Monday, March 31, 2014

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

30 மார்ச்சு 2014 தமிழ்நாடு

பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்யும் ஐ.நா. தீர்மானம் நிறைவேறியது!

தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்சு இயக்கம் கூட்டறிக்கை

ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகம் முன்னெடுக்கும் பன்னாட்டுப் புலனாய்வை வரவேற்கிறோம் !

இலங்கை அரசைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய முயன்று இறுதியில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்திய அரசைக் கண்டிக்கின்றோம்!


ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடரில் கடந்த மார்ச்சு 27 அன்று இலங்கை மீது பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழி வகுக்கும் தீர்மானம் நிறைவேறியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இதே மன்றத்தில் இலங்கையைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் (LLRC) குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரின. கடந்த காலங்களில் உள்நாட்டு விசாரணை என்ற பெயரில் ஒரு பன்னாட்டுப் புலனாய்வைத் தடுப்பதில் வெற்றி கண்ட சிங்கள அரசு இம்முறை (2014 இல்) தோல்வி கண்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளன. சீனா, பாகிசுதான், இரசியா, கியூபா உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. மார்ச்சு 3 ஆம் நாள் தொடங்கி தீர்மானம் நிறைவேறிய நாள் வரை மொத்தம் நான்கு வரைவுகள் வந்துள்ளன. தற்பொழுது இந்த நான்காம் வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 பரிந்துரைகள் உள்ளன.

தீர்மானத்தின் சுருக்கம்:

“இத்தீர்மானம் இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை நிறுவத் தவறிய நிலையில் பன்னாட்டுப் விசாரணைக்கான பொறியமைவு ஒன்று அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் நவிபிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் கவனத்தில் கொள்கின்றது; கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கால வரையறைக்குள்(2002 முதல் 2009 வரை) இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது; இன்னொரு புறம், நம்பகமான உள்நாட்டுப் பொறியமைவை ஏற்படுத்தச் சொல்லி இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருகின்றது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு (28 ஆவது கூட்டத் தொடரில்) இந்த முயற்சிகளின் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தை வேண்டுகின்றது. மேலும் இத்தீர்மான வரைவு 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கக் கோருகின்றது.“


உலகத் தமிழர்களின் கோரிக்கை என்பது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு புரிந்த இனப்படுகொலை , போர்க்குற்றங்கள் , மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மீது ஒரு சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு நடத்த வேண்டும் என்பதாகும். முந்தைய ஆண்டுகளில் ஐநா மனித உரிமை மன்றத்தில் உள்நாட்டு விசாரணையே கோரப்பட்டு வந்தது. இவ்வாண்டு உள்நாட்டு விசாரணையா? அல்லது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வா? என்ற புள்ளியில் சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான சர்வதேசப் போராட்டம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடந்தது . இதில் சிங்கள அரசு தோல்வி அடைந்துள்ளது.
13 ஆவது சட்டத்திருத்தத்தின்படி மாகாண சபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் இலங்கையின் ஒத்துழைப்புடனும் உடன்பாட்டுடனும் தான் ஐ.நா. சிறப்பு பிரதிநிதிகள் ஆலோசனை வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் இந்தியாவின் தலையீட்டில் நடந்துள்ளது. எப்படியேனும் பன்னாட்டுப் புலனாய்வைக் கோரும் 10(ஆ) பரிந்துரையை நீக்குவதற்கான முயற்சியை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்துள்ளன. அதை நீக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மறுத்துவிட்டன.


அதன் பின்னர், இரண்டு முக்கிய காரணங்களுக்காக புலனாய்வுக்கான கால அளவை 2002 – 2009 ஆம் ஆண்டுக்குள் முடக்கும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கட்டமைப்புரீதியான இன அழிப்பு நடந்துவரும் 2009 க்குப் பின்னான - இன்று வரையிலான காலகட்டமும் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டால் இலங்கை அரசின் இனப்படுகொலை குற்றம் அம்பலமாகிவிடும் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம் 1987 – 1989 காலகட்டத்தில் இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரன குற்றங்களும் அம்பலப்பட்டுவிடக் கூடாது என்பதாகும்.


