Friday, March 14, 2014

ஆதலினால் காதலிப்பீர்…......... - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு - 7


அண்மையில் தோழர் ஒருவர் இல்லத் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமண நிகழ்விடத்துக்குள் நுழைந்ததும் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. காரணம், ஆடம்பரம். தெருவெங்கும் நூற்றுக்கணக்கில் ஃபிளக்ஸ் பேனர்கள், பிரமாண்டமான அலங்கார வளைவுகள். அலங்காரத் தோரணங்கள். கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் ஆன மண மேடை, அந்த பிரமாண்டமும், அலங்காரமும் அங்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளும் உண்மையிலேயே எனக்குள் ஒரு சங்கோஜத்தை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் இன்னும் ஒன்றிரண்டு திருமண நிகழ்வுகளில் காண நேர்ந்த இது போன்ற ஆடம்பரமும், சம்பிரதாய நடவடிக்கைகளும் கூட நினைவுக்கு வந்தன. இதில் வருத்தத்துக்குரிய விஷயம், அனைத்துமே இடதுசாரித் தோழர்களின் வீட்டுத் திருமணங்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் அத்தனை பேருமே மிக எளிய குடும்பச் சூழலிலிருந்து இயக்கத்துக்கு வந்து சேர்ந்தவர்கள். பின் எதற்காக இத்தனை ஆடம்பரம்? அனாவசியச் செலவுகள்? ஒரு வேளை சோற்றுக்கும் வழியில்லாத ஏழ்மை நிறைந்த மக்கள் தொகையினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட, வறுமையை இன்னமும் துடைத்தழிக்க முடியாத நிலையிலிருக்கும் நம் நாட்டில்தான் இந்த முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய திருமணங்கள் இடதுசாரிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாகப் பத்து சதவீதம் கூட இருக்காது. இருந்தாலும் இது மனதுக்கு வேதனையளிக்கக்கூடியது என்பதுடன் தவிர்க்கப்படக் கூடியதும் கூட.


தந்தை பெரியாரும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களும் முன்னோடிகளாக இருந்து தொடங்கி வைத்த சுயமரியாதைத் திருமணங்கள், சடங்குகள் இல்லா எளிய திருமணங்கள் இன்று மிகவும் அருகிக் குறைந்து கொண்டே வருகின்றன. எங்கோ ஒரு இளவரசனும் திவ்யாவும் சாதி மறுத்துத் திருமணம் செய்துகொண்டால் தமிழகம் முழுவதும் ஆதிக்க சாதி உணர்வு மேலெழுந்து ஊரையே கொளுத்துகிறது. காதலர்களைப் பிரித்து கௌரவக் கொலை அல்லது எளிய சாதியைச் சார்ந்தவர்களை உயிர்ப்பலி வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் சாதி, மத மறுப்புத் திருமணம் என்பது இன்றைய இந்துத்வா அபாயம் மற்றும் சாதி உணர்வு மேலோங்கி வரும் காலத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.


மற்றொரு மிக முக்கியமான விஷயம், சாதி மறுப்புத் திருமணங்கள் குறைந்து கொண்டு வருவது. காதல் திருமணம் செய்து கொண்ட தோழர்கள் கூட தங்கள் பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ தாய் தந்தை இருவரில் ஒரு சாதியையே தேர்வு செய்து வரன் தேடும் நிலைதான் இன்று உள்ளது. காதல் திருமணம் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனம், ஏற்பாட்டுத் திருமணத்தின்போது மட்டும் தங்கள் சுய சாதியையே தேடுவது வினோதம்தான். அப்படியே சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்க முன் வந்தாலும் அதிலும் சில மனத்தடைகள்; தாழ்த்தப்பட்ட சாதியாக இருக்கக்கூடாது, வேற்று மதத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடாது, வேறு மொழி பேசுபவராக இருக்கக்கூடாது என நிபந்தனைகள் விதிப்பதையும் காண முடிகிறது.


குறிப்பாக, காலாவதியான இந்துத்வா சடங்குகளைத் திருமண நிகழ்வில் சேர்ப்பது, தாலி கட்டுவதைக் கட்டாயமாக்குவது. ஏன் இன்னமும் தாலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை. அந்த அளவுக்கு எதிர்காலம் குறித்த பயம் நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது, இந்தத் தாராளமய, உலகமயப் பொருளாதாரச் சூழலில் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும் இதைவிட எத்தனையோ பிரச்சனைகளையும் சமூக, அரசியல், பொருளாதார அச்சுறுத்தல்களையும் எதிர்த்துப் போராடித்தானே வென்றுள்ளோம். ஒருவேளை நம் பிள்ளைகள் நம்மைவிட போராளிகள் என்ற நம்பிக்கை நமக்கு வரவில்லையோ!

இந்த இணையர் அந்தக் காலத்தில் குடும்பத்தையும், சமூகத்தையும் எதிர்த்துப் போராடி காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வாழ்க்கையிலும் தனியாக நின்று போராடினாலும் இன்று முன்னேறி நல்ல நிலையில் வாழ்பவர்கள். தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார்கள்; அவர்களும் பெற்றோரை மதித்துக் கல்வி ஒன்றையே குறியாக்கி, தொழிற்கல்வி முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறார்கள். இது காதல் திருமணங்களின் வெற்றி. இவர்கள் சமூகத்துக்கே முன்னோடிகளாக உலகின் முன் உதாரணமாக நிறுத்தப்பட வேண்டியவர்கள். முற்போக்குக் கொள்கையோ, இடதுசாரிப் பார்வையோ இல்லாத மக்களிடம் கூட இவர்களை உதாரணம் காட்டினால் மனம் மாறி சாதி மறுப்புத் திருமணங்களுக்குச் சம்மதம் தெரிவிக்கக்கூடும், அந்த அளவுக்கு உயர் வாழ்க்கை வாழ்ந்த தோழர்கள் கூட ஏன் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நாம் கடந்து வந்த பாதையை மறந்து விட்டோமோ என்று கூட ஒரு கணம் தோன்றுகிறது.


ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். எதிர்க்கட்சி வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சி. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று பரம வைரிகளான கட்சிகள். ஒரு நாள் அவை கூடியது. சிறிது நேரம் கழித்து தோழர் பி. ராமமூர்த்தி அவைக்குள் நுழைகிறார். அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவரை வரவேற்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் புதிய அந்தஸ்துக்காக அவரை வாழ்த்துவதாகக் கூறுகிறார். அத் தகவல் சற்று திகைப்பூட்டக் கூடியதாக இருக்கவே ராஜாஜி தலையை ஆட்டுகிறார். பின்னர் அவர் அவையில் பேசும்போதுதான் எதிர்க்கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தி அன்று காலையில்தான் பதிவுத் திருமணம் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தெரிய வருகிறது. இது கட்சித் தலைவர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதுவரை அத் தகவல் யாருக்கும் தெரியாது. இந்த சுயமரியாதைத் திருமணத்துக்குத் தலைமை வகித்தவர் தந்தை பெரியார். பின்னர் கட்சித் தோழர்களின் ஏற்பாட்டின் பேரில் மிக எளிய முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. திருமண விருந்தாகத் தேநீர் மட்டும் வழங்கப்பட்டது.



ஒரு மாநிலத்தின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு மிக எளிய முறையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டது இன்று நம்ப முடியாத தகவலாக இருக்கலாம். இது காதல் திருமணம் என்றுகூடச் சொல்ல முடியாது. பி. ராமமூர்த்தி ஐயங்கார். அம்பாள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பி. ராமமூர்த்தியின் துணைவியார் அம்பாள் விடுதலைக்கு முன்னர் அன்றைய பம்பாய் தொழிற்சங்க அலுவலகத்தில் பணிபுரிந்தவர். விடுதலை கிடைக்கும் வரை பிரம்மச்சாரிகளாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் விடுதலைக்குப் பின்னர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டனர். தங்களைப் போலவே இயக்கத்தில் பங்காற்றிய பெண் தோழர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்துப் பெண்களை சாதி மதம் பாராமல் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் பி. ராமமூர்த்தி அம்பாளைத் திருமணம் செய்து கொண்டார்.


அதே போல, தனது தியாகத்தாலும் பேச்சாலும் தமிழகத்தைக் கட்டிப் போட்டிருந்த தோழர் ஜீவானந்தம் அவர்களும் சாதி பாராமல் ஒரு எளிய குடும்பத்தில் பெண்ணைத் தேடி மிக எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் குறித்த தகவல் பரப்பப்படவில்லை. அன்றைய கலைஞர்களின் ஆதர்சமாகவும் ஜீவா விளங்கியவர் என்பதும் நாடறிந்ததே! தங்கள் விருப்புக்குரியவராகத் திகழ்ந்தவரின் திருமணம் ரகசியத் திருமணம் போல் நடந்ததால் வருத்தம் கொண்ட கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தனது சொந்தச் செலவில் திருமண வரவேற்பினை நடத்தினார்.


இதே தலைவர்கள் வழியில் பொதுவுடைமை இயக்கங்களின் முன்னணி ஊழியர்களும் எளிமையான முறையில் சாதி மத ஒழிப்புத் திருமணங்களை மேற்கொண்டனர். இதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும். இப்படி எங்கெல்லாம் வாய்ப்புகள் இருந்தனவோ அங்கெல்லாம் சுய மரியாதைத் திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றன என்பதும் கவனிக்கத்தக்கது. இத் திருமணங்கள் கொள்கை, கோட்பாடு சார்ந்தும் எளிமைக்குப் பெயர் பெற்ற பொதுவுடைமைவாதிகள் என்ற முத்திரையைக் காப்பற்றியவாறும் நடந்தேறின. ஆனால், இன்றைக்கு அத்தகைய உத்வேகம் காணாமல் போய் விட்டது. காட்சிகள் மாறி விட்டன.
தற்போது நாம் ஊடகங்களின் பலத்த தாக்குதல்களுக்கும் ஆளாகியுள்ளோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. நமது பன்முகப்பட்ட பண்பாடுகளை நசுக்கித் தட்டையாக்கி, ஒற்றைப் பண்பாடாக, உலகமயத்தின் தாராளவாதச் சந்தையின் நுகர்பொருளாக நம்மை மாற்றும் மாய்மாலங்களுக்கு இரையாகிறோம். உடையில், அலங்காரத்தில் திருமண ஏற்பாடுகளில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் எல்லாம் அப்படியே ஊடகங்களைப் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. நம் தோழர்கள் அனைவரும் சிந்தித்தால் திருமணங்களைப் புரட்சிகரமாக மாற்ற முடியும். ’நாங்கள் சாதி, மதம் பாராமல்தால் திருமணம் செய்கிறோம். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம். பொது வாழ்க்கையிலும் சமுதாயத்துக்கு வழிகாட்டியாக வாழ்கிறோம். எங்கள் வாரிசுகளும் எமது பாதையில் இன்னும் முற்போக்கான கொள்கைகளை ஏற்று வாழ்ந்து காட்டுவார்கள்’ என்ற நம்பிக்கையை சமுதாயத்துக்கு உணர்த்த முடியும். இதுவே ஆதிக்க சாதி வெறி, இந்துத்வா கூட்டணிக்கும் தக்க மரண அடியாக இருக்க முடியும்.


தங்களுடைய வாரிசுகளுக்குக் கல்வியூட்டிக் காதலை வளர்க்க வேண்டிய கடமை அல்லது தங்களுக்குப் பொருத்தமான இணையைத் தேர்வு செய்வதில் இளைஞ/இளைஞிகள் சுயமாகச் செயல்படுவதை ஊக்கப்படுத்த வேண்டிய கடமை இடதுசாரித் தோழர்களுக்கு இருக்கிறது என்றே நினைக்கிறேன். காதல் இதையெல்லாம் உடைக்கும் என்றால் காதலைக் கைக்கொள்ள உற்சாகமூட்டுவோம். பாரதியின் சொற்களைத் தாரக மந்திரமாக்குவோம்.


பா.ஜீவசுந்தரி
asixjeeko@gmail.com
பத்திரிகையாளர், எழுத்தாளர்

No comments:

Post a Comment