Tuesday, April 15, 2014

2014 இந்திய நாடாளுமன்ற​த் தேர்தல் - சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் நிலைப்பாடு

2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் - சேவ் தமிழ்சு இயக்கத்தின் நிலைப்பாடு

செயற்குழு-இணைக்குழு முடிவுகள்


கடந்த ஐந்து ஆண்டுகளில் எமது இயக்கத்தின் செயல்பாடுகள் தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக மக்களின் சமுக சனநாயக வாழ்வாதார உரிமைக்காகவும் போராடிவருவதாகும். அதன் அடிப்படையில் இந்த தேர்தலில் எமது இயக்கத்தின் நிலைப்பாடு பின்வருமாறு எடுக்கப்பட்டுள்ளது.



* சாதி வெறி, மத வெறி, இன வெறி அரசியலைக் கடும்பிற்போக்கு அரசியல் என்று நாம் வரையறுக்கின்றோம். அவை மக்களைப் பிளவுபடுத்தி ஆதிக்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் வழிவகுக்கின்றன. ஜனநாயகத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன. எனவே அவை தேசியத்திற்கும் எதிரானவையாக அமைந்துவிடுகின்றன. ஜனநாயகம் இல்லையேல் தேசியம் இல்லை. அது வெறும் இனக்குழுவாதமாக, பேரினவாதமாக, எதேச்சதிகாரமாக, எஜமானத்துவமாக, சாதியவாதமாக, மதப்பெரும்பான்மைவாதமாக, பாசிசமாகவே வளர்ச்சிப் பெறுகின்றது என்றப் படிப்பினை மனித குல வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கின்றது. எனவே, மத வாத சக்தியான பா.ஜ.க. , சாதி வெறி அரசியலை அதிலும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கும் பா.ம.க பங்குபெறும் கூட்டணியை எதிர்க்கின்றோம். தேர்தல் வெற்றி, தோல்விகளுக்குப் அப்பால் பா.ஜ.க. போன்றதொரு கட்சிக்கு பல்லக்குத் தூக்குவது நீண்ட கால அர்த்தத்தில் பெரும் சேதத்தை தமிழ்நாட்டிற்கு விளைவிக்கும் என்பதை இங்கு குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம்.




* தி.மு.க, அதிமுக என்பவை முழுக்க முழுக்க ஆளும் வர்க்கக் கட்சிகளாக இருப்பதால் அவை குறித்த தனிக்குறிப்புகள் தேவையில்லை. அதே நேரத்தில் மத வாத எதிர்ப்பு என்ற பெயரில் தி.மு.க வுடன் கைகோர்ப்பதென்பது ஒரு வர்கத்த்தின் பெயரால் ஏனைய வர்க்கங்களின் நலன்களைப் பலியிடுவது அன்றி வேறில்லை. இன்று தமிழகத்தின் இயற்கை வளங்களையும் வாழ்வாதரத்தையும் சூறையாடும் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தும் ஆதரித்தும் செயல்பட்டு பன்னாட்டு பெரும் முதலாளிகளின் நண்பனாகவும் பரந்து பட்ட மக்களின் எதிரியாகவும் இருக்கின்ற தி.மு.க வோடு கை கோர்ப்பது இந்த மக்கள் பிரிவினரின் நலனுக்கு எதிராக நிற்பது தான். தான் சார்ந்திருக்கும் வர்கத்தின் நலனைப் பாதுகாப்பதற்காக தி.மு.க. வோடு கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என்று சொல்லும் கட்சிகளின் இந்த போக்கு இறுதியில் அந்த வர்க்கத்தின் நலனில் கூட சமரசத்திற்கு போக நேரும் என்று வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். எனவே, தி.மு.க., அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிகள் புறக்கணிப்பட வேண்டியவை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கட்சியைப் பற்றிய கேள்வியே இல்லை. அது எதிர்க்க வேண்டியதே. ஆம் ஆத்மி கட்சி சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுக்கு எதிரான கொள்கை வழிப்பட்ட கட்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஊழல் மட்டுமே இந்நாட்டின் ஒற்றைப் பிரச்சனையாக ஆம் ஆத்மி கட்சியால் முன் வைக்கப்படுகின்றது. இன்றளவில் , ஆம் ஆத்மி கட்சி சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவல்ல மாற்றாக நாம் கருதவில்லை.



* பிரச்சனை அடிப்படையில் பின்வரும் தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் தலித் எதிர்ப்பு சாதி ஆதிக்க அரசியலுக்கு அரசியல் தலைமை தாங்கிய பா.ம.க. கட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் தர்மபுரியில் போட்டியிடும் பா.ம.க. வின் முக்கிய வேட்பாளரான அன்புமணிக்கு எதிராகத் தோழமை இயக்கங்களுடன் இணைந்து பரப்புரை மேற்கொள்ள முயற்சிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் புஷ்பராயன், உதயகுமார் ஆகிய இருவரும் முறையே தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளாராகப் போட்டியிடுகின்றனர். அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு இருக்கும் மக்களின் ஆதாவை எடுத்துக்காட்டும் வாய்ப்பாக இத்தேர்தலைப் பயன்படுத்துவது என்ற அடிப்படையிலும் போராட்டத்தில் உறுதியாக நின்ற தலைவர்கள் என்ற வகையிலும் இவ்விரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீத்தேன் எடுக்கும் திட்ட எதிர்ப்பு, அனல் மின் நிலையங்கள் எதிர்ப்பு, காவிரி நதி நீர் சிக்க\ல் உள்ளிட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளின் குவிமையமாக டெல்டா மாவட்டங்கள் ஆகியுள்ளன. இப்பிரச்சனைகளை முன் வைத்து மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பொதுவுடமைக் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கட்சியின் சார்பாக போட்டியிடும் தோழர் குணசேகரனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.



தேர்தல் பரப்புரை நாம் ஏற்கெனவே ஈடுபட்டிருந்த பிரச்சனைகள் குறித்து மக்களிடம் கருத்தைக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும், அக்குறிப்பிட்ட பகுதி மக்களிடம் விரிவாக செல்வதற்கும் இந்த பரப்புரை செயல்பாடுகள் துணை செய்யும். தேர்தல் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் நீண்ட கால இலக்குக்கும், நட்பு சக்திகளைப் பெருக்குவதற்கும் இது துணை செய்யும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.




- செந்தில்குமார்
ஒருங்கிணைப்பாளர்
சேவ் தமிழ்ஸ் இயக்கம்

3 comments:

  1. தேச விரோதக் கும்பல், ' தமிழ் உணர்வாளர்கள் ', என்ற போர்வையில் !!!.., உங்களின் ஆதரவும் எதிர்ப்பும் அப்படித்தான் இந்த தேர்தலில் உள்ளது. முதலில் ஆக்கப்பூர்வமாக ( அதாவது செயலில் ) இந்த இந்திய தமிழ் மக்களுக்கும் , ஈழ தமிழர்களுக்கும் செய்யுங்கள். பிறகு தேசியம் பேசலாம். உங்களைப் போன்ற போலி போராளிகளை இந்த தமிழக மக்கள் கடந்த 45 வருடங்களா பார்த்தாகி விட்டது. ' கட்டுமரமே ' உங்கள் முன்னோடி !!!.., நீங்கள் வாரிசுகள். அவ்வளவுதான் வித்தியாசம். உம்மைப் போன்றோர் இங்கே இன்னமும் போணியாகாத ' பெரியார் மண் ' என்ற சரக்கை இன்றும் இங்கே விற்றுக்கொண்டிருக்கிறீர்கள் !!!.., ஆனால், இது எங்கள் பாரத தாயின் மண் !.., அவளின் பாத கமலமாக இதை நாங்கள் போற்றுகின்றோம் !.., இங்கே ' சனாதன தர்மத்தை ' தவிர வேறொன்றுக்கும் இடமில்லை !!!.., ஹிந்துத்துவா கொள்கை இங்கே மலரும் !.., ஹிந்து தேசியம் விரைவில் இந்த புண்ணிய பூமியில் மலரும் !.., நெடுநாள் இலக்காக உங்களுக்கு ஒன்று உள்ளது. எங்களுக்கும் உள்ளது !.., ஆரோக்கியமான போட்டிக்கு நாங்கள் தயார் !.., உங்கள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு, இந்த தமிழ் மண்ணில் நாங்கள் வளர்ந்துக்கொண்டிருக்கிறோம் !!!.., இங்கே நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது சுவாமி விவேகானந்தரின் ஒரு பாத தூசியின் துரும்பு மட்டுமே !.., பெரும் காற்றாற்று வெள்ளைத்தை இங்கே, இந்த தமிழ் மண்ணில் எதிர்ப்பாருங்கள். விரைவில் !.

    குறிப்பு:- ( நான் உம்மை விட இந்த தமிழ் மொழியையும், இந்த தமிழ் மண்ணையும் நேசிப்பவன். ஆதலால் தான் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறேன். ஜெய் ஹிந்த்.)

    ReplyDelete

  2. சனாதன தர்மத்தை மதிப்பவன் எப்படி சக மனிதனை நேசிக்க முடியும்? ஆமாண்டா நாங்க‌ கொலை செஞ்சோம், செய்வோம் என்னடா செய்வ அப்படின்னு கேட்குறீங்க.... உங்களை எதிர்த்து சனநாயகத்தை காப்பாற்ற நாங்களும் தொடர்ந்து போராடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே, சனாதன தர்மம் என்பது ஒரு அழகான, பண்பட்ட வாழ்க்கை முறை & வாழ்வியல் நெறி. அதை தப்பு தப்பாக புரிந்துக்கொண்டு இங்கே பிதற்றல் வேண்டாம்.
      இரண்டாவது, இங்கே எனது முந்தைய பின்னூட்டில் ' ஆக்கப்பூர்வமாக ' ' ஆரோக்கியமான போட்டி ' போன்ற வார்த்தைகளை மட்டுமே பிரயோகப்படுத்தி இருப்பேன். அந்த வார்த்தைகளில் வீரம் மிளிர்ந்திருக்கும், வன்முறை அல்ல !.., ஆயிரக்கணக்கான தமிழச்சிகளின் ' கற்பு ' இலங்கை மண்ணில் சூறையாடப்பட்ட பொழுது உம்மிடத்தில் இல்லாத வீரம் & கையாலாகாத தனம் !.., பிற்காலத்தில், எனது இந்திய திருநாட்டின் தமிழ்
      சகோதரிகளின் கற்ப்பைக் காக்கும் அரண் அதில் வெளிப்பட்டிருக்கும் !!!.., பெரியாரை நான் 100 % சதவிகிதம் எதிர்ப்பவனும் இல்லை, ஆதரிப்பவனும் இல்லை. சில பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், அவரின் கருத்துக்கள் நிரந்தர திர்விற்கோ, உண்மை நிலையை எட்டுவதற்கோ உதவாது. என்னென்றால், அதில் பூரண ஞானமில்லை !.., அவரை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவரை பின்ப்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு இந்த தமிழகத்தில் செய்த ஆராஜகங்கள் அதிகம். அனைவரும் போலிகள் என்று கூற முடியாது. சிலர் தாம் ஏற்றுக்கொண்டிருக்கின்ற கொள்கைகளில், சத்தியத்தை கைப்பிடிக்கின்றனர். ஆனால், இங்கே கேள்வி என்னவென்றால் இவர்களால் இந்த தமிழ் மக்களுக்கு கடந்த ஒரு நூற்றாண்டாக வளைந்த ஆக்கப்பூர்வமான பயன் என்ன ?.., மறுபடியும் சொல்கிறேன் சகோதரரே, ஆரோக்கியமான போட்டிக்கு ( ஆதாவது கருத்துப்பிரச்சாரம் ) நாங்கள் தயார். சத்தியத்தை மக்களிடம் கொண்டு செல்வோம் & பெருமளவில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள். நெடுங்காலத் திட்டம் எங்களுக்கும் ஒன்று உள்ளது.., அதுதான் அகண்ட ஹிந்துஸ்தானம் !.., அதை அடைந்தே தீருவோம் !!!.., ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற வன்முறை போராட்டம் மூலம் அல்ல !.., அறம் வழியில் !!!.., ஜெய் ஹிந்த்.

      ( குறிப்பு:- பாரதியாரின் கூற்றுக்கேற்ப, வெறும் வாய்சொல்லில் வீரரடி ! என்று இல்லாமல், உண்மையான தமிழ் உணர்வாளன் என்றிந்தால் நீங்கள் ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடுங்கள். ( தமிழகத்தின் அகதி முகாமில் பசியால் அழும் ஒரு பச்சிளங்குழந்தைக்கு 1 லிட்டர் பால் வாங்கி அதன் அழுகையை நிறுத்துங்கள் !.., தயவு செய்து அதை விளம்பரப்படுத்தாதீர். உங்களுக்கு கோடி புண்ணியம் !!! ஜெய் ஹிந்த். )

      Delete