Sunday, March 2, 2014

மீத்தேன் எடுக்கும் திட்டம் – விளைவுகளும் புரிதல்களும்




’மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
சோழவள நாடிது’
- என்று போற்றப்பட்டவை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகள்.

வளமான ஆற்றுநீர் வளம், நிலத்தடி நீர் வளம் என இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்ற காவிரி படுகைப் பகுதிதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி வேளாண் பகுதி என்றும் கருதப்படுகிறது.
ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்திற்கான காவிரி நீர் அநியாயமாக மறுக்கப்பட்டு, நிலத்தடி நீரை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் வானம் பார்த்த பூமியாக காவிரிப் படுகைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது. தனது வஞ்சகமான போக்கால் காவிரி உரிமையை நமக்கு மறுக்கும் இந்திய அரசு, தற்போது நிலத்தடி நீருக்கும் மொத்தமாக வேட்டு வைக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அங்கு தொடங்கியுள்ளது!


மீத்தேன் எடுக்கும் திட்டம் என்றால் என்ன?

பாண்டிச்சேரி அருகே பாகூர் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடி வரை , காவிரிப் படுகையில் நிலத்துக்கடியில் 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை வளமான நிலக்கரிப் படிமங்கள் உள்ளன. இந்தப் படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை, நிலக்கரிப் படிமத்தின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, ’நீரியல் விரிசல்’ (Hydarulic fracturing) என்னும் முறையில் எடுப்பது தான் மீத்தேன் எடுக்கும் திட்டம்.



நீரியல் விரிசல் : ஆபத்தான தொழிற்நுட்பம்:

நிலத்துக்கடியில் 2000 அடிவரை துளையிட்டு, குழாய் இறக்கி, அதிலிருந்து பக்கவாட்டில் அனைத்துத் திசைகளிலும் இரண்டு கி.மீ. வரை குழாய்களைச் செலுத்தி, நிலக்கரிப் பாளங்களை நொறுக்கி, இடுக்கில் தங்கியிருக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும். நிலக்கரிப் படிமத்தை நொறுக்க, நீரோடு மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு அபாயகரமான (BTEX) கலவை மிக அழுத்தத்துடன் உட்செலுத்தப்படும். கலவை நீரைக் கொண்டு விரிசல் ஏற்படுத்தும் இந்த ‘நீரியல் விரிசல்’ முறையில் உட்செலுத்தப்படும் இந்த வேதிக்கலவையில் (ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்0டி-ஹைடு மற்றும் பென்சீன், புற்றுநோய் தாக்கும் கார்சினோஜன் பொருட்கள், இன்னும் பெயர் வெளியிடப்படாத பல வேதிப் பொருட்கள்) 30% மட்டுமே மீண்டும் வெளியே எடுக்கப்படும். மீதி 70% நச்சுக் கலவையும் வளமான வேளாண் பகுதியில் நிலத்துக்கடியில் தங்கிவிடும். இது நிலத்தை மட்டுமல்ல, நிலத்துக்கடியிலுள்ள நீர் முழுவதையும் நச்சாக்கும்.

விளைவுகள் :
 நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் வளமான காவிரிப் படுகைப் பகுதி பாலைவனமாக மாறும்
 அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரே முதலில் வெளியேற்றப்படும். இது கடல் நீரை விட 5 மடங்கு உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இவை நீர் நிலைகளில் கலக்கும் போதும், பாசனக் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும்போதும் வயல்வரப்புகளில் டன் கணக்கில் உப்பு படிந்து, விவசாயம் மொத்தமாக அழியும். உயிர்கள் அழியும்.
 நிலத்தடி நீர் இல்லாத வெற்றிடத்தில் கடல்நீர் புகுந்து, நிலத்தடி நீர் உப்புநீராக மாறும்.
 BTEX இரசாயனக் கலவை கழிவு நீர் புற்றுநோய், மூளை பாதிப்பு, கதிரியக்க நோய்கள் என பல நோய்களை உண்டாக்கும்.
 குழாய்கள் இறக்கப்படும் பகுதிகள் தான் பாதிக்கும் என்று நாம் தவறாக எண்ணக்கூடாது. நிலத்துக்கடியிலேயே பக்கவாட்டில் கி.மீ கணக்கில் போடப்படும் குழாய்கள் சுற்றுவட்டார நிலத்தடி நீர்த்தொகுப்புகள் (Aquifers) மொத்தத்தையும் காலி செய்யும். காவிரி படுகையைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் நீர்த்தொகுப்புகள் வறண்டு போகும்.
 நிலநடுக்கம், மண் உள்வாங்குதல் ஏற்படும்.


இன்றைய நிலவரம் :

முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் 38 குழாய்களும், தஞ்சையில் 12 குழாய்களும் அமைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. மொத்தம் 691 சதுர கி.மீ வேளாண் நிலத்தில் 2000 குழாய்கள் வரை அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்னும் தனியார் நிறுவனத்திடம் போடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6 லட்சம் கோடி மதிப்புள்ள எரிவாயுவை, 50,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து, தமிழகத்தின் வேளாண் தற்சார்பை ஒழித்து நமது மண்ணின் வளத்தை பெரு முதலாளிகள் சூறையாட, நமது அரசே ஒப்பந்தம் போட்டுள்ளது.

மீத்தேன் திட்டத்தால் அப்பகுதி மக்களுக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் உதவும் என்பது கட்டுக்கதையே. மீத்தேன் திட்டத்தின் ஆயுட்காலம் சுமார் 35 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில், அப்பகுதியில் இப்போது கிடைக்கும் உத்தேச வருமானத்தையும் மீத்தேன் எடுக்கும் திட்டம் வந்தால் வரும் உத்தேச வருமானத்தையும் இத்துடன் இணைத்துள்ளோம்.




