Friday, February 28, 2014
இரவுகளை மீட்டெடுப்போம்
இது ஒரு இருள் படிந்த கணம். உமா மகேஸ்வரி எதிர்கொண்ட கொடூரமான வன்முறையும் அவரின் துர்மரணமும் கோபம் அச்சம் துயரம் என எல்லாம் கலந்த ஒரு இருள்வெளியை நம்மீது சுமத்துகிறது. அவரை இழந்து நிற்கும் அவரின் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் அவருடைய இழப்பு ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஈடு செய்யமுடியாதது. அவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள். குற்றவாளிகளுக்கு தண்டனை கேட்டு உமா மகேஸ்வரிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்கும் அதே வேளையில் பெண்களின் சுதந்திரம், மாண்பு, பாதுகாப்பு குறித்த கவலைகள் நம்மை தினமும் அரித்தெடுக்கின்றன. கடந்த ஓராண்டில் நடந்துள்ள பெண்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பெண்கள் இயல்பாக தெருக்களில் குறிப்பாக இரவு நேரங்களில் நடமாடுவதற்கான பாதுகாப்பு குறித்த அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன. ஏனெனில் இந்த வன்முறை நம் அன்பிற்குரிய தோழியின் உயிரைப் பறித்த அதே நேரத்தில் நம் அனைவரின் குடும்பத்தாரையும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. நாம் நம்முடைய நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய பாதுகாப்பு வசதிகளை கேட்டுப் பெறும் அதே வேளையில் நாம் அனைவரும் இணைந்து நின்று வளாகங்களின் உள்ளேயும் வெளியேயும் பெண்களுக்கு ஏற்றதான ஒரு வெளியை உருவாக்க குரல்கொடுக்கவேண்டியதும் அவசியமாகிறது.
படித்து பட்டம் பெற்று போராடிப் பெற்ற பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த அச்சமும் அது எழுப்பும் பாதுகாப்பு வளையங்களுக்கான கோரிக்கையும் மட்டுமே அவர்களுக்கான விடையாக இருக்கமுடியாது. ஒரு சமமான நீதியான உலகத்தை விரும்பும் பெண்களாகவும் ஆண்களாகவும் நாம் பெண்களை முடக்கிப் போட முயலும் இந்த வன்முறைகளை எதிர்த்து ஒரு வலிமையான குரலை எழுப்ப வேண்டியிருக்கிறது.
நாங்கள் பயப்படமாட்டோம், ஒன்றுபட்டு ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுப்போம், எங்கள் இரவுகளையும் பகல்களையும் நகரங்களையும் அதன் வெளிகளையும் மீட்டெடுப்போம். உமாவின் நினைவை இந்த இருளில் ஒரு நினைவாக ஏந்தி நிற்போம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு மெழுகுவர்த்தியாக… அதே நேரம் இது போன்ற வன்முறைகள் நம்முள் விதைக்க முயலும் அச்சத்தை வேரறுக்கும் தீப்பந்தமாக… ஒன்றுபட்டு நாம் தகவல் தொழிநுட்ப வளாக சாலைகளை, ஆளற்ற ரயில் நிலையங்களை, வெறிச்சோடிய பேருந்து நிலையங்களை மட்டுமல்ல இருண்டு கிடக்கும் இந்த ஆணாதிக்க சமுகத்திற்கும் ஒளியேற்றுவோம்.
Wednesday, February 26, 2014
சிங்கள ராஜபக்சேவும்! இந்துத்துவ மோடியும்! (மோடி - வெளிச்சங்களின் நிழலில் ! - 4)
கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்ச் மாதம் என்றாலே,இலங்கையில் ராஜபக்சே அரசால் நடத்தப்பட்ட போர்க்குற்ற, இனப்படுகொலை பன்னாட்டு விசாரணை வேண்டி ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவதுதான் நம் நினைவுக்கு வரும். இந்த ஆண்டும் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா கூட்டத் தொடரில் எப்படிப்பட்ட தீர்மானத்திற்கு வலியுறுத்த வேண்டும் என்பது சனநாயக இயக்கங்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது.
வருகின்ற 2014 மார்ச் மாதம் முந்தைய ஆண்டுகளின் மார்ச் மாதங்களைவிட சற்று வேறுபட்டு இருக்கப் போகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மும்மரம் அடையத் தொடங்கியிருக்கும். நாம் இந்த முறை இரண்டு இனப்படுகொலையாளர்களை எதிர்கொள்ளப் போகிறோம். ஒருபக்கம் சிங்கள ராஜபக்சே; மறுபக்கம் இந்துத்துவ மோடி. இவர்களின் நிலையும்,இவர்கள் செய்த இனப்படுகொலையும் அளவினால் மட்டுமே மாறுபடுபவை; நோக்கத்தால் அல்ல.
2004-ல் பிரதமராகப் பதவியேற்று கொண்ட ராஜபக்சே, அப்போதைய சனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவின் பிரதான ஆதரவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீராவை தன் பக்கம் இழுத்து சந்திரிகாவை ஓரம்கட்டி 2005 சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராகி, வெற்றியும் பெற்றார். இவ்வாறு பண்டாரநாயக குடும்பத்திடம் இருந்த இலங்கையின் ஆட்சி ராஜபக்சேவிடம் வந்து, போருக்குப் பிறகான சூழலில் விழுதுகள்விட்டு படர்ந்துள்ளது.
இதே பாணியில்தான், 2013-ல் ஆர். எஸ். எஸ் ஆதரவைப் பெற்று, ராஜ்நாத் சிங்கின் உதவியுடன் நரேந்திர மோடி 2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பண்டாரநாயகா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு ஆட்சிக்கு வந்த ராஜபக்சேவைப் போலவே அத்வானியை குப்புறத் தள்ளிவிட்டு பிரதமர் வேட்பாளராகியுள்ளார் மோடி.
2010- ஆம் ஆண்டு இந்து நாளிதழுக்கு ராஜபக்சே அளித்த நேர்காணலில் பின்வருமாறு கூறியிருந்தார், " வளர்ச்சி மிக முக்கியமானது. வளர்ச்சியும், அமைதியும்தான் சனநாயகத்திற்கு வழிவகுக்கும்". போரின் போது நடைபெற்ற போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ராஜபக்சே எடுத்தப் பாதை வளர்ச்சி என்கிற நிலைப்பாட்டை முன்வைத்தே. 2012-ல் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதோடு, இந்திய அளவிலான அரசியலில் கால்பதிக்க நரேந்திர மோடி எடுத்த நிலைப்பாடும் வளர்ச்சி என்கிற போலிப் பிரச்சாரத்தின் மூலமே.
2002-ல் நடந்த குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்துத்துவ நிலைப்பாட்டை முன்னிறுத்தியும், மக்கள் மத்தியில் விதைக்கப்பட்ட மனக் காழ்ப்புணர்வையும் பயன்படுத்தி நரேந்திர மோடி வெற்றி பெற்றார். குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலானது ஆட்சிக் காலம் முடிவதற்கு எட்டு மாதங்கள் முன்னதாகவே நடத்தப்பட்டது. 2009 போருக்குப் பின்னர் ராஜபக்சே தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி சனாதிபதிக்கான பதவிக்கால வரம்பை நீக்கினார்.
இலங்கையில் ராஜபக்சேவிற்கு எதிராகவும், போர்க் குற்றங்கள், மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராகவும் பேசுபவர்கள் பிரிவினைவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டனர். குஜராத் இசுலாமியப் படுகொலை குறித்து, மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த பா.ஜ.க அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்டதும், காவல் அதிகாரி சஞ்சீவ் பட் மீது வழக்குகள் பாய்ந்ததையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
துப்பாக்கிகளுக்கு பூசை செய்யும் திருவாளர்.மோடி
குஜராத் இசுலாமியப் படுகொலைக்கு பிறகு தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எல்லாம் குஜராத் மற்றும் குஜராத்திகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களாக பிரச்சாரம் செய்தார் மோடி. 2013-ல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் " இந்தியாவே முக்கியம்" என்று தேசிய உணர்வை முன்னிறுத்தி பேசினார் மோடி. 2009 போருக்குப் பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ராஜபக்சே, " இலங்கையில் இரண்டே தரப்பினர்தான் இருக்கிறார்கள்; நாட்டை நேசிப்பவர்கள் ஒருசாரர், பிறந்த நாட்டை நேசிக்காத இன்னொரு சிறு பிரிவினர்" என்று குறிப்பிட்டார்.
இதே பாராளுமன்ற உரையில், " நாங்கள் சிறுபான்மையினர் என்கிற வார்த்தையை இலங்கையின் அகராதியில் இருந்தே நீக்கிவிட்டோம்" என்று கூறியிருந்தார் ராஜபக்சே. இதே கருத்தைத்தான், ஆர். எஸ். எஸ் -சின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான, மோகன் பகவத் டெல்லியில் நடைபெற்ற ஒருக்கூட்டதில், " இந்தியாவில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது, இந்துத்துவக் கொள்கையை மறுஆய்வு செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
நடந்து முடிந்த இனப்படுகொலைகளை வளர்ச்சி என்ற பிரச்சாரத்தின் மூலம் மூடி மறைக்கும் புள்ளியில் மட்டும் மோடியும், ராஜபக்சேவும் ஒன்றிணைவதில்லை. இந்தியாவிலும்,இலங்கையிலும் நிலவும் பெரும்பான்மைவாதப் போக்கான இந்துத்துவ தேசியவாதமும், சிங்கள பௌத்த தேசியவாதமும் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் தொடக்கப் புள்ளி.
2012 குஜராத் சட்டசபைத் தேர்தல் வெற்றியைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்-ன் இணை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத், இந்துத்துவ கொள்கையே மோடியின் வெற்றிக்கு காரணம் என்று கூறியதுடன், 180 தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் ஒரு இசுலாமிய வேட்பாளரைக் கூட மோடியின் பா.ஜ.க நிறுத்தாதை சுட்டிக் காட்டியது. இதற்கு ஒருபடி மேலும் சென்று, மோடியின் 7 அமைச்சர்கள் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றதையும், நானோ நகரமான சனந்தில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெறாததையும் சான்றுகளாக கொடுத்திருந்தது.
பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்கிற மோடியினுடைய பா.ஜ.க-வின் நிலைப்பாட்டையும், ஈழப் பகுதிகளிலுள்ள தமிழர் கோவில்களை இடித்துவிட்டு புத்த விகாரைகள் அமைத்துவரும் ராஜபக்சே அரசின் போக்கையும் சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
" இந்துத்துவக் கொள்கை என்பது தேசியத்துடன் தொடர்புடையது, தேசியவாதம்தான் வளர்ச்சிக்கான வழி" என்று நிதின் கட்கரி கூறுவதும், " இந்துத்துவக் கொள்கைதான் வளர்ச்சி; வளர்ச்சிதான் இந்துத்துவக் கொள்கை" என்று பிரவீன் தொகடியா கூறுவதும், எப்படி சிங்கள புத்த தேசியவாதப் போக்குடன் பொருந்துகிறது என்பதற்கான் சான்று பின்வருமாறு. ராஜபக்சேவின் கூட்டணிக் கட்சியான, ஜாதிக ஹெல உறுமய (JATHIKA HELE URUMAYA) என்னும் சிங்கள புத்த கட்சியின் மூத்த தலைவர் கூறியதாவது, " சூழலியல், சமூக மற்றும் பொருளாதாரம் என இன்றைய அனைத்து பிரச்சினைகளுக்கும் சிங்கள பௌத்தமே தத்துவார்த்த அடிப்படையிலான தீர்வு" என்று கூறியிருப்பதை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும்.
சிங்கள பௌத்தமே எனது கொள்கை என முழங்கும் இராஜபக்சே
ஈழத் தமிழர்களை அழித்தொழித்து, ஒடுக்கிவிட்டு அண்மைக்காலமாக இசுலாமியர்களின் மீது தாக்குதல் தொடுத்து வரும் சிங்கள புத்த பேரினவாதம் போலவே, இசுலாமிய வெறுப்பு என்பதில் இருந்து கொள்கையை வகுத்துள்ள இந்துத்துவமும் செயல்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் உள்ள மற்ற தேசிய இனங்கள், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் சார்ந்த பிரச்சினைகளில் மோடி மற்றும் ஆர்.எஸ். எஸ்.-சின் நிலைப்பாடுகளே இதற்கு சான்று.
இந்துத்துவ பெரும்பான்மைவாதம் இந்தியாவில் இருந்து இசுலாமியர்களை அப்புறப்படுத்துவதும், அவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுப்பதும் எளிதாக நிகழ்த்தக் கூடியது என்றும் நம்புகிறது. இதன் பொருட்டே தன்னுடைய பெரும்பான்மைவாதக் கொள்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயல்களை இசுலாமியர்கள் மீதான தாக்குதல்களில் இருந்து தொடங்குகிறது இந்துத்துவம்.
2012 குஜராத் சட்டசபை தேர்தலின் போது மோடியின் தேர்தல் அறிக்கையில், துறவிகளுக்கான நகரம் அமைத்தல், பசுவதைத் தடுப்பு, சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துதல் மற்றும் விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதும் உறுதி மொழிகளாக அளிக்கப்பட்டிருந்தது.
2010-ல் மஹா சங்க நிகழ்வில் பேசிய ராஜபக்சே, புத்தசாசன காரிய சாதக மண்டல்யா, புத்தர் ஞானம் பெற்ற 2600-வது ஆண்டை கொண்டாடும் பொருட்டு, புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான 20 வழிகள் கொண்ட செயல்திட்டத்தை கொடுத்துள்ளதாகக் கூறியதோடு,இதன் துணை கொண்டு சிங்கள புத்த கலாசார அடையாளத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ராஜபக்சேவின் இந்த உரையும், மேற்சொன்ன மோடியின் தேர்தல் உறுதி மொழிகளும் இவர்கள் எதன் அடிப்படையில், எதைக் காப்பாற்றுவதற்காக இயங்குகிறார்கள் என்பதைப் புலப்படுத்தும். அவையாவது சிங்கள புத்த தேசியவாதமும், இந்துத்துவ தேசியமுமே.
2002 குஜராத் படுகொலை குற்றங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும், இந்திய அரசியலில் கால் வைக்கவும் வளர்ச்சி என்னும் அரிதாரம் பூசிய மோடியும், இனியும் இந்துத்துவக் கொள்கைகளை கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிக்க முடியாது என்று நினைத்த பா.ஜ.க-வும் இணைந்து மோடியின் வளர்சிக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த அதிகாரத்திற்கு வர நினைக்கும் மோடியும், பா.ஜ.க-வும் கையில் எடுத்துள்ள துருப்புச் சீட்டே வளர்ச்சி.
சிங்கள புத்த தேசியவாதத்தைக் கைகொண்டு போரை நடத்தி இன அழிப்பையும் போர்க்குற்றங்களையும் செய்த ராஜபக்சே பன்னாட்டு அழுத்தங்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே வளர்ச்சி அரிதாரத்தை பூசியுள்ளார்.
மோடியும், ராஜபக்சேவும் வளர்ச்சி என்று கூறுவது மக்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால், இந்த போலிப் பிரச்சாரத்தின் மூலம் மோடியும், ராஜபக்சேவும் வளர்கின்றனர் என்பதே உண்மை. இவர்களைப் பொறுத்த வரை வளர்ச்சி என்பது வெறும் அரசியல் காய் நகர்த்தலும், பெருமுதலாளிகளுக்கும் மட்டுமே. மற்றபடி, அவர்களின் அடிப்படைவாத கொள்கைகளில் இருந்து அவர்களோ அல்லது அவர்களது அரசோ விலகி நிற்பதில்லை.
இலங்கை அரச நிர்வாகத்தின் ஒவ்வொரு இடுக்கிலும் தன்னுடைய குடும்பத்தவரை அமர்த்தி சர்வதிகார ஆட்சி நடத்தி வரும் ராஜபக்சேவும், "பாசிசத்தின் மொத்தவடிவம்" என்று ஆஷிஷ் நந்தியால் விளிக்கப்பட்ட நரேந்திர மோடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே ஆவர்.
ராஜபக்சே சனாதிபதியாக ஆதரவளித்து இலங்கை முழுக்க பிரச்சாரம் செய்த மங்கள சமரவீ ராவையும், ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக ஜே.வி.பி போன்ற சிங்கள புத்த தேசியவாத அமைப்புகளையும் பயன்படுத்திக் கொண்ட ராஜபக்சே, காரியம் முடிந்ததும் அவர்களை கைகழுவிவிட்டார்.அது போலவே, மோடியும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை தேர்தலுக்குப் பின் கைகழுவுவார் என்பது திண்ணம்.
இந்திய, இலங்கை நாடுகளின் சித்தாந்தப் போக்கு என்பது பெரும்பான்மை அடிப்படைவாதங்களான இந்துத்துவ தேசியம் மற்றும் சிங்கள புத்த தேசியவாதம் என்கிற கருத்தியல்களைக் கொண்டே சுழல்கிறது. இவையிரண்டும் மற்ற தேசிய இன மக்களையும், சிறும்பான்மையினரையும் காவு வாங்குவதிலேயே குறியாக இருந்ததும், இருப்பதும் நாம் அறிந்ததே. உற்பத்தியை விரைவுபடுத்துவதே கருவிகளின் நோக்கம். அதே போல, மோடியும், ராஜபக்சேவும் இந்துத்துவ, சிங்கள புத்த தேசியவாதங்களின் ஆதிக்கத்தை விரைவுபடுத்தும் நாசகாரக் கருவிகளே.
கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!
பாகம் -1 - http://save-tamils.blogspot.in/2013/09/1.html
பாகம் -2 - http://save-tamils.blogspot.in/2014/01/2.html
பாகம் -3 - http://save-tamils.blogspot.in/2014/02/3.html
Tuesday, February 25, 2014
எழுவர் விடுதலையில் நசுக்கப்படும் தமிழக மக்களின் குரல்!
உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வதன்ன?
கடந்த பிப்.18 அன்று ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21ஆம் பிரிவு "சராசரி குடிமகனுக்கான வாழ்வதற்கான உரிமை" என்ற சட்டத்தின் அடிப்படையில் விலக்கி ஆயுள் தண்டனையாக மாற்றி நீதிபதிகள், சதாசிவம், இரஞ்சன் கொகாய், சிவகீர்த்திசிங் அமர்வு உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் 23 ஆண்டுகள் சிறையில் வாடியிருக்கிறார்கள்; அத்தோடு 11 ஆண்டுகளுக்கு மேல் கருணை மனு மீதான நீண்ட நாட்கள் காத்திருப்பு, அவர்களை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது, இது நான்கு ஆயுள் தண்டனைக்கு சமமாகும்...மேலும் இந்திய குற்றவியல் சட்டம் 432 பிரிவின்படி குறிப்பிட்ட அரசு விடுவித்துக்கொள்ள உரிமை உள்ளது என்று விரிவாக சொல்லியுள்ளது தீர்ப்பு.
தமிழக அமைச்சரவை ஏழுபேரையும் விடுதலை செய்து அறிவிப்பு!
அடுத்த நாளே (பிப். 19) தமிழக முதலமைச்சர் தலைமையில் கூடிய அமைச்சரவை மூவர் உட்பட ராஜீவ் கொலைவழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழ்வருக்கும் விடுதலை என்றும், மத்திய புலனாய்வு விசாரித்ததால் மூன்று நாட்கள் மத்திய அரசு ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும், இசைவு வந்தாலும், வராவிட்டாலும் நிபந்தனையற்று விடுவிப்பதாகவும் முடிவெடுத்து சட்டசபையில் பேரவை விதி 110 கீழ் முதல்வரால் அறிவிக்கப்பட்டது. ஏழுபேர் விடுதலையை ஆதரித்தவர்களும், பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் உட்பட மரண தண்டனையே மானுடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனப் போராடியவர்களும், பல்வேறு சமூக சனநாயக இயங்கங்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.
மத்திய அரசு எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை!
ஆனால் இந்த முடிவைப்பற்றி தன்னிடம் முன்கூட்டியே ஆலோசனை கேட்கவில்லை, கேட்டபின் தான் அறிவிக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என (பிப். 20ல்) உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை கோரி வழக்கு தொடுத்திருந்தது மத்திய அரசு. அதோடு உச்சநீதிமன்றத்தின் மூவர் தூக்கு நீக்கம் என்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்றும், வழக்கின் தனித்துவத்தை கருத்தில் கொள்ள தவறிவிட்டது எனவும் கூறி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரியுள்ளது. ஏற்கனவே வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தண்டனை நீக்கம் செய்து வழங்கிய தீர்ப்பில் இவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் பதில் உள்ளது, அதன் தொடர்ச்சி தான் இந்த தீர்ப்பு, அரசியலமைப்பு சட்டத்தில் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று உள்ளது, வழக்கின் தன்மையை பொறுத்தோ, கொலை செய்யப்பட்டவர் நாட்டின் உயரிய பொறுப்பில் இருந்தவர் என்பதற்காக எல்லாம் தீர்ப்பு மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்....
தமிழக அரசு எழுவரை விடுவிப்பதற்கு உள்ள வழிமுறைகளை சரிவர பின்பற்றவில்லை, அரசு தனது பதிலை இருவாரத்திற்குள் நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது தமிழக அரசு உரிய பதில் வழங்கினால் போதும், சட்ட வழிமுறையை சரியாக பின்பற்றி எழுவர் விடுதலை செய்யமுடியும். எப்போதுமே நமது பக்கம் இல்லாத சட்டமும், நீதிமன்றமும் இன்று நமது பக்கம் உள்ளது. "நாட்டின் கூட்டு மனசாட்சிக்காக" காசுமீரத்தின் அப்சல் குருவை தூக்கிலிட்டு கொன்றது போல 23 ஆண்டுகள் ஒவ்வொருநாளும் "இன்று தூக்கா நாளை தூக்கா" என கொடுமையானத் தண்டனை அனுபவித்த பின்னும் சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரையும் இந்திய தேசியம் என்கிற பெயரில் இந்திய தேசிய கட்சிகள், அவர்களின் கைக்கூலி ஊடகங்களும் கொல்லத் துடிக்கின்றன .
அற்புதம் அம்மாளின் மரண தண்டனைக்கெதிரான போராட்டம்...
ராஜீவ் கொலை வழக்கின் தீர்ப்பு சொல்வதென்ன? ராஜீவின் கொலை ஒரு பயங்கரவாத செயலா?
தீர்ப்பில் மிகத் தெளிவாக சில ஐயப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளன, அதாவது இது இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல் அல்ல, இது இந்திய அமைதி ப்டையின் நடவடிக்கைக்காக பழிவாங்குவதற்கு நடத்தப்பட்ட படுகொலையே என உச்சநீதிபன்ற தீர்ப்பு கூறுகின்றது. இன்னமும் படுகொலையில் பயன்படுத்தப்பட்ட இடுப்புக் குண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றத்தின் திட்டம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு வந்த மூவருக்கு மட்டும் தான் தெரியும், அவர்கள் அனைவரும் விசாரணைக்கு முன்னரே இறந்துவிட்டார்கள்... சதி திட்டம் முழுமையாக விசாரணையில் தெரியவில்லை போன்ற முக்கிய அம்சங்கள் அந்த தீர்ப்பில் உள்ளது.
ஜெயின் கமிசன், வர்மா கமிசன்படி உண்மையான குற்றவாளி யார்?
1999க்கு பிறகு கொலை வழக்கு விசாரணை முழுமையாக முடிவடையவில்லை என்று கூறி வர்மா கமிசன், ஜெயின் கமிசன் இரண்டு விசாரணை கமிசன்கள் அமைக்கப்பட்டன. இரண்டுமே சதியில் பின்னணி உடையவர்களான சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி, சில காங்கிரஸ் தலைவர்களை விசாரிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இன்றுவரை அவர்கள் விசாரிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி விசாரணை நீதிபதியான ஜெயின் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இந்த இறப்பும் தெளிவாக விசாரிக்கப்படவில்லை. வர்மா கமிசன் அறிக்கை காணாமல் போய்விட்டதாக அரசு சொல்கிறது. இப்படி ஒரு ஓட்டை வாளி தான் இராஜீவ் விசாரணை.... உண்மை குற்றவாளிகள் அதிகார பலத்தைப் பயன்படுத்தி தப்பித்துவிட, எந்த அதிகார பின்புலமும் இல்லாத எளியவர்கள் மட்டுமே கடந்த 23 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்கள்....
இன்றளவும் முழுமையாக விசாரிக்கப்படாத இந்த வழக்கு எங்கே மறுவிசாரணைக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தங்களை காத்துக்கொள்வதற்காக, நாட்டின் நலன், நாட்டின் முக்கிய தலைவரை இழந்துவிட்டோம், பயங்கரவாத செயல், மூவர் உயிரை காப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது, படுகொலையில் இறந்த 15 பேருக்கு என்ன நீதி என்று கூவிவருகின்றார்கள்....... 23 ஆண்டுகள் கொடுந்தண்டனை அனுபவித்த மூவரும் தூக்கில் கொல்லப்படுவதுதான் சரி என ரத்தக்கரையோடு மனித தன்மையற்று எல்லா ஊடகங்களிலும் பொது தளத்திலும் பேசிவருகிறார்கள். கார்பரேட் ஊடகங்களும் இதே பொய்யை, பொய் என்பதைவிட நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தேசப்பற்று, நாட்டு மக்களின் கூட்டு மனநிலை என கூவிவருகிறார்கள்.
கூட்டுமனசாட்சியின் திருப்திக்காக பலியிடப்பட்ட காசுமீரத்து சகோதரன் அப்சல் குரு
'தேசத்தந்தை' 'மகாத்மா' காந்தி கொலைக் குற்றவாளி பத்தாண்டில் விடுதலை!
நாட்டின் 'தேசத் தந்தை' என சொல்லப்படும் காந்தியை கொன்ற கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கோபால் கோட்சேவுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்த்தால் அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு 10 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டபோது "தேசத்தந்தை கொலைக்குற்றவாளி விடுதலை செய்யப்படுவதா?" என 'கூட்டுமனசாட்சி' கேள்வி எழுப்பவில்லை.... ஆனால் ராஜீவ் வழக்கை பொறுத்தவரை நீதிமன்றமே இது பழிவாங்கும் செயல்தான் பயங்கரவாத செயல் அல்ல என்ற சொன்னபின்னும் கொடுமையான 23 ஆண்டுகள் தண்டனை கழித்து விடுதலை ஆகப்போகும் ஏழுபேரை மீண்டும் மீண்டும் தீவிரவாதிகள், அது பயங்கரவாத செயல் என்று கட்டமைக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன? என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற, அவர்களை காப்பாற்றும் இந்த ஊடகங்களை மக்கள் தூக்கி எரியாமல் இருக்க, இத்தனைக்கும் திரைமறைவில் இருக்கும் மத்திய அரசின் மீது பாயாமல் இருக்க மீண்டும் மீண்டும் இறையாண்மை, தீவிரவாதிகள், பயங்கரவாதம் போன்ற வார்த்தைகள் சிறப்பாக சிலரால் கையாளப்படுகின்றன. காசுமீர் மாநிலத்தின் மீது மத்திய அரசின் அத்துமீறலைக் கண்டித்து கிளர்ந்தெழும் மக்களை எல்லாம் பயங்கரவாதிகள் போல் நாட்டின் பிற பகுதி மக்களிடம் மீண்டும் மீண்டும் சித்தரிப்பதற்காக அப்சல் குருவின் தூக்கு எப்படித் தேவைப்படுகிறதோ, அதைப்போலவே மூவர் தூக்கிற்காக ஒன்றுபட்டுள்ள தமிழக மக்களை பயங்கரவாதத்திற்கு துணை போகிறவர்கள் போல் ஒரு பிம்பத்தை பிற பகுதி மக்களுக்கு காண்பிப்பதற்காக இந்த மூவரின் தூக்கும் ஏழ்வர் விடுதலை மறுப்பும் அடிப்படையில் தேவையாக அமைந்துள்ளது. அதனால் தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மட்டுமன்றி இந்திய தேசிய மாயையை வைத்து மத்தியில் ஆட்சியில் இருந்த, இருக்கும், வரத்துடிக்கும் மூன்று கட்சிகளுமே போட்டி போட்டுக்கொண்டு, "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி தமிழக அரசு அறிவித்த ஏழ்வர் விடுதலை"யை அரசியல் உள்நோக்கம் உடையது என மாநில அரசின் அதிகாரத்தின் மேல் தங்களுக்கிருக்கும் ஆதிக்கத்தை வைத்து அரசியல் செய்கின்றன. மேலும் பத்தாண்டுகால ஊழலாட்சியினால் சரிந்து போயுள்ள தனது பிம்பத்தை இராஜீவ் ஆவி மூலம் சரி செய்து கொள்ள நினைக்கின்றது காங்கிரசு, இந்த அரசியலுக்காகத் தான் "Nation wants to Know" என்று அர்னாப்புகளும், சர்தேசாய்களும் மக்களின் மனதை தூண்டிவிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்...
மூவர் உயிர்காக்க தன்னுயிர் ஈந்த செங்கொடியும், மூன்று தமிழர்களும்...
முகத்தின் சாயமே வெளுத்தபின் எதற்கு உனக்கு முக்காடு?
உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, சமூக நீதிக்கான இந்த தீர்ப்பு "சட்டத்திற்கு புறம்பானது" என நீதிமன்றத்தை அவமதித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவே பொறுமும் இந்திய தேசிய கட்சிகள், ஊடகங்கள் உண்மையிலேயே இனிமேல் செய்யவேண்டியது என்னவென்றால், "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்று மக்களை திசைதிருப்ப அரசியலமைப்பு சட்டத்தில் எழுதி வைத்திருந்தோம், உண்மையில் அது அப்படி இயங்கியதில்லை, ஆகவே அரசியலமைப்புச் சட்டம் இனிமேலும் அப்படி நீடிக்க முடியாது, இந்தியா முழுவதும் ஆட்சி அதிகாரத்தை மக்களிடத்தில் இருந்து பறித்து குவித்து வைத்துள்ள "உயர் குழாமாகிய நாங்களும் சாமானிய மக்களும் சட்டத்தின் முன் சமமல்ல" என்று இதுகாறும் எழுதப்படாமல் அமலில் இருக்கும் மனுநீதியை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தி எழுதுவதுதான். அதாவது "உங்கள் குப்பன் சுப்பன் என்றால் ஒரு நீதி எங்கள் ராஜீவ் என்றால் ஒரு நீதி" என்பதை தெளிவாக எழுதுகின்றோம். இன்று வந்த தீர்ப்பும், சும்மா வந்துவிடவில்லை, இதற்கு பின்னால் அற்புதம் அம்மாளின் 23 ஆண்டு கால போராட்டமும், செங்கொடியின் உயிர் தியாகமும், பல்வேறு தரப்பட்ட மக்களின் போராட்டமும், மாயவேண்டும் மரண தண்டனை என்ற மாந்தனேயமும் அடங்கியுள்ளது. இன்று இந்த தீர்ப்பை தடைப் போட்டு தடுத்திட மத்திய அரசிற்கு எந்த தகுதியுமில்லை, சட்ட வழியுமில்லை.
