Monday, August 19, 2013

மக்களின் போராட்டக்களங்கள் நான்கு! இலக்கு ஒன்றே!!



தமிழகத்தில் சமூக, அரசியல் தளங்களில் மக்கள் உரிமைகளுக்கான பல்வேறு போராட்டங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தீவிரமாக நடந்து வந்திருக்கின்றன.பொருளாதார அடிப்படையிலான ஏகாதிபத்தியம் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டங்களான சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு எதிர்ப்புப் போராட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் போராட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்க்கும் போராட்டம் மற்றும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என அரசுகளின் உதவியோடு தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களை எதிர்த்து பாதிக்கப்படும் மக்கள் போராடி வருகின்றனர். இந்தத் திட்டங்கள் அனைத்துமே இந்திய அரசின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு தமிழக மக்கள் மீது திணிக்கப்படுபவையே. இவ்வாறு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடக்குமுறையை ஏவிக் கொண்டு வரப்படும் இந்தத் திட்டங்களால் மக்களுக்கு இம்மியளவும் பயனில்லை மாறாக தமிழக மக்களின் வாழ்வாதராத்தை அழித்தொழிப்பதே இத்திட்டங்களிடையிலான ஒற்றுமை.



சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு என்பது நம்முடைய அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் சந்தையை வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடுவது ஆகும். உள்ளூர் வணிகர்களின் வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது இத்திட்டம். உற்பத்தியாளர்களுக்கும் , நுகர்வோருக்கும் இடையே உள்ள இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்பதே இத்திட்டத்திற்கு சொல்லப்படும் காரணம்.ஆனால், இத்திட்டத்தினால் முதலில் பாதிக்கப்படப்போவது நம்முடைய வீடுகளுக்கு காய்கறிகளை சுமந்து வந்து விற்கும் அடித்தட்டுப் பெண்களும், நமக்கு கொசுறுக்கு கருவேப்பிலைத் தரும் சிறு வணிகர்களும்தான். இத்தோடு நுகர்வுப் பொருட்களின் விலைவாசி குறையும் என்றொரு பிம்பம் அதிகாரவர்க்கத்தால் இத்திட்டத்திற்கு ஆதரவாக கட்டமைக்கப்படுகிறது ஆனால், லாபவெறி கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் சந்தையை கைப்பற்றச் சொல்லும் கட்டுக்கதையே இது. உதாரணமாக, வால்மார்ட் நிறுவனம் இந்த திட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றுவதற்காக தோராயமாக 100 கோடி ரூபாயை கையூட்டாக கொடுத்துள்ளது.நுகர்வோருக்கு குறைவான விலை கொடுப்பதாகக் கூறி தங்களது விற்பனையை வட்டத்தைப் பெருக்கிக் கொள்வதும் பிற்பாடு தங்களது லாபவெறிக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வதும் நடக்கும். உற்பத்தியாளர்களையும், விவசாயிகளையும் பொறுத்த வரை அவர்களுக்கான சரியான விலை கொடுக்காமல், அவர்களது உற்பத்திமுறையையே மாற்றவும் நிர்பந்திக்கப்படுவார்கள்.





1990-க்குப் பிறகு நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி என்பது வேலையில்லாத வளர்ச்சி என்று அரசாங்க புள்ளிவிபரங்களே தெரிவிக்கும் நிலையில், இந்தத் திட்டத்தினால் வேலை வாய்ப்பு உருவாகும் என்பது ஒரு கானல்நீர். மாறாக சிறு, குறு வணிகர்களின் தொழில்களை நசுக்கி அவர்களை நடுத்தெருவில் நிறுத்தும். இந்திய அளவில் 4.4 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பும், 2 லட்சம் கோடி ரூபாய் அளவு விற்பனை உள்ள சந்தையை தன் சொந்த மக்களிடம் இருந்து பிடுங்கி சில பெருமுதலாளிகளுக்கு கையளிக்கும் திட்டம்தான் இது. "பணம் மரத்தில் காய்க்காது" என்று நாம் எவருமே அறிந்திராத பொருளாதாரக் கோட்பாட்டை உதிர்த்தார் பொருளாதார மேதையும்,இந்தியப் பிரதமருமான மன்மோகன் சிங். உண்மைதான்! நம் மரங்களைப் நம்மிடமிருந்து பிடுங்கி அதன் கனிகளையும், அதனை விற்பனை செய்து லாபமீட்டும் உரிமையையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்தத் திட்டத்தை நாம் அனுமதிக்கவே கூடாது.இதற்கான எதிர்ப்பு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்தும்,பொருளாதார மேதைகளிடம் இருந்தும்,சாமானிய மக்களிடம் இருந்து எழுந்துக் கொண்டிருப்பதை அரசுகள் சிறிதும் சட்டை செய்யவே இல்லை.



தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்வதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் 138 கிராமங்களில் விவசாய நிலங்களினூடே குழாய் பதிக்கும் பணிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறித் தொடங்கப்பட்டன . இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் போராடி வரும் விவசாய மக்களின் மீது திருப்பூர், சென்னிமலை, ஊத்துக்குளி, ஈரோடு போன்ற இடங்களில் காவல்துறை மற்றும் தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் உதவியோடு கெயில் நிறுவன அதிகாரிகள் நிலகையகப்படுதலை வலுக்கட்டாயமாக திணிக்க முற்பட்டபோதுதான் விவசாயிகளின் போராட்டங்கள் வலுப்பெற்றது. எரிவாயுக் குழாய்களை விவசாய நிலங்களில் பதிப்பதன் மூலம் நிலங்கள் துண்டாடப்பட்டு விவசாயத்திற்கு பயனற்றதாக மாறுவதுடன், குழாய் பதிக்கும் வழிகளில் உள்ள நீராதாரங்களும், தென்னை மற்றும் மாந்தோப்புகளும் பாதிக்கப்படும். விவசாய நிலங்களின் வழியே குழாய்களை பதிக்காமல் நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்,நெடுஞ்சாலை ஓரங்களில் பதிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதி மறுக்கும் என்று கூறுகிறது கெயில் நிர்வாகம். அப்படியானால் தனியாருக்கு எரிவாயு எடுத்துச் செல்ல கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அனுமதி வேண்டி நிற்கும் இவர்கள் விவசாய மக்களின் நிலங்களை மட்டும் பறித்துக் கொள்வது என்பது தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதிகளில் விவசாயத்திற்குத் தோண்டப்படும் சவக்குழியே.



நம்முடைய நாட்டில் எந்த ஒரு பிரச்சினையும் எதிர்க்க மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்ட வடிவம் "பட்டினிப் போராட்டமே" ஆனால் உண்ண உணவிருந்தால்தானே நீங்கள் போராடுவீர்கள், இதோ தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்பாசன படுகையைச் சீரழித்து பட்டினிச் சாவுகளை நோக்கி நம்மையும், நம் வருங்காலச் சந்ததியினரையும் தள்ளும் திட்டமாகவே இந்த மீத்தேன் எடுக்கும் திட்டம் உள்ளது. புதுச்சேரியை அடுத்த பாகூரில் தொடங்கி நெய்வேலி, சிறிமுஷ்ணம், ஜெயம்கொண்டம், சோழபுரம் வழியாக காவிரிப்படுகையில் மன்னார்குடியின் தெற்குப்பகுதிவரை பழுப்பு நிலக்கரியும், மீத்தேன் என்கிற எரிவாயுவும் உள்ளதாக கண்டறியப்பட்டு, அதனை எடுக்கும் பணி கிரேட்ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்ற நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முதல்கட்டப் பணியாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை உருவாக்கி மீத்தேன் வாயுவை எடுக்க வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது. இவ்வாறு மீத்தேன் வாயுவை உறிஞ்சி எடுப்பதன் மூலம் நிலத்தடியில் இருந்து வெளிவரும் மாசடைந்த நீரானது விவசாய நிலங்களையும், ஆறுகள் மற்றும் ஓடைகளையும் நாசப்படுத்துவதுடன், நிலத்தடியில் உருவாகும் வெற்றிடத்திற்குள் கடல் நீர் புகுந்து நிலங்களை விவசாயத்திற்குப் பயனற்றதாக மாற்றிவிடும். இந்தத் உயிர்க்கொல்லி திட்டத்தினால் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 1,65,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படையும். விவசாயத்தை நம்பி வாழும் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும். தமிழகத்தின் நாளைய தலைமுறை ஒரு வேலை உணவிற்கு கையேந்தும் நிலை வரும். ஒட்டுமொத்தத் தமிழக மக்களையும் பஞ்சத்தில் தள்ளக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்த்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் போராடி வருகின்றனர்.




இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விதமான அரச அடக்குமுறைகளையும்,மக்கள் விரோதப் போக்கையும் எதிர்த்து, இனி வரும் காலத்தில் இந்தியாவின் எந்தப் பகுதியில் அணு உலைத் தொடங்கப்பட்டாலும் மக்களின் கேள்விகளுக்கு அரசும், இந்திய அணுசக்தி கழகமும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம். இன்றைய சூழலில் போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், அணு உலை வெற்றிகரமாக இயங்கி வருவதாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது அரசும் அணு உலை நிர்வாகமும்.ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு பெரும்பாலான உலக நாடுகள் அணு சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்தியாவில் மட்டும் பல்வேறு இடங்களில் அணு உலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.இதுவரை இந்தியாவில் செயல்பட்டு வரும் அணு உலைகள் வெறும் 2 விழுக்காடு மின்தேவையையே உற்பத்தி செய்கின்றன. ஆனால், நம்முடைய மின்சாரத் தேவைகளுக்கான தீர்வு அணு உலை மின்சாரத்தில்தான் உள்ளது போன்ற பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சாரமும், அணு உலை திட்டமும் ஏகாதிபத்திய முதல் உலக நாடுகளின் தோல்வியடைந்த தொழில்நுட்பங்களை இந்திய மக்களின் மீது திணித்து அணுக்கழிவுக்கான குப்பைத்தொட்டியாக நாட்டை மாற்றவே இந்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.



கூடங்குளம் அணு உலைக்குத் தேவையான பாகங்களை தயாரித்த ரஷ்ய நிறுவனம் தரமற்ற இரும்பைப் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டிருப்பது குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் அணு உலையை ஏதோ பொம்மையை போன்று சித்தரித்து வருகிறது அரசு. அணுக்கழிவை பாதுகாப்பதற்கான தெளிவான வழிமுறைகள் கொண்ட தொழில்நுட்பம் இன்றுவரை இறுதி செய்யப்படவில்லை. கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரை அதன் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட கழிவுகளைப் பாதுகாக்கும் இடத்தைக்கூட அரசோ, அணு உலை நிர்வாகமோ முடிவு செய்யாமல் உள்ளனர். இவற்றைப் பற்றிக் கேள்வி எழுப்பும் மக்கள் மீதுதான் அடக்குமுறைகளை ஏவிவிட்டு, தேசத்துரோகிகள் என்று குற்றம் சுமத்துகிறது அரசு. நமக்காகவும், நம் வருங்கால சந்ததிக்காகவும் போராடும் மக்கள் தேசத்துரோகிகள் என்றால், நாம் இந்த அரசையும், அதிகார வர்க்கத்தையும் என்னவென்று விளிப்பது?



இந்த நான்கு மக்கள் திரள் போராட்டங்களும் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காவுகேட்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் அரசின் செயல்திட்டங்களை எதிர்த்தே நடைபெறுகின்றன. ஆனால், ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏதுவாக உள்ள இந்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் அந்தந்த பகுதி மக்களுக்கான பிரச்சனைகளாக மட்டுமே அடையாளம் பெற்றுள்ளன. இப்படி மக்களின் சக்தி பிரிந்து நிற்பதைத்தான் அரசும், அதிகாரவர்க்கமும் விரும்புகிறது. "எங்கெங்கு காணினும் சக்தியடா !!!" என்றான் பாரதி, அனைத்து வகை அதிகாரங்களின் குவிமையமாக உள்ள அரசுகளை எதிர்த்துப் போராடும் போது, மக்களாகிய நாமும் ஒரு புள்ளியில் இணைந்து நம்முடைய வாழ்வாதார பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். இந்தப் போராட்டங்களை ஆதரிக்கும் அனைத்து சனநாயக அமைப்புகளும், மக்கள் உரிமை செயற்ப்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். தலைமுறைகள் தாண்டி நம் சமூகத்தைப் பிடித்து ஆட்டும் சாதி அரக்கனைப் போன்றே நாம் மேற்கண்ட நான்கு பிரச்சனைகளும் நம்மை மட்டுமின்றி வருங்கால சந்ததியினரையும் பாதிக்கும்.


தமிழக மக்களாகிய நாம் இதுபோன்ற மக்கள் விரோதத் திட்டங்களை நம்மீது திணிக்கும் அரசையும், அதிகாரவர்க்கத்தையும் எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டிய தருணம். நம் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த பொருளாதார கொள்கைகள் என்கிற தளத்தில் இப்போராட்டக் களங்களை இணைத்து விரிவுப்படுத்தினால் வெற்றி நமதே!!!


" தமிழக மக்களே ஒன்றுபடுவோம் !!! தமிழக நலன் காத்திடுவோம் !!! "

1 comment:

  1. மிக அருமையான தொகுப்பு.அரசுகளின் கொள்கை ஏகாதிபத்திய விரிவாக்ககொள்கை.தொழிற்சங்கள் மிக உறுதியாக தங்கள் குறுகிய நலன்களுக்காகவே கொடி பிடிக்கின்றார்கள்.உதிறியாக கிடக்கும் விவசாயிகள்.உண்ணாவிரதப்போராட்டத்தை விட மக்களை நேரிட்டு சந்திக்கவேண்டும். நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ற அரசியல் உணர்வு வளரவேண்டும். அமைப்புகள் உருவாகவேண்டும்.

    ReplyDelete