Tuesday, December 17, 2013
இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை குற்றவாளி - நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்..
யார் இந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்? அவர்களது தீர்ப்பிற்கு உலக நாடுகள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட ஐக்கிய நாடுகள் சபை என்பது அடுத்து ஒரு உலகப்போர் வராமலும், உலக அமைதி சீர்குலையாமலும் பார்த்துக் கொள்ள ஏற்படுத்தடுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் , அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை பாதுகாக்கும் வேலையை மட்டுமே இன்று வரை அது செய்து வருகின்றது. மேலும் இது அரசுகளின் கூட்டமைப்பாகும். இது அரசுகளைச் சாராத உலக நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்கள் , எழுத்தாளர்கள், பண்பாட்டு, சமூகத் தலைவர்களை உள்ளிடக்கிய ஒரு அமைப்பின் தேவையை சர்வதேச அரசியல் வெளி உருவாக்கியது. 1966-67ல் வியட்நாமில் நடந்த போர் தொடர்பாகவும்,1974-76ல் நடந்த இலத்தின் அமெரிக்காவில் சர்வாதிகாரம் தொடர்பாகவும் நடைபெற்ற இரசல் தீர்ப்பாயத்தை தனது அடிப்படையாக கொண்டு 1979ல் உருவானது நிரந்தர மக்கள் தீர்ப்பாயம். இதன் தலைமையகம் ரோமில் உள்ளது. இதுவரை 20 தீர்ப்பாயங்களை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியுள்ளது. ஐ.நா சபை போலல்லாமல் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அரசுகளின் கையிலில்லை, மக்களே அதன் பிரதிநிதிகள், இங்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற சித்தாந்தம் கிடையாது. அதுமட்டுமின்றி நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஒரு நடுநிலையான அமைப்பு, அதற்கு இதுவரை இந்த தீர்ப்பாயம் நடத்திய 20 க்கும் மேற்பட்ட விசாரணைகளே சாட்சி. இந்த 20 விசாரணைகளின் அறிக்கையை இந்த இணையதளத்தில் நீங்கள் காணலாம் ..
http://www.internazionaleleliobasso.it/
2009 மே வரை ஈழத்தில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை சர்வதேச சமூகமும், நாங்கள் தான் உலக பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்று நிற்கும் ஐ.நா சபையும், உலக நாட்டாமையுமான அமெரிக்க உள்ளிட்ட எந்த வல்லரசுகளோ, அமைப்புகளோ தடுக்காமல், வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அதற்கு பிறகான காலகட்டத்தில் சிங்கள படையினர் தங்கள் வீர பிரதாபங்களை காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த புகைப்படங்களும், காணொளிகளும் வெளிவரத் தொடங்கின. அப்பொழுதும் மேற்கூறியவர்கள் எல்லாம் கள்ள மௌனம் சாதித்தனர். இந்நிலையில் தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் மனித உரிமை அமைப்புகளும், பல அரசு சாரா அமைப்புகளும் சூலை மாதம் முதல் முறையிடத் தொடங்கினர். நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனக்கு கிடைத்த தரவுகள், செய்திகளை வைத்து நவம்பர்,19,2009 அன்று "சமாதானப் பேச்சுவார்த்தை முறிவுக்கு பின்னரான கால கட்டம்", "இறுதி போர்", "குறிப்பாக இறுதி மாதங்களில்(ஏப்ரல், மே-2009) நடைபெற்றவற்றை" விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன் படி அதற்கான பணிகளை தொடங்கிய தீர்ப்பாயம் 14 சனவரியில் இருந்து 16 சனவரி 2010 வரை தனது முதல் அமர்வை(விசாரணையை) நடத்தியது.
இதில் "போர்க்குற்றம், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை இலங்கை அரசு புரிந்துள்ளது" என்றும்,மேலும் இனப்படுகொலை நடந்தற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்றும், அதை உறுதிப்படுத்த மேலும் விசாரணை தேவைப்படுகின்றது என்றும் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. அதுமட்டுமின்றி இலங்கையில் நடைமுறையில் இருந்த அமைதி ஒப்பந்தத்தை சீர்குலைத்து இலங்கையை போரை நோக்கி நகர்த்திய குற்றத்திற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளும், தனது கடமையைச் செய்யத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையும் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணை அறிக்கை தான் சர்வதேச சமூகத்திற்கும், ஐ.நா சபைக்கும் அழுத்தத்தை கொடுத்தது. இதன் பின்னர் தான் ஐ.நா வின் பொதுச் செயலாளரால் ஒரு சிறப்புக் குழு அமைக்கப் பட்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான விசாரணை தொடங்கியது. சனவரி 2010-ல் நடந்த முதல் அமர்வின் தொடர்ச்சியாக திசம்பர் 7லிருந்து 10 ஆம் திகதி வரை ஜெர்மனியில் உள்ள ப்ரமன் என்ற நகரில் இரண்டாம் அமர்வு நடந்தது. இதில் இலங்கை இனப்படுகொலை செய்துள்ளதா என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முக்கியத்துவம் என்ன? இலங்கை விவகாரத்தில் இனப்படுகொலை என்ற சொல்லை சர்வதேச சமூகமும், ஐ.நா.சபையும் தொடர்ந்து பேச மறுத்து வருகின்றனர். ஏனென்றால் எப்பொழுது இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது என்று சொல்லப்பட்டால், அடுத்த கட்டமாக ஈழத்தமிழர்களிடம் ஐ.நா சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் தனி நாடு குறித்த பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும், எனவே தான் மேற்குலகும், ஐ.நா வும் இலங்கையில் நடந்தது போர்க்குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றம் என்பதோடு நிறுத்திக் கொள்கின்றது.
இலங்கையில் இனப்படுகொலை நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகின்றன என முதன் முதலாக கூறியது நிரந்தர மக்கள் தீர்ப்பாயே. அதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவை என்றும் சொன்ன தீர்ப்பாயம், இன்று தானே மீண்டும் இனப்படுகொலை தொடர்பாக விசாரித்து, இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை அரசு என்றும், மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் (இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்) ஈழத்தமிழர்கள் என்றும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் இதில் இலங்கை அரசின் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளன என்றும், இந்தியாவும் கூட்டாளியாக இருக்கக்கூடும் ஆனால் அதை உறுதிப்படுத்த மேலதிக விசாரணை தேவை என்றும் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் கூறியுள்ளது. இந்தியாவின் போரைத்தான் நான் நடத்தினேன் என இராஜபக்சே பகிரங்கமாகவே கூறியுள்ளார். அதனால் இந்தியாவும் இலங்கையின் கூட்டாளி என்பதில் நமக்கு எந்த ஐயமும் இல்லை.
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இலங்கை அரசு மீதான இரண்டாம் அமர்வின் இறுதியில் கொடுக்கப்பட்ட பத்திரிக்கை செய்தி...
------------
இலங்கையின் மீதான மக்கள் தீர்ப்பாயம் - இரண்டாம் அமர்வு
7-10 திசம்பர் 2013 - ப்ரமன், ஜெர்மனி.
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது; இந்த இனப்படுகொலை குற்றத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இந்தியாவும் இலங்கையின் கூட்டாளியாக செயல்பட்டதற்கு மேலதிக ஆதாரங்கள் தேவைப்படுவதால் இந்தியா கூட்டாளியாக அறிவிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாம் அமர்வு இன்று (10 திசம்பர்) ஜெர்மனியில் உள்ள ப்ரமன் நகரில் தீர்ப்பு கூறலுடன் முடிவுற்றது. இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது, அது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என 11 நீதிபதிகளும் ஒருமனதாக தங்கள் தீர்ப்பில் கூறினர்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் (இனப்படுகொலைக்குள்ளானவர்கள்) ஈழத்தமிழர்கள் என்ற தேசிய இனம் என்பதை தீர்ப்பாயம் குறிப்பிடுகின்றது.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை அவர்களது அடையாளத்தை இன்னும் முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதையும் தீர்ப்பாயம் கண்டறிந்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இனப்படுகொலை திட்டங்கள் 2009 மே மாதத்தில் அதன் இறுதி கட்டத்தை எட்டின. ஆனால் இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் திட்டத்தை இன்றும் கொண்டுள்ளது. இதன் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால் இனப்படுகொலை என்பது ஒரு ஒரு திட்டம், அந்த திட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குற்றவாளிகள் நிலப்பரப்பை கைப்பற்றியவுடன் தங்களது இனப்படுகொலை செயல்திட்டத்தை மாற்றினார்கள். மக்களை கொல்வதற்கு பதிலாக மற்ற பணிகளை செய்யத் துவங்கினார்கள். ஆனால் மக்கள் குழுவையும்,அவர்களது அடையாளத்தையும் அழிக்கும் அவர்களின் நோக்கம் ஈழத்தமிழின மக்களை உடலளிவிலும் ,மனதளவிலும் பெரிதாக காயப்படுத்துவதன் மூலம் இன்றும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கீழ்க்காணும் செயல்களை இலங்கை அரசு செய்துள்ளது என்பது ஐயத்திற்கிடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பாயம் கருதுகின்றது.
அ) (ஈழத்தமிழ்) மக்கள் குழுவில் உள்ளவர்களை கொல்லுதல். இதில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளும், வேண்டுமென்றே மக்கள் மீது குண்டு வீசி தாக்கியதும், மக்களை "போரில்லாப் பகுதி" என்றழைக்கப்பட்ட பகுதிக்குள் ஒன்று சேரச் செய்து மிகப்பெரிய அளவிலான படுகொலைகளைத் திட்டமிட்டுச் செய்தது. இலங்கையின் இனப்படுகொலைத் திட்டத்தை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஈழத்தமிழ்ச் சமூகத் தலைவர்களை திட்டமிட்டு சதிக்கொலை செய்தது என எல்லாம் அடங்கும்.
ஆ) (ஈழத்தமிழ்) மக்கள் குழுவில் உள்ளவர்களுக்கு உடலளவிலும் , மனதளவிலும் பெரிய அளவில் காயங்களை ஏற்படுத்துதல், இதில் சித்ரவதை செய்தல், மனிதத்தன்மைக்கு கீழாக நடத்துதல், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், விசாரணை என்ற பெயரில் அடித்தல், உயிர்ப்பயத்தை உருவாக்குதல், உடலில் ஆறாவடுக்களை உருவாக்கும் அளவிற்கு காயப்படுத்துதல் என எல்லாம் அடங்கும்.
இ) மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களைத் திட்டமிட்டு செய்தல், இதில் *பாதிக்கப்பட்டவர்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றுதல், *தனியார் இடங்களை கைப்பற்றுதல், *மிகப்பெரியப் பகுதிகளை உயர் பாதுகாப்பு இராணுவ வளையங்களாக பிரகடனப்படுத்தி தமிழ் மக்களின் நிலங்களை இராணுவம் கையகப்படுத்துதல் என எல்லாம் அடங்கும்.
இதுமட்டுமின்றி கீழ்க்காணும் செயல்களுக்கும் ஆதாரம் உள்ளது என தீர்ப்பாயம் கருதுகின்றது...
ஈ) ஒரு இனத்திற்குள்ளே பிறப்புகளை தடுக்கும் செயல்களை மேற்கொள்ளுதல், இதில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, கட்டாயக் கருக்கலைப்பை மேற்கொள்ளுதல் என எல்லாம் அடங்கும். இதை உறுதிப்படுத்தவும், இதே நிகழ்வு மற்ற தமிழர் பகுதிகளிலும் நடக்கின்றதா என்ற விசாரணையும் தேவைப்படுகின்றது. இதை வைத்தே இந்த செயலும் இனப்படுகொலை திட்டத்தில் ஒன்று என சொல்ல இயலும்.
இங்கிலாந்தும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இலங்கை செய்த இனப்படுகொலை குற்றத்தின் கூட்டாளிகளாவர். இதில் - ஆயுதங்களும், கருவிகளும் வழங்குதல், இவற்றை எல்லாம் அவர்கள்(இலங்கை) இனப்படுகொலைக்கு பயன்படுத்துவார்கள் எனத் தெரிந்தே தேவையான உதவிகளைச் செய்தல், என எல்லாம் அடங்கும்.
இலங்கை அரசினால் மட்டுமே தங்களது இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டு, தீர்ப்பாயத்தில் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும், தீர்ப்பாயத்தின் விசாரணையையும் அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, இந்தியா என்ற மூன்று நாடுகளும் இலங்கையின் இனப்படுகொலை குற்றத்தில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளனர் என தீர்ப்பாயம் நம்புகின்றது. மேலும் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை பார்க்க போதிய நேரமின்மையால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலையில் கூட்டாளிகளாக செயல்பட்டுள்ளார்கள் என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்கின்றோம்.
30க்கும் அதிகமான நேரடி சாட்சிகளும், பல நிபுணர்களும், பிரதிவாதியின் தரப்பை வலுப்படுத்த தேவையான ஆதாரங்களை அளித்தனர், இந்த ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இக்குற்றங்கள் எல்லாம் இனப்படுகொலை குற்றத்திற்கு தேவையான அடிப்படை அமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்று ரீதியாகவும் இக்குற்றத்திற்கு உதவிய கூட்டாளிகளையும் அடையாளம் காட்டுகின்றன.
இந்த இரண்டாம் அமர்வு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த காணொளியை பின்வரும் இணையத்தில் நீங்கள் பார்க்கலாம்.
http://ptsrilanka.org/
2009ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக 2010 சனவரி மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்த முதல் அமர்வின் தொடர்ச்சியாக இனப்படுகொலையை உறுதிப்படுத்தவே ஜெர்மனியில் உள்ள ப்ரமன் நகரில் இந்த இரண்டாவது அமர்வை நாங்கள் மேற்கொண்டோம்.
பன்னாட்டு மனித உரிமை அமைப்பு ப்ரமன்(IMRV- International Human rights Association Bremen), இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் மன்றம் (Irish forum for peace in Sri Lanka - IFSPL) என்ற இரண்டு அமைப்புகளும் தாக்கல் செய்த அறிக்கைகளை ஏற்று இலங்கை தொடர்பான இந்த இரண்டு அமர்வுகளையும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நடத்தியது. முதல் அமர்வைப் போலவே, இந்த அமர்விலும் கலந்து கொண்ட நீதிபதிகள் குழுவில் - இனப்படுகொலை ஆராய்ச்சி தொடர்பான நிபுணர்களும், முன்னாள் ஐ.நா அதிகாரிகளும், பன்னாட்டு சட்ட நிபுணர்களும், பிரபல மனித உரிமை , சமாதானச் செயற்பாட்டாளர்களையும் கொண்டிருந்தது.
10 திசம்பர் 2013
மனித உரிமை நாள்
PERMANENT PEOPLES’ TRIBUNAL
General Secretary:
GIANNI TOGNONI (ITALY)
GENERAL SECRETARIAT: VIA DELLA DOGANA VECCHIA 5 ‐ 00186 ROME
Tel/Fax:0039 06 6877774
E‐mail; tribunale@internazionaleleliobasso.
Web: http://www.internazionaleleliobasso.it
--------------------------
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்னெட் நிருபர் "தமிழீழ விடுதலைப்புலிகள்" அமைப்பின் மேல் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியது சரியா என்ற கேள்விக்கு பதில் சொன்ன பர்மிய சனநாயக செயற்பாட்டாளரும், நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் குழுவில் ஒருவருமான மௌங் சர்னி - தீவிரவாதிகள் என்ற சொல்லே ஒரு "மேலோட்டமான,செயலுத்தி கொண்ட ஒரு அரசியல் பதம்". இதை உலக நாடுகள் தங்களது புவிசார் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றார் அவர்.
தமிழீழ விடுதலை புலிகளையும், நெல்சன் மண்டேலா பங்கு கொண்ட ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அமைப்பையும் ஒப்பிட்டு பேசிய அவர், சில செயல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முழு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என வரையறுக்கக்கூடாது என்றார்.
குறிப்பு: இக்கட்டுரையில் முதல் ஐந்து பத்திகளுக்கு பிறகு வருபவை அனைத்தும் மொழியாக்கம் செய்யப்பட்டவை. ஆங்கில மூலங்கள் தரவுகளாக கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மே 17 இயக்கம் சார்பாக தோழர்.திருமுருகனும், தோழர்.உமரும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இந்த இரண்டாம் அமர்வில் கலந்துகொண்டனர்.
தரவுகள்:
1. http://www.jdslanka.org/index.php/2012-01-30-09-30-42/human-rights/426-sri-lanka-guilty-of-genocide-against-tamils-with-uk-us-complicity-ppt-rules
2. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36878
நற்றமிழன்.ப
சேவ் தமிழ்சு இயக்கம்
Monday, December 9, 2013
இந்திய அரசின் போலி மதச்சார்பின்மை
இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறையும் போலி மதச்சார்பின்மையும் - அரங்கக் கூட்டம்
அரங்கக் கூட்டம் மாலை 5.30க்கு சென்னை தி.நகர், வெங்கடேசுவரா மண்டபத்தில் ஆரம்பமானது. கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர் பரிமளா
தோழர் பரிமளா:
மோடி அலை வீசும் இந்த தேர்தல் கால கட்டத்தில், பெரும்பான்மை நடுத்தர வர்க்க இந்துத்துவ சமூகம் மோடிக்கும், பா.ஜ.கவுக்கும் ஆதரவான மன நிலையில் உள்ளது. இச்சூழல் தான் இக்கூட்டத்தின் தேவையை உணர்த்துகிறது. ஒடுக்கப் படும் சமூகமாக இருக்கும் நாம் தினம் தினம் ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகிறோம். ஒன்றரை லட்சம் மக்களை ஈழத்தில் இழந்த வலியும், முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழகத்தில் இடிக்கப் பட்ட போது ஏற்பட்ட வேதனையையும் நாம் நன்கு அறிவோம். 450 ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் வரலாற்று சின்னமாக வீற்றிருந்த, அவர்கள் தொழுகை நடத்தக் கூடிய ஒரு மசூதி இடிக்கப் படும் போது, அவர்கள் எத்தகையதொரு துயரத்தையும், மனவேதனையையும் அடைந்திருப்பார்கள் என்பதும் நமக்கு புரிய வேண்டும். ஒவ்வொரு முறை குண்டு வெடிப்பு நிகழும் போதும் இஸ்லாமியர்களே கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்கள் எந்தவொரு ஆவணமும், சாட்சியமும் இல்லாமலேயே, தம்மையே நீதிமன்றங்களாக, தாமே நீதிபதிகளாக இருந்து, முசுலிம்களை தீவிரவாதிகள் என்று பிரகடனப் படுத்தும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம்.
மேலும் கூட்டத்தின் பேச்சாளர்களை அறிமுகப் படுத்தி வைத்து பேச அழைத்தார் தோழர் பரிமளா.
தோழர் ஸ்நாபக் விநோத்:-
.
டிசம்பர் 6, பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி, சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்களான தோழர்கள், ஸ்நாபக் விநோத் மற்றும் ஜோன்சன் ஆகியோர் சென்னையில் ஐ.டி துறையினரிடமும், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்தினரிடமும், அதற்கு நேர் எதிரான அடித்தட்டு வர்க்க தொழிலாளர்களான கூலி வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள், பூ வியாபாரிகள், சாக்கடை சுத்தம் செய்வோர் ஆகியோரிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினர். நடுத்தர வர்க்க, நகர்ப்புற மக்களின் இஸ்லாமியர்கள் மீதான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வேண்டி இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டது.
அதில் நடுத்தர வர்க்கத்தில் 20% இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும், அடித்தட்டு மக்களை இன்னும் அந்த நோய் பீடிக்கவில்லையென்றும் தெரிவித்தார். ஆனால் 80% நடுத்தர வர்க்க மக்களுக்கு, பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்துக்கள் கைது செய்யப் படுகிறார்கள் என்ற செய்தி கூட சென்று சேரவில்லையென்றும், 30% அடித்தட்டு மக்கள் அந்த செய்தி தெரியும் என்றும் கருத்து தெரிவித்தனர். இக்கருத்து கணிப்பு பற்றி, பேசு முன்னர் 1991 சோவியத் சிதறுண்டதற்கு பிறகு, உலகளாவிய பச்சைக்கு எதிரான, இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலை உலகெங்கும் எப்படி கட்டமைக்கப் பட்டது என்றும், இந்தியாவில் காங்கிரசும் பா.ஜ.கவும் எப்படி இந்த கட்டமைப்பை, உலகமய தாராளமய பொருளாதார கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, பயன்படுத்தினார்கள் என்றும் தெரிவித்தார்.
தோழர். கீதா
ஆய்வாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான தோழர் வ.கீதா, இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துருவாக்கம் குறித்து வரலாற்றுப் பூர்வமாக அணுகி பேசினார். மேலும் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் நடத்திய கருத்துக் கணிப்பு, மக்கள் எத்தகைய குழம்பிய மனநிலையில் இருக்கிறார்கள் என்றும், சுதந்திரத்திற்கு முன்பான கால கட்டங்களில், இஸ்லாமிய எதிர்ப்பை ஊடகங்கள், இந்த அளவு ஊதிப் பெருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
80களுக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் எத்தகைய இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கொண்டிருந்தனர். அ.தி.மு.க அரசு நேரடியாகவே இந்து மத ஆதரவும், ஆதிக்க சாதி ஆதரவையும் கொண்டு விளங்கியது. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு காவல்துறையுமே இந்து அடையாளங்களோடு வளர்த்தெடுக்க அ.தி.மு.க அரசு உதவியிருக்கிறது எனவும் தோழர் வ.கீதா விளக்கினார்.திராவிட கொள்கைகளைக் கொண்ட தி.மு.க வும் ஓட்டரசியலுக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த கதையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
92க்கு பிறகு, இந்த இஸ்லாமிய எதிர்ப்பு பிம்பம் திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. அதில் ஊடகங்களின் பங்களிப்பு, சமீபத்திய உதாரணமாக போலிசு பக்ரூதின் வழக்கில், எத்தகைய இந்துத்துவ சார்பு தன்மையோடு ஊடகங்கள் நடந்து கொண்டன? ஊடகங்களே நீதிமன்றங்களாக இருந்து பொய்யாக தீர்ப்பு வழங்கிய விதம், அதே நேரம் CBI காஷ்மீரத்தில் அரங்கேற்றிய பாலியல் ( ஷோஃபியான் வழக்கு) வன்கொடுமைகளை திட்டமிட்டு செய்தியாக வரவிடாமல் அரசு எந்திரம் தடுத்தது, ஊடகங்களும் அச்செய்திகளை இருட்டடிப்பு செய்தமை ஆகியவை குறித்து பகிர்ந்து கொண்டார்.
மேலும் மதக்கலவர தடுப்புச் சட்டத்தை அ.தி.மு.க அரசு எதிர்க்கும் காரணங்களையும் அதன் போலித் தனங்களையும் அம்பலப் படுத்தி பேசினார் தோழர் கீதா. மாநில அரசின் உரிமைகளை பறிப்பது முதல் காரணமாகவும், முடிவெடுக்கும் அதிகாரத்தின் மீதே கை வைப்பதாகவும் அதாவது காவல்துறையை மீறி விசாரணைகள் நடத்தப் படக்கூடாது என்று கவலைப் படுவதாகவும் தமிழக அரசு இம் மசோதாவை எதிர்க்கிறது. இதிலிருந்தே இவர்கள் மதக்கலவரங்களை எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள் என்பதும், முசுலிம்கள் மீது எந்த கரிசனமும் இல்லையென்பதும் விளங்கும்.
மேலும் இஸ்லாமியர்களிடையே எந்தவொரு விவாதத்தையும் நடத்தாமலேயே அவர்களை பிற்போக்கு வாதிகள் என்று சித்தரிக்கிறார்கள். அவர்கள் விசுவாசமற்றவர்களாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாகவும் , நவீன காலத்திற்கு உகந்தவர்களல்ல என்றும் ஊடகங்களில் பொய்ப் பரப்புரை செய்யப் படுகிறது. ஆக இந்திய அரசு என்பது பிறவியிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையை கொண்டதாகத் தான் இருக்கிறது. Structurally Indian State is anti-Muslim.
தோழர் செந்தில்
சேவ் தமிழ்சு இயக்கத் ஒருங்கிணைப்பாளர். செந்தில், உலக மயமாக்கல் கொள்கையையும் தனியார் தாராளமயமாக்கச் சூழலில் எப்படி இந்துத்வ சக்திகள் எப்படி வளர்ந்தார்கள் என்பது பற்றி பேசினார். மேலும் இந்திய சுதந்திரமே, ஜனநாயக போராட்டமாக அமையாமல், வேத கால பெருமையுடைய இந்தியாவை அந்நியர் ஆள்வதா என்ற இந்துத்துவ சிந்தனையிலிருந்து தான் உதயமானதாக தெரிவித்தார். இந்திய தேசியவாதமும் சிங்கள பெளத்த பேரினவாதமும் இந்த புள்ளியில் தான் ஒன்றிணைவதாக குறிப்பிட்டார்.
1984ல் தான் இந்தியாவில் சங்க பரிவாரங்கள் அரசியல் சக்திகளாக வளர்த்தெடுக்கப் பட்டார்கள். முதலாளித்துவமும், இந்த்துவமும் தனி மனிதனின் சிந்தனைகளிலிருந்து தான் ஒன்றிணைகின்றன. மனிதன் நல்லவனாக இருந்தால் வீடு முன்னேறும். வீடு முன்னேறினால் தெரு முன்னேறும், தெருக்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று இந்துத்துவ சிந்தனையைத் தான், முதலாளித்துவமும் தனி மனிதனாக இருந்து உழைத்து முன்னேறு என்று ஒத்ததிர்வுகளாக கருத்துகளை முன் வைக்கின்றன. அத்தகைய சங்க பரிவாரங்களின் வர்க்க அடையாளமாக பார்ப்பன பனியாக்கள் தான் இருந்தனர். அவர்கள் அரசியல் தளத்தில் வளர்ந்ததற்கு பிறகு, பண்பாட்டு தளத்தில் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்கும் பரப்புரைகளை மேற்கொண்டனர். தொலைக்காட்சி தொடர்களில் ராமாயணம் மகாபாரதம் ஒளி பரப்புவது, ரத யாத்திரை மேற்கொள்ளுதல், என்று தீவிரமாக கருத்து பரப்புரைகளில் ஈடுபட்டனர்.
உலகமயமாக்கல் கொள்கையை ஆதரிக்கக் கூடிய , அரசியல் ரீதியாக அதனை எவ்வித தங்கு தடையுமின்றி மக்களிடையே திணிக்க, இந்துத்துவ சக்திகளை வளர்த்தெடுத்தல் இந்திய அரசுக்கு அத்தியாவசியமனதாக இருக்கின்றது.
தோழர் அப்துல் சமது
த.மு.மு.க பொதுச்செயலாளர் தோழர்.அப்துல் சமது பேசுகையில் மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்துக்களுக்கு எதிராக மாபெரும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று திரிபு தான். ஜோதி பா பூலே வருணாசிரம பார்ப்பனிய தருமங்களை கடுமையாக எதிர்த்தவர்களுள் முதன்மையாக இருந்தார். அதற்கு முன்பு, மராட்டியத்தில் சாஹூ மஹராஜ் என்ற மன்னர் 50% பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் இட ஓதுக்கீடு நடைமுறைப் படுத்தப் பட்ட போது தான், அங்கிருந்த சித் பாவன பார்ப்பனர்கள், தம் கொள்கைகளுக்கு எதிராக உள்ள இஸ்லாமியர்களை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு துவக்கி வைத்தனர்.
1893 புனேவில் தான் முதன் முதலாக இந்து முசுலிம் கலவரத்தை நடத்தினர். 80களுக்கு பிறகான கால கட்டங்களில், அது தொடர்ந்தது. பொது இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது, நபிகள் நாயகத்தை கொச்சை படுத்துவது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டுக்கறி உண்ணும் தலித்துகளையும், இஸ்லாமியர்களையும் கேவலமாக பேசுவது, விநாயகர் ஊர்வலங்களில் மசூதிகளுக்கு முன்பு திரண்டு, “பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு”, “துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியை கட்டு” போன்ற அறுவெறுக்கத் தக்க முழக்கங்களை இட்டு, திட்டமிட்டு கலவரங்களுக்கு முகாந்திரம் அமைப்பது என்று இந்துத்துவ சக்திகளின் இஸ்லாமிய வெறுப்பின் தொடர் நிகழ்வுகளை தோழர் அப்துல் சமது பதிவு செய்தார்.
இஸ்லாமியர்கள் எப்போதும் பிரிவினையை விரும்பாதவர்களாகவும், சமூக நீதியை மட்டுமே அவர்களின் நோக்கமாகவும் கொண்டே போராடி வருகின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் அரேபிய இறக்குமதிகளல்ல. இங்குள்ள தீண்டாமை, சாதிக் கொடுமை தாங்க முடியாமல் தான் இசுலாத்தை தழுவியர்களாக இருந்தனர். அதனால் தான் சேரமான் பள்ளிவாசல் இன்று இந்தியாவின் முதல் பள்ளிவாசலாக கேரளாவில் அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பாபர் மசுதி குறித்த வழக்கில், சங்க பரிவாரங்கள் அங்கு சிலையை திருட்டுத் தனமாக கொண்டு போய் வைத்தாலும், 1986ல் அலகாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கே வழிபடும் உரிமையை வழங்கிற்று எனவும், மேல் முறையீடு செய்யப் போனால், உயர் நீதிமன்றமும் அதை மறுக்காமல் வழிமொழிந்ததாகவும் குறிப்பிட்டார்.
இன்று பயங்கரவாதிகளாக சித்தரிக்கப் படும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியும், அதே இந்துக்கள் கைது செய்யப் பட்டாலோ அல்லது அவர்கள் வழக்கை கையாளும் போதோ நடைபெறும் பாரபட்ச நடைமுறைகளைச் சாடி பேசிய அவர், இந்தியா நிச்சயம் மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியாது என இந்திய அரசின் போலி மதச் சார்பின்மையை சாடி பேசினார்.
சிறப்பு பேச்சாளர்கள் பேசி முடிந்த முன், கலந்துரையாடல் நடைபெற்றது. கேள்விகள் கேட்கப் பட்டன. அதோடு பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் தம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஒடுக்கப் பட்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே போராட வேண்டியிருக்கும் இச்சூழலில், அனைத்து சனநாயக முற்போக்கு இயக்கங்களும் ஒடுக்கப் பட்ட அம்மக்களுக்காக இது போன்ற கூட்டங்களையும் போராட்டங்களையும் நடத்த வேண்டும் என்று பரவலாக கருத்து பதியப் பட்டது. கொட்டும் மழையிலும் எழுச்சியுடன் நடைபெற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Thursday, December 5, 2013
பாபர் மசூதி இடிப்பும் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறையும்
இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும்,அடுத்த சில நொடிகளில் தாடி வைத்த ஒரு முகம் சிவப்பு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, தலைப்புச் செய்திகளில் மீண்டும், மீண்டும் பெரிதாக்கிக் காட்டப்படும். இவர் இந்தியன் முஜாஹிதினைச் சேர்ந்தவர். இவர் தான் அந்த குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று பரபரப்பாக, எடிட் செய்யப்பட்ட கொட்டை எழுத்துகளில், ஊடகங்களில் பிரைம் டைம் செய்திகளாக வெளியாகி கொண்டிருக்கும். கவனமாக பக்கத்தில் ஒரு கேள்விக்குறி போட்டப்பட்டிருக்கும்.. வேறொன்றுமில்லை. ஊகிக்கிறார்களாம். குண்டு வெடித்த இடத்திற்கு, மோப்ப நாயே போய்ச் சேர்ந்திருக்காது, அதற்குள்ளாக குற்றவாளியை எப்படித் தான் கண்டுபிடிக்கின்றார்களோ !!
எளிதில் சந்தேகிக்கலாம். கற்பனைக்கெட்டியவாறு ஊகிக்கலாம். நிரூபிக்கத் தேவையில்லை. எளிதில் கைது செய்யலாம். இது தான் இஸ்லாமியர்கள் மீது இந்திய அரசும் ஊடகங்களும் கொண்டுள்ள நிலைப்பாடு. ஆஜ்மீர் தர்கா, தானே, நாண்டெட், மக்கா மஸ்ஜித் ஆகிய பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்த போது, இப்படித் தான் பல இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர். பயங்கரவாதிகள் என்று அடையாளப் படுத்தப்பட்டு, ஊடகங்கள் முன் நிறுத்தப்பட்டனர். பிறகு அவர்கள் குற்றம் நிரூபிக்கப் படாமல், அபினவ் பாரத் என்று இந்துத்துவ அமைப்பு, இக்குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பாக குற்றஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டது. அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் வழக்கம் போல லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள் தான் இதன் பின்னே உள்ளது என அரசு வழக்கம் போல பொய்யான அறிக்கைகளை விட்டது.ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப்பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர். சங்க பரிவாரங்களுடன் இந்திய இராணுவம்,உளவுத்துறை ஆகிய அனைத்து அரசு எந்திரங்களின் கூறுகளும் இணைந்தே செயல்படுகின்றனர் என்பதற்கு இது ஒரு எளிய உதாரணம். இந்தக் குற்றங்களின் பின்னணியையும், பிரக்யா சிங் தாகூர் சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட இந்து சாமியார்களையும் அவர்களின் வலைப்பின்னலையும் கண்டு பிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்திய, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை ஆணையர், 26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலினூடே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். காவி பயங்கரவாதத்தை தோலுரிக்காமல் விட மாட்டேன் என்ற சவாலுடன் கிளம்பிய கர்கரேவுக்கு சிவசேனை, சங்க பரிவார கும்பல்களால் தொடர் மிரட்டல் வந்திருக்கிறது என்பதை காங்கிரசு அமைச்சர் திக் விஜய்சிங்,கர்கரே தன்னுடன் பேசிய தொலைபேசி உரையாடல்களை கொண்டு உறுதி செய்திருக்கிறார். ஊடகங்களும் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போது, பரபரப்பாக்கும் ஊடகங்கள், அவர்கள் விடுவிக்கப்படும் போதும் சங்க பரிவாரங்கள் கைது செய்யப்படும் போதும் அமைதியாக அச்செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. முஸ்லிம்கள் கைதாகும் போது தீவிரவாதி கைது செய்யப் பட்டான், அவன் இவன் என்று மிகக் கேவலமாக சித்தரிக்கும் அதே ஊடகங்கள், இந்து இளைஞர்கள் கைது, இந்தியன் முஜாஹிதினால் மூளைச் சலவை செய்யப்பட்டனரா? என்று பவ்யமாக பம்முவதையும் பார்க்கிறோம். இதற்கு நல்ல உதாரணம், வெகு சமீபத்தில் மோடி வருகையை ஒட்டி, வெடித்த பாட்னா குண்டுகள்.
போராடும் மக்கள் மீதோ, ஒரு இனத்தின் மீதோ ஒடுக்குமுறை செலுத்துவது என்று முடிவெடுத்து விட்டால், அரசு இயந்திரம் முதலில் செய்வது கருத்துருவாக்கம். வெகுமக்கள் மத்தியில் போராடுபவர்களின் நன் மதிப்பைச் சீர்குலைப்பது, தீவிரவாதிகள் என்று அடையாளப் படுத்துவது, அந்நிய ஏஜென்டுகள், அந்நிய சதி என்று முத்திரை குத்துவது.மண்ணைக் காக்க போராடும் விவசாயிகள் அனைவரும் நக்சலைட்டுகள், இயற்கை வளங்களை காக்கப் போராடும் பழங்குடியினர் அனைவரும் மாவோயிஸ்ட்டுகள், கூடங்குள அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் அந்நிய நிதி பெறும் தேசத் துரோகிகள், இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். இது தான் அரசு எந்திரங்கள் இடையறாது ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்துருவாக்கத்தின் விளை பொருட்கள்.
'முஸ்லிம் தீவிரவாதம்' பற்றி மிக அதிகமாகப் பேசப் பட்டுவரும் நம் நாட்டில் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசப்படுவதில்லை. 1992 ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட நிகழ்வு இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை என்பது நடைமுறையில் இல்லை என்பதை உலகில் அம்பலமாக்கிய ஒன்றாகும். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் எல்லோரும் இந்து பெரும்பான்மைவாதத்திற்கும் இந்துத்துவ பாசிசத்திற்கும் எதிராகவும் போராட வேண்டிய கடமையை உணர்த்தி நிற்கும் நாள். மேலும், ’வளர்ச்சி’ என்ற பெயரில் பா.ஜ.க வை வரவேற்கும் போக்கு பெருகி வரும் இன்றைய சூழலில், இந்துத்துவ வெறி அரசியல் இது வரை இச்சமூகத்தில் விளைவித்த தீங்குகளை நினைவுப்படுத்த வேண்டிய தேவையும் அதிகமாகின்றது.
>
நிச்சயமாக இதில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும்இருக்கக் கூடும். மாற்றுக் கருத்துகளுக்கு இடையேயானப் போராட்டம் தான் கருத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. மாற்றுக் கருத்து இருப்பினும் இந்த கருத்தரங்கத்திற்கு வருமாறு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக அன்போடு அழைக்கிறோம். திறந்த மனதுடன் நேரில் விவாதிப்போம்.
எளிதில் சந்தேகிக்கலாம். கற்பனைக்கெட்டியவாறு ஊகிக்கலாம். நிரூபிக்கத் தேவையில்லை. எளிதில் கைது செய்யலாம். இது தான் இஸ்லாமியர்கள் மீது இந்திய அரசும் ஊடகங்களும் கொண்டுள்ள நிலைப்பாடு. ஆஜ்மீர் தர்கா, தானே, நாண்டெட், மக்கா மஸ்ஜித் ஆகிய பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்த போது, இப்படித் தான் பல இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர். பயங்கரவாதிகள் என்று அடையாளப் படுத்தப்பட்டு, ஊடகங்கள் முன் நிறுத்தப்பட்டனர். பிறகு அவர்கள் குற்றம் நிரூபிக்கப் படாமல், அபினவ் பாரத் என்று இந்துத்துவ அமைப்பு, இக்குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பாக குற்றஞ்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டது. அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் வழக்கம் போல லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள் தான் இதன் பின்னே உள்ளது என அரசு வழக்கம் போல பொய்யான அறிக்கைகளை விட்டது.ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப்பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர். சங்க பரிவாரங்களுடன் இந்திய இராணுவம்,உளவுத்துறை ஆகிய அனைத்து அரசு எந்திரங்களின் கூறுகளும் இணைந்தே செயல்படுகின்றனர் என்பதற்கு இது ஒரு எளிய உதாரணம். இந்தக் குற்றங்களின் பின்னணியையும், பிரக்யா சிங் தாகூர் சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட இந்து சாமியார்களையும் அவர்களின் வலைப்பின்னலையும் கண்டு பிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்திய, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை ஆணையர், 26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலினூடே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். காவி பயங்கரவாதத்தை தோலுரிக்காமல் விட மாட்டேன் என்ற சவாலுடன் கிளம்பிய கர்கரேவுக்கு சிவசேனை, சங்க பரிவார கும்பல்களால் தொடர் மிரட்டல் வந்திருக்கிறது என்பதை காங்கிரசு அமைச்சர் திக் விஜய்சிங்,கர்கரே தன்னுடன் பேசிய தொலைபேசி உரையாடல்களை கொண்டு உறுதி செய்திருக்கிறார். ஊடகங்களும் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போது, பரபரப்பாக்கும் ஊடகங்கள், அவர்கள் விடுவிக்கப்படும் போதும் சங்க பரிவாரங்கள் கைது செய்யப்படும் போதும் அமைதியாக அச்செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. முஸ்லிம்கள் கைதாகும் போது தீவிரவாதி கைது செய்யப் பட்டான், அவன் இவன் என்று மிகக் கேவலமாக சித்தரிக்கும் அதே ஊடகங்கள், இந்து இளைஞர்கள் கைது, இந்தியன் முஜாஹிதினால் மூளைச் சலவை செய்யப்பட்டனரா? என்று பவ்யமாக பம்முவதையும் பார்க்கிறோம். இதற்கு நல்ல உதாரணம், வெகு சமீபத்தில் மோடி வருகையை ஒட்டி, வெடித்த பாட்னா குண்டுகள்.
போராடும் மக்கள் மீதோ, ஒரு இனத்தின் மீதோ ஒடுக்குமுறை செலுத்துவது என்று முடிவெடுத்து விட்டால், அரசு இயந்திரம் முதலில் செய்வது கருத்துருவாக்கம். வெகுமக்கள் மத்தியில் போராடுபவர்களின் நன் மதிப்பைச் சீர்குலைப்பது, தீவிரவாதிகள் என்று அடையாளப் படுத்துவது, அந்நிய ஏஜென்டுகள், அந்நிய சதி என்று முத்திரை குத்துவது.மண்ணைக் காக்க போராடும் விவசாயிகள் அனைவரும் நக்சலைட்டுகள், இயற்கை வளங்களை காக்கப் போராடும் பழங்குடியினர் அனைவரும் மாவோயிஸ்ட்டுகள், கூடங்குள அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் அந்நிய நிதி பெறும் தேசத் துரோகிகள், இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். இது தான் அரசு எந்திரங்கள் இடையறாது ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்துருவாக்கத்தின் விளை பொருட்கள்.
'முஸ்லிம் தீவிரவாதம்' பற்றி மிக அதிகமாகப் பேசப் பட்டுவரும் நம் நாட்டில் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசப்படுவதில்லை. 1992 ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட நிகழ்வு இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை என்பது நடைமுறையில் இல்லை என்பதை உலகில் அம்பலமாக்கிய ஒன்றாகும். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் எல்லோரும் இந்து பெரும்பான்மைவாதத்திற்கும் இந்துத்துவ பாசிசத்திற்கும் எதிராகவும் போராட வேண்டிய கடமையை உணர்த்தி நிற்கும் நாள். மேலும், ’வளர்ச்சி’ என்ற பெயரில் பா.ஜ.க வை வரவேற்கும் போக்கு பெருகி வரும் இன்றைய சூழலில், இந்துத்துவ வெறி அரசியல் இது வரை இச்சமூகத்தில் விளைவித்த தீங்குகளை நினைவுப்படுத்த வேண்டிய தேவையும் அதிகமாகின்றது.
>
நிச்சயமாக இதில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும்இருக்கக் கூடும். மாற்றுக் கருத்துகளுக்கு இடையேயானப் போராட்டம் தான் கருத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. மாற்றுக் கருத்து இருப்பினும் இந்த கருத்தரங்கத்திற்கு வருமாறு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக அன்போடு அழைக்கிறோம். திறந்த மனதுடன் நேரில் விவாதிப்போம்.
Monday, December 2, 2013
மின்வெட்டுக் காலங்களும் - கூடங்குள அணுமின் நிலையக் கதைகளும்
கடந்த சில ஆண்டுகளில், தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவிய போதெல்லாம், கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தான், மின் தட்டுப்பாடு குறையும். தமிழ்நாடு பெரும் வளம் பெறும், தொழில் வளம் பெருகும். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களால் தான் அந்த மடை திறக்காத மின்சார வெள்ளம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போராட்டக்காரர்களால் தான் மின் வெட்டு நிலவுகிறது என்று ஒரு மாபெரும் பொய் பரப்புரையை ஊடகம் முழுதும் அரசு பரப்பியது. ஆனால் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கி எத்தனை நாட்கள் ஆகின்றது. தமிழகத்தில் இன்று நிலவும் கடும் மின்வெட்டுக்கு அவர்களால் குறைந்த பட்சம் சோளப் பொறியாவது அளக்கும் திராணியிருக்கிறதா? மின் உற்பத்தி தொடங்கியாகி விட்டது. பிளக்கை மாட்டி சுவிட்சைப் போடுங்கள். மின்சாரம் பிய்த்துக் கொண்டு வருவதை உணர்வீர்கள். என்றெல்லாம் கூவிக் கும்மியடித்த அணுமின் வளாக அதிகாரிகளும் மத்திய அரசும் கொஞ்சம் மக்கள் முன் வந்து அவர்களின் வழக்கமான வாய்ச்சவடால்களை இப்போது அவிழ்க்கட்டுமே!
இப்பொழுது தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கியிருக்கின்றது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 மணி நேரமும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 6 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமும், நகர்ப்புறங்களில் அறிவிக்கப்படாத நிலையிலும் மின் வெட்டு வழக்கமாகி இருக்கிறது.சிறு குறு தொழில்முனைவோர் மீண்டும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடும் மின் தட்டுப்பாடுக்கான காரணங்களாக அரசு சொல்லும் சாக்கு போக்குகளை கவனிக்க வேண்டும்.பருவமழை சரியாக கிடைக்கவில்லையாம்.மேலும் தீபாவளி சமயங்களில் மின் நுகர்வு அதிகமாக இருந்ததாம். அதாவது மக்கள் தான் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தி, மின் தட்டுப்பாடுக்கு வழி செய்து விட்ட மாதிரி இருக்கிறது இவர்களின் பதில். இன்னும் கொஞ்சம் மேலே போய், மக்களே மின் வாரிய நிலையங்களுக்கு சென்று ஃபியூஸை பிடுங்கி விடுகிறார்கள் என்று கூட தினமலரில் செய்தி வரலாம். மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்ற அடிப்படை அறிவியல் தெரியாத மூடர்களே தீபாவளி நேரத்தில் அதிகம் செலவு செய்து விட்டார்கள், அதனால் தான் இப்பொழுது மின்வெட்டு எனக்கூறுகின்றார்கள்.
காற்றாலை மின் உற்பத்தி குறைந்து விட்டதும் மின் தட்டுப்பாடுக்கான ஒரு காரணமே என்பது அவர்கள் முன்வைக்கும் அடுத்தச் சாக்கு. சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவைகளெல்லாம், பெருகி வரும் மின் தேவைக்கு போதுமானதாக இருக்காது. அணு மின்சாரமே தீர்வு என்று அணு ஆற்றல் கொள்கைக்கு கொடி பிடித்தவர்கள், தற்போது சேம் சைடு கோல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் காற்றாலை மின்சாரத்தை மட்டும் நம்பியா தமிழகம் இருக்கிறது? இன்று தமிழகத்தின் பெரும்பாலான அனல் மின் நிலையங்கள் முக்கி முனகி தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. முறையான பராமரிப்பு இல்லை. அல்லது பராமரிப்புகளுக்கான செலவீனங்கள் குறித்து அரசுக்கு போதுமான அக்கறை இல்லை.
தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களின் தற்போதைய நிலை:
1. வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட இரண்டாவது அலகில் உள்ள இரண்டு யூனிட்டுகளும் பழுதானதால் சுமார் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
2. மேட்டூர், வல்லூர் அனல்மின் நிலையங்களில் பராமரிப்பு காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தம்.
3. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தொடர்ந்து பழுது. மூன்றாவது அலகின் கொதிகலனில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டு இயங்குமுன், மீண்டும் இயந்திரக் கோளாறு என்று மின் உற்பத்தி நிறுத்தம். பழுதுகள் மட்டுமில்லாமல், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி நிகழும் தீ விபத்துகள்.
ஒவ்வொரு முறை அனல் மின் நிலையங்களில் பழுது ஏற்படும் போதும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இன்னும் ஓரிரு நாளில் மின் உற்பத்தி தொடங்கப் படும் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியிடுவது இவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. அரசு நடத்திவரும் மின் நிலையங்கள் வேண்டுமென்றே சரியாக பராமரிக்கப்படுவதில்லை, அப்பொழுது தானே எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கமுடியும்....
மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில், ஆற்றல் சார் ஆய்வுகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில் 25 விழுக்காடு, அணுசக்தி ஆய்வுகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவது, மத்திய அரசின் ஊதாரித் தனம் என்பது மட்டுமின்றி, "நான்" "எனது தலைமையிலான அரசு" என அடக்கமே உருவான தமிழக முதல்வர், மரபு சார் அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தாமல், மாற்று எரிசக்திகளுக்கான தேவை குறித்து சட்டமன்றங்களில் விவாதிக்காமல், சீமான்கள் விளையாடும் செஸ் போட்டிகளுக்கும்,கலை நிகழ்ச்சிகளுக்கும் மக்களின் வரிப்பணத்தையும், அரசுகளின் அலுவல் நேரத்தையும் ஊதாரித்தனமாக செலவிடுவதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதாகவும், ஜனவரிக்கு மேல் 1000 மெகாவாட் உற்பத்தி அளவை அடைந்து விடுவோம் என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிக்கடி வெளியிடுகிறார். இது போன்று பொய்யான தகவல்களை, வாய்ச்சவடால்களை அவ்வப் போது வெளியிடுவது இந்திய அணுசக்திக் கழக புனிதப் பசுக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஹோமி பாபா காலத்திலிருந்து கடந்த மூன்று பத்தாண்டுகளாக, இவர்களின் கையாலாகாத திறன் ஏற்கெனவே அம்பலமான ஒன்று தான். ஆனால் இன்றோ , கடுமையான மின்வெட்டு நிலவும் நேரத்தில் கூட, தமிழகத்தில் அது ஒரு விவாதப் பொருளாக இன்னும் மாறாமல், ஒரு திட்டமிட்ட ஊடக இருட்டடிப்பு நடந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உச்சமடைந்த நேரத்திலும், கடுமையான மின்வெட்டு இருந்தது. அப்போதெல்லாம் மின்வெட்டுக்கு போராட்டக்காரர்கள் தான் காரணமென்று ஊடகங்கள் முழுதும் ஒரு மாய பிம்பம் உருவாக்கப் பட்டது. இப்போது அந்த காரணம் என்ன ஆனது? அணு உலை திறக்கப் பட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என பரப்புரை செய்தவர்களெல்லாம், இன்று தமிழகத்தில் மீண்டும் உருவெடுத்திற்கும் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?
அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்
-நன்றி - விகடன், Cartoonist.பாலா
Monday, October 28, 2013
கண்ணாடிக் கட்டிடங்களுக்குள்!
கடந்த சில தினங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையினர் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு எட்டியிருக்கும் என்ற அறியாமையும், இந்த செய்திகள் பற்றி நாம் கவலைப்பட என்ன இருக்கிறது என்பதை சொல்லவுமே இதனை எழுதுகிறேன்.
சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராக (PROJECT MANAGER) பணியாற்றிய கிருஷ்ணகுமார் என்னும் ஊழியர், மனிதவள(HR) அதிகாரிகளால் பணிக்கமர்த்தப்பட்ட குண்டர்களால்(Bouncers) தாக்கப்பட்டு அது தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அத்தோடு கடந்த வாரம் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவின் 10-வது மாடியில் இருந்து ரேஷ்மா என்கிற பெண் ஊழியர் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் வெளியானது. இந்த ஆண்டு (சென்னையில் மட்டும்) தற்கொலை செய்து கொள்ளும் ஐந்தாவது தகவல் தொழில்நுட்ப ஊழியர் இவர் (1)..
நான் என்னுடைய நண்பர் ஒருவரிடம் இது பற்றி கேட்ட போது, அந்த தொழில்நுட்பப் பூங்காவில் இது பற்றி எந்த ஒரு சத்தமோ, சலனமோ இல்லை என்றும், அப்படி ஒரு தற்கொலை நிகழ்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் நிறுவனங்கள் இயங்குவதாகவும் தெரிவித்தார். ஒரு சக ஊழியரின் உயிர் பறிபோவது பற்றிக் கூட சிந்திக்க நமக்கு உண்மையிலேயே நேரமில்லையா? அல்லது மனமில்லையா?.
அலுவலகத்தில் நமக்கு அடுத்த இருக்கையில் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாலும் நாம் அதுபற்றி எந்த ஒரு கவலையுமின்றி கடந்து செல்கின்றோம். மறுபுறம், தகவல் தொழில்நுட்பத் துறையின் பணிச் சுமையும், அழுத்தமும் காரணம் என்று நாம் பேசும் போது நீங்கள்தான் அதிகம் சம்பாதிக்கறீர்களே என்று சமூகமும் கடந்து செல்கிறது. சமூக நடுநிலையாளர்களோ விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஊடகங்களும், தற்கொலைக்கான காரணங்களை விசாரிக்க வரும் காவல் துறையும் காதல் மற்றும் தனிநபர் பிரச்சனைகளையே காரணம் காட்டி வழக்கை முடிக்கின்றனர்.
நிகழும் தற்கொலைகளுக்கும், சக ஊழியர்களுக்காகக்கூட நாம் குரல் கொடுக்காமல் இருப்பதற்கும், நீங்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறீர்களே என்று நம்மீது ஏனையோர் பாய்வதற்குமான காரணம் நம் சம்பாத்தியம் மட்டும் அல்ல.
குளிரூட்டப்பட்ட பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை என்று வெளியில் இருப்பவர்களின் பார்வையில் நின்று இதனைப் பார்க்காமல் சற்று உள்ளே சென்று பார்த்தோமானால் இதற்கான காரணங்கள் ஒரு பெர்முடா முக்கோணம் போன்ற தளத்தில் அமைந்துள்ளதை அறிய முடியும். முக்கோணத்தின் ஒரு முனையில் ஊழியர்களான நாமும், இரண்டாவது முனையில் அரசு, காவல்துறை மற்றும் பல்வேறு பிரிவினரைக் கொண்ட சமூகமும், உச்ச முனையில் LPG (தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம்) என்று சொல்லப்படும் பொருளாதார மாற்றமும் அதன் வழி வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் நின்று கொண்டு நம் சக ஊழியர்களின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன.
1. தகவல் தொழிநுட்பத் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்களுடைய சொந்த ஊர்களைவிட்டு பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்து பணிபுரிபவர்களே. நம்முடன் பணிபுரிபவர்களுடனோ, நண்பர்களுடனோ அல்லது விடுதிகளிலோ தங்குபவர்கள் ஏராளம். பெரும்பாலான பெண் ஊழியர்கள் விடுதிகளிலேயே தங்கி பணிபுரிகிறார்கள்.
2. நம்முடைய அலுவலகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள போட்டி சூழல் காரணமாக சக ஊழியர்களிடத்தில் நட்பு பாராட்டுவதும், அலுவலகப் பணிகள் தாண்டி கலந்துரையாடுவதும் அரிதாக உள்ளது. இவ்வாறு உள்ள பணிச் சூழலில் நாம் ஒவ்வொருவரும் நம்முடன் பேசுவதற்கும், நம்முடைய வெறுமையையும்,ஆற்றாமையையும் போக்குவதற்கும் யாரும் இல்லாமல் தனித்தீவுகளாகி இருக்கிறோம். அதே சமயம் அலுவலக சூழலும், சக ஊழியர்களுக்கான பணிச்சுமையும், நாம் ஒன்றுபடாமல் இருக்க கட்டமைக்கப்பட்ட போட்டி மனப்பான்மையும் நம்மை ஒருங்கிணையவிடாமல் தடுப்பதை நாம் உணராமல் இருக்கின்றோம்.
3. அத்தோடு நம்முடைய பெற்றோர்கள் ஒரு வருடம் உழைத்து பெற்றதற்கு நிகரான பணத்தை ஒரு மாத ஊதியமாக பெரும் நாம் சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் நம் தேவைகள் பற்றி சிந்திக்காமல் வாங்கி குவிக்கும் நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கிறோம். வேலைக்கு சேர்ந்து ஓரிரு வருடங்களில் வங்கியில் கடன் பெற்று வீடு வாங்குவதும், பின்னர் மீண்டும் கடன் வாங்கியாவது கார் வாங்குவதும் இங்கு எளிதாக நடக்கின்றன. பின்னர் கடன் கழுத்தை நெரிக்கும் சூழல் வரும்போதோ, வேலை பறிபோகும் நிலையிலோ சில ஊழியர்கள் தற்கொலைகள் பற்றி சிந்திக்கின்றனர்.
நம்முடைய பணிச்சூழல் மற்றும் அழுத்தம் பற்றி பேசும்போதெல்லாம் விவசாயிகள் தற்கொலையைப் பற்றி நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள், விவசாயிகளுக்காக பேச சங்கங்கள் இருக்கின்றன, பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நமக்காக பேச நாதியில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை என்பதே அதற்காகத்தான் என்று சொல்லும் மனிதவளத் துறை அதிகாரிகள் நம்மைச் சமாளிக்க குண்டர்களை நியமிக்கும் வேலையில் மும்முரமாக உள்ளனர் (2).
இன்றைய சூழலில், நமக்காக பேச யாரும் வரமாட்டார்கள், அதற்குக் காரணமும் நாமே. அதிக சம்பாத்தியமும், நுகர்வும் ஊட்டிய போதையில் நாம் சமூகத்தைவிட்டு மிகவும் விலகி இருக்கிறோம்.
1990-களுக்குப் பிறகு நடந்த பொருளாதார மாற்றங்களினால் சமூகத் தராசின் ஏற்ற தட்டில் நமக்கே தெரியாமல் வைக்கப்பட்டவர்கள் நாம். ஏற்றத்தின் பக்கம் முன்னர் இருந்தவர்கள் போலவே நாமும், நம்மை வளர்த்த சமூகத்தை மறந்துவிட்டோம் என்பதும் உண்மையே. ஆனால் சம்பாதிக்கிறீர்களே? இறந்தால் என்ன?? என்பது நிச்சயம் நாம் கண்டிக்க வேண்டிய விடயமே. ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை கேள்வி கேட்பதற்கு முன்னர், நாம் பணியிடத்தில் நம்முடைய உரிமைகளை மீட்டாக வேண்டிய கட்டத்திலும் கட்டாயத்திலும் உள்ளோம்.
வழமைப் போலவே பணியிடங்களில் நடக்கும் பிரச்சனைகளையும், தற்கொலைகளையும் நாம் கடந்து சென்றோம் என்றால், உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இன்றுள்ள நாம், உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி போராடும் நிலையும், காலமும் விரைவில் வரும்.
ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பே சமூகம் என்று பள்ளிப்பருவத்தில் படித்ததாக நினைவு, நாம் நமது அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும், நமக்குள்ளாக இருக்கும் போட்டி என்ற நிலையைத் தாண்டி சக மனிதராக, நட்பாக பணிச்சூழலை மாற்றுவதுமே நம்முடைய தரப்பில் இருந்து நாம் செய்ய வேண்டியது. இவ்வாறு நாம் ஒருங்கிணையும் போதுதான் நம் உரிமைகளைக் கேட்டு பெறுவதற்கான வெளியும், வாய்ப்புகளும் உருவாகும்.
கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
தாது மணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்!
தாதுமணல் கொள்ளை - சூறையாடப்படும் தமிழக வளங்கள்
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் கரையில் சேர்த்துவிட்டுச் செல்கின்றன. இவ்வாறாக அரியவகை கனிம வளங்கள் கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் பரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் உள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. அதிலும் 50%-க்கும் மேல் தமிழகத்தில் உள்ளது.
1910-ம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று தாது மணல் பிரிக்கும் ஆலையை குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தொடங்கியது. தாதுமணலில் இருந்து தாதுக்களை மட்டும் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1947 ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அரசே இப்பகுதியில் ஒரு தாது மணல் ஆலையை நடத்தி வருகிறது. 1980-களுக்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கும் தாது மணல் அள்ளும் உரிமையை வழங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் இந்த அரிய தாது வளங்களை வரைமுறையின்றி தோண்டி எடுக்கும் பணி தொடர்கிறது. இந்தத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களும், முறைகேடுகளும் மிக மிக அதிகம்.
இதைப் போல்இன்னும் பல சட்டவிரோத செயல்களும், விதிமீறல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்து தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களிலும் (அரசின் மணல் அள்ளும் நிறுவனத்தில் கூட) இந்தக் கொள்ளை தொடர்ந்தாலும், இந்தத் தொழிலில் ஏகபோகம் செலுத்திவரும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு இதில் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்டராசனது குடும்பத்தார்க்குச் சொந்தமானதாகும்.
தாது மணல் கொள்ளையை எதிர்க்கும் மக்களைப் பணத்தால் அடிப்பது, மிரட்டிப் பணிய வைப்பது, காவல்துறை மூலம் பொய் வழக்கு போட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அனைத்து ஊர்களிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து அந்தந்த ஊர்களில் எழும் எதிர்ப்புகளை அடக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக சாதி மோதலையும் ஊக்குவிக்கின்றனர். அரசும் காவல்துறையும் இவற்றைக் கண்டும் காணாமலிருக்கின்றன. மேலும், அனைத்துத் தடைகளையும் மீறி போராடும் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை காவல்துறையே முன்னின்று செய்துள்ளது. இதுவரை, வி.வி மினரல்ஸ் நிறுவனம் தமிழகத்தின் வளத்தைச் சுரண்டி லட்சம் கோடிவரை கொள்ளையடித்திருப்பதாக ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். கொள்ளையை எதிர்த்தவர்கள் தான் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, கொள்ளையடித்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இக்கொள்ளையை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளமல் இருந்த தமிழக அரசு, மக்களின் தொடர் போராட்டங்கள் கொடுத்த நெருக்கடியால் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆகஸ்டு 14, 2013 முதல் தமிழக-கேரள கடற்கரையோரம் முழுவதும் மணல் அள்ளத் தடை விதித்திருந்த பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை செப்.17, 2013 அன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது தாது மணல் கொள்ளைப் பற்றி ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்துள்ளது. முதல் கட்ட ஆய்விலேயே தாதுமணல் தோண்டி எடுப்பதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை அக்குழு கண்டுபிடித்துள்ளது.
ஆட்சியாளர்களின் ஆதரவுடன் கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் பைப்லைன் திட்டம், தாது மணல் கொள்ளை என்று தமிழகம் தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. நமது வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு துணை செய்யும் சட்டங்களும் அவர்களைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் , ஆட்சியாளார்களும் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் நமது போராட்டங்கள் தான் நமது வளங்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி. இது நமது கடமை.
நமது கோரிக்கைகள்:
தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையும் ரத்து செய்யப்பட வேண்டும்
பல ஆண்டுகளாக மக்கள் வளத்தைக் கொள்ளையடித்த வைகுண்டராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்.
மணல் கொள்ளைக்குத் துணை போன அரசு அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் நடந்த கொடூரமான சுரண்டலால் பாதிப்படைந்த மக்களுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசு அளிக்க வேண்டும். மணற் கொள்ளையர்கள், துணை போன அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
கடற்கரைக்கும், அதைச் சார்ந்த உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய, நீண்டகாலத் திட்டத்தினை வகுத்து உடனடியாக சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்.
நமது மண்ணைக் காக்க…, நமது வளங்களைக் காக்க..நமது மக்களைக் காக்க…,
தாது மணல் கொள்ளையைத் தடுப்போம்! கொள்ளையர்களைக் கூண்டில் ஏற்றுவோம்!
இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழு
சேவ் தமிழ்சு இயக்கம்
பின் குறிப்பு- நேற்று(27-10-2013) நடைபெற்ற கருத்தரங்கிற்காக தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை...
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் சுமார் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன் அதீத வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உருவான உருமாற்றப் பாறைகளில், அரியவகைத் தாதுக்களான கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனசைட் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. அப்பகுதிகளில் தோன்றும் ஆறுகள் அரியவகைக் கனிமங்களை அடித்துக் கொண்டுவந்து கடலில் கலப்பதற்கு முன் கரையில் சேர்த்துவிட்டுச் செல்கின்றன. இவ்வாறாக அரியவகை கனிம வளங்கள் கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாறு வரை சுமார் 150 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் பரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் உள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது. அதிலும் 50%-க்கும் மேல் தமிழகத்தில் உள்ளது.
1910-ம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் ஒன்று தாது மணல் பிரிக்கும் ஆலையை குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் தொடங்கியது. தாதுமணலில் இருந்து தாதுக்களை மட்டும் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1947 ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அரசே இப்பகுதியில் ஒரு தாது மணல் ஆலையை நடத்தி வருகிறது. 1980-களுக்குப் பின் புதிய பொருளாதாரக் கொள்கையினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கும் தாது மணல் அள்ளும் உரிமையை வழங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் இந்த அரிய தாது வளங்களை வரைமுறையின்றி தோண்டி எடுக்கும் பணி தொடர்கிறது. இந்தத் தனியார் நிறுவனங்களின் விதிமீறல்களும், முறைகேடுகளும் மிக மிக அதிகம்.
இதைப் போல்இன்னும் பல சட்டவிரோத செயல்களும், விதிமீறல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அனைத்து தனியார் மணல் அள்ளும் நிறுவனங்களிலும் (அரசின் மணல் அள்ளும் நிறுவனத்தில் கூட) இந்தக் கொள்ளை தொடர்ந்தாலும், இந்தத் தொழிலில் ஏகபோகம் செலுத்திவரும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு இதில் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 78 தாது மணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்டராசனது குடும்பத்தார்க்குச் சொந்தமானதாகும்.
தாது மணல் கொள்ளையை எதிர்க்கும் மக்களைப் பணத்தால் அடிப்பது, மிரட்டிப் பணிய வைப்பது, காவல்துறை மூலம் பொய் வழக்கு போட வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அப்பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அனைத்து ஊர்களிலும் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து அந்தந்த ஊர்களில் எழும் எதிர்ப்புகளை அடக்குகின்றனர். தங்களுக்கு சாதகமாக சாதி மோதலையும் ஊக்குவிக்கின்றனர். அரசும் காவல்துறையும் இவற்றைக் கண்டும் காணாமலிருக்கின்றன. மேலும், அனைத்துத் தடைகளையும் மீறி போராடும் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை காவல்துறையே முன்னின்று செய்துள்ளது. இதுவரை, வி.வி மினரல்ஸ் நிறுவனம் தமிழகத்தின் வளத்தைச் சுரண்டி லட்சம் கோடிவரை கொள்ளையடித்திருப்பதாக ஐ.ஏ.ஸ் அதிகாரிகள் அறிக்கைகள் அளித்துள்ளனர். கொள்ளையை எதிர்த்தவர்கள் தான் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்களே தவிர, கொள்ளையடித்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இக்கொள்ளையை இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ளமல் இருந்த தமிழக அரசு, மக்களின் தொடர் போராட்டங்கள் கொடுத்த நெருக்கடியால் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆகஸ்டு 14, 2013 முதல் தமிழக-கேரள கடற்கரையோரம் முழுவதும் மணல் அள்ளத் தடை விதித்திருந்த பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை செப்.17, 2013 அன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது தாது மணல் கொள்ளைப் பற்றி ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமித்துள்ளது. முதல் கட்ட ஆய்விலேயே தாதுமணல் தோண்டி எடுப்பதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதை அக்குழு கண்டுபிடித்துள்ளது.
ஆட்சியாளர்களின் ஆதரவுடன் கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் பைப்லைன் திட்டம், தாது மணல் கொள்ளை என்று தமிழகம் தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. நமது வாழ்வாதாரங்கள் சூறையடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டின் வளங்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் வைத்திருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் வளங்களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு துணை செய்யும் சட்டங்களும் அவர்களைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் , ஆட்சியாளார்களும் தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் நமது போராட்டங்கள் தான் நமது வளங்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி. இது நமது கடமை.
நமது கோரிக்கைகள்:
தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்கள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையும் ரத்து செய்யப்பட வேண்டும்
பல ஆண்டுகளாக மக்கள் வளத்தைக் கொள்ளையடித்த வைகுண்டராஜன் உள்ளிட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும்.
மணல் கொள்ளைக்குத் துணை போன அரசு அதிகாரிகள் மீது உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் நடந்த கொடூரமான சுரண்டலால் பாதிப்படைந்த மக்களுக்கும் கடற்கரை கிராமங்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசு அளிக்க வேண்டும். மணற் கொள்ளையர்கள், துணை போன அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் இருந்து இந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
கடற்கரைக்கும், அதைச் சார்ந்த உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய, நீண்டகாலத் திட்டத்தினை வகுத்து உடனடியாக சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்.
நமது மண்ணைக் காக்க…, நமது வளங்களைக் காக்க..நமது மக்களைக் காக்க…,
தாது மணல் கொள்ளையைத் தடுப்போம்! கொள்ளையர்களைக் கூண்டில் ஏற்றுவோம்!
இயற்கை வளங்கள் பாதுகாப்பு குழு
சேவ் தமிழ்சு இயக்கம்
பின் குறிப்பு- நேற்று(27-10-2013) நடைபெற்ற கருத்தரங்கிற்காக தயாரிக்கப்பட்ட துண்டறிக்கை...
Tuesday, October 22, 2013
புதினை திருப்தி படுத்தவே கூடங்குளத்தில் நள்ளிரவு மின்சாரம்!
நேற்று நள்ளிரவைக் கடந்து, தமிழக மக்கள் ஆழ்ந்த நித்திரைக்கு மூழ்கிப் போயிருந்த இரண்டாம் சாம வேளையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் தயாரித்து விட்டார்கள். அதாவது அதிகாலை 2.45 மணி அளவில் இந்த அற்புதம் நிகழ்ந்தேறியிருக்கிறது.இந்த நற்செய்தியை கூடங்குள அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர், அறிவித்த போது, படிப்படியாக இந்த உற்பத்தி உயர விருப்பதாகவும், நிர்ணயிக்கப்பட்ட 400 மெகாவாட் மின்சாரம், இந்திய அணுசக்திகழகத்தின் அனுமதி கிடைத்த பிறகு உற்பத்தி செய்யப் போவதாகவும் கூடுதல் மகிழ்ச்சி தெரிவித்தார்.சில நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 6, 2013 அன்று மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி தந்தி தொலைக்காட்சியில் பேசும்போது, கூடங்குளத்தில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி தமிழகத்துக்குக் கொடுத்தாகி விட்டது என்ற அரிய உண்மையைச்சொன்ன போது, அணுமின் நிலைய அதிகாரிகள் நிச்சயம் புரண்டு படுத்திருப்பர்.
அது என்னவோ இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இது போன்ற அற்புதங்கள் உடனடியாக நடந்து விடுகின்றன. நேற்றைக்கு இந்த அறிவிப்பு வெளியான போது கூட பிரதமர் மாஸ்கோவில் தான் இருக்கிறார். அணு உலை 3 & 4 விரிவாக்க ஒப்பந்தம் பற்றி பேச வேண்டுமானால், 1 & 2 ஆம் அணு உலைகளின் வீர பராக்கிரமங்களைப் பற்றி கதைக்கத் தான் வேண்டுமல்லவா ?
ஏற்கெனவே 2011 டிசம்பரில் கூடங்குளம் அணு உலை ஓரிரு நாளில் இயங்கும் என சூளுரைத்த மன்மோகன்சிங் அவர்கள், இரஷ்ய அதிபர்
புதினை திருப்தி படுத்தவோ என்னவோ இரண்டாம் ஆண்டாகவும் உற்பத்தி ஆகவில்லை என்பதால், மாஸ்கோவில் எடுத்து விட தயாரிக்கப்பட்ட துரித உணவாகத் தான் நேற்றைய அறிவிப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. பொய்ப் பிரச்சாரம், ஊழல், தரமற்ற பொருட்கள், வால்வுகளில் பழுது என முழு முதற்கொண்டு மோசடியான ஒரு அணு உலையிலிருந்து வெளிவரும் சிறு அறிவிப்பைக் கூட எப்படி கேள்வியின்றி நம்ப முடியும் ?
கூடங்குளம் அணு உலையில் நிறுவப் பட்டுள்ள இரண்டாம் அமைப்பு பழுதடைந்திருக்கிறது என்று தென்மண்டல மின்சுமை பகிர்மான மையம் (SOUTHERN REGIONAL LOAD DESPATCH CENTRE) தெரிவித்திருக்கும் நிலையில், நேற்றைய அறிவிப்பின் உண்மை நிலையை இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமாக அறியலாம். கூடங்குளம் அணு மின் நிலையம் VVER தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இத் தொழில்நுட்பத்தில் முதன்மை அமைப்பில் அணுக்கருப் பிளவு நடக்கிறது. இரண்டாம் அமைப்பில் அணுக்கருப் பிளவினால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் தண்ணீர் கொதிக்க வைக்கப் பட்டு நீராவியாகிறது. இப்படி உருவாகும் நீராவி நேரடியாக சுழலி (Turbines) மின்னாக்கியை இயக்குகிறது. இந்த இரண்டாம் அமைப்பில் தான் கோளாறு என்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் எங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தார்கள் என்று தெரியவில்லை.மேலும் இதே ரஷ்யா வழங்கி, ரஷ்யர்களே இயக்கி கொண்டிருக்கும் இதே கூடங்குளம் VVER தொழில் நுட்பத்தில் இயங்கும் சீன அணு உலை ஒன்றிலும் இதே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரணம் தரம் குறைந்த உதிரி பாகங்கள். ஆக ஒரு சிறு குழு, கொஞ்சம் பொறுப்புணர்வின்றி மக்களின் உயிரோடு விளையாடுகிறோம் என்ற மனசாட்சின்றி 120 கோடி இந்திய மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது. ( படம் தகவல் உதவி: தோழர் சுந்தராஜன், பூவுலகு )
.
அணு உலையைச் சுற்றி அடர்த்தியாக வாழும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி இல்லை.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. தள ஆய்வறிக்கை தர மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தர மாட்டோம் என்று ரஷ்யா கை விரித்தாலும் தங்கள் பாக்கெட்டுகளுக்கு தரகு பணம் மட்டும் கொடுத்தால் போதும் என்று பல்லிளித்துக் கொள்வார்கள். பழுதுகள் ஏற்பட்டிருக்கின்றன, ரஷ்யாவிலிருந்து உதிரி பாகங்கள் வந்ததும் சரி செய்யப் படும் என்று ஒருஅமைச்சர் பத்திரிக்கையில் பேட்டிக் கொடுக்கும் இரு நாள் முன்பு, 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்தாகி விட்டது என்று மற்றொருஅமைச்சர் புளுகுவார். அல்லது தொடர்ந்து பதினைந்து நாளில் மின்சாரம் கிடைக்கும் என்று வாரா வாரம் ஆரவாரம் செய்வார். வால்வுகள் பழுதாகும். உபகரணங்கள் வழங்கிய ரஷ்ய நிறுவன ஆட்களை அந்நாட்டினராலேயே கைது செய்யப்படுவார்கள்.இப்படி மோசடிகளின்ஒட்டுமொத்த கூடமாக கூடங்குளம் அணு உலை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் தான் நேற்றைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உண்மையாகவே அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தியானது என்றே வைத்துக் கொண்டால் கூட, இரண்டு வாரத்தில் வருகிறது 15 நாளில் வருகிறது என பூச்சாண்டி காட்டியபிரதமர் முதற்கொண்டு நாராயண சாமி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் வரை அனைவருமே பொய்யர்கள் தான் என்றுசந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகிறது. மேலும் உலகமே எதிர்நோக்கியிருக்கும் ஃபுகுஷிமா கதிர்வீச்சு ஆபத்திலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம் என்று ஜப்பான் போன்ற தொழில் நுட்ப ஜாம்பன்வான்களே போராடிக் கொண்டிருக்கும் போது, கழுத்தளவுஊழல் சேற்றில் சிக்கியிருக்கும் இந்தியப் பிரதமர் ரஷ்யாவில் 3 & 4 ஆம் அணு உலைகளுக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருப்பது எப்பேற்பட்ட களவாணித் தனமென்று விளக்க வேண்டியதில்லை.
அணு உலை இயங்கத் தொடங்கினால் நிகழப் போகும் பேராபத்தென்ன? 400 மெகாவாட் மின்சாரத்தில் எத்தனை விழுக்காடு அணு உலையின் பயன்பாட்டிற்கே செல்லப் போகிறது? எத்தனை விழுக்காடு மின் கடத்திகளில் வீணாகப் போகிறது? குரங்கின் கையில்கிடைத்த ஆப்பமாக 400 மெகாவாட்டை எத்தனை பங்கு வைத்து, எத்தனை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் போகிறார்கள்? 4000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ள தமிழகத்துக்கு இதில் எவ்வளவு பங்கு? கூடங்குளம் அணு உலை வந்தால் தமிழக மின்பற்றாக்குறை தீர்ந்து விடும் என குழலூதும் அணு உலை ஆதரவாளர்களின் நிலைப்பாடு என்ன ? இப்படி நிறைய கேள்விகள் இருக்கின்றன.
அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்
Thursday, October 17, 2013
தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது
தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் நிறைவு பெறுகிறது
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் அறிவிப்பு
வணக்கம். ‘ஈழத் தமிழர்களை இனக்கொலை செய்த இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கி, கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி அம்மாநாடு அங்கு நடைபெறுமானால், இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக் கூடாது‘ என்ற உடனடிக் கோரிக்கை உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பியக்கத்தின் சார்பில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ‘வெற்றி அல்லது வீரச் சாவு‘ என்ற முழக்கத்துடன் அக்டோபர் 1 ஆம் நாள் தொடங்கிய தனது பட்டினிப் போராட்டத்தை இன்று 15 ஆம் நாளாகத் தொடர்ந்து நடத்திவருகிறார்.
காலவரையற்ற பட்டினிப் போராட்டம் சட்ட விரோதமானது என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்த போதும், உயர் நீதி மன்றத்தில் வழக்காடி ‘சனநாயக நாட்டில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் என்பது அனைவருக்கும் உரிமையுள்ள போராட்ட வடிவம்‘ என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, முன்னுதாரணமான தீர்ப்புடன் களமிறங்கியது இப் போராட்டத்தின் முதல் வெற்றி. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள்/ இயக்கங்கள், மாணவர்கள் மற்றும் சனநாயக சக்திகளின் ஆதரவோடு சீரான வேகத்துடன் முன்னேறிய இப்போராட்டம், தமிழகம் தழுவிய எழுச்சியாக பரந்து விரிந்து எழுந்துள்ளது. மேதா பட்கர் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்தியா முழுவதும் போராட்ட இயக்கமாகவும் எடுத்துச் செல்கிறார்கள். நேற்று (14.10.2013) இந்தியத் தலைமை அமைச்சர், தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ‘இலங்கையில் இவ்வாண்டு நவம்பரில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் நான் கலந்துகொள்வது குறித்த முடிவில், தமிழர்களின் உணர்வையும் கருத்தில்கொண்டு முடிவெடுப்பேன். எனவே அம்மாநாட்டில் நான் கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைக்காக அக்டோபர் 1 ஆம் நாள் முதல் பட்டினிப் போராட்டம் நடத்திவரும் திரு.தியாகு பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்‘ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவையனைத்தும் நமது கோரிக்கைக்கான போராட்டக் களத்தில் நாம் சீராக முன் நகர்ந்து செல்கின்றோம் என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.
இந் நிலையில், இன்று (15.10.2013) 15 ஆம் நாளாக பட்டினிப் போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் தோழர் தியாகுவின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டும், இக் கோரிக்கை உள்ளிட்ட 9 முக்கியக் கோரிக்கைகளையும் முழுமையாக வென்றெடுக்கும் போராட்டக் களத்தில் அவரது அறிவும் உழைப்பும் தேவை என்ற விதத்திலும் பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள, தோழமை இயக்கங்கள் / கட்சிகள் தொடர்ந்து வலியுத்திவருவதை இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம் ஏற்றுக்கொள்கிறது. இதனடிப்படையில் தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டத்தை முடித்துக்கொண்டு, சூழலுக்கேற்ற பிற போராட்ட வடிவங்களில் தொடர்ந்து போராடுவோம் என்று ‘இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்‘ அறிவிக்கிறது.
மதியவன்
அமைப்பாளர்
இலங்கையில் காமன்வெல்த் – எதிர்ப்பியக்கம்
Monday, October 14, 2013
14 ஆம் நாளை நோக்கி தோழர் தியாகுவின் உணவு மறுப்பு போராட்டம்
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1 முதல் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருந்து வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த காவல் துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த போது, அதை காவல் துறை மறுத்தது. எனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அக்.1 அன்று பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை அளித்தது. எனவே, அறிவித்தபடியே, அக்.1 அன்று தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், பொது மக்களும் தோழர் தியாகுவை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.
அக். 7 அன்று மருத்துவர் குழுவோடு போராட்டத் திடலில் காவல் துறையினர் குவிந்தனர். தியாகுவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், அவர் உடல் நிலை சீராகவே இருந்தது. அவர் எழுந்து நடமாடிக் கொண்டிருந்தார். தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தியாகு சொன்னார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்களும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவே சொன்னார்கள்.
ஆனால், அவரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். எனவே, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். மருத்துவர் குழுவின் இந்த செயல்பாட்டுக்குப் பின்னால், காவல்துறையின் அழுத்தம் இருப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
இதனையடுத்து, வள்ளுவர் கோட்டத்திலிருந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டார். அவர் சென்ற அடுத்த சில மணித்துளிகளிலேயே, அந்தப் போராட்டப் பந்தல் பிரிக்கப் பட்டது. அங்கு ஏழு நாட்களாக ஒரு போராட்டம் நடந்தது என்ற சுவடே இல்லாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்கப்பட்டது.
மருத்துவமனையில், குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்ள தியாகு மறுத்துவிட்டார். மேலும்,தனது பட்டினிப் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். மருத்துகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னபோது, அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், தனக்கு சுய நினைவு உள்ளவரை தன்னைக் கட்டாயப்படுத்தி மருந்துகளையோ, வேறு உணவுகளையோ தனக்கு கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது என்று தனது கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டார். தியாகுவின் பட்டினிப் போராட்டம் மருத்துவமனையில் இருந்த படியே தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், அக்.10 அன்று தியாகுவை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் சொன்னார்கள். எதற்காக கூட்டி வந்தார்கள், எதற்காக வெளியேற சொல்கிறார்கள் என்பது முழுதும் புரியாத மர்மமாகவே இருந்தது. வெளியேறுவதற்கு முன் அனைத்து நோயாளிகளுக்கும் கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகளை (Discharge Summary) கொடுங்கள் என்று கேட்டதற்கு, தங்கள் மேலிடத்திலிருந்து அதைத் தர வேண்டாம் என்று சொல்லி விட்டதாக அதை கொடுக்க மறுத்து விட்டார்கள் மருத்துவர்கள். அதைக் கொடுக்காமல் வெளியேறப் போவதில்லை என்று தோழர் தியாகுவும் சொல்லிவிட்டார்.
எனவே, நேற்று (அக். 11) மருத்துவக் குறிப்புகளைக் (Discharge summary) கொடுத்து வெளியேறச் சொன்னார்கள். மீண்டும் வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த போது தான், அங்கு வைத்து தோழர் தியாகுவை கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்ததையடுத்து, புரசைவாக்கத்தில் உள்ள ‘உழைக்கும் மக்கள் மாமன்றத்திற்கு’ தோழர் தியாகு சென்றார். வள்ளுவர் கோட்டத்தில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் திரண்டிருந்ததை பார்த்த எமது தோழர்கள் காவல் துறையின் இந்த வஞ்சக திட்டத்தை உறுதிபடுத்தினர்.
உயர் நீதிமன்ற ஆணையின் படி தோழர் தியாகுவை பட்டினிப் போராட்டம் இருந்ததற்காக வள்ளுவர் கோட்டத்தில் வைத்து கைது செய்ய முடியாது. எனவே, அவரை விதிமுறைகளுக்குப் புறம்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்பு வெளியேற்றியிருக்கின்றனர். அவர் திரும்பவும் வள்ளுவர் கோட்டதிற்கு வந்தால், உயர் நீதிமன்ற ஆணை அவர் மருத்துவமனைக்கு போன போதே முடிவுக்கு வந்து விட்டது, மீண்டும் வருவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி, அவரை கைது செய்வதே காவல் துறையின் வஞ்சக நோக்கம் என்பதாக அறிகிறோம்.
அந்த வஞ்சக திட்டங்களையெல்லாம் முறியடித்து, தற்போது தோழர் தியாகு அவர்கள் தனது பட்டினிப் போராட்டத்தை 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பட்டினிப் போராட்டத்தைத் தொடரும் இடத்தின் முழுமையான முகவரி,
‘உழைக்கும் மக்கள் மாமன்றம்’
#5, டாக்டர் வாசுதேவன் சாலை,
(மில்லர்ஸ் சாலை அருகில், பாதாள பொன்னியம்மன் கோவில் அருகில்),
புரசைவாக்கம்
இச்செய்தியை பார்க்கும் தமிழின உணர்வாளர்கள் யாவரும் தோழர் தியாகுவின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக
திரண்டு உங்களை ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறோம். மேலும் பல்வேறு தளங்களில் இச்செய்தியை பரப்பவும்.
Tuesday, October 8, 2013
வெற்றி அல்லது வீரச்சாவு
இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும், எதிர்வரும் நவம்பரில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக் கூடாது.காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன் வைத்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு ’இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு இயக்கத்தின்’ சார்பாக காலவரையற்ற உணவு மறுப்புப் போராட்டத்தில் இருக்கின்றார். ”காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபடுவதே ஒரு குற்றம் ஆகாது என்று சொல்லி இந்தப் போராட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,நேற்று, பட்டினி போராட்டத்தின் 7 ஆம் நாள் அன்று காலை முதல் வழக்கத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கபப்ட்டிருந்தனர். மதியம் 2 மணி அளவில் அரசு மருத்துவர்கள் குழு வந்து தோழர் தியாகுவைப் பரிசோதித்தது.
தோழர் தியாகுவின் உடல் நிலை சரியாக இருந்த போதும், பொது மக்கள் பார்வையில் இருந்து போராட்டத்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று காரணம் சொல்லி நேற்று (07 அக்டோபர்) மதியம் 2.30 மணி அளவில் அவரை அங்கிருந்து இராயப்பேட்டை மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டு சென்றனர். அவருக்கு இந்த நிமிடம் வரை எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டிருக்கும் நிலையிலும் தன்னுடைய உணவு மறுப்பு போராட்டத்தைத் தோழர் தியாகு தொடர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் இக்கோரிக்கைகளை ஆதரிக்கும் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினோம். அக்கூட்டத்தில், “தோழர் தியாகு உயிரைக் காப்போம். இந்திய அரசே! இலங்கையில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!” என்ற முழக்கத்துடன் வருகின்ற 10 ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தோழர் தியாகு 8 ஆவது நாளாக உணவு மறுப்பு போராட்டத்தில் இருக்கும் நிலையில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தன்னுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று அங்கீகரித்து இலங்கையில் நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் இந்த நேரத்தில் உறுதியோடு போராடி இந்திய அரசை அடி பணியச் செய்வதன் மூலம் தோழர் தியாகுவின் உயிரைப் பாதுகாத்திட வேண்டும்.
இந்த செய்தியை தங்கள் ஊடகங்களில் வெளியிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சேவ் தமிழ்சு இயக்கத்திற்காக தோழர் தியாகுவின் பிரத்யேக நேர்காணல் காணொளிகள்:
=====================
Thursday, October 3, 2013
தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே!
இனப்படுகொலை நாடு இலங்கை மண்ணில் காமன் வெல்த் நாடு நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அதை இந்தியப் பிரதமர் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்க்கண்ட சுட்டியின் மூலம் சேவ் தமிழ்சு ஆங்கில வலைதளத்தில் உங்கள் கையெழுத்தையும் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
கீழே உள்ள ஆங்கில இணைய தள சுட்டியை சொடுக்கி, உங்கள் கையெழுத்தை பதிவு செய்யவும்.
ஆங்கில இணையதள சுட்டி
Wednesday, September 25, 2013
மோடி - வெளிச்சங்களின் நிழலில்! - 1
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும் நிலையில் இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க-வும் அதையொட்டிய தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன.காங்கிரசு ஆளும் கட்சி என்பதால் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் , பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க-வோ "குஜராத் பாணியிலான வளர்ச்சி" என்ற பிரச்சாரத்தை முன்வைத்து நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டது.
நரேந்திர மோடியை பிரதமராக்கினால்தான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்று ஊடகங்களால் அவர் மீது பாய்ச்சப்பட்ட கட்டற்ற வெளிச்சம் பா.ஜ.க.-வுக்கு உள்ளிருந்த போட்டியை குறைத்து, 1990-களில் ரதயாத்திரை மூலம் கட்சியை வளர்த்த தனது குருவான அத்வானியையே பின்வாங்க வைத்து பிரதமர் வேட்பாளராக்கப்பட்டுள்ளார் குருவை மிஞ்சிய சீடரான நரேந்திர தாமோதரதாஸ் மோடி.
இதில் விந்தை என்னவென்றால், என்ன காரணத்திற்காக அத்வானி பிரதமர் பதவியை வாஜ்பாயிடம் இழக்க வேண்டி வந்ததோ, அந்த காரணத்தைக் கொண்டே இந்த முறை ஆர்.எஸ்.எஸ்- சின் ஆசியுடன் அத்வானியிடமிருந்து மோடி அந்த வாய்ப்பைப் பறித்துள்ளார். ரதயாத்திரை நடத்தியவரிடமிருந்து ரத்தயாத்திரை நடத்தியவரை நோக்கி நகர்ந்துள்ளது, நகர வைக்கப்பட்டுள்ளது பா.ஜ.க.
பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கபடுவதற்கு முன்பிருந்தே இவர் மீது ஊடகங்களால் வெளிச்சம் பாய்ச்ச்சப்படுவதற்கான காரணம் என்ன ?, மூன்று முறை ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பதே பிரதமராவதற்கான தகுதியா?, மோடிக்கு தொடர்ந்து பிம்பப்பெருக்கம் செய்து வரும் ரசிகர்கள் யார்?, மோடி மீது பாய்ச்சப்படும் கட்டற்ற வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படுவது யாது ? என்பதையே இக்கட்டுரைத் தொடர் பேச விழைகிறது.
மோடியின் ரசிகர்களாக இருப்பது பெரும்பாலும் 1990-களுக்குப் பிறகு உருவான தொழிற் பிரிவுகளிலும், புதிய நடுத்தர வர்க்கத்தைச்(NEO MIDDLE CLASS) சேர்ந்த இளைஞர்கள் என்பதை மறுக்க இயலாது.
மோடி பிரதமரானால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்றும், பத்தாண்டுகால காங்கிரசு ஆட்சியினால் ஏற்பட்ட சீர்கேடுகளையும், ஊழல் முறைகேடுகளையும் மோடி போன்ற "இரும்பு மனிதரால்தான்" மாற்ற முடியும் என்றும் தொடர்ந்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதிரியான பிரச்சாரங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், முகப்புத்தகத்திலும் உள்ள முதல் தலைமுறை வாக்காளர்களையும், புதிய நடுத்தர வர்க்க இளையோரையும் முன்வைத்தே நடத்தப்படுகின்றன. இந்தப் பிம்பப்பெருக்கத்தினால் இளைஞர்கள் அனைவரும் மோடிக்குப் பின்னால் இருப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அதை வைத்து இளைஞர்களை கவரும் வேலை நடந்து வருகிறது.
நரேந்திர மோடி என்றாலே நம் அனைவருக்கும் 2002-ல் குஜராத்தில் நடந்த வன்முறை நினைவுக்கு வரும் போது நம்மில் ஒரு சிலருக்கு மட்டும் அவர் வளர்ச்சியின் "தேவதூதராக" "பீஷ்மராகக்" காட்சியளிக்கிறார். இப்படியான பார்வை என்பது பெரும்பாலும் வளர்ச்சிதான் முக்கியம், கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்பட தேவையில்லை என்று வாதிடுபவர்களால்தான் முன்வைக்கப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள், புதிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இந்துத்துவ சகதியில் உழல்பவர்களே. நடுத்தர வர்க்கத்தின் இரண்டு கண்களான வருமானமும், நுகர்வும் பெரும்பாலானவர்க்கு சாத்தியமாகி இருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் இதையே வளர்ச்சி என்று வாய்மொழி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவே மோடிக்கும், மோடியை விரும்புவோருக்கும் மிகப்பெரிய ஆதரவாக உள்ளது.
அன்னா ஹசாரேவைக் கொண்டு பா.ஜ.க -வால் மக்களைத் திரட்ட வெள்ளோட்டம் பார்க்கப்பட்ட பிறகு ஊடகங்களின் மொத்த வெளிச்சமும் மோடி பக்கம் திரும்பியது, திருப்பப்பட்டது. பா.ஜ.க என்கிற எதிர்க்கட்சி, அதன் கொள்கை, பலம், பலவீனம் பற்றிக் கூட ஊடகங்களின் பார்வை திரும்பவில்லை , நரேந்திர மோடி என்னும் தனிமனிதரை நோக்கியே திரும்பின.
தனியார் பெருமுதலாளிகள் என்றும் பாசிசத்தின் நண்பர்களே, பாசிசத்தின் தொடக்கம் தனிமனிதத் துதிகளிலேயே உள்ளது.
தனியார் பெருமுதலாளிகளும், ஊடகங்களும் மோடியை முன்னிறுத்துவதற்கான முக்கியக் காரணம், அவர்களுடைய தொழில், வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே. அதற்காக தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரசு அரசு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானது ஒன்றும் இல்லை. ஆனால், அவர்களுக்கு மோடியைப் போன்று எதேச்சதிகாரப் போக்கு கொண்ட, முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக எடுக்கும் ஒரு நபரையே எதிர்பார்க்கின்றனர்.
குஜராத் படுகொலைகளை மறந்து, மோடியின் இந்துத்துவ வெறியைப் புறந்தள்ளி மோடியை முன்னிறுத்துவதற்கான காரணங்களாக சொல்லப்படுவது, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மலைக்க வைக்கும் வளர்ச்சி. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியும்,பொருளாதாரமும் பெரும் பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது குஜராத்தில் மட்டும் எப்படி வளர்ச்சி அடைகிறது? இந்திய அரசு மாநில அரசுக்கு இவ்வளவு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கிறதா ? என்னும் ஐயம் எழாமல் இல்லை.
மோடியின் குஜராத்தில் வளர்ச்சி பற்றிய செய்திகளை நிறுவுவதற்கு கொடுக்கப்படும் சில விபரங்களைப் பார்ப்போம்.
ஒவ்வொரு வருடமும் "துடிப்புள்ள குஜராத்" (VIBRANT GUJARAT) என்ற பெயரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் பெருமுதலாளிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு மோடி அரசால் ஒரு நிகழ்வு நடத்தப்படுகிறது. 2010-11 ஆம் ஆண்டுக்கான நிகழ்வின் மூலம் குஜராத்திற்கு 450 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கியின் தகவல்களின்படி, அந்த காலத்திற்கான, இந்தியா முழுமைக்கும் செய்யப்பட்ட முதலீடே 30.38 பில்லியன் அமெரிக்க டாலர்தான்.
இந்தியாவிற்கு வரும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 2.38விழுக்காடு மட்டுமே குஜராத் மாநிலத்தின் பங்களிப்பாகும். இந்தியாவிற்கு வரும் முதலீடுகளில் மகாராஷ்டிரத்திற்கும், டெல்லிக்கும் வரும் பங்கு முறையே 45 மற்றும் 26 விழுக்காடு ஆகும். ஆனால் மோடி சொல்கிறார் தன்னுடைய ஆட்சியில் குஜராத் "இந்தியாவின் நுழைவாயிலாக" இருக்கிறது என்று, இதை ஊடகங்களும் போட்டிபோட்டுக் கொண்டு விளம்பரம் செய்கின்றன.
2009-ல் நடைபெற்ற தனியார் நிறுவனங்களுக்கான அமர்வின் மூலம் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாக மோடி அரசால் அறிவிக்கப்பட்டது. அத்தோடு 2011 ஆண்டு காலத்தில் இந்த புதிய வேலை வாய்ப்புகளின் அளவு 52 லட்சத்தை எட்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் திட்டக் கமிசனின் வேலைவாய்ப்பு பற்றிய அறிக்கை 2004-05 காலத்தில் 2.53 கோடியாக இருந்த வேலைவாய்ப்புகள் 2009-10 காலப் பகுதியில் 2.46 கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலையைக் கூட மறைத்து புதிய வேலைவாய்ப்புகள் என்று வெளிச்சம் பாய்ச்சுகின்றனர்.
குஜராத் ஒரு மின்மிகை மாநிலம் என்றும், அங்கு மோடி அரசு அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, குஜராத்தின் 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்று கூறுகிறது.இதில் 15 விழுக்காடு நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளாகும். அப்படியானால், 2010-ல் குஜராத் அரசு தன்னை மின்மிகை மாநிலமாக அறிவித்துக் கொண்டபோது சொன்ன 11500 மெகாவாட் மின்சாரம் யாருக்கு கொடுக்கப்படுகிறது?.அதுமட்டுமின்றி குஜராத்தில் மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் விலை மிக அதிகம்.
மோடி அரசால் வெளிச்சம் பாய்ச்சப்படும் வளர்ச்சி அளவுகளில் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தோம், சமூக மற்றும் மனித வளர்ச்சி குறியீடுகளான கல்வி, வறுமை ஒழிப்பு மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே உள்ளது.
2009-2010 ஆம் ஆண்டுகளின் இறுதியில் திரட்டப்பட்ட விபரங்களின் படி, குஜராத்தின் கிராமப்புறங்களில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை ஹரியானா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாகவும், 90-களின் தொடக்கத்தில் இருந்த நிலையில் இருந்து பெருத்த முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கிறது.
வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று விளம்பரத்தப்படும் குஜராத்தின் நிலைமை கல்வி மற்றும் எழுத்தறிவில் பின்தங்கியே உள்ளது.2000-2008க்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு வயதுக்கு மேற்பட்டோர், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் கல்வி குறியீட்டில் 7 ஆவது இடத்திலயே உள்ளது. அத்தோடு எதாவது ஒரு கல்வி நிலையத்திற்காவது செல்லும் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டோர் கல்வி குறியீட்டில் 26 இடத்திலேயே உள்ளது இந்த வளர்ச்சியின் சொர்க்க பூமி.
சுகாதார தளத்தைப் பொறுத்த வரை ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் எடை குறைந்து இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறியீட்டில் இந்திய சராசரியைவிட சொற்ப புள்ளிகளில் முன்னிருக்கிறது.இந்த குறியீட்டில் குஜராத் ஆண்களுக்கான வரிசையில் 11வது இடத்திலும், பெண்களுக்கான வரிசையில் 12 வது இடத்திலும் உள்ளது. இதைப் பற்றி பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்குத்தான் "குஜராத் பெண்கள் டயட்டில் இருந்து அழகை பராமரிக்க எண்ணுவதாக " மோடி குறிப்பிட்டார்.
இவ்வாறு தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கொடுக்க போலியான விளம்பரங்களும், சமூக வளர்ச்சி பற்றிக் கவலைப்படாத போக்கும்தான் குஜராத் பாணி வளர்ச்சி போலும். 1990 -களுக்குப் பிறகு உண்டான வேலைவாய்ப்புகளும், வளர்ச்சியும் பரவலாக மக்களைச் சென்றடையாத நிலையில், 120 கோடி மக்கள்தொகையில் ஒரு சொற்ப பிரிவினரை மட்டும் கருத்தில் கொண்டு வளர்ச்சியைக் கொண்டுவருகிறோம் என்பது போலி விளம்பரமே அன்றி வேறன்று. இவ்வாறாக வெளிச்சம் பாய்ச்சப்படும் வளர்ச்சி வெறும் வீக்கமே.
வளர்ச்சி தவிர மோடியை முன்னிறுத்த சொல்லப்படும் இன்னொரு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது ஊழலற்ற நிர்வாகம். இப்படி சொல்லி அவர் மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தில் எதையெல்லாம் மறைக்கிறார்கள் என்று பார்ப்போம்.
2009-11 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் லஞ்சம், ஊழல், அதிகார விதிமீறல்கள் முதலியவற்றால் குஜராத் மாநில அரசிற்கு ஏற்பட்ட இழப்பு 16 ஆயிரம் கோடி இந்திய ரூபாய். குஜராத்தில் செயல்பட்டு வரும் அதானி குழுமத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் 200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையில் இன்னும் 160 கோடி ரூபாய் குஜராத் மாநில அரசால் வசூலிக்கப்படாமல் அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பிரதிபலனாகத்தான் அதானி குழுமம் அமெரிக்காவிலுள்ள வார்டான் பல்கலைக்கழகத்தில் மோடியை முன்னிறுத்தி ஒரு கூட்ட அமர்வை நடத்த முன்வந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் எரிவாயு தொடர்பான ஒப்பந்தத்தில் 52.27 கோடி இந்திய ரூபாய் அளவு குஜராத் அரசிடம் இருந்து ஆதாயம் பெற்றுள்ளது.
லார்சென் & டூப்ரோ நிறுவனத்திற்கு நீராவி உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பதற்கான ஆலை அமைக்கும் இடத்தை மாநில நிலமதிப்பீட்டு ஆணையம் நிர்ணயித்த விலையான சதுர மீட்டருக்கு 2020 ரூபாய் என்பதைப் புறந்தள்ளி, மாவட்ட நில மதிப்பீட்டு அளவான 1050 சதுர மீட்டரை வெறும் 1000 ரூபாய்க்கு விற்று மாநில அரசுக்கு 128.71 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினர்.
இதே போல், எஸ்ஸார் இரும்பு நிறுவனத்திற்கு 238.50 கோடி ரூபாய் ஆதாயம் அளிக்கும் வகையில் நில மதிப்பீட்டு அளவில் உதவி செய்தது மோடியின் குஜராத் அரசு.அலைக்கற்றை ஊழலை வெளியே கொண்டுவந்த தலைமைத் தணிக்கை கணக்காளர் அறிக்கைதான் இந்த இழப்புகளையும் வெளியே கொண்டு வந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட டாட்டா நானோ தொழிற்சாலை 2000 கோடி மூலதனத்தோடு குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கு குஜராத் அரசால் கொடுக்கப்பட்டுள்ள மானியம் 30000 கோடி ரூபாய்.இதில் 9750 கோடி ரூபாயை வெறும் 0.1% வட்டிக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள்கூட இன்னும் எட்டப்படாத ஒரு நாட்டில் லட்ச ரூபாய் விலையுள்ள ஒரு கார் தயாரிப்பதற்கான மானியமாக 60000 ரூபாய் கொடுக்கப்பட்டதிலேயே மோடி தலைமையிலான அரசு யாருக்காக செயல்படுகிறது என்பது தெளிவாகும்.
ஊழல் என்பது தங்களது கொள்கை முடிவுகளையோ அல்லது விதிகளையோ ஒரு சாராருக்கு சாதகமாக மாற்றி கையூட்டு/ஆதாயம் பெறுவது மட்டுமன்று, தனியார் பெருமுதலாளிகளுக்கு ஏதுவாக செயல்பட்டு மக்கள் வரிப்பணத்தை மானியமாக வாரி இறைத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதும் ஊழலே. இவைதான் வளர்ச்சி மற்றும் ஊழலற்ற நிர்வாகம் என்கிற விளம்பர வெளிச்சத்தின் நிழலில் மறைக்கப்படுபவை.
இதனால்தான் தனியார் பெருமுதலாளிகளும், ஊடகங்களும் மோடியைக் கொண்டாடுகிறார்கள். முழுச் சாப்பாட்டிலிருந்து நாம் எப்படி துரித உணவங்களை நோக்கிச் சென்றோமோ, கிரிக்கெட்டில் எப்படி திராவிடும், சச்சினையும் முந்திக் கொண்டு அதிரடியாக ஆடும் டோனி வந்தாரோ, அதே போல தனியார் பெருமுதலாளிகளுக்கு ஏதுவாக செயல்பட்டாலும், மெதுவாக செயல்படும் இப்போதிருக்கும் காங்கிரசு அரசுக்கு மாற்றாக அதிரடியாகவும், சர்வாதிகாரப் போக்குடனும் முடிவுகளைத் துரிதமாக எடுக்கும் நரேந்திர மோடியை முன்னிறுத்துகின்றனர்.
காங்கிரசு கட்சியால் இனி ஒருபோதும் வளர்ச்சி என்கிற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள முடியாது, அதே போலத்தான், பா.ஜ.க-வால் மதச்சார்பின்மை என்ற அரிதாரத்தைப் பூசிக் கொள்ளவே முடியாது. ஆனால், பல்வேறு பிரச்சாரங்களின் மூலம் காங்கிரசு எவ்வாறு மதச்சார்பின்மை என்ற அரிதாரம் பூசியுள்ளதோ, அதே முறையையே பா.ஜ.க தன்னுடைய இந்துத்துவ முகத்தை மறைத்து வளர்ச்சி என்பதைப் பூசிக்கொள்ள முயற்சித்து மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.
- வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது!
கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்
நன்றி. கேலிச்சித்திர கலைஞர்.பாலா, themadeconomy.blogspot.com
Tuesday, September 24, 2013
மாற்று திறனாளிகளின் போராட்டமும், சினிமா நூற்றாண்டு விழாவும் - தமிழக அரசும்.
கடந்த ஒருவார காலமாக தங்கள் 9 அம்ச சனநாயகக் கோரிக்கைகளுக்காக தமிழக அரசின், காவல்துறையின் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையே தொய்வுறாது தொடர்ந்து தங்களின் போராட்டத்தை நடத்திவருகிறார்கள் மாற்றுத் திறனாளிகள், அவர்கள் தங்களை புறம்தள்ளும் அரசை மாற்றியமைக்கும் திறன் படைத்தவர்கள், அவர்கள் வெறும் மாற்று திறனாளிகள் மட்டும் அல்லர்.....
அவர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கும், போராட்டத்திற்கும் பிறகும் கூட பேச்சுவார்த்தைக்கு அழைத்து முறையாகப் பேசாமல் கோரிக்கைகளைக் குப்பைத்தொட்டிக்குள் போட்டுள்ளது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சகம், போராடும் மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்தி அலைக்கழித்து அட்டூழியம் செய்து மகிழ்ந்துள்ளது தமிழக அரசின் காவல்துறை. அதுமட்டுமின்றி 19.09.2013 அன்று சாலை மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத் தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல் கொடுமையானது.
காவல்துறை அவர்களை எப்படிக் கையாண்டது என்பதை அனைவரும் அறிவோம்... காவல்துறையினர் பார்வையற்றோர் எனத் தெரிந்தும் அந்த மாற்றுத்திறனாளிகளைத் தாக்கியது தான் எல்லா காட்சிகளிலும் இருந்தது... ஆனால் காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் என்கிறது சன் தொலைக்காட்சி செய்தி... ஆளும் அரசிற்கு (கட்சிகளுக்கு) ஜால்ரா தட்டுவதல்ல ஊடகத்தின் பணி, உண்மையை உரக்கச் சொல்லி சனநாயகத்தின் நான்காவது தூணாக நிற்பது. அதையெல்லாம் இப்பொழுதுள்ள பல ஊடகங்கள் மருந்தளவு கூட நினைக்காமல், வாழ்த்துப்பா பாடி பரிசல் பெறும் புலவர்கள் போலுள்ளது அவர்களின் செயல்பாடு.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகள்:-
1.பார்வையற்றோருக்கு 550 இளங்கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
2.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு விகிதத்தை 40 சதவீதமாக குறைக்க வேண்டும்
3.கல்லூரி பேராசிரியர்கள் பதவி 100 பேருக்கு வழங்க வேண்டும்
4.முதுகலை ஆசிரியர்கள் 200 பணியிடங்களை ஒதுக்க வேண்டும்
5.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதவி செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரூ.450ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
6.முதுகலை படிப்பவர்களுக்கு லேப் டாப் வழங்க வேண்டும்
7.இசை ஆசிரியர்கள் பணியிடங்களில் 100 பதவிகள் வழங்க வேண்டும்
8.இசை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தேவாரம், திருவாசகம் பயிற்சி கொடுத்து, ஓதுவார் பதவிகள் வழங்க வேண்டும்
9.ஓய்வூதிய திட்டத்தில் 10 ஆண்டு விதி விலக்கு அளிக்க வேண்டும்
இதை நிறைவேற்றுவதால் அரசிற்கு பெரிய நிதிப் பற்றாக்குறை வரப்போவதில்லை... இதனால் ஓராண்டில் அரசிற்கு ஒரு சில கோடிகள் அதிகமாகச் செலவாகலாம்... இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு திடீரெனப் பத்துகோடியை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கி, விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர்.ஜெயலலிதாவால் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடிவரும் பார்வையற்றோரின் மனுவை வாங்க நேரமில்லாதது, அவரது அலட்சியத்தனத்தை காட்டுகின்றது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்தக் கோரிக்கைகளுக்கு ஏற்படும் நிதிச்செலவும் மிகக் குறைவே...
மாற்றத்திறனாளிகளுக்கென உருவாக்கப்பட்டத் துறை செயலிழந்து கிடக்கின்றது... அவர்களுக்கான சிறப்புக் கல்விக் கொள்கை, கல்விமுறை, கல்வித் திட்டங்கள் வேண்டும். சிறப்புத் தொழிற்கல்விகள், அவர்களுக்கு உதவும் புதியக் கண்டுபிடிப்புகள், இயந்திரங்கள் கிடைக்க ஏற்பாடுச் செய்ய வேண்டும்... சமூகத்தில் எதற்கும் பிறர் துணை இல்லாமல் தாங்களாகவே இயங்க அவர்களுக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் (பெரும்பான்மையானக் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தனி வழிகள் இல்லை... பெரும்பாலான இடங்களில் அதிகக் கடினப்பட வேண்டியுள்ளது...). மிக முக்கியமாக சமூகத்தில் பொது மக்களிடம் மாற்றுத் திறனாளிகள் என்றாலே சுமை என்ற ஒரு கருத்து உள்ளது... அதை மாற்ற அரசும் சமூக சனநாயக முற்போக்கு இயக்கங்களும் முயற்சி எடுக்க வேண்டும்.
சினிமா நூற்றாண்டு விழா போன்ற ஆடம்பர நிகழ்வுக்கு செலவு செய்வதற்கு பதிலாக,
விளிம்பு நிலை மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவது சமூகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலம் சரியான திசையில் செல்லவும் வழிவகுக்கும். மேலும் அவர்கள் கேட்பது எதுவும் சலுகைகள் அல்ல, அவர்களது உரிமை என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். முதல்வர் பணி என்பது மக்கள் கோரிக்கைகளை செவிமடுத்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பணி, அதற்கு பின் தான் எல்லா கேளிக்கைகளும் என்பதை முதல்வராக வருபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். ஒடுக்குமுறைகளைத் தாண்டி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வெற்றிப்பெற்று, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும்...
-வினோத்.
சேவ் தமிழ்சு இயக்கம்
நன்றி - ராஜ் மொஹம்மது (E-Poster)
உதவி: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=63152
Monday, September 23, 2013
நிதியமைச்சர் வீட்டு நாயும் - 66A சட்டமும்
"அந்த நிதியமைச்சரின் வீட்டில் வளரும் நாய்க்குட்டி நல்ல புஷ்டியாக மொசு மொசுவென்று வளர்ந்திருக்கிறது. நல்ல ஆரோக்கியமான பால் குடித்து வளருகிறது போல" என்று முகநூலில் ஒரு கருத்து வெளியிடுகிறீர்கள். நீங்கள் நிஜமாகவே நல்லவர். யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். அமைச்சர் வீட்டில் வாங்கும் பால் குறித்தோ, அல்லது இந்தியாவில் புழங்கும் பாலின் தரம் குறித்தோ, அல்லது அமைச்சர் அஃறிணை உயிரினங்களின் மீது காட்டும் பரிபாலனம் குறித்தோ புகழ்வதற்காகத் தான் உச்சி முகர்ந்து அக்கருத்தை வெளியிடுகிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கு கூட அது புரிந்து, லைக்குகளை வாரி வழங்குகின்றனர்.
ஆனால் உங்களின் போதாத நேரம், அமைச்சருக்கு அது வேறு மாதிரியாக பட்டு விட்டது. தன் வீட்டில் கணக்கற்ற சொத்தின் காரணமாக, நாய்க்குட்டிகள் கூட மினுக்கித் திரிகின்றன என்று நீங்கள் அவரை ஏளனம் செய்வதாக கருதுகிறார். காவல்துறை உயர் அதிகாரி ஒருவரை தொலைபேசியில் அழைத்து விஷயத்தை சொல்கிறார். தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, 66அ சட்டப் பிரிவுகளை பிரித்து படித்துப் பார்க்கிறார் காவல்துறை அதிகாரி. அல்லது படிக்காமலே அமைச்சரின் சட்டப் புலமையின் மீது நம்பிக்கை வைத்தவராக, தலையாட்டுகிறார்.
"grossly" offensive or cause "annoyance or inconvenience", or, in case of information known to be false, cause "danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred, or ill will".
“யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைதொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ : அ) விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது ஆ) தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது இ) யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசௌகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு) மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று வரையறுக்கப் படாத அபராதமும் விதிக்கப் படும்.” என்று சட்டக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.
நீங்கள் கைது செய்யப் படுகிறீர்கள். காரணம் உங்கள் விகல்பமான வார்த்தைகளால் நீங்கள் அமைச்சரை (Inconvenience) அசெளகரியப் படுத்தி வீட்டீர்கள். உங்கள் நண்பர்களுக்கு புரிந்த அந்த சுத்தமான கருத்து, விகல்பமான கருத்தாக நினைக்கப் பட்டிருக்கிறது. அமைச்சரின் மனைவி கூட பின்னாளில், அக் கருத்தைப் பார்த்து, உங்களை பாராட்டியிருக்கக் கூடும்.
எது நல்ல வார்த்தை, எது அசெளகரியம், எது விகல்பம் என்று புரியாதவனாக நீங்கள் அழுது புலம்புகிறீர்கள். மேலும் அசெளகரியப் படுத்துதல் எப்படி சிறை செல்லுமளவுக்கு குற்றமாகும் என்றும் அழுகைக்கு நடுவே கேள்வியெழுப்புகிறீர்கள். ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இது தான் நடைமுறை. இது தான் இந்திய தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, 66அ பிரிவு.
இது தான் இந்திய சனநாயகம்.
மேலே குறிப்பிட்டுள்ள பல விதமான காரணிகள் யாவும் நிச்சயத் தன்மையற்றவைகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு புரிதல்களை ஏற்படுத்துபவைகளாகவும் இருக்கின்றன. அல்லது குழப்புகின்றன. தெளிவாக சொல்ல வேண்டுமானால், அதிகார வர்க்கத்தினரின் நலன்களுக்காக அப்படியான சொற்கள் சட்டங்களாக்கப் பட்டிருக்கின்றன. அதிகார மையத்திற்கு நெருக்கமான அரசியல் தலைவரோ, பெருமுதலாளியோ, சிறு முதலாளியோ, சினிமா பிரபலமோ, பணமுதலையோ தங்களுக்கு ஒவ்வாத கருத்துகள், முகநூலிலோ, ட்விட்டரிலோ, வலைப்பூவிலோ பகிரப் படும் போது, அக்கருத்துகளை வெளியிட்டவர் மீது சட்டத்தின் உதவியுடன் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு தொடர்ந்து, அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு ஏதுவாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம்.
ஸ்ரேயா சிங்கால் என்ற 21 வயதான டெல்லி மாணவி, 66அ சட்டப்பிரிவில் இருக்கும் குளறுபடிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012 நவம்பர் மாதம் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவ்வழக்கில்,66அ சட்டப்பிரிவில் இருக்கும் சொற்பிரயோகங்கள் நீளமானதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டவைகளாகவும், பல்பொருள் தன்மை கொண்டதாகவும் இருப்பதாகவும், மேலும் ஏற்கெனவே இருக்கும் கருத்துரிமை சட்டங்களான 14,19(1அ) மற்றும் 21 பிரிவுகளுக்கு அது முரணாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நீதித்துறை நடுவரின் ஆணைகளின்றி, காவல்துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அவ்வழக்கில் கேள்வி எழுப்பியிருந்தார்.
தலைமை நீதிபதி, அல்தமாஸ் கபீர் முன்னிலையில் இவ்வழக்கு, அவசர கால நிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, பெரிதாக சட்ட திருத்தங்கள் ஒன்றும் மேற்கொள்ளப் படவில்லை. வழக்கம் போல, சட்டப்பிரிவை செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு ஒரே ஒரு அறிவுரையை வழங்கி மட்டும் தீர்ப்பளித்தது. மாநகரங்களில் காவல்துறை ஐ.ஜி, மாவட்டங்களில் காவல்துறை துணை ஆணையர் பதவிகளுக்கு குறையாத அதிகாரிகளின் ஆணையின்றி, 66அ சட்டப்பிரிவை பயன்படுத்தி காவல்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என்பது தான் அந்த அறிவுரை.
காவல்துறை உயரதிகாரிகள் யாருக்காக வேலை செய்வார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதாரணமாக, பேருந்தில் ஈவ் டீசிங் செய்யும் ஒரு ஆணைப் பற்றி,காவல்துறையில் ஒரு சாமானியப் பெண் புகார் கொடுக்க வேண்டுமாயின், எத்தகைய கொடுமைகளை அவள் அனுபவிக்க வேண்டும் என்பதையும் விளக்கத் தேவையில்லை. இருந்தாலும் மிகப் பெரிய சினிமாப் பாடகியாக இருக்கும் பட்சத்திலும், காவல் துறை தலைமை ஆணையர் அப்பெண்ணுக்கு நெருங்கிய உறவினராக இருக்கும் பட்சத்திலும் இணையத்தில் (முகநூல், ட்விட்டர், வலைப்பூ) தன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் ஒரு ஆணைப் பற்றி, காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கே சென்று அப்பெண்ணால் புகார் கொடுத்து, அடுத்த நாளே “அக்கொடிய நபரை” கைது செய்ய முடியுமல்லவா ?
வெறும் தனி நபர்களை பாதுகாக்க மட்டுமே, இச்சட்டங்கள் உருவாக்கப் படுகின்றன என்று குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. பொழுது போக்கு ஊடகங்களாக, அறியப் பட்ட சமூக வலை தளங்களான ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் இன்று பெருவாரியான இளைஞர்கள் அரசியல் பேசுகின்றனர். சரியோ தவறோ, தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை, அரசியல் தலைவர்கள் பற்றிய விமர்சனங்களை வெளிப்படையாக முன் வைக்கின்றனர். சினிமா,பொழுது போக்கு, விளையாட்டு போன்ற விஷயங்களோடு, அரசியலே முதன்மையான பேசுபொருளாக எடுத்தாளப் படுகிறது. மக்கள் பிரச்சினைகள் அலசப் படுகின்றன. சாலைகளில் இறங்கி கத்த வேண்டும் போலிருக்கிறது என்று விரும்புவோருக்கு, ஒரு கருத்து வெளி உருவாகியிருக்கிறது. மக்களின் இயல்பான கோபங்களிலிருந்து அவர்களை திசை திருப்பி, அவர்களின் அரசியல் அறிவை, போராட்ட குணத்தை மழுங்கடித்து, காலம் முழுதும் அவர்களை அரசியலற்றவர்களாகவே வைத்து அழகு பார்க்க விரும்பும் ஆளும் வர்க்கத் தலைவர்களுக்கு, இணைய வெளியின் கட்டற்ற சுதந்திரம் குரல்வளையில் கத்தியைச் சொருகுகிறது. அது மட்டுமின்றி, ஆளும் அரசுகளையே புரட்டிப் போடுமளவுக்கு, இணையப்புரட்சிகள் காலந்தோறும் செய்திகளாகி விட்டன.
எகிப்து,துனிஷியா போன்ற நாடுகளில், ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள், வீதிக்கு வந்து போராடினார்கள். அப்போராட்டங்களை ஒன்று திரட்டியது இணையம். வங்க தேசத்தில், இஸ்லாமிய மத வாத அமைப்புகளுக்கெதிராக, 1971 - வங்க தேச மக்களின் இனப்படுகொலைக்கான நீதி வேண்டி, ஷாபாக் சதுக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடியதும் அதே இணைய வெளியில் பரப்புரை செய்யப் பட்ட போது தான். அநியாய கல்விக் கட்டணங்களை எதிர்த்து, லண்டன் மாநகரை முற்றுகையிடுவோம் என்று முகநூலில் ஒரு அழைப்பு விடுக்கப் பட்டது. மூன்று லட்சம் பேர் அவ்வழைப்பை ஏற்று, அம்முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கிலாந்து அரசு, பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்பப் பெற்றது. தமிழகத்தில் கூட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டமும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மாணவப் பேரெழுச்சியும் ஃபேஸ்புக்கின் மூலமாகவும் பரப்புரை செய்யப்பட்டு வலுப்பெற்ற போராட்டங்கள். இந்த காரணங்களால் தான், இணையவெளியை கண்காணிக்க ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான “தமிழக காவல் துறையும்” பூட்சு கால்கள் தட தடக்க ஃபேஸ்புக்கில் தற்போது களம் இறங்கியிருக்கிறது.
பலபேர் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66அ பற்றி படும் படாமலும் தொட்டும் தொடாமலும் இணையத்தில் பேசினாலும், நாட்டில் சில இடங்களில் தான் தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கு எதிராக பொதுவெளியில் போராட்டங்கள் நடந்தன.
ஆனால் அதுவும் பெரிய கவனம் பெறவில்லை, பெருவாரியானவர்கள் இதற்கு எதிராக அணிதிரளவில்லை, இயக்கமாகவில்லை, போராடவில்லை... ஏன்? என்ற கேள்விக்கு போகுமுன், இந்த தகவல் தொழில்நுட்பச் சட்டத்திற்கும் தேசத் துரோக சட்டத்திற்கும் (இந்தியத் தண்டனைச் சட்டம் 124A) என்ன வேறுபாடு என்று பார்த்தால் சில நுணுக்கங்கள், விபரங்கள் இன்னமும் தெளிவாய்ப் புரியும்...
தற்போதையக் காலக்கட்டத்தில் சராசரி நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரே வழியான கட்டற்ற இணையம் மூலம் தங்கள் அரசியல் கருத்துக்களை, மக்களுக்கு விரோதமாக செயல்படும் அரசின் மீதான விமர்சனங்களை வைக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் எப்படி அவர்களை மட்டுப்படுத்த அரச அதிகாரங்கள் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களைப் பாய்க்கிறதோ இதைப்போலத்தான் இதற்கு முந்தையக் காலக்கட்டத்தில் தேசத் துரோக சட்டம் பாய்ந்தது...
காசுமீர் மக்களின் மீதான இந்திய இராணுவ ஒடுக்குமுறையை எதிர்த்தும், காசுமீரத்தை சுதந்திரமாக காசுமீரிகளிடம் தான் கொடுக்க வேண்டும் என்றும் தன் கருத்தைச் சொன்னதற்காக அருந்ததிராய் மீது தேசத்துரோக வழக்குப் பதிந்து தன் கொடுங்கோன்மையை நிறுவியது அரசு... மத்திய இந்தியாவில் வனங்களை அழித்து சுரங்கம் தோண்டி கனிம வளங்களைச் சுரண்டி, பெருமளவு தரகு பணத்திற்கு தனியாருக்கு விற்றது அரசு, அதற்கு எதிராக இருந்த காரணத்தினால் பழங்குடியினரை இராணுவம் கொண்டு அகற்றும் இந்திய அரசை விமர்சித்ததாலும், பாதிக்கப்படும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்துவந்ததாலும் மாவோயிஸ்ட் என்றும், பயங்கரவாதி என்றும் பட்டம் சுமத்தப்பட்டு அதேத் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு நெடுங்காலம் சிறையில் அடைக்கப்பட்டார் மருத்துவர் பினாயக் சென்...
இந்திய ஒன்றியத்தின் தென் எல்லையில், பல மாநில மக்களும் அரசுகளும் ஏற்கமறுத்த அணுஉலையை கூடங்குளத்தில் ரசிய நாட்டு நிறுவன உதவியுடன் நிறுவிவருகிறது இந்திய அரசு, இதை எதிர்த்து போராடி வரும் மக்களின் மீது 2 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பாய்ந்துள்ளது, அவற்றில் பெரும்பான்மை தேச துரோக வழக்குகளாகும். இந்த பகுதியில் அணு உலையை நிறுவாதீர்கள், எங்களுக்கு உடன்பாடில்லை என்று தங்கள் கருத்தை சனநாயக பூர்வமான வழிகளில் தெரிவித்ததற்காக அரசு சர்வாதிகாரமான முறையில் அளித்த பரிசு தான் இவ்வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாவற்றின் அடிப்படையும் ஒன்றுதான், மக்களின் தயவால் வந்த அரசை, அமெரிக்கா போன்ற உலக ஆதிக்க அரசுகளின் நலன்களைக் காக்கும், பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களின் நலன்களைக் காக்கும், அதன் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மக்கள் போராடினால் இது தான் நிகழும் என்ற எச்சரிக்கை...
அரசியல் கட்சித்தலைவர்களானாலும் ஆளும் அரசிற்கு எதிராய் பேசினால் விமர்சித்தால் இந்த சட்டம் பாய்வது உறுதி... தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் கொளத்தூர் மணி, வைகோ, சீமான் போன்ற அரசியல் தலைவர்கள் அரசை விமர்சிப்பதால், அரசிற்கு எதிராக கருத்தைச் சொன்னதால் பலமுறை இந்தச் சட்டத்தில் தண்டனை அனுபவித்துள்ளனர்.
அரசின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து போராடுவதால் அரசு மக்களை ஒடுக்க பயன்படுத்திய இந்தச் சட்டம் ஏதோ கொஞ்சகாலமாக நடந்துவருகிறது என நினைத்துவிட வேண்டாம், இந்த நிகழ்வுகள் பெயரளவு சுதந்திர நாடாக ஆன நாள் முதல் இன்று வரை வெகுகாலமாக நடந்துவருகின்றன... தமிழகத்தைப் பொறுத்த வரையில் பெரிய அளவில் அரசிற்கு எதிராக கருத்து சொன்னால் என்னவாகும் என்பதை மக்களுக்கு விளக்கிய நிகழ்வு 1987ல் விகடனில் வந்த அரசியல்வாதிகள் குறித்த விமர்சன கேலிசித்திரத்திற்கு எதிராக அதன் ஆசிரியர் மீது அரசு எடுத்த நடவடிக்கை தான்...
அரசிற்கு எதிராக, ஆளும் அதிகாரங்களுக்கு எதிராக, ஆளும் அதிகாரங்களின் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக கருத்தை மக்கள் போராட்டம் வடிவிலோ அரசியல் மேடையிலோ வைத்தால் தேசத் துரோகச் சட்டம், இணையத்தில் வைத்தால் தகவல் தொழில்நுட்பச் சட்டம்...
அப்படி என்றால் இந்திய நாட்டில் போராடும் உரிமை, கருத்தைச் சொல்லும் உரிமை மக்களுக்கு இல்லையா? இதை உண்மையில் இந்திய அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்கிறதா?
இந்திய அரசின் அரசிலமைப்புச் சட்டம் 19அ தெளிவாகச் சொல்கிறது, ஒவ்வொரு குடிமகனும் தனது கருத்தை சுதந்திரமாக எடுத்துரைக்கும் உரிமை(கருத்துரிமை) அடிப்படை சனநாயக உரிமை என்று... பின்னர் எப்படி இந்த வன்மையானச் சட்டங்கள், கைதுகள், வன்கொடுமைகள் அரசால் சாத்தியப்படுகிறது? சாத்தியப்படுத்த ஓட்டைகள் பல இல்லாமலா போய்விடும்... ஆம், அரசிலைப்புச் சட்டம் 19ஆ-வில் சொல்லப்பட்டுள்ள "19அ கருத்துரிமையில் அடங்காத குறிப்புகள்" என்றத் தெளிவற்றச் சரத்துகளைப் பயன்படுத்தியும், பாதுகாப்பு மற்றும் இறையாண்மை என்ற காரணங்களைச் சொல்லியும் குற்றங்கள் இன்னமும் தெளிவாக வரையறுக்கப்படாதத் தேசத் துரோகச் சட்டம் (இது பிரித்தானியப் பேரரசு காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது அதன் அடிமை நாட்டுக் குடிமக்களின் அடிப்படை போராடும், கருத்துச் சொல்லும் உரிமைகளைப் பறிக்க போட்டச் சட்டமாகும்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் என்ற இரு சட்டங்களை இயற்றியுள்ளது இந்திய அரசு... தன் சொந்த மக்கள் மீதே இந்த கொடுமையானச் சட்டங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இருக்கும் அதிகார மையங்கள் தங்களின் நலனையும், பெருமுதலாளிகளின் நலனையும் காத்து வருவதோடு சராசரி மக்களின் அடிப்படை சனநாயக உரிமையான கருத்துரிமையை போராடும் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது...
இந்த பெயரளவு சுதந்திர நாட்டில் அதன் அரசினால் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிவரும் அதன் சாமானிய மக்கள் மீது பாயும் இந்த வன்மையான சட்டங்களினால் நிகழ்ந்தேறும் சனநாயகப் படுகொலையைத் தகற்த்தெறிய சரியான செயல்திட்டங்கள் இல்லாமல் அதிகாரமற்ற பெருவாரியான உழைக்கும் சாமானிய மக்கள் வெற்றிபெற முடியாது...
உடனடியாக நாம் செய்யவேண்டியது:
தங்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுவதால் போராடித் தினம் தினம் துன்பத்தில் உழலும் சாதாரண மக்களையும், அன்றாடும் இணையத்தில் கலக்கத்துடன் கருத்துகளை பரிமாறிவரும் இளைஞர்களையும் இணைத்து, போராடும் உரிமைக்கு எதிரான-கருத்துச் சொல்லும் உரிமைக்கு எதிரான சட்டங்கள், கைதுகள், வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு கூட்டியக்கம் ஏற்படுத்தி அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, போராடுவது.
வினோத் & செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்
நன்றி. அனைத்து கேலி சித்திரக்காரர்களுக்கும், புகைப்பட உதவி புரிந்தவர்களுக்கும்...
பயன்படுத்திய தரவுகள்:
http://www.thehindu.com/news/cities/chennai/facebook-twitter-come-under-police-scanner/article4674196.ece
http://news.vikatan.com/article.php?module=news&aid=14433
ட்விட்டர் கைதுகள் !… தூண்டும் விவாதங்கள் ! http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21970&Itemid=139
http://saffroninfo.blogspot.in/2012/05/blog-post_17.html
http://www.ndtv.com/article/cities/mamata-cartoon-row-defamation-charges-dropped-against-professor-ambikesh-mahapatra-279067
http://www.ndtv.com/article/india/sedition-charges-against-cartoonist-aseem-trivedi-dropped-278731?h_related_also_see
http://www.thehindu.com/news/national/other-states/sedition-charge-against-cartoonist-to-be-revoked/article3990964.ece
http://www.niticentral.com/2013/02/25/111-people-arrested-in-kerala-for-defaming-pj-kurien-online-49715.html
http://janamejayan.wordpress.com/2012/12/06/sec-66a-curbs-on-free-speech-are-part-of-nehru-family-legacy/
http://www.thehindu.com/news/national/supreme-court-to-hear-plea-against-vindhyala-arrest/article4717545.ece
http://www.aazham.in/?p=1958
http://guhankatturai.blogspot.in/2012/09/blog-post_11.html
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22145&Itemid=139
http://oosssai.blogspot.com/2012/04/blog-post_24.html
Subscribe to:
Posts (Atom)