Sunday, March 23, 2014

சோற்றுக்குள் யானையை மறைத்தல்


கடந்த 21 ஆம் திகதி(2014), வெள்ளிக்கிழமை மாலை, ”இலங்கை: யானையை மறைத்தல்” என்ற பேராசிரியர்.மணிவண்ணனின் நூல் அறிமுக விழா, சென்னை மயிலையில் உள்ள மேய்ப்புப்பணி வளாகத்தில் நடைபெற்றது.

இப்புத்தக அறிமுக விழாவை நடத்திய ”போர்க்குற்றம் மற்றம் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தின்” சிறு அறிமுகத்தைச் செய்து வைத்த சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் இளங்கோ, நிகழ்வு முழுவதையும் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.

’பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என சிங்கள அரசு உலகெங்கும் பரப்புரை செய்தாலும், இது தமிழர்களை முற்றாக கொன்றொழித்த இனவழிப்பு போர். அத்தகைய இனவழிப்பு போரின் கொடூரத்தையும், 2010 டப்ளின் தீர்ப்பாயத்தின் அறிக்கையையும், சேனல் 4 காணொளி ஆவணங்களையும் தமிழக மண்ணிலிருந்து, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்ற பணியை, "போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கெதிரான மன்றம்" செய்து வந்திருக்கிறது. அந்த மன்றத்தின் முக்கியமான ஆளுமையான தோழர் பேரா.மணிவண்ணனின் புத்தகமான "இலங்கை: யானையை மறைத்தல்" என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும், வரவேற்று தோழர் இளங்கோ பேசினார்.

தோழர் செந்திலின் உரை:- நூலாசிரியர் பேரா.மணிவண்ணன் அறிமுகம்

2009 இலங்கையின் இறுதி கட்ட போரானது, அதுவரை புவிசார் அரசியலின் மீது, உலக ஒழுங்கின் மீது எங்களுக்கிருந்த நம்பிக்கைகளை முற்றாக தகர்த்தெறிந்தது. உலகெங்கும் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. செயற்கோள்களின் துணையோடு உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளுமளவுக்கு வளர்ச்சி அடைந்து விட்டோம். இத்தகைய அசுர வளர்ச்சியடைந்த கால கட்டத்திலும், நம் தமிழர்களுக்கெதிராக நடந்த அநீதி பேசப்படவில்லை. நம் கோரிக்கைகளின் நியாயம் எடுத்துச் செல்லப்படவில்லை. இந்திய உளவியலும் மெளனம் காத்தே நின்றது. நமக்கான வலுவான ஆதாரங்களை முன் வைக்கும் நோக்கில், ’இலங்கை: யானையை மறைத்தல்’ நூலை எழுதிய பேரா.மணிவண்ணன், சென்னை பல்கலைக் கழகத்தில் அரசியல் துறைத் தலைவராக பணிபுரிகிறார். சொந்த ஊர் வேலூர். தில்லி பல்கலைக் கழகத்தில் 17 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்த மணி வண்ணன் அவர்கள், உலகெங்கும் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து, அறிவுத்துறையில் சீரிய ஆய்வுகள் நடத்திய அனுபவம் வாய்ந்தவர். குறிப்பாக பர்மிய, திபெத்திய விடுதலை போராட்டங்களில் அர்ப்பணிப்புள்ள பங்காற்றியவர்.


போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கெதிரான மன்றத்தில் பேரா.மணிவண்ணன் பேசத் துவங்கும் போது இப்படித் தான் துவங்குவார். “நான் பர்மிய விடுதலை போராட்டங்களுக்காக பேசியிருக்கிறேன். திபெத்திய விடுதலை போராட்டங்களுக்காக பேசியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் யாரும் என்னை ‘நீ எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவன்’ என்று கேட்டதில்லை. ஈழ விடுதலைக்காக பேசும் போது மட்டும் என்னை தமிழன் என்று அடையாளப்படுத்துகின்றனர்’ இரண்டாம் உலகப்போருக்கு பின் ஐ.நா அவை தோற்றுவிக்கப்பட்டாலும் 1948 முதல் 2009 வரை, உலகெங்கும் இனக்கொலைகள் நடந்திருக்கின்றன. இனக்கொலைகள் நடைபெற்றால், அந்த கொலைகள் இனத்தையே முற்றாக அழிக்கும் (Intent) உள்நோக்கம் கொண்டது தானா என்பதை நிறுவுதலே சிக்கலானது. அதை இனக்கொலை தான் என்பதை ஒப்புக் கொள்வதற்கு சர்வதேச நாடுகளின் நலன்கள் பொருந்திப்போக வேண்டும். இதை ஆதாரப்பூர்வமாக நிறுவ, அறிவுத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

இப்புத்தகத்தில் பல ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நேரில் கண்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இவர்களின் மூலமாக இந்த ஆதாரங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில், இனக்கொலை என்பதன் பொருள் புரிந்து கொள்ளப்படுகின்றது ( Sensitize ). ஆனால் தெற்காசிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் மட்டுமே உணரப்படுகின்றன. இனப்படுகொலைகளை புரிந்து கொள்ளுமளவு இங்கு வளர்ச்சி நிலைமைகள் இல்லை.

ஆகவே சிங்கள அரசுக்கு எதிரான, தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் பேரா. மணிவண்ணனின் இப்புத்தகம் ஒரு வலிமையான கருவியாக பயன்படும் என்றார்.

ச. பாலமுருகன் , மக்கள் சிவில் உரிமைக் கழகம்

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வந்தாலும், தமிழகம் தாண்டி அது செல்லவில்லை. ஈழப் பிரச்சினையின் நியாயமும் எடுத்துச் செல்லப்படவில்லை. மேலும் இப்போர் குறித்த ஆவணங்கள் பிற மொழிகளிலும் இல்லை. தமிழகத்தின் வெளியே இருக்கும் பல்வேறு மனித உரிமை இயக்கங்கள், சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையே ஆன ஒரு போராக மட்டுமே பார்க்கின்றன. ஆகவே மனித உரிமைகள் சார்ந்த நாம், நம்முடைய போதாமையை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.


1960 ஆம் ஆண்டு, இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட “ஜெனிவா மாநாட்டு சட்டம்” ( Geneva Convention Act ), ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் வரையறைகளை பாதுகாக்க வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின் படி, எந்த நாடும் போர்க்குற்றத்திற்கும் இனப்படுகொலைக்கும் துணை போகக் கூடாது. அப்படி துணை போனால் அதை எதிர்த்து போராட வேண்டியது, இந்தியக் குடிமகனின் கடமை. அவ்வகையில், நம் போராட்டங்கள் சட்டப்பூர்வமானவையே.

இது உணர்ச்சி வயப்பட்ட போராட்டமல்ல. நீண்ட நெடிய வரலாற்றுப்பின்னணி கொண்ட சனநாயகப் போராட்டம். இதை வெறும் தமிழர் பிரச்சினை, தமிழன் பார்த்து கொள்வான் என்று சுருக்கப்படாமல், உலகின் மெளனத்தை உடைக்க வேண்டும். உலகளாவிய மனித உரிமை பிரச்சினையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஆயிரம் பக்கங்களில் எழுதப்பட்ட இந்த சாட்சியங்கள் ( புத்தகத்தின் ), அடுத்த தலைமுறைக்கும் கையளிக்கப்படுகிறது. இந்நூலை எழுதியதன் மூலம் பேரா.மணிவண்ணனின் வாழ்வு பூரணமடைந்து விட்டது.


விடுதலை இராசேந்திரன் ( தி.வி.க )

சர்வதேச அரங்கில், ஈழ விடுதலைப் போராட்டத்தில் பேரா.மணிவண்ணனின் நீண்ட நெடிய அர்ப்பணிப்புள்ள பணி குறித்து தன் கருத்துகளை பதிவு செய்த தோழர் விடுதலை இராசேந்திரன், இந்நூல் குறித்த சில குறிப்புகளையும் முன் வைத்தார்.

