Wednesday, July 3, 2013

ம‌ன்மோக‌ன் சிங் - ஒரு பொருளாதார அடியாள் !!!!



ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இந்த நூலைப் படிக்கும் போதும், படித்து முடித்து, இந்த கட்டுரைக்கான குறிப்பை எடுக்கும் பொழுதும் மன்மோகன் சிங் அவர்கள் தான் என் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார். மன்மோகன் சிங் இந்த பெயர் சமூக வலை தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது போல எந்த ஒரு பெயரும் இந்தியாவில் கிண்டலடிக்கப்பட்டதில்லை. ஆனால் அவை பெரும்பாலும் மன்மோகன் சிங் ஒரு கோமாளி, பொம்மை என்ற வகையில் மன்மோகன் சிங் செய்யும் பணிகளின் வீரியம் தெரியாமல் செய்யப்பட்டவையாகவே உள்ளன. அவர்களின் கூற்றுப்படியே அவரை ஒரு கோமாளியாக‌ எடுத்துக்கொண்டாலும் அவர் சர்க்கசில் வரும் நகைச்சுவை கோமாளி அல்ல, பேட்மேன் படித்தில் வரும் வில்லன் கோமாளி போன்றவர்.


ஏழைகளை, பரம ஏழையாக்கி, நடுத்தர வர்க்கத்தினை இரண்டாக பிளந்து ஒரு பிரிவை ஏழையாக்கி, ஒரு சிறு பிரிவை மட்டும் நடுத்தர வர்க்கமாகவே வைத்து, பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக்கும் முதலாளித்துவ சிந்தனையை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொண்டவர் அவர். அதுமட்டுமின்றி அவ்வப்போது தோன்றி மறையும் அப்துல் கலாம் போன்றோரும் வந்து செல்கின்றனர். இக்கட்டுரையை ஒரு ஓப்புமை கட்டுரையாக எழுத முயன்றுள்ளேன். முதலில் மன்மோகன் சிங் போன்றோரின் கூற்றும் அதை தொடர்ந்து "பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலில் இருந்து உண்மை நிலையை விளக்கும் கூற்றுகளையும் கொடுத்துள்ளேன், நூலிலிருந்து எடுத்துள்ள கருத்துகளை "வாக்குமூல‌ம்" என்ற‌ பெய‌ரிட்டு கொடுத்துள்ளேன்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு திட்டம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பலனளிக்கும் திட்டமாகும் - மன்மோகன் சிங்


வாக்குமூலம் - ”இந்தத்திட்டங்கள் ஒப்பந்தங்க‌காரர்களுக்கு மிக அதிக இலாபம் பெற்றுத்தரக்கூடியவை. கடன் பெறும் நாட்டிலுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரக் குடும்பங்களுக்கு மேலும் செல்வத்தை அள்ளித் தரக்கூடியவை. அதேநேரத்தில் அந்த நாடு தற்சார்பை இழந்து நம்மை சார்ந்து இருக்கும்படி செய்துவிடக்கூடியவை என்ற விசயம் வெளியே சொல்லப்படுவதேயில்லை. இப்படி நாடுகளை நம்மை அதாவது அமெரிக்காவை அண்டியிருக்கச் செய்து அதன்மூலம் அவற்றின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவது தான் இத்திட்டங்களின் அடிப்படையான நோக்கம் என்ற உண்மை வெளிவருவதே இல்லை. எவ்வளவுக்கெவ்வளவு கடன் அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அளிக்கப்படும் சுகாதாரம், கல்வி போன்ற சேவைகள் தான் இக்கடன்களைக் கட்ட பலிகொடுக்கப்படும் என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றது.”

இந்தியாவின் மொத்த‌ தேசிய‌ உற்ப‌த்தி 6 விழுக்காட்டை இந்த‌ ஆண்டு(2013) தொடும்- ம‌ன்மோக‌ன் சிங்

வாக்குமூலம் - "மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்".


இந்தியாவில் ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் ப‌ற்றி, இதில் எண்ணெய்க்கு ப‌திலாக‌ அணுமின் ச‌க்தி என்று ப‌டித்து பார்த்தால் நூறு விழுக்காடு பொருந்தும்...

வாக்குமூலம் - “ தவிர உங்கள் செய்தி ஏடுகளும் பெருமளவு எண்ணெய் நிறுவனங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன என்பது உண்மைதானே! என்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதையே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள், முதலாளிகள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதையே எழுதுகிறார்கள்”.

ந‌க்ச‌ல்க‌ள் தான் இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கு மிக‌ப்பெரிய‌ த‌டையாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள்- ம‌ன்மோக‌ன் சிங், ப.சிதம்பரம்......

வாக்குமூலம் - "உங்கள் அரசாங்கங்கள் இவர்களை கம்யூனிசுட்டுகள், பயங்கரவாதிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என்றழைக்கிறது. ஆனால் அவர்கள் உண்மையில் உங்கள் நிறுவனம் அழித்து நாசமாக்கிக் கொண்டிருக்கும் நிலங்களில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் சாதாரண விவசாயிகள்தான்”

“அவன் எப்படி கெரில்லாக்களோடு சேர்ந்தான்? ஒரு எண்ணெய் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வெளியே அவனும், அவனது நண்பர்கள் இருபது, முப்பது பேரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அழியும் தருவாயிலிருந்த ஒரு பழங்குடியினத்திற்குச் சொந்தமான காடுகளில் எண்ணெய்க்காக அந்த நிறுவனம் துளையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களை இராணுவம் தாக்கியது. அடித்து நொறுக்கிச் சிறையில் தள்ளியது. அவர்கள் செய்ததெல்லாம் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே நின்று அட்டைகளை வீசியாட்டியதும் பாடியதும் தான், இதில் சட்டவிரோதமானது எதுவுமேயில்லை, அவர்கள் அவனை ஆறு மாதங்கள் சிறையில் அடைத்திருந்தார்கள். அங்கே என்ன நடந்தது என்பது பற்றி அவன் வாயைத்திறக்கவேயில்லை. ஆனால் வெளியே வந்தபோது அவன் முற்றிலும் வேறுவிதமான ஆளாக மாறியிருந்தான்”.

இந்தியா 2020ல் வ‌ல்ல‌ர‌சாகும் - அப்துல் க‌லாம்

வாக்குமூலம் - “குடியரசுக்கு நேரெதிரானது உலகப்பேரரசு. அது சுயநலமிக்கது. தனக்கு மட்டுமே சேவை புரியக்கூடியது. வணிகத்தை மட்டுமே, இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது. தனக்கு முன்பிருந்த எல்லாப் பேரரசுகளையும் போலவே, இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யவும், கண்ணில் காணும் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்ளவும் துடித்துக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் காலடியில் மேலும், மேலும் அதிக செல்வத்தைக் கொட்ட தேவையான அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தக்கூடியது உலகப் பேரரசு”.

அண்மையில் மாருதியின் தில்லி தொழிற்சாலையிலும், போஸ்கோ எதிர்ப்பு கிராம‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் குண்டு வெடிப்புக‌ளையும், சிங்கூரில் ந‌ட‌ந்த‌ எதிர்ப்பு போராட்ட‌ங்க‌ளையும் உங்க‌ள் நினைவுக்கு கொண்டு வ‌ர‌வும் .


வாக்குமூலம் - “ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திலும், அது காலணிகளை உற்பத்தி செய்து வந்தாலும் சரி, விளையாட்டு பொருட்களைத் தயாரித்து வந்தாலும் சரி, கனரக இயந்திரங்களை உருவாக்கி வந்தாலும் சரி அவையனைத்தும் தங்களுக்கென்று பொருளாதார அடியாட்களைக் கொண்டுள்ளன. பொருளாதார அடியாட்களின் படை அணிவகுத்துச் செல்லத் தொடங்கி விட்டது. அது இந்த பூமி முழுவதும், மிக விரைவாகச் சுற்றி வளைத்து வருகிறது. வணிகர்கள் போல் உடையணிந்து மரியாதைக்குரியவர்கள் ஆகிவிட்டார்கள். நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, இலண்டன், டோக்கியோவில் உள்ள நிறுவனங்களின் தலைமையகங்களிலிருந்து வரும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு கண்டத்திலும் ஊடுருவிப் பரவிவருகின்றார்கள். அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை, நிறுவன அதிகாரவர்க்கத்தின் அடிமைகள் ஆக்குகிறார்கள். அவர்களைக் கொண்டு நாடு முழுவதற்கும் கடிவாளமிடுகிறார்கள். மனிதனின் இரத்தத்தையே உறிஞ்சி எடுக்கும் கடின உழைப்புத் தொழிற்சாலைகளுக்குத் தங்களைத் தாங்களே விற்று கொள்ளும்படி பாவப்பட்ட மக்களைத் தூண்டுகிறார்கள்."

தமிழ‌க‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்கும், இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கும் கூட‌ங்குள‌ம் போன்ற‌ அணு மின்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் - ம‌ன்மோக‌ன் சிங், ப‌.சித‌ம்ப‌ர‌ம், ஜெய‌ல‌லிதா .....


வாக்குமூலம் - "எல்லா புதிய மின் நிலையங்களும், விநியோக வசதிகளும் நிர்மாணிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் பொருளாதாரம் காளான் போல திடீரென்று வளர்ந்துவிடும் என்று நம்பச்செய்யும் வகையில் நீ பொருளாதார முன்னறிவிப்புகள் செய்ய வேண்டும். இப்போதைக்கு உன்வேலை இதுதான். அந்த வகையான முன்னறிவுப்புகள் யு.எஸ்.ஏ.ஐ.டி(USAID) மற்றும் சர்வதேச வங்கிகள் தாங்கல் அளிக்கும் கடன்களை நியாயப்படுத்த உதவும் ".

இந்தியாவின் மின் தேவைக்கு அணுமின்சக்தி கட்டாயம் தேவை - மன்மோகன் சிங் . கூட‌ங்குள‌ம் அணு உலை 100% பாதுகாப்பான‌து - அணு த‌ள‌ப‌தி அப்துல் க‌லாம் . அணு உலைக்கு எதிராக‌ போராடுப‌வ‌ர்க‌ள்தேச‌ துரோகிக‌ள்- ஜெய‌ல‌லிதா.

வாக்குமூலம் - “சீ புரூக் அணுமின் நிலைய விஷயத்தில் என் வேலை அணுசக்தி மின் உற்பத்திக்கு மிகவும் ஏற்றதும் சிக்கனமானதுமாகும் என்று நியூஹாம்ஷயர் பொதுச் சேவை ஆணையத்தை நம்பச் செய்வதாகும். அணுமின் நிலையம் அமைப்பதற்கு இந்த ஆணையத்தின் அனுமதி அவசியமானதாக இருந்தது. துரதிருஷ்டவசமாக இந்த விஷயத்தை ஆய்வு செய்யச் செய்ய என் வாதங்கள் சரியானவைதானா என்று எனக்கே சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது. அணுசக்தி தொடர்பான கருத்துகள் அக்காலத்தில் தொடர்ந்து மாறிவந்தன. அணுசக்தி தொடர்பான ஆய்வுகளின் வளர்ச்சி அது பற்றிய ஆய்வுகளிலும் பிரதிபலித்தது. அணுசக்தியை விட மற்ற ஆற்றல்கள் தொழில்நுட்பரீதியில் உயர்ந்தவையாகவும், சிக்கனமானவையாகவும் இருப்பது மேலும் மேலும் துலக்கமாகி வந்தது."

"அணு சக்தி பாதுகாப்பானது என்ற பழைய கோட்பாட்டுக்கு எதிராக தராசு சாயத் தொடங்கியது. அணுமின் நிலையங்களில் உள்ல பாதுகாப்பு வசதிகள், தவறுகள் செய்யக்கூடிய மனித இயல்பு, கருவிகள் தேய்வடையும் வாய்ப்பு, அணுமின் நிலையங்களில் தேங்கும் கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வசதிகள் இன்மை போன்றவை குறித்து ஆழமான கேள்விகள் எழுப்பப்பட்டன. தனிப்பட்ட முறையில் நான் மிகுந்த சங்கடமடைந்தேன். அதேநேரத்தில் புதிதாக உருவாகி வந்த சிற்சிலத் தொழில்நுட்பங்கள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு ஊறுவிளைவிக்காத வகையில் மின்னுற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகளை அளிக்கக்கூடியவையாக உள்ளன என்பதில் நம்பிக்கை கொள்ளத்தொடங்கினேன். குறிப்பாக கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருந்தது.”

அர‌சு சொல்வ‌தை எவ்வித‌ கேள்வியும் கேட்காம‌ல் அப்ப‌டியே ஏற்றுக்கொள்ள‌ வேண்டும் என்று கூறும் ச‌ன‌நாய‌க‌வாதிக‌ளுக்கு...


வாக்குமூலம் - கேள்விகள் கேட்காமலிருப்பதன் விளைவு நிச்சயம் அபாயகரமானதாகத்தானிருக்கும்.

ம‌ன்மோக‌ன் சிங்கை மாற்றினால் போதும் நாடு வ‌ள‌மாகிவிடும், மோடி வ‌ந்தால் போதும் நாடு வ‌ள‌மாகி விடும், திமுக‌ மாறினால் போதும், அதிமுக‌ ஆட்சி மாறினால் போதும் என்று சொல்லும் எல்லோருக்கும்.....

வாக்குமூலம் - “இந்த அமைப்பின் தவறுகளை சரிசெய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால், அதற்குக் காரணமான நபர்களைத் தூக்கியெறிந்து விட்டால் போதும் என்பது போன்ற தொனியை இந்த கட்டுரைகள் கொண்டுள்ளன. இதுபோன்ற கட்டுரைகளின் காரணமாகத்தான் சதிவேலை பற்றிய கோட்பாடுகள் தோன்றுகின்றன. இதன் காரணமாக வரலாறு பற்றிய நமது கண்ணோட்டம் மூன்றாம் தரமானதாக மாறி விடுகிறது. தொலைக்காட்சி பார்ப்பதோடு அனைத்தும் மறந்து போய்விடுகிறது. எல்லாவற்றையும் “அவர்கள்” பார்த்துக் கொள்வார்கள், நாடு என்ற கப்பலின் பயணத்தில் சிறிய குளறுபடிகள் நேர்ந்தாலும், காலப்போக்கில் அது சரியான பாதைக்குத் திருப்பப்பட்டுவிடும். இந்தச் செயலைச் செய்து முடிப்பதற்கு நாம் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டி வரலாம். ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும் என்ற பொய்த்திருப்தியோடு நின்றுவிடுகிறோம்”.


ஆயுதத்தின் மூலம் மக்களைப் படுகொலை செய்யும் சர்வாதிகாரிகளையும், இனப்படுகொலையாளர்களையும் பற்றி நாம் கண்டும், கேட்டும் உள்ளோம், ஆனால் ம‌ன்மோக‌ன் சிங் போன்ற உலகமய‌ சர்வாதிகாரிகள் வளர்ச்சி என்ற பெயரிலும், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரிலும் செய்த‌ கொலைகள் ஏராளம், ஆனால் இவை முன்னதைப் போல ஊடகங்களில் வெளிவருவதில்லை. வ‌ள‌ர்ச்சி என்ற‌ பெய‌ரால் ம‌ன்மோக‌ன் சிங் எடுத்துவ‌ரும் ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கையும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை த‌ற்கொலை செய்யத்தூண்டியுள்ளது. உய‌ர்ந்து வ‌ரும் விலைவாசியினால் இற‌ந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் ஆனால் த‌ன்னை ஒரு பொருளாதார‌ வ‌ல்லுன‌ர் என‌க்கூறும் ம‌ன்மோக‌னோ "விலைவாசி உய‌ர்வு எப்போது க‌ட்டுக்குள் வ‌ரும் என்ப‌தை என்னால் ஆருட‌ம் கூற‌ முடியாது என்றார். இன்றைக்கும் இந்தியாவில் அதிக‌மான‌ ம‌க்க‌ளுக்கு வேலைவாய்ப்ப‌ளிப்ப‌து விவசாய‌மே, ஆனால் ம‌ன்மோக‌ன் சிங்கோ "விவசாயிக‌ள் விவ‌சாய‌ம் ம‌ட்டும் தான் செய்வேன் என்று சொல்ல‌க்கூடாது, வேறு வேலைக‌ளை நோக்கி ந‌க‌ர‌ வேண்டும்" என‌ சொல்கின்றார். ம‌காராசுட்ர மாநில‌ம் வித‌ர்பாவில் நிக‌ழ்ந்த‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ விவ‌சாயிக‌ளின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌ம், புதிய‌ பொருளாதார‌க் கொள்கையும், விவசாயித்தில் ப‌ற்றிய‌ அக்க‌றையே அற்ற‌ பிர‌த‌ம‌ரும் தான் என்றால் அத‌ற்கு மாற்று க‌ருத்து இருக்க‌ முடியாது.

அர‌சு உண‌வு காப்ப‌க‌ங்க‌ளில் இட‌மில்லாம‌ல் வெளியில் வைத்து பாழாய் போகும் உண‌வு தானிய‌ங்க‌ளை ஏழைக‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ அர‌சு கொடுக்க‌ வேண்டும் என்று நீதிமன்ற‌ம் சொன்ன‌ பொழுது "அர‌சின் கொள்கை ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் நீதிம‌ன்ற‌ம் த‌லையிட‌க்கூடாது" என்றார் திருவாள‌ர்.ப‌ரிசுத்தம். இதுவே அம்பானி, டாட்டா போன்ற‌ முத‌லாளிக‌ளுக்கு ஒன்று என்றால் ம‌ன்மோக‌னால் தாங்கி கொள்ள‌முடியாது. 4 கோடி மக்கள் வேலை செய்து வரும் சிறு வணிக துறையை அன்னிய முதலீட்டிற்கு திறந்து விட்டு, 4 கோடி வேலையை காலி செய்து சில ஆயிரம் பணிகளை உருவாக்கி உள்ளது மன்மோகன் அரசு.

போட்டி சரியானது தானே என்று தோன்றலாம், வால்மார்ட் இந்த சட்டத்திற்காக இலஞ்சம் கொடுத்துள்ளது, மேலும் பல விதிகளை மீறியுள்ளது என இப்பொழுது வழக்கு விசாரணையில் உள்ளது இன்னும் விளையாட்டு தொடங்கவேயில்லை, அதற்குள் விதிகளை வளைக்க தொடங்கிவிட்டார்கள். தண்ணீரை முழுக்க வணிகமயமாக்கம் செய்யும் "தேசிய நதி நீர் சட்ட வரைவு" பரிந்துரையில் உள்ளது. சென்னையில் த‌னியாரிட‌ம் கொஞ்சம் த‌ண்ணீர் கொடுத்த‌த‌ன் ப‌ல‌னை க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌க்க‌ள் அனுப‌வித்து இருப்பார்க‌ள். முழுக்க‌வே த‌னியார் என்றால் !!!!.




இந்தியாவில் மின்சாரம் ஏழைகளுக்கும், சிறு,குறு வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் நாளில் எப்பொழுதாவது ஒரு முறை கிடைக்கும் பொருளாக மாறிவிட்டது. ஆனால் அதே மின்சாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி, மானிய விலையில் கொடுக்கப்படுகின்றது. இதே நிறுவனங்கள் தெற்காசிய‌ முழுவ‌தும் தங்கள் நிறுவனங்களை கடை விரிக்க இருப்பதால் இந்தியாவிலிருந்து மின்சாரத்தையும் தெற்காசிய முழுவ‌திற்கும் ச‌ந்தை ப‌டுத்துவ‌த‌ற்கான‌ வேலையையும் தொட‌ங்கி விட்டார்க‌ள். இத‌ன் ஒரு ப‌குதி தான் பாகிசுதானிற்கு, இல‌ங்கைக்கு மின்சார‌ம்..... இந்த‌ வேலை முழுவதையும் த‌னியார் பார்த்துகொள்வார்க‌ள், த‌மிழ‌க‌த்தில் 18,000 மெகாவாட் அள‌விற்கு க‌ட்ட‌ப்ப‌ட்டு வ‌ரும் த‌னியார் மின்சார‌ நிறுவ‌ன‌ங்க‌ள் எல்லாம் இத‌ற்காக‌ தான், எல்லோருக்கும் விற்றது போக‌ கொஞ்ச‌ம் ம‌க்க‌ளுக்கும் விற்க‌ப்ப‌டும். அதே போல‌ முத‌ல், இர‌ண்டாம் உல‌க‌ நாடுக‌ளில் ம‌திப்பையிழ‌ந்துள்ள‌ அணு உலை இங்கு ச‌ந்தைப்ப‌டுத்திய‌துள்ளார்க‌ள். இதுவ‌ரை கையெழுத்தாகியுள்ள‌ அணு உலை ஒப்ப‌ந்த‌ங்க‌ளின் ச‌ந்தை ம‌திப்பு "6 இல‌ட்ச‌ம் கோடி" ரூபாய் ... க‌றைப‌டியா க‌ர‌ங்க‌ளும், ஊட‌க‌ங்க‌ளும் ஏன் அணு உலையை ஆத‌ரிக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்கான‌ ப‌தில் இது தான். அதே போல இந்த வளர்ச்சி "வேலையில்லாத‌ வ‌ள‌ர்ச்சி (Jobless Growth)" என‌ ஊட‌க‌ங்க‌ளே ஒப்புக்கொள்ளும் அள‌வில் தான் இங்கு வ‌ள‌ர்ச்சி உள்ள‌து. வேலையில்லா திண்டாட்ட‌ம் அதிக‌மான‌தே த‌விர‌ குறைப்ப‌த‌ற்கான‌ வ‌ழியெதுவும் இல்லாத‌ அர‌சு. என்னே ஒரு பெரிய‌ பொருளாதார‌ விஞ்ஞானி ???? ப‌ண‌க்கார‌ர்க‌ள் பெரிய‌ ப‌ண‌க்கார‌ர்க‌ள் ஆகினார்க‌ள், ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் ஏழை ஆனார்க‌ள், ஏழைக‌ள் ப‌ர‌ம‌ ஏழையானார்க‌ள் இது தான் வ‌ள‌ர்ச்சியா? ஒரு விர‌ல் ம‌ட்டும் வ‌ள‌ர்ந்தால் அது வீக்க‌ம் அல்ல‌து நோய். வ‌ள‌ர்ச்சிய‌ல்ல‌....


மாண்டேக் சிங் அலுவாலியா, ர‌ங்க‌ராஜ‌ன், ப‌.சித‌ம்ப‌ரம், மோடி, இராகுல், ஒவ்வொரு மாநில‌ முத‌ல்வ‌ர்க‌ள் என்று இங்குள்ள‌ பொருளாதார‌ அடியாட்க‌ளின் ப‌ட்டிய‌ல் நீள‌மான‌து, இவ‌ர்க‌ளுக்கெல்லாம் த‌லைம‌க‌ன் தான் ம‌ன்மோக‌ன். ம‌ன்மோக‌ன் ஒரு பொருளாதார‌ அடியாள் ம‌ட்டும‌ல்ல‌ அத‌ற்கும் மேலே... ஆம் தொடக்கத்தில்(90களில்) தாராள‌ம‌ய‌த்தையும், த‌னியார்ம‌ய‌த்தையும் இந்தியாவிற்குள் அவ‌ர் திட்ட‌மிட்டு, மெல்ல‌..மெல்ல‌ வாழைப்ப‌ழ‌த்தில் ஊசி ஏற்றுவ‌து போல‌ கொண்டு வ‌ந்தார். அடுத்த‌ முறை நாம் ஆட்சிக்கு வ‌ருவோமோ என்ற‌ ஐய‌ம் வ‌ந்துவிட்ட‌தோ என்ன‌வோ தெரிய‌வில்லை, இப்பொழுது எல்லா பொருளாதார‌ மாற்ற‌ங்களையும் அடுத்த‌ ஆண்டிற்குள் முடித்து விடும் தீவிர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்.

ம‌ன்மோக‌ன் தான் இப்ப‌டி என்றால் அடுத்து ந‌ம‌க்கு பிர‌த‌ம‌ராக‌ காட்ட‌ப்ப‌டும், மோடியும், இராகுலும், ம‌ன்மோக‌னை விட‌ ஒரு ப‌டி மேலே சென்று ம‌க்க‌ள் ம‌ன்ற‌த்திற்கு அவ‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்பே முத‌லாளிக‌ள் ம‌ன்ற‌த்திற்கு சென்று தாங்க‌ள் எவ்வ‌ள‌வு விசுவாச‌மான‌வ‌ர்க‌ள் என்று காட்டியுள்ளார்க‌ள். இந்தியாவிற்கும், த‌மிழ்நாட்டிற்கும் தேவை ஆட்சி மாற்ற‌மோ, க‌ட்சி மாற்றமோ அல்ல‌ இந்த‌ ஒட்டுமொத்த‌ அமைப்பையும் மாற்ற‌க்கூடிய‌ ம‌க்க‌ள் புர‌ட்சியே....

ம‌க்க‌ள் போராட்ட‌ம் ஓங்குக‌... ம‌க்க‌ள் புர‌ட்சி வெல்க‌....



குறிப்பு :
இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூலிது. மூல நூல் ஆங்கிலத்தில் "Confessions of an Econamic Hit Man - By John Berkins". இந்த நூலை தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார் தோழர்.இரா.முருகவேள்.

ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம் - ஜான் பெர்கின்ஸ்
த‌மிழில் - இரா.முருக‌வேள்.
வெளியீடு - விடிய‌ல் ப‌திப்ப‌க‌ம், கோய‌ம்புத்தூர், தொலைபேசி எண்- 0422-2576772

நன்றி- கார்ட்டூனிஸ்ட்.பாலா, வீரா.

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்

4 comments:

  1. நல்ல முயற்சி.

    //ஆயுதத்தின் மூலம் மக்களைப் படுகொலை செய்யும் சர்வாதிகாரிகளையும், இனப்படுகொலையாளர்களையும் பற்றி நாம் கண்டும், கேட்டும் உள்ளோம், ஆனால் ம‌ன்மோக‌ன் சிங் போன்ற உலகமய‌ சர்வாதிகாரிகள் வளர்ச்சி என்ற பெயரிலும், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரிலும் செய்த‌ கொலைகள் ஏராளம், ஆனால் இவை முன்னதைப் போல ஊடகங்களில் வெளிவருவதில்லை. வ‌ள‌ர்ச்சி என்ற‌ பெய‌ரால் ம‌ன்மோக‌ன் சிங் எடுத்துவ‌ரும் ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கையும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை த‌ற்கொலை செய்யத்தூண்டியுள்ளது.

    ReplyDelete
  2. எப்படி புரட்சி வரும் இங்கு சராயம் சினிமா ரெண்டும் சீரலிக்குது

    ReplyDelete
  3. எப்படி புரட்சி வரும் இங்கு சராயம் சினிமா ரெண்டும் சீரலிக்குது

    ReplyDelete