மீத்தேன் திட்டத்திற்குப் பின்: அரசுக்கு 3300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்


அய்யா நம்மாழ்வார் விதைத்த போராட்ட விதை :

மீத்தேன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து அய்யா நம்மாழ்வார் அவர்கள் காவிரிப் படுகையில் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்தார். அதன் கொடிய விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். மண்ணின் வளத்தைக் காக்க தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட நம்மாழ்வார், அந்த மண்ணையும் மக்களையும் காக்க, தனது இறுதி மூச்சு வரை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்தார். களத்திலேயே தனது உயிரையும் துறந்தார்.

மக்கள் போராட்டங்கள் :

ஆபத்தான மீத்தேன் திட்டம் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஏற்பட்டு வருகின்றது. நரசிங்கம்பேட்டை, பாவாஜிக்கோட்டை, போன்ற கிராமங்களில் மீத்தேன் திட்டத்திற்காக போடப்பட்டிருந்த நட்ட கல்லை கிராம மக்கள் பிடுங்கி எறிந்தனர். மன்னார்குடியிலும், திருவாரூரிலும் எழுச்சிகரமான மக்கள் பேரணி சமீபத்தில் நடைபெற்றன. கிராம சபைகளில் இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தீர்மானங்கள் இயற்றுகின்றனர்.


நாம் என்ன செய்யப் போகிறோம்?

காவிரி நீரை தமிழகத்திற்கு வரவிடாமல் தடுப்பது
மேற்கு மாவட்ட விளைநிலங்களில் கெய்ல் பைப்லைன் பதிப்பது
காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம்
விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை சொல்வது
- என்று தமிழகத்தின் தற்சார்பு வேளாண் உற்பத்தியையும், தமிழக மக்களின் வாழ்வையும் மொத்தமாக சிதைக்கும் வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து திட்டமிட்டு செய்து வருகிறது.


வளர்ச்சி என்ற பெயரில் முன்மொழியப்படும் இது போன்ற திட்டங்கள், கண்டிப்பாக மக்களின் வளர்ச்சிக்காக அல்ல. இவை, மக்களை வாழவும் கூட விடாமல் விரட்டியடிக்கும் திட்டங்கள்.

அப்படியென்றால் இவை யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்கள்?
விவசாயத்தை அழிக்க வரும் இத்திட்டங்களின் உண்மைப் பின்னணி என்ன?
மீத்தேன் எடுப்பதோடு இது நின்று விடுமா?
அரசுக்கு நட்டம் என்று தெரிந்தே மீத்தேன் எடுப்பதன் உள்நோக்கம் என்ன?

வாருங்கள் நண்பர்களே! தெரிந்து கொள்வோம்… போராடும் மக்களுடன் கரம் கோர்ப்போம்! நம்மாழ்வார் வழியில்…


மீத்தேன் எடுக்கும் திட்டத்தினை எதிர்ப்போம்! தமிழக வளங்களைக் காப்போம்!
நாள் : 02-03-2014
நேரம் : 05.00 – 09:30 PM
இடம் : கவிக்கோ மன்றம், இரஹ்மத் வளாகம், இரண்டாவது மெயின் ரோடு, மயிலாப்புர்-4.

Ref:
http://save-tamils.org/index.php?option=com_content&view=article&id=559:methane-project-risks-in-cauvery-delta&catid=3&Itemid=7
http://antimethane.blogspot.in/
http://www.prashantmodi.net/tag/geecl/
http://www.tnpcb.gov.in/pdf/Great_eastern%20Energy_Thiruvarur.pdf


5 comments:

  1. இந்த திட்டத்திற்கு காரணமான அரசியல்வாதிகளைப் பற்றியும் இதனால் அவர்கள் அடையப் போகும் ஆதாயங்களைப் பற்றியும் முதலில் வெளியே கொண்டு வாருங்கள்.

    ReplyDelete

  2. மீத்தேன் எடுக்கும் திட்டத்தைப் பொறுத்துவரை மத்திய அரசு காவேரிப் படுகையை ஒன்னுமில்லாமல் செய்யும் நடவடிக்கையே, மாநிலத்தில் சுயாட்சி என்று முழக்கத்தை வைக்கும் திமுக அரசு தான் 2011ல் இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது, இப்பொழுது அதிமுக அரசும் மத்திய அரசுக்கு ஆதரவான போக்கையே செயல்படுத்துகின்றது. இதனால் பயன்பெறும் அரசியல்வாதிகள் வழமை போல இந்த துறைசார் அமைச்சர்களும், உள்ளூர் அரசியல்வாதிகளுமே, இதில் திமுக, அதிமுக என்ற கட்சி பாகுபாடு கிடையாது.

    ReplyDelete
  3. திட்டத்தை எதிர்ப்பதை விட இதனால் ஆதாயம் அடையப் போகும் மனிதர்களை முதலில் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டுங்கள். அப்போது தான் மக்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களை உள்ளே வர விடாமல் செய்யத் துவங்கினாலே பாதி வெற்றி. இல்லாவிட்டால் மற்றொரு கூடங்குளம் போராட்டம் போல வளர்ந்து கொண்டே தான் இருக்கப் போகின்றது.

    ReplyDelete

  4. எங்களது பதிலை படித்தீர்களா, இல்லையா என்றே தெரியவில்லை. உங்களது கேள்விக்கான பதிலை தெளிவாக கொடுத்துள்ளோம்.

    ReplyDelete
  5. ஸ்டாலின் தான் ஒப்பந்தம் போட்டார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா? சார்...அதன் தொடர்ச்சியாக திமுக வேறேதுனும் அதை தடுக்க முயற்சிகள் செய்துள்ளதா? இப்போதுள்ள நிலவரம் என்ன?

    ReplyDelete