இலங்கையின் இரட்டைக் கோட்பாட்டு செயல்பாட்டை ( Doctrine of Double Effect ) பதிவு செய்கின்றது இந்நூல், ஈழ முரண்பாடுகளை இராணுவ ரீதியாக அடக்குதல், தமிழின அடையாளங்களை முற்றிலுமாக அழித்தல் ஆகிய இரு கோட்பாட்டு செயல்பாட்டின் அடிப்படையில், அங்கு நடந்த இனக்கொலையின் உள்நோக்கத்தை ( Intent ) நிறுவுகிறது இந்நூல்.


தற்போது வந்திருக்கும் அமெரிக்கத் தீர்மானம், பயனற்றது என்றாலும், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கீழ் இலங்கை அரசு கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதுவே நிரந்தரமான தீர்ப்பும் அல்ல. மேலும், பன்னாட்டு விசாரணை என்ற ஒற்றைக் கோரிக்கை வலுவாகிக் கொண்டிருக்கும் வேளையில், பேரா.மணிவண்ணன் அவர்கள், இந்நூலில், இலங்கை அரசு தனக்குத் தானே விசாரித்துக் கொள்ளும் தகுதியை இழந்து விட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளார். இந்த உண்மையை ஐக்கிய நாடுகள் சபையும் ( UN Expert Committee ) ஒப்புக் கொண்டிருக்கிறது. ஐ.நா அவையின் தீர்ப்புப்படி, LLRC என்றழைக்கப்படுகிற, இலங்கை அரசு தனக்குத் தானே விசாரித்து கொண்டமையில், சர்வதேச ஒழுங்கு பின்பற்றப்படவில்லை. எனவே ஐ.நா மனித உரிமை ஆணையமே தலையிட்டு, பன்னாட்டு விசாரணை கொண்டு வர வேண்டும். ஒரு நாட்டில் இனப்படுகொலை நடந்து, அது மோசமாக வெளியே தெரிய வருகிற போது, அந்நாடு RTP-Right to Protect ந் அடிப்படையில் ம‌க்களை காக்க தவறுகின்ற போது அந்நாட்டில் மற்ற நாடுகள் தலையிடும் உரிமை இருக்கின்றது. இலங்கை அரசு சொல்வது போல, இறையாண்மைக்கு ஊறு என்கிற வாதமெல்லாம் செல்லுபடியாகாது. இதை 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

மேலும் இலங்கை அரசு ஒரு அரசு என்பதன் தகுதியை இழந்து விட்டது. அது சிங்கள பெரும்பான்மைவாதத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து, நிர்வகிப்பதற்கான ஒரு தலைமை மட்டுமே. தென்னாப்பிரிக்காவில் இருந்த அரசு நடந்த குற்றங்களை ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் சிங்கள அரசு இருமாப்புடன், எங்கள் நாட்டில் எந்த தவறும் நிகழவில்லை என்பதையே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. தமிழீழத்தில் புலிகளின் மறுபிறப்பை பற்றி பேசும் இதே சிங்கள அரசு, 2009 இறுதி கட்ட போருக்கு பின், புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்ற பிரகடனப்படுத்தியது அரசின் செயல்பாட்டில் உள்ள முரணைக் காட்டுகின்றது.

இனக்கொலை (Genocide ) என்ற சொற்பிரயோகம் ஐ.நா அவையின் தீர்மானத்தில் கொண்டு வரப்படுமேயானால், அடுத்த நிமிடமே, இரு நாடுகளும் ஒன்றாக வாழ முடியாது. தனித்தனி நாடுகளாக பிறப்பெடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகி விடும். எனவே தான், இனக்கொலை என்ற வார்த்தையை கொண்டு வருவதில் ஐ.நாவின் அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டுகின்றன.. முதலில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும். அதன் வாயிலாக, தமீழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு படிப்படியாக நம் காய்களை நகர்த்த வேண்டுமேயன்றி, எடுத்த எடுப்பில் இனப்படுகொலை என்று நாம் வலியுறுத்துவோமேயானால், நீண்ட நெடிய நம் வரலாற்றுப் போராட்டத்தில், சர்வதேச அரங்கில் நாம் பின்னடைவை சந்திக்க நேரிடும்.

நீதியரசர் கே.சந்துரு


திபெத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களையெல்லாம் ஆதரித்து உரிமையுடன் வாழ வைக்கும் இந்திய அரசு, தமிழர்கள் என்றால் மட்டும் பாராமுகமாக இருக்கிறது. பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, ஈழப்பிரச்சினைக்கு பிறகே எழத் தொடங்கியுள்ள நிலையில். புலம் பெயர்ந்தவர்களுக்கும் உரிமை இருக்கிறதென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் பன்னாட்டு சட்டங்கள் தேவை. ஈழத்தில் நடந்தது இன அழித்தொழிப்பே. கடந்த மூன்று தசாப்தங்களாக சிங்கள அரசு, தன் நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை காக்கத் தவறிவிட்டது. மேலும் இது போன்ற சமகால அரசியல் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் பேசத் தயங்கும் இக்கால கட்டங்களில், பேரா.மணிவண்ணனின் இவ்வாவணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஈழத்து கவிஞர் காசி அனந்தன்

உலக அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய தலைமை அமைச்சர், முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய எல்லோரின் கைகளிலும் இந்நூல் கொண்டு சேர்க்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்திய கவிஞர், புத்தகத்தின் முக்கிய பகுதிகளை வாசித்தார். ஈழ மக்களுக்கு நடக்கும் கொடுமைகள், மறுக்க முடியாத சான்றுகள், புள்ளி விவரங்கள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள், தரவுகள் ஆகிய அனைத்தையும் பேரா.மணிவண்ணன் இந்நூலில் அடுக்கியுள்ளார்.

தோழர் தியாகு

இலங்கை அரசு செய்வது சோற்றுக்குள் யானையை மறைக்கிற வேலை. அதை அவர்களால் நீண்டகாலம் செய்யமுடியாது. மேலும் நடந்தது இனக்கொலை என்று தெரிந்தும் நம்மால் நிரூபிக்க முடியவில்லை. ஐ.நாவின் எந்த உறுப்பு நாடுகளும் நடந்தது இனக்கொலை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. பேரா. மணிவண்ணன் நடந்தது இனக்கொலை தான் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக அல்ல, ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டது போல, இனக்கொலையின் நோக்கம் ( Intent ) நிரூபிக்கப்பட வேண்டும். நோக்கம் என்பது நடந்து முடிந்ததை மட்டும் கொண்டும் பார்க்கப்படுவதில்லை. நடந்து கொண்டிருப்பவைகளை கணக்கில் கொண்டும் பார்க்கப் பட வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகளை அடக்குமுறைக் கருவிகளாக பயன்படுத்தும் போஸ்னியா, செர்பியா நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் சேர்க்க வேண்டும். மேலும் ஐ.நா. அவையில் அனந்தி சசீதரன், சிங்கள அரசு பாலியல் வன்கொடுமைகளோடு, தமிழ்ப் பெண்களை விலைமாதர்களாகவும் மாற்றி வருகிறது. இது தமிழ்ப் பண்பாட்டையே சீர்குலைக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

ஈழத்தில் நடந்தது இனக்கொலை தான் என்பதற்கு, கோத்தபய இராசபக்சேவின் திமிர்வாதப் பேச்சே போதுமானது. கோத்த்பய சொல்கிறார், “வடக்கில் தமிழர்களை எங்களால் நம்ப முடியாது. அங்கு எம் இராணுவத்தினர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யாவிடில் தான் நான் வியப்படைவேன்” மேலும் தமிழர்களின் குருதிச் சேதத்திற்கு நாங்கள் குருதிக்கொடை” செய்திருக்கிறோம். கோத்தபயவின் இந்த பேச்சு, தமிழர்கள் மீது தான் இத்தகைய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என நிரூபிப்பது மட்டுமின்றி, அங்கு இருப்பது சிங்கள இராணுவமே, இலங்கை இராணுவமல்ல என்பதையும் நமக்கு காட்டுகிறது.

மேலும் இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு கருத்தடை, ஆனால் சிங்கள குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு ஊக்கத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இனவழிப்பு பங்களிப்பிற்கு, இந்திய அரசிற்கும் ஒரு பெரும்பங்கு இருக்கிறது. இந்திய அரசு இந்த குற்றங்களுக்கெல்லாம் கழுவாய் தேட வேண்டும். ஆனால் அது தானாக தேடாது. நம் தமிழ் மக்கள் தான் அதை தேடும்படி செய்ய வேண்டும்.

தோழர் நெடுமாறன்:

நீதியரசர் கே.சந்துரு குறிப்பிட்டது போல, எந்த அரசுகள் மாறினாலும் வெளியுறவுக் கொள்கைகள் மாறப் போவதில்லை. இந்திரா காந்தி செய்த சிற்சில மாற்றங்களைக் கூட அடுத்து வந்த இராஜிவ் காந்தி அரசு ஒன்றுமில்லாமல் போகச் செய்து விட்டது. மேலும் மாற்றுக் கருத்துகளை முற்றாக நீர்த்துப் போகச் செய்வதற்குரிய சக்திகள் நம் நாட்டிலேயே இருக்கின்றன. இந்நிலையில், பேரா.மணிவண்ணனின் இந்நூல், உலங்கெங்கும் வாழும் அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், புலம் பெயர் வாழ் தமிழர்கள் கைகளில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

பேரா.மணிவண்ணன்

கார்ல் மார்க்ஸ், மூலதனம் என்ற நூலை எழுதிய போது, இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறார். அப்படித்தான் நானும் இந்த ஐந்து ஆண்டுகளாக இப்புத்தக உருவாக்கத்தை சுமந்து திரிந்தேன். இந்நூலை எழுதும் சில தருணங்களில் என்னையறியாமலேயே என் கண்கள் நிறைந்து, அழுகையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

சேவ் தமிழ்சு இயக்க இளைஞர்கள் போல, இன்றைய இளைஞர்கள் அரசியல் பேசுவதும், மாணவர் போராட்டங்கள் நடப்பதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறன்து. இந்த போராட்டங்கள் நமக்கான நீதி கிடைக்கும் வரை ஓயக்கூடாது. ஓயப்போவதில்லை என்றார், பேராசிரியர்.மணிவண்ணன்.


அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை -குறள் - 76

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது என்கிறது குறள்.

பேராசிரியர் மணிவண்ணனை பொருத்த மட்டும் அவர் ஈழத் தமிழர்கள் மீதும் அவர்தம் விடுதலை மீதும் வைத்துள்ள அன்புக்கும் பற்றுக்கும் அவரின் அறிவாற்றலை பயன்படுத்தி ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்று இந்த நூலின் மூலம் நிறுவியுள்ளார். இதன் மூலம் குறள் சொல்லும் அறத்திற்கும், மறத்திற்கும் மட்டுமல்ல அறிவுற்கும் அன்பு சால்பு என்று பேராசிரியர் மெய்பித்துள்ளார். அதனை குறிக்கும் பொருட்டு பேராசிரியர் இராமு மணிவண்ணனுக்கு தமிழீழத்தின் தேசிய மலர் ‘காந்தள்’ படம் பொருத்தி ‘அறிவிற்கும் அன்பு சார்பு’ என்ற நினைவுப் படம் அளித்து ‘போர்க் குற்றங்கள், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தின்’ சார்பாக மதிப்பளிக்கப்பட்டது.

அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment