Monday, March 10, 2014
ஒர் இரத்தச் சிவப்பழகியும், சில கண்ணாடி சீசாக்களும் ( உழைக்கும் மகளிர் நாள் சிறப்புச் சிறுகதை )
'நடைமுறைக்கு ஒத்துவராத பெண்' என்று தான் கல்லூரியில் ரெஜினாவை பற்றி பேசிக் கொள்வார்கள்.
பெரும்பாலும் அவளை ஒருதலையாக காதலித்தவர்களின் ஆய்வு முடிவுகளாகத் தான் அவை இருக்கக் கூடும். பட்டப்படிப்பு முடிக்கும் வரை ரெஜினாவைத் தெரியுமே தவிர அதிகம் பழக்கமில்லை. ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். இரத்தச் சிவப்பு நிற அழகி அல்லது திமிர் பிடித்தவள் அல்லது அவள் உடுத்தும் காட்டன் சேலைகள் இவைகளைத் தாண்டி, என்னுடன் படித்த பையன்களுக்கு, ரெஜினா என்ற பெண்ணைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
படித்து முடித்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கலாம். சென்னையிலிருந்து வேலை மாற்றலாகி புனேவுக்கு வந்து சேர்ந்திருந்த பெருமந்தமான கால கட்டம். தனிமையிலும் புத்தகங்களிலுமாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த நாட்கள். அவ்வப்போது கதைகள் எழுதுவேன். சில கதைகள் அச்சில் பிரசுரமாகும். "பல கதைகள்" சீந்துவாரில்லாமல் என் ப்ளாகிலேயே பிரசுரமாகும். “காதல்,அன்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைகள் வழக்கொழிந்த சொற்களாகி விட்ட நிலையில், உடல் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அவளோடு பழக முடியும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது” என்று அப்படி ஒரு போனியாகாத சிறுகதையில் எழுதியிருந்த வரிகளைப் படித்து விட்டு, எப்படியோ என் நம்பரை, நண்பர்களிடமிருந்து வாங்கி, ரெஜினா அழைத்தாள். "ரெஜி...பேசுறேன். என்ன உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். உங்க வெப்சைட்ல கதைய படிச்சிட்டு தான் கால் பண்றன்...." என்று ஆரம்பித்து, ஒரு நாற்பது நிமிடங்கள் உரையாடல் தொடர்ந்தது. ரெஜினா என்னிடம் பேச ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்ற அதிர்ச்சியிலிருந்து நான் மீளும் முன்பே, அவளோடு கடுமையான விவாதம் செய்ய வேண்டி வருமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. கிழித்து எறிந்து விட்டாள். "பெண் உடல் வெறும் ஆணின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கருவி அல்ல", "ஒரு பெண்ணை பாலியல் அடிமையாக்கிக் கொள்ளும் வக்கிர புத்தியைத் தான் இவ்வளவு டீசென்டாக, பாலிஷ் அடித்து எழுதியிருக்கிறீர்களா?" என்கிற சாரத்தில், வாக்குவாதம் வலுத்தது. முடிந்தவரை வழக்கமான என் எல்லா ஆயுதங்களையும் பிரயோகித்துப் பார்த்தேன். எதுவும் சரிவராமல், பிடிக்கலேன்னா உன்ன யாரும்மா படிக்கச் சொன்னது.? என்று என் சரக்கு தீர்ந்தவனாக சரணடைந்தேன்.
என்னை அழைத்து பேச வேண்டும் என்று அவளுக்கு ஒரு கட்டாயமுமில்லை. அதிக அறிமுகம் இல்லாத ஒரு ஆணிடம், தூர தொலைவில் இருந்து அலைபேசியில் அழைத்து, அதுவும் முதன்முறையாக பெண் விடுதலை பற்றி ஒரு பெண் இப்படி தீவிரமாக விவாதிக்கிறாள் என்றால் "நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பெண்" ஆல் தான் முடியும் என்று புரிய ஆரம்பித்து விட்டது. தோல்வியடைந்த கோபத்தில் வேகமாக அழைப்பைத் துண்டித்தேன். அதற்கு முன்பே அவள் துண்டித்து விட்டாள்.
