Tuesday, May 7, 2013
பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் .....
சென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் திமுக எதிர்ப்பலை). இந்த தேர்தலுக்கு பின்னர் திராவிட கட்சிகளை சாடுவதும், தமிழன் இங்கே ஆளவில்லை என்று கூறுவதுமாக இருந்து வந்தது பா.ம.க. சென்ற ஆண்டு சித்திரை முழு நிலவு விழாவில் தான் சாதிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கான "நாடக காதல்" அரசியலை கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது. நாடக காதல் என்றால் என்ன? பா.ம.க, மற்ற சாதி சங்கங்கள், கட்சிகளை பொறுத்தவரை ஒரே வர்க்க, சாதி நிலையில் இல்லாத எல்லா காதலுமே நாடக காதல், குறிப்பாக தலித் ஆண்கள் வன்னியர் சாதி பெண்களை காதலிப்பது தான் நாடக காதல். எல்லா வேடமும் போட்டு பார்த்து ஒன்றும் பயனில்லை என்ற பின்னர் தான் தனது உண்மை முகமான சாதீயத்தை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது பா.ம.க.
சாதீய கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? வன்கொடுமை சட்டமும், காதல் திருமணமும் தான் இன்றும் ஆதிக்க சாதிகளுக்கு வேப்பங்காயாக கசப்பது, ஆகவே அந்த இரண்டையும் கையில் எடுப்பதன் மூலம் சாதீய கட்சிகளை ஒன்று சேர்க்க தொடங்கினார் இராமதாஸ். அதற்கு பிறகு ஊர் ஊராக சென்று காதல் திருமணங்களை குறிப்பாக மாற்று சாதியில் குறிப்பாக தலித்களுடன் நடக்கும் திருமணங்களை எல்லாம் "நாடகக் காதல்" என்றும், அவர்கள் சொத்தை மட்டுமே காதலிக்கின்றார்கள் என்றும், பெண்களை ஏமாற்றிவிடுகின்றார்கள் என்றும், வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்றும் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்குகின்றார் இராமதாஸ். இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு கூட்டத்தில் காடு வெட்டி குரு, இராமதாஸ் பேசிய வன்முறையை தூண்டும் பேச்சுகளின் வழியே தூண்டப்பட்ட பா.ம.கவினரும், வன்னிய சாதி சங்கத்தை சேர்ந்தவர்களும் தர்மபுரி, நாயக்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தலித் வீடுகளை திட்டமிட்டு தாக்கினார்கள்.இதற்கு காதல் திருமணம் தான் காரணம் என்ற காரணம் கற்பிக்கின்றனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. அதற்குள் இந்த ஆண்டு கூட்டமும் அவர்கள் திட்டமிட்ட படியே நடந்தேறி விட்டது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மட்டுமில்லாமல் அவர்கள் ஏற்கனவே திரட்டிய மற்ற சாதி சங்கங்களின், சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சாதீய நஞ்சை கக்கியுள்ளார்கள். இது ஒருபுறம் என்றால் இந்த கூட்டத்திற்கு வரும் வழியிலேயே பா.ம.க உறுப்பினர்கள் மரக்காணம் தலித் காலணியிலும், இஸ்லாமியர் பெருன்பான்மையாக வாழும் கூனிமேடு பகுதியிலும் திட்டமிட்டு வன்முறையை தூண்டியுள்ளார்கள். இந்த இரண்டையும் விரிவாக பார்ப்போம்.
மாமல்லபுரம் சித்திரை திருவிழா -
சென்ற ஆண்டு காடு வெட்டி குரு வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதை சுட்டிக்காட்டி இந்த கூட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட இந்த மனுவை விசாரித்த் நீதிமன்றம் முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க, காவல்துறை 18 விதிமுறைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கி இந்த ஆண்டும் சாதீய பிரச்சனை தொடர அச்சாரம் அளித்தது. இந்த மாநாட்டில் காடு வெட்டி குருவும், இராமதாஸீம் சென்ற ஆண்டை போலவே தலித் எதிர்ப்பு பேச்சுகளையும், காதல் திருமண எதிர்ப்பு பேச்சுகளையும் பேசியுள்ளனர். இதோ சில உதாரணங்கள்....
காடு வெட்டி குருவின் நஞ்சைக் கக்கும் பேச்சு-
"கலவரம் செய்வது எங்கள் நோக்கமல்ல, நாங்கள் கலவரம் செய்தால் இந்த தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்கு காவல்துறையும் பத்தாது"....
"நான் என்ன மோளம்(பறை) அடிக்கிற சாதியா? மோளம் அடிச்சுட்டு உட்காந்து இருக்க"....
"உண்மையிலே கேட்கிறேன் உனக்கு மானம், சூடு, சொரணை எல்லாம் வன்னியன்ட இருக்கா, இருந்துச்சுன்னா வீச்சருவாள்ல காட்டாத, வாக்கு சீட்டுல காட்டு, 2016ல் தமிழகத்தில் வன்னியர்கள் ஆட்சியமைக்க வேண்டும். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”
இராமதாஸின் நஞ்சைக் கக்கும் பேச்சு-
"நாங்க அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்திற்கு கருப்பு கொடி காட்டும் போது அரசகுமார் கண் சிமிட்டினால் என்னாகும். எஸ்.அலங்காரம் கண் சிமிட்டினால் என்னாகும், கலவரம் தான். நாங்க கலவரம் பண்ணினா தாங்க மாட்டிங்க......"
"வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.
காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னையே ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா? தாக்கத் தெரியாதா? காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது."
இதுவரை இராமதாசோ, பாட்டாளி மக்கள் கட்சியினரோ தமிழகத்தின் பிரச்சனைகளான காவிரி பிரச்சனைக்கோ, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கோ, கூடங்குளம் பிரச்சனைக்கோ கண்ணசைத்திருக்கிறார்களா, அல்லது இந்த வீரியத்துடன் அரசை எதிர்த்திருக்கின்றார்களா? அல்லது தமிழீழத்தில் தினம், தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடினார்களா?. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடலூர் மாவட்டத்தில் பல வேதியியல், சாராய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்குள்ள வளங்களையும், மக்களையும் பாழாக்குகின்றனரே அதை எதிர்த்தோ, அல்லது இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சாய தொழிற்சாலையை எதிர்த்து போராடியிருக்கின்றனரா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. பா.ம.க, வன்னியர் சங்கத்தின் நோக்கம் ஒன்று தான் அவர்களுக்கு தேவை ஒரு அமைச்சர்/மந்திரி பதவி அது இந்த மாநாட்டில் குரு, இராமதாஸ் பேசியதில் இருந்து நன்றாகவே தெரிகின்றது. அதற்காக தான் இன்று சாதீ அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை பெரும்பான்மையான வன்னிய மக்கள் புரிந்து கொண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
சாதீ அரசியலை கண்டு கண்ணை மூடிக்கொள்ளும் தமிழக அரசு -
தமிழக அரசு இன்னும் குரு, இராமதாஸ் போன்றவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல், கூட்டத்தை தாமதமாக நடத்தினார்கள் என்று ஒரு வழக்கு போட்டு கைது செய்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த சாதீ அரசியல் விளையாட்டை அரசே ஊக்குவித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் இராமதாஸ் மேல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்று ஒரு வழக்கும் போட்டுள்ளது, உண்மையில் இராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விதைக்கும் வன்முறையையும், தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அவர்கள் உருவாக்கும் காழ்ப்புணர்ச்சியை தடுத்து அரசு எதிர் பிரச்சாரம் செய்யாமல் (கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அரசு பிரச்சாரம் செய்ததை நினைவில் கொள்க), அவர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என வழக்கு பதிவு செய்து சாதீ அரசியலுக்கு மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்து, மக்கள் விரோத போக்கை ஒரே நேரத்தில் கடைபிடித்து வருகின்றது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. கூடங்குளத்தில் 55,000த்திற்கும் அதிகமான வழக்குகளையும், இந்திய வரலாற்றிலேயே அதிகமான தேச துரோக வழக்குகளையும் போட்டுள்ள காவல்துறைக்கு, காடு வெட்டி குரு, இராமதாஸின் மேல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்வது இதுவரை இயலாமலே உள்ளது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆமையை விட மோசமான வேகத்தில் சென்று கொண்டுள்ளது, இதை கூட தடை செய்ய வேண்டும், அல்லது திருத்த வேண்டும் என்று கோருகின்றது இராமதாஸ் தலைமையிலான சாதிய கூட்டணி.
மரக்காணம் வன்முறையும், கண்ணை மூடிக்கொண்ட தமிழக அரசும்
இது ஒருபுறம் என்றால் இந்த சித்திரை முழு நிலவு விழாவிற்கு வந்த பா.ம.க-வினர் உருட்டு கட்டை(களி), அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர், மேலும் வரும் வழியெங்கும் மது அருந்திவிட்டு பெண்கள் முன்னர் கைலியை தூக்கிகாட்டி ஆபாசமாக நடந்துள்ளனர், அதுமட்டுமின்றி திட்டமிட்டு மரக்காணம் தலித் காலணியிலும், கூனிமேடு இசுலாமியர்கள் வாழும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி, வீடுகளையும், கடைகளையும் எரித்துள்ளார்கள். இந்த ஆண்டு நடக்க இருக்கும் கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசிற்கு வழங்கியது நீதிமன்றம். இந்த கூட்டத்திற்கு 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதற்கு முன்னால் நடந்த கூட்டங்களை கணக்கில் வைத்து எவ்வளவு பேர் வருவார்கள், என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பதை காவல்துறை ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் இவை எதையுமே செய்யவில்லை என்பதையே நடந்த வன்முறை காட்டுகின்றது.
ஒரு கூட்டத்திற்கு செல்வோர் உருட்டு கட்டை, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் செல்வதை ஒரு காவல்துறை சோதனை சாவடி வைத்து எல்லா வாகனங்களையும் சோதனை செய்ய முடியாதா? இல்லை இப்படி ஒரு வன்முறை நடக்கவேண்டும், மக்களை சாதிய ரீதியாக பிளவு படுத்த வேண்டும் என காவல் துறையும், அதை வழிநடத்தும் அரசும் விரும்புகின்றதா?. கூடங்குளத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டு, அதிரடி படை, துணை இராணுவம், கடலோரக் காவல் படை, வான் படை போன்றவற்றை களத்தில் இறக்கும் தமிழக காவல்துறைக்கு இந்த திட்டமிட்ட கூட்டத்தை ஒழுங்கப்படுத்த முடியாது என ஜெயலலிதா அவர்கள் கூறுவதும், உணர்ச்சி கொந்தளிப்பால் கொலைகள் நடைபெறுவதால் அவற்றை காவல்துறை தடுக்க முடியாது என அவர் அறிக்கை விடுவதும், காவல்துறை மக்கள் போராட்டங்களை தடுக்கவும், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மட்டுமே,மற்ற படி திட்டமிட்டு சாதிய, மத வன்முறைகளை தடுக்கவோ, மக்களை பாதுகாக்கவோ கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஆளும் கட்சி ஆதரவு படையே காவல்துறை, மக்களை காப்பதற்கல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் காவல்துறையால் கொலைகளை தடுக்க முடியாது என கூறுவது பலத்த ஐயங்களை எழுப்புகின்றது, கொலையை தடுக்க முடியாத, மக்களை காவல் காக்க முடியாத ஒரு அமைப்பை(காவல் துறை) எதற்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தி நடத்த வேண்டும்? வெறுமனே மக்கள் போராட்டங்களை கலைக்கவும், மக்களை அடித்து துன்புறுத்துவதற்காகவுமா? என்பது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றது.
சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் இயற்கை வளத்தை,தங்கள் வாழ்வாதாரத்தை காக்க ,மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்தும் அணு உலையை எதிர்த்து போராடும் இடிந்தகரை மக்கள் மேல் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவான 55,000த்திற்கும் அதிகமான வழக்கும், அவர்கள் மீது தொடர்ச்சியாக வன்முறையும், அடக்குமுறையும் ஏவும் அரசு அதே சமயம் சமூகத்தை பின்னிழுக்கும் சாதீய அரசியல்வாதிகளின் மேல் கரிசனம் காட்டுகின்றது. அரச நிறுவனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள முன்னுக்கு செல்வதை தடுக்கவும் செய்யும், அதே சமயம் பின்னுக்கு இழுப்பதை ஆதரிக்கவும் செய்யும். அரசுக்கு தேவை தன்னை பாதுகாத்து கொள்வது மட்டுமே.
மேலும் சென்ற ஆண்டு பசும்பொன்.முத்துராமலிங்கம் நினைவேந்தலுக்கு சென்றவர்கள் கொல்லப்பட்டதாகட்டும், தர்மபுரி வன்முறையாகட்டும், இந்த மரக்காணம் வன்முறையாகட்டும் எல்லாவற்றையுமே காவல்துறையால் தடுத்திருக்க முடியும் என்பதையே அந்த வன்முறைகளை ஆராய சென்ற எல்லா உண்மை அறியும் குழு அறிக்கைகளும் காட்டுகின்றது. ஆகஸ்டுக்கு பின்னரான நான்கு மாதங்களும் தெற்கு மாவட்டங்களான சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்கள் எல்லா ஆண்டுமே பதட்டம் நிறைந்ததாகவே உள்ளது. இங்கு பதட்டத்தை தணிக்கவும் , சமூக நல்லிணக்கம் நிகழும் இதுவரை ஏதாவது நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதா என்றால் இல்லை என்றால் பெயருக்கு அமைதி கூட்டங்களையும், நல்லிணக்க கூட்டங்களையுமே நடத்தியுள்ளன என்ற பதிலே வருகின்றது. சாதிய அடிப்படையில் வன்முறைகள் நிகழ காவல் துறையின் அலட்சிய போக்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.மக்களிடையே சாதி அடிப்படையிலான பகை, பதட்டமான சூழல் நிலவுவது,மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி,மக்கள் எந்த ஒரு பொது பிரச்சினைக்கும் ஒன்று படுவதை தடுக்க என அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதே போன்றதொரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வரும் பா.ம.க-வின் சாதீய அரசியலை கண்டிக்காமல், அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல் இங்கும் அது போல ஒரு பதட்டமான சூழ்நிலையை அரசு திட்டமிட்டே ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகின்றது. சமூகம் நல்லிணக்கமாக இருந்தால் மக்கள் இங்கு உள்ள உண்மையான பிரச்சனைகளான மின்வெட்டு , விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்றவற்றில் ஒன்று சேர்ந்து போராடி தங்களுக்கு அச்சுறுத்தலாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அரசு திட்டமிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான வேலைகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றது.
நடந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு சுருங்க கூறுவது என்னவென்றால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ம.க-வும் சாதி கட்சிகளும் சாதீய அரசியலை கையில் எடுத்துள்ளன. ஆளும் அரசோ மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவதற்காக இந்த சாதீய அரசியலையும், வன்முறையை ஊக்குவித்து வருகின்றது. இல்லை அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என கருதுவோருக்காக இறுதியாக ஒரே ஒரு தகவல் சென்ற ஆண்டு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த வன்முறை மீதான குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்ட பல முதன்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகவும், மேலும் பல வன்முறைகளை அந்த பகுதியில் தூண்டியும் வருகின்றனர் என்பது தான் கள நிலவரம். அரசியல் அதிகாரத்திற்காக சாதீ அரசியலை பயன்படுத்தும் பா.ம.க போன்ற கட்சிகளை இங்குள்ள இயக்கங்கள்ம் அரசியல் கட்சிகள் தனிமைப்படுத்த வேண்டும். இது போன்ற சாதீய அரசியலை எல்லா சாதியில் உள்ள பெரும்பான்மை மக்களும் எதிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலமாக நாம் நம் முன்னே உள்ள தமிழீழ, மின் வெட்டு, காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு, தனியார்மயமாக்கல் போன்ற முக்கிய பிரச்சனைகளை ஒருங்கிணைந்து எதிர்த்து நம் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
நன்றி - வினவு, ஆனந்த விகடன், Dia Nuke.
நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
நாடக காதல் பற்றி சொன்னீர்கள். ராமதாஸ் பார்வையில் வேண்டாம். இந்த பார்வைக்கு உங்கள் பதில் என்ன?
ReplyDeletehttp://namvaralaaru.blogspot.in/2013/05/blog-post.html
உங்களின் கருத்து#1
ReplyDelete//இது போன்ற சாதீய அரசியலை எல்லா சாதியில் உள்ள பெரும்பான்மை மக்களும் எதிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலமாக நாம் நம் முன்னே உள்ள மின் வெட்டு, காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு, தனியார்மயமாக்கல் போன்ற முக்கிய பிரச்சனைகளை ஒருங்கிணைந்து எதிர்த்து நம் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ள முடியும்.//
உங்களின் கருத்து#2
//ஆளும் அரசோ மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவதற்காக இந்த சாதீய அரசியலையும், வன்முறையை ஊக்குவித்து வருகின்றது. //
என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு அமைப்பு ரீதியாகவோ, குழு ரீதியாகவோ, இன்னும் சொல்லப்போனால் அரசியல் ரீதியாகவோ திரண்டு வாழ்வாதார பிரச்னையை எதிர்த்து போராட போகிறீர்கள். யாரை எதிர்த்து என்று தான் கேள்வி? அந்த கேள்விக்கு பதிலை நீங்கள் உங்கள் இரண்டாவது கருத்தில் சொல்லி இருக்கிறீர்கள். அரசியல் ரீதியாக முன்னெடுக்க வேண்டும் என்றால், உங்களின் அரசியல் கொள்கை,கோட்பாடு தான் என்ன...?
தோழர்.கடுங்கோன் பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteமுதலில் நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் உள்ள கட்டுரையில் "கலப்பு திருமணம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். அது தவறு, மாட்டிற்கும், மனிதனுக்கும் திருமணம் நடந்தால் தான் கலப்பு திருமணம் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும். இங்கே நடப்பது ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் இடையிலான திருமணம் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் "மாற்று சாதி திருமணம்" என்று வேண்டுமென்றால் கூறலாம். மேலும் எந்த திராவிட இயக்கமும் "தாழ்த்தப்பட்ட சாதி ஆணை திட்டமிட்டே உயர்த்தப்பட்ட சாதி பெண்னை" காதலிக்க சொல்லவில்லை, இதுவரை அப்படி திட்டமிட்டு திருமணமும் நடத்தி வைக்கவில்லை. இயல்பாக ஆண், பெண்ணுள்ளே எழும் காதலை, சாதி என்ற சுவரை வைத்து தடுக்க வேண்டாம் என்றும், அந்த காதலர்களை திருமணம் என்ற உறவின் மூலம் இணைத்து வைப்பதை தான் அவர்கள் செய்துவருகின்றார்கள். அகமண முறை (ஒரே சாதி, ஒரே கோத்திரத்திற்குள்) திருமணம் செய்வதென்பது அறிவியலுக்கு எதிரானது, இயல்பாக சாதி, மதம், வர்க்கம் பார்க்காமல் நடைபெறும் காதலும், திருமணமும் தான் இயற்கை. அகமண முறை மூலம் சொத்து வெளியில் செல்லாமல் பாதுகாக்கப்படுகின்றது. காதல் திருமணம் நடக்கும் போது சொத்து எங்கே தன் பெண்ணை திருமணம் செய்பவனுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தினாலும், தன்னை விட சாதிய படிநிலையில் கீழே உள்ளவரை திருமணம் செய்வதன் மூலம் தனது பொய்யான "கௌரவத்திற்கு" இழுக்கு வந்துவிடுமோ என்றெண்ணியே இங்கே பல காதலர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.
அகமண முறை தான் சாதீயத்தை கட்டி காக்கின்றது, அதற்கு மாற்றாக காதல் திருமணத்தை முன்வைப்பது எந்த வகையில் தவறாகும்?
சரி நீங்களே கூறுங்களேன், ஒரு உயர்த்தப்பட்ட சாதி பெண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி ஆணை காதலிக்கவேகூடாதா? காதலித்து திருமணம் செய்யக்கூடாதா? செய்யக்கூடாது என்றால் ஏன்?
நான் பங்கு கொண்டிருக்கும் சேவ் தமிழ்சு இயக்கத்தின் கோட்பாடே எனது கோட்பாடாகும். சேவ் தமிழ்சு இயக்கத்தின் அரசியல் கோட்பாட்டை அறிந்து கொள்ள இதற்கு முன் எங்கள் இயக்கம் நடத்திய அரசியல் கூட்டங்களையும், பதிந்துள்ள கட்டுரைகளையும் படியுங்கள் தோழர்.கடுங்கோன் பாண்டியன்.
ReplyDelete1980களில் வன்னிய இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறும் சூழ்நிலையில் அய்யா அவர்கள் வன்னிய சங்கம் ஆரம்பித்ததால்தான் அந்த இளைஞர்களை நக்சல்பாரிகளாக மாறுவது தடுக்கபட்டது என்று வன்னியர் சங்க தலைவர் குரு கூறினார், நக்சல் இயக்கம் அங்க சில நபர்களால் உருவாக்கபட்டபோதுதான் அங்கு சாதி மறுப்பு திருமணம், அனைத்து இனங்களிலும் சகோதரத்துவம் இருந்தது, அதை தடுக்கும் விதமாக உளவு துறை மூளையாக செயல்பட்டு ராமதாசால் உருவாக்கபட்டு இருக்குமோ என்ற சந்தேகம் உருவாகிறது,
ReplyDeleteஅதே போல்தான் தமிழினம் கொஞ்சம் கொஞ்சம் ஓரணியில் வந்து ஈழ தமிழர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, காவிரி பிரச்சனை, பாலாறு பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை, மத்திய அரசின் தமிழின துரோக போக்கு (மின்சார பங்கீடு, உணவு பங்கீடு, நிதி ஒதுக்கீடு) என்று எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஒன்றாக கூடி போராடி வரும் வேலையில் ராமதாஸ் இவ்வாறு செயல்படுவது பழைய சந்தேகம் நினைவிற்க்கு வருகிறது....
