Tuesday, June 17, 2014

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு படையெடுக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள்!


வலை போட்டு ”நல்ல பள்ளிகளைத் தேடி அலையும் அவலம்

நாம் படித்த காலத்தில்பெற்றோர்கள் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் குழந்தைகளை எங்கு படிக்க வைப்பது என்பதில் பெரிய பிரச்சனை இருந்ததில்லை. பெரும்பாலும் அருகிலிருக்கும் அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளுக்கே அனுப்புவார்கள்... அதிகம் அந்த பள்ளிகளைத்தான் காண முடியும். மிகக்குறைவாக தனியார் ஆங்கிலவழிக்கல்வி "மெட்ரிகுலேசனாக" இருந்தது...

இன்றைக்கு வேலை எங்கே என்பதைவிட,  அங்கே "நல்ல பள்ளி" இருக்கிறதா என்பதைத்தான் முதலில் பெற்றோர்கள் தேடுகிறார்கள். தூரமாக இருந்தாலும் குழந்தையின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ‘நல்லப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். அப்படி என்ன அந்த "நல்ல பள்ளி"என்று பார்த்தோமேயானால்  அது சிபிஎஸ்இ (மத்திய அரசு பொது பாடத்திட்டம்) பள்ளி... அப்படி அதில் என்ன உள்ளதுஅதிகமான கட்டணம், "சாதாரண மக்கள் இன்னமும் பேசிவரும் அடித்தட்டு மக்கள் மொழி"யான‌ தமிழை ஒருபாடமாகக் கூட படிக்கத் தேவையில்லை....


அப்படியென்றால் இது அருமையான "#நல்ல_பள்ளி" தானே

அண்மை காலத்தில் இப்படியான பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும்போது வாகன விபத்துகளும்குழந்தைகள் இறப்பும் தொடர் நிகழ்வாக இருக்கின்றனநம்மால் அதை நிறுத்த முடியவில்லைஇன்னமும் மாற்றை நோக்கி சிந்திக்கவும் முன்வரவில்லை.

அடிப்படை பிரச்சனை என்ன?

பெற்றோர்களுக்கு அடிப்படையில் இது பெரிய பிரச்சனையாக தெரிவதில்லை. அப்போதெல்லாம் சாதிப்படி நிலையிலும்பொருளாதாரத்திலும் கீழடுக்கிலிருந்த‌ மக்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள அரசு பள்ளிகளுக்கே பெரும்பாலும் அனுப்பினார்கள்,  அதனால் நடுத்தர வர்க்கத்தினர் பலர் தங்கள் குழந்தைகளை தூரமாக இருந்தாலும் வாகனங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அனுப்புவதை பெருமையாக கருதினர்... இப்போது அதே அடித்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளை எப்பாடுபட்டாவது மெட்ரிகுலேசன் பள்ளிக்கு அனுப்பி வருவதாலும்,  தமிழ்வழி பள்ளிகளின் சமச்சீர் பாடத்திட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இருப்பதாலும்நடுத்தர வர்க்கத்தினர் பலர் எவ்வளவு தூரமானலும் சிபிஎஸ்இ பள்ளிகள் நோக்கி படையெடுக்கின்றார்கள். பலரால் இங்கு கேட்கும் கட்டணத்தையும், ”நன்கொடையையும்  கொடுக்க முடியாவிட்டாலும் கடன் வாங்கியாவது இந்த "நல்ல" பள்ளிகளில் படிக்கவைக்கிறார்கள். ஏன்ஏனென்றால் இங்குதான் குப்பத்து மக்களும்சேரி மக்களும் வரமாட்டார்கள்....

ஒரே வயது குழந்தைகள் இருவருக்கு ஒரே நோய் வந்தால் இப்படித்தான் வேறுவேறு மருந்து கொடுப்பீர்களாநாட்டின் ஒவ்வொரு குழந்தையும் ஏற்றத்தாழ்வான இந்த கல்வி அடுக்குகளால் ஏற்றத்தாழ்வை இயற்கை நியதி என்றுதானே புரிந்துகொள்வார்கள்... ஒரே மாதிரி பிரிவினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் குழந்தைகள் படித்தால் சமூகத்தை பற்றிய பார்வையும் ஒரே பரிமாணத்தில் தான் இருக்கும்பன்முகப்பார்வை இருக்காது... சமுத்துவ தளமாக பள்ளிகள் கூட இல்லையென்றால் எப்படித்தான் இந்நாட்டின் இக்கொடிய நோயை சரிசெய்ய‌ப்போகிறோம்...?

சிபிஎஸ்இ பள்ளியும் குழந்தைகளின் நாகரீகம் பற்றிய விவாதமும்

நீங்கள் அருகில் அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் குப்பத்துசேரி குழந்தைகளின் நாகரீகம் சரியாக இல்லைஅவர்களுடன் நம் பிள்ளைகள் படித்தால் அவர்களும் கெட்டுவிடுவார்கள்அதனால் தான் தொலைதூரத்தில் இருக்கும் சிபிஎஸ்இ நோக்கி போகிறோம் என்று பேசுவீர்களானால்,பலநூறு ஆண்டுகளாக‌ கல்வி மறுக்கப்பட்டு கடந்த சில தலைமுறைகளாக கல்வியின் நிழலை அடைந்த‌ ஒரு நடுத்தரவர்க்க இடைநிலை  சூத்திர சாதி(பிசிஎம்பிசி) குடும்பத்தின் நாகரீக” நிலை முன்னர் எப்படி இருந்தது என்ற வரலாற்றை வசதியாக மறந்துவிடுகிறோம் என்று பொருள்...

கல்வியில் முதல் தலைமுறை - அரசுதமிழ்வழிப்பள்ளி
இரண்டாம் தலைமுறை - தனியார்மெட்ரிகுலேசன் ஆங்கிலவழிப்பள்ளி
மூன்றாம் தலைமுறை - தனியார்சிபிஎஸ்இ ஆங்கிலவழிப்பள்ளி,

அப்படியென்றால் இரண்டு தலைமுறைக்கோஒரு தலைமுறைக்கோ முன்னால் இவர்களின் நாகரீகமென்ன? (கல்லூரிவேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு குறித்த விவாதங்களிலும் முன்னேறிய பிரிவினரின் உளவியலில் இதே மாற்றத்தை பார்க்கலாம்)இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தை சிபிஎஸ்இ கல்வியோடு இந்தியோ சம்ஸ்கிரதமோ ஒரு மொழிப்பாடமாக கற்றால் பெருமை நமக்கு... அப்படி என்ன இது உயர்ந்த நாகரீகம்பண்பாடு?


ஏற்றத்தாழ்வான படிநிலை கல்விமுறை

கல்விமுறையிலும் நான்கு வர்ணங்கள்(பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு அமைப்புமுறை) தெளிவாக உள்ளன...

கேந்திர வித்யாலயாபிஎஸ்பிபிவேல்ஸ்ஐசிஎஸ்இ 
இதர சிபிஎஸ்இ மத்திய அரசு பாடத்திட்டப் பள்ளிகள்
தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள்...

"இங்கே எல்லாம் சமமாத்தான இருக்குஎதுக்குங்க இடஒதுக்கீடு?" என்று கேள்வி கேட்கும் இந்த முதல் இரண்டில் படித்து வந்தவர்கள்கல்வியில் உள்ள இந்த ஏற்றத்தாழ்வான வேறுபாட்டைக் கண்டு என்றும் பொங்கியதில்லைஏனென்றால் ..டி..எம் போன்ற உயர் கல்விக்கூடங்களில் படிப்புஐஏஎஸ்ஐஎஃப்எஸ் போன்ற உயர்ந்த பதவிகளில் வேலைபெரும்பாலும் வெளிநாட்டு வேலைஉள்நாட்டு பெருநிறுவனங்களில் வேலை என இதன் மூலம் பயனடைந்துவருபவர்கள் இவர்கள்சிந்தனை முறையும் சமூகம் குறித்த பார்வையும் ஒரு பரிமாணத்தில் தான் இவர்களுக்கு இருக்கும்அனைவருக்குமான வளர்ச்சிஒட்டுமொத்த சமூகத்திற்கான முன்னேற்றம் பற்றி சிந்திக்க இவர்களால் முடிவதில்லைஇதுதான் நாம் முன்வைக்கும் இந்த கல்விமுறையின் கோளாறு.

கிடப்பில் போடப்பட்டுள்ள அரசின் சீர்திருத்தங்கள்

இந்த உயர்தட்டு தனியார் பள்ளிகளில் அருகாமையில் இருக்கும் ஏழைக்கு 25% இடஒதுக்கீடு என்றத் திட்டத்தை முறையாக நடைமுறைபடுத்த எந்த பள்ளியும் முன்வரவில்லைதனியார் பள்ளிகளுக்கு துணையாக இருக்கும் அரசும் தை கண்டும் காணாதது போல் இருக்கிறது. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைபடுத்த அரசு அமைத்த ஆணையத்தின் பரிந்துரையை அரசே கண்டுகொள்வதில்லை...

கல்விமுறையின் சிக்கலுக்கு தீர்வென்ன?

தெல்லாம் இல்லைநாங்கள் பார்ப்பது பள்ளியின் தரம்குழந்தைகளின் எதிர்காலம்வேலைவாய்ப்பு தான் என்பதெல்லாம் வெற்றுப்பேச்சிதான்... இவைகளை புறக்கணிக்க சொல்லவில்லைஅதே நேரத்தில் மாற்று இந்த படிநிலைக் கல்விமுறை இல்லை என்கிறோம்... ஏட்டில் மட்டுமில்லாது உண்மையான சமத்துவ சமூகத்தை நோக்கி நாம் செல்ல வேண்டுமென்றால் இது போன்ற எழுவகை கல்வித்திட்டங்களுடன் கூடிய நால்வர்ணப் படிநிலை கல்விமுறை ஒழிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படவேண்டும்.

கல்வியாளர் வசந்தி தேவி அவர்கள் ’தி இந்து’ வில்(சூன் 3) எழுதிய “தேவைதானா தூரத்து பள்ளிக்கூடங்கள்” என்ற கட்டுரையில் இன்னொரு தீர்வையும் முன்வைக்கிறார்அருகில் அமைந்துள்ள(அருகமைபள்ளிகளில் அனைத்து குழந்தைகளையும் சேர்ப்பதன் மூலம் சாதிவர்க்க பாகுபாடற்ற தளமாக பள்ளிகள் திகழும்சிறந்த கல்வியும் ஆற்றல் பெறுவதற்கான சம வாய்ப்பும் கிடைக்கும் என்கிறார்மேலும் வாகன விபத்துகள் குறைந்து குழந்தைகள் பாதுகாப்பாக கூடி ஓடி விளையாடி மகிழ்வாக வளர்வார்கள்பள்ளி வாகனங்களோடுவசதிபடைத்தவர்கள் தனித்தனியாக ஏற்றிச்செல்லும் வாகன்ங்களையும் குறைத்தால் எரிபொருள் மிச்சமாகும் (தமிழ்நாட்டில் 36,389 பள்ளி வாகனங்கள் இயக்கப் படுகின்றன என்று தமிழக அரசு அறிக்கை ஒன்று சொல்லுகிறது), அது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும்குரலற்றசமூகத்தில் சக்தியற்றவர்களின் குழந்தைகளே இந்த அருகமை அரசு பள்ளிகளில் படிப்பதால் தான் அவைகள் தரமற்று மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனஅதே பள்ளிகளில் வசதியும் அதிகாரமும் மிக்கவர்களின் குழந்தைகள் படித்தால் அந்த நிலை மாறி தரமிக்க பள்ளிகளாகும்.தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்கும் என்று அருகமை பள்ளிகளில் அனைத்து குழந்தைகளையும் சேர்ப்பதால் கிடைக்கும் பல்வேறு பலன்களை பட்டியிலிட்டுள்ளார்.

இதுவரை வந்த எந்த தமிழக அரசுகளும் இதற்கு ஏன் தீர்வு காணவில்லை?

தாய்மொழித் தமிழை அழித்து இந்திய அரசு செய்த‌ இந்திமொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த திராவிட அரசியல் கட்சியின் தவப்புதல்வர்களே இன்று ஏராளமான தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் வைத்திருக்கும் முதலாளிகள், 500க்கு மேல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியவர்களும் இவர்களே.... ஒரு புறம் சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்த திமுக‌மறுபுறம் சி.பி.எஸ்.இ பள்ளிகளைக் கண்மூடித்தனமாக திறந்து விட்டது.  தெளிவான மாற்றுக் கல்விக் கொள்கை இல்லாமல் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது என்பதை கடந்த காலம் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.  நான் ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்தின் மூலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன் என பேசி வருபவர்களாலும் மாற்றுக்கல்விக் கொள்கையை முன்வைத்து மக்கள் மன்றத்தில் போராடாமல் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

கல்வியிலிருந்து  தனியாரை வெளியேற்றிஆரம்பப் பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அரசே எல்லாவற்றையும் எடுத்து நடத்த வேண்டும். கல்விமருத்துவம் போன்றவற்றை மட்டுமே எடுத்து நடத்த வேண்டிய அரசுமதுக்கடைகளை நடத்தி வருகின்றது. இந்த நிலை மாறவேண்டும். மாநிலம் முழுவதும் ஒரே கல்வி முறை மட்டுமே இருக்க வேண்டும். அருகமை பள்ளிகளுக்கு அனைத்து குழந்தைகளையும் அனுப்ப அரசே வலியுறுத்தி/சட்டமியற்றி அதை நடைமுறைபடுத்த வேண்டும்நமது தேசத்தின் இளம் தலைமுறையினர் அறிவுப்பூர்வமாக இந்த தேசத்தை வளர்த்தெடுக்க தற்போதைய கல்விமுறையில் மாற்றம் அவசியம் தேவை. அது சமூக மாற்றத்திற்குமுன்னேற்றத்திற்கு துணை செய்யும். அதற்காக‌ இணைந்து போராடுவோம்.


ஸ்நாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்.


பி.கு: இந்த கட்டுரை ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழிவழிக்கல்வியின் தேவை குறித்தோதாய்மொழித் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட காட்டாய படுத்தக்கூடாது என்ற பெற்றோர் சார்பில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் போட்டுள்ள வழக்கு பற்றியோ பேசவில்லை. விரைவில் அவைகளைப் பற்றியும் விவாதிப்போம்.

2 comments: