத்திட்டத்தை ஏற்கமாடோம் என்றும், தடுத்து நிறுத்த முழுமையாக முயற்சிப்போம் என்றும், அவ்வாறு தடுக்க இயலா நிலையில் பதவி விலகி, மக்களோடு நின்று இத்திட்டத்தை முறியடிப்போம் என்றும் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று கோரி, எதிர்வரும் 07-04-2014 அன்று திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இறுதிவரை உண்ணாநிலைப் போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு முன்னெடுக்கிறது. மக்களின் சார்பாக கூட்டமைப்பு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பமிட்டு ஒத்துழைக்க வேட்பாளர்களை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோருகிறது.



இடம்: திருவாரூர்
நாள் : 2-4-14


தலைமை ஒருங்கிணைப்பாளர்
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு




No comments:

Post a Comment