யார் இந்த பெண்? இத்தனை வருடங்கள் கழித்து ஏன் என்னோடு அவள் பேச வேண்டும்? ஏன் என்னை நிலை குலையச் செய்ய வேண்டும் ? எப்படி என் வலைப்பதிவை அவள் படிக்க நேர்ந்தது. யார் என் நம்பரைக் கொடுத்தார்கள் என்று கேட்கக் கூட அவகாசம் இருக்கவில்லையே. பேரமைதியான ஒரு குளத்தில்,ஒரு பாறாங்கல் தொப்பென்று விழுந்தது போல மனமெங்கும் ஏதோவொன்று சிதறித் தெறித்து, ஒரு பாரம் ஏறியிருந்தது. தூக்கம் பிடிக்க மறுத்தது. அப்படி நான் என்ன எழுதி விட்டேன், இப்படியொரு விமர்சனத்தை ஏன் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெண் ஆணுக்கு உடைமையானவள் என்பதைத் தாண்டி ஒரு பெண் மீதான எத்தகைய மதிப்பீடுகளை நான் வைத்திருக்கிறேன் என்பதை மீண்டுமொருமுறை அந்த முழுக் கதையை வாசித்த போது, சிறிது சிறிதாக உணர முடிந்தது. யாரோ என் முதுகுக்கு பின் நின்று வேவு பார்ப்பது போலத் தோன்றியது. அவசரம் அவசரமாக படித்து முடித்தேன்.ஒரு புழுக்கமான மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது. அறையிலிருந்து வெளியே வந்தேன். நகரம் அடங்கியிருந்தது. நான்காவது மாடியின் காற்று, சற்று நிதானமாக வீசியது. யோசிக்க ஆரம்பித்தேன்.
"இட்ஸ் ஓக்கே ஃபைன்...நானா?..நான் காக்னிசன்ட்ல வொர்க் பண்றேன். டிசிஓ.துரைப்பாக்கம்.." என்று ஒருவழியாக, மறுநாள் தடம் மாறினோம். நான் தான் முதலில் சாட்டில் அழைத்தேன்.என் கருத்தியலை திரும்பப் பெற்றுக் கொள்ளும் உத்தேசமெல்லாம் இல்லை. வேறு மாதிரி எழுதியிருக்கலாம் என்று சமாளித்து வைத்தேன். அவளும் அதை ஏற்றுக் கொண்டது போல, அடுத்தடுத்த விஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்தாள்.. என்னைச் சூழ்ந்திருந்த எல்லா அபத்தங்களுக்கும் அவளிடம் ஒரு பதில் இருந்தது.அவளோடு ஒத்துப் போகக் கூடிய ஒரு மையப்புள்ளியை இயல்பாகவே மனம் தேடியது.
நாங்கள் படித்தது ஒரு கத்தோலிக்க கல்லூரி. செமஸ்டர் தேர்வுகளுக்கு முன்பாக, புனித சூசையப்பர் தேவாலயத்தில் வைத்து தான், நுழைவுச் சீட்டு வழங்கப்படும். பிரின்ஸி பெயர் வாசிக்க வாசிக்க, ஒவ்வொருவராக வந்து பங்குத் தந்தை பாதிரியாரின் காலில் முழங்காலிட வேண்டும். நெற்றியில் ஒரு சிலுவையை தன் கட்டை விரலால் கீறித் தான், நுழைவுச் சீட்டை நம் கையில் தருவார் பாதிரி. இந்த அசெளகரியமான சம்பிரதாயம் கேட்பாரின்றி, எல்லா மாணவர்களாலும் கடை பிடிக்கப்பட்டது. இது என்னடா சோதனை என்று நாங்கள் ஒரு கேங் மட்டும், கையைப் பிசைந்து கொண்டு நின்றோம். ரெஜினாவின் பெயர் வாசிக்கப்பட்டது. சலனமேயில்லாமல் அமைதியாக ’நிமிர்ந்த நன்னடையில்’ வந்து பாதிரியிடமிருந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு விருட்டென்று சென்று, மர இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள். கிட்டத் தட்ட, போய் பிடுங்கிக் கொண்டு வந்தாள் அந்த கத்தோலிக்கப் பெயர் கொண்டவள். மற்ற மாணவர்களும், பேராசிரியர்களும், குழுப்பாடகர்களும் சற்று குலுங்கிப் போயினர். குசுகுசுவென்று சத்தம் தேவாயலத்தின் மார்பிள் தரை மெளனங்களைக் கலைத்தது. நானும் என் ஜமாவும் ரெஜியின் வழியையே பின்பற்றினோம்.
அன்றைய நாளிலிருந்து கல்லூரியின் ஹாட் டாபிக் ரெஜி தான். ஏறத்தாழ, கல்லூரி நிர்வாகத்தின் சம்பளம் பெறும் எல்லா ஊழியர்களின் வாய்க்கும் ரெஜி அவலாக மாறினாள். மோசமாக ஆடை அணிகிறாள். வகுப்புகளைச் சரியாக கவனிப்பதில்லை. எந்நேரமும் போனும் கையுமாகவே இருக்கிறாள். வகுப்புகளை கட் அடிக்கிறாள். இலக்கியம், சினிமா என்று மற்ற மாணவர்களை வழி கெடுக்கிறாள் போன்ற குறைந்த முதலீட்டு புகார்களில், அவளின் நடத்தை சந்தேகிக்கப்பட்டது. அதே நேரம், ரெஜியைக் காதலிக்க, வேதியல் பேராசிரியரிலிருந்து, ஜூனியர் மாணவர்கள் வரை ஓரே ஒரு காரணம் தான் இருந்தது. அவள் ஒரு இரத்தச் சிவப்பு நிற அழகி.ஆனாலும் ‘ரியல் லைஃப்க்கு செட் ஆகாத அழகி’. கல்லூரி முதல்வராகிய பங்கு தந்தையின் பல்வேறு சதித் திட்டங்களை முறியடித்து, வளாக நேர்காணல் மூலம், முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. இது தான் கல்லூரி முடியும் வரை ரெஜியைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்த மேற்படி தகவல்கள்.
தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவள் என்பதை அவளுடைய சொற்பிரயோகங்களிலிருந்து கண்டு பிடித்தேன். எனக்கு பிடித்திருந்த பெரும்பாலான எழுத்தாளர்களை அவளும் கொண்டாடினாள். அ.முத்துலிங்கத்தின் எல்லா கதைகளையும் படித்திருந்தாள். புத்தக வாசிப்பு என்ற ஒற்றைப் புள்ளியில், இயல்பானதொரு நட்பு எங்களிடையே வளர்ந்தது. அதிகம் பேச ஆரம்பித்தோம்.பல நாட்கள் அவள் கல்லூரிக்கு வராமையின் காரணம், அவள் சார்ந்திருந்த ஒரு மாணவர் இயக்கம் என்பதை அறிந்து கொண்டேன். பல “தோழர்களோடு” அவளுக்கு இருந்த நட்பே, கல்லூரியின் ’கண்ணியக் கண்களை’ உறுத்தியதாகத் தெரிவித்தாள். பல போராட்டங்களில் அவளுடைய பங்களிப்பு இருந்ததையும் அறிந்து கொண்டேன். அலுவலக இணைய தளத்தில் என்னுடைய கதைகளும் கட்டுரைகளும் நண்பர்களால் பகிரப்பட்டு தொடர்ந்து வாசித்து வருவதாகவும், என்னுடைய ‘மனப்பிறழ்வு” சிறுகதை, வெளிவந்த நாளிலிருந்து தான், என்னை வறுக்க வேண்டுமென அவள் முடிவு செய்ததாகவும் அறிவித்தாள்.
