Tuesday, February 11, 2014

யுவன் சங்கர் ராஜாவும் பசும்பொன் முத்துராமலிங்கமும்!


ஒரு அரசுத் தலைவரே ஆதிக்க சாதிவெறியை தீண்டிவிடவும், ஊர்சாதித் தமிழனும்-சேரித் தமிழனும் சண்டைபோட்டுகொண்டு பிரிவினையிலேயே இருக்கவும், மக்களைப் பிரித்து ஓட்டாக்கி அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கவும் ஒரு சாதித் தலைவன் சிலைக்கு 41/2 கோடி செலவில் 13கிலோ தங்கக் கவசம் அணியும்போது வாயே திறக்காத, விமர்சிக்காத சிலரின் தமிழினப் பற்று.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசுலாம் மதம் தழுவியபோது ரொம்ப கவலைப்பட வைக்கிறது, அவரது தந்தை இசைஞானி இளையராஜாவுக்கும் தமிழர் என்ற உணர்வு இல்லை என்று கண்டுபிடித்து கோபத்தை கக்க வைக்கிறது... முதலில் தமிழனாக மாற வேண்டும் என்று சொல்லவைக்கிறது...


எது தமிழினப்பற்று?


சாதி இழிவுக்கும், சமூகத்தில் கீழான அந்தஸ்துக்கும், தனிநபர் சிக்கலுக்கும் தீர்வாக தனிமனிதராகவோ கூட்டமாகவோ பலரும் இந்து மதத்திலிருந்து புத்தம், கிறித்தவம், இசுலாம் என வேறுவேறு மதங்களுக்கு ஓடுகிறார்கள் அல்லது கடவுள் மறுப்பாளராக மாறுகிறார்கள்...

ஒருவர் சமூகத்தால் தினம் சந்திக்கும் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமல் எல்லாப் பிரச்சனைக்கும் அவரைத் தமிழர் என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறார், தமிழினப் பற்று இல்லை எனச் சொல்லி பிரச்சனையை தனிநபர் மீது போடுவது நியாயமாகாது. பொதுவாக இந்து மத நம்பிக்கையுள்ள, சாதி ஒடுக்குமுறை அதிகம் எதிர் கொள்ளாத, ஒரு சாதி இந்து ஒருவர் தமிழின உணர்வாளராக இல்லையென்றால் பெரிதாக எதுவும் கேள்வி கேட்கத் தோன்றுவதில்லை. இந்தக் கேள்வி தலித்களை, மதமாறிய சிறுபான்மை மதத்தவரை நோக்கியே அதிகமாக எழுகிறது. இப்படி ஒருவர் தமிழர் என்று தன்னைக் கருதாமல் தலித் என்றோ சிறுபான்மை மதத்தவர் என்றோ கருதுவதற்குக் காரணம் அவர் அல்ல, சமூகத்தில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வும், இந்துப் பெரும்பான்மை வாதமும் தான் காரணம். எல்லோரையும் இணைத்து சாதியற்ற சமத்துவ சமூகம் படைக்க தொடர்ச்சியான செயல்பாடுகள் இல்லாததும்தான் தமிழினப்பற்று குறைவிற்கு காரணம். அதனால் யாரையும் தமிழர் இல்லை என்று சொல்ல முடியாது...


ஒருவர் ஒரு மதத்தை ஏற்பதும், வேறு மதத்திற்கு மாறுவதும், கடவுள் நம்பிக்கையற்று இருப்பதும் அவருடைய சுய தேர்வு, விருப்பம்... உண்மையில் வேறு மதத்தில் இருந்து ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறுவதற்கு மட்டும் தான் சிக்கல் உள்ளது. பிறப்பின் அடிப்படையில் எந்த சாதிக்குள், ஏற்றத்தாழ்வான வகுப்பில் எந்த அடுக்கில் வருவது என்பது போன்ற சிக்கல்கள்... மற்ற மதத்திற்கு மாறுவதில் அல்லது கடவுள் நம்பிக்கையில்லாதிருத்தலில் இந்த பிரச்சனை இல்லை...


சாதி உணர்வின் எச்ச சொச்சங்கள் தான் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் மதமாறுவதை தவறாக புரிந்து கொள்ள வைக்கிறதோ அல்லது தமிழினப்பற்று என்று பேசச்சொல்கிறதோ என்ற ஐயம் எழுகிறது... உண்மையில் தமிழினப்பற்றிற்கு கடவுள் நம்பிக்கை முன் நிபந்தனையோ ஒன்றையொன்று சார்ந்ததோ அல்ல...


எப்படி ஒரே தமிழ்ச்சமூகமாக நாம் வாழ்வது?


தங்க கவசத்திற்கு செலவழித்த 41/2 கோடிகளில் அந்தப் பகுதியில் ஒரு தொழிற்கூடங்களும் இலவசமாக தொழிற்கல்வி நிலையங்களும் அமைத்து ஊர்சாதியினரையும், தலித்களையும் இணைக்கும் ஏற்றத்தாழ்வை அகற்றும் வேலையை செய்யலாம். உரிய மருத்துவ வசதி இல்லை, நல்ல மருத்துமனைகளை அமைக்கலாம். பிறசாதியில் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பும் வேலையில் இடப்பங்கீடும் கொடுக்கலாம்... மொத்தத்தில் ஒன்றிற்கும் உதவாத, ஓட்டிற்காக மக்களை மேலும் பிரிக்கிற தங்க கவசத்திற்கு பதிலாக அங்குள்ள அடித்தட்டு மக்கள் வாழ்வாதாரம் சிறக்க நல்ல உயிர்க்கவசம் கொடுத்திருக்கலாம் என்பதே நமது எண்ணமாக உள்ளது.


முகநூலில் ஒரு சாதி தமிழனின் பெருமிதம் தான் இந்த புகைப்படம்




இப்படி பல அரசியல் செயல்பாடுகளால்தான், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் போராட்டங்களால்தான், நாம் சாதிப்பற்று இல்லாமல், பலகட்ட முயற்சிகளுக்குப்பின் சாதியே இல்லாமல், மத நல்லிணக்கத்தோடு, சமூக சிக்கலின்றி ஒரே சமூகமாக, தமிழ்ச் சமூகமாக வாழ்வோம். வெறும் தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு, தமிழினப் பற்று என்று பேசுவதெல்லாம் ஒன்றிற்கும் உதவாது.


இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதனைச் செய்யாமல் பிரிவினை வேலைகளையே செய்கிறார்களே, ஏன்?


பதில் எளிது, அவர்கள் அதற்காக மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வரவில்லை. ஒன்றாக ஒரே சமூகமாக வாழ்ந்தால் சும்மா இருப்போமா? அடுத்தகட்டமாக என்ன செய்வோம்? ஜெயா, கருணா, சோனியா, மோடிக்களின் நண்பர்களும் கூட்டாளிகளுமான ரிலயன்ஸ், டாடா, வால்மார்ட், ஏர்டெல், சன்டிவி, இந்தியா சிமெண்ட்ஸ், ரஷ்ய-அமெரிக்க அணுஉலைகள், மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் இப்படி பெரிய பட்டியலில் நம் மண்ணையும் மக்களையும் பகல்கொள்ளை அடிக்கிறவங்களை எதிர்ப்போம், அவர்களை விரட்டியடிப்போம்... அதுக்குத்தான் ஏமாளி சாதித் தமிழனுக்கு இந்தக் கவசம் போன்ற நாடகங்கள்... நமது ஓட்டை வைத்தே நமது கண்ணை குத்துவது...


தங்கக் கவசம் அணிகையில் மதமாற்ற சர்ச்சை எதற்காக?


இதைக் கண்டிக்க/எதிர்க்கத் துப்பில்லாமல், சாதியற்ற சமூகம் அமைய வழிகோலாமல், சமூக சிக்கல்களைத் தீர்க்க முனையாமல், உள்நாட்டு பன்னாட்டு பெருமுதலாளிகளுக்காக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பவர்களை அகற்றி சாமானிய மக்களை அரசியல் அதிகாரம் நோக்கித் தள்ளாமல் தனிநபர் மதம் மாறுவதை விவாதமாக்குவது விமர்சிப்பது எதிரிகளுத்தான் இலாபமே அன்றி மக்களுக்கோ சமூகத்துக்கோ அல்ல!


தோழமையுடன்,
ஸ்நாபக் வினோத்.

சேவ் தமிழ்சு இயக்கம்

4 comments:

  1. You said there are problems only to convert into hinduism on which caste to get converted in...

    It is not true..

    There are also problems in converting to other religion also...
    Whether to get fitted in CSI, RC, CPM, Pentacoste, Oneday christ, Sion christ, AG, ACA groups in Christianity and Sunny, shyam Groups in Muslim....

    Dont only project the group divisions in Hiduism...

    ReplyDelete

  2. நண்பர். சிவா அவர்களே,

    இந்து மதத்தில் இருக்கும் சாதி மட்டும் தான் பிற்ப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது, அதனால் தான் மற்ற மதத்திலிருந்து இந்து மதத்திற்கு ஒருவரை மாற்றுவது இயலாத காரியமாக இருக்கின்றது.

    அதுவே மற்ற மதத்தில் நீங்கள் குறிப்பிட்டவை பல்வேறு கிளைகள், நீங்கள் எந்த கிளையில் சேர விருப்பப்படுகின்றீர்களோ, அதில் சேர்ந்து கொள்ளலாம், ஏனென்றால் அவை பிறப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையல்ல....

    மதம் என்பதே பிற்போக்குத்தனம் தான், நாங்கள் இந்த மதம் நல்லது, அது கெட்டது என்பதை இங்கே குறிப்பிடவில்லை, மதம் மாறுவதில் உள்ள பிரச்சனைகளைத் தான் குறிப்பிட்டுள்ளோம்...

    ReplyDelete
  3. நல்ல ஒப்பீட்டு-விமர்சனம்...
    உண்மையில்,
    மனிதன் பெற வேண்டியது மதமோ, சாதியமோ அல்ல
    மனிதம்....!!

    எனில்
    மாறவேண்டியது மதமல்ல
    மனம்...!

    ReplyDelete
  4. I dont think that this is a read worthy blog. I am seeing in lots of post in this blog that, there is too much cast politics. bascally this writter in this blog has lot castisim in every cells of his body. thats it.

    ReplyDelete