மாநில அரசை ஒரு அரசு என்று அழைப்பது சரியா?
டெல்லி மக்கள் தங்கள் சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றக் கூட வழியில்லை என்பதை ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள் மூலமாக அறிந்துள்ளார்கள். அதே வரிசையில் தமிழக சட்டசபையின் அதிகாரமும் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாகியுள்ளது. தமிழக அரசால் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் மத்திய அரசின் குப்பைத்தொட்டியில் எரியபட்டுள்ள நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று தமிழக அரசின் மேற்பார்வையில் 23 ஆண்டுகள் தமிழக சிறையில் வாடும் மூவரின் தூக்கை நீக்கி தண்டனையைக் குறைத்து விடுவிக்க உச்சநீதிமன்றம் அரசிற்கு வழிகாட்டிய பின்பும் குறுக்கு வழியில் தடுக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு உறுதுணையாக இந்திய தேசிய கட்சிகளும், ஊடகங்களும் இருக்கின்றன. கூட்டாட்சி(Federal System), இந்திய யூனியன் அரசு(Indian Union Government) என்ற அமைப்புக்கு மாறாக ஒற்றையாட்சி, இந்திய மத்திய அரசு என மாநில அரசின் உரிமைகளை முற்றாக பறிப்பது மாநில மக்களின் நலன்களுக்கு, உரிமைகளுக்கு எதிரானது.
ஒரு மாநில நிர்வாகத்தை அரசு என்று சொல்கிற அளவிற்கு உண்மையில் அதிகாரத்தை அது பெறவில்லை. அல்லது பெற மத்திய அரசு விடுவதில்லை. எல்லா மாநிலங்களின் கூட்டு இறையாண்மையே இந்தியாவின் இறையாண்மை என்ற புரிதல் இங்கில்லை. மத்திய அரசிசிடம் அதிகாரத்தை முழுமையாக குவிக்காமல் மாநிலங்களுக்கான, மாநில சட்டசபைக்கான, மாநில மக்களுக்கான அதிகாரமும், உரிமைக்கான போராட்டம் நடைபெறாமல், எல்லா மாநிலங்களும் மாநில மக்களும் சமமாக நடத்தப்படும் உண்மையான கூட்டாட்சி இங்கு மலர சாத்தியமில்லை. அதுவரை இந்தியா முழுமைக்குமான அதிகாரம் ஒருசாரருக்கே குவிந்து இருக்கும். தமிழகம் போல எல்லா மாநில மக்களின் குரல் வளையும் நசுக்கப்படும். இதைத்தான் மூவர் தூக்கு நீக்கி ஏழ்வர் விடுதலை அறிவித்தபின்னும் சுற்றி நிகழும் அரசியல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
ஸ்நாபக் வினோத்
சேவ் தமிழ்சு இயக்கம்
Monday, February 24, 2014
உமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
சிறுசேரி சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்குள் டிசிஎஸ் ஊழியர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து , இன்று ( 24 பிப் 2014) சிப்காட் நுழைவாயிலில் 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் , செயற்குழு உறுப்பினர் பரிமளா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கடந்த சனிக்கிழமை(22 பிப் 2014) , சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உமா மகேஸ்வரி(23) என்கிற பெண் பணியாளரின் சடலம், அருகில் உள்ள புதரில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13-ஆம் தேதி இரவு பத்து மணியளவில் நிறுவனத்தில் இருந்து கிளம்பியவர் வீடு சென்று சேரவில்லை. ஒரு வாரம் கழித்து அவருடைய சடலம் அலுவலகத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்திலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 'உமா மகேஸ்வரியைக் காணவில்லை' என்ற அவரது தந்தையின் புகார் மீது சரியான விசாரணை நடத்தாத காவல்துறையின் மெத்தனம் கண்டனத்திற்குரியது. இதுவரை , இக்கொலை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இப்படுகொலையைக் கண்டித்தும் , கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் , பெண் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தியும் , சேவ் தமிழ்சு இயக்கம் சிறுசேரியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தது. சிப்காட் தொழிற்பூங்கா நுழைவாயில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் , 600க்கும் அதிகமான தகவல் தொழிற்நுட்பத்துறையினர் கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் தோழர் பரிமளா பேசும் போது,
பெண் என்பதால் அவள் மீது அதிகாரம் செலுத்தலாம்; பெண் உடல் மீது எத்தகைய பாலியல் வன்முறையையும் ஏவலாம் என்ற கருத்தியலுக்கு இச்சமூகம் பழகியிருக்கிறது. அதிலும் இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்கப் படுகிறது. சமூகப் பிரச்சினையாக பார்க்கப்படுவதில்லை.
பெண் உடலை ஒரு போகப் பொருளாக (commercial), ஒரு பாலியல் பண்டமாகத் தான் இச்சமூகம் சித்தரிக்கிறது. இந்த சிந்தனைப் போக்கை பெண்களாகிய நாம் தாம் தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் முற்றாக தகர்க்க முடியும். இப்போராட்டத்தோடு கலைந்து செல்லாமல், தொடர்ந்து இது குறித்து பேசவும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவும் சேவ் தமிழ்சு இயக்கத்தோடு இணைந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் செந்தில் பேசும் பொழுது,
பதினைந்து நாட்களுக்கு முன்பு, உமா மகேஸ்வரி காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தாலும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்பெண் பணிபுரியும் TCS நிறுவனம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காமல், 'அந்த பெண் ஏன் பத்து மணிக்கு கிளம்ப வேண்டும்?' என்ற அலட்சியமான கேள்வியை வேறு முன் வைத்திருக்கிறது. இறுதியில் ஒரு பெற்றோர் தன் மகளின் உடலைக் கூட நல்ல நிலையில் பார்க்க முடியாதபடி, அழுகிப்போக வைத்திருக்கிறது, காவல்துறை மற்றும் நிறுவனத்தின் அலட்சியப்போக்கு.
பெண் என்பதால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பல்வேறு வகையான கொடுமைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பாதுகாப்பின்மை, பாலியல் வன்முறை இவைகளோடு, வேலைத் திறனாய்வு, பதவி உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்ற கூறுகள் வரும் போது, “உங்களுக்கெல்லாம் பாதுகாப்பில்லை. ஷிஃப்ட் நேரம் சரி வராது. வெளிநாடு சென்றால் உங்களால் வேலை செய்ய முடியாது, போக்குவரத்து வசதிகள் ஒத்து வராது” என்று பல்வேறு காரணங்களைக் காட்டி, பெண்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை, வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் மறுக்கின்றன.
இன்று TCS நிறுவனத்தில் உமா மகேஸ்வரிக்கு ஒரு மாற்று தேடி அமர்த்தியிருப்பார்கள். அப்பெண்ணின் வேலைப் பளுவை இன்னொரு பெண் சுமந்து கொண்டிருப்பாள். இதோடு தங்கள் வேலை முடிந்தது என அந்நிறுவனம் கை கழுவி விடக் கூடும். ஆனால் உமா மகேஸ்வரியின் வீட்டில்
அவளுக்கு யார் மாற்று தேடித் தரப் போகிறார்கள் ?
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போது நம்மை ஒரு குழு மனப்பான்மையோடு நினைப்பதும், நமக்கான பிரச்சினைகளைப் பேசவும் முடிந்திருக்கும். மற்ற தொழிற்சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் கூட இது சாத்தியமே. ஆனால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் நாம் தனி நபராக்கப் படுகிறோம். நமக்கான பிரச்சினைகளைப் பேசவோ, நமது உரிமைகளைப் பெற குரல் எழுப்பவோ முடியாத ஒரு சூழல் தான் இப்பெரு நிறுவனங்கள் என்று சொல்லக் கூடிய நம் பணியிடங்களில் நிலவுகிறது. ஏடிஎம் அட்டையும், நவீன ரக அலைபேசி சாதனங்களும் நம் பாதுகாப்பை உறுதி செய்யாது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் நாம் ஒரு அமைப்பாக ஒன்று திரள வேண்டிய அவசியமிருக்கிறது. அது நம் பாதுகாப்பையும், நமது பிரச்சினைகளைப் பேசவும், நமது உரிமைகளை மீட்டெடுக்கவும் ஒரு நல்வாய்ப்பாக அமைய முடியும்.
ஐ.டி ஊழியர்கள் என்றாலே அதிக சம்பளம் பெறுபவர்கள். சுயநலமாக சிந்திப்பவர்கள். சமூகப் பிரச்சினைகளில் தலையிட மாட்டார்கள். அவர்கள் பிரச்சினைகள் பற்றி அவர்களே பேச மாட்டார்கள் என்று ஐ.டி ஊழியர்களைப் பார்த்து வைக்கும் குற்றச்சாட்டை இன்றைய போராட்டத்தின் மூலம் தகர்த்து எறிந்திருக்கிறார்கள். சேவ் தமிழ்சு இயக்கம் இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தாலும், அறுநூற்றுக்கும் அதிகமான ஐ.டி ஊழியர்கள், தங்கள் அடையாள அட்டைகளோடு, தன்னெழுச்சியாக சிப்காட் வாயில் முன்பு குவிந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பல பெண்களின் கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்திருந்தன. இதுவரை முழக்கமிடாத குரல்கள், முதன் முறையாக தம்மைச் சேர்ந்த இளம் மலரொன்றின் இறப்புக்கான நீதி வேண்டி முழக்கமிட்டன. இது ஆரம்பம் மட்டுமே.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பின்வரும் கோரிக்கைகள் தமிழக அரசுக்கும் , தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கும் முன் வைக்கப்பட்டன.
தமிழக அரசுக்கு கோரிக்கைகள்:
1) உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்!
2) சிப்காட் வளாகத்திற்குள் உரிய பாதுகாப்பு தரத்தவறிய சிப்காட் அலுவலர்களை பணியிலிருந்து இடை நீக்கம் செய்.
3) சிப்காட்-டிற்கு செல்லும் வழியில் காவல்துறை சோதனைச் சாவடி அமை. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறை சிப்காட்-டினுள் ரோந்து செல்லவேண்டும், இதனால் சிப்காட்-டை சுற்றியுள்ள கிராம மக்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது.
4) சிப்காட்-டில் இருந்து அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிகளான நாவலூர், சோளிங்கநல்லூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும், சிப்காட்-டைச் சுற்றியுள்ள சாலைகளிலும், இரவு நேரங்களில் முழு வெளிச்சம் கொடுக்கப்பட வேண்டும்.
5) சிப்காட் நிர்வாகத்தின் கட்டுபாட்டின் கீழ், சிப்காட்-வளாகத்திற்கு உள்ளும், வெளியும் செல்லக்கூடிய வகையில் போக்குவரத்து வசதியை உருவாக்கு.
6) சிப்காட் பாதையெங்கும் காணொலிபதிவுக் கருவியை நிறுவு.
7) காவல்துறைக்கும், நிறுவனங்களுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் பெண்ணியவாதிகளும், பல்வேறு தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சமூகப் பணியாற்றும் நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும்.
8) பாலியல் தொந்தரவு தடுப்புக்குழு எல்லா நிறுவனங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும், அப்படி ஒரு குழு இருப்பது ஊழியர்களுக்கு தெரிந்துள்ளதா எனவும் ஆய்வு செய்ய வேண்டும்.
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அவசர தொடர்பு எண்ணை உருவாக்கு
10) நீதிபதி.வர்மா கமிசன் பரிந்துரைத்த மாற்றங்களான, சட்டத்திருத்தத்தையும், விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதையும், காவல்துறை சீரமைப்பையும், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு நடக்கும் மருத்துவ பரிசோதனை முறையை மாற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்து.
11)தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கு மட்டுமின்றி.அப்பகுதி வாழ் மக்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கையும் அகற்ற வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான கோரிக்கைகள்:
1) வெவ்வேறு பணி நேரங்கள் இருப்பதால் நாள் முழுக்க பேருந்து வசதியை வழங்கு
2) பணியாளர்களை வார இறுதியிலும் வேலைக்கு வர நிர்ப்பந்திக்கப்படுவதால் பேருந்து வசதி வார இறுதியிலும் வேண்டும்
3) சுழற்சி (shift) முறையில் வேலை பார்க்காத பெண்களுக்கான வேலை நேரத்தை மாலை 7 மணியோடு நிறுத்து.
4) அவசர பணி காரணமாக இரவு 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடு செய்.
5) அலுவலகத்திற்குள் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாரிக்க உட்குழுக்களை ஏற்படுத்து.
சேவ் தமிழ்சு இயக்கம்
தலைப்புகள் அவசியமற்ற தொகுப்புகள்...
சுதந்திரப்போர்
சூட்சமம்
இரவி பியாஸ்
நதிக்கரை
பகத் சிங்கின் தோழர்கள்
படைத்தவனையே
சோதித்தது
வெடிகுண்டு
பகவதி சரண்!!!
நாளின் மௌனம்
நடக்க மறுத்த
மரணம்!
தண்ணீரில் தகனம்
தவணை முறையில்
அச்சுறுத்தும் அதிகாரம்
அலைகளுக்கு
அர்ப்பணித்தாள்
துர்காதேவி!
தேசத்தையும் காதலித்தவள்
கனன்றது காதல்
கம்பீரமாய்…
குறிப்பு : பகவதி சரணும் அவரது மனைவி துர்கா தேவியும், பகத் சிங்குடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள். பகத் சிங்கும் மற்ற தோழர்களும் சிறையில் இருந்த பொழுது அவர்களை மீட்க பகவதி சரண், துர்கா தேவி மற்றும் ஆசாத் வெடிகுண்டை தயாரித்தனர். அதை ரவி பியாஸ் நதிக்கரையில் பரிசோதிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடிக்க பகவதி சரண் படுகாயமடைந்தார். அப்பொழுது அடக்குமுறை காரணமாக மருத்துவமனை செல்லவும், மருத்துவரை அழைத்து வரவும் அவர்களால் முடியவில்லை. வேறு வழியின்றி அவரை ரவி பியாஸ் நதிகரையிலையே பாதி உயிருடன் தகனம் செய்தனர்.
காதலை விட தன் தேசத்தின் சுதந்திரமே பெரிது என்பதை நிரூபித்தவர் துர்கா தேவி.
-------
2)
பூக்களை மட்டுமல்ல
சறுகையும் கூட
உச்சத்தில்
உட்காரவைத்து
அழகு பார்க்கும்
காற்றின் தவம்
காதல்!
மானுடத்தின்
முதல் வெற்றியே
உன்னை
வணங்குகிறேன்
ஆல்பாவின்
வரிசையில்
மீண்டும்…
மீண்டும்…!
--பாரதிதாசன்
சேவ் தமிழ்சு இயக்கம்
நவீன அனாதையா நாங்கள்?
மார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள டாட்டா கண்சுல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உமா மகேஸ்வரி(23) என்கிற பெண் ஊழியரின் சடலம் அருகில் உள்ள புதரில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் பாலசுப்ரணியம் என்பவரின் மகளான உமா மகேஸ்வரி, கடந்த 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் டி.சி.எஸ்-ல் பணிக்குச் சேர்ந்துள்ளார். மேடவாக்கத்தில் இன்னும் இரண்டு பெண்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.
வழக்கமாக பணி முடித்து இரவு 11 மணிக்கு அலுவலக வாகனம் மூலம் வீட்டிற்குச் செல்பவர், பிப்ரவரி 13ஆம் தேதி அனுமதிப் பெற்று ஒருமணி நேரம் முன்னதாகவே கிளம்பியவர் வீடு சென்று சேரவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி அலுவலகத்திற்கு அருகில் உள்ள புதரில் அழுகிய சடலமாகக் கிடந்துள்ளார்.
செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையில், உமா மகேஸ்வரியின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்ததை அடுத்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. உமா மகேஸ்வரியின் தந்தை பிப்ரவரி 13 ஆம் தேதியே கொடுத்த புகாரின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்காத கேளம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை சிபிசிஐடி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நடைபெற்று வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பணிப் பாதுகாப்பு பற்றி சிந்திக்க வேண்டிய தருணத்தில் உயிர் பாதுகாப்பைப் பற்றி முதலில் சிந்தியுங்கள் என்று சொல்லிச் சென்றுள்ளது உமா மகேஸ்வரியின் மரணம்.
சிப்காட் தொழில்நுட்பப் பூங்காவினுள் நிறுவனத்திற்கு அருகில் இறந்த கிடந்த இந்த நிகழ்விற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ள போகிறார்கள், பணிக்கமர்த்திய நிறுவனமா? தொழில்நுட்பப் பூங்கா நிர்வாகமா? காவல்துறையா? அல்லது தமிழக அரசா?
வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன வழி இருக்கிறது, அதை யார் உறுதி செய்யப் போகிறார்கள். வழமைப் போலவே, இதுவும் இன்னொன்று என நாம் கடந்து செல்லப் போகிறோமா?
நமது பணியிடத்தில் அருகில் அமர்ந்து இருக்கும் தோழனோ,தோழியோ இறந்து போனால் கூட அதைப்பற்றி வெளிப்படையாக பேசும் நெஞ்சுரம் அற்றவர்களாக, மிகவும் நியாயமான உயிர்ப் பாதுகாப்பு வேண்டிக் கூட ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது என்பதை உமா மகேஸ்வரியின் மரணம் உணர்த்தி சென்று இருக்கிறது.
கண்ணீரும் முகநூலில் வெற்றுப் புலம்பல்களும் தீர்வாகாது. நாம் மௌனம் காப்பது கொலைகளை அதிகரிக்குமே அன்றி , தடுத்து நிறுத்தாது.
நாம் பணிபுரியும் நிறுவனங்களின் எல்லைகளை கடந்து , தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களாக நாம் ஒன்றிணைந்து நம்முடைய எதிர்ப்புக் குரலை உரக்க எழுப்பிட வேண்டும். அப்போதுதான் உமா மகேஸ்வரியின் கொலை பற்றிய விசாரணை துரிதபடுத்தப்படும். அத்தோடு பெண் பணியாளர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்தவும் நாம் நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும்.
மற்ற துறைகளில் ஒருவர் இறந்து கிடந்தால், கண்டனமும், அறிக்கையும், போராட்டங்களும் நடைபெறும் போது, நம்முடைய தகவல் தொழில்நுட்பத் துறையில் நடைபெறும் உயிரிழப்புகளும், தற்கொலைகளும் பிறரின் கவனத்தைப் பெறாதது ஏன்?. யார் வேண்டுமானாலும் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் இருக்கும் நவீன அனாதைகளா நாம்?, இறந்து போனால் ஒரு இரங்கல் அல்லது கண்டனம் தெரிவிக்கக் கூட ஆளில்லை நமக்கு.
விவசாயிகள் இறந்து போனாலோ, நெசவாளர்கள் இறந்து போனாலோ கேட்க வராத நீங்கள் ஏன் இப்போது ஒப்பாரி வைக்கிறீர்கள் என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். விவசாயிக்காக விவசாய சங்கங்கள் பேசும், நெசவாளர்களுக்கு அவர்களின் சங்கம் பேசும் ஆனால் எமக்காக பேச நாதியில்லை. அதனாலயே நாங்கள் இன்று பேசுகிறோம், இனியும் பேசுவோம்.
உமா மகேஸ்வரியின் மரணத்திற்குப் பின் இருக்கும் உண்மைகளை கண்டறிவதும், அவரது கொலையில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்டுவதும்தான் உமா மகேஸ்வரிக்கு நாம் செலுத்தும் உண்மையான இரங்கலாக அமையும்.
கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
Friday, February 21, 2014
மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க திருவாரூரில் அணி திரள்வோம்!
தமிழகத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களான கடலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு கீழே நிலக்கரி உள்ளது. அந்த நிலக்கரிப் பாறை இடுக்குகளில் மீத்தேன் வாயு உள்ளது. 2000 ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து இந்த மீத்தேனை உறிஞ்சி எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்னும் தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. முதற் கட்டமாக தஞ்சையில் 12 இடங்களிலும், திருவாரூரில் 38 இடங்களிலும் கிணறுகள் அமைக்கும் வேலைகளைத் தொடங்கி விட்டது கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம்.
நம்மாழ்வாரின் தொடர் பரப்புரையால், ஆபத்தை உணர்ந்த தஞ்சை மாவட்டம் நரசிங்கம்பேட்டை மக்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொடக்கக்கட்ட பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஒரத்தநாடு வட்டம் பாவாஜிக் கோட்டையில் வயல்வெளியில் போடப்பட்டிருந்த அந்நிறுவனம் நட்டகல்லை ஊர் மக்கள் திரண்டு வந்து பிடுங்கி எரிந்தனர். இந்தப் பாதிப்பை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத பகுதிகளில் முதல் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகள் :
1) நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியேற்றிவிட்டு எரிவாயு எடுப்பதால், நிலத்தடி நீர் வறண்டு போகும்.
2) விவசாயம் செய்ய நீர் கிடைக்காது; அதுமட்டுமல்ல, குடிக்க நீர் இறக்குமதி செய்ய வேண்டும்.
3) பூகம்பம், நில அதிர்வு, நிலம் உள்வாங்குதல் ஏற்படும். தஞ்சை பெரிய கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதாகோயில் உள்ளிட்ட புனித தலங்கள் பாதிப்படையும்.
4) கடல்நீர் நமது நிலத்தடியில் உட்புகுந்து அனைத்து நிலத்தடி நீரும் உப்பு நீராகும்.
5) காற்று, நீர், நிலம் ஆகிய அனைத்திலும் இரசாயனம் கலக்கும். இதனால் புற்றுநோய், மூளை பாதிப்பு உட்பட பல புது நோய்கள் உண்டாகும். மீத்தேன் வாயு காற்றில் கலந்தால் மலட்டுத்தனம் உருவாகும்.
6) நாம் நம் வாழ்விடத்தை விட்டு வெளியேறி நாடோடியாக சொந்த நாட்டின் அகதிகளாக சுற்றித் திரிய வேண்டிய நிலை ஏற்படும். தாயகத்தை விட்டு வெளியேறிய இனம் பிற இனங்களிடம் அடிமைப்பட்டு அழிந்து ஒழியும்.
7) பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் பண்பாடு செழித்த காவிரிப் படுகை என்ற தமிழர் தாயகத்திலிருந்து, தமிழர்களை தானாகவே வெளியேற வைத்து, அகதிகளாக அலைய வைத்து, தமிழினத்தை அழிக்க இருக்கிற மீத்தேன் எரிவாயுத் திட்டம் என்பது தமிழின அழிப்பின் ஒரு தொடக்கம்.
எனவே, கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்.22 சனிக்கிழமை அன்று திருவாருரில் மக்கள் திரள் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காவிரிப் படுகையை அழிக்க வரும் மீத்தேன் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்
ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவிரிப் படுகைப் பகுதியில் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்
காவிரிப் படுகைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்க வேண்டும்.
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து பல்வேறு சங்கங்கள், இயக்கங்கள், கட்சிகள், விவசாய அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகளும் பேரணியில் கலந்து கொள்கின்றன.
காலை 9 மணிக்கு திருவாரூர் புதிய தொடர்வண்டி நிலையத்தில் தொடங்கி நகர்மன்ற அலுவலகம் வரை மக்கள் திரள் பேரணி நடைபெற இருக்கின்றது. பேரணி முடியும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நமக்கு உணவிட்ட நிலம், உயிர் கொடுத்த தாய்க்குச் சமம்;
இதில் அந்நியன் கால்படச் சகியோம்!
வாருங்கள் தமிழர்களே…
மண்ணக் காக்க… மக்களைக் காக்க… மீத்தேன் திட்டத்தை விரட்டியடிக்க அணி திரள்வோம்!
ஒருங்கிணைப்பு :
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
8608884534, 814312315, 8903447371, 9443337401
antimethaneproject@gmail.com
fb page – மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு – anti methane project federation
அறியாமையும் அல்ல இருட்டடிப்பும் அல்ல - பசுமை தாயகத்திற்கு பதில்
”இலங்கை-ஐநா தீர்மானம்: சேவ் தமிழ்சு இயக்கத்தின் அறியாமையா? இருட்டடிப்பா? “ என்ற தலைப்பில் பசுமை தாயகம் என்ற
அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த திரு. அருள் அவர்கள் பதிவிட்டிருந்த கட்டுரைக்கு விளக்கம் இது.
’ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடர் - மார்ச் 2014 தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். வரும் மார்ச் மாதத்தை முன்னிட்டு தமிழகம் எத்தகைய முழக்கங்களை முன் வைக்க வேண்டும் என்பதில் ஒரு பொது கருத்தை எட்ட வேண்டும் என்பதே அக்கருத்தரங்கத்தின் நோக்கம். அதற்கென்று எழுதப்பட்ட ஆங்கில செய்தியைக் காட்டித் தான் திரு. அருள் அவர்கள் மேற்குறிப்பிட்ட கட்டுரையை எழுதியுள்ளார். அத்துண்டறிக்கை தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபப்ட்டது. 2009 மே 19 ஆம் தேதி இன அழிப்புப் போர் முற்றுப் பெற்றதிலிருந்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மே 29 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட 10 நாட்களில் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு கோரிக்கைகளை முன் வைத்து தமிழகத்திலும், புலம் பெயர் நாடுகளிலும் போராட்டங்களோ, கோரிக்கைகளோ எழவில்லை.
போர் முடியும் வரை ‘போரை நிறுத்த வேண்டும்’ என்பதே பொதுவில் எல்லோரது கோரிக்கையாகவும் இருந்தது. 2012, 2013 ஆம் ஆண்டுகளில் தான் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை முன்னிட்டு போராட்டங்கள் நடக்கத் தொடங்கின. இதுவே அத்துண்டறிக்கையில் சொல்ல வந்த செய்தி.
எனவே, இத் துண்டறிக்கையில் மே 2009 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் பசுமை தாயகம் என்ற அரசு சாரா நிறுவனம் சார்பில் ஆற்றப்பட்ட உரை பற்றி குறிப்பிடுவது பொருத்தமற்றது என்று கருதுகின்றோம். இதுவே குறிப்பிடாமல் விட்டமைக்கான காரணமே அன்றி அறியாமையோ, இருட்டடிப்போ அல்ல.
//சேவ் தமிழ்சு இயக்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளே - ஈழத்தமிழர் விடயத்திலாவது உங்களது சாதிவெறியை மூட்டைக்கட்டி ஓரமாக வையுங்கள்” என்ற கடைசி வரிகளில் இருந்து அவர் தம் கவலையை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. //
ஒடுக்கப்பட்டோர் பக்கம் நின்று ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் உறுதியாக நிற்கும் ஓர் அமைப்பு எவரது அறியாமை, இருட்டடிப்புகள் குறித்தும் கவலை கொள்ள தேவையில்லை. மற்றபடி, ’சாதிவெறி’ என்று அவர் குறிப்பிட்டது இது வரை, தமிழ்நாட்டுப் பிரச்சனைகளில் எங்கள் இயக்கம் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளைப் பாராட்டி தரப்பட்ட பட்டமாகவே கருதுகின்றோம்.
செந்தில்
ஒருங்கிணைப்பாளர்.
சேவ் தமிழ்சு இயக்கம்
Thursday, February 20, 2014
இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில் போலீஸ் தடியடி - உண்மை அறியும் குழு அறிக்கை
இராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் ஊர்வலத்தில்
போலீஸ் தடியடி
உண்மை அறியும் குழு அறிக்கை
மதுரை,
19 பிப்ரவரி, 2014
“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர். சீருடை அணிந்த அவ் அமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறே ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையாக அனுமதி பெற்றுத் திரண்டிருந்த நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டு, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் நின்றிருந்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு மற்றும் தடியடித் தாக்குதலை நடத்தியதில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் இராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை நாளிதழ்களில் கண்ட நாங்கள், கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து அப் பகுதிக்குச் சென்று பலரையும் சந்தித்தோம்.
1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
2. ஏ. ஜஹாங்கீர் பாஷா, மூத்த வழக்குரைஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்
3. அ..ராஜா, வழக்குரைஞர், விடுதலைச் சட்ட மையம், மதுரை
4. ஏ.முகம்மது யூசுப், வழக்குரைஞர், NCHRO, மதுரை
5. கு.பழனிச்சாமி, சமூக ஆர்வலர், மதுரை
6. எஸ்.முகம்மது அலி ஜின்னா, வழக்குரைஞர், மதுரை
7. ரஜினி, வழக்குரைஞர், PUHR, மதுரை
8. பசுமலை, வழக்குரைஞர், பரமக்குடி
9. மு.மணிகண்டன், வழக்குரைஞர், மதுரை
உண்மை அறியும் குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு
இக்குழுவினர் நேற்று (பிப்ரவரி 18) முழுவதும் மதுரை சரவணா மருத்துவமனை, இராமநாதபுரம் பயோனீர் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் (1) வழக்குரைஞர்கள் மதுரை நஜிமுதீன், அலாவுதீன், கேமரா மேன் முகம்மது அமானுல்லா என்கிற ராஜா, யூசுப், பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர் நஸ்ருதீன், ஓட்டுநர் ஷெரிஃப் என்கிற பிலால், முகம்மது அலிகான், சித்திக், வாலிநோக்கம் ரியாஸ்கான், அப்துல் சமது உள்ளிட்ட சுமார் 20 காயம்பட்டோரையும், (2) சம்பவ இடத்தில் இருந்தவர்களான பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் மாநிலத் தலைவர் இஸ்மாயில், மாவட்ட அளவு நிர்வாகிகளான பரக்கத்துல்லா, நவாஸ்கான் ஆகியோரையும், (3) மார்க்சிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் கலையரசன், குமரய்யா கோவிலருகில் கடை வைத்துள்ள சிலரையும், (4) இராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை ஆகியோரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம். இது தொடர்பான வழக்கைக் காரணம் காட்டி கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை எங்களிடம் பேச மறுத்தபோதிலும், கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் எங்களிடம் விரிவாகப் பேசி விளக்கங்களை அளித்தார்.
சம்பவம்
பாப்புலர் ஃப்ரன்டின் இராமநாதபுரம் மாவட்ட (வடக்கு) தலைவர் எஸ். பரக்கத்துல்லா என்பவர் பிப்ரவரி 17 அன்று நடக்கவிருந்த தங்களின் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி கோரி சென்ற ஜனவரி 17 அன்று விண்ணப்பித்துள்ளார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை முதலில் (பிப்ரவரி13) பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தைத் திடலில் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளார். எனினும் பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் மீண்டும் வேண்டிக் கொண்டபின் பொதுக் கூட்டத்திற்கும் சின்னக்கடை நான்குமுனை சந்திப்பு தொடங்கி ஊர்வலத்திற்கும் பிப்ரவரி 16 அன்று எழுத்து மூலம் அனுமதி அளித்துள்ளார். இராணுவத்தினர் அணிவது போன்ற சீருடை மற்றும் லத்தி முதலான ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது என மேற்படி செயல்முறை ஆணையில் குறிப்பிட்டுள்ளதைக் கண்ட பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் தாங்கள் அணிந்து செல்ல இருந்த சீருடையை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் காட்டி அவ்வாறு இல்லை என்பதை நிறுவி காவல்துறையின் ஒப்புதலைப் பெற்றுள்ளனர். தாங்கள் ஒப்புதல் அளித்ததை கண்காணிப்பாளர் மயில்வாகனனும் ஏற்றுக் கொண்டார். பான்ட் வாசிக்கக் கூடாது என்றோ, அணிவகுப்பு நடத்தக்கூடாது என்றோ அந்த ஆணையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது
காவல்துறையால் தாக்கப்பட்டவர்
சம்பவத்தன்று (பிப்ரவரி 17) மாலை மூன்று மணி வாக்கில் மதுரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் குமரைய்யா கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசல் தொடங்கி சீருடை அணிந்த 300 பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரும், சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் ஊர்வலத்திற்காகக் கூடி இருந்துள்ளனர். கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் சுமார் அறுபது போலீசாரும் நின்றுள்ளனர். முன் வரிசையில் நின்றிருந்த சீருடையினர் பான்ட் வாசிப்புடன் ஊர்வலம் தொடங்க இருந்த நேரத்தில், பான்ட் வாசிக்கக் கூடாது எனவும் அணிவகுப்பாகச் செல்லக் கூடாது எனவும் வெள்ளத்துரை தடுத்துள்ளார். சீருடையுடன் அணிவகுத்து நடக்க பான்ட் இசை அவசியமானது என தலைவர்கள் விளக்கிய பின்னும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதங்களுக்குப் பின், “சரி நாங்கள் பான்ட் வாசிப்புடன் தொடங்குகிறோம். நீங்கள் எங்களைக் கைது செய்து கொள்ளலாம். நாங்கள் அமைதியாகக் கைதாகிறோம்” என தலைவர்கள் சொல்லி ஊர்வலத்தைத் தொடங்கியபோது கல்வீச்சும், கடுமையான தடியடிப் பிரயோகமும் நடந்துள்ளது.
சுமார் 22 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் காயமடைந்தனர். காயம் பட்ட மேலும் பலர் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக சொந்தப் பொறுப்பில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று பொதுக்கூட்டத்தை நடத்த முயன்றபோது கண்காணிப்பாளர் மயில்வாகனன், “ஒரு டீம் கையில் பெட்ரோல் குண்டுகளுடன் நிற்கிறது. பிரச்சினையைத் தவிர்க்க, நீங்கள் எல்லாவற்றையும் ரத்து செய்யுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார். “அப்படி ஆயுதங்களுடன் யாரும் இருந்தால், அவர்களைக் கைது செய்து எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதானே முறை?” என பாப்புலர் ஃப்ரன்டின் மாநிலத் தலைவர் இஸ்மாயில் சொல்லியும் காவல்துறையினர் மேற்கொண்டு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை. மேலும் மோதலையும் பிரச்சினைகளையும் தவிர்க்க வேண்டி ஊர்வலம், பொதுக்கூட்டம் முதலியவற்றை பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் கைவிட்டுக் கலைந்துள்ளனர்.
காவல்துறையால் தாக்கப்பட்டவர்
இன்று பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் மீது, கேணிக்கரை காவல் நிலையத்தில் குற்ற எண்கள் 67, 68, 69 / 2014 ஆகிய மூன்று வழக்குகள், இ.த.ச 147, 148, 149, 186, 294 பி, 353, 332, 323, 324, 506/2, 153 ஏ, 307 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளன.
முரண்கள்
1.கண்காணிப்பாளரும் பிற அதிகாரிகளும் நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிகளில் சீருடை அணியக் கூடாது எனவும் பான்ட் வாசிக்கக் கூடாது எனவும் தாங்கள் தடுத்ததை ஒட்டியே பிரச்சினை தொடங்கியது எனக் கூறியுள்ளனர். வீடியோ பதிவு ஒன்றிலும் துணை கண்காணிப்பாளர் பான்ட் வாசித்துச் செல்லக் கூடாது என்று மட்டுமே கூறுவது பதிவாகியுள்ளது. எனினும் கண்காணிப்பாளர் எங்களிடம் பேசும்போது, “அதெல்லாம் பிரச்சினை இல்லை. குமரைய்யா கோவில் நிறுத்தம் அருகில் ஊர்வலம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, சின்னக்கடை நால் முனை சந்திப்பிலிருந்துதான் ஊர்வலம் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி நெடுஞ்சாலையில ,குமரைய்யா கோவில் நிறுத்தத்தில் கூடி, ஊர்வலத்தைத் தொடங்க அவர்கள் பிடிவாதம் பண்ணியதே பிரச்சினைகளுக்குக் காரணம்” என்றார். பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினரிடம் இது குறித்துக் கேட்டபோது, வழங்கப்பட்ட ஆணையில் அப்படிக் குறிப்பிட்டிருந்தாலும், வாய் மொழியாக குமரைய்யா கோவில் நிறுத்தத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்தே ஊர்வலம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது எனக் கூறினர். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய ஒரு வீடியோ பதிவில் கண்காணிப்பாளர் மயில்வாகனன், “குமரைய்யா கோவில் மற்றும் பள்ளிவாசலிலிருந்து போகலாம் என முந்தாநாள் உங்களுக்குச் சொன்னேன்” என்க் கூறுவதைக் காட்டினர்.
2. இன்னொன்றும் இங்கே கருதத் தக்கது. காவல்துறையினர் ஊர்வலம் தொடங்க அனுமதி அளித்த சின்னக்கடை நால்முனைச் சந்து என்பது முழுக்கவும் முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு பகுதி, இங்கிருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் சுமார் 300 மீட்டர் தொலைவுதான் இருக்கும். இதில் ஊர்வலம் நடத்துவது என்பது அபத்தம் என்பதை விளக்க வேண்டியதில்லை. தவிரவும் முஸ்லிம்கள் தமது நடவடிக்கைகளைத் தாம் வசிக்கும் பகுதிக்குள்ளையே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பொது வெளிகளை அவர்களுக்கு மறுப்பதாகிறது. காவல்துறையின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.
3. பாப்புலர் ஃப்ரன்ட் தலைவர்களும் காவல் அதிகாரிகளும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது திடீரெனக் கல்வீச்சு தொடங்கியுள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த அங்குசாமி என்பவரின் கட்டிடத்தில் இருந்தும், எதிர்ப்புறம் இருந்த நெட் கேஃப் ஒன்றிலிருந்தும் விஷமிகள் சிலரே காவல்துறையினர் மீதும் கூட்டத்தினர் மீதும் கல்வீசினர் எனவும் இவர்கள் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பாப்புலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். காவல் துறையினரும்கூடத் தங்கள் மீது கல் வீசித் தாக்கினர் எனவும் பாப்புலர் ஃப்ரன்டினர் கூறுகின்றனர். கல்வீசிய கட்டிடத்திலிருந்து சிவக்குமார், சரவணன் என்கிற இருவரைத் தாம் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்புவித்ததாகவும் கூறினர். அதில் ஒருவர் கையில் காவி வண்ண பட்டை கட்டியிருந்ததாகவும் கூறினர். ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது பைக்கில் வந்த ஒரு சில இந்துத்துவ சக்திகள் “பாரத் மாதா கி ஜே” என முழக்கம் எழுப்பிச் சென்றதாகவும் கூறினர். ஆனால் இவற்றை கண்காணிப்பாளர் மயில்வாகனன் முற்றிலுமாக மறுத்தார். தம்மிடம் கல் வீசியதாக பாப்புலர் ஃப்ரன்டினரால் ஒப்புவிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றார். அப்படி யாரும் வெளி அமைப்பினர் கல்வீசவே இல்லை என்றார். காவல் துறையினரும்கூட ஊர்வலத்தினர் மீது கல்வீசியது பதிவாகியுள்ளது எனவும், அருகிலிருந்து பார்த்த சிலரும் அதை உறுதிப்படுத்தினர் எனவும் நாங்கள் கூறியபோது அதை விசாரிப்பதாகச் சொன்ன கண்காணிப்பாளர் ஊர்வலத்தினர் காவல்துறை மீது கல் வீசியதில் சுமார் ஏழு காவலர்கள் காயம்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். வேற்று அமைப்பினர் கல் வீசியதற்கு ஆதாரங்களைக் காட்டினால் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். நாங்கள் சந்தித்த முஸ்லிம்கள் அனைவரும் வேற்று அமைப்பினர் அந்தக் கட்டிடத்திலிருந்து கல்வீசினர் என்பதை வலியுறுத்தினர்.
காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் நடந்த கண்டன போராட்டம்.
எமது பார்வைகள்
1. வழங்கப்பட்ட ஆணையில் நால்முனைச் சந்திப்பிலிருந்தே ஊர்வலம் தொடங்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாலும், குமரைய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்கலாம் என கண்காணிப்பாளர் உட்பட்ட அதிகாரிகள் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளது உறுதியாகிறது. அருளரசு என்கிற உளவுத்துறை எஸ்.பி ஒருவரும் கடைசி நிமிடம் வரை, “உங்களுக்குப் பிரச்சினை இல்லை, குமரய்யா கோவில் நிறுத்தம் அருகில் தலைவர்கள் சென்று ஊர்வலத்தைத் தொடங்குங்கள் யாரும் தடுக்கமாட்டார்கள்” என தொலை பேசியில் உறுதி அளித்துள்ளார். இப்படி எழுத்தில் ஒன்றாகவும், வாய்மொழியாக வேறொன்றையும் காவல்துறையினர் கூறி இரட்டை நிலை எடுத்ததே எல்லாப் பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளது. பிரச்சினைக்குப் பின் எழுத்து மூலம் சொல்லப்பட்டதை முன்னிறுத்தி, வாய் மொழியாகக் கொடுத்த அனுமதியை மறுக்கும் நிலையைக் காவல்துறை இப்போது மேற்கொள்கிறது. சம்பவத்தை ஒட்டி அதிகாரிகள் அளித்த பேட்டிகளில் ஊர்வலம் தொடங்கும் இடம் குறித்து பிரச்சினை எழுந்ததாக அவர்கள் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தவிரவும் வாய்மொழி அனுமதியை நம்பி, குமரய்யா கோவில் நிறுத்தத்திலிருந்தே ஊர்வலம் தொடங்குவதாக துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஃப்லெக்ஸ் போர்டுகள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் மூலம் கடந்த ஒரு வாரமாக ஊரெங்கும் பிரச்சாரம் செய்யயப்பட்டுள்ளது. இந்தத் துண்டறிக்கையை வடக்கு மாவட்ட நிர்வாகி பரக்கத்துல்லா கூடுதல் கண்காணிப்பாளரிடம் நேரிலும் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் காவல்துறை எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. மூன்று மணி வாக்கில் கூட்டம் அங்கே கூடியபோதும், இங்கே அனுமதியில்லை எனத் தடுக்கவில்லை. எனினும் இப்போது அதுதான் காரணம் என்கின்றனர். கண்காணிப்பாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் இப்படி நடந்துகொள்வது வருத்ததை அளிக்கிறது.
2. பாப்புலர் ஃப்ரன்ட் அணியினர் மீதான தாக்குதல் கொடூரமாக நடந்துள்ளது. பலரும் தலையிலும், முகத்திலும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலையும் உள்ளி மூக்கும் உடைந்துள்ளன. குறைந்தபட்சம் மூவரின் தோள் பட்டைகள் இறங்கியுள்ளன. ஒருவருக்குக் கால் உடைந்துள்ளது. நஜிமுதீன், அலாவுதீன், யூசுப் முதலான வழக்குரைஞர்களும் ராஜா முகம்மது என்கிற கேமராமேனும் கூடத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். காமிரா பிடுங்கப்பட்டு காலால் நசுக்கி அழிக்கப்பட்டுள்ளது வழக்குரைஞர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஷ்ட்’ எனப் பெயர் பெற்றுள்ள கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, துணைக் கண்காணிப்பாளர் அண்ணாமலை ஆழ்வார், எஸ்.ஐ. கோட்டைசாமி, எஸ்.எஸ்.அய். ஆறுமுகத்தரசன் மற்றும் நான்கு காவலர்கள் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர், இரும்புக் காப்பு பொறுத்தப்பட்ட லத்தி தவிர, இரும்புக் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டதாகத் தாக்கப்பட்டவர்கள் கூறினர். “துலுக்கப் பயல்களே” எனவும் இத்துடன் ஆபாசமான வார்த்தைகளைச் சேர்த்தும் கூவியவண்ணம் அடித்துள்ளனர். நான் வக்கீல் சார் எனக் கூறியவர்களிடம், “வக்கீல்னா பெரிய சு.....?” எனக் கூறி அடித்ததை ஒருவர் கூறிக் கண்கலங்கினார், “பிப்ரவரி 19 தாண்டா உங்களுக்குக் கருப்பு தினம் (வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட நாள்). இப்ப ரண்டு நாள் முன்னாடியே மாட்டிக்கிட்டீங்கடா” எனச் சொல்லித் தான் தாக்கப்பட்டதை மற்றொருவர் கூறினார். கடுமையாகத் தாக்கப்பட்டு, இராமநாதபுரம் மருத்துவமனையிலிருந்து மதுரை மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ள வழக்குரைஞர் நஜிமுதீன், போலீஸ் பக்ருதீன் மீது வெள்ளத்துரை பொய் வழக்குப் போட்டபோது அது குறித்துப் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொண்டவர் என்பதும், அக்பர் சேட் என்பவர் வெள்ளத்துரை மீது தன்னைத் தாக்கியதாகத் தொடுத்துள்ள வழக்கை நடத்துபவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறைலிருந்து விடுதலையாகி திருமணம் செய்து அமைதியாக வாழத் தொடங்கிய போலீஸ் பக்ருதீன் மீது பொய் வழக்குப் போட்டு, அவரை இன்றைய நிலைக்குத் தள்ளியதில் வெள்ளத்துரைக்கு முக்கிய பங்குண்டு என்பது நினைவிற்குரியது.
3.”தற்போது இணக்கமான சூழ்நிலை” இல்லை என ஆணையில் குறிப்பிடும் காவல்துறையினர், சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த ஒரு நிகழ்விற்கு வெறும் 60 பேர்கள் கொண்ட காவற் படையை மட்டுமே நிறுத்தியிருந்தது, அவர்களின் கவனக் குறைவைக் காட்டுகிறது. சுமார் 500 பெண்கள் பங்கேற்ற அப்பேரணிக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்ட காவலர்களைல் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. “ஒரு டீம் பெட்ரோல் குண்டுடன்” இருப்பதாகத் தமக்குத் தகவல் வந்துள்ளதாகக் குறிப்பிட்ட கண்காணிப்பாளர், அப்படியாயின் ஏன் அந்த ‘டீமை’க் கைது செய்து வெடிகுண்டு வழங்குச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் புரியவில்லை.
4.பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலமும் அணிவகுப்பும் தேச ஒற்றுமையை முன்வைத்தும், தங்கள் அமைப்பு தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்குப் போய் காவல்துறை ஏன் இத்தகைய கெடுபிடி காட்டியது என்பது விளங்கவில்லை.
பரிந்துரைகள்
1. எழுத்து மூலம் ஒன்றைச் சொல்வது, வாய்மொழியாக வேறொன்றைச் சொல்வது, உளவுத்துறை மூலம் எழுத்து மூலம் கூறப்பட்டதற்கு மாறாக நடக்க ஊக்குவிப்பது என்கிற காவல்துறை நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. கண்ணீர்ப்புகை, கடுந் தடியடி, இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் எனத் தேசிய அளவில் கவனம் பெற்றுவிட்ட இச்சம்பவத்திற்கு காவல்துறையின் இந்த இரட்டை நிலையே காரணம். எனவே வீடியோ பதிவுகள், உளவுத்துறை அதிகாரி அருளரசுவின் தொலைபேசி உரையாடல், துண்டறிக்கைகள், பழி வாங்கும் நோக்கில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்டது ஆகியவை பணியில் உள்ள நீதிபதி ஒருவரால் விசாரிக்கப்பட வேண்டும்.
2. பழிவாங்கும் நோக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3. காவல்துறையினர் மதத்தைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதை கண்காணிப்பாளரிடம் நாங்கள் குறிப்பிட்டபோது அவர், தாக்குதல் நடக்கும்போது இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புண்டு என்பதுபோல எதிர்வினையாற்றி, எனினும் அதை விசாரிப்பதாகக் கூறினார். காவல்துறை மத்தியில் உள்ள சார்புத் தன்மையையே இது காட்டுகிறது, புகழ் பெற்ற மனித உரிமைப் போராளியும் அறிஞருமான மறைந்த பாலகோபால் அவர்கள் கூறியுள்ளதைப்போல காவல்துறை, நீதித்துறை முதலியன சிறுபான்மையினர் மற்றும் அடித்தள மக்கள் மீது கடுமையாக நடந்துகொள்வதற்கு அவர்கள் செய்ததாகக் கருதப்படும் குற்றச்சாட்டுகளின் மீது இத்துறையினர் கொண்டுள்ள வெறுப்பைக் காட்டிலும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆட்பட்டவர்களின் மீதுள்ள வெறுப்பே காரணமாகிறது. சச்சார் குழு அறிக்கையில் பரிந்துரைத்திருப்பதைப்போல, முஸ்லிம்கள் அதிகமுள்ள இராமநாதபுரம், கோவை போன்ற பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் காவலர்களும், அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.
4. காவல்துறையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, அவர்களது மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும். உடைக்கப்பட்ட காமிராக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
5. இந்துத்துவ அமைப்பினர் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் ஒரு குறிபிட்ட கட்டிடத்திலிருந்து கல்லெறிந்தனர் என முஸ்லிம்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டை எங்களின் ஒரு நாள் விசாரணையில் உறுதி செய்ய இயலவில்லை. எனினும் ஒரு சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் இப்படியான ஒரு ஐயம் உருவாவது நல்லதல்ல. இந்தக் குற்றச்சாட்டை கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊர்வலத்தினரால் பிடித்துக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்டுதல் அவசியம்.
6. கிழக்குக் கடற்கரை ஓரப்பகுதிகளில், குறிப்பாக இராமநாதபுரத்தில் மதக் கலவரம் உருவாகக் கூடிய சூழல் இருப்பது கவலை அளிக்கிறது. இரு சமூக அமைப்புகளும் இது குறித்துப் பொறுப்பாக நடந்துகொள்வதோடு, பிற அரசியல் கட்சிகளும் சமூக இணக்கத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட வேண்டும்.
தொடர்பு :
வழக்குரைஞர் ரஜினி, பிளாட் எண் 50, கே.கே. நகர், மதுரை – 20,
செல்: 9443294892, 9444120582
thanks & regards
b.s.i.gani D.M.E
news media department- tamilnadu
gen-secretary,ramnad district
social democratic party of india(SDPI)
cell : 9655809510
www.sdpitamilnadu.org
நாளை நாமாகக் கூட இருக்கலாம் ?!
வார விடுமுறை நாட்கள் முடிந்து திங்கள் காலை பணிக்குச் சென்ற நம்மிடம், "இனிமேல் உங்களுக்கு இங்கு வேலை இல்லை; ஒன்றரை மாத முழு ஊதியத்தைத் தருகிறோம்; உங்கள் பொருட்களோடு வெளியேறுங்கள்" என்று நம் அலுவலக மேலாளர் சொன்னால் நமக்கு எப்படிப்பட்ட அச்சமும், விரக்தியும் வருமோ, அதே மனவோட்டத்துடன் தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.
அண்மையில் பெங்களூரில் உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினித் தொழில்நுட்பப் பிரிவின் ஊழியர்கள் 40 பேர் பணிக்குச் சென்ற சில மணி நேரத்திலேயே வெளியில் அனுப்பப்பட்ட செய்தி என்னுடைய அலுவலக நண்பர் வாயிலாக தெரிய வந்தது.
சரிந்த தன்னுடைய லாப அளவை ஈடுசெய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஐ.பி.எம் நிறுவனம், 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான ஈடுசெய்யும் திட்டத்தில் முதல் பகுதியை இந்தியாவில் இருந்து தொடங்கியுள்ளது. இதற்காக "வளங்களுக்கான செயல்பாடு" (RESOURCE ACTION) என்ற பெயரில் 40 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆய்வுத் தகவல்களின்படி, தன்னுடைய மனிதவள அளவான 4,34,000 பணியாளர்களில் 13,000 பேர் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் தன்னுடைய லாபத்தை உயர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஐ.பி.எம் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா ? "அப்போல்லோ திட்டம்" (PROJECT APOLLO). மனிதனை நிலவுக்கு அனுப்பியதற்கு அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசாவால் சூட்டப்பட்ட பெயர். தன்னுடைய லாபத்தை வானளாவ உயர்த்தும் ஒரே குறிக்கோளோடு 13000 பணியாளர்களின் வாழ்வாதரதைக் குழி தோண்டி புதைக்கும் திட்டத்தின் பெயரிலேயே தெரிகிறது நிறுவனங்களின் நோக்கம்.
பணி நீக்கங்கள் நடைபெறுவது தகவல் தொழில்நுட்பத் துறை என்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி, வட்டி செலுத்த வேண்டிய பல்வேறு கடன்களும் கழுத்தை இறுக்கக்கூடும்.
இந்தத் தகவலை தாங்கி வந்த வலைத்தளச் செய்திகள், ஒரு முக்கியமான விடயத்தை இந்தியத் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. அதாவது, " இந்த நடவடிக்கை வட அமெரிக்காவில் உள்ள ஐ.பி.எம் நிறுவனத்திலும் பிப்ரவரிக்கு முன் எடுக்கப்படும் என்பதைச் சொன்னவர், ஐ.பி.எம் ஊழியர்களை ஒருங்கிணைத்து சங்கம் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் முதன்மை ஒருங்கிணைப்பாளர் லீ கோனர்ட் என்பவரே". பெருமுதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிலேயே
சங்கம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்பதே அந்தச் செய்தி.
ஆனால் இங்கு, கடந்த அக்டோபர் மாதம் (2013 ஆம் ஆண்டு), கர்நாடக மாநில அரசு தொழிலாளர் நலச் சட்டங்களில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலும் ஐந்து வருடங்களுக்கு விலக்கு அளித்ததை நாம் மறந்துவிடக் கூடாது.
1990-க்குப் பிறகு இந்தியாவில் கால்பதித்த நிறுவனங்களின் நோக்கம் கொழுத்த லாபம் மட்டுமே. அத்தோடு நிற்காத ஐ.பி.எம்-மின் போட்டி நிறுவனங்கள், இழவு வீட்டில் இறந்தவரின் கை, கால்களில் இருக்கும் நகைக் கணக்குப் போடுவது போல, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் நன்றாக வேலை செய்யும் யாரையேனும் குறைந்த சம்பளத்திற்கு பிடித்துவிட முடியுமா? என்று தேடித் திரிகின்றன. போட்டி நிறுவனங்களில் வேலை கிடைத்தால் நல்லதுதானே, நம்முடைய பிரச்சனைத் தீர்ந்துவிடும் என்று நாம் நினைக்கலாம் ஆனால், நாளை அந்த போட்டி நிறுவனமும் லாபக் கணக்கை மட்டுமே பார்க்கும் என்பதே உண்மை. வெளிநாட்டு நிறுவனங்கள்தான் இதுபோன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதில்லை, தங்களுடைய லாபத்திற்கு பங்கம் வரும்போது இந்திய பன்னாட்டு நிறுவனங்களும் இதையே செய்யும்.
தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பிற்கும், சூழலில் உள்ள பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் பற்றி ஊழியர்களான நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. என்னுடைய இந்த கட்டுரையும், அதன் தலைப்பும் எதிர்மறையாக இருப்பது போல் தோன்றலாம் ஆனால், இங்கு நடந்து கொண்டிருப்பவையும் நேர்மறையாக இல்லை என்பதே நிதர்சனம்.
வேலைப் பறிப்பு என்பது தனிமனிதன் சார்ந்த பிரச்சனை இல்லை.ஊழியர் ஒருவர் பணியிலிருந்து நீங்கிச் செல்லும் போது, மூன்று மாதத்திற்கு முன்னதாகவே தலைமையிடம் அறிவிக்க வேண்டும் என்று விதிகளை வைத்துள்ள இதே நிறுவனங்கள்தான், தங்கள் லாபத்திற்காக ஆட்குறைப்பு செய்யும் போது விதிகளை மீறுகின்றன. இவ்வாறான, விதிகள் என்பது நிறுவனங்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பொதுவாகவும், பாகுபாடின்றி இருக்கவும் நாம் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும்.
“புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்!”
படங்கள் : நன்றி BioJobBlog , DNA.
கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
Wednesday, February 19, 2014
செங்கொடி – உள்ளத்தால் பொய்யாது ஒழுகியவள்!
முன் குறிப்பு:
(இது சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்க தமிழின உணர்வாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. மேலும் எல்லோரும் தீக்குளித்து இறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதல்ல.)
மற்றுமொரு நெருக்கடியான நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு தீக்குளிப்பு நடந்துள்ளது. தீக்குளித்தவர் தியாகி ஆகிவிட்டார். 21 வயதே ஆன அவளின் பெயர் தோழர் செங்கொடி.(தோழர் என்று தான் அவள் தன்னை குறிப்பிட்டிருக்கின்றாள்). இருந்தாலும் பலருக்கு மகளாகவும், இளைஞர்களுக்கு தங்கையாகவும் ஆகிவிட்டாள்.
இந்த தீக்குளிப்பிற்குப் பின் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. இன்னொருபுறம் தீக்குளிப்பு சரியா? தவறா? என்ற வாதமும் நடக்கின்றது. ’யாரும் தீக்குளிக்க வேண்டாம்’ என்ற அறிக்கைகள் பறந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தீக்குளிப்புகளுக்கான அரசியல் காரணங்கள் விவாதிக்கப்படாமல் இருப்பது வேறு. ஆனால் யார் இந்த செங்கொடி? ஏன் இது போன்றவர்கள் தீக்குளிக்கின்றார்கள்? அவளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பவையும் விவாதிக்கப்பட வேண்டும்.
செங்கொடி – இதுவரை அவள் மக்களுக்காகவே வாழ்ந்தவள். கொத்தடிமைகளாக வாழ்ந்து வரும் இருளர்களின் வாழ்வுரிமைக்காகப் பாடுபட்டவள். அவள் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரை நிறுத்த வேண்டும் என்று போராடியவள். மருத்துவர் பினாயக் சென் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பேசியவள். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக பறை எடுத்து முழங்கியவள்; திருப்பெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலையில் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அம்பிகாவுக்காகப் போராடியவள். பண்பாட்டைச் சீர்குலைக்கும் ’பாய்ஸ்’ படத்தை எதிர்த்து போராடியவள். இப்படி அவளுடைய பரிமாணங்கள் மிகப் பெரியது. இன்னும் அதிகமாக விரிந்து செல்லக்கூடியது. அவள் தன் 21 வயதுக்குள் சிறைக்கு போன அனுபவம் கொண்டவள். யாரையும் திருப்பி அடிப்பதற்கும் காவல்துறையை எதிர்த்துப் பேசுவதற்கும் பழக்கப்பட்டவள். இந்த சிறு வயதில் அவள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவள் அந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஏறி இறங்கி வந்தவள். அவள் வாழ்ந்தாலும் மக்களுக்காகத் தான் வாழ்ந்திருக்கப் போகின்றாள். அவள் இறந்ததும் மக்களுக்காகவே. எனவே, அவள் வாழ்வு இத்தோடு முடிந்தது என்பது இத்தேசத்திற்கு நேர்ந்திருக்கும் பேரிழப்பே. இந்தளவில் செங்கொடியின் தீக்குளிப்பும் அவளை இழந்ததும் மற்ற தீக்குளிப்புகளில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது.
அவள் நம்மிலிருந்து எப்படி வேறுபட்டவள்? நம்மைப் போலவே அவள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் உலவி வந்தவள். நம்மைப் போலவே பாசம், நட்பு, அன்பு, காதல், தாய்மை என்ற உணர்ச்சிகள் கொண்டவளாகத் தான் இருந்திருக்க வேண்டும். அவளுக்கு விடுதலை உணர்ச்சியும் சேர்ந்தே இருந்தது. அது எல்லாவற்றையும் புறந்தள்ளும் ஆற்றல் கொண்டதும் உண்மை தன்மை கொண்டதுமாக இருந்திருக்கின்றது. நம்மைப் போலவே அவள் பேரணிகளில் பீடுநடை போட்டவள்; பிரச்சாரப் பயணங்களில் பங்கு கொண்டவள்; ஆர்ப்பாட்டங்களில் முழங்கியவள்; ’பேரறிவாளன்,சாந்தன், முருகனைத் தூக்கிலிட விட மாட்டோம்’ என்று நம்மைப் போல் தான் முழக்கம் போட்டாள். செப்டம்பர் 9 என்று அவர்களைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது என்றவுடன் நம்மைப் போல தான் அவளும் பதறியிருப்பாள். ஆனால் அந்த பெருங்கொடுமை நடந்துவிடக் கூடாது என்று அவள் உயிரைக் கொடுத்தாள். அவள் வெறும் வாயளவில் முழக்கங்கள் போடவில்லை. தன் சிந்தனையாலும் , சொல்லாலும் , செயலாலும் அந்த கோரிக்கைகளுக்காக வாழ்ந்திருக்கின்றாள். அதற்காகவே வாழ்வை முடித்துக் கொண்டும் இருக்கின்றாள். அதில் மட்டும் அவள் நம்மைவிட முற்றிலும் மாறுபட்டு நிற்கின்றாள். அவளுக்கு இரட்டை மனநிலை இல்லை. அவள் தன் வாழ்க்கையை ஏற்கெனவே மக்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் உயிரைக் கொடுப்பது குறித்து எந்த சலனமும் அவளுக்கு இருக்கவில்லை. நம்மைப் போல ’இருந்து போராட வேண்டும்’ என்று சொல்லிக் கொள்பவள் அல்ல. அவள் இருந்தவரை போராடித்தான் வாழ்ந்திருக்கின்றாள்.
காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையே கருணாநிதி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார் என்று சொல்லிக் கொள்கிறோமே. மாலை நேர விருந்திற்கு செல்வது போல் பொது கூட்டங்களுக்கு செல்லும் நாம் கருணாநிதியிலிருந்து எப்படி மாறுபட்டவர்கள்?. 60 ஆண்டுகளாக கொள்ளையடித்த சொத்தையும், அரசியல் செல்வாக்கையும், முதல்வர் பதவியையும் இழக்கத் துணியாத கருணாநிதி ஒரு பக்கம். 21 ஆண்டுகளே வாழ்ந்துவிட்டு இத்தோடு தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வோம் என்று உயிரை இழந்த செங்கொடி இன்னொரு பக்கம். இதில் நாம் எந்த பக்கம்? ஏதோ நேரத்தையும் உழைப்பையும் தந்துவிட்டால் போதும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். சமூக அந்தஸ்த்தையும், குடும்ப உறவுகளையும், நமது வாழ்க்கை முறைகளையும் பாதிக்காமல் ஒரு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. எந்த பாதிப்பும் இல்லாமல் என்ன செய்வோமோ அதை செய்வோம் என்று கருதுவது ஆறுதலுக்காக ஆலயம் செல்வதற்கு ஒப்பாகும். அடிப்படையில் இவை எல்லாம் சேதம் அடையும் போது தான் உண்மையான போராட்டத் திசையில் பயணிக்கின்றோம் என்று பொருள் ஆகும். எந்த சேதாரமும் இன்றி இந்தியா போன்ற ஒரு கொடுங்கோல் அரசை எதிர்த்து போராடி நாம் மக்களைக் காத்துவிட முடியாது. இழப்புகள் இன்றி வெற்றிகள் இல்லை. பெரிய அதிகாரங்கள் இல்லாத சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கே ஒரு உயிரைக் கொடுக்க வேண்டியுள்ளதென்றால் ஈழ விடுதலை, தமிழ்நாட்டுத் தேசிய உரிமைகள் எனப்தற்கு எல்லாம் எத்த்னை இழப்புகளைச் சந்திக்க வேண்டி இருக்கும்.
இந்த முறையும் செங்கொடியைப் புதைக்கும் பொழுது நம் மனசாட்சியையும் சேர்த்தே புதைத்துவிட்டு மறுநாளிலிருந்து நம் அன்றாட வாழ்வில் அமுங்கிப் போய்விட்டோம். மீண்டும் ஒரு நெருக்கடி வரும். முதல் ஆளாக நாம் முகநூலில் எழுத தொடங்குவோம். மீண்டும் துண்டறிக்கை, சுவரொட்டி, பிரச்சாரப் பயணம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம், முழக்கங்கள் என்று சூடு பிடிக்கும் அரசியல் களம். பிறகு கையறு நிலையில் தலைவர்களைக் குறை சொல்லிக் கொண்டு எப்படியும், முத்துகுமரன், செங்கொடி போன்றவர்கள் தீக்குளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருக்கப் போகின்றோம். ஏனென்றால் செங்கொடிகள் விடுதலை உணர்ச்சியை எல்லாவற்றிலும் மேலானதாக எண்ணுகின்றார்கள். தன் சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் இத்தேசத்தையும், மக்களையும் நேசிக்கின்றார்கள். நாம்?
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
தோழர்களே! துணிவு கொள்ளுங்கள், சாகத் துணிவு கொள்ளுங்கள். உங்கள் சொந்த வாழ்வு நலத்தையும், மானத்தையும் விட்டுத் தொண் டாற்றத் துணிவு கொள்ளுங்கள். இதுதான் இன்றைய திராவிட வாலிபர் கழக ஆண்டு விழாவில், இனி வெகுகாலம் வாழப்போகும் மக்களாகிய உங்களுக்குச் சாகப்போகும் கிழவனாகிய நான் வைத்துவிட்டு போகும் செல்வமாகும்.
உன் சொந்த மானத்தை விட்டாகிலும், உன் இன ஈனத்தை ஒழிப்பதற்குத் தொண்டு ஆற்று. உன் இனத்தின் இழிவை, ஈனத்தைப் போக்க உன் சொந்த மானத்தையும் பலிகொடு. இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற் றத்தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப்பற் றில்லாத மரம்போல், கோடரிகொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் தானாகவே விழுந்துவிடும்
தன் இனத்திற்கு உண்மையான தொண்டாற்று பவனுக்கு அடையாளம் என்னவென்றால் அத் தொண்டால் ஏற்படும் இன்னலுக்கும், துன்பத்திற் குமே அவனது வாழ்வையும், உடலையும் ஒப்புவித்துவிட்டவனாக இருக்க வேண்டும். இது நான் சொல்வதல்ல, குறள் வாக்கியமாகும்.
- (23.08.1945 அன்று திருச்சி டவுன் ஹாலில், திராவிட வாலிபர்கள் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை ஏற்று பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவு)
செந்தில்
ஒருங்கிணைப்பாளர் - சேவ் தமிழ்சு இயக்கம்
பின் குறிப்பு: இந்த கட்டுரை செங்கொடி தனது உயிரைத் தியாகம் செய்த அன்று எழுதப்பட்டு, கீற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்கின்றோம்...
Tuesday, February 18, 2014
அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகல் நன்மை பயக்குமா?
போலீஸ் அதிகாரம் இல்லை, ஜன்லோக்பால் உட்பட எந்த மசோதாவையும் டெல்லி சட்டசபையில் நிறைவேற்ற முடியாத அமைப்பு, எதற்கும் மத்திய அரசின் ஒப்புதலைக் கேட்கும் நிலை; என மாநகராட்சி மேயர் பதவி அளவிற்கே அதிகாரம் கொண்டது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி சட்டசபை அரசியல் அமைப்பு என்று மக்களுக்கு அம்பலபடுத்தியிருக்கிறார் டெல்லியில் 48 நாட்கள் முதல் அமைச்சராக இருந்து பதவி விலகிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜிரிவால்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கே அதிகாரம் இல்லை என்று மக்களாட்சி தத்துவத்தின் மீது தனது விமர்சனத்தை வைத்ததாலும், மக்களுக்கு அதை அம்பலபடுத்தியதாலும் மீண்டும் போட்டியிடும்போது ஆம் ஆத்மி கட்சி கடந்தமுறை நடந்ததுபோல அல்லாமல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படாமல் தனிப் பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரிய வெற்றி பெறலாம். அல்லது மீண்டும் ஆம் ஆத்மி கட்சி வந்தாலும் மீண்டும் போராடித்தான் ஆக வேண்டும், இந்த அதிகாரமற்ற டெல்லி அரசியல் அமைப்பு வடிவத்தை மாற்ற முடியவாப் போகிறது? என எண்ணி மக்கள் காங்கிரஸ் அல்லது பிஜேபியைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
மக்கள் நினைத்தால் அரசியல் அமைப்பை மாற்ற முடியும்!
மக்கள் நினைத்தால் டெல்லியின் சட்டசபை அரசியல் அமைப்பு வடிவத்தை மாற்ற முடியும், குறைந்தபட்சம் மற்ற மாநில சட்டசபை அளவிற்காவாவது அதிகாரம் பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தாவிடில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களே கூட கட்சிக்கு டெல்லியில் வேலை செய்வார்களா என்பது ஐயமே.
டெல்லி அளவிற்கு இல்லையென்றாலும், போலீஸ் அதிகாரம் போன்ற முக்கிய அதிகாரங்கள் பெற்றிருக்கிறது பிற மாநில சட்டசபை அரசியல் அமைப்பு. ஆனாலும் மாநில மக்களின் நலன்களை பாதிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது; வெளியுறவு போன்ற நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் எந்த அதிகாரமும் கிடையாது; ஆக குறுகிய அதிகார வரம்பு கொண்ட மாநில சட்டசபைக்கும் அரசியல் அமைப்பு வடிவ மாற்றம் என்பதும் தேவையே. 'மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற மாநில உரிமையையும் மாநில மக்களின் நலன்களையும் வலியுறுத்தி மக்களிடம் வாக்குகளைப்பெற்று தமிழ்நாடு மாநில சட்டசபையில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது திமுக கட்சி. இந்திய துணைக்கண்டத்தில் ஆட்சியைப் பிடித்த முதல் மாநில கட்சி திமுக தான். சில அமைச்சர் பதவிகளுக்காக மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக கைவிட்டதை இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு எதிலும் அன்னிய முதலீடு என நாட்டை, நாட்டின் வளங்களை வெளிநாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்கள் சூரையாட அனுமதிக்கும், மாநில மக்களின் முழு அதிகாரத்தையும் தன்னுள் குவித்து வைத்துக்கொண்டு மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க மறுக்கும் மத்திய அரசியல் அமைப்பு வடிவ மாற்றமும் அவசியம் என்பதை இத்துடன் இணைத்தே பார்க்க வேண்டும்.
மக்களுக்கு மாற்று தேவை, அதே நேரத்தில் தீர்வும் தேவை!
ஜன்லோக்பால், போலீஸ் அதிகாரம் இவைகளையும் தாண்டி மக்களின் அடிப்படை பிரச்சினைகளான தண்ணீர், மின்சாரம், மருத்துவம், கல்வி இவற்றில் ஆம் ஆத்மி கட்சி தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். டெல்லி தாண்டினால் சாதி, மத வேறுபாடுகள், கல்வி வேலைகளில் இடஒதுக்கீடு, மாநிலங்களிடையே நீர் பங்கீடு, மீனவர்கள்-விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்சனைகள் என நாட்டில்லுள்ள எல்லா மாநில மக்களுக்கும் அடிப்படை பிரச்சனைகள் தாண்டி எண்ணற்ற பிரச்சனைகள். தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என அண்டை மாநிலங்களுடன் நீர் பங்கீடு பிரச்சனை, இலங்கை ராணுவத்தால் நாள்தோறும் பிரச்சனைகளை சந்திக்கும் மீனவர் பிரச்ச்னை, மக்களின் எதிர்ப்பை மீறி மீனவர்கள்-விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ருசிய-அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்கள், டெல்டா மாவட்ட விவசாயத்தை அழிக்கும் மீத்தேன் திட்டம், கொங்கு மண்டல விவசாயத்தை கெடுக்க வரும் கெயில் எரிவாயு குழாய் பதிப்புத் திட்டம், நாகை மாவட்டத்தில் மக்களின் வாழ்வை அழித்து சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்போகும் 12 அனல்மின் நிலையத் திட்டங்கள், சீரற்ற தொழில்துறை வளர்ச்சி, விவசாய உற்பத்தியில் தேக்கம் என பல்வேறு பிரச்சனைகள். இவைகள் எல்லாவற்றிற்கும் ஆம் ஆத்மி கட்சியிடம் கொள்கை முடிவு உள்ளதா? மக்களுக்கு மாற்று தேவை, அதே நேரத்தில் அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வும் தேவை...
சனநாயகத்தின் அடிப்படையும் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வும்!
'மக்களாட்சியில் அதிகாரமிக்கவர்கள் மக்களே' என்ற சனநாயக அடிப்படையை மக்களுக்கு உணர்த்தி மக்களுக்கு முதலில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்; அதோடு அவர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கும் தீர்வாக தனது கொள்கையை முன்வைத்தால் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் தொடர்ந்து இருப்பார்கள். அது மற்ற மாநில மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
சில இந்திய அளவிலான ஊடகங்களின் ஆதரவு, 'நாட்டின் நலம்(?) விரும்பும்' சில கார்பரேட் நிறுவனங்களின் முன்னாள் செயல்அதிகாரிகளின் பலம், ஊழல் எதிர்ப்பு கொள்கை, ஜன்லோக்பால் திட்டம், அதிகாரமற்ற டெல்லி சட்டசபையின் 48 நாட்கள் போராட்ட ஆட்சி அனுபவம் இவைகள் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு அடுத்த மாற்று என கருத வைக்குமா? மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கிற கொள்கை முடிவும், உகாண்டா பெண்கள் மீது அத்துமீறல்களை கட்டவிழ்த்த சட்ட அமைச்சரைத் தாங்கிப் பிடித்தது போன்ற தவறுகளை அவர்கள் களைவதும், இதுவரை அதிகாரக் கனியின் சுவையை அறிந்திராத தாழ்த்தப்பட்டவர்கள்-சிறுபான்மையினர்-மீனவர்கள்-பெண்கள்-மாற்றுப் பாலினர்-மாற்றுத் திறனாளிகள் என 'கடைக்கோடி மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும்' என்ற சனநாயக நோக்கமும் இல்லையென்றால் அது எந்த புனிதக் கட்சியானாலும், மக்களிடம் ஓட்டு மட்டும் பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் பகல் கொள்ளை அடிக்கும் மற்ற கட்சிகளுக்கு இணையானதே! அதேவேளையில் சரியான கொள்கையுள்ள மாற்றை மக்கள் ஆதரிக்கவும் தயாராகவே உள்ளார்கள். உண்மையில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்நாபக் வினோத்.
தனியார்துறையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு
"தனியார்மயமும், தனியார் துறையும், தலித்துகளின் பிரச்சனையும்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 15 அன்று பெங்களூரில் மார்க்சிஸ்டு கம்யூனிசுட்டு கட்சியினால் நடத்தப்பட்டது, இந்த கருத்தரங்கிற்கான ஒருங்கிணைப்பு குழுவில் சேவ் தமிழ்சு இயக்கத்தின் பெங்களூர் கிளையும் பங்குகொண்டிருந்தது. இந்த கருத்தரங்கு முழுவதும் தனியார்துறையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடப்பங்கீடு தொடர்பானதாகவே இருந்தது. இக்கருத்தரங்கில் நானூற்றுக்கதிமானோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் தோழர்களால் எழுச்சி பாடல்கள் இசைக்கப்பட கருத்தரங்கம் தொடங்கியது. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட இந்திய சமூக அறிவியல் மையத்தின் தலைமை நிர்வாகியும், பொருளாதார நிபுணருமான, முனைவர், சுகாதோ தோரட் முதன்மை உரையாற்றினார். அவரின் உரைவீச்சு பின்வருமாறு...
ஒரு சிறிய வரலாற்றுச் சுருக்கம்:
1990களில் இந்திய அரசு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது, பாராளுமன்றத்தில் அப்போதைய நிதியமைச்சர் தனியார்மயக்கொள்கையை அடிப்படையாக வைத்து முதல் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார், இதைத் தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை, தனியார்மயம் தான் எல்லாவற்றிற்கும் மாற்று என சொல்லப்பட்டது, . அதற்கடுத்த நாள் சில அமைப்புகள் சேர்ந்து மாற்று வரவு-செலவு அறிக்கையைத் (தனியார்மயக் கொள்கைக்கு மாற்று கொள்கையின் அடிப்படையில்)) தாக்கல் செய்தன, அவர்கள் சொல்வது போல தனியார்மயம் தான் ஒரே தீர்வு என்பது பொய், மாற்றுக்கான வாய்ப்பு(வேறு கொள்கைகளும்) இருக்கின்றது என்பதை இது நமக்கு தெரிவிக்கின்றது, 1994ல் இந்த மாற்று வரவு -செலவு அறிக்கை தயாரிக்கும் குழுவில் நானும் கலந்து கொண்டேன்.அதே 1994ஆம் ஆண்டு நடந்த ஒரு கருத்தரங்கில் தனியார்மயக் கொள்கைகளினால் வேலைவாய்ப்பு எப்படி குறையும் என்றும், இது எப்படி நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டு கொள்கையைப் பாதிக்கும் என்றும் நான் பேசினேன், இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். அன்றிலிருந்து(1994) 2008 வரை தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் நடந்த வண்ணமே இருந்தன. 2008ல் சமூகநலத்துறை அமைச்சர் மீரா குமார் தனியார் துறையில் தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கினார், இது பின்னர் வர்த்தக அமைச்சரான ஆனந்த் சர்மாவினால் முன்னெடுக்கப்பட்டது, அப்பொழுது மத்திய அரசு என்னை அணுகி இரண்டு ஆய்வுகளை நடத்தக் கோரியது, முதலாய்வு 13 நாடுகளில் அமலில் இருக்கும் இடஒதுக்கீட்டு கொள்கைகளைப் பற்றியதாகவும், இரண்டாவது ஆய்வு அரசு தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்து வரும் சலுகைகளைப் பற்றியதாகவும் இருந்தது, பின்னர் வழமை போல இந்த ஆய்வு முடிவுகள் பரணுக்கு சென்று விட்டன. இதன் பின்னர் நாங்கள் அதுவரை செய்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து "தனியார் துறையில் இடஒதுக்கீடு" தொடர்பாக ஒரு நூலாக வெளியிட்டோம் என தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர்பான ஒரு சிறிய வரலாற்று சுருக்கத்தை கூறினார்.
கம்யூனிசமும், இடஒதுக்கீடும்..
கம்யூனிசம் அடித்தளம், மேல் தளம் என்ற தளங்களாக சமூகத்தை பிரிக்கின்றது, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு அடித்தளமும், பொருளாதாரம் சாராத மற்றவை எல்லாம் மேல் தளத்திலும் உள்ளன, இந்த மேல் தளத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு சாதியே செயல்படுகின்றது. 1920ல் அம்பேத்கர் முதன்முறையாகத் தொடங்கியது சுயேட்சை தொழிலாளர் கட்சியாகும், பின்னர் (1920 லிருந்து 1937 வரை) அம்பேத்கர் கம்யூனிசுட்டுகளுடனான ஒரு தொடர் விவாதத்தில் ஈடுபடத்தொடங்கினார். சாதியம் தொடர்பாக அதுவரை தத்துவ கோட்பாடு இல்லாதிருந்தது. அம்பேத்கர் "சாதியை ஒழிப்பது எப்படி"(Annihilation of caste) நூல்(முதலில் அம்பேத்கர் பேசிய இந்த உரை பின்னர் நூலாக வெளியிடப்பட்டது) அந்த தத்துவ கோட்பாட்டு அடித்தளத்தை வழங்கியது. சாதி ஒரே நேரத்தில் கருத்தியல், பொருளியல் தளங்களில் இங்கு செயல்பட்டு வருகின்றது என்பதை அந்நூல் எடுத்தியம்புகின்றது, அதுமட்டுமின்றி அந்நூல் நீங்கள் இங்கு எங்கு திரும்பினாலும் சாதிப்பூதம் தான் உங்கள் முன்னால் நிற்கும், அதற்கு பதில் சொல்லாமல் உங்களால் இங்கு எந்த மாற்றமும் செய்யமுடியாது என இந்திய சமூக நிலையை தெளிவாக எடுத்தியம்புகின்றது. இது, இடஒதுக்கீடு ஏன் தேவை என்ற அடித்தளத்தை கம்யூனிசுட்டுகளுக்கு வழங்குகின்றது.
இன்றைய நிலை:
இன்றைய நிலையைப் பார்ப்பதற்கு முன்னர், இதற்கு(1947க்கு) முன்னால் இருந்த நிலைமையை பார்த்துவிடுவோம்...
ஏழைகள் என்ற நிலையில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், உண்மை நிலையில் (சமூக யதார்த்தத்தில்) இருவரும் ஒரே நிலையில் இல்லை. 1901லிருந்து 1947 வரை பஞ்சாப் மாகாணத்தில் தலித்துகளுக்கு நிலங்களை வாங்கும் உரிமையில்லை என்பது சட்டபூர்வமாக இருந்தது. வெறும் 46 ஆண்டு அமலில் இருந்த சட்டத்தின் விளைவு இன்று வரை அங்கு உணரப்படுகின்றது. ஜாட்களிடமே பெரும்பான்மை நிலம் உள்ளது.2010ல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 95% தலித் மக்கள் சொந்த நிலமில்லாமல் இருக்கிறார்கள். அதே போல நூற்றாண்டுகளுக்கு மேலாக இங்கிருந்த சமூகப்புறக்கணிப்பின் தொடர்ச்சியே இன்றைய தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மை நிலைக்கு காரணம் என்பதும், நிலப்பிரத்துவமுறையல்ல என்பதும் உங்களுக்கு புரியவேண்டும். அதே போல இங்கு ஒரு தலித் கடையைத் தொடங்கினால் அவனிடம் சென்று பொருட்களை வாங்காமல், புறக்கணித்து இறுதியில் கடையை மூடும் படி செய்துவிடுகின்றனர், ஆனால் அதே பொருளாதார நிலைமையில் உள்ள உயர்த்தப்பட்ட சாதிக்காரன் கடையைத் தொடங்கினால், எல்லோரும் சென்று அங்கு பொருட்கள் வாங்குவதன் மூலம் அந்த கடை தொடர்ந்து நடைபெறச் செய்கின்றனர். இதே அநீதி தான் இன்று ஹரியானாவில் வால்மீகி பெண்களுக்கும் நடைபெற்று வருகின்றது. அவர்களுக்கு அரசு மாடுகளை வழங்கியுள்ளது, அவர்களிடமிருந்து பாலை கூட்டுறவு சங்கங்கள் வாங்கக்கூடாது என ஜாட் சாதியினரால் மிரட்டப்பட்டு, இறுதியில் அவர்கள் மாட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதே போல இங்கு தொழிலாளர் வர்க்கமும் சாதி ரீதியாக பிரிந்தே கிடக்கின்றது. ஒற்றுமை, ஐக்கியம், பின்னாள் பார்த்துக்கொள்ளலாம் போன்ற வார்த்தைகள் தலித்களுக்குப் போதாது. அவர்களின் பிரச்சனையைப் பற்றி இங்கு பேசாமல் ஐக்கியம் சாத்தியமில்லை என்றார்.
திரு. சுகாதோ தோரட்
தனியார் துறையும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான அதன் வாதங்களும்...
இங்கே நலிவடைந்த பிரிவினர் என்பது ஒற்றை அர்த்தத்தில் இல்லை, இரண்டு சமூகமாக பிரிந்து கிடக்கின்றனர், வெறும் சமூக நலத்திட்டங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினர் முன்னேற உதவாது, தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு போன்ற பாதுகாப்பான தனித்த கொள்கைத்திட்டங்கள் இங்கு தேவை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என கேட்கும் பொழுது அவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைக்கின்றனர்.
1) இங்கு சாதிரீதியிலானப் பாகுபாடுகள் நடப்பதில்லை, தகுதி, திறமையின் அடிப்படையிலேயே எல்லாம் நடக்கின்றன.
2) தலித் ஏழையும், உயர்சாதி ஏழையும் ஒரே நிலைமையில்தான் வாடுகின்றனர். எனவே, பொருளாதார அடிப்படையிலேயே ஒதுக்கீடுகள் இருக்க வேண்டும்.
இந்த வாதங்களை கவனமாக பார்க்க வேண்டும், தனியார் துறை என்னதான் சாதிரீதியிலானப் பாகுபாடுகள் நடப்பதில்லை என்று கூறினாலும் யதார்த்தம் வேறு விதமாக உள்ளது. 2010ல் இந்தியாவில் உள்ள 1000 பெரிய (80விழுக்காடு வணிகத்தை கட்டுபடுத்தும்) நிறுவனங்களில் முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்ற ஆய்வு எடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 9052 பேரில் 8204 பேர் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்(அதாவது 92.7%, இதில் பிராமணர்கள் 47%, வைசியர்கள் 45.7%), 345 பேர் பிற்படுத்தப்பட்ட சாதியையும் (3.8%), 319பேர்(3.5%) தாழ்த்தப்பட்ட, பழங்குடி சாதியைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சாதியைப் பார்க்காமல் தான் நாங்கள் செயல்படுகின்றோம் என்ற அவர்களின் வாதம் பொய் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. அடுத்து ஒரு ஆய்வு எங்கள் தலைமையில் நடத்தப்பட்டது. நாளிதழ்களில் வெளியாகும் வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கு நாங்கள் ஒரே தகுதி, திறமை கொண்ட உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரின் பெயர்களில் விண்ணப்பங்கள் அனுப்பினோம். ஒரே தகுதி கொண்டிருந்தாலும், நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விகிதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35% குறைவாகவும், சிறுபான்மையினருக்கு 65% குறைவாகவும் இருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்தது. அதாவது தகுதி,திறமையின் அடிப்படையிலல்லாமல் சாதியின் அடிப்படையிலேயே தனியார் துறையும் செயல்பட்டுவருகின்றது. (இந்த ஆய்வுத் தகவல்கள் தோரட்டின் - Blocked by Caste - Economic Discrimination In Modern India என்ற நூலில் விரிவாக உள்ளது). இதனால் இங்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடுப் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தனியார் துறையிலும் தேவைப்படுகின்றது. அதே போல வேலைக்கு ஆட்களை எடுக்கும் முறையிலும் மூன்று புதிய முறைகளை தனியார்துறை பின்பற்றுகின்றது.
1) கல்லூரி வளாகத் தேர்வு (Campus interview)
2) இணையதளங்களில் அழைப்பு கொடுத்தல்
3) சில மனிதவள அலுவலகம் மூலம் (HR Agency)
இப்படி வேலைக்கு ஆள் எடுக்கும் முறையானது வெளிப்படைத்தன்மையில்லாமல் இருக்கின்றது. இது மாற்றப்பட வேண்டும். இங்கு சமூகத்தின் எல்லா தளங்களிலும் சாதி அடிப்படையில் புறக்கணிப்பு நடைபெறுகின்றது. அது வெறுமனே நடப்பதில்லை. இங்குள்ள ஒவ்வொருவரின் இரத்தத்திலும் சாதி புறக்கணிப்பு ஊறியுள்ளது(It is not just Discrimination, Here Discrimination Induced) என்றார்.
அடுத்து சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரான தேவனூர் மகாதேவன் பேசும் பொழுது சில முக்கியமான புள்ளிவிவரங்களைக் கூறினார். கர்நாடக வீட்டு வசதி வாரியம் இதுவரை 40,000த்திற்குமதிகமான வீடுகளை பொதுமக்களுக்காக கட்டிகொடுத்ததில் வெறும் 400 வீடுகள் மட்டுமே தலித் மக்களுக்கு கிடைத்துள்ளது, அதே போல கர்நாடக சிறு தொழில் வளர்ச்சி ஆணையம் இதுவரை தொடங்கியுள்ள 60000 தொழில்களில், 350 மட்டுமே தலித்துகளுக்கு கிடைத்துள்ளது என பகிர்ந்தார்.
மாநாட்டு மலர் வெளியீடு, வலமிருந்து இடம்- திரு.மாதேஸ்வரன். தோழர்.சிறீராம், திரு.தோரட், தோழர்.தேவனூர் மகா தேவய்யா...
அடுத்து பொருளாதாரத்துறை பேராசிரியர் மாதேஸ்வரன் பேசும்பொழுது, தமிழ்நாட்டில் தனியார்துறையில் 18% தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர்(மொத்த மக்கள் தொகை 20%), இதே கர்நாடகத்தில் வெறும் 9%(மொத்த மக்கள் தொகை 24%) உள்ளனர். அதே போல அவரது அண்மைய ஆய்வு ஒன்றில் 30% சாதிய புறக்கணிப்பு தனியார் துறையிலும், 10% சாதியப்புறக்கணிப்பு பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெற்றுவருகின்றது எனக் கூறினார். 60 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வரும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே 10% சாதிய புறக்கணிப்பு நடந்துவருகின்றது என்பது இங்கே சாதி எந்த அளவு பரவியுள்ளது என்பதையே காட்டுகின்றது, இதில் இடஒதுக்கீடே இல்லாத தனியார்துறையில் சாதிப்புறக்கணிப்பே இல்லை என்பது பொய்யே எனக்கூறினார்.
அடுத்து மார்க்சிஸ்டு கட்சியின் கர்நாடகாவிற்கான மையக்குழு உறுப்பினர் சிறீராம் பேசும்பொழுது, உலகில் 1% பேர் மொத்தமுள்ள சொத்தில் 80% கொண்டுள்ளனர், அதே போல இங்கே இந்தியாவில் 20% மக்களிடம் 80% நிலங்கள் உள்ளன, மீதமுள்ள 80% மக்களிடம் 20% நிலமே உள்ளது, தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களாகவே உள்ளனர். 1950ல் அம்பேத்கர் அவர்கள் இங்கு சமூகப் பொருளாதார சமத்துவமின்மை நீடித்துவருகின்றது எனக்கூறினார். இன்று 2014லும் இதே நிலைதான் உள்ளது. அம்பேத்கரைப் பின்பற்றுவது என்பது அவரது புகைப்படத்தைத் தொழுவதும்,அவரது பிறந்த தினத்திற்கு விடுமுறை கோருவதமன்று, அவரது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பணிகளைச் செய்வதும், அவரது கொள்கைகளை வளர்த்தெடுப்பதுவுமேயாகும். அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டது எனவும், இங்கு அனைவருக்குமான வளர்ச்சி (Inclusive Growth) என்ற பதம் அடிக்கடி அரசால் பயன்படுத்தப்படுகின்றது, எப்பொழுது இங்குள்ள தாழ்த்தப்பட்ட,பழங்குடி, சிறுபான்மையின மக்களும் வளர்கின்றார்களோ அப்பொழுது தான் அது உண்மையான அனைவருக்குமான வளர்ச்சியாகும்,அதுவரை அது வெறும் பதமே என அவர் கூறினார். தோழர்.சிறீராமின் உரையுடன் காலை அமர்வு முடிவடைந்தது.
நற்றமிழன்.ப
Subscribe to:
Posts (Atom)