Tuesday, March 4, 2014

'நாங்க சாதிகெட்ட குடும்பம்' - உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -1



நான் காதல் திருமணம் செய்துகொண்டேன். பெரும்பான்மையினர் போல அல்லாது, 'எவ்விதச் சடங்குகளும்' இன்றி ''சுயமரியாதைத் திருமணம்'' செய்துகொண்டேன்.

எனது காதலை வீட்டில் சொன்னபோது கடும் அதிர்ச்சியும், எதிர்ப்பும் வந்தது. எனது அண்ணன் மட்டும் அரைமனதோடு சம்மதித்தார், ஏற்றுக்கொண்டார். அவனது வீட்டில் ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில், எனது திருமணம் எந்த முறையில் நடக்கும் என்ற ஐயம் இரு வீட்டிலும் இருந்தது. அவனது வீட்டில், ''சர்ச்சில் வைத்து முறைப்படி தாலி கட்ட வேண்டும். இல்லையென்றால் எங்கள் இருவரது பெயரையும் 'ஊர் வரியில்' சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்'' என்று சொன்னார்கள். பல மாத போராட்டத்திற்குப் பின்பு, 'சர்ச்சில் வேண்டாம், ஆனால் தாலி கட்டிதான் திருமணம் நடக்கவேண்டும்' என்று அடம் பிடித்தனர். ஜோன்சன்(எனது கணவன்) அவன் பெற்றோர்களிடம், ''இந்தியாவில் தாலி கட்டி, திருமணம் செய்து கொள்வது போல்தான் உலகில் உள்ள அத்தனை கிறிசுதவர்களும் திருமணம் செய்துகொள்கிறார்களா? தாலி கட்டிக்கொள்ளச் சொல்லி பைபிளில் எங்கேயாவது சொல்லியிருக்கிறதா?'' என்று கேள்விகளை எழுப்பி அவர்களை யோசிக்க வைத்தான்.


மற்றொரு புறம், எனது நண்பர்கள் என்னிடம் ஆச்சரியமாகக் கேட்டனர். ''சுயமரியாதைத் திருமணமா?'', ''என்ன பெரியார் வழி மாறிட்டீங்களா?'', ''தாலி கட்டாம கல்யாணம் செய்தா, குறைந்தபட்சம் ஒரு மோதிரமாவது மாத்திக்குங்க'' இப்படியெல்லாம் கேள்விகளும் அறிவுரைகளும் குவிந்தன. சிலர் ''தாலி கட்டாம கல்யாணம் செஞ்சா அது செல்லாது. இது ஒரு கல்யாணம், இதற்கு அழைப்பிதழ் வேற!'' என்று எரிச்சலூட்டும் விதமாகவும் பேசினர்.


அவர்களுக்கெல்லாம், திருமணச் சட்டத்தில் இருக்கும் ''சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act)" பற்றி விளக்கவேண்டியிருந்தது. இது இந்தியா முழுவதிற்குமானது. திருமணத்திற்கு முன்பே பதிவாளர் அலுவலகத்தில் தகவல்களைக் கொடுத்து, அறிவிப்பெல்லாம் ஒட்டி அதன்பிறகு இதுபோன்ற திருமணங்கள் நடந்தது. ஆனால், தமிழகத்தில் இது பழைய முறையாக மாறிவிட்டது. "தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் - 2009'' ன் படி, இந்த முன்ன்றிவிப்பெல்லாம் தேவையில்லை. மணமகன், மணமகள் எந்த சாதி எந்த மதம் என்ற கேள்விக்கே இடமில்லை. திருமணம் நடந்து முடிந்த பிறகு, பிறந்த தேதி, முகவரி இவற்றுக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய ஒரு அடையாள அட்டை, திருமணம் நடத்தி வைத்தவருடைய ஒப்பம், திருமண அழைப்பிதழ், இவற்றை வைத்து திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்தச் சட்டத்திலிருந்து சில வரிகள்

// “marriage” includes all marriages performed by persons belonging to any caste or religion under any law for the time being in force, or as per any custom or usage in any form or manner and also includes remarriage.//

//“priest” means any person who performs a marriage.//


தோழர் தியாகு உறுதிமொழிகளைக் கூற சமந்தாவும், ஜோன்சனும் வழிமொழிகின்றார்கள்....








நானும் ஜோன்சனும், திருமணப் பதிவுச் சட்டம் குறித்த புத்தகம் வாங்கிப் படித்தோம். வழக்கறிஞராக இருக்கும் ஜோன்சனின் உறவினர் ஒருவரிடம் மேலும் தகவல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டோம். இதுபோன்ற விளக்கங்கள் தருவதற்கு அது உதவியாக இருந்தது.


நண்பர்கள் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கும்போது சில நேரம் அழுகையும் பல நேரங்களில் கோபமும் வந்து என் மனதைக் கசக்கிப் பிழியும். இன்னும் பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள். ''குழந்தையை எந்த சாதி, மத முறையில் வளர்ப்பீங்க?'', ''பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் என்னவென்று போடுவீங்க?'', ''அவங்களுக்குத் திருமணம் செய்யும்போது, எந்த சாதி, மதத்துல பொண்ணோ பையனோ பார்ப்பீங்க?'' இப்படியான கேள்விகள். இந்தக் கேள்விகள் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. ஜோன்சன் அவ்வப்போது தக்க பதில்கள் அளித்து எனக்குப் புரியவைத்தான்.


