Thursday, January 24, 2013

தெலங்கானா மாநிலம் - ஒரு வரலாற்றுத் தேவை

தெலங்கானா மாநிலம் - ஒரு வரலாற்றுத் தேவை
அரங்கக் கூட்டம்
நாள் :  26-01-2013, சனிக்கிழமை மாலை 5 மணி
இடம் :  பி.எட். அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்

உரை:
பேராசிரியர் ஹரகோபால், ஆந்திர மக்கள் சிவில் உரிமைக் கழகம்
தோழர் சுரேஷ், ஆந்திர மக்கள் சிவில் உரிமைக் கழகம்
தோழர் விமலா, தெலங்கானா ஐக்கிய முன்னணி
தோழர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
தோழர் பரிமளா, சேவ் தமிழ்சு இயக்கம்



தலித் எதிர்ப்பு சாதி அரசியல் புழுதியைக் கிளப்பி விட்டிருக்கும் சாதி அமைப்புகள், கர்நாடகா காவிரி தண்ணீர் தராததால் தற்கொலை செய்து வரும் டெல்டா மாவட்ட விவசாயிகள், 2012 மார்ச் 19 தொடங்கி இன்று வரை தமிழக அரசு போட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் துண்டிக்கப்பட்டிருக்கும் இடிந்தகரை மக்கள், அன்றாடம் வந்து கொண்டிருக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைச் செய்திகள், சிறுவணிகத்தை விழுங்க வரும் வால்மார்ட், பெட்ரோல்-டீசல் விலைவாசி உயர்வு என்று நம்மை நெருக்கடிகள் சூழ்ந்து நிற்குமொரு வேளையிலே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்து ஓர் அரங்கக் கூட்டம் தேவையா?

ஆம். தேவை தான். ஜனவரி 28க்குள் தெலங்கானா தனி மாநிலம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.  ஆந்திர சட்ட மன்றத்திற்குள் தீர்க்க வேண்டிய பிரச்சனையை ’நாடாளுமன்றத்தில் முடிவெடுக்க வேண்டும்’ என்று அரசியல் சட்டத்திலிருக்கும் விதியைக் காரணம்காட்டியே தெலங்கானா மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கின்றது இந்தியாவின் போலிக் கூட்டாட்சி. நாராயணசாமி, சிதம்பரம் போன்ற அமைச்சர்களுக்கு தெலங்கானா மக்களின் கோரிக்கையைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகின்றது? விரும்பியோ விரும்பாமலோ நாமும் இந்தியக் ’கூட்டரசில்’ ஓர் அங்கமாகவும், அதில் ஒடுக்கப்பட்டும் இருப்பதாலேயே தெலங்கானா மக்களுக்கு தோள் கொடுத்து நிற்க வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகமாகின்றது.

இந்தி மொழித் திணிப்பு, மொழிப் போரில் 600க்கும் மேற்பட்டோரைக் கொன்றது, காவிரி, முல்லைப் பெரியாறு ஆற்று நீர் உரிமை மறுப்பு, கச்சத்தீவு தாரைவார்ப்பு, அணு மின்சாரம் என்ற பெயரில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பது, மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல், அனைத்துக்கும் மேலாக 1.5 இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்யத் துணை நின்றது, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து சிதறடித்தது, இன்று வரை இலங்கை இனப்படுகொலை அரசுக்கு துணை நிற்பது என்று இந்திய அரசு நம் மீது நடத்திக் கொண்டிருக்கும் ஒடுக்குமுறைகள் ஏராளம். இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதில் இருந்து பெற்ற ஜனநாயக உணர்வு தெலங்கானா மக்கள் மீதான ஒடுக்குமுறையை உணர நமக்குத் துணை புரிகின்றது. இந்திய அரசால் ஒடுக்கப்படுவோர் என்ற புள்ளியில் தெலங்கானா மக்களும் நாமும் ஒன்றுபடுகின்றோம். உணர்வுபூர்வமாக தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்து நிற்கின்றோம்.


புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்

தெலங்கானா - போராட்ட வரலாறும், கோரிக்கை நியாயங்களும்
தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து பல ஆண்டுகளாக வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள் தெலங்கானா மக்கள். தங்கள் உழைப்பைச் சுரண்டி கடுமையான அடக்குமுறைகளைத் தங்கள் மீது ஏவிய நிலப்பிரபுக்களையும், நிஜாம் மன்னனையும் எதிர்த்து, கம்யூனிசப் பாதையை பற்றிக்கொண்டு, ஆயுதம் தாங்கிய வீரமிக்க போராட்ட வரலாற்றை எழுதியவர்கள் தெலங்கானா விவசாயிகளும் பழங்குடிகளும். தங்கள் கண் முன்னேயே, கணவன்மார்களையும், சகோதரர்களையும், குழந்தைகளையும் கொன்ற போதும், பாலியல் வன்முறைகளுக்கும், கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான போதும், ஆயுதம் ஏந்தி காட்டிலும் மேட்டிலும் அலைய நேரிட்ட போதும், ஆண்களோடு சமமாய் நின்று துணிச்சலோடு போராடியவர்கள் தெலங்கானா பெண்கள்.  இந்தியா 1947இல் சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவோடு இணைய மறுத்த நிஜாம் மன்னரின் முடிவை எதிர்த்து, நிஜாமின் ரசாக்கார் என்ற கொடூரமான படை அணியை விரட்டி அடித்தவர்கள். அடக்குமுறைக்கான போராட்டத்தில், நூற்றுக்கணக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள்.  வரலாற்றுத் தொடர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில், ஒரே மொழி, பண்பாடு என்ற அடையாளத்துடன் இருப்பதால் ஓர் இன மக்களாகத் தங்களை உணர்பவர்கள்.


500 வருடங்கள் நிஜாம் மன்னர்களின் ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ் இருந்த தெலங்கானா மக்கள், கல்வி, தொழில் வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்பு, மொழி, பண்பாட்டு வளர்ச்சி போன்றவற்றில் பின் தங்கிப் போயினர். அதே கால கட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கீழ் இருந்த ஆந்திரா மக்கள் கல்வி, விவசாயம், மொழி, பண்பாடு வளர்ச்சியில் முன்னேறிய நிலையில் இருந்தனர்.  இந்த நிலையில், காஷ்மீர், திருவிதாங்கூர் உள்ளிட்ட சமஸ்தானங்களை எப்படி இராணுவ பலத்தைக் காட்டி இந்திய அரசு இணைத்ததோ, அதேபோல், இந்திய யூனியனுடன் ஹைதராபாத் மாநிலம் என்ற பெயரில், தெலங்கானா பகுதியை 1948இல் இணைத்துக் கொண்டது.  ஹைதராபாத்தைக் கைப்பற்ற வந்த இந்திய இராணுவத்தினரை தங்களை நிஜாம் மன்னனின் ஒடுக்குமுறையில் இருந்து காப்பாற்ற வந்தவர்கள் என்று வரவேற்று மகிழ்ந்தனர் தெலங்கானாவின் உழைக்கும் மக்கள்.  ஆனால், நிஜாம் மன்னனுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் எதிரான அவர்களின் போராட்டத்தை நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக அழித்து ஒழித்தது இந்திய அரசு.  1952இல் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு இறந்து போனார்.  1955இல் ஆந்திரா மாநிலத்துடனான இணைப்பு குறித்துக் கேட்டபோது, பின்தங்கிய நிலையில் இருந்த தெலங்கானா மக்கள், தங்கள் எதிர்கால வளர்ச்சி குறித்த கவலையை மாநில மறுசீரமைப்பு ஆணையத்திடம் முன் வைத்தனர்.  தெலங்கானா மக்களின் கவலையை கருத்தில் கொண்ட ஆணையம் '1961இல் நடக்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஹைதராபாத் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விருப்பம் தெரிவித்தால், ஹைதராபாத் மாநிலத்தை ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கலாம்' என்றது.  ஆனால், இந்திய ஆளும் வர்க்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டிருந்த ஆந்திர முதலாளிகள், நிலப்பிரபுக்களின் நலன்களுக்கு முன்னால் தெலங்கானா மக்களின் கோரிக்கையைத் தாங்கி வந்த இந்த அறிக்கை காணாமல் போனது. 'ஜென்டில்மேன் ஒப்பந்தம்' என்ற முக்கிய நிபந்தனைகள் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் தெலங்கானா பகுதியை ஆந்திராவுடன் இணைத்தனர்.


மக்கள் தொகையில் 40% உள்ள தெலங்கானா மக்களுக்கு கல்வியில், அரசு வேலைவாய்ப்பில் மூன்றில் ஒரு பங்கு, அமைச்சரவையில் 60 : 40 என்ற வீதத்தில் தெலங்கானா மக்களுக்குப் பிரதிநிதித்துவம், முதல்வர் அல்லது துணை முதல்வர் வாய்ப்பு, தெலங்கானா பகுதி நில வர்த்தகத்தை கண்காணிக்க மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய பிராந்தியக் குழுக்கள், புதிய நீர் பாசனத் திட்டங்கள், புதிய கல்வி நிறுவனங்கள், தொழில் வளர்ச்சித் திட்டங்கள், தெலங்கானா பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவன வேலைவாய்ப்பில் தெலங்கானா பகுதி மக்களுக்கே முன்னுரிமை (முல்கி விதிகள்) போன்ற முக்கிய நிபந்தனைகள் 'ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில்' வைக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த 1955 தொடங்கி 2009 வரை அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் உள்ளிட்ட 9 ஆணையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் ஆணைகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், இந்திரா காந்தி தொடங்கி ப.சிதம்பரம் வரை அளித்த பல்வேறு வாக்குறுதிகள் என இவை அனைத்தும் காகிதத்தில் எழுதப்பட்டதாக மட்டுமே இருக்க, 1969 தொடங்கி இன்று வரை பல்வேறு வகையான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 1969இல் நடந்த போராட்டத்தில் மட்டும் 370 மாணவர்கள், இளைஞர்கள் காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் 6 பேர் தீக்குளித்ததுபோல், ஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்ததுபோல்,  தெலுங்கானா மாநிலம் கோரி இது வரை 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.  இப்படி தெலங்கானா இளைஞர்கள் தீயில் தங்களை மாய்த்துக் கொள்வதும், அதை இந்தியத் துணைக்கண்டம் மௌனமாகக் கடந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.


ஆந்திர மாநிலத்தின் 45 விழுக்காடு காடுகளையும், நாட்டின் நிலக்கரி வளத்தின் 20 விழுக்காட்டையும், பாக்சைட், மைக்கா போன்ற கனிம வளங்களையும், சிமெண்ட் உற்பத்திக்கான மூலப்பொருட்களான சுண்ணாம்பு கற்களையும், கிருஷ்ணா, கோதாவரி போன்ற ஆறுகளின் 50 விழுக்காட்டிற்கு மேலான நீர்ப் பிடிப்புப் பகுதிகளையும் கொண்ட வளமான பூமி தெலங்கானா.  எல்லா வளங்களையும் பெற்ற வளமான பகுதியாக இருந்தாலும் இன்றளவில் ஆந்திர மாநிலத்தின் 15 லட்சம் அரசு பணியிடங்களில் வெறும் 2 லட்சம் பணியிடங்களில் மட்டும் தெலங்கானா மக்கள்.  21 பல்கலைக் கழகங்களில் ஹைதராபாத்தைத் தவிர்த்து ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டும் தெலங்கானா பகுதியில். கிருஷ்ணா ஆற்று நீரில் 80 விழுக்காடு கடலோர ஆந்திர விவசாயத்திற்கும், 15 விழுக்காட்டிற்குக் குறைவான நீர் மட்டும் தெலங்கானா விவசாயத்திற்கு. கோதாவரி ஆற்று நீரைப் பயன்படுத்தி கடலோர ஆந்திராவில் 12 லட்சம் ஏக்கர் நிலங்களில் நீர்ப்பாசனமும், தெலங்கானாவில் வெறும் 4 லட்சம் ஏக்கர் நிலங்களில் மட்டும்  விவசாயம். பின்தங்கிய தெலங்கானா பகுதியின் பெயரில் வாங்கப்படும் உலக வங்கியின் கடன், மத்திய அரசின் நிதி உதவி, ஆந்திராவின் வளர்ச்சிக்குச் செலவிடப்படுகிறது - கடன் சுமை மட்டும் தெலங்கானா மக்களின் தலையில். தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் ஆந்திரப் பகுதிகளில். தொடங்கப்படும் புதிய நீர்பாசன வசதிகள் எல்லாம் ஆந்திரப் பகுதிகளின் விவசாய மேம்பாட்டிற்கு. தெலங்கானா மக்கள் இப்படி பல்வேறு வகையில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியும், மொழி, பண்பாட்டு அடிப்படையில் சிறுமைப்படுத்தப்பட்டும் இரண்டாம் தரக் குடிமக்களாக தங்கள் சொந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். ஆற்று நீரை, கனிம வளங்களை, நிதி உதவிகளை, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, வேலைவாய்ப்புகளை என எதையும் தங்கள் மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இவ்வண்ணம், தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை நியாயங்களின் மீது நிமிர்ந்து நிற்கின்றது!

வாழ்க தெலங்கானா!




***************

தெலங்கானா - சில கேள்விகளும், பதில்களூம். 


ஒரே மொழி பேசும் மக்களுக்கு எதற்காக இரண்டு மாநிலங்கள்?

ஒரு மொழி பேசுபவர்களுக்கு ஒரு மாநிலம்தான் என்பது விதியாக இருந்தால், எதற்காக இந்தி மொழி பேசுபவர்களாக சொல்லப்படுபவர்களுக்கு 9 மாநிலங்கள் உள்ளன? இந்திக்கு அடுத்து, அதிகப்படியான மக்களால் பேசப்படும் மொழி தெலுங்கு.  அம்மக்களுக்கு இரண்டு மாநிலங்கள் இருப்பதால் என்ன தவறு? மேலும் ஆந்திர மக்களில் சிலர் தெலங்கானா பகுதியில் பேசப்படும் தெலுங்கு சரியான தெலுங்கு இல்லை என்றும், சிலர் அது தெலுங்கே கிடையாது என்றும் கூறி, எள்ளி நகையாடி வருகின்றனர். தெலங்கானா மக்கள் தனி மாநிலக் கோரிக்கை எழுப்பும்போது தெலுங்கு பேசுபவர்களுக்கு எதற்கு இரண்டு மாநிலங்கள் என முட்டுக்கட்டை போடுவதும் இவர்கள்தான்...


ஹைதராபாத்தை ஆந்திர மக்கள் உருவாக்கினார்கள். அவர்களை இப்பொழுது அங்கிருந்து வெளியேறச் சொல்வது சரியா?

நிஜாமின் ஆட்சிக்காலத்தில் தெலங்கானா கிராம மக்களின் வியர்வையினாலும் உழைப்பினாலும் உருவாக்கப்பட்டது ஹைதராபாத் நகரம். தெலங்கானாவை ஆந்திராவுடன் சேர்க்கவேண்டும் என ஆந்திர மக்கள் முடிவு செய்ததற்கு ஒரு காரணம் ஹைதராபாத் நகரம். இதனால் அவர்களுக்கு ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒரு தலைநகரம் உடனடியாகக் கிடைக்கும் (1956 வரை ஆந்திராவின் தலைநகரம் கர்னூல்) என்பதுதான் காரணம். மேலும் தெலங்கானாவின் மீது உள்ள பாசத்தினால் அல்ல; தங்களது தேவை கருதியே பணக்கார ஆந்திரர்கள் ஹைதராபாத்தில் வந்து தங்கத் தொடங்கினர். ஹைதராபாத் இன்றும் வளர்வதற்குக் காரணம் ஆந்திரர்கள் அல்ல, தங்கள் வாழ்வாதாரத்திற்காக அங்கு வந்து வேலை செய்யும் தெலங்கானா கிராம மக்களின் உழைப்பினால்தான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் தொடர்ந்த புறக்கணிப்பினாலும், பருவ மழைகள் பொய்த்ததாலும் தெலங்கானா கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது. அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் இருந்து யாரும் வெளியேறத் தேவையில்லை. இந்தியாவில் யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் சென்று வாழலாம். மேலும் ஹைதராபாத் ஒரு பல்கலாச்சார நகரம். அங்கு பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு நடப்பது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை அல்ல, தெலங்கானா மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளவும், அரசியல் செய்து கொள்வதற்குமான ஒரு மாநில உருவாக்கம் மட்டுமே. அங்கு போய் தங்குபவர்கள் தாராளமாகத் தங்கி தெலங்கானாவின் வெற்றிக்கு அவர்கள் பங்களிப்பை கொடுக்கலாம்...


சிறிய மாநிலங்கள் தோன்றினால் அவை நீடித்தும் உறுதியாகவும் இருக்குமா?

இந்தியாவில் தற்பொழுது மொத்தம் 35 மாநிலங்கள் உள்ளன (28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள்). இதில் உள்ள 70% மாநிலங்களை விட அதிகமான மக்கள் தொகையை (3 கோடிக்கும் மேல்) தெலங்கானா கொண்டுள்ளது. தெலங்கானாவை விடக் குறைந்த மக்கள் தொகை கொண்ட 25  மாநிலங்கள் நீடித்தும் உறுதியாகவும் இருக்கும் போது தெலங்கானா மட்டும் நீடித்து இருக்க முடியாதா?
தெலங்கானா பகுதி வளர்ச்சியில் பின்தங்கிய / புறக்கணிக்கப்பட்ட பகுதி என்ற காரணத்திற்காகவே தனி மாநிலம் கேட்பது சரியா?
பின்தங்கிய நிலை என்பது தெலங்கானா தனி மாநிலம் கேட்பதற்கான ஒரு காரணம் மட்டுமே.  ஆனால் அதுவே முழுமையான காரணமல்ல. தெலங்கானாவில் உள்ள பத்து மாவட்டங்களும் ஒரே வரலாற்றுப் பின்புலமும், தொடர்ச்சியான நிலப்பரப்பும், பண்பாட்டுத் தொடர்பும், ஒரே மொழியும், நாம் என்ற ஓர்மையும் கொண்டுள்ளன. இதன் காரணமாகவும்தான் தெலங்கானா மக்கள் தனிமாநிலம் கோருகின்றார்களே தவிர வெறும் வளர்ச்சிப் புறக்கணிப்பு மட்டுமே அதற்குக் காரணமல்ல...


தெலங்கானா கோரிக்கை வேலையில்லாத சில அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றார்களே?

வேலையில்லாத அரசியில்வாதிகளின் வெற்று முழக்கமல்ல "தெலங்கானா". இது மக்கள் கோரிக்கை என்பதை அவர்களின் போராட்ட வரலாறு சொல்லும். இக்கோரிக்கைக்காக இதுவரை பல நூறுபேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.  எந்த ஒரு மக்கள்திரள் போராட்டத்திலும் வேலையில்லாத அரசியல்வாதிகள் நுழைவது இயல்பே. ஆனால் அவர்கள் இருந்தாலும், போனாலும் கோரிக்கை நிறைவேறாமல் மக்கள் போராட்டம் ஓயாது.


ஒரே மொழி பேசும் மக்களைப் பிரிப்பது தேசியத்திற்கு எதிரானது இல்லையா?

தேசியம் என்பது வரலாற்று வழியில் உருவாவது.   தொடர்ச்சியான நிலப்பரப்பிலிருந்தாலும் ஒரே மொழி பேசும் 21 அரபு நாடுகள் இருக்கின்றன. எனவே ஒரே மொழி மட்டுமே தேசியத்திற்கான வரையறை அல்ல என்ற சிக்கலான கோட்பாடு இங்கு நினைவுகூரத்தக்கது.  மேலும், மக்களை யாரும் பிரிக்கவில்லை. ஆந்திர மாநில உருவாக்கத்தின் பின்னர் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், ஆளவும் ஆன ஒரு மாநிலத்தைத் தான் கோருகின்றார்கள். ஒரே மொழி பேசுகின்றார்கள் என்பதற்காக பிடிக்காத இரண்டு பகுதி மக்களை சேர்ந்து வாழச் சொல்வதுதான் எதிர்காலத்தில் தேசிய ஓர்மையோ அல்லது மேலான ஒற்றுமையோ உருவாவதற்கு இருக்கும் வாய்ப்புகளைச் சிதைக்குமே அன்றி அவர்கள் அரசியல்ரீதியாகப் பிரிந்து போவதல்ல.

Facebook Event ID : https://www.facebook.com/events/240872199381118

--
Save Tamils Movement

Website:
           http://save-tamils.org/
Google groups: http://groups.google.co.in/group/save-tamils
Facebook:         http://www.facebook.com/save.tamils
Twitter:             http://twitter.com/savetamils
Blog:                 http://save-tamils.blogspot.com/
YouTube:          http://www.youtube.com/user/Tamilsfortamileelam

Friday, January 11, 2013

தமிழக முதல்வருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் ஒரு கடிதம்

சனவரி 9, 2013

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
திருநெல்வேலி மாவட்டம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,தி.மு.க. தலைவர் திருமிகு. கலைஞர் கருணாநிதி அவர்கள்,
சென்னை.

மாண்புமிகு முதல்வர் அவர்களே, திருமிகு. கலைஞர் அவர்களே:

வணக்கம். தாங்கள் இருவரும் எதிரும் புதிருமான அரசியல் நடத்தி வந்தாலும், ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனுக்காகக்கூட ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவோ, நேரில் பார்த்துக்கொள்ளவோ மாட்டீர்கள் என்றாலும், தங்கள் இருவருக்குமாகச் சேர்த்து இந்தக் கடிதம் எழுதப்படவேண்டியிருக்கிறது. தற்போது மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்து வருகிற தங்கள் கட்சிகள்தான் தமிழகத்தின் அரசியலை, சமூகப் பொருளாதார விடயங்களை கடந்த அரை நூற்றாண்டாக மாறி மாறி மேலாண்மை செய்து வருகிறீர்கள்.

தமிழகத்தின் மிக முக்கியமான தங்கள் இருவரின் ஆளுமைகளைப் பற்றிய ஒப்பீடு செய்வதோ, தாங்கள் இருவரும் வழிநடத்தும் தமிழகத்தின் இரு முக்கிய திராவிட இயக்கங்களின் நிறை குறைகளைப் பற்றி அலசுவதோ, தங்கள் கட்சிகளின் ஆட்சிகளைப் பற்றிய விமரிசனத்தில் ஈடுபடுவதோ இந்தக் கடிதத்தின் நோக்கமல்ல. மாறாக, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வருகிற நாங்கள் அந்தப் பிரச்சினையில் தமிழக மக்களை எப்படி இருவருமாக சேர்ந்து கரிசனமின்றி கைவிட்டுவிட்டீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

துவக்கத்தில் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்த தி.மு.க., தனது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசியபோது அதை அமோதிக்கவே செய்தது. கட்சியின் முக்கியத் தலைவர் திரு. முரசொலி மாறன் கூட கூடங்குளம் திட்டத்தை எதிர்த்தார். பின்னர் கூடங்குளத்தை ஆதரித்த தி.மு.க. அரசு 1989 மே மாதம் 1-ம் நாள் கன்னியாகுமரியில் நடந்த எதிர்ப்பு மாநாட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; ஒரிருவரைக் கொன்று, பலரைக் காயப்படுத்தியது. மன்மோகன் சிங் அமைச்சரவைக் கொண்டு வந்த இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்த தி.மு.க. மேலவை உறுப்பினர் திருமிகு. கனிமொழி 2007-ம் ஆண்டு நிகழ்த்திய தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சில் அணு ஆற்றல் துறையில் இந்தியா தன்னிறைவடைய வேண்டியதன் தேவையைப் பற்றி விவரித்து, கூடங்குளம் திட்டம் தொய்வடைந்து கிடக்கிறதே எனும் கவலையைத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தீர்கள். அமெரிக்காவின் அணுசக்திக் கப்பல் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் 2007 யூன் மாதம் சென்னைக்கு வந்தபோது கதிர்வீச்சு ஆபத்து எழுமென்பதால் கப்பல் வரக்கூடாது என்று ஆணித்தரமாக ஆட்சேபித்தீர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உச்சக்கட்டப் போராட்டம் துவங்கியபோது, முதலில் உலையை ஆதரித்த முதல்வர், மக்கள் போராட்டத்தை மதித்து நிலைப்பாட்டை மாற்றி, மக்களுக்கு ஆதரவாக அமைச்சரவை தீர்மானம் இயற்றினீர்கள். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் மாற்றுவழி மின்சாரத் திட்டங்கள் பற்றிப் பேசினீர்கள், திட்டமிட்டீர்கள். ஒரு முறை கூட கூடங்குளம் திட்டத்தை ஆதரித்துப் பேசவில்லை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று போராடும் மக்களுக்கு உத்தரவாதம் அளித்தீர்கள்.

கூடங்குளம் திட்டம் காலதாமதமானதற்கு முதல்வர்தான் காரணம் என்று கலைஞர் அவர்கள் குற்றம் சாட்டினீர்கள். தமிழகத்தின் மின்சாரப் பிரச்சினைக்கு கூடங்குளமே தீர்வு என்று சொல்லி, கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலைவதாக முதல்வரை பகடிப் பேசினீர்கள்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த கையோடு, முதல்வர் அவர்கள் எந்தக் காரணமும் சொல்லாமல், இனியன் குழு அறிக்கையை மக்களோடு பகிர்ந்து கொள்ளாமல், தங்கள் நிலைப்பாட்டை அவசரம் அவசரமாக மாற்றிக் கொண்டீர்கள். அனுசரணையோடு எங்களிடம் அளவளாவிய தாங்கள், அப்படியே மாறி எங்களைக் கைது செய்தீர்கள், தங்களையும், தங்கள் கட்சியையும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து வந்த உண்மையான உழைத்து வாழும் மீனவ மக்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி, சுட்டுக் கொன்றது தங்கள் காவல்துறை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய, இறக்குமதி செய்யப்பட்ட, தரம் நிரூபிக்கப்படாத ரஷ்யாவின் அணுமின் நிலையம் கூடங்குளத்தில் கட்டப்படுகிறது. ஒரு மிகப்பெரிய அணு உலைப் பாலைவனம் “பூங்கா” என்ற பெயரில் உள்ளூர் மக்களுக்கு எந்த தகவலும் தரப்படாது, அவர்கள் அனுமதியின்றி, முன்தயாரிப்பு உதவிகளின்றி கட்டப்படுகிறது. தாங்கள் இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு அதனை ஆதரிக்கிறீர்கள்.

கூடங்குளத்திலிருந்து ஐநூறு மெகாவாட் மின்சாரம் எங்களுக்கு வேண்டும் என்று உரிமை கொண்டாடும் கேரள முதல்வர் தனது மாநிலத்தில் ஓர் அணு உலையைக்கூடத் திறக்க முன்வரவில்லையே, அதனை தாங்கள் இருவரும் கவனித்தீர்களா? கூடங்குளம் கழிவுகளை கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் எங்குமே புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், கர்நாடகாவின் மத்திய காங்கிரஸ் அமைச்சர்களும் கடுமையாக எதிர்ப்பதை கவனித்தீர்களா? எங்களை தேச துரோகிகள் என்றும், இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டும் என்றும் சொன்ன பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சியும் கர்நாடகாவில் கோலார் பிரச்சினையில் அணுசக்திக்கு எதிரான ஒரே நிலைப்பாடு எடுப்பதையும் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். தாங்கள் இருவரும் ஏன் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன் வரவில்லை? தாங்கள் இருவரும் இவ்வளவு சக்திமிக்க தலைவர்களாக, ஆட்சிப் பீடத்தில் இருக்கும்போதே தமிழர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் இந்திய அரசால்.

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தாருங்கள் என்று முதல்வர் கேட்கிறீர்கள்; அதற்கும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. ஏதோ கடமைக்குக் கேட்டது போல, தாங்களும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதிக மின்சாரம் கிடைத்து, தமிழக மின்தட்டுப்பாடு தீர்ந்துவிட்டால் எங்கே அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அதிகரித்துவிடுமோ, நமக்கு செல்வாக்கு குறைந்து விடுமோ என்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உதவி செய்ய மறுக்கிறது. தமிழ் மக்களுக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தங்கள் இரு கட்சிகளும், அரசுகளும் உண்மையில் தங்கள் நலனுக்காகத்தான் இயங்குகிறீர்களோ என்று நாங்கள், சாதாரண மக்கள், ஐயுறுகிறோம்.

இந்த நிலையில் இரண்டு அண்மை நிகழ்வுகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகத்தால் கடலோர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், மீஞ்சூரில் அமைந்துள்ள “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டத்தினால் பழவேற்காடு பகுதியைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களில் மீனவ மக்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டு அம்மக்களுக்கு நிவாரணமும், வேலை வாய்ப்புக்களும் உதவிகளும் அறிவிக்கிற முதல்வர் கூடங்குளம் அணுமின் நிலையத்தால், அதனுள் இருக்கிற நான்கு “கடல் நீரைக் குடிநீராக்கும்” திட்டங்களால் எங்கள் பகுதி மக்களுக்கு எந்தத் தீங்கும் வராது, எதிர்ப்போர் “மாயவலை” விரிக்கிறார்கள் எனப் பேசுவது ஏன் என்று எங்களுக்குப் புரியவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள்தான் தங்கள் மீன்பிடித் தொழிலால் மிக அதிகான வருமானத்தையும், அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தருகிறார்கள் என்பது தங்கள் இருவருக்கும் தெரியாததல்ல. துறைமுகத்தையும், அணு உலையையும் எப்படி ஒன்றாக பாவிக்க முடியும்? எங்கள் பகுதியில் ஐநூறு கோடி ரூபாய் செலவில் மக்கள் ஓடுவதற்கு சாலைகளும், சாவதற்கு மருத்துவமனைகளும் கட்டித்தருகிறோம் என்று அறிவித்திருக்கின்றன தங்களின் அரசுகள்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை பாதுகாக்க சனவரி 19 அன்று தங்கள் தலைமையில் ஒரு மிகப் பெரிய போராட்டமே அறிவித்திருக்கிறீர்கள். அந்த ஊருக்கு அருகாமையில் இடிந்தகரையில் கடந்த ஐநூறு நாட்களுக்கு மேலாக நாங்கள் தமிழினத்தின் மண்ணுக்காக, கடலுக்காக, நீருக்காக, காற்றுக்காக, உணவுக்காக, எதிர்கால சந்ததிகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். தாங்களோ, தங்கள் கட்சியை சார்ந்த அதிகாரபூர்வமான ஒரு பிரதிநிதியோ இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. ஒரு சிலைக்குக் கொடுக்கும் மரியாதையை தமிழ் மக்களுக்குத் தர மறுப்பதேன்? தமிழர் வாழ்ந்தால்தானே திருவள்ளுவர் வாழ்வார்?

தமிழ் மக்களாகிய நாங்கள் தாங்கள் இருவரிடமும் மீண்டும் ஒருமுறை எங்கள் விண்ணப்பத்தை முன்வைக்க விரும்புகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்க அனுமதிக்காதீர்கள். தமிழ் மண்ணில் இந்த அணு அரக்கனை கால் பதிக்க, கோலோச்ச, நம் வருங்கால தமிழனத் தலைமுறைகளைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். தாங்கள் இருவரும் தங்களின் நீண்ட பொதுவாழ்வு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் இதைச் செய்வீர்கள், செய்ய வேண்டும் என்று அன்போடும், பணிவோடும் கேட்டுக் கொள்கிறோம்.

சுயநலக் காரண காரியங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, தமிழ் மக்களைக் கைவிட்டால் ஒரு மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை செய்வதோடு எதிர்கால தமிழ் சமுதாயம் தாங்கள் இருவரையும், தங்கள் கட்சிகளையும் பழிக்க ஏதுவாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூம்” என்பது தமிழரின் உறுதியான நம்பிக்கை ஆயிற்றே? வணக்கம்.


தங்களன்புள்ள,

சுப. உதயகுமார், ம. புஷ்பராயன், மை.பா. சேசுராசு,

இரா.சா. முகிலன், பீட்டர் மில்டன்

Wednesday, January 9, 2013

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் , பெண் விடுதலைக்கான‌ போராட்டம் !



தோழர்களே ,

பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நேற்று திட்டமிடப்பட்ட மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி அனுமதி மறுத்தது. இந்நிகழ்வுக்காக எம் இயக்கத் தோழர்களின் இடையறாத உழைப்பனைத்தையும் தவிடு பொடியாக்க வேண்டும் என்ற காழ்ப்பும் எக்காலத்திலும் இளைஞர்கள் மக்கள் சக்தியை திரட்டி விடக்கூடாது என்ற சனநாயக மறுப்பும் அங்கே அப்பட்டமாக போலிசின் வாயிலாக‌ பல்லிளித்தது. எனவே , மனிதச் சங்கிலி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டிய‌ சூழலுக்கு நாம் தள்ளப்பட்டோம் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் எங்கள் அழைப்பினை ஏற்று இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்க முகநூலில் வி்ருப்பம் தெரிவித்ததற்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்

பெருந்திர‌ளான‌ ம‌க்க‌ள், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள்,ஐ.டி ஊழிய‌ர்க‌ள் என‌ ஓரிட‌த்தில் ஒன்று கூடிய‌மை காவ‌ல்துறையின் க‌ண்க‌ளை உறுத்தியிருக்க‌க்கூடும்.அத‌னால் குழுமியிருந்த‌ தோழ‌ர்களையும் பொதுமக்களையும் க‌லைந்து செல்லுமாறு தொட‌ர்ந்து நெருக்க‌டி கொடுக்க‌த் தொட‌ங்கிய‌து காவ‌ல்துறை.அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் கையில் ப‌தாகைக‌ள் ஏந்துவதற்கு  கூட  ஆட்சேபம் தெரிவித்தது . காவல்துறையின் இச்செய்கையை நிகழ்வில் பங்கேற்க வந்திருந்தவர்களும் வெகுவாக கண்டித்தனர்.இதனால் ஏற்பட்ட சலசலப்பு போலிசுக்கு கொஞ்சம் எரிச்சலை உண்டு பண்ணியது.எம் தோழர்களோடு கடும் வாக்குவாதத்தில் போலிசும் உளவுத்துறையும் ஈடுபட்டது. தோழர்கள் கையில் ஏந்தியிருந்த பதாகைகளை தம் முதுகில் அணிந்து மனித பதாகைகளாக மாறி துண்டறிக்கை விநியோகம் செய்யத் தொடங்கினர்.எஞ்சிய தோழர்கள் சிறுசேரி,துரைப்பாக்கம்,டைடல் பூங்கா, வேளச்சேரி, எஸ் ஆர் பி டூல்ஸ் என பல்வேறு இடங்களில் குழுக்களாக பிரிந்து துண்டறிக்கை விநியோகம் செய்தனர்.பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள்,ஐ.டி ஊழியர்கள்,தொழிலாளர்கள் என எல்லா உழைக்கும் மக்கள் கரங்களிலும் நிகழ்வின் செய்தி சென்று சேர்ந்தது.அது மட்டுமில்லாமல் "நான் பெண்.காமப்பொருளல்ல" என பெண்ணுரிமையை உயர்த்திப் பேசும் ஆகிருதியான பிளக்ஸ்கள் நகரின் ஐந்து முக்கிய இடங்களிலும் பொதும‌க்க‌ளின் காட்சிக்கு வைக்கப்பட்டன.எல்லா அடைப்புகளையும் மீறி தான் மக்கள் சக்தி திரண்டெழ வேண்டியிருக்கிறது என்ப‌த‌ற்கு இந்நிக‌ழ்வு ஒரு சிறு உதார‌ண‌ம்.

ஆகவே பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்தும் பெண்ணுரிமைக்கான போராட்டத்தையும் சேவ் தமிழ்சு இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளும். எதிர்வரும் நாட்களில் இப்போராட்டத்திற்கான அடுத்த நகர்வுகளை மேற்கொள்வோம்.அடுத்தகட்ட போராட்டத்திற்கான தேதியும் அறிவிக்கப்படும்.அனைவரும் பங்கேற்குமாறு வேண்டி கொள்கிறோம்.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் , பெண் விடுதலைக்கான‌ போராட்டம் !

தோழமையுடன்,
சேவ் தமிழ்சு இயக்கம்

Thursday, January 3, 2013

கூடங்குளம் அணுமின் நிலையக் கசிவு பற்றி வெள்ளை அறிக்கை தருக!



திருநெல்வேலி மாவட்டம்
சனவரி 2, 2013

                                                      பத்திரிக்கைச் செய்தி


கூடங்குளம் அணுமின் நிலையக் கசிவு பற்றி வெள்ளை அறிக்கை தருக!


சனவரி 1, 2013 அன்று புதுச்சேரியில் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அணு உலையில் இரு வால்வுகளில் கசிவு ஏற்பட்டதாகவும், இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் அவற்றை சரி செய்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஏதோ ஒரு சாதாரண மனிதன் தெருக் குழாயில் தண்ணீர் கசிந்துபோவதைப் பற்றி பேசுவது போல கடுகளவும் கடமையுணர்வின்றி, பொறுப்பின்றி பேசியிருக்கிறார். இது எவ்வளவு பெரிய விடயம், எத்தனை லட்சம் மக்களின் உயிர்களை உள்ளடக்கிய நிகழ்வு என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவேத் தெரியவில்லை.

இன்னும் இயக்கப்படாத அணு உலையில் எப்படிக் கசிவு ஏற்பட முடியும்? என்னக் கசிவு ஏற்பட்டது? இவை பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அப்படியானால் மக்களுக்கு தகவல் தெரிவிக்காமல், உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் அணு உலையைத் தொடங்கி விட்டார்களா? இது பற்றியும் வாய் திறக்கவில்லை அமைச்சர்.

இன்னும் இயக்கப்படாத அணுஉலை திறக்கப்படாத நிலையிலேயே கசிகிறது என்றால், எல்லாமே பாதுகாப்பாக இருக்கிறது என்று யார் யாரோ வந்து சான்றிதழ் வழங்கினார்களே? அவையெல்லாம் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்தானே?

உலகத்தரம் வாய்ந்த உன்னதமான மூன்றாம் தலைமுறை அணு உலை இப்போதே கசிகிறது என்றால், நாளை என்னென்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? திரு. நாராயணசாமி போன்ற அமைச்சர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் அரைகுறை தகவல்களைச் சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்வார்கள். அணு உலை அதிகாரிகள் எல்லாம் கட்டுக்குள் இருப்பதாக கதை விடுவார்கள். இழப்பீடு எதுவும் தரவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாத ரஷ்ய விஞ்ஞானிகள் விமானத்தில் வெளியேறிவிடுவார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்பார்கள். அணுமின் நிலைய விபத்துக்களில் இருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்று மக்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டுமென மாநில அரசை நீதிமன்றங்கள் பணித்திருக்கின்றன. ஆனால் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமோ மக்களுக்கு முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை என லஞ்சம் வழங்கி “விழிப்புணர்வு முகாம்” என்ற பெயரில் சம்பிரதாயச் சடங்குகள் நடத்திக் கொண்டிருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பாகும்.

எத்தனையோக் கட்டுமான, மின் இணைப்பு விபத்துக்கள் நடந்தபோதெல்லாம், ஒரு சில வாரங்களுக்குமுன் திரு. கல்யாணசுந்தரம் என்ற இளைஞர் இறந்தபோதும்கூட வாய் திறக்காத அமைச்சர் நாராயணசாமி இப்போது கசிவு பற்றி பேசியிருப்பது ஏன் என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். பத்து நாட்களுக்கு முன்னால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டபோது, அணுமின் நிலையத்தை அவசரமாக மூடிவிட்டு மக்களுக்கும் தகவல் தெரிவித்தார்கள்.

இந்தப் பின்னணியில் திரு. நாராயணசாமியின் கூடங்குளம் கசிவு கதை பற்றியும், மக்கள் மீதான, இயற்கையின் மீதான தாக்கங்கள் பற்றியும் அணு உலை அதிகாரிகள் வெள்ளை அறிக்கைத் தரவேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வற்புறுத்துகிறது.

போராட்டக் குழு,
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்