தீர்மானத்திற்கான வாக்கெடுப்பின் போது தீர்மானம் மீதான விவாதத்தைத் தள்ளிப் போடுவதற்கு - பன்னாட்டுப் புலனாய்வுக்கான பரிந்துரையை நீக்குவதற்கு - முயன்றுள்ளது இந்திய அரசு. இதில் வெற்றியடைய முடியவில்லை. இறுதியில் இலங்கையுடனான தன் நட்பை உறுதி செய்து கொள்ளும் விதமாக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்திய அரசு வெளிநடப்பு செய்தது. ”பன்னாட்டுப் புலனாய்வைக் கோருவதென்பது இலங்கையின் தேசிய இறையாண்மையையும் அரசு நிறுவனத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகும், இது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இறையாண்மைக்காக கவலைப்படும் இந்தியா, தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கின்றது.
பன்னாட்டுப் புலனாய்வுக்கான தீர்மானத்தை ஒட்டிய தொடர் நிகழ்வுகள் நேர்கோட்டில் அமையப்போவதில்லை. ’இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறோம்’ என்று இராசபக்சே அறிவித்துவிட்டார். தீர்மானத்தின்படி பன்னாட்டுப் புலனாய்வை மேற்கொள்ளச் சொல்லி நம்முடைய போராட்டத்தைத் தொடர வேண்டும். இது மேற்குலக அரசுகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தும். சிங்கள அரசு மீது அரசியல்,பொருளாதார, பண்பாட்டுத் தடைகளை விதிக்கச் சொல்லிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இது சிங்கள அரசை மேலும் தனிமைப்படுத்தும். தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுப்பதற்கும் வேகமாக நடந்துவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகத் தமிழீழ மக்கள் போராடுவதற்கும் தேவையான புற அழுத்தமாக இவை அமையும்.


இந்த வகையில் இத்தீர்மானத்தில் நம்முடைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லையென்றாலும் இலங்கையின் உள்நாட்டு விசாரணையை மறுத்து பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவகுத்திருப்பதை வரவேற்கின்றோம். நீண்ட போராட்டத்தில் ஒரு சிறு முன்னேற்றம் இது. இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் வல்லரசுகளின் நலன்கள் ஒளிந்திருப்பது உண்மையென்றாலும் உலகத் தமிழர்களின் போராட்டத்தினால் தான் இது சாத்தியமானது. குறிப்பாக, இது தாயகத் தமிழர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறு வெற்றி.


அதே நேரத்தில், சர்வதேச அரங்கில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்க்கத் தொடங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழர் தாயகத்தில் குவிக்கப்பட்டுள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான சிங்கள இராணுவத்தை வெளியேற்றக் கோரி போராட வேண்டும்.


இந்த தீர்மானத்தை வலுப்படுத்தச் சொல்லி நாம் கோரினோம். ஆனால், காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு தீர்மானத்தை வலுப்படுத்தவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. இந்தியா மட்டுமல்ல இந்தியாவோடு சேர்ந்து 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பா.ஜ.க. வின் மூத்தத் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை தொடர்ந்து வரும் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பா.ஜ.க.வும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை இது மீள் உறுதி செய்கின்றது. தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் மட்டுமே இந்திய சிங்களக் கூட்டை முறிக்கும்.

ஐ.நா. தீர்மானத்தின்படி பன்னாட்டுப் புலனாய்வு நடத்துவதை உறுதி செய்யத் தொடர்ந்து போராடுவோம்! இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடுவோம்!

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் உள்ள தமிழர் அமைப்புகளும் இன உணர்வாளர்களும் உறுதியோடு எடுத்த கூட்டு முயற்சியின் பயனாகவே இந்த வெற்றியை அடைந்துள்ளோம். ஒவ்வொரு படியாக முன்னேறி இறுதி வெற்றியை அடையும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று உறுதி ஏற்போம்.

த. செ மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

கு. இராமகிருஷ்ணன்
பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தியாகு
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

செல்வி
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி

தி. செந்தில்
ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்சு இயக்கம்

No comments:

Post a Comment