Friday, March 7, 2014
இலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்....
அமெரிக்க வரைவுத் தீர்மானம்: மார்ச்சு - 2014:
தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்கும் தந்திரமா?
மறைந்து நின்று கழுத்தறுக்கும் இந்தியா!
03 மார்ச் 2014 அன்று தொடங்கி உள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 25வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் முதல் வரைவு அமெரிக்கா, இங்கிலாந்து, மொரிசீயசு, மான்டீநிக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளால் விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது
வரைவிலுள்ள பரிந்துரைகளில் சில:
இரண்டாவது பரிந்துரையில் இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மீதான தற்சார்புள்ள நம்பத்தகுந்த உள்நாட்டுப் புலனாய்வு என்று இலங்கை அரசைக் கோருகின்றது இவ்வரைவு.
ஆறாவது பரிந்துரையில் 13வது சட்ட திருத்தத்தின் படி வடக்கு மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க கோருகின்றது தீர்மானம். இதன் மூலம் இந்தியாவின் பங்கு இருப்பது அம்பலமாகியுள்ளது.
எட்டாவது பரிந்துரையில், இலங்கை அரசு நம்பகமான தேசிய செயல்முறை ஒன்றை செய்யத் தவறிய நிலையில் சர்வதேச பன்னாட்டு புலனாய்வு நடத்தப் பட வேண்டியது அவசியம் என்ற நவிப்பிள்ளையின் பரிந்துரைகளையும் முடிவுகளையும் வரவேற்கின்றது இவ்வரைவு. மேலும் அதே பரிந்துரையில் பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய செயல்முறை தொடர்பான முன்னேற்றங்களைக் கண்காணிக்குமாறும் இலங்கையில் நடந்ததாக சொல்லப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அது தொடர்பாக இரு தரப்பும் புரிந்த குற்றங்கள் குறித்தும் புலனாய்வு செய்யுமாறும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முன்னேற்றங்களை வாய்மூல அறிக்கையாக 27 ஆவது அமர்விலும் முழுமையான அறிக்கையாக 28 ஆவது அமர்விலும் முன் வைக்குமாறு ஐ.ந. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுகின்றது இவ்வரைவு.
பத்தாவது பரிந்துரையில், மேற்படி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தோடு ஒத்துழைக்குமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கின்றத் இந்த வரைவு.
வரைவின் சாரம்:
ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ‘தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ என்ற வகையில் பதிவு செய்யாமல் தேசிய அடையாளம் மறுக்கப்படுகின்றது.
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்துமாறு வரைவுத் தீர்மானம் வெளிப்படையாக வலியுறுத்தவில்லை. இவையனைத்தும், இலங்கையர்கள் மீதான வெறும் மனித உரிமை மீறல்களாகவே சுருக்கப்பட்டுள்ளன.
ஒரு புறம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரணை என்று இலங்கை அரசை ஒரு கயிற்றிலும் மறுபுறம் மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரம் என்று மாகாண சபைக்குள் ஈழத் தமிழரின் விடுதலைக்கான அரசியலை இறுக்கிட இன்னொரு கயிற்றிலும் நெருக்க முயன்று இரு தரப்பையும் தனது பிடிக்குள் வைக்கத் துடிக்கின்றது அமெரிக்க தலைமையிலான மேற்குலக அரசுகளும், இந்திய அரசும் இணைந்த கூட்டணி.
எட்டாவது பரிந்துரையைப் பொறுத்தவரை, அதன் முன் பாதியில் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைக் கோரும் நவி பிள்ளையின் பரிந்துரைகளையும், முடிவுகளையும் வரவேற்றுவிட்டு அத்தகையதோர் பொறியமைப்பை ஏற்படுத்துவது குறித்து ஏன் வெளிப்படையாக பேசவில்லை? ஐ.நா. மனித உரிமைகள் மன்ற ஆணையர் அலுவலகமே ஒரு புலனாய்வு அகமாக செயல்பட முடியுமா? ஒரு தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைக் கோராமல் தவிர்ப்பதற்கான தந்திரம் தான் இது. ஐ.நா மனித உரிமை மன்ற ஆணையருக்கான அதிகார வரம்புகள் குறித்தும், கடைசிக் கட்டப் போர்க்காலத்திலும், போருக்கு முன்னும், பின்னும் தமிழர்கள் மீதான குற்றங்களையும் உள்ளடக்கி புலனாய்வு மேற்கொள்ளப்படுமா என்று தெளிவாக ஏன் வரையறுக்கவில்லை?. இப்படி பல கேள்விகளை நம் முன் எழுப்புகின்றது...
எல்லா உலக அரசுகளும் நியாயம், நீதி என்பதற்கு அப்பால் நலன்களாலேயே இயக்கப்பட்டு வருகின்றன. சிங்கள அரசத் தரப்புக்கும் தமிழர் தரப்புக்குமான பேர வலிமையே உலக அரசுகளின் சார்புத் தன்மையைத் தீர்மானிக்கின்றன என்பதை இந்த வரைவு மீள் உறுதி செய்கின்றது. எனவே, மன வேகங்கள், மன விருப்பங்களுக்கு அப்பால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இம்மாத இறுதிக்குள் ஒரு சிறு முன்னேற்றத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. இது வரலாறு நமக்கு தந்தப் படிப்பினை.
வரும் இருபது நாட்களில் இன்னும் எத்தனை வரைவுகள் வரும். அதில் எவை எவை மாற்றப்படுகின்ற வாய்ப்பு இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. சாரத்தில், தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைத் தடுக்க அதிகாரப் பகிர்வை பேரப் பொருளாக இலங்கை அரசு பயன்படுத்தி இருப்பது புலப்படுகின்றது. 13 ஆவது சட்டத்திருத்ததை சிங்களப் பேரினவாதமும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையும் முறியடித்த வரலாறு இருப்பதால் நாம் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வைக் குறி வைக்க வேண்டியுள்ளது. வரைவின் பின்னணியில் மேற்குலக அரசுகளுடன் இந்தியாவின் கோரக் கரங்கள் இருப்பதை தமிழ் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
நமது கடமை என்ன?
இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது புரிந்துள்ள போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் மீது தற்சார்புள்ளப் பன்னாட்டு புலனாய்வைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிய வேண்டும் அல்லது இப்போது அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வரைவில் இத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக போராடுவதே தமிழ்நாட்டின் உடனடிக் கடமை.
சேவ் தமிழ்சு இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
இந்த இணையதொடர்பினை சொடுக்கினால் உங்களுக்கு சிறிலங்காவின் போர்க்குற்றங்களை புலனாய்வு செய்யவேண்டும் என்று முறையிடுகின்ற விண்ணப்பம் கிடைக்கும். இது பன்னாட்டு மனித உரிமைகள் சங்கத்திற்கு முறையிடும் படிவமாகும். எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் தவறாமல் இந்த இணையத்திற்கு சென்று ஸ்ரீலங்காவைப்பற்றிய உங்கள் கருத்துகளையும் சேர்த்து பதிவிடவும். முகவரி: http://chn.ge/1nbsmBU மேலும் பகிரவும்
ReplyDelete