நான் என் நண்பர்களுக்கு அளித்த பதில்கள். ''எங்கள் குழந்தைகளை எந்த சாதி, மத முறைப்படியும் வளர்க்க மாட்டோம். பின்னாளில் அவர்களும் எங்களைப்போல கடவுள் மறுப்பாளராக வரலாம். அல்லது பிடித்த மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. பள்ளியில் சேர்க்க சாதி, மதமெல்லாம் தேவையில்லை என்று அரசு ஆணையே இருக்கின்றது. சாதி, மதம் கிடையாது, 'நாங்க சாதிகெட்ட குடும்பம்' என்று சொல்லிக்கொள்கிறோம். பொதுப்பிரிவில்(Open Competition) ல் போட்டியிட்டுக்கொள்ளட்டும். எங்கள் குழந்தைகளின் திருமணத்தைப் பொருத்தவரையில், அது அவர்களுக்கான சுதந்திரம். அவர்கள் யாரைத் தெரிவு செய்தாலும் முழு மனதோடு ஏற்றுக்கொள்வோம். காதலிக்கவில்லையென்றால் எங்களைப்போன்றே சாதி, மதம் பார்க்காமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணோ பையனோ கிடைப்பது ஒன்றும் குதிரைக்கொம்பில்லை''.


இதையெல்லாம் கேட்ட நண்பர்கள், 'இதெல்லாம் பேசத்தான் நல்லாயிருக்கும். வாழ்க்கையில் ரொம்ப கடினம்' என்றனர். எங்கள் திருமணம் நடந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இப்போது எங்கள் திருமணத்தைப் பற்றி யாரும் விமர்சனம் செய்வதில்லை. ஆயினும் இதுபோன்ற கேள்விகளை மீண்டும் மீண்டும் பல தருணங்களில் எதிர்கொண்டுள்ளோம். அவற்றிக்கு விளக்கங்களும் சொல்லி, அவற்றைக் கடந்து வந்துள்ளோம்.

இயக்கத்தோழர்களுடன்....


எங்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பும் இந்தச் சமூகத்திற்கு நான் முன்வைக்கும் கேள்விகள்:

1. தாலி கட்டாமல் எந்த வித சாதி, மத கறையும் படியாமல் நடக்கும் திருமணங்களை வினோதமாகப் பார்த்து கேலிசெய்யும் மனநிலை ஏன்?

2. திருமணத்தில் சாதி, மத சடங்குகளால் என்ன பயன்? அதில் செய்யப்படும் சடங்குகளுக்கும் சொல்லப்படும் மந்திரங்களுக்கும் என்ன விளக்கம் என்பதை எத்தனை பேரால் விளக்க முடியும்?

3. 100, 200 ஆண்டுகளுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன?

4. தாலி என்பது பொண்ணுக்குப் போடப்படும் அடையாளக் கயிறு. மாட்டுக்கு 'மூக்கணாங்கயிறு' போல. பெண்களுக்கு எதற்கு இந்த அடையாளச் சின்னம்?

5. திருமணமான பெண்களுக்கு அடையாளச் சின்னம் இருப்பதுபோல, திருமணமான ஆண்களுக்கு ஏன் ஒரு அடையாளச் சின்னம் இல்லை? இதை, பெண் அடிமைத்தனம் என்று சொல்வதில் என்ன தவறு?

காதல்/கலப்பு திருமணம் செய்பவர்களை, 'அரசு தரும் சலுகைகளுக்காகவே இதெல்லாம் நடக்கின்றன' என்கிற அப்பட்டமான மூடநம்பிக்கையைத் தூக்கி எறிய வேண்டும். ஒரு பெண்/ஆண்/யாராக இருந்தாலும் அவர்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை உள்ளது. சாதி, மத அடையாளத்தை எதிர்க்கும் விதமாக நாங்கள் ஏற்கெனவே எடுத்துள்ள முடிவு என்னவென்றால், 'எங்கள் நண்பர்களின் பிள்ளைகளுக்கு சாதி, மதச் சடங்குகள் கொண்டு நடத்தப்படும் திருமணங்களில் நாங்கள் கலந்துகொள்ளமாட்டோம்'.


சமந்தா
சேவ் தமிழ்சு இயக்கம்

9 comments:

  1. மிக அருமையான பதிவு..! சாதியை முன்னிறுத்தி வரதட்சணை பேரம் பேசி நடத்தப்படும் திருமணங்களை காட்டிலும் இது ஆயிரம் முறை மேன்மையான திருமணமே..!

    ReplyDelete
  2. வாழ்த்துகள், இந்தப் பரப்புரை, ஒரு தொடர் பண்பாடாக முன்னெடுக்கப்பட வேண்டும்!

    ReplyDelete
  3. கண்டிப்பாக தோழர்.கனல். இது போன்ற சுயமரியாதை திருமணங்கள் ஒரு தொடர் பண்பாடாக முன்னெடுக்கப்படும்

    ReplyDelete
  4. Congrats and all the very best. Wish you a very happy peaceful married life :)

    ReplyDelete
  5. எனது வாழ்க்கை இணை ஏற்பு விழா 1990 ஆம் ஆண்டு சாதி, சடங்கு, தாலி மறுத்து நடத்தப்பட்டது. எனது மகன் மகள் இருவரையும் சாதி இல்லை என்று பதிந்து கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன். நான் சாதி மறுப்பு திருமண தகவல் கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன். உறவினர்களின் தொடக்க நிலை பார்வை காலப்போக்கில் மறைந்துள்ளது.

    ReplyDelete

  6. உங்களது அனுபவத்தையும், நீங்கள் செய்து வரும் பணிகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழர்.சோலை...

    ReplyDelete
  7. தோழர்கள் சமந்தா-ஜோன்சன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! நம்மைப் போன்றவர்களின் உறுதியும் தெளிவுமே நாளைய சமுதாயத்தைப் புதிதாய்ப் படைக்கும்!

    ReplyDelete