2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள், நாட்டின் 29 மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறப் போகும் தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்புக்காக காத்திருந்த அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டு, கூடிய விரைவில் கூட்டணி முடிவுகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளிவரும்.
தமிழகத்தில் காங்கிரசு இன்னும் தி.மு.க-வை வெவ்வேறு வழிகளில் கெஞ்சிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க யாரும் இங்கு தயாரில்லை என்பதே நிதர்சனம்.
மூன்றாவது அணி அமைத்து அ.தி.மு.க -வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பொதுவுடைமை கட்சிகள், தற்போதே கூட்டணியை முறித்துக் கொண்டுவிட்டன. அ.தி.மு.க தலைமை தாங்கும் கூட்டணியில் இவையெல்லாம் வழக்கம் என்பது நாம் அறிந்ததே.
இந்திய அளவில் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. பா.ஜ.க-வில் பிரதமர் வேட்பாளர் தேர்வின் போது வெளிப்பட்ட உட்கட்சிப் பூசல் என்னும் பூனை மறுபடியும் தலைகாட்டியுள்ளது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர் அத்வானி குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட தாம் விரும்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இந்த முறையும் அவரே பூனைக்கு மணி கட்டியுள்ளார்.
அத்வானியின் இந்த அறிவிப்பு பா.ஜ.க-வுக்கு கசக்கின்றதோ இல்லையோ,தன்னுடைய மாநிலத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று மோடி நினைத்த தொகுதி காந்தி நகர் என்பதால் மோடிக்கு வேப்பங்காயாய் கசக்கிறது இந்தச் செய்தி.
பிரதமர் வேட்பாளர் தேர்வின் போது இதே அத்வானிக்கும், பிரதமர் வேட்பாளராகப் பின்னர் தேர்வு செய்யப்பட்ட மோடிக்கும் நடந்த அதிகார மோதலுக்கு நாட்டாமை செய்தது சங்கபரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தான். இந்த முறையும் கட்டிய மணியை அவிழ்த்து அத்வானியை அமைதிப்படுத்தப் போவது அதே ஆர்.எஸ்.எஸ் தான்.
நம்மில் பலபேர் அறிந்தவரையில் பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரப் பிரிவுதான் ஆர்.எஸ்.எஸ் என்னும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக். ஆனால், உண்மையில் ஆர்.எஸ்.எஸ் என்னும் இந்துத்துவ அமைப்பின் அரசியல் அமைப்புதான் பாரதீய ஜனதா கட்சி.
தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தான் சுதந்திர இந்தியாவில் தடை செய்யப்பட்ட முதல் பயங்கரவாத அமைப்பு, அத்தோடு காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த நாதுராம் கோட்சேதான் முதல் பயங்கரவாதி. அப்போது இந்த அமைப்பின் மீதான தடையை நீக்க அரும்பாடுபட்ட(!) சர்தார் வல்லபாய் படேலின் உருவச் சிலையைத்தான் ஒற்றுமையின் திருவுருவமாக திறந்து வைத்துள்ளார் நரேந்திர மோடி.
இந்திய விடுதலைக்குப் பிறகு, காந்தியாரின் கொலையில் ஈடுபட்டமைக்காக தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு, வெவ்வேறு காலகட்டங்களில் தடை செய்யப்பட்ட போதும் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்தது. பின்னர் இந்த மாற்று பெயர் கொண்ட அமைப்புகளும் சங்பரிவாரத்தில் இணைந்து கொண்டன.
1915 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்து மகா சபையும், 1925-ல் நாக்பூரில் ஐந்து சித்பவன் பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ம் இந்து தேசியத்தை கட்டமைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டு பல துணை அமைப்புகளைத் தொடங்கி சங்பரிவாரமாக விரிந்து பரவியது கடந்த காலம்.
இந்த துணை அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையோடு தொடர்ந்து இயங்குவதும், பல்வேறு சிறு மற்றும் குறு அமைப்புகளை உருவாக்கி வளர்ப்பதும், அவர்கள் வன்முறைச் செயல்களை அரங்கேற்றுவதும் இன்றுவரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது.
ஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்துவ பிரசாரத்தைத் தான் இந்திய மாநிலங்கள் முழுக்க கலாச்சார தேசியவாதம் (CULTURAL NATIONALISM) என்கிற பெயரில் முழங்கி வருகிறார் மோடி.
