Monday, February 24, 2014

நவீன அனாதையா நாங்கள்?



மார்ச் 8 ஆம் தேதி, உழைக்கும் மகளிர் தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ள டாட்டா கண்சுல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் உமா மகேஸ்வரி(23) என்கிற பெண் ஊழியரின் சடலம் அருகில் உள்ள புதரில் இருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வரும் பாலசுப்ரணியம் என்பவரின் மகளான உமா மகேஸ்வரி, கடந்த 2013 ஆண்டு பிப்ரவரி மாதம் டி.சி.எஸ்-ல் பணிக்குச் சேர்ந்துள்ளார். மேடவாக்கத்தில் இன்னும் இரண்டு பெண்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.


வழக்கமாக பணி முடித்து இரவு 11 மணிக்கு அலுவலக வாகனம் மூலம் வீட்டிற்குச் செல்பவர், பிப்ரவரி 13ஆம் தேதி அனுமதிப் பெற்று ஒருமணி நேரம் முன்னதாகவே கிளம்பியவர் வீடு சென்று சேரவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி அலுவலகத்திற்கு அருகில் உள்ள புதரில் அழுகிய சடலமாகக் கிடந்துள்ளார்.


செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையில், உமா மகேஸ்வரியின் வயிற்றுப் பகுதியில் காயங்கள் இருந்ததை அடுத்து கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. உமா மகேஸ்வரியின் தந்தை பிப்ரவரி 13 ஆம் தேதியே கொடுத்த புகாரின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்காத கேளம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை சிபிசிஐடி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



தகவல் தொழில்நுட்பத் துறையில் நடைபெற்று வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பணிப் பாதுகாப்பு பற்றி சிந்திக்க வேண்டிய தருணத்தில் உயிர் பாதுகாப்பைப் பற்றி முதலில் சிந்தியுங்கள் என்று சொல்லிச் சென்றுள்ளது உமா மகேஸ்வரியின் மரணம்.


சிப்காட் தொழில்நுட்பப் பூங்காவினுள் நிறுவனத்திற்கு அருகில் இறந்த கிடந்த இந்த நிகழ்விற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ள போகிறார்கள், பணிக்கமர்த்திய நிறுவனமா? தொழில்நுட்பப் பூங்கா நிர்வாகமா? காவல்துறையா? அல்லது தமிழக அரசா?


வேலைக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன வழி இருக்கிறது, அதை யார் உறுதி செய்யப் போகிறார்கள். வழமைப் போலவே, இதுவும் இன்னொன்று என நாம் கடந்து செல்லப் போகிறோமா?


நமது பணியிடத்தில் அருகில் அமர்ந்து இருக்கும் தோழனோ,தோழியோ இறந்து போனால் கூட அதைப்பற்றி வெளிப்படையாக பேசும் நெஞ்சுரம் அற்றவர்களாக, மிகவும் நியாயமான உயிர்ப் பாதுகாப்பு வேண்டிக் கூட ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற சிந்தனை அற்றவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது என்பதை உமா மகேஸ்வரியின் மரணம் உணர்த்தி சென்று இருக்கிறது.


கண்ணீரும் முகநூலில் வெற்றுப் புலம்பல்களும் தீர்வாகாது. நாம் மௌனம் காப்பது கொலைகளை அதிகரிக்குமே அன்றி , தடுத்து நிறுத்தாது.


நாம் பணிபுரியும் நிறுவனங்களின் எல்லைகளை கடந்து , தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களாக நாம் ஒன்றிணைந்து நம்முடைய எதிர்ப்புக் குரலை உரக்க எழுப்பிட வேண்டும். அப்போதுதான் உமா மகேஸ்வரியின் கொலை பற்றிய விசாரணை துரிதபடுத்தப்படும். அத்தோடு பெண் பணியாளர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்தவும் நாம் நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும்.




மற்ற துறைகளில் ஒருவர் இறந்து கிடந்தால், கண்டனமும், அறிக்கையும், போராட்டங்களும் நடைபெறும் போது, நம்முடைய தகவல் தொழில்நுட்பத் துறையில் நடைபெறும் உயிரிழப்புகளும், தற்கொலைகளும் பிறரின் கவனத்தைப் பெறாதது ஏன்?. யார் வேண்டுமானாலும் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையில் இருக்கும் நவீன அனாதைகளா நாம்?, இறந்து போனால் ஒரு இரங்கல் அல்லது கண்டனம் தெரிவிக்கக் கூட ஆளில்லை நமக்கு.


விவசாயிகள் இறந்து போனாலோ, நெசவாளர்கள் இறந்து போனாலோ கேட்க வராத நீங்கள் ஏன் இப்போது ஒப்பாரி வைக்கிறீர்கள் என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். விவசாயிக்காக விவசாய சங்கங்கள் பேசும், நெசவாளர்களுக்கு அவர்களின் சங்கம் பேசும் ஆனால் எமக்காக பேச நாதியில்லை. அதனாலயே நாங்கள் இன்று பேசுகிறோம், இனியும் பேசுவோம்.


உமா மகேஸ்வரியின் மரணத்திற்குப் பின் இருக்கும் உண்மைகளை கண்டறிவதும், அவரது கொலையில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்டுவதும்தான் உமா மகேஸ்வரிக்கு நாம் செலுத்தும் உண்மையான இரங்கலாக அமையும்.


கதிரவன்
சேவ் தமிழ்சு இயக்கம்

2 comments:

  1. நன்றி கதிரவன். இந்த தோழியுடன் வேலை செய்த எத்தனைப்பேர் காவல் நிலையம் சென்று அவர் தந்தை கொடுத்த புகாருக்கு ஊக்கமளித்த வண்ணம் நிலைமையை ஆராய்ந்தனர்? தோழியின் மேலாளர் என்ன செய்தார்? வீடு எடுத்து உடன் தங்கியிருந்த இரு பெண்களும் என்ன முயற்சி செய்தனர், இந்த பத்து நாட்களில்? இனி இந்த சங்கங்கள் மட்டும் என்னத்தான் செய்யும்? அட டெல்லியில் ஒரு தோழிக்காக குரல் கொடுத்த மீடியாக்கள் இப்போது எங்கே? இதுவே சென்னைவாசியாக இருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமா நிலவரம்? "தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்" என்று காரணம் காட்டி பொறாமைக் கொண்டு திரியும் சில துறை மக்களுக்கு இப்போது சந்தோஷமா? இன்னும் எத்தனைப் தோழிகள் கற்பழிக்கப்பட்டால் நமக்குள் ஒற்றுமை பிறக்கும்? இப்படி எல்லாரிடமும் குறைகள் உண்டு, ஒரு சிலரை மட்டும் கேள்வி கேட்பதில் நியாயம் இல்லை. நாம் மட்டும் என்னவாம்? பணி நேரத்தில் கிடைக்கின்ற 5 - 10 நிமிட ஓய்வு நேரங்களில் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் எதையாவது பகிர்ந்து கொள்கின்றோமா - எப்போதுமே காதில் அலைபேசியுடனேயே வளாகத்தைச் சுற்றி வருகின்றோம்.... நம்மை நாமே அனாதைக்கிக்கொண்டுத்தான் இருக்கின்றோம்... பெரும்பாலும்.... அட போங்கய்யா...

    ReplyDelete
  2. நன்றி தண்டபாணி. நீங்கள் கூறியுள்ள அனைத்தையும் நாம் செய்திருக்க வேண்டும்தான் ஆனால் நாம் இதுவரை செய்யவில்லை என்பதும் வருத்தத்திற்குரியதே. இவ்வாறு நாம் செயல்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அலுவலக போட்டி சூழலும், நம்முடைய போட்டி மனப்பான்மையால் நாம் பிளவுண்டு கிடப்பதுமே. தோழியின் இறப்பு பற்றிய தகவல் அவரது சடலம் கண்டறியப்பட்ட பின்னரே நாம் அறிய வருகிறோம்.உமா மகேஸ்வரி அறைக்குத் திரும்பாதது பற்றி அவருடைய அறை தோழிகளே அவருடைய தந்தைக்குக் கூறியுள்ளனர் . இப்படி அலுவலகத்தில் என்ன நடக்கிறதென்று தெரியாமல் இருப்பதும், நாம் ஒன்றிணையாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று. நாம் யாரும் எதுவும் செய்வதில்லை என்ற குறைகூறவும் வேண்டாம்;நடப்பவற்றை அப்படியே ஏற்ற்றுக் கொள்ளவும் வேண்டாம். நாம் அலுவலகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் கூடி விவாதிக்கும் போதுதான் நம்முடைய பாதுகாப்பையும், உரிமையையும் பெறுவதற்கான வெளி உருவாகும். இன்றைய நிலைப் பற்றிய உங்களது உள்ளக்குமுறல் மிகவும் நியாயமானதே.நாங்களும் அந்த நிலையில்தான் இருக்கிறோம் ஆனால்
    இப்படியே இருந்துவிடாமல் நாம் இணைந்து செயலாற்றுவோம்.

    ReplyDelete