Thursday, March 20, 2014
இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு - தமிழக குடிமைச் சமூகத்தினர் போராட்டம்
இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்தக் கோரி இந்திய அரசு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழக குடிமைச் சமூகத்தினர் போராட்டம்
கடந்த மார்ச் 16 ஞாயிறு அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சேவ் தமிழ்சு இயக்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் இந்திய அரசு இலங்கை மீது ஐ.நா மனித உரிமை மன்றத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வுக்கான தீர்மானத்தை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் இந்திய அரசு ஈழத் தமிழர்கள் மீது 13ஆவது சட்ட திருத்தத்தை திணிப்பதை எதிர்த்தும், இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வைக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
சேவ் தமிழ்சு இயக்க ஒருங்கிணைப்பாளர், தோழர்.செந்தில் பேசும் பொழுது, அமெரிக்க கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு புரிந்துள்ள இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வைச் சேர்த்து அதை வலுப்படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் பணிகளில் வேகத்தை காட்டும் இந்திய அரசு, மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் தொடர்ந்து மயான அமைதி காத்து வருகின்றது என்றார். அதே நேரம், தற்சமயம் நடந்து வரும் ஐ.நா.மனித உரிமை மன்றக்கூட்டத்தைப் பற்றி தமிழகத்தில் உள்ள தேர்தல் அரசியல் கட்சிகள் கள்ள மௌனம் காத்துவருவதை கண்டித்தார்.
தீர்மானத்தின் இரண்டாவது வரைவில் 9ஆவது புள்ளியில் மாற்றப்பட்டுள்ள "இலங்கை அரசை கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கப்பட வேண்டும்" என்ற வரி இந்திய அரசின் தலையீடை அம்பலப்படுத்துகின்றது. இதே போல தான் சென்ற முறையும் இந்திய அரசு ஒரு வரியை மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. நாம் நமது போராட்டத்தை இந்தியாவை நோக்கி வைத்து, இந்தியா இத்தீர்மானத்தில் தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை சேர்த்து அதை வலுப்படுத்தக்கோரி நாம் போராட வேண்டும் என்றார்.
பி.யூ.சி.எல்-லைச் சேர்ந்த பேராசிரியர்.சரஸ்வதி பேசும்பொழுது, இந்தியா இலங்கை அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்வதற்கு முன்பும், பின்னரும் தொடர்ந்து ஆதரித்தே வருகின்றது, இருந்தாலும் இலங்கை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வைக் கோரும் ஒரு தீர்மானத்தை கொண்டுவர நாம் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.தியாகு இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பிலான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
போர்க்குற்றமல்ல, இனப்படுகொலை என்பது தான் சரி என்ற விவாதம் தவறானது. நாம் நடைபெற்றது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழர்கள் இனப்படுகொலைக்கும் உள்ளானார்கள் என்று சொல்ல வேண்டும். தமிழர்கள் மீதான இனப்படுகொலை என்பது, இலங்கை அரசு தொடர்ச்சியாக தமிழர்கள் மீது செய்து வரும் இன அழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்களின் கூட்டே. தமிழர்களுக்கு எதிரான போரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களுக்கான நீதியே நாங்கள் கோருவது. முன்முடிவுகளை வைத்துக் கொண்டு நாம் எந்த விசாரணைக்குள்ளும் செல்ல முடியாது. இலங்கை அரசு தமிழர்கள் மீது நடத்தியுள்ள இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய விசாரணை வேண்டும் என்பதே நம் கோரிக்கையாக இருக்க வேண்டும், அதில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழகத்தில் இருப்பதால், நாம் நமது போராட்டத்தை இந்தியாவிற்கெதிராக ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்" என்றார் தோழர்.தியாகு.
தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர். சேகர், திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்.அருண், பி.யூ.சி.எல் தமிழக பொறுப்பாளர் பேரா. சரசுவது, தமிழர் குடியரசு முன்னணியைச் சேர்ந்த தோழர்.ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.இளையராஜா, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர்.ஜெயக்குமார், எழுத்தாளர்.சந்திரா, பேரா.குழந்தை, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, பாலின சிறுபான்மையினருக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் தமிழக தமிழர்களாகிய நாங்கள் இந்திய அரசு இலங்கை புரிந்த இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை தீர்மானமாக முன்வைக்க வேண்டும் என்று கோரினர்.
Subscribe to:
Post Comments (Atom)
அமெரிக்காவை எதிர்க்கிறேன் ஆப்பிரிக்காவை எதிர்க்கிறேன் என்று வழி தவறாமல், இந்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்க கூடிய இது போன்ற அர்த்தமுள்ள போராட்டங்களை, மேலும் மேலும் முன்னெடுக்க வாழ்த்துக்கள் தோழர்களே...!
ReplyDeleteநன்றி தோழர்.மொஹம்மது ... தொடர்ந்து போராடுவோம்.....
ReplyDelete