Wednesday, May 16, 2012

100 மணி நேர பட்டினிப் போராட்டம் நிறைவு நிகழ்வு



மே 1 முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் இடிந்தகரை சுற்றியுள்ள மக்கள் மீது அரசு, தன் காவல்துறை மூலம் ஒடுக்குமுறையை தொடர்ந்து ஏவிவருகிறது.இதைக் கண்டித்தும் போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்க அரசை வலியுறுத்தியும், ’கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் பரிமளா,ஜோன்சன், சமந்தா, ஜார்ஜ் ஆகியோர் கடந்த மே 10 மாலை முதல் 100 மணி நேர உண்ணா நிலை போராட்டம் மேற்கொண்டனர். இந்த 100 மணி நேர உண்ணா நிலைப் போராட்டம், இன்று (14 மே 2012) மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் , மதிமுக தலைவர் வைகோ , இந்திய பொதுவுடைமைக்கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் பங்கு பெற்று உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.


இப்போராட்டத்தின் இறுதியில் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பின்வரும் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது:

புகுசிமா அணுஉலை விபத்திற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள மக்கள் அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்து, செயல்பட்டு கொண்டிருக்கின்ற அணு உலைகளை மூடிவிட்டு மாற்று மின் உற்பத்தி வழி முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.அணு உலை குறித்த இந்த அச்சம் கூடங்குளம் பகுதி மக்களிடம் அணு உலை ஆபத்து குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அதன் விளைவாக கடந்த 9 மாதங்களாக பல்லாயிரக் கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஒன்று திரண்டு அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடி வருகின்றனர்.

இந்த எழுச்சிமிகு மக்கள் போராட்டத்தை ஒடுக்க இந்திய அரசும் தமிழக அரசும் பல்வேறு விதமான பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.போராடும் மக்கள் மீது 55,000 ற்கும் மேற்பட்ட பொய் வழக்குகள்,தொடர் அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து ஏவிவருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை தேசதுரோகிகளாகவும், நக்சல்களாகவும் சித்தரித்து அரசு கருத்து பயங்கரவாதத்தை நிகழ்த்துகிறது. இதன் விளைவாக தோழர்கள் சதீஷ் மற்றும் முகிலன் ஒன்றரை மாதங்களாக சிறையில் அடைபட்டிருக்கின்றனர்.

இவை எதற்கும் அசராத மக்கள் போராட்டம் தடைகளைத்தாண்டி முன்னைவிட மிக அதிக எழுச்சியுடனும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

போராட்டத்தின் தற்போதைய வடிவமாக கடந்த மே 1 முதல் 325 க்கும் மேற்பட்ட மக்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அடிப்படை மருத்துவ வசதி, மருத்துவர்களின் கவனிப்பு, இடர் ஊர்திகள் போன்ற எந்த உதவிகளையும் அரசு அனுமதிக்காமலும், போராடிவரும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் பொழுதும் அரசு பேச்சுவார்த்தையை தொடங்க எந்தவித குறைந்தபட்ச முயற்சியையும் முன்னெடுக்காது கடந்த 14 நாட்களாக மக்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.

மேலும் கூடங்குளம் அணுஉலையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்குள் இருந்த 144 தடையுத்தரவை, போராடும் மக்கள் 25,000 ற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திரும்பக் கொடுத்த பிறகு இப்போராட்ட வடிவத்தை தடுப்பதற்காக கூடங்குளத்தை சுற்றி 7 கி.மி சுற்றளவிற்கு 144 தடையுத்தரவை அரசு நீட்டித்தும் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், காவல்படைகளை அதிக அளவில் குவித்து ’திடீர்’ அடையாள அணிவகுப்புகள் நடத்தி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தியும் மக்களை திறந்த வெளிசிறைச் சாலைகளில் வைத்துள்ளது.

இத்தகைய சூழலில் அணுஉலை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை கடந்து, தங்கள் கருத்துகளை சனநாயக வழியில் வெளிப்படுத்து வதற்கு கூட மக்களுக்கு உரிமை கிடையாதா என்ற கேள்வி எழுகின்றது. அறவழியில் போராடும் மக்களை தேசத்துரோகம் செய்தவர்களாக அரசு சித்தரிக்கிறது.

மக்கள் பெருமளவில் போராடிவரும் சூழலில் தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை பொறுக்குவதற்காக வீதி வீதியாக ‘சூறாவளியாக’ பயணம் வரும் அரசியல்வாதிகள், அறவழியில் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிடாக இருந்து வருகின்றனர்.

அனைத்துவிதமான குரல்களையும் அரசு நசுக்கி வரும் சூழலில், முக்கிய அரசியல் கட்சிகள் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி வரும் சூழலில்தான் ’கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ’சார்பாக சென்னையில் இந்த100 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தோழர்கள் பரிமளா. சமந்தா, ஜார்ஜ், ஜோன்சன் ஆகியோர் மேற் கொண்டனர்.

இந்த நேரத்தில் ’கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புமக்கள் கூட்டமைப்பு’ சார்பாக பின் வரும் கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கின்றோம்:



· கூடங்குளம் அணுஉலையை ஆதரித்து வரும் தி.மு.க. , அ.தி.மு.க உள்ளிட்ட தமிழக கட்சிகள் அணுமின் ஆற்றல் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.



· பின்வரும் இடிந்தகரை மக்களின் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.



o கைது செய்யப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை முன்நிபந்தனை இன்றி விடுதலை செய்க!

o ஆயிரக்கணக்கான மக்கள் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்குகள் உள்ளிட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக!

o கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ள பகுதியில் நீரியல், புவியியல் மற்றும் கடலியல் ஆய்வை மேற்கொள்ள சுதந்திரமான தேசியக் குழு ஒன்றை நிறுவுக!

o கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 30 கி.மீ தொலைவில் வாழும் மக்கள் அனைவருக்கும் பேரிடர் மேலாண்மை மற்றும் வெளியேற்றப் பயிற்சிகள் வழங்குக.

o விபத்து இழப்பீடு குறித்து இந்தியாவும் இரசியாவும் 2008 இல் போட்டுக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு படியைக் கொடுத்திடுக!

o கூடங்குளம் அணு உலையிலிருந்து எவ்வளவு கழிவுகள் வரும், அதை எப்படி நீங்கள் பாதுகாக்கப் போகிறீர்கள் என்ற தகவல்களை வெளியிடுக!

o கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அமைதியான வழியிலும் வன்முறையற்ற வழியிலும் போராடுவதற்கு மக்களுக்குஇருக்கும் ஜனநாயக உரிமைகளை மதித்திடுக!

நிறைவு நிகழ்வில் பங்கேற்ற தோழர்கள், தலைவர்கள் ஆற்றிய உரையின் செய்திக்குறிப்பு பின்வருமாறு:

தோழர் செந்தில் முன்னுரை:

100 மணி நேர பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்ய வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பொதுவுடைமை கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் நல்லகண்ணு,தோழர் கல்யாணி,பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோரை வரவேற்றுப் பேசிய தோழர் செந்தில், மே1 முதல் இடிந்தகரை மக்களின் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை முற்றாக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. பெருவாரியான ஊடகங்களும் தொடர்ந்து இச்செய்தியை மக்களிடையே போய்ச்சேர்க்காமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அரசின் இந்த அலட்சியப்போக்கை கண்டிக்கும் விதமாக இடிந்தகரை மற்றும் கூடன்குளத்து மக்கள் 25000 வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பித்தர முன் வந்திருக்கின்றனர். அவர்கள் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் தொடர்ந்து ஆதரவளிக்கவும் இத்தகையதொரு போராட்ட வடிவத்தை மேற்கொண்டதாகவும் செந்தில் கூறினார்.

பேராசிரியர் அ.மார்க்ஸ்:

ஊடகங்களின் தொடர் புறக்கணிப்பை கண்டித்த மார்க்ஸ், பஞ்சாயத்து தலைவர்களை முன்னிறுத்தி,போராடும் மக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தை அரசு ஏற்படுத்தி வருகிறது.தொடக்கம் முதலே அரசு இவ்விஷயத்தில் தந்திரமாக பிரச்சினைகளை கையாண்டு வருகிறது.

1948ல் நேரு அணு ஆற்றலை தேசப்பாதுகாப்பு, தேச வளர்ச்சி ஆகிய கூறுகளை பிரதானப்படுத்தி, மக்களிடையே வெளிப்படுத்தாமல் ஒரு ரகசிய செயல்பாடாக்கினார். எனவே அணு ஆற்றலை எதிர்ப்பவர்கள் அப்போதே தேசத்துரோகிகளாக்கப்பட்டனர்.இது மாபெரும் ஜனநாயக மறுப்பாகும். இந்நிலையை மாற்ற அனைத்து கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டும். இடிந்தகரையில் உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இடிந்தகரையிலிருந்து தொலைபேசியில் தோழர் உதயகுமார்:

100 மணி நேரம் பட்டினிப்போராட்டத்தை நிறைவு செய்த தோழர்கள் பரிமளா, ஜார்ஜ், சமந்தா, ஜோன்சன் ஆகியோருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்த உதயகுமார். நீதியரசர் ஏ.பி.ஷாவின் வேண்டுகோளை ஏற்று காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை இன்றுடன் முடித்து கொண்டதாகவும் நாளை முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் எல்லா அடக்குமுறைகளையும் ஒருங்கே அனுபவிக்கும் தமிழரின் எதிர்காலம் பற்றிய ஒரு மாநாட்டை இடிந்தகரையில் வருகிற மே 17ஆம் தேதி நடத்தவிருப்பதாகவும், மறுகரையில் உயிர்விட்ட நம் தொப்புள் கொடி சொந்தங்களுக்கு, கடலில் இறங்கி மலரஞ்சலி செலுத்தியும், மெழுகுதிரி ஏந்தி ஊர்வலம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தோழர் கல்யாணி:

கூடன்குளம் இடிந்தகரை என சுற்றுவட்டாரங்களில் மட்டும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவாக தலைநகரிலிருந்து திருப்பியடிக்கும் ஒரு திருப்பு முனையாக இந்த 100 மணி நேர பட்டினிப்போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த போராட்டம் என்பது உலகின் கடைசி அணு உலை இருக்கும் வரை தொடரும் அது ஒரே ஒரு அணு உலையாக உலகின் எப்பகுதியில் இருந்தாலும் சரியே. இது கூடங்குளத்துக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே காக்கும் போராட்டமாக இருக்கும். ஏனெனில் அணு ஆற்றலை கட்டுப்படுத்த முடியாது.அது ஒரு தொடர்வினை. மேலும் உண்ணாவிரதம் இருப்பது அவ்வளவு சாதாரணமல்ல.மேலும் பேசுகையில், தோழர்கள் சதீஷ், முகிலன் ஆகியோர் விடுவிக்கப்படவேண்டுமெனவும் அவர்கள் மீதான மதிப்பு இப்போது இன்னும் கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தோழர் நல்லகண்ணு:

மீனவ மக்களின் வாழ்வே ஒரு போராட்டமாக இருக்கிறது.கடலிலும் நிலத்திலும் மட்டுமே போராடிய அவர்கள் இன்று காற்றையும் காக்க போராட வேண்டியிருக்கிறது. அந்த மக்களை இராணுவத்தாலும் போலிசாலும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்திய வரலாற்றில் இத்தனை நாட்கள் எந்த ஒரு போராட்டமும் அமைதியாக நடந்திருக்கவில்லை. எப்படியாவது அரசு வன்முறையை அங்கே ஏவிவிட்டு விடும். பஞ்சாயத்து தலைவர்களை வைத்து அவர்களிடையே அந்த 500 கோடியை பிரித்து பிரச்சினைகளை உண்டு பண்ண நினைத்தார்கள். அந்நிய நாட்டிடமிருந்து பணம் வருகிறதென்று சொன்னார்கள். பிறகு மதரீதியாக பிரிக்கப்பார்த்தார்கள். கிருஸ்துவ மிஷினரியின் பின்புலம் என்றார்கள்.எல்லாவிதமான பிரித்தாளும் சூழ்ச்சியையும் முயன்று பார்த்தது இந்த அரசு..அணு உலையின் தலை வாசலில் இருக்கும் மக்களை கலந்து பேசாமல் அவர்களின் ஒப்புதலை பெறாமல் அணு உலை திறப்பு என்பது ஒரு திணிப்பு தான்.

100 மணிநேர பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த தோழர் பரிமளா:

இது ஒரு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊடகங்களில் இந்த உண்ணாவிரத செய்தி தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஒரு மிகப்பெரிய ஜனநாயக மறுப்பு. தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் நாங்கள் இதற்கு முன்பு உண்ணாவிரதம் இருந்ததில்லை. அதன் வலியை இப்போது உணருகிறோம். ஆனால் 14 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தங்களை வருத்திக் கொள்ளும் அந்த எளிய மக்களை அரசு அலட்சியப்படுத்துகிறது. அணு உலை எதிர்க்கருத்து உடையவர்கள் கூட ஊருக்குள் அனுமதி இல்லை என்ற அரசு மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்திருக்கிறது. புகுசிமாவின் ஒரு அணு உலையில் ஏற்படும் ஒரு கண்ட்ரோல் ரோடு கோளாறு ஜப்பானையே ( Annihilation of Japan ) விழுங்கி விடும் அபாயமிருப்பதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தான் நமக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தோழர் வைகோ:

இப்போராட்டத்தை இரண்டு அம்சங்களாக நான் பார்க்கிறேன். கூடன்குளத்தில் அணு உலை இருக்கக்கூடாது. அது மனித உயிருக்கு நாசம் விளைவிக்கக்கூடியது. கல்பாக்கத்தில் அணு உலை அகற்றப்பட வேண்டும்.

ஒரு புறம் நாடாளுமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன என பெருமை பேசும் அரசு, மறுபுறம் இங்கு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது. கருத்துச்சுதந்திரம் என்பது ஜனநாயக உரிமை. இந்த போராட்ட செய்திகள் மக்களிடையே போய்ச் சேரக்கூடாதா? ஊடகங்களின் இருட்டடிப்பு ஏன்? நான்கு பேருந்துகளை எரித்தால் தான் செய்தியாகுமா ? கடைவீதியில் வன்முறை நடந்தால் தான் செய்தியாகுமா ? சமுதாயச் சீர்கேடுகள் தான் செய்தியாகுமா ? பண்பாட்டுச் சீரழிவுகள் தான் செய்தியாகுமா? ஏன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் செய்தியாகக்கூடாதா ?

ஆர்ப்பாட்டங்களுக்கும் உண்ணாவிரதங்களுக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் பனகல் மாளிகை அருகே கூட ஆர்ப்பாட்டம் நடத்த தடை என அரசு அறிவித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. உண்ணாவிரதம் என்றால் மக்கள் சஞ்சரிக்காத கூவம் ஆற்றின் கரையில் தான் அனுமதி அளிக்கப்படுகிறது. முன்னாள் அரசும் இதே தவறைச் செய்தது. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.தோழர் கொளத்தூர் மணி கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த உண்ணாவிரதத்திற்கு இடமளித்ததைப் போல‌ எந்த ஒரு மக்கள் போராட்டத்திற்கும் தாயகம் இடமளிக்கும். தமிழ்நாட்டின் மான உணர்வின் அடையாளமாக திகழ்கிறார்கள் அந்த இடிந்த கரை மக்கள். 8 மாத இடையறாத போராட்டம் இத்தனை அமைதியாக இந்திய வரலாற்றில் எங்குமே நடந்ததில்லை.

உலை திறக்கும் கோரிக்கையில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதியாக இருந்த ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு பின் முற்றிலும் தலைகீழ் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இந்திய வரலாற்றில் எங்குமே நிகழாத வண்ணம், 55795 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 1000 பேருக்கு மேல் தேசத்துரோக வழக்கு. காந்தி காட்டிய அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெகுமதியா இது ?

1988ல் இந்திய நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் மிக்கேல் கோர்பசேவ்வுக்கு வாழ்த்துரை வழங்கி பேசிய இராஜிவ் காந்தி, இந்திய ரஷ்ய ஒப்பந்தத்தின் படி ஒரு அணு உலை திறக்கப்படும் என்று வாசித்தார். இதை நான் அன்றே கடுமையாக எதிர்த்தேன். எனக்கும் இராஜிவுக்கும் கடுமையான வாதம் நடைபெற்றது.

போராடும் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும். சிறையிலிருக்கும் தோழர்கள் சதீஷ், முகிலன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும். மக்கள் கேட்கும் EAR (Environmental Analysis Report) அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. மீனவ மக்கள் சூறைக்காற்றுக்கும் சுறாமீனுக்கும் அஞ்சாதவர்கள். பனைமர உயர எழும் அலைகடலிலே கட்டுமரத்தைச் செலுத்தும் மரணத்துக்கு அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவர்கள். நியாயத்துக்காக போராடும் மக்கள் நாதியற்று போய் விட மாட்டார்கள். அவர்களின் இந்த அமைதி வழிப்போராட்டம் எப்படி வடிவமெடுக்கும் என்பது தெரியாது. எரிமலை வெடிப்பதற்கு முன்பு அமைதியாகத் தானிருக்கும். அறப்போராட்டம் எப்படி வடிவமெடுக்கும் என்பதற்கு ஈழமே சான்று. அரசுகளுக்கு எச்சரிக்கிறேன்.

இதில் பங்குபெற்ற அனைத்துத் தோழர்களுக்கும் நன்றியுரைத்து நிகழ்வினை முடித்தார், சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்.











---------------------------------

Sunday, May 13, 2012

அணு உலைக்கெதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் கண்டனக்கூட்டம் செய்தி அறிக்கை





நாள் : 12 மே 2012
இடம் : தாயகம் ,மதிமுக தலைமை அலுவலகம் , சென்னை

100 மணி நேர தொடர் உண்ணாநிலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (12 மே 2012) அணு உலைக்கெதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் கண்டனக்கூட்டம் உண்ணாவிரத அரங்கிலே நடந்தது.   தோழர் பா.செயப்பிரகாசம், எழுத்தாளர் ஞானி, தோழர் அருள் எழிலன், தோழர் கவின்மலர், எழுத்தாளர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர் செந்தில் தொடக்கவுரையாற்றிப் பேசும் போது, இந்த நூறுமணி நேர உண்ணாநிலை போராட்டத்தின் பின்புலம் பற்றி குறிப்பிட்டார். மே தினத்திலிருந்து கடந்த பதினொரு நாட்களாக அணு உலைக்கெதிராக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து வரும் இடிந்த கரை மக்கள் மீது தொடர்ச்சியாக அரசு அலட்சியப்போக்கை கையாண்டு வருகிறது.வழக்கமான நாராயணாசாமி உளறல்களோ ஊடக செய்திகளோ ஒரு சிறிய அளவிலான சலனமோ இல்லாமல் வெகு கவனமாக இப்போராட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.போராடும் கிராமங்களைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இப்போராட்டம் குறித்தான எந்த தகவலுமோ பகிரப்படாத மந்தமான நிலையே நிலவுகிறது. கூடன்குளத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 144 தடை உத்தரவை நீக்குதல், வழக்குகளை திரும்பப்பெறுதல்,போராடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வலியுறுத்தல் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த நூறு மணி நேர உண்ணாவிரத போராட்ட வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார்.

தோழர் பா.செயப்பிரகாசம்

இடிந்த கரையில் உண்ணாவிரதமிருக்கும் மக்களில் ஒருவர் உயிரிழந்தால் கூட இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கொலைப்பழியை அந்த மக்கள் மீது தான் போடுவார்கள். அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டுமல்லாமல் சமகாலத்தில் பல்வேறு மட்ட பிரச்சினைகளில் முதலமைச்சர் ஒரு பாறையாக இருந்து எந்த ஒரு பதிலையும் அளிப்பதில்லை.ஜனநாயக அடிப்படையில் ஓட்டுகளை வாங்கி முதலமைச்சரானவர், ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.


எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான தோழர் ஞானி பேசும் போது,1947லிலிருந்து இதுவரை வரலாறு காணாத அளவு கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் மீது மிகப்பெரிய ஜனநாயக வன்முறையை கட்டவிழ்த்து வருகிறது. மெத்தப்படித்தவர்கள் அணு உலையை ஆதரிக்கிறார்கள். படிக்காத எளிய மக்கள் எளிமையாக அணு உலையை புரிந்து கொண்டு எதிர்க்கிறார்கள். 30% மின்சாரம்  தந்த அணு உலைகளை ஒட்டுமொத்தமாக மூடிய ஜப்பானில் மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாடுகிறார்கள். 2% மின்சாரம் தரக்கூடிய அணு உலையை திறப்பதற்கு இந்திய அரசு பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறது. மக்களை ஒடுக்குவதில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்போதுமே ஒற்றுமையானவர்கள் தான். அணுகுமுறையில் மட்டுமே அவர்கள் வேறுபடுகின்றனர்.  இந்திய வரலாற்றிலே பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் கடைசி ஜனநாயக ஆயுதமான வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்பத்தருகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளின் மனசாட்சிகளை உலுக்க வேண்டிய ஒரு விஷயம் பேசப்படாமல் ஊடகங்களால் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.  ஆயுதப்போராட்டம், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இறங்கி வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அரசு,  காந்திய வழியிலான ஒரு போராட்டத்தை தொடர்ந்து
அலட்சியப்படுத்தி வருவது ஒரு அராஜகப்போக்கு. ஆகவே தனிநபர் போராட்டங்களுக்கான அவசியத்தையும் வலியுறுத்தினார். அணு உலை எதிர்ப்புக்கான அடையாளங்களை அணிந்தோ, பயணங்களிலும் வீடுகளிலும் தொடர்ந்து பேசியோ இச்செய்தியை கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தோழர் அருள் எழிலன்

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஒரு போக்கு நிலவுகிறது. அரசு வழக்கம் போல ஈழம், மூவர் மர தண்டனை,முல்லைபெரியாறு என எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பது போல ஒரு பாவனையை ஏற்படுத்தி கடைசி நேரத்தில் கழுத்தறுத்தல் என்பது வாடிக்கையாகி விட்டது. தேர்தல் காலத்தில் ’உங்களில்  ஒருத்தியாக இருப்பேன்’ என வாக்குறுதியளித்த ஜெயலலிதா 20000 வாக்குகளை தூத்துக்குடியில் பெற்று, சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு மறுநாளே போராடும் மக்களின் காலை வாறினார்.  கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மக்கள் குப்பையில் வீசாத வரை நம் மக்களுக்கு விடியல் கிடையாது.உண்ணாவிரதம் இருக்கும் இயக்கத்தோழர்கள் தங்களை உடலை வருத்தி மக்களுக்காக உண்ணா நோன்பிருக்கின்றனர். ஆனால் பிழைப்புக்காக எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இப்பிரச்சினை குறித்து சட்டை செய்யாததை வருத்தத்தோடு பதிகிறேன்.அவர்களால் ஒருவேளை பசியைக்கூட தாங்க முடியாது. அகிம்சை வழியை கையாண்டு போராடிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் குழந்தைகள் நாளை இதே அகிம்சை வழியை கடை பிடிப்பார்கள் என அரசு நம்பிக்கையோடு இருக்க முடியாது. இது அரசிற்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை.

தோழர் செந்தில் நிறைவுரையின் போது, 1990களில் 0.04 விழுக்காடாக இருந்த மின்சார தனியார்மயமாக்கல் இப்போது 30 விழுக்காடாக மாறியதன் போக்கு என்ன? தனியாருக்கு அதிகப்படியான நிலுவைத் தொகை செலுத்தவே மின்சாரம் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு.அணு உலை எதிர்ப்புக்கருத்தையே நசுக்க நினைக்கும் அரசு, அரசின் அடிப்படை கொள்களையே கேள்விக்குள்ளாக்குவதன் செறிவை உணர்ந்திருக்கிறது. ஆகவே அணு உலையின் பாதிப்புகளை மக்களிடையே கொண்டு செல்லுதலை விட, அரசின் மின்சார வளர்ச்சிக்கொள்கைகளை பேசுதலும் கேள்விக்குள்ளாக்குதலும் முதற்கட்ட பணியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

தோழமையுடன்,
சேவ் தமிழ்சு இயக்கம்

Thursday, April 26, 2012

கூடங்குளம்; அரசின் உச்ச பட்ச வன்முறை: கள ஆய்வு அறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி

கூடங்குளம்; அரசின் உச்ச பட்ச வன்முறை: கள ஆய்வு அறிக்கை 3 அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்,ரஜினி
by Marx Anthonisamy on Thursday, April 26, 2012 at 1:26am ·
கத்தியின்றி ரத்தமின்றி வன்முறையொன்றை சர்வ வல்லமைகளையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ள அரசு இன்று கூடங்குள எதிர்ப்பாளர்கள்மீது பிரயோகித்துக் கொண்டுள்ளது. சுமார் 250 குற்ற எண்களில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் புஷ்பராயன். குற்ற எண்கள் பலவற்றில் ஒரு சிலரின் பெயரைக் குறிப்பிட்டு மற்றும் 5000 பேர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆக மொத்தமாகக் கணக்கிட்டால் 50,000க்கும் மேற்பட்டவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே ஒரு பெரிய கின்னஸ் சாதனைதான் எனச் சொல்லிப் புன்னகைக்கிறார் அரிமாவளவன். மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் ஒத்துக்கொண்ட அய்ந்து அம்சங்களில் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றவில்லை எனவேதான் மீண்டும் வரும் மே 1 முதல் காலவரையரை அற்ற உண்ணாவிரதத்தை அறிவிக்க நேர்ந்துள்ளது என விளக்கமளித்தார் உதயகுமார்.
புன்னகையோடு அவர்கள் காட்சியளித்தபோதும் எல்லோர் மனத்திலும் பெருங்கவலை குடிகொண்டுள்ளதை எங்களால் உணர முடிந்தது.
தற்போதைய நிலையை நேரில் அறிந்துவரும் நோக்குடன் நாங்கள் மூவரும் நேற்று (ஏப்ரல் 24, 2012) அமலாபுரம், இடிந்தகரை முதலான பகுதிகளுக்குச் சென்று பலரையும் சந்தித்தோம். இடிந்தகரை மாதாகோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தப் புகழ்பெற்ற பந்தலின் கீழ் திப்பி திப்பியாகச் சுமார் 300க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் பெண்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் நல்ல மழை. எனவேதான் இன்று கொஞ்சம் கூட்டம் குறைவு என்றார் மில்டன். இருந்தபோதிலும் தினசரி 300க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் வந்து குழுமி நாள் முழுக்க இருப்பது என்பது குறையவில்லை. ஆனாலும் மைக்கில் தொடர்ந்து பேசுதல், முழக்கமிடுதல் முதலியன நின்று போயிருந்தன..
நாங்கள் மில்டனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒருஇளைஞன் வந்தான். பெயர் லிமார்வின். அவனுக்கு வெளிநாடு செல்ல விசா வந்துள்ளது. ஆனால் வழக்கொன்றில் இணைத்து அவன் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது காவல்துறை. கூடங்குளம் இடிந்தகரைப் பகுதி மக்களுக்கு பாஸ்போர்ட் கொடுப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். உதயகுமார் தொடர்ந்து வேண்டிக்கொண்டும் மக்கள் கடலுக்குப் போக மறுக்கிறார்கள் என்றார் மில்டன். எல்லோருக்குமாகச் சேர்த்து கூட்டுச் சமையல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி அபத்தமாக ஆயிரக்கணக்கில் தேசத் துரோக வழக்குகளைப் போட்டிருப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் உயரதிகாரிகளைச் சந்தித்துக் கண்டித்துச் சென்றபின் சற்றே அமைதி காத்த காவல்துறை இப்போது மீண்டும் கிரிமினல் வழக்குகளை உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மீது போடத் தொடங்கியுள்ளது, 500 கோடி ரூபாய் நலத் திட்டத்தை முன்வைத்து இடிந்தகரை உள்ளிட்ட சுற்றியுள்ள பஞ்சாயத்துத் தலைவர்களைத் தம் பக்கம் இழுப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. தமது கிராமத்திற்கு ஒதுக்கும் பணத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் மூலம் பெரிய அளவு கமிஷன் அடிக்கலாம் என்கிற ஆசை அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. மறைமுகமான இந்தக் கையூட்டில் மயங்கியுள்ளனர் இந்தப் பஞ்சாயத்துத் தலைவர்கள். இடிந்தகரை கிராமம் உள்ளடங்கிய விஜயாபதி பஞ்சாயத்தின் இன்னாள் தலைவர் சகாயராஜ், முன்னாள் தலைவர் வால்டர் எட்வர்ட் ஆகிய இருவரும் இன்று போராட்டத் தலைவர்களுக்கு எதிராகத் திருப்பப் பட்டுள்ளனர். அறிவித்துள்ள 500கோடிக்கும் மேலாக இன்னும் 1000 கோடி பெற்று கிராம மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்குப் போராட்டக்குழு தடையாக இருப்பதாக இன்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவர்கள் இருவரும் கொடுத்துள்ள புகார்களின் அடிப்படையில் உதயகுமார் உள்ளிட்டோர் மீது இன்று கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் ஒன்றும் அமைதிவழிப் போராட்டம் இல்லை எனச் சொல்வதற்கும் போராட்டம் வெற்றிபெற வாய்ப்பில்லாத நிலையில் வெறுப்புற்று தலைவர்கள் வன்முறையில் இறங்கிவிட்டனர் எனப் பிரச்சாரம் செய்வதற்கும் காவல் துறையும் உளவுத் துறையும் இந்த வேலையில் இறங்கியுள்ளன. எப்படியோ இடிந்தகரை மீனவச் சமூகத்திற்குள்ளும் ஒரு பிளவை ஏற்படுத்த பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெஸ்கி, ஸ்டான்லி என்கிற இடிந்தகரையைப் பூர்வீகமாகக் கொண்ட இரு காவல் துறை உதவிக் கண்ணிiப்பாளர்கள் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக மக்களில் பலர் எங்களிடம் கூறினர். இவர்களில் ஒருவரது சகோதரி வீட்டில் அடுத்த வாரத்தில் ஒரு திருமணமாம். நீ வராதே என அந்தச் சகோதரியே அவரிடம் சொல்லிவிட்டாராம்.
இன்னொரு பக்கம் கூடங்குள மக்களுக்கும் இடிந்தகரை மக்களுக்குமுள்ள ஒற்றுமையைச் சிதைப்பதிலும் அரசு தீவிரமாக உள்ளது. பாதுகாப்பு என்கிற பெயரில் முப்படைகளும் அங்கே குவிக்கப்பட்டுள்ளன. கடைகளைத் திறக்கச் சொல்வது, போராட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என மிரட்டுவது, கூடங்குள வழக்குரைஞர் சிவசுப்பிரமணியம் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பது என்பதாக இம்முயற்சிகள் அமைகின்றன. இது வெறுமனே இரு கிராம மக்களைப் பிரிக்கும் முயற்சி மட்டுமல்ல. சாதி, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் முயற்சியும் கூட.
ஆனாலும் மக்களை எங்களிடமிருந்து அவ்வளவு எளிதாகப் பிரித்துவிட முடியாது எனப் போராட்டத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர். வரும் 29 அன்று தூத்துக்குடியில் நடக்க உள்ள மிகப் பெரிய ஆதரவுக் கூட்டத்தில் பெருந்திரளாக பகுதி மக்கள் கலந்துகொள்வார்கள் என்றார் உதயகுமார். தொடர்ச்சியாக 1ந் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையரையற்ற உண்ணாவிரதம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கை உள்ளது.
சென்ற இரு வாரங்களுக்கு முன் சுனாமி எச்சரிக்கை செய்யப்பட்டபோது இங்கே என்ன நிலைமை எனக் கேட்டோம். எந்த எச்சரிக்கையும் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லையாம். ஆனால் அதே நேரத்தில் அணு உலை விஞ்ஞானிகளும் ஊழியர்களும் மட்டும் அன்று பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். உலையச் சுற்றி ஏதோ நீர் ஊறிக் கொண்டிருப்பதாகவும் அதை அப்புறப்படுத்துவதில் விஞ்ஞானிகளின் முயற்சிகள் வெர்றிபெறவில்லை எனவும், அமைச்சர் நாராயணசாமி பீற்றுவதுபோல இன்னும் 40 நாட்களிலெல்லாம் உலை வேலை செய்யத் தொடங்குவது சாத்தியமே இல்லை எனவும் பலரும் கூறினர். இது தொடர்பாக நாங்கள் உதயகுமாரிடம் கேட்டபோது அப்படியான ஒரு பிரச்சினை அங்கு இருப்பதாக மாவட்ட ஆட்சியாளர் தங்களிடம் பலமுறை கூறியுள்ளதாகச் சொன்னார்.
எங்களுக்கு இம்முறை மிகவும் கவலை அளித்த விஷயம் சர்ச்சுக்கும் போராட்டக் குழுவிற்கும் ஏற்பட்டுள்ள விரிசல்தான். எந்தப் பெரிய குற்றச்சாட்டையும் வைக்காமலேயே மறைமாவட்டத்தின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அடைக்கலாபுரத்தில் சுமார் 1200 ஏதிலியர், கைவிடப்பட்டோர், மன நோயாளிகள், திருமணமாகாத தாய்மார்கள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோருக்கு அடைக்கலம் அளிக்கப்படுகிறது. அருட் தந்தை எக்ஸ்.டி.செல்வராசு அடிகளார் அவ் இல்லத்தின் தற்போதைய பொறுப்பாளர். மூன்று மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் கழித்த ஒரு நாள் எங்கள் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று. மீண்டும் ஒருமுறை அங்கு சென்று தங்கி அந்த அனுபவங்களை விரிவான ஒரு குறு நூலாக எழுத உள்ளோம். இங்கு பொறுப்பேற்குமுன் அந்த இல்லத்தின் முன்னாள் பொறுப்பாளராக இருந்த ஒரு பாதிரியாரைச் சென்று சந்தித்தாராம் செல்வராசு அடிகளார். அவர் சொன்ன ஒரே அறிவுரை அடைக்கலம் என வந்த யாருக்கும் அடைக்கலத்தை மறுத்து விடாதே என்பதுதான். நூறாண்டுகளுக்கும் மேல் வரலாறு உள்ள அந்த நிறுவனத்தில் ஏதோ ஒரு கலத்தில் அடைக்கலம் மறுக்கப்பட்ட ஒருவர் அடுத்த நாள் வெளியிலுள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கினாராம்.
அப்பா என விளித்து அந்தக் குழந்தைகளும் ஆதரவற்றோர்களும் அடிகளாரை நோக்கி ஓடி வருவதும் மகளே அல்லது மகனே என விளித்து அவர்களைத் தழுவி அவர் விசாரிப்பதும் எங்கள் கண்களில் நீர் வரவழைத்த காட்சிகள்.
ஒருநாள் இந்த அடைக்கலாபுர வீதியில் தூசு கிளப்பி விரைந்து வந்த மத்திய உளவுத்துறை வாகனத்திலிருந்து குதித்த அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் கணக்குகளைப் பரிசீலித்துள்ளனர். அன்று அங்கே இருந்தவர்களின் எண்ணிக்கை 1168 பேர்கள் என்றார் செல்வராசு அடிகளார். 1000 பேருக்கு எப்படிச் சோறு போடுகிறீர்கள் என்று கேட்டுத் துருவித் துருவி விசாரித்துள்ளனர். அடைக்கலம் வந்திருந்த சிலரையும் தனித்தனியே விசாரித்துள்ளனர். இறுதியாக வெளியேறும்போது விசாரணைக்கு வந்திருந்த தலமை அதிகாரி, “ ஃபாதர் நீங்கள் ஒரு அற்புதமான பணியைச் செய்கிறீர்கள்எனச் சொல்லிப் போனாராம். உளவுத்துறை அதிகாரியானாலும் ஒரு ஒரத்திலேனும் இதயம் ஒட்டிக்கொண்டிருக்கும் தானே.
ஆனாலும் அவர் போகும்போது கூடங்குளப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என எச்சரித்துவிட்டுத்தான் சென்றுள்ளார். ஒரு ஓரத்தில் இதயம் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவர் உளவுத் துறை அதிகாரிதானே. ‘’ நாங்கள் தேடும் கிரிமினல்களை நீங்கள் உங்களின் மத இல்லத்தில் பாதுகாப்பு அளித்துத் தங்க வைத்துள்ளீர்கள். இனியும் நீங்கள் போராட்டத்திற்கு moral support அளிப்பதை அனுமதிக்க முடியாது. அவர்களுக்குத் தங்க இடமளிக்கக் கூடாது. சாப்பாடு கொடுக்கக்கூடாது. ஒரு டீ கூடக் கொடுக்கக் கூடாதுஎன மறைமாவட்ட நிர்வாகம் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
ஒரு மத நிறுவனத்திற்குச் சில எல்லைகள் உண்டு. அந்த எல்லை வரைக்கும் தள்ளி அரசு அவர்களை மிரட்டுகிறது. போராட்டக்காரர்களின் மீதான கடும் நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கும் பட்சத்தில் போர்க்குணம் மிக்க மீனவ மக்களிடம் ஏற்படுத்தக் கூடிய எதிர்வினைகளைச் சாக்காக வைத்து கடும் ரத்தக் களறி ஒன்றை அரசு ஏற்படுத்துமோ, தம் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்களோ என்கிற அச்சம் சர்ச் வட்டாரத்தில் நிலவுவதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் பின்னணியில் சர்ச் தற்போது முன்வைக்கும் வேண்டுகோள்களும் அழுத்தங்களும்போராட்டக்காரகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு மத நிறுவனத்தின் எல்லை, அதை எந்த அளவிற்குப் பயன்படுத்த இயலும் என்பது குறித்த விவாதம் இப்போது உசிதமன்று. எனினும் சர்ச்சுக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் சர்ச் கைவிட்டு விட்டதாக. போராட்டக்காரர்கள் கருதுவதும் வெளிப்படையாக உள்ளதால் அதை மட்டும் பதிவு செய்கிறோம்.
கைது செய்யப்பட்ட 202 பேர்களில் 180 பேர்களுக்கு நிபந்தனைப் பிணை கிடைத்துள்ளது. ஒவ்வொருவருக்கும் இருவர் ஜாமீன் அளிக்க வேண்டும். மேலும் 18 பேருக்கு ஒவ்வொருவருக்கும் 8 பேர்கள் ஜாமீன் அளிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்று மக்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்படும்போது ஜாமீன்தாரர்களின் என்ணிக்கை மொத்தப் பேருக்குமே ஒரு சிலர் என்கிற அளவில் கொடுக்கப்படுவதுதான் வழக்கம். இப்படி ஜாமீன்தார்களின் எண்ணிக்கைய அதிகரித்திருப்பது வழக்கமில்லாத கொடுமை. வழக்கை நடத்துபவர்கள் ஏன் இதை உயர் நீதிமன்றத்தை அணுகிகுவாஷ்செய்ய முயற்சிக்கவில்லை எனத் தெரியவில்லை.
முகிலன், சதீஷ் ஆகிய இருவருக்கும் பிணை அளிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் மேலும் இரு வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளன. ஆக அவர்கள் எக்காரணம் கொண்டும் பிணையில் வந்துவிடலாகாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. தங்கள் மீது இப்படி ஒவ்வொரு வழக்காகச் சுமத்தப்படுவதைக் கண்டித்து இன்று முதல் அவர்கள் இருவரும் சிறைக்குள் காலவரையரையற்ற உன்ணாவிரதத்தைத் தொடங்கியிருப்பதாகச் சற்றுமுன் செய்தி வந்துள்ளது.
வரும் 1ந்தேதி காலவரையரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளும்போது பின்னணியில் வலுவான ஒரு அரசியல் அழுத்தம் இருந்தால் நல்லது. வழக்கமாக நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகள் இயக்கங்கள் ஆகியவற்றைத் தாண்டி இன்னும் கொஞ்சம் இந்த அழுத்தத்தை விசாலிப்பது அவசியம் என எங்களுக்குத் தோன்றியது. அவ்வப்போது டி. ராஜா அல்லது நல்லக்கண்ணு வந்து ஆதரவாகப் பேசிவிட்டுச் செல்கின்றனர். போராட்டக்காரர்களின்மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டுமெனக் கொஞ்சம் தாமதமாகவாவது மார்க்சிஸ்ட் கட்சி அறிக்கை விடுகிறது. இவற்றையெல்லாமும்கூட நாம் ஏதொ ஒருவகையில் ஒருங்கிணைத்தல் அவசியமாகிறது.
தொடங்க உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தைப் பொருத்த மட்டில் சென்ற மாதப் பேச்சு வார்த்தைகளில் ஒத்துக் கொண்டவற்றை நிறைவேற்றுவது என்பதே முக்கிய கோரிக்கை. கடலாய்வு. புவிஅதிர்ச்சி ஆய்வு ஆகியவற்றைச் செய்வது, பேரிடர் அபாயப் பயிற்சி அளித்தல், ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை வெளியிடல், வழக்குகளை திரும்பப் பெறுதல், மக்களின் போராடும் உரிமைகளை அங்கீகரித்தல் ஆகியனவே அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள். இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் தி.மு., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற அணு சக்தியை ஆதரிப்பவைகளுக்கும் கூடப் பெரிய பிரச்சினை இருக்கவியலாது. எனவே வழக்கமாக நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றோடு இக்கட்சிகளையும் நோக்கிப் போராட்டத் தலைவர்கள் ஒரு வேண்டுகோளை விடுக்கலாம். அந்த அடிப்படையில் எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒருங்கிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பது காலவரையரையற்ற உண்ணாவிரதத்திற்கு வலு சேர்க்கும் என்கிற எங்களின் கருத்தை உதயகுமார் முதலான தலைவர்களிடம் முன் வைத்தோம். அவர்களும் இதைக் கவனத்தில் வைப்பதாகக் கூறினர்.
புறப்படுமுன் நாகர்கோவிலில் இடிக்கப்பட்ட அவரது பள்ளியின் நிலை குறித்து உதயகுமாரிடம் கேட்டோம்..புகார் கொடுத்தும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். தாங்களே அதைப் புனரமைப்பு செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இழப்பு மதிப்பு எவ்வளவு இருக்கும் எனக் கேட்டபோது தெரியவில்லை நான் இன்னும் போய்ப் பார்க்கவில்லை என்றார்.
உதயகுமார், புஷ்பராயன், மை.பா முதலான தலைவர்கள் இன்று இடிந்தகரைக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தக் கிராமத்தை விட்டு வெளியே வந்தால் உடனடியாகக் கைது செய்யப்படுவர். இடிந்தகரை சர்ச் வெளியில் அமைக்கப்பட்டுள்ள அந்தப் புகழ்பெற்ற பந்தலை எப்படியாவது பிரிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கின்றன அரசும் காவல்துறையும். அந்தப் பந்தலைப் பிரிப்பதென்பது குறியீட்டு ரீதியாக அந்த மக்களிடமிருந்து போராட்டத் தலைவர்களைப் பிரிப்பது என்பதாக ஆகிவிட்டது. பந்தலைப் பிரித்தால் அடுத்த நிமிடம் காவல்துறை உள்ளே புகுந்துவிடும் என்றார் மில்டன்.
அங்கே நின்றிருந்த வாடகை வண்டி ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டு வள்ளியூரை நோக்கி நகர்ந்தோம். சாலையில் சில இடங்களில் ஓரமாகப் பெரிய கற்கள் கிடந்தன. சில இடங்களில் பள்ளங்களும் வெட்டி மூடப்பட்டிருந்தன. என்ன என வினவியபோது சென்ற மாதத்தில் போராட்டம் உச்சமாக இருந்தபோது உள்ளே அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வருவதைத் தடுப்பதற்காகப் போடப்பட்ட தடைகளின் எச்ச சொச்சங்கள் என்றார் ஓட்டுநர். கத்தியும் ரத்தமுமின்றி இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரச வன்முறை இறுதிக் கட்டத்தில் கத்தியும் ரத்தமும் கூடிய வன்முறையாகி விடுமோ என்கிற அச்சம் எங்களை வாட்டியது.
சென்ற இரு முறைகளும் நாங்கள் சென்றிருந்தபோது ஒளிர்ந்து கிடந்த வானம் இம்முறை மேகமூட்டத்தால் இருண்டிருந்தது.