இருவார விடுமுறையொன்றில் சென்னைக்கு வந்திருந்தேன். சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தான் சந்திப்பு என்று முடிவு செய்தோம். அவள் கேட்ட பல புத்தகங்களோடு, காத்திருந்தேன். ”ஹேய்...வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று ஒரு கனமான கை, தோளைத் தட்டியது. இல்ல...இப்பத்தான்....வந்தேன்..என்று இழுத்தேன். பரபரப்பாக பேச ஆரம்பித்தாள். அவள் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் ஒரு போராட்டம் பற்றித் தான் அதிகம் பேச்சு இருந்தது. சில விஷயங்கள் எனக்கு பிடிபடவுமில்லை. அத்தனை அருகாமையில் ஒரு பெண்ணோடு கதைக்க நான் அதுவரை பழகியிருக்கவில்லை. ஆஃபிஸ்ல இதுக்கெல்லாம் உனக்கு எப்படி நேரம் கிடைக்குது? வீட்டில எப்படி அல்லோவ் பண்றாங்க? என்பது தான் என்னுடைய குறைந்த பட்ச கேள்விகளாக இருந்தன. பலமுறை இக்கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கப்பட்டவள் என்ற உண்மை அவளுடைய அடுத்தடுத்த விளக்கங்களிலேயே புரிந்து விட்டது.
‘தி.நகரில் ஒரு அரங்கக் கூட்டம் இருக்கிறது. மாம்பலத்தில் இறங்கிக் கொள்ளலாம்’ என அடுத்த ரயிலில் வலுக்கட்டாயமாக என்னையும் சேர்த்து திணித்தாள். தாது மணல் கொள்ளை பற்றி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும் இளைஞர்களால் சூழப்பட்டிருந்தது அரங்கு. பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தனர். ஒரு சிறு மேசையின் மீது சிறு சிறு நூல்களாக அடுக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இலக்கியத் தலையணைகளை வாசித்தவன் என்பதால், அக்குறுநூல்களை வாசிப்பது எனக்கு ஒன்றும் சிரமம் இருக்காது என்று இரண்டு புத்தகங்களை வாங்கிப் புரட்ட ஆரம்பித்தேன். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. அரங்கு நிறைந்த கூட்டத்தில், ரெஜியைக் காணவில்லை. தனது தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தாள். நேரம் ஆக ஆக, தனியனாக உணர ஆரம்பித்தேன். தாதுமணல் கொள்ளை பற்றியும் தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது பற்றியும் கார சாரமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஒரு வழக்கறிஞர். இலக்கிய சந்திப்புகள் தவிர்த்து, ஒரு அரசியல் கூட்டத்தில் நான் கலந்து கொள்வது இதுவே முதன் முறை. மாலை 4 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 7.30க்குத் தான் முடிந்தது.
வெளியே வந்தோம்."அப்புறம் என்ன பிளான்" என்று கண்ணடித்தாள்.நமக்கு என்ன பிளான், விடுமுறைக்கு சென்னை வந்தால், எக்மோர் ரயில் நிலையத்தின் எதிரில் இருக்கும் ஒரு பாரில் நண்பர்களோடு 'தண்ணீர்ப்பந்தல்' நிகழ்ச்சி தான். சொன்னேன். 'இன்னிக்கு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்' மீண்டும் சிமிட்டல். விளையாட்டாகத் தான் சொல்கிறாள் என்று நினைத்தென். '...பாரிலா..அங்க லேடீஸ் எல்லாம் வர மாட்டாங்கப்பா..' சிரித்தேன். 'இன்னிலிருந்து வருவாங்க...' ஆட்டோ ஒன்றை நிறுத்தி 'எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்' என்று மறித்தாள். திகைத்துப் போய் நின்றேன். இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது புரியவேயில்லை. 'அந்த பாரில் லேடீஸ் டாய்லெட் கூட கிடையாது.அங்கப் போயி...' ..'தெரியும். எக்மோர் பாரில் மட்டுந்தானா...' என்று அலட்சியமாக புன்னகைத்தாள்.