மோடியால் பேசப்படும் கலாச்சாரத் தேசியத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தத்துவ அடிப்படை கொடுத்த கோல்வால்கர் பின்வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்.
" பாரதம் என்னும் நம் நாட்டின் தேசிய வாழ்க்கை புனிதமானது. முழுமையான வாழ்க்கை தத்துவத்தையும், பொதுவான வாழ்க்கைக் குறிக்கோள்களையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சார மரபு இதற்கு உண்டு. இந்த மரபைச் சுற்றியே இந்து சமுதாய வாழ்க்கை பின்னப்பட்டுள்ளது.பாரதத்தின் தேசிய வாழ்க்கை என்பது இந்து தேசிய வாழக்கையே ஆகும்"
ஆகவே, இவர்கள் சொல்லும் தேசியமானது, விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்து மதத்தினை பின்பற்றுவோருக்கானது. இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனீய, வர்ணாசிரமக் கோட்பாடுகளை மீறாத இந்து மதத்திற்கானது.
இசுலாமியர்களையும்,பிற சிறுபான்மையினரையும், மற்ற தேசிய இன மக்களையும் வெறுத்து ஒதுக்கும் எண்ணத்தை கொண்டே இவ்வமைப்புகள் வளர்ந்து வருகின்றன.
பாபர் மசூதி இருந்த இடத்தை ராம ஜென்ம பூமி என்று சொல்லி மசூதியை இடித்ததில் இருந்துதான் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர் நிகழ்வாகிவிட்டது. "Making of a Muslim Terrorist" என்கிற ஆவணப்படத்தில் பா.ஜ.க முக்கியத் தலைவரான வினய் கட்டியாரின் நேர்காணல் பதிவாகியுள்ளது. அதில் அவர் கூறுவதாவது, " அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் மட்டுமல்ல, காசியில் விசுவநாதர் கோவிலும், மதுராவில் கிருஷ்ணர் கோவிலும் அங்கு அமைந்துள்ள மசூதிகளை இடித்துவிட்டு கட்டுவோம். மெக்கா, மதீனாவும் இந்துக்களின் இடம்தான், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்துக்களின் பூமியே" என்பதாகும்.
"எங்களுக்கு பயிற்சி அளிக்கும் போது பிரவீன் தொகடியா, நரேந்திர மோடி போன்றவர்களின் பேச்சுகளைத் தொடர்ந்து கேட்பது என்பதும் ஒரு முக்கிய பகுதி" என்று மும்பை தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் அளித்த வாக்குமூலத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் பிரிவினையைப் போதித்து வரும் இவ்வமைப்புகள், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சிறுபான்மை மக்களை காவு வாங்கவும் செய்தே வருகின்றன. 2002-ல் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்ட குஜராத் வன்முறை, 2008-ல் ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் கிருத்துவர்கள் மீதான வன்முறை, 2013-ல் மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டப் பின்னர் உத்தர பிரதேச மாநிலம், முசபார் நகரில் இசுலாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என பட்டியல் ஏராளம்.
சங்பரிவார அமைப்புகள் தாங்கள் செய்யும் வன்முறைகளும் , கிளப்பிவிடும் கலவரங்களும் எதிர்வினை நடவடிக்கைகளே என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. இதையே தான், நரேந்திர மோடி அவர்கள் குஜராத் வன்முறை பற்றி, " ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான, எதிர் வினை இருக்கும்" என்று கூறியிருந்தார்.
2008-ல் கந்தமாலில் நடைபெற்ற வன்முறையில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கத்தி முனையில் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். மதமாற்றத்திற்கு தடை கோரும் இந்து அமைப்புகள்தான் இந்த செயலில் ஈடுபட்டன. அத்தோடு அங்கு இவர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தாக்கப்பட்டன. சுமார் 5600 வீடுகள் எரித்து சூறையாடப்பட்டன.பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதோடு, 295 தேவாலயங்களும், 13 பள்ளி மற்றும் கல்லூரிகள் நாசம் செய்யப்பட்டன.
கடந்த 2013-ல் முசபார் நகரில் நடைபெற்ற வன்முறையில் ஏற்பட்ட பலிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்களால் பிரச்சாரமும் முக்கியக் காரணமாக இருந்தது. அரசாங்கத் தரவுகளின் படி, 43 உயிர்களைப் பலி கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாட்டில் எப்போது, எங்கு குண்டு வெடித்தாலும் தாடி வைத்த இசுலாமிய இளைஞர்கள் குற்றம் சாட்டப்படும் போது, காவி அமைப்புகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய நபர்களும், விபரங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டே வருகின்றன. அதற்கான சமகால உதாரணம்தான், ஆர்.எஸ்.எஸ்.-சின் தலைவர் மோகன் பகவத்திற்கு காவிப் படைகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளில் உள்ள தொடர்பு பற்றி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலமும், அதை கண்டுக்கொள்ளாத இந்திய அரசும், அசீமானந்தாவின் நேர்காணல் வெளியான கேரவன் இதழை காவிகள் கொளுத்தியதும்.
ஆர்.எஸ்.எஸ்-ன் காவிக் கரங்கள் காவல் துறை, நீதித் துறை, நிர்வாகம், ராணுவம் என அரசு இயந்திரத்தின் சகல துறைகளிலும் விரவியுள்ளது.
1949 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் சிலையை திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் வைத்த வழக்கில், மாவட்ட நீதிபதியான நாயர் இந்துத்துவ அமைப்பினருக்கு ஆதரவாகவே செயல்பட்டார். உண்மைக் கள நிலவரத்தை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மறைத்து காவிக் கும்பலுக்கு ஏவல் செய்தார்.இது இப்போதும் தொடர்கிறது.
மாலேகோன் குண்டுவெடிப்பில் பங்காற்றிய, காவிப் படையில் குண்டு தயாரிக்க உதவிய லெப்டினன்ட்.கர்னல் புரோஹித் மற்றும் மேஜர் உபாத்யாய் ஆகியோரைப் போல இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்பினரால் நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
இசுலாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள், மொகலாய ஆட்சிக் காலத்தில்தான் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன என்று பொய்ப் பரப்புரைகள் செய்து மக்களைப் பிளவுபடுத்தும் வேலையை இந்த அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. அத்தோடு நின்றுவிடாமல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அதற்கான பழியை இசுலாமிய அமைப்புகள் மீது போடுவதிலும் இவர்கள் துரிதமாக செயல்படுகின்றனர்.
ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், கோவா, மாலேகோன், அஜ்மீர் மற்றும் சம்ஜஹுத்த எக்ஸ்பிரஸ் ரயில் போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்துத்துவ அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு வெளியில் வந்துள்ளது.கடந்த இருபதாண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளை மறுவிசாரணை செய்ய வேண்டியுள்ளது.
இந்துத்துவ அமைப்புகளுக்கு மேற்சொன்ன குண்டுவெடிப்புகளில் உள்ள தொடர்பினை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஹேமந்த் கர்கரேவின் இழப்பு, விசாரணைகளை பின்னுக்கு இழுத்தது என்பதே உண்மை. இந்த வழக்குகளில் விசாரணை அதிகாரியாக இருந்த கர்கரே-வை இந்த அமைப்புகள் தேச விரோதி என்று பிரச்சாரம் செய்ததும், மும்பைத் தாக்குதலில் அவர் இறந்ததும் அவர் வீட்டுக்கு சென்று துக்க அரசியல் நடத்த முயன்ற மோடியை கர்கரேவின் மனைவி உள்ளே நுழையவிடாமல் விரட்டி அடித்ததும் யாவரும் அறிந்ததே.
அண்மையில் பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட முடியாமல் இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அப்சல் குருவை தூக்கிலிட்டது இந்திய அரசு இயந்திரம். ஆனால் 1966-ல் பசு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்திய சங்பரிவார் அமைப்புகள் பாராளுமன்ற இரும்புக் கதவுகளை தாண்டிக் குதித்து, தடுக்க வந்த காவலர்களை திரிசூலத்தால் குத்திக் கொன்றது. அப்போது இந்திய அரசு இயந்திரத்தின் கூட்டு மனசாட்சி ஓய்வெடுக்க சென்று இருந்தது என்பதே வரலாறு. ஒருவேளை, தாக்குதலுக்குப் பயன்பட்ட ஆயுதம் திரிசூலம் என்பதால் கூட இந்திய மனசாட்சி உறங்கி இருக்கலாம்.
சிறுபான்மையினருக்கு எதிராக உடனே விழித்துக் கொள்ளும் இவர்களின் மனசாட்சி அசீமானந்தாவின் வாக்குமூலத்திற்குப் பிறகும் இந்துத்துவ அமைப்புத் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் உறங்கிக் கொண்டே இருக்கிறது.
சிறுபான்மையினர், மற்ற தேசிய இன மக்களின் பிரச்சனைகளின் போது சொல்லப்படும் இந்திய இறையாண்மை, ஆர்.எஸ்.எஸ் என்று வரும் போது மட்டும் இந்து இறையாண்மையாக பல்லிளிக்கிறது.
இந்த அமைப்புகளின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ் -சின் ஆசியோடுதான் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் ஆகியுள்ளார். அத்தோடு 2001-ல் மோடி குஜராத் முதல்வராக முதன்முறை பதவியேற்ற போது, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து நேரடியாக முதல்வரான முதல் நபர் நரேந்திர மோடிதான். அப்போது அவர் குஜராத் சட்டசபை உறுப்பினராகக் கூட இல்லாமல் நேரடியாக முதல்வராக்கப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நரேந்திர மோடிக்கு ஆசியை மட்டும் வழங்கவில்லை, அத்தோடு நான்கு கட்டளைகளையும் பிறப்பித்துள்ளது. அவையாவன,
* அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது
* சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது.
* ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்
பிரிவை ரத்து செய்வது.
* பசுவதைத் தடுப்புச் சட்டம் ஆகியனவே.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் முழு நேரப் பிரச்சாரகராக இருந்த மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டது, குஜராத்தின் போலி வளர்ச்சியை நாடெங்கும் கொண்டு சேர்க்க அல்ல. மாறாக, இந்த்துதுவக் கும்பலின் செயல்திட்டங்களைத் தங்குதடையின்றி நிறைவேற்றவே.
2012 குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க பெற்ற வெற்றியைப் பற்றி சில கூற்றுகள்,
* மோடியின் வளர்ச்சி என்கிற பிரச்சாரம் உண்மையானால், டாட்டா நானோ தொழிற்சாலை அமைந்துள்ள தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெறத் தவறியிருக்கக் கூடாது.
* 12 விழுக்காடு விவசாய வளர்ச்சி இருந்தும், விவசாயத் துறை அமைச்சர் திலிப் சங்கணி ஏன் தோல்வியடைந்தார்?
* குஜராத் வளர்ச்சிகளின் சின்னமானால், சுகாதாரம், சமூக நலத்துறை, உள்துறை போன்ற துறைகளோடு மொத்தம் 7 அமைச்சர்கள் ஏன் தோல்வியுற்றனர்?
* மோடி ஏன் ஒரு இசுலாமிய வேட்பாளரைக் கூட தேர்தலில் நிறுத்தவில்லை.
நாம் மேற்சொன்ன கூற்றுகளை எல்லாம், சனநாயக ஆற்றல்களோ, இடதுசாரிகளோ, அரசியல் விமர்சகர்களோ தெரிவிக்கவில்லை. இவற்றை தெரிவித்து, மோடியின் 2012 தேர்தல் வெற்றிக்குக் காரணம் இந்துத்துவ கொள்கைகளே என்று சொல்லியிருந்தது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஊடகமான விஷ்வ ஹிந்து சமாச்சார்.
ஆர்.எஸ்.எஸ் -ன் அடியொற்றி வரும் நரேந்திர மோடி என்றுமே வளர்ச்சிக்கான அடையாளம் அல்ல; இந்துத்துவ சூலாயுதத்தை வளர்ச்சி உறையால் மூடி இந்திய அதிகாரத்தைக் கைப்பற்ற வரும் இந்துத்துவ பாசிசவாதியே.
கதிரவன்,
சேவ் தமிழ்சு இயக்கம்.
- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!
பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html
பாகம் -3 - http://save-tamils.blogspot.in/2014/02/3.html
பாகம் -4 - http://save-tamils.blogspot.in/2014/02/4.html
No comments:
Post a Comment