Monday, October 14, 2013

14 ஆம் நாளை நோக்கி தோழர் தியாகுவின் உணவு மறுப்பு போராட்டம்


இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.1 முதல் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருந்து வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த காவல் துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த போது, அதை காவல் துறை மறுத்தது. எனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அக்.1 அன்று பட்டினிப் போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை அளித்தது. எனவே, அறிவித்தபடியே, அக்.1 அன்று தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், பொது மக்களும் தோழர் தியாகுவை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.



அக். 7 அன்று மருத்துவர் குழுவோடு போராட்டத் திடலில் காவல் துறையினர் குவிந்தனர். தியாகுவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால், அவர் உடல் நிலை சீராகவே இருந்தது. அவர் எழுந்து நடமாடிக் கொண்டிருந்தார். தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தியாகு சொன்னார். அவர் உடலை பரிசோதித்த மருத்துவர்களும் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவே சொன்னார்கள்.

ஆனால், அவரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதிக்க வேண்டும். எனவே, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். மருத்துவர் குழுவின் இந்த செயல்பாட்டுக்குப் பின்னால், காவல்துறையின் அழுத்தம் இருப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

இதனையடுத்து, வள்ளுவர் கோட்டத்திலிருந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தோழர் தியாகு கொண்டு செல்லப்பட்டார். அவர் சென்ற அடுத்த சில மணித்துளிகளிலேயே, அந்தப் போராட்டப் பந்தல் பிரிக்கப் பட்டது. அங்கு ஏழு நாட்களாக ஒரு போராட்டம் நடந்தது என்ற சுவடே இல்லாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆக்கப்பட்டது.

மருத்துவமனையில், குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்ள தியாகு மறுத்துவிட்டார். மேலும்,தனது பட்டினிப் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார். மருத்துகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னபோது, அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், தனக்கு சுய நினைவு உள்ளவரை தன்னைக் கட்டாயப்படுத்தி மருந்துகளையோ, வேறு உணவுகளையோ தனக்கு கொடுக்க முடியாது, கொடுக்கவும் கூடாது என்று தனது கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டார். தியாகுவின் பட்டினிப் போராட்டம் மருத்துவமனையில் இருந்த படியே தொடர்ந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், அக்.10 அன்று தியாகுவை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு மருத்துவர்கள் சொன்னார்கள். எதற்காக கூட்டி வந்தார்கள், எதற்காக வெளியேற சொல்கிறார்கள் என்பது முழுதும் புரியாத மர்மமாகவே இருந்தது. வெளியேறுவதற்கு முன் அனைத்து நோயாளிகளுக்கும் கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகளை (Discharge Summary) கொடுங்கள் என்று கேட்டதற்கு, தங்கள் மேலிடத்திலிருந்து அதைத் தர வேண்டாம் என்று சொல்லி விட்டதாக அதை கொடுக்க மறுத்து விட்டார்கள் மருத்துவர்கள். அதைக் கொடுக்காமல் வெளியேறப் போவதில்லை என்று தோழர் தியாகுவும் சொல்லிவிட்டார்.

எனவே, நேற்று (அக். 11) மருத்துவக் குறிப்புகளைக் (Discharge summary) கொடுத்து வெளியேறச் சொன்னார்கள். மீண்டும் வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த போது தான், அங்கு வைத்து தோழர் தியாகுவை கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்ததையடுத்து, புரசைவாக்கத்தில் உள்ள ‘உழைக்கும் மக்கள் மாமன்றத்திற்கு’ தோழர் தியாகு சென்றார். வள்ளுவர் கோட்டத்தில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் திரண்டிருந்ததை பார்த்த எமது தோழர்கள் காவல் துறையின் இந்த வஞ்சக திட்டத்தை உறுதிபடுத்தினர்.

உயர் நீதிமன்ற ஆணையின் படி தோழர் தியாகுவை பட்டினிப் போராட்டம் இருந்ததற்காக வள்ளுவர் கோட்டத்தில் வைத்து கைது செய்ய முடியாது. எனவே, அவரை விதிமுறைகளுக்குப் புறம்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்பு வெளியேற்றியிருக்கின்றனர். அவர் திரும்பவும் வள்ளுவர் கோட்டதிற்கு வந்தால், உயர் நீதிமன்ற ஆணை அவர் மருத்துவமனைக்கு போன போதே முடிவுக்கு வந்து விட்டது, மீண்டும் வருவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லி, அவரை கைது செய்வதே காவல் துறையின் வஞ்சக நோக்கம் என்பதாக அறிகிறோம்.

அந்த வஞ்சக திட்டங்களையெல்லாம் முறியடித்து, தற்போது தோழர் தியாகு அவர்கள் தனது பட்டினிப் போராட்டத்தை 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் பட்டினிப் போராட்டத்தைத் தொடரும் இடத்தின் முழுமையான முகவரி,

‘உழைக்கும் மக்கள் மாமன்றம்’
#5, டாக்டர் வாசுதேவன் சாலை,
(மில்லர்ஸ் சாலை அருகில், பாதாள பொன்னியம்மன் கோவில் அருகில்),
புரசைவாக்கம்

இச்செய்தியை பார்க்கும் தமிழின உணர்வாளர்கள் யாவரும் தோழர் தியாகுவின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு உடனடியாக
திரண்டு உங்களை ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறோம். மேலும் பல்வேறு தளங்களில் இச்செய்தியை பரப்பவும்.


No comments:

Post a Comment