ராமதாசு இப்படித்தான் இருப்பார் என்றுதான் எதிர் பார்த்தோம்.இடையில் தம்ழ் தமிழர் என்று ந்ல்ல பிள்ளையாகக் காட்டிக்கொண்டு இன்று சுய உறுவத்தைக் காடுகிறார்.கடலூரில் கருணாநிதித் தலைமையில் நடந்த ஒரு திருமணத்தில் ஓட்ட்ப் போடுவது வன்னியர்கள் கட்சிப் பதவிகளில் மற்றவர்களா?(முக்குலத்தவர்கள்) என்பதாகப் பேசினார். அதற்குக் கருணாநிதி கட்சிப்பதவிகள் தேர்தலில் பெற்றுக்கொள்ளவேண்டியவை யாரும் தருவது இல்லை. நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். என்று பேசினார். அப்போதுமுதல் முக்குலத்தோரை சொல்லாமல் எதித்துவந்தார்.வன்னியர் சங்கம் அதன் பிந்தான் வந்த்தது.தஞ்சையில் மாநாடு கூட்டி செல்வழித்து பெரிய அளவில் நடத்திக் காட்டிய மயிலாடுதுறை வட்டம் பாக்கல் நிலச் சுவாந்தார் “பாக்கம்” ராமகிருஸ்ணன் அவர்களை தவிர்ப்பதற்காக,பேரா தீரன் அவர்களை முன்னுலைப் படுத்தி ராமகிருஸ்ணனை அவமத்த்தார். தி.மு.க.,அதிமுக,காங்கிரஸ் யாவரும் அழைத்தும் அவர் போகவில்லை. வருந்தி ஓய்ந்துவிட்டர்ர்.அதன் பின் கொள்ளிடக் கரையோரங்களில் சாராய அடுப்புகள் நிரைய வந்தன.அன்புமணி மத்த்திய அமைச்சரான பின் தலித்சுப்பையாவால் கிடைக்காதவைகள் கிடத்த்ன போலும் .என்ன செய்வது மூன்று ஸ் துவக்கிய அய்.ஏ.எஸ் சுப்பிரமணியன் இவரை விட்டு விலகிப் போன போது இவர் மாறுவார் என்று எதிர்பார்த்தோம்.மாறிவிட்டார். ஆனால் பார்ப்பனரை பாராட்டி தான் உயர்சாதி என்று காட்டிக்கொள்ள ஆசைப்பட்டு பார்ப்பனுக்கு கீழ் சாதி என்று ஆணி அடித்துக்கொள்கிறார்.அனைத்து சாதிதி தலைவர்களில் சிலர் மேடை கிடைகிறது என்று வருவார்கள்.ஓட்டுப்போட அவர்கள் சாதிக்கரர்களை அனுமதிக்கமாட்டார்கள்.இன்று திமுக வன்னியரி நாடு ந்ம்பும்,அதிமுக வன்னியரை நாடு ந்ம்பும்,காங் வன்னியரை நாடு ந்ம்பும் ஆனால் பாம்க வன்னியரை யாரும் நம்ப மாட்டார்கள்.நாக்கைத்துறுத்திய விஜய காந்த்தை ந்ல்லவன் ஆக்க முனைந்துவிட்டார்.அதிமுக ராமதாசை சேர்த்துக்கொள்வது என்ற ந்ப்பாசை இனி இருக்காது,. அரசியல் என்பது பெர்ரும்பாண்மை மட்டுமல்ல.சனநாயகமுமாகும்.பதவி இல்லையானால் இப்படித்தான் ஆவேன் என்று ராமதாசு மிரட்டுகிறார். தமிழக் மக்கள் நிதானமாக முடிவெடுப்பார்கள். இவர் இன்னும் வெரிபிடித்துப் போவாரோ?
ReplyDeleteவணக்கம் சகோ நல்ல பதிவு,
ReplyDeleteவாழ்த்துக்கள், சாதிக் கட்சிகளை புறக்கணிப்போம்!!!
நன்றி!!
தங்கள் கருத்து பதிவிற்கு நன்றி தோழர். இராஜேந்திரன். தோழர்.குணா கூட இந்த ஐயத்தை அவரது கட்டுரையில் வெளிப்படுத்தி இருந்தார்.
ReplyDeleteநற்றமிழன்.ப
தங்கள் கருத்து பதவிற்கு நன்றி. இறை கற்பனையிலான்.
ReplyDelete//இவர் இன்னும் வெரிபிடித்துப் போவாரோ?////இதற்கு மேல் செல்ல ஒரு பாதையும் இல்லை நண்பா....
புரிந்து கொண்டதற்கு நன்றி. சார்வாகன்.
ReplyDelete