Thursday, May 23, 2013

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் - இலங்கையை புறக்கணிப்போம் என ஐ.டி ஊழியர்கள் உறுதியேற்பு





பல்வேறு தடைகளுக்கு பின் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் இருசக்கர வாகனப்பரப்புரையும் கடந்த வாரம் நடந்து முடிந்தது.புதிய உறுப்பினர்களும் மற்றும் பல ஐ.டி ஊழியர்களும் உணர்வாளர்களும் இந்நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கான இடையறாத உழைப்பையும் பரப்புரையையும் கடந்த இருவாரங்களாக எமது இயக்கத் தோழர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வந்தனர்.இலங்கையின் இறுதி கட்டப் போரில் சிங்கள இராணுவத்தால் மிகக் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரழிவில் பல்லாயிரக்கணக்கான நம் தமிழ் சொந்தங்களை நாம் இழந்தோம்.மனித குல வரலாற்றின் இருண்ட பக்கங்களால் சூழப்பட்ட அப்பேரழிவை வெறும் நினைவஞ்சலியோடு மட்டும் கடந்து சென்று விடாமல்,சிங்கள இனவெறி அரசை உலக அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, பண்பாட்டு தளங்களில் முற்றிலுமாக புறக்கணிப்போம் என்றவொரு சூளுரையோடு நேற்றை நிகழ்வை கட்டமைக்கப்பட்டிருந்தது.“இலங்கையை புறக்கணிப்போம்” என்ற அந்த சூளுரை, சிங்கள அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் அனைத்து வழிகளையும் புறக்கணிக்கும் ஒரு ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு ஆரம்ப கட்ட முன்முயற்சியாகும்.இந்நிகழ்வை ஒரு பொதுக்கூட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தோம்.இறுதி நேரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை அனுமதி மறுத்தது.காகிதத்தில் சட்டம் ஒழுங்கு என்று எழுதியிருந்தாலும், ஏற்கெனவே சோழிங்க நல்லூர் சந்திப்பில் சேவ் தமிழ்சு நடத்தியிருந்த தருமபுரி வன்கொடுமை பற்றிய தெருமுனைக் கூட்டத்தையே அவர்கள் காரணம் காட்டி அனுமதி மறுத்திருக்கின்றனர்.



”இலங்கையை புறக்கணிப்போம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு வடிவங்களில் இப்பரப்புரையை மக்களிடம் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப்பட்டு,பின்னலாடையில் ”இலங்கையை புறக்கணிப்போம்” வாசங்களை அச்சிடுவது, கைப் பட்டை(Wrist Band), வாகனங்களில் ஒட்டப்படும் பிரதிபலிப்பான்கள்(Reflective stickers) என்று சிறு சிறு வழிகளில்,இவ்வரசியலை கொண்டு சென்றோம். துண்டறிக்கைகளும் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு விநியோகிப்பட்டன.கடந்த இரண்டு வாரங்களாக சென்னை கடற்கரை - திருவான்மியூர் பறக்கும் இரயில் மார்க்கம் மற்றும் கிண்டி - தாம்பரம் மார்க்கம் இவ்வழித் தடங்களில் எமது இயக்கத் தோழர்கள் பரப்புரை செய்தனர். டைடல் பார்க், வேளச்சேரி ஆகிய இடங்களிலும் துண்டறிக்கை பரப்புரை செய்யப்பட்டது.மேலும் மே 17 அன்று முள்ளிவாய்க்கால் பேரழிவு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு முன்பாக ஒரு வாகனப்பரப்புரையோடு, நினைவேந்தல் நடக்கும் இடமான சோழிங்கநல்லூர் சந்திப்புக்கு செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.சென்னை DLF ஐ.டி வளாகத்திலிருந்து ஒரு குழு புறப்பட்டு, சென்னை டைடல் பார்க் முன்பு குழுமியிருந்த ஒரு குழுவினரோடு இணைந்து வாகனப் பேரணி தொடங்கியது. தோழர்கள் இலங்கையை புறக்கணிப்போம் என்ற விண்ணதிர முழக்கமிட்டவாறே பழைய மகாபலிபுரம் சாலை முழுதும் வாகனப் பேரணியில் ஈடுபட்டனர் வழிநெடுகிலும் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிப்பட்டன.



மாலை சரியாக 6.30க்கு நினைவேந்தல் தொடங்கியது.தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து தமீழீழ விடுதலையை வலியுறுத்தியும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை நினைவு கூர்ந்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இறுதியாக தோழர் செந்தில் இலங்கையை புறக்கணிப்பதன் அரசியல் குறித்து ஒரு சிறு உரை ஆற்றினார். பிறகு அனைத்து தோழர்களும் இயக்கத்தின் புதிய உறுப்பினர்களின் சந்திப்பும் துரைப்பாக்கத்தில் ஒரு சிறு அரங்கில் தொடங்கியது.

பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களும் மற்ற ஐ.டி ஊழியர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.இலங்கையை புறக்கணிப்போம் என்ற இவ்வரசியலை அடுத்த கட்டமாக எப்படி நகர்த்துவது
என்று ஆலோசனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.



இந்நிகழ்வை அரசியல் ரீதியாக வெற்றியடையச் செய்த புதிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல ஐ.டி ஊழியர் உணர்வாளர்களுக்கும் சேவ் தமிழ்சு இயக்கம் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.மீண்டுமொரு போராட்ட நிகழ்வில் ஒன்றிணைவோம்.

இலங்கையை புறக்கணிப்போம்..தமிழீழ விடுதலைக்கு என்றென்றும் தோள்கொடுப்போம் !!!!


நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படங்கள்:
=====================================

Tuesday, May 21, 2013

போதைக்கு மதுபானக்கடை, தண்ணீர் தாகத்துக்கு?





மதுபான கடைகளைத் தானே ஏற்று வெற்றிகரமாக நடத்தும் தமிழக அரசு, மக்கள் தங்களின் குடிநீர் பிரச்சினைகளை தாங்களே பார்த்து கொள்ளட்டும் என விட்டு விட்டது. சிறு நகரங்களுக்கும் , கிராமங்களுக்கும் கூட கேன்களில் அடைக்கப்பட்ட குடி நீர் விற்பனை வந்து விட்டது.

ஆற்று மணல் முறையற்று அடியோடு அள்ளப்பட்டது, ஏரிகளும், ஓடைகளும் அதிகாரம் உள்ளவர்களால் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டது, போதாக்குறைக்கு வழிகாட்ட வேண்டிய அரசாங்கமே கடந்த 40 ஆண்டு காலமாக‌ நீர் சேகரிக்க பயன்படும் ஏரிகளிலும், குளங்களிலும் புதியதாக அமைக்கும் பேருந்து நிலையம், நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் என அமைத்து நீர் நிலைகளை ஆக்கிரமித்து வருவது என உள்ளுக்குள் தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட, மறுபுறம் அண்டை மாநிலங்ககளான கர்நாடக, கேரளா, ஆந்திர என மூன்றுமே தமிழகத்திற்கு வரும் முக்கிய நதிகளில் அணைகளை கட்டி தமிழகத்தின் நீர்பங்கைத் தர மறுக்கின்றன.

இவையெல்லாம் போதாது என்று 90 களுக்கு பிறகு அறிமுகபடுத்தபட்ட உலகமயமாக்கல் மூலம் புகுந்துள்ள தனியார் பெரு நிறுவனங்கள் தொழிற்சாலை கழிவுகளை கொட்டி ஆறுகளை கழிவு நீர் வெளியேறும் சாக்கடைகளாக மாற்றிவிட்டன, எஞ்சிய நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் அவற்றை விற்பனை பொருட்களாக மாற்றிவிட்டன.






இப்படி அனைத்து வழிகளிலும் முறையற்று தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் சுரண்டப்பட, நீர் மட்டம் ஆண்டு தோறும் கீழே இறங்கி கொண்டே போகின்றது , கிடைக்கும் நீரும் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிக அளவில் கலந்திருப்பதால் குடிக்க உகந்ததாய் இல்லாமல் மக்கள் குடிநீருக்கு திண்டாடுகின்றனர், மறுபுறம் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் இங்கிருந்து நீர் எடுத்து சுத்தபடுத்தி நமக்கே அதிக விலையில் விற்கின்றன.


இன்றைக்கு விற்கும் விலையில் கால்நடைகளுக்கு தீவனம், புண்ணாக்கு என வாங்கி போட்டு நாளெல்லாம் தனது உழைப்பை செலவு செய்து விவசாயி கொண்டு வரும் பாலை லிட்டர் 26 ரூபாய் என விலை வைத்து கொள்முதல் செய்கிறது அரசு. விவசாயிகள் விலை கட்டுபடியாகவில்லை என போராடினால், பால் விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை என விலையை ஏற்ற மறுக்கிறது அரசு, மறு புறம் குடிக்கும் தண்ணீரை தனியார் நிறுவனங்கள் லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பதை கேள்வி கேட்பதில்லை.


தங்கள் பங்குக்கு மணலையும், குடிக்கும் நீரையும் அரசியல்வாதிகள் தங்களின் ஏக போக விற்பனை சொத்தாக்கி கொண்டதினால் தமிழன் குடிக்கும் நீர் அவனின் கையை விட்டு போய்கொண்டு இருக்கிறது, பொது குழாய்களில் வரும் நீர் குடிக்க கூடாததாகி, முடியாததாகி, யாரோ? எப்படியோ? எங்கேயோ நீரை எடுத்து, எந்தவித விதி முறைகளையும் பின்பற்றி சுத்தம் செய்யாமல், கேன்களில் அடைத்து வரும் நீரை குடித்து வாழ வேண்டிய நிலைக்கு நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதை எந்த விதத்திலும் கேள்வி கேட்காமல் முறைபடுத்தாமல் விட்டு விட்ட அரசு எந்திரங்கள், இன்று ஒப்புக்காக இந்த கேன் தண்ணீர் நிறுவனங்களின் சுத்திகரிப்பு பற்றி கேள்வி கேட்டு 130 நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியவுடன், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து முன்னறிவிப்பு இன்றி தண்ணீர் விநியோகத்தை நிறுத்தி விட்டன. மேலும் தமிழகம் முழுக்க உள்ள தண்ணீர் நிறுவனங்களும் சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்களை மிரட்டுகின்றன.



வழக்கம் போல அரசை எதிர்த்து கேள்வி கேட்காமல் தண்ணீர் எப்படி இருந்தாலும் பிரச்சினையில்லை, விலையும் ஒரு பொருட்டள்ள, தண்ணீர் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர் . இதுதான் தருணம் என 25 ரூபாய்க்கு விற்ற கேன் தண்ணீரை 120 ,150 என விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர் தனியார் தண்ணீர் நிறுவனங்கள்.

வரும் மே 27 ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தனியார் குடிநீர் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை கொடுக்க உள்ளன அதற்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்று விடலாம் என கேன் தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன, ஒருவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எதிர்ப்பான உத்தரவு வரும் பட்சத்தில் கேன் தண்ணீர் நிறுவனங்களின் போராட்டம் தீவிரம் அடையாளம்.

இயற்கையாக நிலவும் இந்த தண்ணீர் பஞ்சத்தில் கேன் நிறுவனங்கள் செயற்கையாக உருவாக்கும் குடிநீர் பஞ்சத்தையும் சேர்த்து பொது மக்கள் அனுபவிக்க வேண்டி இருக்கும்.
அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயம் வரைமுறைகளை கடுமையாக்கும் பட்சத்தில் அதையே காரணம் காட்டி, கேன் தண்ணீர் விற்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்த கூடும். எப்படி இருந்தாலும் பொது மக்கள் பாதிக்க பட போவது நிச்சயம்.



இப்போதே இப்படி தங்களுக்குள் கூட்டணி அமைத்து கொண்டு மக்களை குடிநீருக்கு அலையவிட்டு கொள்ளை லாபம் பார்க்கின்றன கேன் தண்ணீர் நிறுவனங்கள். இந்த லட்சணத்தில் “தேசிய நீர்க் கொள்கை வரைவு 2012' ல் மத்திய அரசானது மாநில அரசுகளை தண்ணீர் விநியோகிக்கும் உரிமையை தனியாரிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும் என கோருகிறது.



அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவாசியமான, பொதுவான தண்ணீரை தனியாரிடம் கொடுத்து விட்டு, விலை கொடுத்து விவசாயத்திற்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் வாங்கும் செயல் திட்டத்தை நோக்கி செல்கிறது மன்மோகன் அரசு. இப்பொழுதே நாம் குடிநீருக்கு இந்த பாடுபடுகிறோம் என்றால் நீர் நிர்வாகம் முழுவதும் தனியார் கைக்கு சென்றால் எப்படி இருக்கும்?

ஆனால் மத்திய அரசுடன் எப்பொழுதும் மோதும் ஜெயலலிதா அரசு இதுபோன்ற மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தனியாரின் கைகளுக்கு செல்வதை கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை. ஓட்டுக்காக இலவசமாக அரிசி, 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாப்பாடு என கொடுப்பதில்தான் ஜெயலலிதாவோ ஆர்வமாக இருக்கிறார், இதைக் காட்டிலும் தனியார் பிடியில் இருந்து குடி தண்ணீரை பறித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கொடுப்பது முக்கியம் என ஜெயலலிதா உணரவில்லை.

தனியார்மயம் தனது கோரமுகத்தை காட்டிய இன்றைய நாளிலாவது, பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொண்டு, அரசு பாதுகாப்பான குடிநீரை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து பொது மக்கள் போராட வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் குடிக்கும் நீருக்கும், விவசாயத்திற்கும் தனியார் முதலாளிகளின் தயவை எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.



வெ. தனஞ்செயன்
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

பின் குறிப்பு: அடிப்படை தேவையான குடிநீரை நாம் எப்படி விலைகொடுத்து வாங்க பழகினோம் என எளிமையாக விளக்குகின்றது இக்குறும்படம்.


http://www.youtube.com/watch?v=Se12y9hSOM0


Monday, May 20, 2013

பரதேசியும்- பன்னாட்டு அடிமையும்


அண்மையில் பரதேசி படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் போது பின் இருக்கையில் இருந்த ஒருவர் சொன்னார், " இங்கு நடப்பதைத்தான் காட்டியுள்ளார்கள் " . என்னுடைய பார்வையில் இந்த கருத்து அது வெளிப்பட்ட இடமான பெங்களுரு-வைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகிறது . ஏனென்றால், பொறியியல் கல்லூரியில் படிக்கும் போதே வேலைக்கு ஆன நியமன ஆணை, உழைப்புக்கேற்ற ஊதியம், பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் என்றிருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் இன்னொரு முகத்தைக் காட்டியது.

தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வியலை பார்த்தே வளர்ந்த எனது
பள்ளிப்பருவம் ஆகட்டும், இன்று நான் ஒரு தொழிலாளியாக பன்னாட்டு முதலாளிக்கு
வேலை பார்ப்பதாகட்டும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலும், பொருளாதார அடிப்படையிலான ஒடுக்கு முறையும் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருப்பதாகவே தெரிகிறது. பெரும்பாலான துறைகளில் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டும் தொழிலாளர்களின் நிலை இன்றும் மேன்மையுறவே இல்லை.


தகவல் தொழில்நுட்பத் துறையானது இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று,
நம்முடைய கல்வி சூழல் கற்றுத் தரும் போட்டி மனப்பான்மையின் தொடர்ச்சியாகவும்,
உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற கட்டமைக்கப்பட்ட மனோபாவத்தைக் கொண்டும் தன்னுடைய தொழிலாளர்கள் ஒன்றுபடுவதை அவர்களின் மனரீதியாகவே தடுத்துவிடுகிறது.



கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலில் இருந்து," நமக்கு ஒரு பென்சில் தேவை என்றால் அதை நாமே சுயமாக உருவாகிக் கொள்ள நீண்ட நேரமும் உழைப்பும் இல்லாமல் பெற முடியாது.இதற்கு பதிலாக ஒரு விலை கொடுத்து இன்னொரு தொழிலாளியின் நேரத்தில் அவருடைய உழைப்பைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு பென்சிலை எளிதாக வாங்குகிறோம் நம்முடைய உழைப்புக்குப் பதிலாக இன்னொருவர் உழைப்புக்கு ஒரு விலை கொடுக்கிறோம். ஆனால் நாம் கொடுக்கும் அந்த விலையானது அந்த தொழிலாளியை சென்று சேராமல், பெரும் லாபம் மூலதனமிட்ட அந்த முதலாளியையும், அதனை எந்த உழைப்பும் போடாமல் வாங்கி விற்கும் வியாபரியையுமே சென்று சேர்கிறது.

இது குறித்து எந்த பார்வையும் இல்லாமல், தன் உழைப்பைச் சுரண்டும் முதலாளியை தன்னை வாழ வைக்கும் கடவுளாகப் பார்க்கிறான் தொழிலாளி.அதோடு மட்டுமில்லாமல் வியாபாரத்தில் ஏற்படும் போட்டி, இழப்பு ஆகியவற்றைச் சரிகட்ட தொழிலாளர் நலனையே பணயமாக்குகிறான்". இப்படி முதலாளிகளை நம்பி தன்னுடைய உச்ச உழைப்பினை கொட்டும் தொழிலாளர்களின் உழைப்பை முடிந்தவரை உறிஞ்சிக்கொண்டு, தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகள் மற்றும் வாழ்வாதரப் பிரச்சனைகளைப் பற்றிக் கேள்வி எழுப்பும் போதோ, தனக்கான சம்பள உயர்வைக் கோரும் போதோ முதலாளி வர்க்கத்தால் கைகழுவப்படுகிறான்.


தொழிலாளர்களின் வாழ்வாதார தேவைகள் அதிகரிக்கும் போது, அவர்களது உழைப்பிற்கான ஊதியத்தை வழங்கி அவர்களைக் காத்திட எந்த முதலாளியும் தயாராக இல்லை. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தங்களுடைய லாபத்தில் ஒரு பைசா கூட குறைந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். இதனால்தான் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் வேலை வாய்ப்பற்று எண்ணற்றவர்கள் இருப்பினும் பீகார், ஒரிசா போன்ற வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை வரவைப்பதும் , வட இந்திய பகுதிகளில் உள்ள பலகாரக் கடைகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கொத்தடிமைகளாக சிறார்களை கூட்டிச் செல்வதும் நடைபெறுகிறது.


தொழிலாளர்களின் வாழ்வாதராத் தேவைகளும், அதற்கான செலவினங்களும் அதிகரிப்பதற்கு ஏற்ப அவர்களின் ஊதியம் உயர்த்தப்படாமல் மற்றப் பகுதிகளில் இருந்து வரும் அதாவது அடுத்த வேலை உணவிற்கும், வாழ்விற்கும் வழியில்லாத பகுதி மக்களைக் கொண்டு அடியோடு மாற்றப்படுகிறார்கள்.இதே யுக்திதான் பன்னாட்டு முதலாளிகளால் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொணரப்படும் சேவைப் பணிகளை இந்தியப் பணியாளர்களைப் வைத்து முடிக்கும் பணிதான் பெரும்பாலான நிறுவனங்களில் உள்ளது.இதற்கான காரணமும் மேற்சொன்னது போல முதலாளிகளின் லாபவெறி மட்டுமே.

Outsourcing = (Cutting Costs + Low Wages) - Employee Rights

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்அதிகரித்திருக்கும் வாழ்வாதராத் தேவைகளும், அங்கு இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மென்பொருள் சேவைப் பணிகளை இந்தியாவை நோக்கி வரவைக்கிறது.(1)

எரியும் பனிக்காடு நாவலின் வரிகளிலிருந்து,"மனிதாபிமானத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித்தருவதற்காகவே இங்கே வந்திருக்கின்றோம். அதுவும் கொழுத்த இலாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதோ அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு இலாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்". இந்த வரிகள் அன்றைய பிரிட்டிஷ் காலனிய முதலாளிகளுக்கும் மட்டும் அல்ல.இன்று உள்ள தகவல் தொழில்நுட்பத் துறைக்கும், ஏன்? அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.ஒரு விஷயம் தவறாக நடக்கிறது என்று ஏற்றுக்கொள்ளும் வரை நம்மால் அதை நிவர்த்தி செய்யவே முடியாது.



“None are more hopelessly enslaved than those who falsely believe they are free. - Johann Wolfgang von Goethe “




நம்மில் சிலர் நமக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவதாக நம்புகிறோம்.பரதேசி படத்தில் காட்டப்பட்டுள்ள தொழிலாளர் அடிமை வாழ்க்கை முறையைவிட, இன்றைய தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் மீது கட்டமைக்கப்படும் வாழ்க்கை முறையானது மிகவும் அபாயகரமானது. நாம் அடிமையாக்கப்பட்டு சுரண்டப்படுகிறோம் என்று கூட தெரியாத நிலை பெரும் சிக்கலானது.


ஐ.டி தொழிலாளர்கள் , நம்மைச் சுற்றி மாறியுள்ள நகரங்களை கொண்டும், அதன் வாழ்க்கை முறையைக் கொண்டும் நாம் வளர்ந்துள்ளதாக வாதிடலாம், ஆனால் நுகர்வு கலாச்சார மோகத்தில் பல்வேறு பொருட்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கும் கடன்காரர்கள் நாம் என்பதே நிதர்சனம்.

இதற்கு பரதேசி படத்தில் வரும் ஒரு காட்சியை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்,
தேயிலை தோட்டக் கூலிகளுக்கு ஆன கணக்கு முடிக்கும் நாளில் கங்காணி, மருந்து
கொடுப்பவர், கங்காணியின் உதவியாளர், மளிகைக் கடைக்காரர் என்று அனைவரும்
அமர்ந்திருப்பர், கூலிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தில் அவர்களுக்கு தரவேண்டிய தொகைப் பிடித்தம் போக மீதியே கொடுக்கப்படும்.அதேபோல, நமக்கு வரும் சம்பளப் பணமானது, வீட்டுக் கடனுக்கான நிலுவை, வாகனக் கடனுக்கான நிலுவை என்று தனியார் பெருவங்கிகளின் கைகளுக்கும், மருத்துவக் காப்பீடு என்று தனியார் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்ய வைக்கபடுகிறது.

இது எல்லாம் போதாது என்று காதலர் தினம், உழைக்கும் மகளிர் தினத்தின் முதலாளித்துவ வடிவமாக்கப்பட்ட பெண்கள் தினம், அன்னையர் தினம் என்று அனைத்துக்கும் தினம் கொண்டாட பழக்கபடுத்தி நம்முடைய சம்பளம் முதலாளிகள் வசமே சென்று மீண்டும் நமக்கே வரும் சுழற்சிக்குள் வைக்கபட்டிருக்கும் அடிமைகள் நாம். (2)

இவ்வாறு நாம் அடிமைகள் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்று உணராமல் பொருளீட்டும்
வேட்கையில் இருக்கும் நாம் தேவைகளை உணர்ந்து, நுகர்வு மோகத்தில் இருந்து வெளியேறாமல் இந்த விலங்கை உடைப்பது என்பது சாத்தியமாகாது.




தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்கவும், பாட்டாளி வர்க்கப் புரட்சியை வென்றெடுக்கவும் "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் " என்றார் மார்க்சு. ஆனால் நாம் இன்றளவும் நம்மை மற்ற துறை தொழிலாளர்கள் இடமிருந்து விலகி ஒரு மேட்டிமைதனத்திலயே உள்ளோம்.


தினமும் எட்டு மணி நேர வேலை என்று வெளியில் சொல்லிக்கொள்ளும் நிறுவனங்கள், ஊழியர்களை கசக்கி பிழிவதும், அதனால் பணியாளர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதும், தனக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ளமுடியாமலும் தவிப்பதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம்.(3)


இப்படிப்பட்ட சூழலில், நாம் நம்முடைய வாழ்க்கைமுறை அடிமையாக இருக்கிறோம் என்று பெற்றுவிடாத வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது ஏன் என்று காரணம் தெரிவிக்காமல் நம்மில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்தனர். இதற்கும் எந்த பெரிய நிறுவனமும் நஷ்டத்தில் இயங்கவில்லை, அவர்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய மட்டுமே முடியவில்லை.


“Recession is Only For Employees, Not For Employers”


நம்மை நாம் "Professionals", "Intellectuals" ஆக பார்க்கிறோம் ஆனால், நிறுவங்கள் வெறும் கூலிகளாகவே "Coding Coolies", " Knowledge Slaves" பார்க்கின்றன (4).

இன்றைய சூழலில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளும்,
அமெரிக்காவில் வெளிநாடுகளில் இருந்து வந்து வேலைப் பார்க்கும் ஊழியர்கள் தங்களின்
முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள் என்ற மக்களின் எண்ணமும், அதற்கேற்ப வேலைக்கான விசா வழங்குவதில் கெடுபிடியும், அமெரிக்காவில் வந்து வேலை பார்க்கும்
நபர் ஒன்றுக்கு $1000 வீதம் என்ற சட்டம் இயற்றுதல் நோக்கி அமெரிக்க அரசு நகர்வதும் நமக்கான எதிர்காலத்தை கேள்விகுறியக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் நம்மீது உள்ள அடிமைத்தளையினை உடைக்க விழித்துக் கொள்ள வேண்டிய செம்மையான தருணமிது.(4,5)


ஐ.டி.தொழிலாளர்களுக்கு யூனியன்கள் அமைப்பதை விரும்பாத பெருநிறுவனங்களும்,முதலாளிகளும் அவர்களுக்கான கூட்டமைப்பை உருவாக்க தவறவில்லை.இந்தியாவில் ஐ.டி முதலாளிகளின் யூனியன்தான், NASSCOM.

கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் ஐ.டி நிறுவனங்களை நெறிப்படுத்தும் 40க்கும்
மேற்பட்ட சட்டங்களை NASSCOM, ஐ.டி நிறுவனங்கள் சேர்ந்து தடுத்துள்ளார்கள். இதற்காக கடந்த ஆண்டு Cognizant நிறுவனம் மட்டும் 5.9 இலட்சம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளது.(6,7) தொழிலாளர் நலச் சட்டங்களை தடுக்க இவ்வளவு பணத்தை செலவு செய்யும் இவர்கள், தங்களது தொழிலாளியின் சம்பளத்தை உயர்த்தி தர மட்டும் ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பார்கள். இந்த நிலையில் நம்முடைய சட்டங்கள் பற்றியும்,அதை நிறைவேற்றுபவர்களின் "கறை படியா கரங்கள்" பற்றியும் நாம் அனைவரும் அறிந்ததே.


தங்களது சந்தையையும், அதிக லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் அவர்களுக்கான யூனியனை வைத்திருக்கும்போது, நம்முடைய உரிமைகளுக்காக நாம்
ஒருங்கிணைய வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் இருக்கிறோம்.



1940களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தங்களது உரிமைகளை எப்படி பாதுகாத்தார்களோ அது போல நாமும் இன்று ஒருங்கிணைந்து நமது உரிமைகளை பாதுகாத்திடுவோம். இல்லையென்றால் பின்வரும் வாக்கியம் உண்மையாகிவிடும்.
“ஆம்!!! நானும் ஒரு பரதேசியே!!! நுகர்வு பரதேசி !!!”

க‌திர‌வ‌ன்
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம் (Save Tamils Movement)

தரவுகள்:
-----------------
1. http://www.guardian.co.uk/business/2013/may/13/aviva-outsourcing-betrays-uk-workforce

2. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ்

3. http://economictimes.indiatimes.com/news/news-by-company/corporate-trends/psychiatrists-report-sudden-rise-in-cases-of-depression-among-it-workers-nasscom-says-all-is-well/articleshow/19717627.cms

4.. http://gadgets.ndtv.com/laptops/news/the-end-of-indian-it-staffing-as-we-know-it-346597

5.socialism.in/index.php/life-in-the-indian-it-industry-high-life-for-the-bosses-low-life-for-the-workers/

6. http://timesofindia.indiatimes.com/business/india-business/Nasscom-engages-lobbying-firm-in-US/articleshow/19924148.cms

7. . http://economictimes.indiatimes.com/tech/ites/cognizant-spent-1-95-million-on-lobbying-last-year-heftiest-among-it-peers/articleshow/19685292.cms


Wednesday, May 15, 2013

முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்


முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவு நாள் கூட்டம்

ஆறாத நெருப்புத் தழும்பாய் இனப்படுகொலையின் காயம்
ஓயாத அலையாய் தமிழரின் நீதிக்கான போராட்டம்


நினைவெழுச்சிக் கூட்டம்
பேச்சாளர்கள்: இளங்கோவன் – மகேந்திராசிட்டி | செந்தில் – சோழிங்கநல்லூர்
மேரி – டி.எல்.எப் | ஜெகன் – சிறீராம் டெக்பார்க் | சேரன் – அசண்டாஸ்
விக்ரமன் – வேளச்சேரி | செய்யது – ஒலிம்பியா டெக்பார்க் | சசிக்குமார் - டைடல் பார்க்
பரிமளா | நாசர் | கண்ணதாசன்


மே 17, வெள்ளிகிழமை | மாலை 6 மணி | சோழிங்கநல்லூர் போக்குவரத்து சந்திப்பு
மே 17, 2009 ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொண்டுள்ள இனவெறியின் உச்சமாய் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த நாள். ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் கொன்றழித்து விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு உலகநாடுகளுக்கு அறிவித்தது. போருக்குப் பின் 3 இலட்சம் ஈழத் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்து சிங்களவர்களோடு ஈழத் தமிழர்கள் இனி என்றும் சேர்ந்து வாழ முடியாது என்பதை உலககெங்கும் வாழும் தமிழர்களுக்கு உணர்த்திய நாள்.


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. ஈழத்தில் இன்றைய நிலை என்ன?. 80,000 பெண்கள் போர் விதைவைகளாக, பல்லாயிரம் குழந்தைகள் அனாதைகளாக, வீட்டுக்கொருவர் ஊனமுற்றவராக என சிங்கள அரசின் இனவெறியின் சின்னங்களாக ஈழத் தமிழர்கள் வன்னிப் பகுதியில் அன்றாட வாழ்க்கைக்கு போராடி வருகின்றனர். போர் முடிந்து தங்கள் நாட்டில் அமைதி திரும்பிவிட்டதாக இலங்கை அரசு உலகுக்கு கூறினாலும் தமிழர் பகுதிகளில் மருத்துவமனை, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் என்று பொது இடங்கள் அனைத்திலும் இராணுவம் நிலைகொண்டு தமிழர்களை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தமிழர் பகுதியில் சிங்கள மக்கள் அதிகமானோரை குடியமர்த்தியும் இலங்கைத் தீவில் ‘தமிழர் நிலம்’ என்ற ஒன்றே இல்லாமல் மாற்றும் விதமாக தன் சிங்களமயமாக்கலை தீவிரப்படுத்தி வருகின்றது இலங்கை அரசு. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரசு செய்தது போல் கட்டமைப்பு ரீதியான இன அழிப்பை நடத்தி வருகிறது இலங்கை அரசு.



நான்கு ஆண்டுகள் தமிழகத்தில் நடந்த போராட்டங்களின் பயனாய் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு, இலங்கை அரசு மீது பன்னாட்டு இனக்கொலை விசாரணை, இலங்கை மீது பொருளாதார தடைகயை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசு இதை மதிக்கவில்லை. ஈழத் தமிழர்கள் குறித்தும் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்தும் கவலைப்படாமல் சிங்கள அரசோடு நட்பு பாராட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்கின்றது. அதனால் தான் இலங்கை அரசு எந்த சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல் இனவெறியைக் காட்டிக்கொண்டிருக்கின்றது.



நாம் என்ன செய்யப் போகின்றோம்? நம்மைப் போன்ற சாதாரண மக்களால் என்ன செய்ய முடியும்? முடியும். அரசியல், பொருளியல், பண்பாட்டுத் தளங்களில் இலங்கையைப் புறக்கணிப்பதன் மூலம் இலங்கை அரசின் இனவெறியை அடக்க முடியும். வெள்ளை நிறவெறிப் பிடித்த தென்னாப்பிரிக்க அரசிடமிருந்து கருப்பர்கள் விடுதலை அடைந்தது இப்படியான புறக்கணிப்பு போராட்டத்தின் மூலம் தான்.

நான்காம் ஆண்டு நினைவு நாளில் இந்த உறுதி மொழிகளை ஏற்போம்.

• தகவல் தொழில்நுட்பத் துறையினை சேர்ந்த நாம் இலங்கைத் தீவுக்கு யாரும் சுற்றுலா செல்லமாட்டோம்.

• இலங்கையில் உற்பத்தியாகி விற்பனைக்கு வரும் எந்தப் பொருட்களையும் வாங்கமாட்டோம்.

• விளையாட்டுத்துறை, கலை, இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் இலங்கையைப் புறக்கணிப்போம்.

• இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்திப் போராடுவோம்.


தகவல் தொழில்நுட்பத் துறை நண்பர்களே!

வாருங்கள் நாம் அனைவரும் நீதியின் நெருப்பை நெஞ்சில் ஏந்துவோம்! சோழிங்கநல்லூரில் திரள்வோம்!

ஒருங்கிணைப்பு:
சேவ் தமிழ்சு இயக்கம்(தகவல் தொழில்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள்)


தொடர்புக்கு:
இளங்கோவன் 98844 68039

கூடங்குளம் அணு உலை குறித்து விஞ்ஞானிகள்


கூடங்குளம் அணு உலையின் தரம் குறைந்த பாகங்களின் பயன்பாடும் அது குறித்து எழும் பாதுகாப்பு அச்சம் பற்றியும் பல துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தமிழக மற்றும் கேரள முதல் அமைச்சர்களுக்கு எழுதும் கடிதம்

பெறுநர்
மதிப்பிற்குரிய முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகம், சென்னை – 600 009

பெறுநர்
மதிப்பிற்குரிய முதலமைச்சர்
கேரளா அரசு
தலைமைச் செயலகம், திருவனந்தபுரம் 695001

நகல்:
பிரதமர் அலுவலகம்
தெற்கு ப்ளாக், ரைசினா ஹில்
புது தில்லி-110011

தேதி:

மதிப்பிற்குரிய முதல்வர்களுக்கு

கீழ் கையொப்பமிட்டுள்ள நாங்கள் அனைவரும் பல துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள். கூடங்குளம் அணு உலைகள் 1 மற்றும் 2 –ன் பாகங்கள் மற்றும், கருவிகளின் பாதுகாப்பு பற்றியும் கவலை கொண்டுள்ளவர்கள். எங்கள் கவலைக்குக் காரணம் கூடங்குளம் அணு உலை 1 மற்றும் 2-ல் தரம் குறைந்த பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், முக்கியமான பாதுகாப்பு முறைகளில் உள்ள 4 வால்வுகள் பழுதடைந்து உள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் தான்.

பாதுகாப்பு குறித்த இந்த ஐயப்பாடுகளை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது சியோ பொடால்ஸ்க்கின் கொள்முதல் இயக்குனர் திரு.செர்ஜி ஷுட்டாவின் கைதும், அவர் மீதான ஊழல் புகாரும். இந்தியா, சீனா, பல்கேரியா மற்றும் ஈரானில் உள்ள இரஷ்யாவால் அமைக்கப்பெற்றுள்ள அணு உலைகளின் பாகங்களில் தரம் குறைந்த எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை கொள்முதல் செய்தவர் இவர் என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்கேரியாவிலும், சீனாவிலும் தரம் குறைந்த பாகங்கள் குறித்த புகார்களும், அவற்றைத் தொடர்ந்த விசாரணைகளும் நடந்துவருகின்றன. இத்தகைய ஊழல்களின் விளைவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. இவற்றால் அணு உலைகளின் நீண்ட கால பாதுகாப்பு பாதிக்கப்படும்.

அணு உலை உள்ள மாநிலத்தின் முதலமைச்சர் என்ற வகையிலும், அதன் அருகில் உள்ள மாநிலத்தின் முதலமைச்சர் என்ற வகையிலும், அணு உலைகள் பாதுகாப்பாகவே அமைக்கப்படுள்ளன என்பது குறித்து உங்களையும், உங்கள் மாநில மக்களையும் திருப்திபடுத்திக் கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அணு உலையில் பயன்படுத்தியுள்ள பாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் எந்த முயற்சியும் அணு உலைகள் இயங்கத் தொடங்குவதற்கு முன் செய்யப்பட வேண்டும். தொடங்கப்பட்டுவிட்டால், அணு உலைகளின் கதிர் வீச்சு நிறைந்த பகுதிகளை அணுகவோ, ஆய்வு செய்யவோ முடியாமல் போய் விடும்.

கூடங்குளத்தில் ஆபத்தான எந்த ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் அதன் தாக்கம் மாநில எல்லைகளையும் தாண்டி அடுத்த நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அணு உலை பாகங்களின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள ஐயப்பாடுகளை எடுத்த எடுப்பில் பார்க்கும் போது, சுதந்திரமான, முழுமையான தர நிர்ணய ஆய்வு செய்யப்பட்டாத பட்சத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கையின் மக்களும் இந்த அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து பயப்பட வேண்டியிருக்கிறது.

இங்கே கையெழுத்திட்டுள்ளவர்களில் அணு சக்தி நம் எதிர்காலத்திற்கு தேவை என்று நினைப்போரும், அணு சக்தி ஆபத்தானது என்று எண்ணுவோரும் இருக்கிறோம். இக்கடித்தத்தின் மூலம் நாங்கள் அணு சக்திக்கு சார்பாகவோ, எதிராகவோ கருத்துத் தெரிவிக்க முற்படவில்லை. நுட்பமான, ஆபத்தான தொழிற்நுட்பங்களை கையாளும் போது வெளிப்படைத்தன்மையும், உண்மையும், உயர் தரத்தை உறுதிபடுத்துவதும் அவசியமாகிறது என்பதே எங்கள் கருத்து. கூடங்குளம் அணு உலை 1 மற்றும் 2 இயக்கப்படுவதற்கு முன் சுதந்திரமான தேசியக் குழு ஒன்றை அமைத்து, ஆய்வு திட்டம் ஒன்றை வகுத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பிரதமரையும், அணு சக்தி துறையையும் நீங்கள் வற்புறுத்த வேண்டும். இத்தகைய ஆய்வு தரம் குறைந்த பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும்.


Signed by,

Name Designation Dept/Specialization Affiliation City
1 Atul Chokshi Professor Materials Engg. IISc Bangalore
2 Subodh Kumar Professor Materials Engg. IISc Bangalore
3 Debasis Sengupta Professor Oceanography IISc Bangalore
4 Bikramjit Basu Assoc.Professor Materials Science & Engg IISc Bangalore
5 Venu Madhav Govindu Asst. Professor Electrical engg IISc Bangalore
6 Siddhartha P. Sarma Assoc. Professor Molecular biophysics IISc Bangalore
7 Vidyanand Nanjundiah Professor Ecological sciences IISc Bangalore
8 Sanjit Chaterjee Asst. Professor Computer sci.&automation IISc Bangalore
9 K.S. Gandhi Professor Chemical engg IISc Bangalore
10 A.G. Menon Professor Earth sciences IISc Bangalore
11 Bhanu Pratap Das Senior Professor Astrophysics IIA Bangalore
12 Vandana Shiva Environmentalsit/Physicist Navadanya New Delhi
13 Sushma V. Mallik Assoc. Professor Astrophysics IIA Bangalore
14 C.V. Mallik Ret'd Professor Astrophysics IIA Bangalore
15 Rohini Balakrishnan Assoc. Professor Ecological sciences IISc Bangalore
16 Mahua Ghare post-doc Ecological sciences Centre for Pollination Studies Kolkata
17 Ravi Sankar Kottada Asst. Professor Materials Engg. IITM Chennai
18 Partho Sarothi Ray Asst. Professor Phsyics IISER Kolkata
19 Shiv Sethi Assoc. Professor Astrophysics RRI Bangalore
20 Meher Engineer Professor/ex-director Bose Institute Kolkata
21 K.S. Jagadish Ret'd Professor Civil engg IISc Bangalore
22 Supratik Chakraborty Professor IITB Mumbai
23 Deepak D’Souza Assoc. Professor IISc Bangalore
24 MJNV Prasad Asst. Professor Materials Engg. IITB Mumbai
25 Kartik Shanker Assoc. Professor Ecological sciences IISc Bangalore
26 Dibyendu Chakravarty Scientist Materials Engg. Arci Hydrabad
27 T.A. Abinandanan Professor Materials Engg. IISc Bangalore
28 K.V.S. Hari Pofessor Elec & comm engg IISc Bangalore
29 C.P. Rajendran Visiting Professor Earth sciences IISc Bangalore
30 Arijit Bishnu Assoc. Professor ISI Kolkata
31 Renee Borges Professor & Chairperson Ecological sciences IISc Bangalore
32 Lakshmi Saripalli Astrophysicist RRI Bangalore
33 Vijay Chandru Chairman and CEO Management/Comp sci. & automation Strand Bangalore
34 Sumati Surya Assoc. Professor Physics RRI Bangalore
35 Sachindeo Vaidya Assoc. Professor Physics IISc Bangalore
36 Procheta Mallik none Physics none Bangalore
37 Sushama Yermal Instructor Biologist IISc Bangalore
38 Palash B. Pal Professor Astrophysics Saha Inst. Kolkata
39 M.S. Bobji Assoc. Professor Mechanical Engg IISc Bangalore
40 Gopal Krishna NASI platinum Jubilee Senior Scientist Astrophysics TIFR (retired)/IUCAA Pune
41 Harish Bhatt Professor Astrophysics IIA Bangalore
42 Arati Chokshi none Astrophysics none Bangalore
43 Vinod John Asst. Professor IISc Bangalore
44 Dileep Jatkar Professor HCRI Allahabad
45 Anshuman Maharana Reader HCRI Allahabad
46 Naresh Dadhich Professor IUCAA Pune
47 Vikram Vyas Professor Shiv Nadir Univ UP
48 Krsihnendu Sengupta Professor IACS Kolkata
49 Suvrat Raju Reader Physics TIFR Bangalore
50 Abhishek Dhar Professor TIFR Bangalore
51 R.I. Kaveri post-doc Ecological sciences IISc Bangalore
52 Ashok Pati Professor Astrophysics IIA Bangalore
53 Joseph Samuel Professor Physics RRI Bangalore
54 Carol Upadhyaya Professor Social sciences NIAS Bangalore
55 Madan Rao Professor Phsyics RRI Bangalore
56 Sujay Basu ex-Professor/director Energy Jadavpur Univ/Centre of Energy and Environment Management Kolkata
57 Prajwal Shastri Astrophysics IIA Bangalore
58 Anjula Gurtoo Assoc. Professor Management/Comp sci. & automation IISc Bangalore
59 Sudhir Vombatkere Major General (ret’d) Civil engg none Mysore

Affiliations: IISc=Indian Institute of Science, RRI=Raman Research Institute; TIFR=Tata Institute of Fundamental Research;
IIA = Indian Institute of Astrophysics; IISER = Indian Institute of Science Education and Research; IACS = Indian Institute for the Cultivation of Science;
NIAS = National Institute of Advanced Studies; IUCAA = Inter-University Centre for Astronomy and Astrophysics;
IITM = Indian Institute of Technology, Madras, IITB = Indian Institute of Technology, Bombay; HCRI = Harish Chandra Research Institute

Tuesday, May 14, 2013

தொலைந்து போன‌ ஜ‌ன‌நாய‌க‌மும், தேய்ந்து போன‌ பெஞ்சுக‌ளும்






ஒரு குறிப்பிட்ட மன்னனிடமோ,நிலப்பிரபுவிடமோ அல்லது அவர் தம் குடும்பத்தினரிடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனக்குழுக்களிடமோ தேங்கியிருக்கும் அரசியல் அதிகாரம், இறைமை ஆகியவை முழுமையாக‌ மக்கள் கைக்கு இடமாற்றம் செய்யப்படும் போது தான் ஜனநாயகம் பிறப்பெடுக்கிறது.எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மக்கள் கைக்கு மாற்றப்படும் அதிகாரமே ஜனநாயகம்.அது மக்களின் சுய நிர்ணய உரிமையையும் சுய மதிப்பையும் அதிகாரத்தையும் கோருகிறது.அரசியல் அதிகாரம் என்பது சாமான்ய மக்களுக்குரியது.மக்களே நாயகர்கள்.உலகின் பல்வேறு நாடுகளில் மன்னராட்சியையும் சர்வாதிகார ஆட்சியமைப்புகளையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிந்து,மக்களாட்சியான ஜனநாயகத்தை நிறுவியதும் பெருந்திரளான மக்கள் சக்தியே.ஆகவே ஆட்சியமைப்பிலும் சரி,அல்லது எத்துணை உயர்ந்த லட்சியமாக இருந்தாலும் சரி. தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடமே இருக்க வேண்டும்.



ஒரு தனிமனிதனோ, இனமோ, குழுவோ எதேச்சதிகாரமாக முடிவுகளை தீர்மானிக்கவும் அதை மக்களின் விருப்பமும் பொருத்தமும் இல்லாமல் அம்மக்களின் மீது திணிக்கவும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.சுருங்கக் கூற வேண்டுமானால்,அரசியலில் மக்களின் பங்களிப்பு இல்லையென்றால் அங்கு ஜனநாயகத்திற்கு இடமில்லை.பல நாடுகளில் மன்னராட்சியை தூக்கியெறிந்து மக்களே ஜனநாயகத்தை நிறுவினார்கள்.ஆனால் இந்தியாவில் மன்னராட்சிக்கு முடிவுரை எழுதியது ஆங்கிலேயர்களே.அவர்கள் தமது சுயலாபத்திற்காகவும் நிர்வாக நலன்களுக்காகவும் ஜனநாயக அரசை நிறுவ
எத்தனித்தார்கள்.வேத கால பெருமையுடைய இந்தியாவை அந்நியர் ஆள்வதா என கொதித்தெழுந்து,போராடி ஆங்கிலேயரை விரட்டியடித்த இந்திய மக்களின் மனதில், மன்னர்கள் தான் இன்னும் வரலாற்று நாயககளாகவே நீடிக்கின்றனர்.மார்க்ஸ் சொன்ன அந்த காப்பிய மனநிலையில் தான் இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் இருக்கின்றனர். அநீதிகளிலிருந்தும் ஊழல்களிலிருந்தும் தங்களைக் காப்பாற்ற ஒரு அவதார புருஷர் அவர்களுக்கு எப்போதும் தேவையாக இருக்கிறார்.அந்த அவதார புருஷர் சினிமாக்களில் ஒற்றை ஆளாக நின்று ரவுடிகளை பின்னியெடுத்து நாயகியைக்
காப்பாற்றும் ஒரு சூப்பர் ஹீரோவாக பரிணமிக்கிறார் அல்லது இடுப்பில் கத்தியைச் சொருகி கொண்டு வர்மக்கலைக் கற்று, லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரியை ஆட்காட்டி விரலில் பதம் பார்க்கிறார். இன்னொரு ஹீரோவானவர் கடைசி பந்தில் சிக்சர் அடிப்பவராக இருத்தல் அவசியம்.இப்படியான கதாநாயக வழிபாடு,ஒரு வீழ்படிவாக நடுத்தரவர்க்க மனதில் தங்கியிருக்கிறது. இந்த கதாநாயகர்களுக்கு முன் மக்கள் பலவீனமானவர்கள்.சக்தியற்றவர்கள்.ஒரு மாபெரும் அரசை எதிர்த்து நாம் கேள்வி கேட்க முடியுமா? உடனே தூக்கி உள்ளே வைத்து விடமாட்டார்களா? அவர்களிடம் தான் இராணுவமும் போலிசும் இருக்கிறதே? அரசு சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.என்னய்யா ஜனநாயக நாடு இது? என நொந்து ஒரு கேள்வியை உதிர்த்தால் இதைச் சொல்லக் கூட உனக்கு உரிமை இருக்கிறதே..? இந்த ஜனநாயகமும் சுதந்திரமும் போதாதா என்று மறுபடியும் முதலிலிருந்து வருவார்கள்.

தமிழக மண்ணில், சாமான்ய மக்களை அரசியல் சக்தியாக உருமாற்றி மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்படுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு காலந்தொட்டே ஒரு வரலாற்றுப் பங்கு இருக்கிறது.பெரியாரிலிருந்து அண்ணா வரையிலான அந்த‌ வரலாற்றுத் தொடரை சற்றே உள்வாங்கினால் ஒரு ஜனநாயக சுழற்சி உருக்கொண்டதை உணர முடியும்.1960-களில் "சாமான்யர்களின் யுகம்" என்ற அறைகூவலின் மூலம் அண்ணா பெருந்திரளான தமிழக மக்களை அச்சுழற்சிக்குள் இழுத்து விட்டார்.இப்படியான திராவிட அரசியல் பாரம்பரியம் கொண்ட தமிழக மண்ணை இன்று வரை இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு வருகின்றன.இவ்விரண்டு கட்சிகளில் அதிமுக‌விற்கு தொட‌க்க‌ம் முத‌லே கொள்கை என்ற வஸ்து அறிமுகம் இல்லை. திமுக‌வின் கொள்கை அரசியல் என்பது இன்று தேர்தல் அரசியலாக சுருங்கி விட்டது. வாரிசு அரசியல், நிரந்தர பொதுச் செயலாளர் போன்ற ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு அரசியல் போக்கு, சர்வ சாதாரணமாக புழக்கத்துக்கு வந்திருக்கிறது.

மக்கள் விரோத,ஜனநாயகத்துக்கு எதிரான இவ்வரசியல் போக்கில்,மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடு.ஏனெனில்,சாமான்ய‌ மக்களின் அரசியல் பங்களிப்பில்,ஜனநாயக செயல்பாடுகளில்,
தேவையான ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ளை பேசுவ‌தில், விவாதிப்ப‌தில்,தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்றுவ‌தில்,ச‌ட்ட‌ங்கள் இய‌ற்றுவ‌தில் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌திநிதிக‌ளைக் கொண்டிய‌ங்கும் ச‌ட்ட‌ம‌ன்றத்தின் பங்கு அளப்பரியது. இத்தகைய பொறுப்புகளை உணர்ந்து தான் இன்றைய ஆளும் கட்சியும் மற்ற மக்கள் பிரதிநிதிகளும் தமிழக சட்டமன்றத்தை நடத்துகின்றனரா? சிறிதளவேனும் மக்கள் பிரச்சினைகள் அலசப் படுகின்றனவா? காகிதத்தையும், பேனாவையும் கொடுத்து 'ஜனநாயகம்' என்ற சொல்லுக்கு வரையறை, விளக்கம் எழுதச் சொன்னால், இன்று எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு சரியாக விடையளிப்பார்கள்? குறிப்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எத்தனை முறை "அம்மா" என்ற சொல்லைப் பயன்படுத்தி விடையளிப்பார்கள்?



முன்பெல்லாம் சட்டசபை கூடும் நாட்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யும் நிகழ்வுகள் வழக்கமான செய்திகளாக இருக்கும்.ஆனால் இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது வாடிக்கையாகி விட்டது.வெளிநடப்பு வேறு வெளியேற்றம் வேறு. அ.தி.மு.கவின் பேச்சுக்கு மறுபேச்சே இருக்கக் கூடாது. மாற்றுக் கருத்துடையோர், அரசின் கருத்தை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் சபாநாயகர் அவர்களை உடனடியாக அவையை விட்டு வெளியேற்றச் செய்வார்.ஆனால் இங்கே முதன் முறையாக‌ சபாநாயகரே வெளியேற்றப்பட்டுள்ளார். சபாநாயகர் ஜெயக்குமார் பதவி துறந்ததற்கு பல்வேறு பின்னணி காரணங்கள் இருந்தாலும் அ.தி.மு.க வில் ஜெயலலிதாவிற்கு இணையாக பரிவாரங்களை உருவாக்க முயல்கிறார் என்ற ஐயத்தின் அடிப்படையில் தான் அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆகவே அரசியல் அதிகாரத்தில் தனக்கு போட்டியாக யாரும் உருவெடுக்கக் கூடாது என்கிற ஒற்றை மைய அதிகாரக் கூச்சல் தான் மாற்றுக் கருத்தைக் கொல்லும் எதேச்சதிகாரமாக தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலிக்கிறது. மாதா மாதம் அமைச்சர்கள் மாற்றத்திற்கான காரணமும் இதுவே. மாற்று கருத்துகளை முன்வைக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவதால் ஆரோக்கியமான விவாதங்கள் என்பது முற்றிலும் சாத்தியமே இல்லாத‌ சூழல் தான் இன்று உருவாகி இருக்கிறது. முக்கியமான மக்கள் பிரச்சினைகள் எதுவுமே பேசப்படுவதில்லை. உதாரணத்திற்கு இன்று தமிழகத்தின் தலையாய பிரச்சினையான மின்வெட்டு பற்றியோ, தமிழக அரசின் மின் பகிர்மான கொள்கைகள் பற்றியோ எத்தனை விவாதங்கள் சட்டமன்றத்தில் நடந்தேறியிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடந்த வண்ணம் இருக்கிறது.சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் இந்திய அணுசக்தி கொள்கைகள் குறித்தும் மாற்று வழி மரபு சாரா மின் உற்பத்தி முறை குறித்தும் விவாதம் கூட வேண்டாம், குறைந்த பட்சம் ஒரு குரலாவது எழுப்பியிருப்பார்களா? க‌டந்த ஆண்டு தலித் மக்களுக்கு எதிராக ஒரு மாபெரும் வெறியாட்டம் சாதி வெறி கும்பல் ராமதாஸால், தருமபுரியில் நடந்தது. அரசின் சாதி குறித்த நிலைப்பாடு குறித்து பேசினார்களா? குறைந்த பட்சம் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றினார்களா ? இன்றுவரை தமிழக அரசு "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்" ராமதாஸைக் கைது செய்யாமல், உப்பு சப்பற்ற வழக்குகள் போட்டு, ராமதாஸ் கும்பலைக் கைது செய்து இன்று விடுவித்தும் விட்டது. விவசாயம் பொய்த்தது, காவிரி டெல்டா விவசாயிகள் தற்கொலை,ஸ்டெர்லைட் நச்சு ஆலை என எல்லா மக்கள் பிரச்சினைகளுக்கும் தமிழக சட்டமன்றம் செத்த பாம்பாகத் தானே இருந்தது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் ஈழப்போராட்டங்கள் உச்சமடைந்த போது, சட்டசபையிலும் ஈழத்திற்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்தியாவில் பல மாநில சட்டசபைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டு சட்டசபை சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என திமிராக, தமிழக சட்டசபை தீர்மானங்களை நிராகரித்தார்.இந்திய அரசின் இந்த கண்டு கொள்ளாத போக்கை எதிர்த்து, சட்டப்பூர்வமாக கேள்விக் கேட்கக் கூட வழியில்லாத ஜனநாயக அமைப்பில் தான் தமிழக அரசும் சட்டசபையும் இருக்கிறது. இந்நிலையில் தான் இந்த மன்னர் புகழ் பாடிப் பரிசில் பெறும் புலவர்களை,மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசவும் விவாதிக்கவும் அழைக்கிறோம்.ஆகவே இந்திய நாடாளுமன்றத்திலும் ஜனநாயகமில்லை.தமிழக சட்டசபையிலும் ஜனநாயகமில்லை என்றால் நாம் வாழ்வது கி.பி.1700 களிலா?

இந்த நெருக்கடிகளையெல்லாம் பேசாமல் அவர்களுக்கு அங்கு என்ன வேலை? என்று பார்த்தால் அது ஜெயலலிதாவை பாராட்டிப் பேசுவதும், கை வலிக்க மேசைகளைத் தட்டுவதும் என்ற அளவில் மட்டுமே வந்து நிற்கிறது.தனது பட்ஜெட் உரையில் சரியாக முதல் அரைமணி நேரம் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி, பொற்பாதக் கமலம், அடியேன், தாயன்பு போன்ற சொல்லாடல்களையெல்லாம் அடி பிசகாமல் கூவுகிறார் நிதியமைச்சர் ஓ.ப மற்ற அமைச்சர்களும் இன்று வரை காவிரித்தாய், ஈழத்தாய் என்றெல்லாம் மக்கள் மன்றத்தில் தனி நபர் துதி பாதி மகிழ்கின்றனர்.அடிப்படையில் சட்டமன்றம் அதன் பொருளை இழந்து இன்று வெறும் அதிமுக பொதுக்கூட்ட மேடைகளாகவும், பாராட்டு விழாக்களாகவும் பரிணாம வளர்ச்சி பெற்று பல்லிளிக்கின்றன.ஒட்டுமொத்த அதிமுக கூடாரமே அடிமைகளின் கூடாரமாகவும்,ஜெயலலிதா என்ற சர்வ வல்லமை பொருந்திய எதேச்சதிகாரிக்கு சேவகம் செய்யும் அடிமை வம்சமாகவும் மாறிப் போயிருப்பது நமது ஜனநாயக விழுமியங்களைத் தேடும் வரலாற்றுப் பாதையில் ஒரு கொடூர நகைச்சுவைக் காட்சி.அதுவும் அடிமைகளில் யார் விஞ்சி நிற்பது என்று இன்றைய சட்டசபையில் ஒரு கடும் போட்டியே நிலவுகிறது.கூட்டணி கட்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம்.தன் வழியைப் பின்பற்றி அம்மாவிடம் சரணடையுங்கள் என திறந்த மனதுடன் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் கோரிக்கை வைக்கிறார். இதைக் கேட்டு அதே கட்சியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் அவரை அடிக்கப் பாய்கின்றனர்.விதிகளின் படி அடிதடி தவறு தான் என்றாலும் அதற்காக சபாநாயகர் அவர்களை(அதாவது தேமுதிகவை சேர்ந்தவர்களை மட்டும்) ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்கிறார். குற்றத்திற்கு காரணமாக இருப்பவர்கள் தான் அதிகம் தண்டிக்கப்பட வேண்டும் என கூறுகின்றது இந்திய தண்டனைச் சட்டம், ஆனால் இங்கு நடப்பது அதற்கு நேரெதிரான நடவடிக்கைகள். சபை விதி எண் 110ன் கீழ் தான் முதல்வர் ஜெயலலிதா எப்பொழுதும் பேசுகின்றார். விதி எண் 110 - முதல்வர் பேசி முடித்தவுடன் அதன் மேல் யாரும் பேசக்கூடாது, கேள்வி கேட்கக் கூடாது.வேண்டுமானால் நன்றி தெரிவித்து உரையாற்றலாம்.என்னே ஒரு உன்னதமான விதி.ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது.



நத்தம் விஸ்வநாதன் உயரமாக இருப்பதால் சட்டசபையில் மைக் முன்பு குனிந்து பேசியிருக்கிறார்.உடனே நம் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி,"ஆண்களுக்கு லட்சணமே நிமிர்ந்தபடி பேசுவது தான்.அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போல உயர்ந்த மனிதர்கள் பேசும்போது மைக் முன்பு குனிந்து கொண்டு பேச வேண்டியுள்ளது. இதே நிலை தான் உயரமான மற்றவர்களுக்கும் ஏற்படுகிறது.எனவே ஆண்கள் ஆண்களாகவே பேசும் வகையில் மைக்குகளை மாற்றியமைக்க வேண்டும்" என்று மிக‌வும் வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த, இதுவ‌ரை த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் பேச‌ப்படாத மாபெரும் ஒரு ம‌க்க‌ள் பிர‌ச்சினை குறித்து திருவாய் மலர்கிறார்.மேஜை கரகோசம் விண்ணை முட்டுகிறது.

இப்படியான அரசியல் சமூக அமைப்பினூடாகத் தான் சாமான்ய மக்களின் கைகளுக்கு இடமாற வேண்டிய‌ அரசியல் அதிகாரம் மலைப்பாம்புகளின் அசுரத் தழுவலில் எலும்புடைந்து சிதைந்து கிடக்கிறது. நம்மை இரட்சிப்போரும் மீட்பரும் புதிதாக வானிலிருந்து உயிர்த்தெழப் போவதில்லை.நம் கையில் இருக்கும் போராட்ட வடிவங்கள் தான் சிதைவுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கப் போகும் சர்வ வல்லமை பொருந்திய, கூர் தீட்டப்பட வேண்டிய ஆயுதங்கள்.



-அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்.

=================

Tuesday, May 7, 2013

பா.ம.க-வின் சாதி அரசியலும், தமிழக அரசும் .....



சென்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தோற்றதில் இருந்து இனி திராவிட கட்சிகளுடன்(திமுக, அதிமுக) கூட்டு இல்லை என் அறிவித்தது. அந்த தேர்தலில் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்ற முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில் களம் இறங்கி படு தோல்வியை சந்தித்தது பா.ம.க(தோற்றதற்கு காரணம் திமுக எதிர்ப்பலை). இந்த தேர்தலுக்கு பின்னர் திராவிட கட்சிகளை சாடுவதும், தமிழன் இங்கே ஆளவில்லை என்று கூறுவதுமாக இருந்து வந்தது பா.ம.க. சென்ற ஆண்டு சித்திரை முழு நிலவு விழாவில் தான் சாதிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கான "நாடக காதல்" அரசியலை கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது. நாடக காதல் என்றால் என்ன? பா.ம.க, மற்ற சாதி சங்கங்கள், கட்சிகளை பொறுத்தவரை ஒரே வர்க்க, சாதி நிலையில் இல்லாத எல்லா காதலுமே நாடக காதல், குறிப்பாக தலித் ஆண்கள் வன்னியர் சாதி பெண்களை காதலிப்பது தான் நாடக காதல். எல்லா வேடமும் போட்டு பார்த்து ஒன்றும் பயனில்லை என்ற பின்னர் தான் தனது உண்மை முகமான சாதீயத்தை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சாதிய கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டு என வெளிப்படையாக அறிவித்தது பா.ம.க.

சாதீய கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? வன்கொடுமை சட்டமும், காதல் திருமணமும் தான் இன்றும் ஆதிக்க சாதிகளுக்கு வேப்பங்காயாக கசப்பது, ஆகவே அந்த இரண்டையும் கையில் எடுப்பதன் மூலம் சாதீய கட்சிகளை ஒன்று சேர்க்க தொடங்கினார் இராமதாஸ். அதற்கு பிறகு ஊர் ஊராக சென்று காதல் திருமணங்களை குறிப்பாக மாற்று சாதியில் குறிப்பாக தலித்களுடன் நடக்கும் திருமணங்களை எல்லாம் "நாடகக் காதல்" என்றும், அவர்கள் சொத்தை மட்டுமே காதலிக்கின்றார்கள் என்றும், பெண்களை ஏமாற்றிவிடுகின்றார்கள் என்றும், வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்றும் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய தொடங்குகின்றார் இராமதாஸ். இதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு கூட்டத்தில் காடு வெட்டி குரு, இராமதாஸ் பேசிய வன்முறையை தூண்டும் பேச்சுகளின் வழியே தூண்டப்பட்ட பா.ம.கவினரும், வன்னிய சாதி சங்கத்தை சேர்ந்தவர்களும் தர்மபுரி, நாயக்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தலித் வீடுகளை திட்டமிட்டு தாக்கினார்கள்.இதற்கு காதல் திருமணம் தான் காரணம் என்ற காரணம் கற்பிக்கின்றனர். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை. அதற்குள் இந்த ஆண்டு கூட்டமும் அவர்கள் திட்டமிட்ட படியே நடந்தேறி விட்டது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மட்டுமில்லாமல் அவர்கள் ஏற்கனவே திரட்டிய மற்ற சாதி சங்கங்களின், சிறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சாதீய நஞ்சை கக்கியுள்ளார்கள். இது ஒருபுறம் என்றால் இந்த கூட்டத்திற்கு வரும் வழியிலேயே பா.ம.க உறுப்பினர்கள் மரக்காணம் தலித் காலணியிலும், இஸ்லாமியர் பெருன்பான்மையாக வாழும் கூனிமேடு பகுதியிலும் திட்டமிட்டு வன்முறையை தூண்டியுள்ளார்கள். இந்த இரண்டையும் விரிவாக பார்ப்போம்.


மாமல்லபுரம் சித்திரை திருவிழா -

சென்ற ஆண்டு காடு வெட்டி குரு வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதை சுட்டிக்காட்டி இந்த கூட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட இந்த மனுவை விசாரித்த் நீதிமன்றம் முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க, காவல்துறை 18 விதிமுறைகளோடு மாநாடு நடத்த அனுமதி வழங்கி இந்த ஆண்டும் சாதீய பிரச்சனை தொடர அச்சாரம் அளித்தது. இந்த மாநாட்டில் காடு வெட்டி குருவும், இராமதாஸீம் சென்ற ஆண்டை போலவே தலித் எதிர்ப்பு பேச்சுகளையும், காதல் திருமண எதிர்ப்பு பேச்சுகளையும் பேசியுள்ளனர். இதோ சில உதாரணங்கள்....

காடு வெட்டி குருவின் நஞ்சைக் கக்கும் பேச்சு-

"கலவரம் செய்வது எங்கள் நோக்கமல்ல, நாங்கள் கலவரம் செய்தால் இந்த தமிழகம் தாங்காது. எங்களை அடக்குவதற்கு காவல்துறையும் பத்தாது"....


"நான் என்ன மோளம்(பறை) அடிக்கிற சாதியா? மோளம் அடிச்சுட்டு உட்காந்து இருக்க"....

"உண்மையிலே கேட்கிறேன் உனக்கு மானம், சூடு, சொரணை எல்லாம் வன்னியன்ட இருக்கா, இருந்துச்சுன்னா வீச்சருவாள்ல காட்டாத, வாக்கு சீட்டுல காட்டு, 2016ல் தமிழகத்தில் வன்னியர்கள் ஆட்சியமைக்க வேண்டும். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”

இராமதாஸின் நஞ்சைக் கக்கும் பேச்சு-


"நாங்க அனைத்து சமுதாய பேரியக்க கூட்டத்திற்கு கருப்பு கொடி காட்டும் போது அரசகுமார் கண் சிமிட்டினால் என்னாகும். எஸ்.அலங்காரம் கண் சிமிட்டினால் என்னாகும், கலவரம் தான். நாங்க கலவரம் பண்ணினா தாங்க மாட்டிங்க......"


"வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.

காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னையே ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா? தாக்கத் தெரியாதா? காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது."



இதுவரை இராமதாசோ, பாட்டாளி மக்கள் கட்சியினரோ தமிழகத்தின் பிரச்சனைகளான காவிரி பிரச்சனைக்கோ, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கோ, கூடங்குளம் பிரச்சனைக்கோ கண்ணசைத்திருக்கிறார்களா, அல்லது இந்த வீரியத்துடன் அரசை எதிர்த்திருக்கின்றார்களா? அல்லது தமிழீழத்தில் தினம், தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடினார்களா?. வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் கடலூர் மாவட்டத்தில் பல வேதியியல், சாராய நிறுவனங்களும், பல பன்னாட்டு நிறுவனங்களும் அங்குள்ள வளங்களையும், மக்களையும் பாழாக்குகின்றனரே அதை எதிர்த்தோ, அல்லது இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய சாய தொழிற்சாலையை எதிர்த்து போராடியிருக்கின்றனரா? என்றால் இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. பா.ம.க, வன்னியர் சங்கத்தின் நோக்கம் ஒன்று தான் அவர்களுக்கு தேவை ஒரு அமைச்சர்/மந்திரி பதவி அது இந்த மாநாட்டில் குரு, இராமதாஸ் பேசியதில் இருந்து நன்றாகவே தெரிகின்றது. அதற்காக தான் இன்று சாதீ அரசியலை கையில் எடுத்துள்ளார்கள். இதை பெரும்பான்மையான வன்னிய மக்கள் புரிந்து கொண்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.




சாதீ அரசியலை கண்டு கண்ணை மூடிக்கொள்ளும் தமிழக அரசு -

தமிழக அரசு இன்னும் குரு, இராமதாஸ் போன்றவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல், கூட்டத்தை தாமதமாக நடத்தினார்கள் என்று ஒரு வழக்கு போட்டு கைது செய்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த சாதீ அரசியல் விளையாட்டை அரசே ஊக்குவித்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் இராமதாஸ் மேல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார் என்று ஒரு வழக்கும் போட்டுள்ளது, உண்மையில் இராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விதைக்கும் வன்முறையையும், தாழ்த்தப்பட்டவர்கள் மேல் அவர்கள் உருவாக்கும் காழ்ப்புணர்ச்சியை தடுத்து அரசு எதிர் பிரச்சாரம் செய்யாமல் (கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக அரசு பிரச்சாரம் செய்ததை நினைவில் கொள்க), அவர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தார் என வழக்கு பதிவு செய்து சாதீ அரசியலுக்கு மேலும் எண்ணெய் ஊற்றி வளர்த்து, மக்கள் விரோத போக்கை ஒரே நேரத்தில் கடைபிடித்து வருகின்றது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. கூடங்குளத்தில் 55,000த்திற்கும் அதிகமான வழக்குகளையும், இந்திய வரலாற்றிலேயே அதிகமான தேச துரோக வழக்குகளையும் போட்டுள்ள காவல்துறைக்கு, காடு வெட்டி குரு, இராமதாஸின் மேல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்வது இதுவரை இயலாமலே உள்ளது ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆமையை விட மோசமான வேகத்தில் சென்று கொண்டுள்ளது, இதை கூட தடை செய்ய வேண்டும், அல்லது திருத்த வேண்டும் என்று கோருகின்றது இராமதாஸ் தலைமையிலான சாதிய கூட்டணி.



மரக்காணம் வன்முறையும், கண்ணை மூடிக்கொண்ட தமிழக அரசும்

இது ஒருபுறம் என்றால் இந்த சித்திரை முழு நிலவு விழாவிற்கு வந்த பா.ம.க-வினர் உருட்டு கட்டை(களி), அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர், மேலும் வரும் வழியெங்கும் மது அருந்திவிட்டு பெண்கள் முன்னர் கைலியை தூக்கிகாட்டி ஆபாசமாக நடந்துள்ளனர், அதுமட்டுமின்றி திட்டமிட்டு மரக்காணம் தலித் காலணியிலும், கூனிமேடு இசுலாமியர்கள் வாழும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி, வீடுகளையும், கடைகளையும் எரித்துள்ளார்கள். இந்த ஆண்டு நடக்க இருக்கும் கூட்டத்தை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக அரசிற்கு வழங்கியது நீதிமன்றம். இந்த கூட்டத்திற்கு 18 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. இதற்கு முன்னால் நடந்த கூட்டங்களை கணக்கில் வைத்து எவ்வளவு பேர் வருவார்கள், என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை என்பதை காவல்துறை ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் இவை எதையுமே செய்யவில்லை என்பதையே நடந்த வன்முறை காட்டுகின்றது.


ஒரு கூட்டத்திற்கு செல்வோர் உருட்டு கட்டை, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களுடன் செல்வதை ஒரு காவல்துறை சோதனை சாவடி வைத்து எல்லா வாகனங்களையும் சோதனை செய்ய முடியாதா? இல்லை இப்படி ஒரு வன்முறை நடக்கவேண்டும், மக்களை சாதிய ரீதியாக பிளவு படுத்த வேண்டும் என காவல் துறையும், அதை வழிநடத்தும் அரசும் விரும்புகின்றதா?. கூடங்குளத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போட்டு, அதிரடி படை, துணை இராணுவம், கடலோரக் காவல் படை, வான் படை போன்றவற்றை களத்தில் இறக்கும் தமிழக காவல்துறைக்கு இந்த திட்டமிட்ட கூட்டத்தை ஒழுங்கப்படுத்த முடியாது என ஜெயலலிதா அவர்கள் கூறுவதும், உணர்ச்சி கொந்தளிப்பால் கொலைகள் நடைபெறுவதால் அவற்றை காவல்துறை தடுக்க முடியாது என அவர் அறிக்கை விடுவதும், காவல்துறை மக்கள் போராட்டங்களை தடுக்கவும், அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மட்டுமே,மற்ற படி திட்டமிட்டு சாதிய, மத வன்முறைகளை தடுக்கவோ, மக்களை பாதுகாக்கவோ கிடையாது என்பதை வெளிப்படையாக அறிவிக்கின்றது. இன்னும் தெளிவாக சொல்வதென்றால் ஆளும் கட்சி ஆதரவு படையே காவல்துறை, மக்களை காப்பதற்கல்ல. ஒரு மாநிலத்தின் முதல்வர் காவல்துறையால் கொலைகளை தடுக்க முடியாது என கூறுவது பலத்த ஐயங்களை எழுப்புகின்றது, கொலையை தடுக்க முடியாத, மக்களை காவல் காக்க முடியாத ஒரு அமைப்பை(காவல் துறை) எதற்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவு செய்தி நடத்த வேண்டும்? வெறுமனே மக்கள் போராட்டங்களை கலைக்கவும், மக்களை அடித்து துன்புறுத்துவதற்காகவுமா? என்பது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றது.



சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் இயற்கை வளத்தை,தங்கள் வாழ்வாதாரத்தை காக்க ,மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படுத்தும் அணு உலையை எதிர்த்து போராடும் இடிந்தகரை மக்கள் மேல் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவான 55,000த்திற்கும் அதிகமான வழக்கும், அவர்கள் மீது தொடர்ச்சியாக வன்முறையும், அடக்குமுறையும் ஏவும் அரசு அதே சமயம் சமூகத்தை பின்னிழுக்கும் சாதீய அரசியல்வாதிகளின் மேல் கரிசனம் காட்டுகின்றது. அரச நிறுவனம் தன்னைப் பாதுகாத்து கொள்ள முன்னுக்கு செல்வதை தடுக்கவும் செய்யும், அதே சமயம் பின்னுக்கு இழுப்பதை ஆதரிக்கவும் செய்யும். அரசுக்கு தேவை தன்னை பாதுகாத்து கொள்வது மட்டுமே.

மேலும் சென்ற ஆண்டு பசும்பொன்.முத்துராமலிங்கம் நினைவேந்தலுக்கு சென்றவர்கள் கொல்லப்பட்டதாகட்டும், தர்மபுரி வன்முறையாகட்டும், இந்த மரக்காணம் வன்முறையாகட்டும் எல்லாவற்றையுமே காவல்துறையால் தடுத்திருக்க முடியும் என்பதையே அந்த வன்முறைகளை ஆராய சென்ற எல்லா உண்மை அறியும் குழு அறிக்கைகளும் காட்டுகின்றது. ஆகஸ்டுக்கு பின்னரான நான்கு மாதங்களும் தெற்கு மாவட்டங்களான சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்கள் எல்லா ஆண்டுமே பதட்டம் நிறைந்ததாகவே உள்ளது. இங்கு பதட்டத்தை தணிக்கவும் , சமூக நல்லிணக்கம் நிகழும் இதுவரை ஏதாவது நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதா என்றால் இல்லை என்றால் பெயருக்கு அமைதி கூட்டங்களையும், நல்லிணக்க கூட்டங்களையுமே நடத்தியுள்ளன என்ற பதிலே வருகின்றது. சாதிய அடிப்படையில் வன்முறைகள் நிகழ காவல் துறையின் அலட்சிய போக்கு மிக முக்கிய காரணியாக இருக்கிறது.மக்களிடையே சாதி அடிப்படையிலான பகை, பதட்டமான சூழல் நிலவுவது,மக்கள் நலன் சார்ந்த பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பி,மக்கள் எந்த ஒரு பொது பிரச்சினைக்கும் ஒன்று படுவதை தடுக்க என அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதே போன்றதொரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி வரும் பா.ம.க-வின் சாதீய அரசியலை கண்டிக்காமல், அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யாமல் இங்கும் அது போல ஒரு பதட்டமான சூழ்நிலையை அரசு திட்டமிட்டே ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகின்றது. சமூகம் நல்லிணக்கமாக இருந்தால் மக்கள் இங்கு உள்ள உண்மையான பிரச்சனைகளான மின்வெட்டு , விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கல், காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சனை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்றவற்றில் ஒன்று சேர்ந்து போராடி தங்களுக்கு அச்சுறுத்தலாக ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அரசு திட்டமிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான வேலைகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றது.



நடந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு சுருங்க கூறுவது என்னவென்றால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பா.ம.க-வும் சாதி கட்சிகளும் சாதீய அரசியலை கையில் எடுத்துள்ளன. ஆளும் அரசோ மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்பவதற்காக இந்த சாதீய அரசியலையும், வன்முறையை ஊக்குவித்து வருகின்றது. இல்லை அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது என கருதுவோருக்காக இறுதியாக ஒரே ஒரு தகவல் சென்ற ஆண்டு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த வன்முறை மீதான குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை, குற்றம் சாட்டப்பட்ட பல முதன்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாகவும், மேலும் பல வன்முறைகளை அந்த பகுதியில் தூண்டியும் வருகின்றனர் என்பது தான் கள நிலவரம். அரசியல் அதிகாரத்திற்காக சாதீ அரசியலை பயன்படுத்தும் பா.ம.க போன்ற கட்சிகளை இங்குள்ள இயக்கங்கள்ம் அரசியல் கட்சிகள் தனிமைப்படுத்த வேண்டும். இது போன்ற சாதீய அரசியலை எல்லா சாதியில் உள்ள பெரும்பான்மை மக்களும் எதிர்த்து தனிமைப்படுத்துவதன் மூலமாக நாம் நம் முன்னே உள்ள தமிழீழ, மின் வெட்டு, காவிரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு, தனியார்மயமாக்கல் போன்ற முக்கிய பிரச்சனைகளை ஒருங்கிணைந்து எதிர்த்து நம் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.


நன்றி - வினவு, ஆனந்த விகடன், Dia Nuke.

நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்

Monday, May 6, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் - சூழ்ந்துள்ள இந்திய அரசியலும் பொருளாதாரமும்



"கிரிக்கெட் ஒருகாலத்தில் விளையாட்டாக இருந்தது;

பின்னர் அது சூதாட்டமாக இருந்தது;

இப்போது அது பொழுதுபோக்காக மாறிவிட்டது!"

என்றார் நண்பர் ஒருவர்.



பொழுதுபோக்கில் என்ன தவறு? சரியான கேள்விதான்... இந்த கேள்விக்கு போகுமுன் ஒரு குட்டி பிளாஸ்பேக்...

ஐபிஎல் (IPL - இந்திய பிரிமீயர் லீக்) எனப்படும் இருபது ஓவர் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியத்தால்(பிசிசிஐ- BCCI) 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பே ஐசிஎல் (இந்திய கிரிக்கெட் லீக்) இருபது ஓவர் போட்டி வடிவம் அறிமுகபடுத்தப்பட்ட போதும் பிசிசிஐ-யின் ஆசி இல்லாதால் அது பெரிய தோல்வியை சந்தித்தது.



பிசிசிஐ இந்திய அரசின் ஆதரவுடன் நாட்டின் மிகமுக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களால் நடத்தப்படும் ஒரு தனியார் அமைப்பு என்பது நம்மில் சிலபேருக்குத்தான் தெரியும். இந்த பிசிசிஐ அமைப்பு கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஒரு அணி அமைக்கும். அந்த அணி ‘இந்திய அணி’ என்ற பெயரில் இதே போல பிற நாட்டின் அமைப்புகள் அனுப்பும் அணியுடன் விளையாடும்... இருந்தும் இந்திய நாட்டில், ஏன் மக்கள் குறிப்பாக இளையோர் பிசிசிஐ இந்திய அணியின் வெற்றி தோல்விகளைத் தங்கள் நாட்டின் வெற்றி தோல்வியாக கொண்டாடுகிறார்கள்? இந்த தேசிய உணர்வின் வெளிப்பாடு தானாக இந்திய மக்களிடம் தோன்றி வளர்ந்ததா?

கிரிக்கெட் வளர்ச்சி, அதன் பிரபலம், தேசிய உணர்வின் வெளிப்பாடாக ஆனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

1. 1990க்கு அப்புறமான உலகமயமாக்கல் அல்லது உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருந்த தாராள பொருளாதாரக் கொள்கை இந்திய ஒன்றியத்தையும் தாக்கியது. அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்தபின்னும் அதுவரை தொடர்ந்த அமெரிக்கா மற்றும் சோவியத் ரசிய ஒன்றிய அரசுகளின் உலக ஏக ஆதிக்கத்தின்(ஏகாதிபத்தியம்) மீதான பனிப்போர் சோஷலிச சோவியத் ரசிய ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் முடிவுக்கு வந்தது. முதலாளித்துவ அமெரிக்க அரசு உலகின் ஏக போக ஒற்றை ஆதிக்கமானதும், உலக நாடுகளுடன் குறிப்பாக இந்தியா போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. அதன்படி அமெரிக்க நாட்டின் பெரு நிறுவனங்கள் தடைகளின்றி வர்த்தகம் செய்துகொள்ள சந்தையாக இந்த வளர்ந்துவரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன‌. இப்படித்தான் பல கோடி மக்கள்த்தொகை கொண்ட இந்திய ஒன்றியமும் 1990க்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையானது.

2. இதற்கும் கிரிக்கெட் வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? வர்த்தகம் செய்துகொள்ள, சந்தை அமைக்க உரிமை மட்டும் கிடைத்தால் போதுமா... சந்தையில் வியாபாரம் செய்யவேண்டிய பொருட்களை எப்படி பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது? பிரித்தானியா அதன் காலணி அடிமை நாடுகளில் ஒரு அடிமை விளையாட்டை விட்டு சென்றிருந்தது. அதாவது குறிப்பிட்ட சிலர் மட்டும் விளையாடுவார்கள், பெருவாரியான மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள். இதில் விளையாடும் ஆர்வத்தை விட பார்வையாளரின் ரசிக்கும் ஆர்வமே அதிகமாய் இருக்கும். (இன்றளவும் சிறுவயதில் இருந்தே மட்டை பந்து சகிதம் பையுடன் பணம் கொடுத்து பயிற்சி எடுக்கும் மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டுமே கிரிக்கெட்டில் விளையாடுபவர்களாகவும், மற்றவர்கள் தொலைக்காட்சியிலும், மைதானத்தில் பார்வையாளர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.எவ்வளவு திறமை இருந்தும் சாதாரண எளிய குடும்ப பின்புலம் உள்ளவர்களுக்கு இடமே கிடையாது.அப்படியே அரிதாக சிலருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அது விளம்பரத்திற்கு - மக்களை ஈர்க்கவே, இதனால் பெருவாரியான மக்கள் தங்கள் நேரம், பணத்தை விரயம் செய்து பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.) 1983 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் வெற்றிக்குப் பிறகு மேலும் பிரபலமாகியிருந்த இந்த கிரிக்கெட் விளையாட்டுதான் பன்னாட்டு நிறுவனங்களால் சந்தைப் பரவலாக்கலுக்கு பயன்படுத்தப்பட்டது. பல நாடுகள் பங்கேற்கும் பெரிய பெரிய போட்டி தொடர்களை பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து அவைகளின் பெயரிலேயே நடத்தியது, பன்னாட்டு விளையாட்டு ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் நுழைந்தது நினைவிருக்கலாம். இந்திய அணி 90களில் அதிகமாக வெளிநாடுகளுடன் அதிக போட்டிகள் அமைத்து விளையாடியது.



கிரிக்கெட் மக்களோடும், இளைஞர்களோடும் இரண்டறக் கலந்து கொண்டிருந்தது.அவ்வேளையில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக உழைக்கும் அரசியல்வாதிகளின் திட்டத்தின் படி ஏற்கனவே பல காலமாக தீர்க்காமல் விடப்பட்ட ஜம்மு-காசுமீர் மாகாண எல்லைப் பிரச்சனைகளைத் தூண்டி, பாகிசுதானை எதிரிநாடாக ஆக்கி,வெகுசன மக்கள் மட்டத்தில் கொண்டு சேர்க்க கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள்; அவர்களின் திட்டப்படி தேசிய உணர்வு விளையாட்டுடன் கலக்கிறது.உருவாக்கப்பட்ட எந்திர மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட உயிர்தான் தேசிய உணர்வு என்ற ஆயுதம்! அந்த காலகட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட விளம்பர மாடல் தான் சச்சின் ரமேசு டெண்டுல்கர்.(அவருக்கே தெரியாமல் தேனில் விழுந்த வண்டாகக் கூட அவர் ஆகியிருக்கலாம்.தனிப்பட்ட முறையில் அவருடைய நேர்த்தியான ஆட்டத்திற்கு நானும் ரசிகன் தான், அவர் எதற்கு எப்படி பயன்படுத்தப்பட்டார் என்ற நாம் எழுப்புகிற நியாமான வினாவே இந்த விடையைத் தருகிறது).அன்று சச்சின் டெண்டுல்கர் என்ற ஒற்றை ஆட்டக்காரர்தான் தொய்வில் இருந்த இந்திய கிரிக்கெட்டை இந்திய மக்களிடம் பிரபலமாவதற்கு முக்கிய பங்காற்றினார் என்பதில் எவருக்கும் வேறுகருத்து இராது.(நண்பர் ஒருவர் சில வருடங்கள் முன்புவரை அடிக்கடி சொல்லிவருவதுண்டு. 'சச்சின் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றதும் கிரிக்கெட் பார்வையாளரில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்' என்று.அந்த முடிவை அவர் பின்னர் மாற்றிக்கொண்டார் என்பது தனிக்கதை.

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமானதில் பன்னாட்டு நிறுவனங்களில் விருப்பு இருந்திருக்கலாம்.சந்தையைப் பிரபலப்படுத்த இதைச் செய்வதில் என்ன தவறு? இதனால் என்ன தவறு விளையப்போகிறது...?

சந்தையைப் பிரபலப்படுத்துவது என்பது,'பொருளைக் கொண்டு வந்தான், விளம்பரம் செய்தான், இங்கே அதற்கு தேவை இருந்தது, அவர்களின் பொருள்களில் தரம் இருந்தது, அதனால் இலாபம் அடைந்தான், பணத்தை எடுத்துச் சென்றான்' என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது.மக்கள் எண்ணத்தில் சில நிறுவனங்களின் பெயர்கள் மட்டுமே ‘பிராண்ட்’ என்ற பெயரில் இடம்பெற வைத்தார்கள். இந்த சந்தைப் போட்டியில் விளம்பரம் செய்துகொள்ள முடியாத உள்நாட்டில் உற்பத்திசெய்த பொருள்கள் பெரிய சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இந்திய உழைக்கும் எளிய மக்கள், சிறு தொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதனால் பாதிப்படைந்தனர்.இந்தியாவிலேயே பெருநிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பன்னாட்டு நிறுவனப் பொருட்கள் அளவிற்கு விளம்பரம் செய்து தங்கள் சந்தைகளைத் தக்கவைத்துக்கொண்டன, சில பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து இங்கேயே அந்த பொருட்களைத் தயாரித்து சந்தையில் விற்க ஆரம்பித்தன.

மக்கள் தொகைப் பெருக்கத்தினால் தேவைப்பட்ட அதிக வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பொருட்களின் வரவினால் உள்ளூர் நிறுவனத்தில் வேலை இழப்பு இவைகளினால் மக்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாரானார்கள், பெரும்பாலோர் தற்காலிக ஒப்பந்த வேலைக்கும் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் குறைந்த கூலி, அதிக நேர வேலைப்பளு, உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டிய பளு என எல்லாவற்றிகும் தலையாட்டி பெரும் நெருக்கடியில் இருக்கிறார்கள் மக்கள். (இது தான் பன்னாட்டு நிறுவனங்களை கொண்டு வந்து மக்களுக்கு வேலை கொடுப்பதாக அரசு சொல்லிக்கொள்ளும் பெருமிதத்தின் மறுபக்கம்).

உற்பத்தி வேலைக்கான குறைவான / வெளிப்படையற்ற / சுதந்திரமற்ற சம்பள நிர்ணயம், உற்பத்திவிலையைத் தாண்டி பன்மடங்கு / வெளிப்படை தன்மையற்ற விலை



அதாவது பொருட்களைத் தயாரிப்பதும் இங்கே, சந்தையும் இங்கே, இலாபத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்கு, இந்த பொருட்களை மட்டுமே வாங்கவைக்கிற விளம்பர உத்திகள், தரம் என்ற பெயரில் அதிக விலை.இந்த சந்தை வளர்ச்சி வாடிக்கையாளருக்கும் பயனைக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.இன்று தேவையைத் தாண்டி தேவையற்றப் பொருட்கள் வீட்டில் அடைய நமது தொலைக்காட்சியில் தினமும் வரும் விளம்பரமும், இணையம் போன்ற நவீன தொலைத்தொடர்பும் தான் காரணம்... சில பொருட்கள் இல்லை என்றால் என்ன இது இல்லையா என்று நண்பர்கள் கேட்பார்கள் என்பதற்காகவே பயன்படுத்தாவிட்டாலும் மக்கள் வீட்டில் பல பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.பயன் யாருக்கு? இதன் மூலக் காரணம் என்ன?

இத்தனைக்கும் காரணம் தாராளப்பொருளாதாரம் / உலகமயமாக்கல் என்ற ஒற்றைக் கலைச்சொல்லும், கிரிக்கெட் போன்று பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையைப் பிரபலப்படுத்த எளிமையாக்கப்பட்ட வழியும் தான்.



கிரிக்கெட்டின் ஆர்வம் யாருடைய விருப்பத்திற்காக பிரபலமாக்கப்பட்டது என்பது தெரிந்து கொண்டோம், அதனை வளர்த்தெடுப்பது பிசிசிஐ என்ற பெயரில் இந்திய நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் என்று முன்பே பார்த்தோம்.உலகமயமாக்கல், கிரிக்கெட்டை வைத்து என்னென்ன தவறான விளைவுகள் ஏற்பட காரணமானது என்றும் பார்த்தோம்.

இத்தகையக் காலக்கட்டத்தில், 2000களில் பின்-நவீன உலகமயமாக்கலினால் வந்த, உடல் உழைப்பை விட மூளை வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்த, ஐ.டி. துறையின் வளர்ச்சியாலும் மேற்கத்திய நாடுகளுக்கு வேலைச் செய்யக் கிடைத்த வாய்ப்பாலும் பொறியியல் பட்டதாரி இளையோர்கள் முக்கியமாக கணிப்பொறியியல் படித்த இளையோர்கள், அரசின் போர்வையில் தவறிழைப்பவர்களை தட்டிக்கேட்காமை, அரசின் போலித்தனத்தை / அரசியல் சனநாயக கட்டமைப்பின் பிழைகளைக் கண்டும் காணாமை என்று அன்றாட பிரச்சனைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.அவர்கள் உணரும் மேட்டிமைத்தனத்தாலும், பெருவாரியான இதர உழைக்கும் கூலிகளைவிட அதிக கூலி கிடைப்பதாலும் (உண்மையில் இதரக் கூலித் தொழிலாளிகளைப் போல இதே வேலைக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் நிர்ணயித்த வருமானத்தைவிட குறைந்த கூலி பெறுபவர்கள் இவர்களும் தான், முறைபடுத்தப்படாத வேலைப்பளுவினால் அவர்களைவிட மன அழுத்தக்கும் ஆளாகிறார்கள்), தங்கள் வருமானத்தில் மட்டும் கருத்தாய் இருந்து உலகமயமாக்கலின் கனியை மட்டும் சுவைக்க ஆரம்பித்தனர்.அதன் தீய விளைவுகளை அகற்ற முற்படவில்லை.(உலகமயமாக்கல் மூலம் உலகளவில் ஏற்பட்ட நவீன அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி உள்நாட்டு வேளாண்மையின், பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கியிருக்க முடியும்.ஆனால் நிகழ்ந்தது பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்களின் சந்தையாக இந்தியா மாறியது மட்டும்தான்). இத்தகைய உலகமயமாக்கலின் விளைவாக கிடைத்த பொருளாதார முன்னேற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் கையாட்களான மக்கள் விரோத அரசையும், கிரிக்கெட்டையும் அரவணைக்க வைத்தது.

இப்படி இந்திய ஒன்றியத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களின் தொழில் வளர்ச்சியும், சந்தையாக்கலும் பெரிய அளவில் சென்றுகொண்டிருக்க, கிரிக்கெட்டில் ஏற்கனவே உணர்வுக்கு அடிமையாயிருந்த மக்களின் உணர்வை வைத்து ஒரு போட்டியில் வெற்றி பெற‌ வைத்தால் இவ்வளவு பணம், ஒரு Six அடிக்க‌ வைத்தால் இவ்வளவு பணம் என்று விளையாட்டில் சூதாட்டம் பரவலாக நிகழத் தொடங்கியது.அப்போதுதான் சூதாட்டம் தொடர்பான விடயங்கள் வெளியில் கசிய ஆரம்பித்தன. கொலைகள் போன்று பல குற்றங்களும் பெருகின.இருக்கலாம், ஆனால் நாங்கள் பொழுதுபோக்கிற்காக மட்டும்தானே கிரிக்கெட் பார்க்கிறோம் இதில் என்ன தவறு இருக்க முடியும்?


பொழுதுபோக்கில் என்ன தவறு?

2000-களில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நேரடி முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டதும், இந்தியப் பெருநிறுவனங்கள் மக்கள் தொகை அதிகமான வளர்ந்துவரும் நாட்டின் மிகப்பெரியச் சந்தைகளினால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பாக வளர்ந்துவிட்டதும், சிறிய நிறுவனங்கள் பலவும் ஏற்பட்ட பெரும் நட்டத்தினால் ஒரு சில பெருநிறுவனங்களின் குடைக்குள் வந்ததும் அறிவோம். பிறகென்ன, 2000ங்களின் இறுதி காலக்கட்டங்களில் இந்திய பெருநிறுவனங்களின் பெரிய வளர்ச்சி மற்றும் நலன்களுக்காக இந்திய ஏக போக ஒற்றை மைய ஆதிக்கம், அதன் கீழ் அதிகாரம் செலுத்துகிற நாடுகளுடன் முன்னர் இட்டுக்கொண்ட அமெரிக்க-இந்தியக் கூட்டு உலகமயமாக்கல் ஒப்பந்தம் போல தாராளப் பொருளாதார ஒப்பந்தம் இட்டுக்கொள்கிறது.



எப்படி சந்தையைப் பெரிதாகப் பிரபலப்படுத்துவது? அதற்கு முன்னிலும் பகட்டான அதிகம் கவர்ச்சிகொண்ட கிரிக்கெட்டின் வேறு வடிவம் தேவைப்படுகிறது.இருபது ஓவர்தான் - விரைவாக முடியும் - போட்டி முழுவதும் உட்கார்ந்துப் பார்த்துவிடலாம், பல நாட்டின் பிரபல ஆட்டக்காரர்கள் இப்போது இந்த வடிவத்தின் மாடல்கள், களிப்பு ஏற்படுத்த மைதானத்தில் நடனமங்கைகள், பிரமாண்ட இசை, ஆடல் பாடல், ஒளிபரப்பில் முன்னேறிய தொழில்நுட்பம் என்று பிசிசிஐ என்ற ஒற்றை அதிகார மையத்தின் கீழ் லலித் மோடி என்ற அரசியல் வியாபாரியால் 2008ல் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்படுகிறது.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கோடை விடுமுறையில் திட்டமிட்டு நடத்துவதால் அவர்களைப் பெரிதும் ஈர்க்கிறது. அமோக வெற்றியும் பெறுகிறது.பெருநிறுவனங்களால் ஒவ்வொரு கிளப்புக்கும் போடப்பட்டுள்ள பல நூறு கோடிப் பணம், விளையாடும் வீரர்களுக்கு பல கோடிகளில் சம்பளம், உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ, தினமும் நடக்கும் பல கோடி மதிப்பான சூதாட்டம் என எதிர்பாராமல், வந்த மிகப்பெரிய ஆதரவால் ஐபிஎல்-லே பெரிய சந்தையாகிறது (ஐபிஎல் மூலம் சந்தையை விரிவாக்குவதுவதுதான் தீர்க்கமான இலக்கு/விருப்பு என்றாலும்).அதன் பிறகு ஐபிஎல் எத்தகைய வேகத்துடன், ஒவ்வொருமுறையும் மாறுதல்களுடன், கொண்டுசெல்லப்ப்படுகிறது என அறிவோம்.

2009ல் நாடாளுமன்றத் தேர்தலினால் இரண்டு மாதங்கள் தள்ளி நடத்தச் சொன்னக் காரணத்திற்காக, போட்டியையே தென்-ஆப்பிரிக்கா கொண்டு சென்றது என்றால் அதன் சந்தையின் முக்கியத்துவம் அறியலாம். ஐபிஎல்-லின் காரணகர்த்தா லலித் மோடி மீது சுமத்தப்பட்ட பல கோடி ஊழல் மற்றும் இந்திய ஒன்றியத்தின் மைய அரசின் அமைச்சராக இருந்த சசி தரூர் கொச்சின் கிளப்பில் செய்த ஊழல் என்ற செய்திகள் வெளியில் வரவும் முன்னவர் வெளிநாட்டில் தலைமறைவு, பின்னவர் அமைச்சர் பதவி இழப்பு என்று ஐபிஎல்-லுக்கு பிரச்சனை ஏற்பட்டது.இருந்தும் பெரிய நடவடிக்கையை அரசு இன்னமும் எடுக்கவில்லை, ஐபிஎல் போட்டி வருடந்தோறும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.சமீபத்தில் நாற்பதாயிரம் கோடி அளவில் ஐபிஎல் சூதாட்டம் நிகழ்ந்துவருவதாக வந்த ஒரு செய்தி கிரிக்கெட் பார்வையாளர்களையே மிரட்டியது என்றால் ஐபிஎல் போட்டிகளின் தாக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.




கடந்த காலங்கள் இப்படி இருக்க, இந்த வருடம் (2013) ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு நான்கு முக்கிய சர்ச்சைகள் எழுந்தது.

1. மாராட்டியத்தில் வரலாறு காணாத வறட்சி காரணமாக குடிநீருக்கே மாராட்டிய மக்கள் கடினப்படும் வேளையில் ஒரு போட்டி நடத்த தேவையான அறுபதாயிரம் லிட்டர் நீரும், தினமும் மைதானத்தைப் பேணுவதற்கு தேவையான சில ஆயிரம் லிட்டம் நீரும் கொண்டு ஐபிஎல் போட்டு நடத்த வேண்டுமா? ஆகவே மாராட்டிய நகரங்களான மும்பை மற்றும் பூனாவில் நிகழும் போட்டிகளை நிறுத்த வேண்டும் என சிவசேனா கட்சி மற்றும் சில கட்சிகள் கோரிக்கை வைத்தது.அதனை அதே மாராடியத்தின் முக்கிய அரசியல்வாதியும் மைய அமைச்சருமான சரத் பவாரின் கைப்பாவை பிசிசிஐ அமைப்பு காதில் கூட போட்டுக்கொள்ளவில்லை.

2. ஐபிஎல் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மேற்கு வங்கத்தின் தலைநகரம் கொல்கொத்தாவில், ஒருநாள் முன்புதான் ‘கல்லூரிகளில் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்’ வைக்கச் சொல்லி வீதியில் போராடிக்கொண்டிருந்த மாணவர் தலைவரை காவல்துறை கைது செய்து நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு சாகிறார். அதனை அவரின் தந்தையும், மாணவர்களும் திட்டமிட்ட மம்தா பானர்ஜி தலைமயிலான மேற்குவங்க அரசின் / காவல்துறையின் திட்டமிட்டப் படுகொலை என்று தீர்க்கமாக சொல்கிறார்கள்.போட்டி தொடங்குகிற அன்று இறந்த மாணவர் தலைவரின் இறுதி ஊர்வலம் பெரிய அளவில் கொல்கொத்தாவில் நடக்கின்றது.போராட்டங்களும் நிகழ்கிறது, அவைகள் ஒடுக்கப்பட்டு இந்திய ஒன்றியத்தில் எந்த சலனமும் இல்லாமல் ஐபிஎல் போட்டி தொடங்கிவைக்கப்படுகிறது, இதில் மம்தாவும் கலந்து கொள்கின்றார்.

3. பெங்களூரில் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக இந்திய இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடத்தைக் கொடுத்து கட்டப்பட்ட சின்னசாமி கிரிக்கெட் அரங்கத்தை ஐபில் போன்று பொழுதுபோக்கிற்கு வழங்கக் கூடாது, மீறி வழங்கினால் அந்த இடத்தைத் திரும்பப் பெறுவதைப் பற்றி யோசிப்போம் என்று அங்கிரந்த இராணுவ உயர் அதிகாரி மட்டத்தால் கர்நாடக அரசிற்கு மிரட்டல் விடப்படுகிறது.அது கர்நாடகத்தின் கிரிக்கெட் அமைப்பிற்கோ, பிசிசிஐக்கோ ஒரு அழுத்தத்தையும் ஏற்படத்தவில்லை, காரணம் பிசிசிஐ-யின் அதிகாரம் அதைவிட உயர்வானது என்பதே.

4. இலங்கையில் பேரினவாத சிங்கள பௌத்த அரசால் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கு நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச சுதந்திரமான விசாரணை நிகழும் வரையிலும், ராஜபாக்சே-வை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் வரையிலும், ஐநா மேற்பார்வையில் சுதந்திரமான தனித் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு வரையிலும், இதன் மூலம் தனித் தமிழீழம் அமைந்து முற்றிலுமாக இலங்கை ஒன்றியத்தில் இருந்து ஈழம் சனநாயக விடுதலை பெரும் வரையிலும் இலங்கை அரசு மீதான தடையை பல வழியிலும் முன்னெடுப்பது பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு புறக்கணிப்பின் மூலம் தென் ஆப்பிரிக்கா மீது 60களில் இருந்து 90கள் வரைக்கும் போடப்பட்ட தடையைப் போன்று நாமும் இலங்கையின் இன அழிப்பிற்கு எதிராக பிற நாடுகளை ஒன்றிணைக்கவும் முடியும் என்ற தமிழ் மக்கள் இயக்கங்களின், மாணவர்களின் கோரிக்கையால் சட்டமன்றத்தில் ஜெயாவின் தமிழக அரசால் ஒரு தீர்மானம் கொண்டுவரப் படுகிறது.



இந்நிலையில் ஐ.பி.எல். வரவும் சென்னையில் சிங்கள இலங்கை வீரர்கள் விளையாடினால் சென்னையில் விளையாட அனுமதிக்க முடியாது என்று முதல் அமைச்சர் அறிவிக்கிறார்.மறு பேச்சு பேசாமல் இந்திய அரசும், பிசிசிஐ-யும் இதனை ஏற்றுக்கொள்கிறது, மக்கள் பொறுமையின் எல்லை இந்த வியாபாரிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.அதே வேளையில் அனைத்து இயக்கங்களும் மாணவர்களும் பாகிசுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு பயங்கரவாதிகளின் மும்பைத் தாக்குதலால் போட்டியில் விளையாடத் தடை போட்டார்களோ அதுபோல அனைத்து போட்டிகளிலும் இலங்கை விளையாட்டு வீரர்களை நீக்கக் கோரியும் இதுவரை எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் பெருநிறுவனங்களின் ஆதரவுடன், இந்தியா எங்கும் படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி இளையோர்களின் மயக்கத்தால் ஐ.பி.எல். போட்டிகள் எந்த பிரச்சனையும் இன்றி வழமையாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.... மேலும் த‌மிழ‌க‌த்தில் நில‌வும் மின் த‌ட்டுப்பாட்டால் சென்னை த‌விர‌ பிற‌ ப‌குதிக‌ள் ஒரு நாளைக்கு குறைந்த‌ ப‌ட்ச‌ம் 8 ம‌ணி நேர‌ம் முத‌ல் அதிக‌ ப‌ட்ச‌ம் 16 ம‌ணி நேர‌ம் வ‌ரை மின்சார‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌து இல்லை, இந்த‌ நேர‌த்தில் மின்சார‌த்தை அதிக‌ம் உறிஞ்சும் இர‌வு நேர போட்டிகளை நடத்த வேண்டுமா? ஏன் பகலில் நடத்தக் கூடாது? என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ப‌க‌லில் ந‌ட‌த்தினால் அலுவ‌ல‌க‌ம் செல்ப‌வ‌ர்க‌ளால் பார்க்க‌ முடியாது என்ற‌ கார‌ண‌த்தினாலும், ச‌ந்தை விழுக்காடு பாதிக்க‌ப்ப‌டும் என்ப‌தாலும் இவ‌ர்க‌ள் ப‌க‌லிர‌வு ஆட்ட‌ங்க‌ளாக‌ ந‌ட‌த்துகின்றார்க‌ள், விவ‌சாயிக‌ளுக்கும், சிறு, குறு தொழில‌க‌ங்க‌ளுக்கும் கொடுக்க‌ப்ப‌டும் மின்சார‌த்தின் ஒரு ப‌குதி பிடுங்க‌ப்ப‌ட்டு இது போன்ற‌ கேளிக்கை விளையாட்டுக‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டுவ‌து அவ‌ல‌மான‌ ஒன்று.

மேற்கூறப்பட்ட நான்கு நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துவதென்ன?

ஐபிஎல் என்ற மந்திர சொல், இன்று, இந்திய ஒன்றியத்தின் நடுத்தர வர்க்கம் முதல் அடித்தட்டு இளைஞர்கள் வரை உலகமயாக்கல் பின்னணியில் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறியிருப்பதால் எந்த சூழலிலும் எத்தகையப் பிரச்சனைகளுக்கு இடையிலும் அவர்களைப் பார்வையாளர்களாக ஆக்கியிருக்கின்றது.மக்களின் எந்த அரசியல், சனநாயக உரிமைப் போராட்டத்தையும் நீர்த்துபோகச் செய்கின்றது.

ஐபிஎல்-லை எதிர்த்து கேள்வி கேட்காமை, ஐபிஎல்-க்கு எதிராக விமர்சிப்பவர்களை, கேள்வி கேட்பவரை எந்த எல்லைக்கும் சென்று இகழ்ந்து பேசுவது என்று மக்கள், தொழிலாளிகள், உழைக்கும் வர்க்கத்தின் விரோத ஆட்சியாளர்கள், ஆட்சியாளர்களை இயக்கும் பெருநிறுவனங்களின் பக்கமும் அதே நேரத்தில் சனநாயகப் பண்பிற்கு எதிராகவும் இளையோரைக் கொண்டு சென்றிருக்கிறது இந்த ஐபிஎல்.தமிழ் நாட்டில் நடந்த பெருவாரியான மாணவர் போராட்டங்களையும், இலங்கையின் இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி தவறியும் ஒளிபரப்பாத, வட இந்திய‌ ஊடகங்கள், இலங்கை விளையாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடைப் போட வேண்டும் என்று கோரியதற்கு அது தவறு என்றும், விளையாட்டு வேறு- அரசியல் வேறு என்றும், போராடுபவர்கள் தமிழ் இன வெறியர்கள் என்றும் பொதுக்கருத்தை உருவாக்கிக்கொண்டிருந்தது, இந்த ஊடகங்கள் யாருக்காக வேலை செய்கின்றன என்பதை இந்நிகழ்வு தெளிவாக மக்களுக்கு உரைத்தது.

ஐ.பி.எல். போட்டி நடத்துவதில் இருக்கிற அரசியலும், பெருநிறுவனங்களின் பொருளாதாரப் பலனும், ஊடகங்களில் இதற்கு கொடுக்கும் முன்னுரிமையும் நமது இளையோரின் கண்ணை மறைப்பது பெரும் துயரம்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மாணவர்களின் எழுச்சிப் போராட்டம்தான் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அரசியலுக்கும் வெளிச்சம் பாய்க்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு... பண்பலை வானொலி ஒலிபரப்பில் கேட்கும் ஐ.பி.எல். இரைச்சல் பெரிய அளவில் இன்றளவும் முகநூல் பக்கம் கேட்கவில்லை என்பது சிறிய மகிழ்ச்சி, இந்த வருட ஐ.பி.எல் போட்டி ஒட்டு மொத்தமாக இளைஞர்களிடம், மக்களிடம் எப்படியானத் தாக்கத்தை / அசைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...!



- ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.
சேவ் தமிழ்சு இயக்கம்
( Save Tamils Movement )



த‌ரவுக‌ள்:
=========

1) http://timesofindia.indiatimes.com/business/india-business/IPL-betting-White-collar-professionals-join-the-high-roller-rush-turnover-to-touch-Rs-40000-cr/articleshow/19553037.cms

2) http://www.cricketvoice.com/cricketforum2/index.php?topic=10679.0;wap2

3) http://blogs.wsj.com/indiarealtime/2013/04/02/bjp-objects-to-ipl-in-drought-hit-maharashtra/

4) http://indiatoday.intoday.in/story/sfi-leader-sudipto-gupta-death-kolkata-streets-west-bengal-government-mamata-banerjee/1/260519.html