7.30 வரை இத்தனை அதிர்ச்சி தரக்கூடியவளாக அவள் இல்லை. ஆட்டோ ஏறிய கணத்திலிருந்து ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் அங்கெல்லாம் செல்லக் கூடியவள் என்ற செய்தி, பெரிய விஷயமெல்லாம் இல்லையென்றாலும், என்னுடன் முதன் முறையாக ஒரு பெண், அதுவும்ஆண்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பாரில், கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என் நண்பர்களுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி விட்டு, சுவிட்ச் ஆஃப் செய்தேன். Plan dropped machis. Not feeling well.
நல்ல வேளை எந்த நண்பனும் அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆட்டோவிலிருந்து இறங்கினோம். 'லேசா தலைவலிக்கற மாதிரி இருக்கு' இன்னிக்கு வேண்டாமே..' ன்னு, பின் வாங்கியவனை, 'ஒரு பெக் அடித்தால் எல்லாம் ஓடிப்போயிரும்' என்றவளாக ஆட்டோக்காரரை நோக்கி ஒரு நூறு நூபாய்த் தாளை நீட்டினாள். ஆட்டோக்காரர் மிரட்சியுடன் அவளை ஏற இறங்கப் பார்த்தார். ஆரம்பித்து விட்டது இரவு. சந்தித்தே இருந்திருக்கக் கூடாது என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன். எழும்பூர் ரயில் நிலையமும் அதன் சுற்றுப்புறங்களும் இரைச்சலுடன் ஒரு தொழிற்சாலை போல இயங்கிக் கொண்டிருந்தன. பெரும் தயக்கத்துடன் உள்ளே சென்றேன். பார் பணியாளர்கள் முதற்கொண்டு, போதையில் இருந்த பல கண்கள் வரை, ரெஜியின் மீதே நிலை குத்தியிருந்தன. சலனமேயில்லாமல், நடந்து சென்று இருக்கையை நிறைத்தாள். தனக்கு தெரிந்த ரகங்களை எல்லாம் ஆர்டர் கொடுக்கலானாள். இதுவரை நான் பார்த்திராத ரெஜி சாவகாசமாக பேசத் துவங்கினாள். விரல்களில் சிகரெட் புகை கசிய ஆரம்பித்தது.
"லேடீஸ் சிகரெட் புடிக்கறதையும் தண்ணி அடிக்கறதையும் கற்போட சம்பந்தப்படுத்தி பேசுறது நம்மூர்ல மட்டுந்தான் இல்லையா..? நேத்திக்கு நைட்டு 9 மணி இருக்கும். நெல்சன் மாணிக்கம் ரோட்ல, நான் தனியா சிகரெட் புடிச்சிட்டு நடந்து வந்துட்ருந்தத பாத்து, ஒரு கருப்பு ஆடி கார் ஹார்ன் அடிச்சி நின்னுச்சி...லைட்டா கண்ணாடி கதவ இறக்கினா உள்ள ஒரு சினிமா பிரபலம்..சிங்கிள் ஷாட். ப்ரைஸ் என்ன?" அப்படின்னு அசடு வழியுது. போன வாரம் ரிலீசான படத்துல, ஏழைகளோட துயர் துடைக்க நானிருக்கேனு பஞ்ச் டயலாக் பேசின அதே மூஞ்சி தான். போடா பொறுக்கி மவனேன்னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டு, பக்கத்துல இருந்த கார் நுழைய முடியாத சந்துக்குள்ள திரும்பி ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்.
பஸ்ல சர்வ சாதாரணமா பின்னாடி வந்து உரசறவனுங்கள விட, இந்த பார்ல இருக்கறவங்க பாக்குறது ஒன்னும் அவ்வளவு பெரிசா தெரியல. சில ஆண்களோட Erection பார்வையில தெரியும். சில பேர் பக்கத்துல இருக்க பொண்ணுங்க கிட்ட அத ஃபீல் பண்ண வைக்க ட்ரை பண்றானுங்க.. Bastard! அப்படின்னு கத்த நினைக்கிற பொண்ணுங்க, ‘கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களான்னு’ கெஞ்சுறாங்க..இதெல்லாம் சகஜமப்பா...நீயே ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க...கூல் பாஸ்”...என்று வேர்க்கடலைகளைக் கொரிக்க ஆரம்பித்தாள். தேர்ந்த குடிகாரனைப் போல, சீசாவை நளினமாகச் சாய்த்து, கண்ணாடிக் குடுவைகளுக்கு ஊட்டினாள். ஒவ்வொரு முறை அவள் கிளாஸைப் பிடித்து, விஸ்கியை உள்ளிழுக்கும் போதும், கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க வேண்டியவனைப் பார்ப்பது போல, கிறங்கிய கண்களினூடாக எங்கள் இருக்கைகளையே வெறித்துக் கொண்டிருந்தனர் மற்ற குடிமக்கள். அவள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
"அப்பா ஆர்மிக்காரர். ஆங்கிலோ இண்டியனான எங்க அம்மா பாக்க ஒன்னும் அவ்வளவா நல்லா இருக்கமாட்டாங்க..குட்டையா தெத்துப்பல்லுமா இருக்க அவங்கள காசுக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. ரிடையர்டு ஆனதுக்கப்புறம் மிலிட்டரு கேண்டின் சரக்கோட தான் தினமும் வீட்டுக்கு வருவாரு. கிட்டார் வாசிச்சிக்கிட்டே பணம் கேட்டு எட்டி உதைப்பாரு..அவர் ஒதைக்கறதுக்காகத் தான் அம்மா முதுகு வளைஞ்சே இருக்கோனு எனக்கு சந்தேகம் வரும்.எல்லாம் தலையெழுத்துனு அம்மா ஏத்துக்கிட்ட மாதிரி தான் இருக்கும். எதுவும் அதிர்ந்து பேச மாட்டா..
ஒருநாள் வெளக்குமாத்த எடுத்து, அப்பாவ சாத்து சாத்துனு சாத்துனா. மிதிக்கும் போது அவரோட கால் நகங்களோட சிப்பிய பேத்து எடுத்தா. கத்திரிக்கோல அவரோட தொண்டைக்குழியில் இரண்டு இஞ்ச் இறக்கினா..இதெல்லாம் நடந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு. ஆனா ஆச்சரியம் பாரு இதுல எதுவுமே நடக்கல. அதான் வேல கிடைச்சதுக்கு அப்புறம் அந்தாளு திருச்சியிலேயே செத்தொழியட்டும்னு அம்மாவ கூட்டிட்டு வந்து, பெரம்பூர்ல இருக்க பாட்டி வீட்டுல விட்டுட்டு, நான் ஹாஸ்டல்ல செட்டில் ஆகிட்டேன். அதுக்கப்புறம் தான் இந்த இயக்கம், போராட்டமெல்லாம்...ரொம்ப ஃபீரியா இருக்கு. எனக்கு தோணுறத பண்றேன். சந்தோஷமா இருக்கேன். அவ்ளோ தான்.” பெருமூச்சு விட்டாள். நேரம் செல்லச் செல்ல அவள் நா குழற ஆரம்பித்து விட்டது.
சடாரென்று எழுந்து டாய்லெட் நோக்கிச் சென்றாள். ஆண்களுடையது தான். வரும் போது, முகம் கழுவப்பட்டு, துடைக்கப்படாமல் ஈரமாக இருந்தது. உதட்டுச் சாயம் கரைந்திருந்ததையே பார்த்துக் கொண்டிருந்தேன். "என்ன உடல் பற்றிய பிரக்ஞையா?" என்று சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டாள். அதிலிருந்து எல்லாவற்றிற்கும் சிரிப்பு தான். உருளைக் கிழங்கு சிப்ஸ் வாய் தவறி கீழே விழுந்தாலும் சிரிப்பு. பார் ஊழியரை அழைத்து, டிஸ்யூ பேப்பர் கேட்கும் போதும் சிரிப்பு என கொஞ்சம் கொஞ்சமாக அவளைப் பற்றியிருந்த நிதானம் நழுவிக் கொண்டிருந்தது. அவள் என்னை முழுமையாக ஆக்கிரமிக்கிறாள் என்று நினைத்த நொடிகளைத் தவிர்த்த மற்ற நேரங்களில் மட்டும், கைகள் ஒரு மிடறு விஸ்கியை என் தொண்டைக்குள் அனுமதித்தன. மணி ஒன்பதரைத் தாண்டியது.
"அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேனே..நம்ம வில்சன். பாரிஷ் பீரிஸ்ட். இப்ப உயிரோட இல்ல தெரியுமா?" மெதுவாக கிசுகிசுத்தாள். "தெரியுமே. அதான் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன். உனக்கு ரொம்ப பிடிச்ச பாதர் ஆச்சே. அதான் ரொம்ப கவலையோ.." என்றவனைப் பார்த்து முறைத்தாள். மீண்டும் சிரிப்பு. தட்டுத் தடுமாறி, தன் கைப்பையில் என்னமோ தேடினாள். ஒரு பழைய செய்தித் தாளோடு கை வெளியே வந்தது. மணற்கொள்ளை மாஃபியாக்களோடு, பங்குத் தந்தை வில்சனுக்கும் ஒரு பங்கு இருந்தது என்கிற ரீதியில் ஒரு செய்தியை விரித்துக் காட்டினாள். மேலும் அவர் கட்டிய ஷாப்பிங் மாலுக்காக, முந்நூறு குடிசைகள் எரிக்கப்பட்டதையும் அப்போது தான் தெரிந்து கொண்டேன். "அடப்பாவி..இவ்வளவு பெரிய காலேஜ் கட்டி வச்சிருக்கும் போதே நினைச்சேன். இந்தாளுக்கு எங்க இருந்து எவ்வளவு பணம் வருதுன்னு. இதான் மேட்டரா….”
"அது மேட்டரு இல்ல. அவர எதிர்த்து நாங்க பண்ண போராட்டம் தான் மேட்டரு. அந்த போராட்டத்துக்கு பெறகு தான், நீயூஸ் பேப்பர்ல செய்தியெல்லாம் வர ஆரம்பிச்சது..எல்லாத்துக்கும் காரணம் நான் தான்னு அவருக்கு காலேஜ்ல இருந்தே தெரியும். எல்லா வழியிலயும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாரு...இன்டர்னல் மார்க்ல கை வக்கிறதுல இருந்து, என்னோட ஹாஸ்டல் பாத்ரூம்ல கேமிரா வக்கிறது வரைக்கும்.. ஒரு கட்டத்துல, துணை பாதர், தேவ வரப்பிரசாதம் மூலமா என்ன கடத்திக் கொல்ற அளவுக்கெல்லாம் திட்டம் போட்டதா கேள்விப்பட்டேன்” அடுத்த சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டாள். "இந்தளவுக்கு சீரியஸா ஆகிடுச்சா...அப்புறம் என்ன நடந்தது?".. இருக்கையின் நுனியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
சிம்பிளா ஒரு திட்டம் போட்டோம். ஏற்கெனவே கான்வென்ட்ல, வில்சனோட சேட்டைகள பத்தி, வேலைக்கு இருந்த ஆயம்மாக்கள் சொல்றத கேட்டிருக்கேன்.அதுல ஒரு ஆயம்மா தான் ஹெல்ப் பண்ணாங்க. நல்ல கனமா ரெக்ரான் தலையணை ஒன்னு வாங்கினோம்..செலவு முந்நூறு ரூவா தான்..ஆனா என்ன? ஹார்ட் அட்டாக்குனு கேஸ முடிக்கத் தான் செலவு கொஞ்சம் அதிகமாச்சு....நல்ல வேள.. போன வருசந்தான் வில்சனுக்கு பைபாஸ் சர்ஜரி ஆகியிருந்ததால, எல்லாம் சுமுகமா முடிஞ்சது..." எனக்கு மூச்சிறைக்க ஆரம்பித்தது.
“கடைசியா ஒருமுறை, அவர் முன்னாடி, முழங்காலிட்டு, அர்சிஷ்ட மரியாயே...சர்வேசுவே மாதாவே...பாவிகளாய் இருக்கின்ற எங்களை இப்பொழுதும் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்’..ன்னுட்டு நானே அவருக்கு பாவ மன்னிப்பு கொடுத்து அனுப்பி வச்சேன்.. அதுக்கப்புறம், வரப்பிரசாதம் வகையறாக்கள்ல்லாம் அவரோடு சொத்த பங்கு போட்றதில பிசியா ஆகிட்டாங்க..என்னயும் மறந்துட்டாங்க.." பொறுமையாக சொல்லி முடித்தாள். அவள் கண்களில் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. அனைத்து சீசாக்களும் காலியாகி, ஏசி அறையின் குளிர்ச்சி உடலை இறுக்கிக் கொண்டிருந்தது. கடைசியாக ஒன்றுக்கு போய் வர வேண்டும் போலத் தோன்றியது. போய் வருவதற்குள், தன் டெபிட் காடைத் தேய்த்து பில்லை செட்டில் செய்யும் அளவுக்கு அவள் தெளிவாகத் தான் இருந்திருக்கிறாள்.
கிளம்பியவுடன், அவள் தடுமாற்றத்தை உணர்ந்தேன். என்னை அணைத்தவாறு என் தோளில் சாய்ந்து கொண்டே நடந்து வந்தாள்.கண்கள் சுரந்திருந்தன. கனத்த அவளுடைய உடல் ஒரு குழந்தையைப் போல மென்மையாக படர்ந்திருந்தது. முதன் முறையாக அவளோடு இருப்பதை பெருமையாக உணர்ந்தேன். ஆட்டோவின் திறந்த வெளியில், காற்று வேகமாக அறைந்து கொண்டிருந்தது. அவளைச் சூழ்ந்திருந்த நிசப்தம் ஒரு திடப்பொருளாக இருந்தது. தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு, எங்களிருவரையும் ஒரு வித ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும். இது அவளுடைய அந்தரங்கம். பிரத்யேக தனிமை. முழுமையாய் அனுபவிக்கட்டும். கரைந்து தீர்க்கட்டும்.
ஹாஸ்டல் வாட்ச் மேன் சல்யூட் அடித்து பத்து ரூபாய் சன்மானம் பெற்றுக் கொண்டார். சோடியம் விளக்கு வெளிச்சத்தில், ஹாஸ்டல் பூக்கள் பளிச்சிட்டன. காலையில் பார்த்த பரபரப்பான பெண்ணொருத்தி, சலனமற்ற பிம்பமாகி முதல் மாடியில் இருள் தளத்திற்குள் மறைந்து போனாள். இரத்தச் சிவப்பழகி!
இளவிச்சிக்கோ
நன்றி ஓவியம் - மணிவர்மா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment