Sunday, May 13, 2012

அணு உலைக்கெதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் கண்டனக்கூட்டம் செய்தி அறிக்கை

நாள் : 12 மே 2012
இடம் : தாயகம் ,மதிமுக தலைமை அலுவலகம் , சென்னை

100 மணி நேர தொடர் உண்ணாநிலை போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (12 மே 2012) அணு உலைக்கெதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் கண்டனக்கூட்டம் உண்ணாவிரத அரங்கிலே நடந்தது.   தோழர் பா.செயப்பிரகாசம், எழுத்தாளர் ஞானி, தோழர் அருள் எழிலன், தோழர் கவின்மலர், எழுத்தாளர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர் செந்தில் தொடக்கவுரையாற்றிப் பேசும் போது, இந்த நூறுமணி நேர உண்ணாநிலை போராட்டத்தின் பின்புலம் பற்றி குறிப்பிட்டார். மே தினத்திலிருந்து கடந்த பதினொரு நாட்களாக அணு உலைக்கெதிராக சாகும்வரை உண்ணாநோன்பிருந்து வரும் இடிந்த கரை மக்கள் மீது தொடர்ச்சியாக அரசு அலட்சியப்போக்கை கையாண்டு வருகிறது.வழக்கமான நாராயணாசாமி உளறல்களோ ஊடக செய்திகளோ ஒரு சிறிய அளவிலான சலனமோ இல்லாமல் வெகு கவனமாக இப்போராட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.போராடும் கிராமங்களைத் தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இப்போராட்டம் குறித்தான எந்த தகவலுமோ பகிரப்படாத மந்தமான நிலையே நிலவுகிறது. கூடன்குளத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 144 தடை உத்தரவை நீக்குதல், வழக்குகளை திரும்பப்பெறுதல்,போராடும் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வலியுறுத்தல் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த நூறு மணி நேர உண்ணாவிரத போராட்ட வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார்.

தோழர் பா.செயப்பிரகாசம்

இடிந்த கரையில் உண்ணாவிரதமிருக்கும் மக்களில் ஒருவர் உயிரிழந்தால் கூட இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கொலைப்பழியை அந்த மக்கள் மீது தான் போடுவார்கள். அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மட்டுமல்லாமல் சமகாலத்தில் பல்வேறு மட்ட பிரச்சினைகளில் முதலமைச்சர் ஒரு பாறையாக இருந்து எந்த ஒரு பதிலையும் அளிப்பதில்லை.ஜனநாயக அடிப்படையில் ஓட்டுகளை வாங்கி முதலமைச்சரானவர், ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.


எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான தோழர் ஞானி பேசும் போது,1947லிலிருந்து இதுவரை வரலாறு காணாத அளவு கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் மீது மிகப்பெரிய ஜனநாயக வன்முறையை கட்டவிழ்த்து வருகிறது. மெத்தப்படித்தவர்கள் அணு உலையை ஆதரிக்கிறார்கள். படிக்காத எளிய மக்கள் எளிமையாக அணு உலையை புரிந்து கொண்டு எதிர்க்கிறார்கள். 30% மின்சாரம்  தந்த அணு உலைகளை ஒட்டுமொத்தமாக மூடிய ஜப்பானில் மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாடுகிறார்கள். 2% மின்சாரம் தரக்கூடிய அணு உலையை திறப்பதற்கு இந்திய அரசு பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறது. மக்களை ஒடுக்குவதில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்போதுமே ஒற்றுமையானவர்கள் தான். அணுகுமுறையில் மட்டுமே அவர்கள் வேறுபடுகின்றனர்.  இந்திய வரலாற்றிலே பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் கடைசி ஜனநாயக ஆயுதமான வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்பத்தருகின்றனர். எல்லா அரசியல் கட்சிகளின் மனசாட்சிகளை உலுக்க வேண்டிய ஒரு விஷயம் பேசப்படாமல் ஊடகங்களால் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.  ஆயுதப்போராட்டம், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இறங்கி வந்து பேச்சு வார்த்தை நடத்தும் அரசு,  காந்திய வழியிலான ஒரு போராட்டத்தை தொடர்ந்து
அலட்சியப்படுத்தி வருவது ஒரு அராஜகப்போக்கு. ஆகவே தனிநபர் போராட்டங்களுக்கான அவசியத்தையும் வலியுறுத்தினார். அணு உலை எதிர்ப்புக்கான அடையாளங்களை அணிந்தோ, பயணங்களிலும் வீடுகளிலும் தொடர்ந்து பேசியோ இச்செய்தியை கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தோழர் அருள் எழிலன்

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஒரு போக்கு நிலவுகிறது. அரசு வழக்கம் போல ஈழம், மூவர் மர தண்டனை,முல்லைபெரியாறு என எல்லா போராட்டங்களுக்கும் ஆதரவளிப்பது போல ஒரு பாவனையை ஏற்படுத்தி கடைசி நேரத்தில் கழுத்தறுத்தல் என்பது வாடிக்கையாகி விட்டது. தேர்தல் காலத்தில் ’உங்களில்  ஒருத்தியாக இருப்பேன்’ என வாக்குறுதியளித்த ஜெயலலிதா 20000 வாக்குகளை தூத்துக்குடியில் பெற்று, சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு மறுநாளே போராடும் மக்களின் காலை வாறினார்.  கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மக்கள் குப்பையில் வீசாத வரை நம் மக்களுக்கு விடியல் கிடையாது.உண்ணாவிரதம் இருக்கும் இயக்கத்தோழர்கள் தங்களை உடலை வருத்தி மக்களுக்காக உண்ணா நோன்பிருக்கின்றனர். ஆனால் பிழைப்புக்காக எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இப்பிரச்சினை குறித்து சட்டை செய்யாததை வருத்தத்தோடு பதிகிறேன்.அவர்களால் ஒருவேளை பசியைக்கூட தாங்க முடியாது. அகிம்சை வழியை கையாண்டு போராடிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களின் குழந்தைகள் நாளை இதே அகிம்சை வழியை கடை பிடிப்பார்கள் என அரசு நம்பிக்கையோடு இருக்க முடியாது. இது அரசிற்கு ஒரு பகிரங்க எச்சரிக்கை.

தோழர் செந்தில் நிறைவுரையின் போது, 1990களில் 0.04 விழுக்காடாக இருந்த மின்சார தனியார்மயமாக்கல் இப்போது 30 விழுக்காடாக மாறியதன் போக்கு என்ன? தனியாருக்கு அதிகப்படியான நிலுவைத் தொகை செலுத்தவே மின்சாரம் கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு.அணு உலை எதிர்ப்புக்கருத்தையே நசுக்க நினைக்கும் அரசு, அரசின் அடிப்படை கொள்களையே கேள்விக்குள்ளாக்குவதன் செறிவை உணர்ந்திருக்கிறது. ஆகவே அணு உலையின் பாதிப்புகளை மக்களிடையே கொண்டு செல்லுதலை விட, அரசின் மின்சார வளர்ச்சிக்கொள்கைகளை பேசுதலும் கேள்விக்குள்ளாக்குதலும் முதற்கட்ட பணியாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

தோழமையுடன்,
சேவ் தமிழ்சு இயக்கம்

1 comment:

 1. நல்ல பதிவு ...
  வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete